கேட்டு வாங்கிய பிக்ஷை ஆகாரம்

ம்மில் பலரும் டிபன், சாப்பாடு, விருந்து என்றால் வெளுத்துக் கட்டுகிறோம் அல்லவா! இனிப்பு போன்ற நாம் விரும்பும் அயிட்டங்களை மீண்டும் மீண்டும் கேட்டு இரண்டு மூன்று முறை சாப்பிடுகிறோம். சாப்பிட்ட பிறகு வரக் கூடிய உடல்கோளாறுகள் பற்றி யோசிப்பதே இல்லை

ஆனால், நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவாளுடைய ஆகாரமாக பிற்காலத்தில் விளங்கியது எது தெரியுமா?

வெறும் நெற்பொரியும், வாழைக்காய் மாவும்தான்!

ஆரம்ப காலத்தில் மகா பெரியவா தன் பிட்சையை நன்றாகவே எடுத்துக் கொண்டார். அதாவது, நன்றாகவே உணவு சாப்பிடுவாராம்.

வருடங்கள் ஓட ஓடமகா பெரியவாளின் பிட்சையும் ஒரு கட்டத்தில் சுருங்க ஆரம்பித்தது.

மாயவரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் மகா பெரியவாளுக்கு நெல்பொரியை மொத்தமாக ஸ்ரீமடத்துக்கோ, அல்லது முகாம் இருக்கும் இடத்துக்கோ நேரில் கொண்டு போய் சேர்த்து விடுவார்.

ஒரு மகானுக்கு உணவிடுவதற்கும், அவருக்குத் தொடர்ந்து ஒரு பொருளை அனுப்பி வைப்பதற்கும் சம்பந்தப்பட்டவர் எத்தனையோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், இது சாத்தியமாகாது.

ஒரு முறை விழுப்புரத்தை அடுத்த அய்யூர் அகரம் என்ற கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார். அன்று மகானின் அத்யந்த பக்தரான புதுவை கோபாலய்யர் பிட்சை இடுவதற்குக் கட்டளை ஆகி இருந்தது. எனவே தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் கோபாலய்யர்.

மகா பெரியவாளுக்கு பிட்சை வழங்க விரும்புகிற பக்தகோடிகள் முன்கூட்டியே ஸ்ரீமடத்துக்குத் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். வருடத்தில் இந்தந்த நாட்களில் இவர்கள் குடும்பம் பிட்சை என்பதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. பல வருடங்களாகசம்பந்தப்பட்ட குடும்பத்தினர்கள் பரம்பரை பரம்பரையாக பிட்சை செய்து வருவதை ஒரு பேறாகக் கொண்டு இருந்து வருகிறார்கள்.

அதன்படி அன்றைய தினம் மகா பெரியவாளுக்குத் தம்பதி சமேதராக பிட்சை கைங்கர்யத்தை செய்து முடித்தார் புதுவை கோபாலய்யர்.

அன்று மாலை கோபாலய்யரின் மனைவியை அழைத்த மகா பெரியவா, ”நிறைய பேர் எனக்கு பிட்சை பண்றாஎன்னென்னவோ அயிட்டத்தை எல்லாம் கொண்டு வந்து குடுக்கறா. ஆனா, எனக்குத் தேவையான பிட்சையை யாரும் குடுக்க மாட்டேங்கறாநான் கேக்கற பிட்சையை நீ தருவியா? என்று ஒரு குழந்தையைப் போல் கேட்டார்.

கோபாலய்யரின் மனைவிக்குப் பிரமிப்பு தாங்க முடியவில்லை. இந்த மகானுக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆவலுடன் காத்திருக்கும்போது தன்னை மட்டும் அழைத்து மிக உரிமையாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாரே என்கிற சந்தோஷம்தான் கோபாலய்யரின் மனைவிக்கு.

உடனே மகா பெரியவாளை விழுந்து நமஸ்கரித்து விட்டு, ”பெரியவாஒங்களோட ஆசி எங்களுக்குப் பரிபூரணமா இருந்தா, நீங்க என்ன கேட்டாலும் செய்யறதுக்கு சித்தமா இருக்கோம் பெரியவா என்று இரு கைகளையும் குவித்து வணங்கியபடி, கண்களில் நீர் கசியச் சொன்னார்.

உடனே பெரியவா, ”ஒண்ணும் கஷ்டம் இல்லைநெல்பொரிதான் வேணும். எப்படித் தயார் பண்ணணும் தெரியுமா? நெல்லைப் பொரியாக்கி, அதுல உமியை எல்லாம் ஒட்ட நீக்கிட்டு பொரியை மட்டும் எனக்கு அனுப்பி வை. அதுதான் எனக்கு ஆகாரம், தெரியுமோல்லியோதவிர, வாழைக்காய் மாவும் தயார் பண்ணிண்டு வந்து குடுத்துடு என்றார்.

மகா பெரியவா சொன்னபடி சுமார் 25 வருடங்களுக்கு நெல்பொரியையும், வாழைக்காய் மாவையும் தயார் செய்து ஸ்ரீமடத்துக்கு அனுப்பி வைத்து வந்தார்கள் புதுவை கோபாலய்யர் தம்பதியர்.

இதெல்லாம் பக்தர்களுக்கு மகா பெரியவா செய்கிற மிகப் பெரிய அனுக்ரஹம்.

இத்தகைய வாய்ப்பு பெற்றவர்கள் காலாகாலத்துக்கும் மகா பெரியவாளைத் தங்கள் குலதெய்வமாகவே கொண்டாடினார்கள்.