நடமாடும் தெய்வமாக இன்றைக்கும் நம்மிடம் விளங்கி வருகிற காஞ்சி மகா பெரியவாளின் அருட்பார்வை நம் மீது பட்டாலே போதும்… இதற்கு முந்தைய ஜன்மங்களிலும், தற்போது வாழ்ந்து வருகின்றபோதும் செய்த பாவங்கள் எல்லாம் முற்றிலுமாக அகன்று, புண்ணிய ஆத்மா ஆகி விடுவோம். குருவின் பார்வைக்கு அத்தனை சக்தி உண்டு.
ஒரு முறை காஞ்சி மகா பெரியவா ஸ்ரீமடத்தில் இருந்தார். திரளான பக்தர்கள் கூட்டம்.
கேரள மாநிலத்தில் அப்போது பிரபலமாக விளங்கிய ஒரு ஜோதிடர் பெரியவா தரிசனத்துக்காக வந்திருந்தார்.
முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களை ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று மகா பெரியவாளிடம் சேர்ப்பிப்பது ஒரு வழக்கம்.
அந்த வகையில் ஜோதிடரைப் பார்த்த ஒரு சில சிப்பந்திகள் அவரை இன்முகத்துடன் வரவேற்று, மகா பெரியவாளிடம் கூட்டிச் சென்றனர்.
திரளான பக்தகோடிகள் கூடி இருக்கும் அந்த சந்நிதியில் மகா பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் ஜோதிடர். கண்களில் நீர் பெருக, அந்த மகானை தரிசித்தார். இருவரும் ஒரு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு ஜோதிடருக்குப் பிரசாதம் வழங்கிய மகா பெரியவா, தன் சிப்பந்திகளை அழைத்து, ‘இவரை பத்திரமாக வாசல் வரைக்கும் கொண்டு விட்டு வந்துடு‘ என்று அனுப்பினார்.
ஜோதிடருக்கு ஆனந்தம். கலியுக தெய்வத்தைத் தரிசித்து விட்ட பரவசம். ஸ்ரீமடத்தை விட்டு வெளியே நகர முற்பட்ட ஜோதிடரை மடத்தின் வளாகத்துக்குள்ளேயே எண்ணற்ற அன்பர்கள் சூழ்ந்து கொண்டனர். இவர்களின் ஸ்ரீமடத்தின் ஊழியர்களும் அடக்கம்.
‘சாமீ… எம் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகலை… எப்ப ஆகும்?‘
‘ஜோசியரய்யா… என்னோட வேலை போயிடுச்சு… அடுத்து ஒரு நல்ல வேலை எப்ப கிடைக்கும்?‘
‘ஐயா… என் சொத்தெல்லாம் ஒருத்தன் பிடுங்கிட்டு என்னை ஏமாத்திட்டான். நியாயமா எனக்கு சேர வேண்டியது எப்ப கிடைக்கும்?‘
– இப்படிப் பல விதங்களில் கேள்விகள் கேட்டு எல்லோரும் ஜோதிடரை மொய்த்துக் கொண்டார்கள்.
ஜோதிடருக்குக் காவலாக வந்த ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜோதிடரை நெருங்கி வருபவர்களை எவ்வளவோ தடுத்தும், கேட்காமல் ஆளாளுக்கு ஒரு கேள்வியைக் கேட்டபடி உரிய ஜாதகத்தையும் எடுத்து நீட்ட ஆரம்பித்தார்கள்.
ஜோதிடர் சொன்னார்: “காஞ்சி மகா பெரியவா என்கிற நடமாடும் தெய்வம் இருக்கிற இடத்துல சுமார் ஐந்நூறு அடி சுற்றளவுக்கு எந்த கிரகமும் வேலை செய்யாது. எனவே, நீங்கள் தருகிற ஜாதகத்தையோ, குறிப்பையோ வைத்துக் கொண்டு என்னால் இங்கு பலன் சொல்ல முடியாது. கிரகங்கள் அதற்கு ஒத்துழைக்காது. நான் தங்கி இருக்கிற ஓட்டலுக்கு வாருங்கள். சொல்கிறேன்.“
அதன் பின் அங்கிருந்து ஜோதிடர் அகன்றாராம்.
தனது திருப்பாதங்களைப் பற்றிக் கொண்ட பக்தனான மார்க்கண்டேயனை எமதர்மனிடம் இருந்தே மீட்டார் அல்லவா திருக்கடவூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்?
அதுபோல் தன் திருச்சந்நிதிக்கு வந்து தன்னை வணங்கியவர்களின் நலன்களை மகா பெரியவா பார்த்துக் கொள்வார். மகான் ஸித்தி ஆன பின்னும் அவரது சந்நிதியைத் தேடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அவர் மீதுள்ள நம்பிக்கைதான்.
திருச்சி மாநகரத்தில் மேலசிந்தாமணி பகுதியில் ராஜா சாஸ்திரிகள் என்பவர் இருந்தார். மூச்சுக்கு மூச்சு மகா பெரியவாதான் எல்லாமும்.
தன் இல்லத்தில் எந்த ஒரு நல்லது, கெட்டது என்றாலும் அந்த மகானிடம் உடனுக்குடன் தெரிவித்து விடுவார். மகா பெரியவாளின் திருவாயில் இருந்து உதிர்கிற வார்த்தைகள்தான் எல்லாவற்றுக்குமான தீர்வு.
மகா பெரியவா இட்ட உத்தரவை எந்த ஒரு காலத்திலும் இவர் மீறியதில்லை.
மகா பெரியவாளை மனபூர்வமாக வணங்கி வருகிற பக்தகோடிகள், விதியின் பலனாக அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டி வந்தாலும், அந்த மகானின் பரிபூரண ஆசி கிடைத்து விட்டால் போதும்.. பட வேண்டிய அவஸ்தைகளில் இருந்தும், அனுபவிக்க வேண்டிய துன்பங்களில் இருந்தும் நிரந்தர விடுதலை பெற்று விடுவார்கள். அனுபவபூர்வமாக இதை உணர்ந்தவர்களுக்குத்தான் மகா பெரியவாளின் குருவருள் புரியும்.
ராஜா சாஸ்திரிகளுடைய பெண் வயிற்றுப் பேரன் பெயர் சீனிவாசன்.
பேரன் பிறந்ததும், குடும்பமே அந்தக் குழந்தையைக் கொண்டாடியது. ‘சீனிவாசா…. சீனிவாசா…‘ என்று எல்லோரும் குழந்தையையே சுற்றிச் சுற்றி வந்து கொஞ்சினார்கள்.
நாம் செலுத்துகிற பாசம், கவனிக்கிற கவனிப்பு – இவை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எல்லாப் பிறவிக்கும் முன்வினைப் பலன் என்கிற ஒன்று இருக்கிறதல்லவா? அப்போது வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக அடுத்தத்த பிறவிகளில் அடைக்க வேண்டும் அல்லவா?
கர்மாவை அனுபவிக்க வேண்டிய வேளை வந்தால் வயது, பதவி, தகுதி போன்ற எவையும் ஒரு பொருட்டல்ல.
குழந்தை சீனிவாசனுக்கு முந்தைய பிறவி கர்ம பலனை அனுபவிக்க வேண்டிய வேளை வந்து விட்டது போலிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கிற எவருமே இப்படி ஒரு சோகம் குழந்தையைத் தாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.
பிறந்த குழந்தைக்கு இந்தந்த தடுப்பூசிகள், அம்மைக்கு உண்டான ஊசிகள் குறித்த கால இடைவெளியில் போடுவது வழக்கம். அதுபோல் மூன்று வயதே நிரம்பிய சீனிவாசனுக்கு ஒரு அம்மை ஊசி போட வேண்டிய வேளை வந்தது. அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊசியும் போடப்பட்டது.
ஆனால், சோகம் பாருங்கள்… சீனிவாசனுக்குப் போடுவதற்கான ஊசியில் செலுத்தப்பட்ட மருந்து எக்ஸ்பையரி ஆனது. அதாவது காலாவதி ஆன ஒரு மருந்தை சிரிஞ்சில் ஏற்றி குழந்தை சீனிவாசனுக்குப் போட்டு விட்டார்கள். இது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
காலாவதி ஆன மருந்து, பிஞ்சுக் குழந்தையின் உடலில் செலுத்தப்பட்ட ஓரிரு நாட்கள் கழித்து அது தன் வேலையைக் காண்பித்து விட்டது. எப்படித் தெரியுமா?
எப்போதும் உற்சாகமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிற சீனிவாசன் மெள்ள உடல் நிலை தளர்ந்தான். குழந்தையின் விளையாட்டுகள் குறைய ஆரம்பித்தன. ‘அசதியாக இருக்கிறான் போலிருக்கிறது‘ என்று ஆரம்பத்தில் நினைத்து விட்டார்கள் குடும்பத்தினர்.
இது எங்கு கொண்டு போய் விட்டது தெரியுமா? சீனிவாசன் உடலில் இடது பாகம் திடீரென பரலிஸிஸ் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டது.
மூன்று வயதுக் குழந்தை வீட்டில் துள்ளிக் குதித்து இங்கும் அங்கும் ஓடி விளையாடுவதைத்தான் பார்த்திருக்கிறோம். தவிர, வீட்டில் வைத்திருக்கிற பாத்திரம் பண்டம் போன்ற அனைத்தையும் உருட்டி விளையாடினால்தானே குழந்தையின் சேஷ்டையை அனைவரும் ரசிப்பார்கள்!
ஆனால், சீனிவாசனுக்கு மூன்று வயதிலேயே உடலின் இடப் பாகம் செயலிழந்து போனது. குழந்தை தரையில் போட்ட வாக்கிலேயே காணப்பட்டது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் புரள்வதற்கு முடியவில்லை. தனக்குள் இருக்கிற உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவித்தது. மிக மிக லேசான அசைவுகள் தவிர, பெரிதாக ஒன்றுமே இருக்காது.
வீட்டில் இருக்கிற அனைவரும் துடித்துப் போனார்கள். ‘திடீரென என்ன ஆயிற்று?‘ என்று குடும்பத்தில் அனைவரும் குழம்பிப் போனார்கள்.
கை வைத்தியம், நாட்டு வைத்தியம், கோயில் குளம் ஏறி இறங்குவது, யார் யாரெல்லாம் பரிகாரம் சொல்கிறார்களோ அவற்றை எல்லாம் நிறைவேற்றுவது – என்று கலங்கிய கண்களுடன் அனைத்தையும் நிறைவேற்றினார்கள். குழந்தையிடம் இயல்பு நிலை திரும்புமா என்று இருபத்துநான்கு மணி நேரமும் அவனது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாவம், பலன்தான் கிட்டவில்லை.
மருத்துவமனைப் படிகளையும் ஏறி இறங்கினார்கள். அப்போதுதான் ஓரிடத்தில் சீனிவாசனது உடல் நிலைக் கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. காலாவதியான மருந்துதான் இவனை இப்படிப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அந்தப் பெரிய மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.
இதற்கு உரிய சிகிச்சையையும் ஆரம்பித்தார்கள். ஆனால், உடனடி பலன் தெரியவில்லை. ராஜா சாஸ்திரிகளின் குடும்பத்தில் ஒவ்வொரு நாளுமே மிகுந்த ஏமாற்றத்துடன் கழிந்தது.
நாட்கள் ஓடின. ஒன்றும் திருப்தி தரவில்லை. அப்போதுதான் தங்களுக்கெல்லாம் குல குருவாக விளங்கக் கூடிய மகா பெரியவா இந்தக் குடும்பத்தினரின் நினைவுக்கு வந்தார். எதற்கும் ஒரு வேளை என்பது வர வேண்டும் அல்லவா?
‘குழந்தை சீனிவாசனை மகானது திருச்சந்நிதிக்குக் கூட்டிச் செல்லலாம்… அந்த மகானது அருளால் இவன் குணம் பெறலாம்‘ என்ற நம்பிக்கையில் திருச்சியில் இருந்து சீனிவாசனைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார்கள்.மகா பெரியவா அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் கீழே தரையில் ஒரு பெரிய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார். வருகிற பக்தர்களை ஆசிர்வதித்து