காஞ்சி மகா பெரியவா பிறந்தது விழுப்புரம் நகரத்தில். 1894-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி விழுப்புரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் அவதரித்தார்.
மகா பெரியவா பிறந்த அந்த இல்லம், இன்றைக்கு ஒரு திருக்கோயிலாக விளங்கி வருகிறது. பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய புனிதமான இடம்.
இதே விழுப்புரத்தில் மகா பெரியவா சிறுவனாக இருந்தபோது அவருடன் பழகிய நண்பர்கள் அதிகம். அப்படிப்பட்ட நண்பர்களுள் தியாகி எஸ். சிதம்பரம் ஐயரும் ஒருவர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ–வும்கூட.
சிறு வயதில் மகா பெரியவாளும் சிதம்பரம் ஐயரும் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள்.
இதெல்லாம் தங்கள் குடும்பத்துக்கு எப்பேர்ப்பட்ட பேறு என்று சிதம்பரம் ஐயரின் குடும்பத்தினர் இன்றைக்கும் நினைத்து நினைத்து ஆனந்தப்படுகின்றனர்.
தன்னை தரிசிக்க சிதம்பரம் ஐயர் எப்போது வந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் அமர்ந்து பேசி பழைய நாட்களை மகா பெரியவா நினைவு கூர்வாராம்.
சிதம்பரம் ஐயரின் மகன் வீரராகவ ஐயர். இவர் வக்கீல் தொழிலில் இருந்தார். ருக்மணி இவருக்கு மனைவியாக அமைந்தார். இவர்களுடைய மகன் விழுப்புரம் ரவி பாகவதர் என்கிற சூரியநாராயணன் (இனி இவரை சூரி என்றே பார்ப்போம்).
1983-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் சூரியின் தகப்பனார் வக்கீல் வீரராகவ ஐயர் சிவலோகப்ராப்தி அடைந்தார். ‘ஏகாதசி மரணம்… துவாதசி தகனம்‘ என்பது விசேஷம். வக்கீல் வீரராகவ ஐயர், மகா பெரியவா பக்தியில் திளைத்துக் காலம் கழித்ததால், அவருக்கு இத்தகைய பாக்கியம் கடைசி காலத்தில் கிடைத்தது.
வீரராகவ ஐயருக்கு செய்ய வேண்டிய ஈமக் காரியங்கள் முறையாக செய்யப்பட்டன. தவிர, ஒரு வருடம் வரை மாதா மாதம் செய்ய வேண்டிய வைதீகக் காரியங்களும் செய்யப்பட்டன.
ஒரு வருடம் ஆனவுடன் வீரராகவ ஐயருக்கு வருஷாப்தீகமும் (தலை திவசம்) முடிந்தது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் விழுப்புரம் சூரியின் இல்லத்தில் பகல் வேளை… மகன் சூரியை அழைத்த ருக்மணி, ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். ‘இதென்ன கடிதம்‘ என்று குழம்பியபடி தாயாரை சூரி பார்க்க… ருக்மணி விளக்கம் தரலானார். “டேய் சூரி… நான் உங்கிட்ட குடுத்த இந்த லெட்டரை எடுத்துண்டு காஞ்சிபுரம் மடத்துக்குப் போ. அங்கே மகா பெரியவாகிட்ட இந்த லெட்டரை நான் குடுத்ததா சொல்லிக் குடு. அவர் இந்த லெட்டரைப் படிச்சுட்டு என்ன பதில் சொல்றாரோ, அதை அப்படியே என்கிட்ட வந்து சொல்லு“ என்றார்.
ருக்மணி கூடுதலாக இட்ட ஒரு உத்தரவு – “பஸ்ல போறப்ப இந்த லெட்டரை நீ பிரிச்சுப் படிச்சுடாத… அப்படியே பெரியவாகிட்ட கொண்டு போய்க் காமிக்கணும்.“
“சரிம்மா…“ என்று சொல்லி, லெட்டருடன் காஞ்சிபுரம் கிளம்பி விட்டார். விழுப்புரத்தில் பஸ் ஏறினார்.
‘விருந்து சாப்பிடும்போது மருந்தை நினைக்காதே… மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே‘ என்பார்கள். சாதாரணமாக நினைவு இருக்காது. ஆனால், சொன்ன பிறகு, அது நினைவுக்கு வந்து விடும்.
விருந்து சாப்பிடும்போது பயந்து கொண்டே மருந்தை நினைப்போம். மருந்து சாப்பிடும்போது குரங்கும் நினைவுக்கு வரும்.
ஒரு விஷயத்தைச் சொல்லி இதைச் செய்யாதே என்று சொன்னால், அதை செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை மனிதர்களுக்கு எழுவது வாடிக்கை.
விழுப்புரத்தில் பஸ் ஏறி, காஞ்சிபுரம் பயணித்துக் கொண்டிருந்தார் சூரி. ஒரு பையில் அம்மா தந்த லெட்டரை வைத்திருந்தார். ‘ஏன் இதைப் படிக்கக் கூடாது என்று அம்மா சொன்னார்? அப்படி என்ன விஷயத்தை மகா பெரியவாளுக்கு எழுதி இருப்பார்?‘ என்றெல்லாம் சூரியின் மனம் யோசித்தபோது, ‘பிரித்துதான் பார்த்து விடுவோமே‘ என்று முடிவெடுத்தார்.
பைக்குள் கை விட்டு லெட்டரை எடுத்தார். எடுக்கும்போது கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தது – ‘தாயின் உத்தரவை மீறுகிறோமா?‘ என்று. ஆனால், அடுத்த விநாடியே ‘இதில் தவறில்லை‘ என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார். லெட்டரைப் படிக்க ஆரம்பித்தார்.
வேகமாகச் செல்லும்போது நல்ல சிலுசிலுவென்ற காற்று பஸ்ஸுக்குள் புகுந்து பயணிகளை குளுமைப்படுத்தினாலும் சூரிக்கு மட்டும் வியர்த்தது.
காரணம் – ருக்மணி எழுதிய கடிதத்தை படித்து முடித்து விட்டார்.
கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
ருக்மணி எழுதி இருந்ததன் சாரம் இதுதான் –
‘எனது எஜமானர் (கணவர்) இறந்து ஒரு வருடம் ஆகி விட்டது. அவருக்கு உண்டான கர்மாக்களை நடத்த வேண்டும் என்பதற்காக நான் பொறுமையுடன் இருந்தேன். என் எஜமானர் என்னை விட்டுப் பிரிந்து சென்ற பின் நான் மட்டும் உயிர் வாழ்வது தேவை அல்ல. வாழவும் பிடிக்கவில்லை. எனவே, நடமாடும் தெய்வமாக விளங்கி வருகிற தாங்கள் காலாகாலத்தில் எனக்கு முக்தியைத் தந்து அருளுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். முக்தி எனக்குக் கிடைக்கும்வரை இடைப்பட்ட காலத்தை நான் எப்படிக் கழிக்க வேண்டும் என்பதையும் தாங்கள் சொல்லி அருள வேண்டும். நமஸ்காரங்களுடன் ருக்மணி.‘
சூரியின் கண்கள் கலங்கி விட்டன. தந்தை இறந்த பின் அவரைத் தொடர்ந்து தானும் முக்தி அடைய வேண்டும் என்று கேட்டு எழுதி இருப்பது அவரது மனதை ரொம்பவே பிசைய ஆரம்பித்தது. ‘ஏன் அப்பா இறந்து போனால், எல்லாமும் முடிந்து விட்டதா? நாங்கள் எல்லாம் எதற்கு இருக்கிறோம் அம்மா? உங்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள மாட்டோமா? அப்பா காலமானதோடு உன் சேவையும் பூர்த்தி ஆகி விட்டது என்று ஏனம்மா முடிவு செய்தாய்?‘ என்று கேட்டு தாய்ப்பாசம் பீரிட… உள்ளுக்குள் அழ ஆரம்பித்து விட்டார்.
அவரையும் மீறி, நீர்த்துளிகள் கண்களில் இருந்து எட்டிப் பார்த்தபோது ஜன்னல் வழியே பார்வையை வெளியே திருப்பி விழிகளைத் துடைத்துக் கொண்டார்.
பஸ் வந்தவாசியைத் தாண்டிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் காஞ்சிபுரம் வந்து விடும்.
இயல்பு நிலைக்கு வந்தார் சூரி. லெட்டரைப் பிரித்துப் படித்தது தெரியாமல் அப்படியே மீண்டும் ஒட்டித் தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்டார்.
மதியம் மூன்று மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தது பேருந்து.
அங்கிருந்து காஞ்சி ஸ்ரீமடம் இருக்கும் சாலைத் தெருவை நோக்கி நடை போட்டார் சூரி.
மடத்தின் வாசல் அந்த மதியப் பொழுதிலும் பரபரப்பாக இருந்தது.
மடத்தின் வாசலில் ஒரு மூதாட்டியிடம் இருந்து மூங்கில் தட்டு வாங்கினார். அதில் தேங்காய், ஒரு பாக்கெட் கல்கண்டு, துளசி மாலை இருந்தன. பையில் இருந்து கடிதத்தை எடுத்தார். அதை தட்டுக்கு அடியில் வைத்தார். மேலே தேங்காய், கல்கண்டை வைத்து துளசி மாலையால் முற்றிலுமாக மறைத்தார். இவை எல்லாமே எவரும் அறியா வண்ணம் ஸ்ரீமடத்தின் வெளியிலேயே செய்து முடித்தார் சூரி.
ஏன் அந்தக் கடிதம் வெளியே தெரியாமல் சூரி மறைத்து வைத்தார் என்றால், அதற்கு ஒரு காரணம் உண்டு.
‘மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக பலரும் வருவார்கள். அவர்களில் சிலர் தங்கள் இல்லத்தில் நிகழ இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்குப் பத்திரிகைகளை சமர்ப்பித்து ஆசி வேண்டுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் இந்தக் கடிதம் மகா பெரியவாளிடம் சேர்வது சரியாக இருக்காது. பெரியவா தனிமையில் இருக்கும்போது பார்த்துக் கொடுக்கலாம். நல்ல காரியங்களுக்காக வந்தவர்கள் ஆசி வாங்கிச் செல்லட்டும்‘ என்று கூட்டத்தின் பின்னால் காத்திருந்தார் சூரி.
ஸ்ரீமடத்தின் பின்னால் ஒரு மரத்தடியில் மகா பெரியவா எல்லோருக்கும் தரிசனம் தந்து கொண்டிருந்தார். அன்றைய தினம் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர் பாலு என்பவர்.
ஒவ்வொரு பக்தரின் முறை வரும்போதும் அவர்களை மகா பெரியவாளுக்கு சமீபமாக அழைத்து, அவர்களின் பெயர், ஊர் போன்றவற்றை உரக்கச் சொல்லி மகா பெரியவா ஆசிர்வாதத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார் பாலு.
சூரி மனதில் நினைத்தது போலவே திருமணப் பத்திரிகையை மகா பெரியவாளிடம் சமர்ப்பித்து ஆசி பெற வேண்டும் என்று இரண்டு மூன்று குடும்பங்கள் தென்பட்டன. ஒரு மூங்கில் தட்டில் கல்யாணப் பத்திரிகையை பெரியவா பார்வை படும்படி வைத்து, பழம், பூ இத்யாதிகளையும் வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.
தரிசன வரிசை மெள்ள மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது. திருமணப் பத்திரிகையோடு வந்தவர்களுக்கு அதன் மேல் குங்குமத்தை அள்ளி வைத்து, ஆசிர்வாதம் செய்து புன்னகையோடு அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதிகளை அழைத்துக் கொண்டு அவர்களது பெற்றோரும் ஆசி பெற வந்திருந்தனர்.
ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். பின்னால் நின்று கொண்டிருந்த சூரி, தற்போது மகா பெரியவாளுக்கு முன்னால் வந்து விட்டார்.
சுமார் பதினைந்து அடி தள்ளி மகா பெரியவா அமர்ந்திருந்தார். அவரது பார்வையில் சூரி பட்டு விட்டார்.
அடுத்து சூரியின் முறை வந்தாகி விட்டது. அப்போது பாலு, மகா பெரியவாளிடம், “விழுப்புரத்துலேர்ந்து தியாகி சிதம்பரம் ஐயர் பேரன் வந்திருக்கார்“ என்றார்.
அதற்கு மகா பெரியவா, “யாரு? போளூர் ஆனந்தாவின் பேரன்தானே?“ என்று கேட்டார்.
போளூரைச் சேர்ந்த ஆனந்தாவின் மகள் ருக்மணியின் மகன்தான் சூரியநாராயணன். அதாவது சூரிக்கு போளூர் ஆனந்தா பாட்டி முறை.
சூரிக்கு சந்தோஷம். எப்போது வந்தாலும், தாய்வழிப் பாட்டியின் பெயரை பெரியவா சொல்லாமல் இருக்க மாட்டார். போளூர் பாட்டி வாழ்ந்த காலத்தில் அந்த அளவுக்கு ஸ்ரீமடத்தோடு தொடர்பில் இருந்தார்.
“சரி, என்ன விஷயமா வந்திருக்கான்னு கேளு“ என்றார் மகா பெரியவா.
உடனே பாலுவும், “எப்போதும்போல் பெரியவா அனுக்ரஹம் வேணும்னு கேக்கறார்“ என்றார் பொத்தாம்பொதுவாக.
அதற்கு மகா பெரியவா, “இல்லை பாலு… அவனோட அம்மா ருக்மணி ஒரு லெட்டர் குடுத்து அனுப்பி இருக்கா. அதைத் தேங்காய்த் தட்டுல மறைச்சு வெச்சிருக்கான். அதை அவன்கிட்டேர்ந்து வாங்கி எல்லோருக்கும் கேக்கும்படியா வாசி“ என்று பாலுவுக்கு உத்தரவு போட…
ஏகத்துக்கும் ஷாக் ஆனார் சூரி!
சூரி மட்டுமல்ல… அங்கே கூடி இருந்த அனைத்து பக்தர்களும்தான்!
‘அப்படி என்ன கடிதமா இருக்கும்? மறைத்து வைத்திருக்கும் ஒரு கடிதத்தை எல்லோருக்கும் கேக்கும்படியா படி என்கிறாரே…‘ என்று கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் லெட்டர் வைத்திருந்த சூரியையும், அதைப் படிக்கப் போகும் பாலுவையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.
மகா பெரியவாளின் ஞான திருஷ்டியைப் பார்த்து வியந்த சூரியின் கண்கள் குளமாகி விட்டன. ‘நடமாடும் தெய்வம்… கண்கண்ட தெய்வம் என்று எல்லோரும் மகா பெரியவாளைப் போற்றுவார்களே… அந்த மகானின் ஞான திருஷ்டியை இன்று நேருக்கு நேராக அனுபவிக்கின்ற பாக்கியம் பெற்று விட்டேனே… எங்கோ விழுப்புரத்தில் உட்கார்ந்து கொண்டு அம்மா எழுதிய கடிதத்தின் சாராம்சம் தனக்கு ஏற்கெனவே தெரியும் என்பது போல் உத்தரவிடுகிறாரே… இந்த லெட்டர் பலருக்கும் தெரியக் கூடாது என்பதற்குத்தானே மூங்கில் தட்டின் அடியில் வைத்து, அதன் மேல் தேங்காய், துளசி மாலை என்றெல்லாம் வைத்தேன்? இதையும் மீறி, தட்டில் லெட்டர் இருக்கும் விவரத்தையும், அதை எனது தாயார் ருக்மணிதான் எழுதி உள்ளார் என்பதையும் இப்படிப் போட்டு உடைத்து விட்டாரே…‘ என்று பரப்பிரம்ம சொரூபத்தைப் பார்த்து, உடல் நடுங்க… கைகளைக் கூப்பி வணங்கினார்.
பாலு மெள்ள சூரியிடம் நெருங்கினார். “சூரி… தட்டுல மறைச்சு வெச்சிண்டிருக்கியாமே லெட்டர், அதைக் குடு… சபைல பெரியவா சொல்லியாச்சு. அதை எல்லாருக்கும் முன்னால படிச்சுக் காட்டச் சொல்லி இருக்கா“ என்றார் பாலு காதோடு காதாக.
சூரிக்குப் பின்னால் கல்யாணப் பத்திரிகைகள் வைத்துக் கொண்டு மங்களகரமான முகத்துடன் மேலும் சில குடும்பங்கள் காத்துக் கொண்டிருந்தன. இந்த வேளையில் ‘என் கணவர் இறந்து விட்டார். அவர் போன இடத்துக்கே நானும் போக வேண்டும். முக்தி அருளுங்கள்‘ என்று எழுதப்பட்ட கடிதத்தை எப்படித் தருவது? பாலு இதன் வரிகளை உரக்கப் படித்தால், எல்லோருக்கும் கேட்குமே! அது இங்கே தரிசனத்துக்குக் காத்திருக்கிற பலருக்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்குமே‘ என்று தவித்தார் சூரி.
‘லெட்டரைக் குடு‘ என்பதாக மீண்டும் பாலு சைகை செய்ய… அவரைத் தன் அருகே அழைத்தார் சூரி.
சூரியை மேலும் நெருங்கினார் பாலு.
பாலுவின் காதில், அம்மா எழுதி அனுப்பி இருக்கும் கடிதத்தின் சாராம்சத்தை ஒரு சில வரிகளில் சொல்லி விட்டு, “இதைத்தான் என் அம்மா எழுதிக் குடுத்திருக்கா. இதை எப்படி பொது சபைல நீங்க வாசிக்க முடியும்? இதை அப்படியே பெரியவாகிட்ட சொல்லாதீங்கோ… பலரும் தரிசனத்துக்கு வந்திருக்கா. முக்தி, அது இதுன்னு நீங்க வாசிச்சேள்னா மத்தவங்கல்லாம் முகத்தை சுளிப்பா. எனவே, அம்மாவைப் பத்தி பொதுவா ஏதாவது பெரியவாகிட்ட சொல்லிச் சமாளிங்கோ“ என்று கடிதத்தைத் தராமல் மிக மிக மெல்லிய குரலில் சொன்னார் சூரி.
விவரத்தைப் புரிந்து கொண்ட பாலுவும், சூரி தட்டில் வைத்திருந்த கடிதத்தை வாங்காமல், “வக்கீல் வீரராகவ ஐயரோட பார்யாள் (மனைவி) ருக்மணி மாமி, பெரியவாளுக்கு லெட்டர் அனுச்சிருக்கா.. அதுல பெரியவா அனுக்ரஹம் வேணும்னு கேட்டு எழுதி இருக்கா“ என்று சிம்பிளாகச் சொல்லி, மகா பெரியவாளின் திருமுகத்தைப் பார்த்தார்.
பாலு சொன்ன விதம் சூரிக்கு திருப்தியாக இருந்தது.
ஆனால், பெரியவாளுக்குத் திருப்தி இல்லை.
மகா பெரியவா லேசாகத் தொண்டையை செருமிக் கொண்டு பாலுவைப் பார்த்து, “ஏண்டா பாலு… என்னோட அனுக்ரஹத்தைக் கேட்டு ருக்மணி லெட்டர் எழுதி இருக்கிறதா நீ சிம்ப்பிளா சொன்ன இவ்ளோ சின்ன விஷயத்தையா ஒண்ணரை பக்கத்துல விலாவாரியா எழுதி தன்னோட பையன்கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கா?“ என்று கேட்க… பாலு நெளிந்தார்.
சூரிக்கு மெள்ள உடல் பதற ஆரம்பித்தது. அடுத்தடுத்து மகா பெரியவா எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைக்கிறாரே… என்ன செய்வது என்று தடுமாறினார்.
இவ்வளவு கச்சிதமாக மகா பெரியவா எடுத்துச் சொன்ன பிறகு பாலுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சூரி சொன்ன வார்த்தைகளில் ஒரு நியாயம் இருந்தாலும், மகா பெரியவா எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே! அவரே ‘அந்த லெட்டரை வாங்கிப் படி… எல்லோரும் கேக்கட்டும்‘ என்று சொல்கிறாரே? இதன் பிறகு நாம் ஏன் தயங்க வேண்டும் என்று தெளிந்து, கடிதத்தை வாங்கினார் பாலு.
கடிதம் வாங்கியதைப் பார்த்ததும், “சத்தம் போட்டுப் படிடா பாலு“ என்று மகா பெரியவா மீண்டும் உத்தரவிட… வாசிக்க ஆரம்பித்தார் பாலு.
சுமார் எட்டு நிமிடங்களில் ருக்மணி எழுதிய ஒண்ணரை பக்க கடிதத்தை நிறுத்தி நிதானமாக – அதே சமயம் எல்லோருக்கும் கேட்கும்படியாக சத்தம் போட்டு வாசித்து முடித்தார் பாலு.
இதைக் கேட்ட அத்தனை பேரும் அதிர்ச்சிக்குள்ளாகி நின்றனர் – சூரியைத் தவிர.
சூரிக்குத்தான் இதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்கிற விவரம் ஏற்கெனவே தெரியுமே!
படித்து முடிக்கப்பட்டவுடன், ஒரு சில விநாடிகளுக்கு அங்கே ஒரு பேரமைதி நிலவியது. அதன் பின் மகா பெரியவா ஒரு புன்னகையுடன் அங்கு ஆசிர்வாதத்துக்காகக் கூடி இருந்த பக்தர்களைப் பார்த்து ஆரம்பித்தார்.
சூரியை அடையாளம் காண்பித்த மகா பெரியவா, “தோ இங்க நிக்கறானே… இவன்தான் இந்த ருக்மணியோட புள்ள.. அவனோட அம்மா இந்த லெட்டரைக் குடுத்து என்ட்ட குடுத்து பதில் கேட்டு அனுச்சிருக்கா. இந்த ருக்மணி இருக்காளே, அவ ஒரு பைத்தியம்“ என்று சொல்ல… கூட்டத்தினரும், சூரியும் மகா பெரியவாளையே பார்த்தனர்.
மகா பெரியவா ஆரம்பித்தார். “பின்னே… இந்த லோகத்துல அவனவன் அடுத்து என்ன பண்ணலாம்னு ஒரு ப்ளான் போட்டு வாழ்ந்துண்டு வர்ற நிலைல, ‘நான் மேலே போய்ச் சேர்றதுக்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கோ‘னு கேக்கறாளே ருக்மணி… இவளைப் பைத்தியம்னு சொல்லாம வேற என்னனு சொல்றது?
அடுத்த மாசம் இதைப் பண்ணணும், அடுத்த வருஷம் இதைப் பண்ணணும், இன்னும் மூணு வருஷம் கழிச்சு இதை சாதிக்கணும்னு அவனவன் வாழ்ந்திண்டிருக்கிற உலகத்துல ருக்மணி மட்டும் முக்தியைப் பத்தி யோசிச்சுண்டு இருக்காளே…“ என்றவர், சூரியைப் பார்த்தார். “நீ போய் ருக்மணிகிட்ட சொல்லு… போய்ச் சேர்வதற்கு ஒரு வழி தெரிஞ்சா, நான் ஏன் (தன்னைப் பற்றிச் சொல்கிறார்) இப்படிக் கண்ணும் காதும் சரி இல்லாம வாழ்ந்துண்டு இருக்கேன்… தெனோமும் தடுமாறிண்டு இருக்கேன்… அவளையும் என்னை மாதிரி ஏதாவது ஒரு மூலைல உட்காந்துண்டு ராம ராம ராமான்னு ஜபம் பண்ணிண்டு இருக்கச் சொல்லு“ என்று பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா சொல்ல… கூடி இருந்தோர் பலரது கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.
‘பரப்பிரம்மம் சாட்சாத் சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளே இப்படிச் சொல்கிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்?‘ – இதுதான் சூரியின் மனதில் ஓடியது.
என்னே ஒரு பக்குவம்! தானும் மிகச் சாதாரணம்தான் என்று தன்னையும் குறைத்துப் பேசி, ‘எதற்கும் ஆசைப்படாமல் முக்தி வேண்டும் என்று சொல்கிறாளே… அவளையும் என்னைப் போல் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கச் சொல்… அதுவே கடைசிக் காலத்தில் கடைத்தேற்றும்‘ என்பதை பெரியவா என்ன அழகாகச் சொல்லி இருக்கிறார்.
மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை நினைத்து வியந்து வியந்து வணங்கினார் சூரி.
அதன் பின் பாலு மூலம் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா.
‘முக்தி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று… கல்யாணப் பத்திரிகை இன்றைக்குக் கொண்டு வந்தாலும், புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதியர் இன்றைக்கு வந்திருந்தாலும் எல்லோருக்கும் ஒரு காலத்தில் முக்தி அவசியம்தானப்பா‘ என்பதை உணர்த்தும் விதமாக – பலரும் இருக்கக் கூடிய இடத்தில் அதைப் படிக்க வைத்துப் பாடம் புகட்டிய மகா பெரியவாளின் ஞானமே ஞானம்!
மாய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்த மனித குலத்தைக் கரை சேர்க்க வந்த அந்த மாபெரும் மகானை மீண்டும் வணங்கி விட்டு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தார் சூரி.
‘அம்மாவின் கடைசிக் காலம் வரை இன்னும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்‘ என்ற சங்கல்பத்துடன் விழுப்புரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்.
வரும்போது இருந்த மன அழுத்தம், ஊர் திரும்பும்போது சூரியிடம் இல்லை.
சூரியை அடையாளம் காண்பித்த மகா பெரியவா, “தோ இங்க நிக்கறானே… இவன்தான் இந்த ருக்மணியோட புள்ள.. அவனோட அம்மா இந்த லெட்டரைக் குடுத்து என்ட்ட குடுத்து பதில் கேட்டு அனுச்சிருக்கா. இந்த ருக்மணி இருக்காளே, அவ ஒரு பைத்தியம்“ என்று சொல்ல… கூட்டத்தினரும், சூரியும் மகா பெரியவாளையே பார்த்தனர்.
மகா பெரியவா ஆரம்பித்தார். “பின்னே… இந்த லோகத்துல அவனவன் அடுத்து என்ன பண்ணலாம்னு ஒரு ப்ளான் போட்டு வாழ்ந்துண்டு வர்ற நிலைல, ‘நான் மேலே போய்ச் சேர்றதுக்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கோ‘னு கேக்கறாளே ருக்மணி… இவளைப் பைத்தியம்னு சொல்லாம வேற என்னனு சொல்றது?
அடுத்த மாசம் இதைப் பண்ணணும், அடுத்த வருஷம் இதைப் பண்ணணும், இன்னும் மூணு வருஷம் கழிச்சு இதை சாதிக்கணும்னு அவனவன் வாழ்ந்திண்டிருக்கிற உலகத்துல ருக்மணி மட்டும் முக்தியைப் பத்தி யோசிச்சுண்டு இருக்காளே…“ என்றவர், சூரியைப் பார்த்தார். “நீ போய் ருக்மணிகிட்ட சொல்லு… போய்ச் சேர்வதற்கு ஒரு வழி தெரிஞ்சா, நான் ஏன் (தன்னைப் பற்றிச் சொல்கிறார்) இப்படிக் கண்ணும் காதும் சரி இல்லாம வாழ்ந்துண்டு இருக்கேன்… தெனோமும் தடுமாறிண்டு இருக்கேன்… அவளையும் என்னை மாதிரி ஏதாவது ஒரு மூலைல உட்காந்துண்டு ராம ராம ராமான்னு ஜபம் பண்ணிண்டு இருக்கச் சொல்லு“ என்று பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா சொல்ல… கூடி இருந்தோர் பலரது கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.
‘பரப்பிரம்மம் சாட்சாத் சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவாளே இப்படிச் சொல்கிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்?‘ – இதுதான் சூரியின் மனதில் ஓடியது.
என்னே ஒரு பக்குவம்! தானும் மிகச் சாதாரணம்தான் என்று தன்னையும் குறைத்துப் பேசி, ‘எதற்கும் ஆசைப்படாமல் முக்தி வேண்டும் என்று சொல்கிறாளே… அவளையும் என்னைப் போல் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கச் சொல்… அதுவே கடைசிக் காலத்தில் கடைத்தேற்றும்‘ என்பதை பெரியவா என்ன அழகாகச் சொல்லி இருக்கிறார்.
மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை நினைத்து வியந்து வியந்து வணங்கினார் சூரி.
அதன் பின் பாலு மூலம் பிரசாதம் கொடுத்தார் மகா பெரியவா.
‘முக்தி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று… கல்யாணப் பத்திரிகை இன்றைக்குக் கொண்டு வந்தாலும், புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதியர் இன்றைக்கு வந்திருந்தாலும் எல்லோருக்கும் ஒரு காலத்தில் முக்தி அவசியம்தானப்பா‘ என்பதை உணர்த்தும் விதமாக – பலரும் இருக்கக் கூடிய இடத்தில் அதைப் படிக்க வைத்துப் பாடம் புகட்டிய மகா பெரியவாளின் ஞானமே ஞானம்!
மாய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் இந்த மனித குலத்தைக் கரை சேர்க்க வந்த அந்த மாபெரும் மகானை மீண்டும் வணங்கி விட்டு, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தார் சூரி.
‘அம்மாவின் கடைசிக் காலம் வரை இன்னும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்‘ என்ற சங்கல்பத்துடன் விழுப்புரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார்.வரும்போது இருந்த மன அழுத்தம், ஊர் திரும்பும்போது சூரியிடம் இல்லை