ஒரு ஜகத்குரு என்பவர் உலகத்தோரின் நலனை மட்டுமே கவனத்தில் கொண்டு அவர்களை வழிநடத்துபவராக இருப்பார். தனக்கென எதையும் தேடாதவர்; நாடாதவர். எனவேதான், இத்தகைய மகான்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்காமல், தேசம் முழுக்க யாத்திரைகளை மேற்கொண்டே இருப்பார்கள்.
இந்தியாவின் ஆணி வேரான கிராமங்களில் பயணிக்கும்போது தனக்கென்று அதிக வசதிகளை எதிர்பார்க்காமல் கிடைத்த இடத்தில் தங்குவார்கள். கிடைத்த உணவை உண்பார்கள். தன்னைத் தேடி தரிசிக்க வருகிற அன்பர்களுக்குப் புன்னகையுடன் ஆசி வழங்குவார்கள்.
காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்ய புருஷராக விளங்கிய எண்ணற்ற மடாதிபதிகளும் இதுபோல் பாரத தேசம் முழுக்கப் பல பகுதிகளுக்கு யாத்திரை சென்றிருக்கிறார்கள். கிராம மக்களை சந்தித்து, அவர்களை ஆசிர்வதித்திருக்கிறார்கள்.
காஞ்சி மகா பெரியவா காலத்தில் அவர் சென்ற யாத்திரைகள் கணக்கில் அடங்கா. பாரத தேசத்தின் எல்லா மூலைகளுக்கும் பயணித்திருக்கிறார்.
அப்படி ஒரு முறை பெல்காமுக்குச் சென்றிருந்தார் மகா பெரியவா.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெல்காம் என்கிற நகரம் கர்நாடக எல்லை ஓரமாக மகாராஷ்டிரத்தை ஒட்டி அமைந்துள்ளது.
அங்குள்ள மிகச் சாதாரணமான ஒரு கிராமத்தின் வழியே தன் பரிவாரங்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் மகா பெரியவா. யாத்திரையின்போது தான் கடந்து செல்கிற கிராமங்களில் எதிர்ப்படுகிற கல்மிஷம் இல்லாத மக்களைப் பார்த்து அவர்களை ஆசிர்வதித்து, நடந்து கொண்டிருந்தார். அன்றைக்கு மகா பெரியவாளுக்குப் பிரதான கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர் ராயவரம் பாலு என்கிற தொண்டர்.
வறண்டு போன ஒரு கிராமத்தின் வழியே பெரியவா சென்று கொண்டிருந்தார். பசுமை என்பது மருந்துக்குக்கூடத் தென்படவில்லை. ஊரில் இருக்கிற நீர்நிலைகளில் பொட்டுத் தண்ணீர்கூட இல்லை. எங்கு பார்த்தாலும் வறுமை என்கிற சோகம் அந்தக் கிராமத்தில் தலைவிரித்தாடியது.
தண்டத்தை சுமந்தபடி கரடுமுரடான சாலையில் தன் திருப்பாதம் பதித்தபடி கருணை வள்ளல் நடந்து கொண்டிருந்தது, அந்தக் கிராமம் எப்போதோ செய்த புண்ணியம்.
காவி அணிந்த சந்நியாசி ஒரு சில அன்பர்கள் புடைசூழ தங்கள் கிராமத்தின் வழியே நடந்து கொண்டிருந்ததைப் பார்த்த கிராமவாசிகள் சுட்டெரிக்கிற வெயிலில் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஒருவேளை துறவிகளையே தங்கள் வாழ்க்கையில் இதுவரை அவர்கள் பார்த்ததில்லை போலும்.
வறுமையும் வெறுமையும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய, சுமார் முப்பது நாற்பது கிராமவாசிகள் க்ஷண நேரத்தில் மகானை சூழ்ந்து கொண்டனர்.
சாலையின் நடுவே அதற்கு மேல் ஓரடி எடுத்து வைக்க முடியாதபடி அப்படியே நின்றார் மகா பெரியவா. பாலு பக்கத்தில் நின்றிருந்தார்.
பெரியவாளைச் சுற்றி நின்ற கிராமவாசிகள், ‘இவர் யார்? இவருடன் பலரும் நடந்து செல்கிறார்களே… எங்கே போகிறார்கள்?‘ என்றெல்லாம் அவர்கள் மனதில் ஒன்றன் பின் ஒன்றாகப் பல்வேறு கேள்விகள்.
சுற்றி நின்றிருப்பவர்களின் முகக் குறிப்பை அறிந்த மகா பெரியவா பாலுவைப் பார்த்து, ”அவால்லாம் நாம யாருன்னு கேக்கறதுக்காக சூழ்ந்துண்டு நிக்கறா… நம்மளை அடிக்க வந்துட்டாளோன்னு பயந்துட்டியோ” என்று கேட்டு விட்டு சிரித்த மகா பெரியவா, ”நாம யாருங்கறதையும் எங்கே போயிண்டு இருக்கோம்கிறதையும் அவாகிட்ட விவரமா எடுத்துச் சொல்லு” என்றார்.
விஷயம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கிராமவாசிகளிடம் பாலு தெரிவித்த விஷயம் இதுதான்: ”இவர் மகா பெரியவா. எங்களோட குரு. எங்களுக்கு மட்டுமல்ல… இந்த லோகத்துக்கே குரு. இவர்கிட்ட நம்ம குறையைச் சொன்னோம்னா அதுலேர்ந்து நம்மளைக் காப்பாத்துவார். நாங்கல்லாம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்திலேர்ந்து வரோம். யாத்திரையா பாரத தேசம் முழுக்கப் போயிண்டிருக்கோம். இப்ப பக்கத்துக் கிராமத்துக்குப் போயிண்டு இருக்கோம் (ஊர் பெயரைச் சொல்கிறார்). அங்கேதான் ரெண்டு மூணு நாள் தங்கப் போறோம்.”
மகா பெரியவா தங்கப் போவதாக பாலு சொன்ன கிராமம் இங்கிருந்து சுமார் ஐந்தே கிலோ மீட்டர் தொலைவு.
பாலு சொன்னவற்றைக் கேட்ட கிராமவாசிகள் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
பிறகு, அவர்களுள் தலைவர் போல் இருக்கின்ற ஒருவர் ஜனங்களை மெள்ள விலக்கி விட்டு அதிகார தோரணையுடன் மகா பெரியவாளுக்கு முன்னால் வந்து நின்றார்.
அந்த அதிகார கிராமத்துவாசியை ஒரு புன்னகையுடன் நேருக்கு நேர் பார்த்தார் மகா பெரியவா.
”நாங்க கேட்டது எல்லாத்தையும் நீங்க கொடுப்பீங்கன்னு இவரு (பாலுவைக் காண்பித்து) சொல்றாரு. எங்க ஊர்ல ரெண்டு மூணு வருஷமா மழையே பெய்யலை. விவசாயம் சுத்தமா இல்லை. வானம் பார்த்த பூமியா இருக்கு. உங்களால மழையை எங்க ஊர்ல வரவழைக்க முடியுமா?” – அதிகார கிராமவாசி கேட்ட கேள்வியில் ஏக்கமும் கண்டிப்பும் தென்பட்டது.
மகா பெரியவா அமைதியாக அவரைப் பார்த்தார். பிறகு, தன் பார்வையைச் சுழற்றி, கிராமத்தை இடமும் வலமுமாகப் பார்த்தார். பிறகு, ”அதோ, ஒரு மலை தெரியறதே… அந்த மலைக்கு மேல ஒரு சிவன் கோயில் இருக்கா?” என்று கேட்டார்.
மகா பெரியவா அடையாளம் காண்பித்த மலையை அனைவரும் தலையைத் திருப்பிப் பார்த்தனர்.
பிறகு, எல்லோரும் ஆளாளுக்கு உதட்டைப் பிதுக்கினர். அதிகார ஆசாமி தன் ஊர்க்காரர்களில் வயதான ஒரு சிலரைப் பார்த்து விசாரித்தார். பிறகு மகா பெரியவாளைப் பார்த்து, ”நீங்க சொல்றாப்ல அந்த மலைல சிவன் எதுவும் இல்லை சாமீ” என்றார் கறாராக.
அந்த அதிகார ஆசாமியைப் பார்த்து மகா பெரியவா, ”இருக்கு. அந்த மலைக்கு மேலே ஒரு சிவலிங்கம் இருக்கு. தனக்கு யாரும் தண்ணி ஊத்தி அபிஷேகம் செய்ய மாட்டேங்கறாங்களேனு அந்த சிவன் பல வருஷமா தாபப்பட்டுண்டு இருக்கார். அவருக்கு ஊர் ஜனங்க எல்லாரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு குடம் ஜலம் ஊத்தி அபிஷேகம் பண்ணுங்கோ. சரியாயிடும்” என்று சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார்.
அதிகார ஆசாமி விடவில்லை. குழப்பமான முகத்துடன் மகா பெரியவாளைப் பின்தொடர்ந்தார். ”ஏஞ் சாமீ… ஊர்லயே பொட்டுத் தண்ணிகூட இல்லேன்னு சொன்னேன். குடிக்கிறதுக்கும் கழுவறதுக்கும் இங்கிருந்து ஒரு சில மைல் தொலைவு நடந்து பக்கத்து ஊர்ல இருந்து கொண்டு வரோம். இதுல ஆயிரத்தெட்டு குடம் தண்ணிக்கு நாங்க எங்கே போறது? அந்தத் தண்ணி வீட்டுக்கு இருந்தா நல்லதுன்னுதான் எல்லாருக்கும் தோணும்” என்றார்.
மகா பெரியவாளின் திருவாக்கைக் கேட்டு ‘அப்படியே அதன்படி நடக்கிறோம்‘ என்று சொல்லாமல், வேறு ஏதேதோ பேசுகிறார்களே என்று பாலு உட்பட உடன் வந்த தொண்டர்களுக்குச் சற்று கோபம் வந்தது.
சிவன் இருக்கக் கூடிய மலையை மீண்டும் அவர்களுக்குக் காண்பித்து விட்டு, ”அவருக்கு ஊத்துங்கோ… எல்லாம் சரியாயிடும்” என்று மீண்டும் ஒரு முறை பொறுமையாகச் சொல்லி விட்டு, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார் மகா பெரியவா.
அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் தொண்டர்களும் பின்தொடர்ந்தனர்.
கிராமத்துக் கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது. வயது முதிர்ந்த ஒரு பெரியவர் உடன் இருந்த கிராமவாசிகளிடம் சொன்னார். ”நம்மகிட்ட பேசிட்டுப் போற சாமீயோட மொகத்தைப் பார்த்தா அவரு சொல்றது சரியாத்தான் இருக்கும்னு தோணுது. மலைக்கு மேல் எப்படியும் ஒரு சிவன் இருக்கும்னுதான் எனக்கும் தோணுது. எங்க அப்பாரு காலத்துல சொல்றதைக் கேட்டிருக்கேன். நாம பாக்காத விஷயத்தை ‘இல்லே‘னு உறுதியா மறுத்திடக் கூடாது.
சாமீ சொல்றாப்ல நாம செஞ்சுதான் பாப்போமே… நாளைக்குக் காலைல ஆளாளுக்கு கொடம் எடுத்துட்டுப் பக்கத்து ஊருக்குப் போயி தண்ணி கொண்டு வருவோம். அதுக்கு முன்னாடி ஒரு ஆளு மேலே ஏறி, சிவன் இருக்கிற இடத்தைத் தேடி வைக்கட்டும். எல்லாரும் வரிசையா மலையேறி சிவன் இருந்தா தண்ணீரை ஊத்துவோம். இல்லேன்னா அப்படியே கீழே இறங்கி அவங்கவங்க வீட்டுல வெச்சுப்போம்” என்றார்.
முதியவரின் கருத்துக்கு ஒரு மதிப்பு இருந்தது. அவர் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அடுத்த நாள் காலை… வீட்டுக்கு ஒருவர், இருவர், மூவர் என்று ஆயிரத்தெட்டு குடம் தண்ணீர் என்பதை இலக்காக வைத்து, பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடந்தனர்.
சிரமப்பட்டு தண்ணீர் பிடித்து மலை ஏறினர். இதற்குள் கிராமத்தில் இருந்து இரண்டு பேர் மலையேறி, ‘இல்லை‘ என்று சொல்லப்பட்ட சிவன் கோயிலைத் தேடிக் கண்டுபிடித்து விட்டனர். அற்புதமான லிங்கத் திருமேனி. அந்த இடத்தை ஓரளவு சுத்தமும் செய்து விட்டனர். ‘தங்களுக்குத் தெரியாமல் தங்கள் ஊரில் சிவன் கோயிலா?‘ என்று இவர்களுக்கு பிரமிப்பு.
தண்ணீரை சுமந்து மலையேறி, ஒவ்வொரு குடமாக அபிஷேகம் செய்தனர் கிராமவாசிகள். இவர்களுடைய பக்தி எப்படியோ…. ஆனால், சிரமத்தைப் பார்த்து விட்டு நிச்சயமாக அந்த சிவபெருமான் உளம் குளிர்ந்திருப்பார்.
மகா பெரியவா சொன்னபடி ஆயிரத்தெட்டு குடம் நீரையும் அபிஷேகம் செய்து விட்டு, ஊருக்கு வந்து வானத்தையே பார்த்தபடி இருந்தனர். ‘அபிஷேகம் பண்ணா, மழை வரும்னு சாமீ சொல்லிச்சே… மழை எப்ப வரும்?‘
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மாலை வந்தது. இரவும் தொடர்ந்தது.
வானத்தில் மாற்றம் எதுவும் இல்லை. மழை வருவதற்கு உண்டான அறிகுறிகளைக் காணோம்.
அதிகார ஆசாமி உட்பட ஊர்மக்கள் அனைவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள்.
”அந்த சாமீ நம்மளை ஏமாத்திட்டாரு. தண்ணியை ஊத்து… மழை வரும்னு சொன்னார். ஊர்ல இருக்கிற அத்தனை பேரும் கஷ்டப்பட்டு தண்ணியைக் கொண்டு போய் அபிஷேகம் பண்ணோம். மழை வரலியே…” என்று ஊர்க்காரர் ஒருவர் கோபத்துடன் குரல் உயர்த்திச் சொல்ல… அதிகார ஆசாமிக்கும் முகம் மாறியது.
”ஆமா… அந்த சந்நியாசி நம்மளை ஏமாத்திட்டாரு. அவரை விடக் கூடாது. பக்கத்து ஊர்ல இருக்கப் போறதாத்தானே நம்மகிட்ட சொன்னாங்க. எப்படியும் அங்கதான் இருப்பாங்க. வாங்க, நாம அத்தனை பேரும் இந்த ராத்திரியே போயி அவங்க எல்லாத்தையும் நாலு சாத்து சாத்தி, நாம யாருன்னு நிரூபிக்கணும். தீப்பந்தத்தை எடுத்துக்குங்க. எல்லாரும் கையில ஒரு தடிய எடுத்துக்குங்க. இன்னிக்கு அவங்களா, இல்லே நாமளானு பாத்துடணும்” என்று எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் விதமாகப் பேச… கிராமத்து ஜனங்கள் அத்தனை பேரும் முகத்தில் உஷ்ணம் பொங்க… இதை ஆமோதித்தனர்.
சட்டென்று கலைந்தவர்கள் பத்து நிமிடங்களில் மீண்டும் சேர்ந்து விட்டார்கள்.
எப்படி?
பார்த்தாலே பயங்கரம்தான்!
எல்லோருடைய கையிலும் ஒரு தடி இருந்தது. இரவுப் பொழுதில் நடந்து செல்ல வேண்டுமே என்று பலரும் தங்கள் கையில் தீவட்டி கொளுத்தி வைத்திருந்தனர்.
‘ஏதடா… ஒரு சந்நியாசியை எதிர்த்து நாம் புறப்படுகிறோமே… முற்றும் துறந்த ஒரு மகானைத் தாக்க வேண்டும் என்று கிராமத்தில் உள்ள அனைவரையும் திரட்டிக் கொண்டு புறப்படுகிறோமே… இது நியாயமா? நாகரிகமா?‘ என்று இந்தக் கிராமவாசிகளில் ஒருவர்கூட யோசிக்கவில்லை.
தவிர, ‘இது தவறு‘ என்பதை இவர்களுக்கு எடுத்து விளக்கி, புத்திமதியோ ஆலோசனையோ சொல்லக்கூட கிராமத்தில் யாரும் அந்த அளவுக்குக் கல்வியில் தேர்ந்திருக்கவில்லை என்பதும் சோகமே.
ஆனால், ஒரே ஒரு ஆசாமிக்கு மட்டும் – ஈரமான மனம் கொண்ட அன்பருக்கு மட்டும் – தங்கள் கிராமத்து அன்பர்கள் செய்யப் போகிற இந்தக் காரியம் சரியில்லை என்று மனதுக்குப் பட்டது.
‘ஊருக்கு நல்லது சொல்லிச் சென்ற ஒரு சந்நியாசியை – அவர் அருளியது நடக்காமல் போயிற்று என்பதற்காக, தேடிப் போய்த் தாக்குவது என்பது அதர்மம்‘ என்று தீர்மானித்து விட்டார்.
படிப்பு இல்லை என்றாலும், பண்பு என்கின்ற ஒன்று சிலரிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது அல்லவா?
பள்ளிக்கூடம் போனால்தான் படிப்பு. ஆனால், பண்பைக் கற்றுக் கொள்ள பள்ளிக்கூடம்தான் போக வேண்டுமா?
படிப்பு என்பதே இல்லாத இவரிடம் பண்பு மாத்திரம் தாராளமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அகால நேரத்தில் இப்படித் தடியையும் தீவட்டியையும் எடுத்துக் கொண்டு, கூட்டமும் சேர்த்துக் கொண்டு போய் அந்த சந்நியாசியைத் தாக்க முற்படுவது மாபெரும் தவறு என்பது அவருக்கு மட்டும் புரிந்திருக்கிறது.
அங்கே கூடி இருக்கின்ற அத்தனை கிராமவாசிகளிடமும் ‘இப்படிப் புறப்படுவது உசிதமில்லை‘ என்று எடுத்துச் சொல்வது பலன் கொடுக்காது என்று பட்டது.
ஒருவேளை இந்த நியாயத்தை ஊராரிடம் தான் சொன்னால், அடுத்த கணமே அத்தனை தடிகளும் தன் மேல் திரும்பி விடும் என்பதையும் தெளிவாக அறிந்தார்.
‘இவர்களிடம் விஷயத்தைச் சொல்லித் திருத்த முடியாது. அதே சமயம் நம் ஊர் தேடி வந்து ஆசிர்வதிக்கிற அந்த சந்நியாசியையும் (மகா பெரியவா) காப்பாற்ற வேண்டும்… என்ன பண்ணலாம்?‘ என்று யோசித்தவருக்குச் சட்டென அந்த ஐடியா பளிச்சிட்டது.
மகா பெரியவா தங்கி இருக்கக் கூடிய கிராமம் இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. இவர்கள் கும்பலாக அங்கே செல்வதற்குள் குறுக்கு வழியாக நாம் முன்னே ஓடிப் போய் சந்நியாசியிடம் இந்த விஷயத்தைச் சொல்லி விடுவோம் என்று தீர்மானித்து, முதல் கட்டமாக கிராமவாசிகள் கூட்டத்தில் இருந்து மெள்ள விலகினார்.
உள்ளூர்க்காரருக்குக் குறுக்குச் சாலை எங்கே என்று தெரியாதா? அந்த சாலையைப் பிடிக்க வேண்டும் என்று இருட்டில் குத்துமதிப்பாக ஓட்டம் பிடித்தார்.
மகா பெரியவா முகாமிட்டிருக்கிற கிராமத்தை நோக்கி ஓடத் துவங்கினார். கிராமவாசிகளின் தாக்குதலில் இருந்து அந்த தெய்வத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்ததால், இருட்டும் இன்ன பிற சிரமங்களும் அவரை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்த அரை மணி நேரத்தில் – கிராமவாசிகள் கூட்டம் வருவதற்குள் மகா பெரியவா முகாமில் இருந்தார் இந்த நல்ல எண்ணம் கொண்ட கிராமவாசி.
மூச்சிரைக்கப் போனவர் யாரிடம் இந்தத் தகவலைச் சொல்லலாம் என்று சுற்றும்முற்றும் பார்வையை ஓட்டினார். அந்த முகாமில் இருந்த ஒரு சில சிப்பந்திகளும் படுப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இவரோ, பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்தார். ‘தனது ஊரில் இருந்து பெரும் கூட்டம் வருகிறதே! முன்னெச்சரிக்கை செய்ய வேண்டுமே?‘ என்று தவியாய்த் தவித்தார்.
இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்று சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளுக்குத் தெரியாதா?
விரல் சொடுக்குப் போட்டு சற்றுத் தள்ளி இருந்த பாலுவை அழைத்தார். ஓடி வந்த பாலு பெரியவாளைப் பணிந்து நின்றார். ”வாசல்ல பக்கத்து ஊர் ஆசாமி ஒருத்தன் நின்னுண்டு இருப்பான். அவனை உடனே உள்ளே கூட்டிண்டு வா” என்று சொல்லி பாலுவை அனுப்பினார்.
வாசலுக்கு ஓடினார் பாலு.
அந்த நல்ல எண்ணம் கொண்ட கிராமவாசியும் பாலுவை அடையாளம் கண்டுகொண்டார். முதல் நாள் இரவு பாலுதான் கிராமத்தவர்களிடம் பேசினார். எனவே, பாலுவைக் கண்டதும் விஷயத்தைச் சொல்ல முற்பட்டார்.
எதையும் தன் காதில் வாங்காமல், ”பெரியவா ஒங்களை உள்ளே கூட்டிண்டு வரச் சொன்னார். வாங்கோ” என்று அவரது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நேராக மகா பெரியவாளிடம் கொண்டு விட்டார்.
‘ஆகா… இவரிடம் வந்து விட்டோமே… எல்லாம் நல்லதுக்குத்தான்‘ என்று மகா பெரியவாளைப் பார்த்ததும், கீழே விழுந்து வணங்கினார். ‘ஒரு விநாடியைக்கூட வீணாக்கக் கூடாது‘ என்று விஷயத்தைக் கடகடவென்று கொட்டினார்.
இவர் சொல்வதைக் கேட்ட பாலுவுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. அப்படியே மெள்ள பார்வையைத் திருப்பிச் சாலையையும் பார்க்கச் செய்தார். நல்லவேளை… கூட்டம் தென்படவில்லை.
மகா பெரியவா ஒரு புன்னகையுடன் அனைத்தையும் கேட்டு விட்டு, ‘அப்படியா‘ என்று எழுந்து வெளியே வந்தார். கிராமவாசியும், பாலுவும் பெரியவாளைப் பின்தொடர்ந்தனர்.
‘என்னடாது… மகா பெரியவா மேல அக்கறை வெச்சுண்டு நல்ல மனசோட இவ்ளோ விஷயத்தையும் சொல்லி, நம்மளைக் காப்பாத்த வந்திருக்கான் இந்த ஆசாமி. நாம உஷாராகி, அடுத்து என்ன பண்ணணும்னு யோசிக்க வேண்டாமா? இவர் என்னடான்னா கூலா நடந்து வெளிய போறாரே… இப்ப எதுக்கு வெளில போகணும்? நேரத்தை வேஸ்ட் பண்ணணும்?‘ என்றெல்லாம் யோசித்த பாலு, மகா பெரியவா பின்னாலேயே நடந்து, ”பெரியவா… வரப்போற கும்பல்கிட்ட நாம எது பேசினாலும் எடுபடாது. நான் வேணா இந்த ஊர்க்காரா கிட்ட ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அவாளை நம்ம பாதுகாப்புக்குக் கூட்டிண்டு வரட்டுமா?” என்று பதட்டத்தோடு கேட்டார்.
மகா பெரியவாளிடம் இருந்து பதில் இல்லை.
தகவல் சொன்ன கிராமத்து ஆசாமிக்கும் குழப்பம். ‘விஷயத்தை உள்ளது உள்ளபடி அப்படியே சொன்னால் இவர்கள் உஷாராகி, எங்கேனும் பத்திரமாக ஒளிந்து கொள்வார்கள் என்று நினைத்து ஓடி வந்து எச்சரிக்கை செய்தால், இவரிடம் பரபரப்பு தெரியவில்லையே! வீதிக்கு வந்து வாசலில் நிற்பதைப் பார்த்தால் தடியுடன் வருகிற கூட்டத்தை எதிர்கொள்வார் போலிருக்கிறதே‘ என்று குழப்பத்துடன் மகா பெரியவாளையும் பாலுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நல்ல எண்ணத்தோடு வந்த கிராமவாசிக்கும், பாலுவுக்கும் இதயம் ஏகத்துக்கும் துடித்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் என்ன கவலை என்றால், ‘மகா பெரியவாளுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாதே!‘ என்று.
மலை மேல் சிவன் இருக்கக் கூடிய அந்தக் கிராமம் இருக்கிற திசையை நோக்கி மகா பெரியவா ஒரு பார்வை பார்த்தார்.
அவ்வளவுதான்!
அடுத்த ஒரு சில விநாடிகளில் தெளிவாக இருந்த வானம் எப்படி மாறியது என்பது இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
மெள்ள இடி ஆரம்பித்தது. மின்னலும் வெட்டியது. தூறல் துவங்கியது. பெரும் தூறலாக ஆனது.
உடன் நின்றிருந்த கிராமவாசி ஆகாசத்தைப் பார்க்கிறார்… மகா பெரியவாளைப் பார்க்கிறார். மாறி மாறிப் பார்த்து ஆச்சரியம் தாங்க முடியாமல் மகா பெரியவாளைப் பார்த்து இரண்டு கரங்களையும் குவித்து, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். ஏதோ பேச முயன்றவருக்கு வார்த்தைகள் வரவில்லை. நா தழுதழுத்தது.
வெளியே நின்றிருந்த மகா பெரியவா உட்பட அனைவரும் நனைந்தனர்.
இதற்குள் இவர்கள் இருக்கக் கூடிய இடத்தை நெருங்கி விட்ட கிராமத்துக் கும்பல் திடீர் மழை கண்டு ஆச்சரியமானது. திகைத்துப் போனது.
மழைத் தூறலில் தீவட்டிகள் அணைந்தே விட்டிருந்தன.
மகா பெரியவா இருக்கிற இடம் அருகே வந்தவர்கள் தடிகளை எல்லாம் தூர வீசினர்.
இவர்களுக்கெல்லாம் தலைமை தாங்கி நடத்தி வந்த கிராமவாசி சொன்னார்: ”அடேய்… தடிங்களை எல்லாரும் தூரப் போட்டுடுங்க… இவரைப் பத்தி நாம தப்பா நினைச்சுட்டோம். இவர் சந்நியாசி இல்லே… நம்ம ஊருக்கு நம்மளைத் தேடி மழையைக் குடுக்க வந்த தெய்வம்டா.
நாம அத்தனை பேரும் இவரை தப்பா பேசிட்டோம். அதுலயும் உங்க எல்லாரையும் விட நான் நிறையவே பேசிட்டேன். எல்லாரும் இவர் கால்ல விழுங்க. அதுதான் நம்ம அத்தனை பேருக்கும் பாவ மன்னிப்பு” என்றதும், ஒட்டுமொத்த கூட்டமும் மகா பெரியவாளை நமஸ்காரம் செய்தது.
”மழை கொட்றது… எல்லாரும் இங்கயே தங்குங்கோ. கார்த்தால போலாம்” என்று சொல்லி, அவர்களை ஆசிர்வதித்து விட்டு, உள்ளே போனார் மகா பெரியவா.
விழிகளில் ஜலம் கசிய, பாலு பின்தொடர்ந்தார்.
இந்த மழை அடுத்த நாள் காலை வரை கொட்டித் தீர்த்தது. அந்தக் கிராமத்துக் குடிநீர்ப் பஞ்சம் தீர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!