முந்தைய பிறவியில் நாம் என்னென்ன தவறு செய்திருந்தாலும், அதற்குரிய தண்டனை இந்தப் பிறவியில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் முந்தைய பிறவியில் பிறருக்கு உதவி புரிந்து, புண்ணியத்தை செய்திருந்தால் அதற்குரிய நற்பலனும் இந்தப் பிறவியில் கிடைத்து விடும்.
முன்வினைப் பயன் காரணமாக கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தாலும், அவற்றில் இருந்து மீள்வதற்கு ஒரு தீர்வும் உண்டு.
அதுதான் – குருவின் பார்வை!
அதாவது, குருவாக விளங்கக் கூடிய மகான்களிடம் இருந்து பெறக் கூடிய ஆசிர்வாதமே உரிய தீர்வை வழங்கி விடும்.
குருவின் அருள் நமக்கு பூரணமாக அமைந்து விட்டால், நாம் பட வேண்டிய எப்படிப்பட்ட கஷ்டமும் விலகி விடும். வியாதி கண் காணாமல் ஓடி விடும். சிரமங்கள் நெருங்கவே நெருங்காது. எல்லாமே க்ஷணப் பொழுதில் ஏற்படும்.
எனவேதான், தீர்க்க முடியாத வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்களும், ‘இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது‘ என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களும் காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளின் திவ்ய தரிசனத்தைப் பெற்றார்கள். அவரது அருளாசியால் மீண்டார்கள். அதன் பின் வாழ்வாங்கு வாழ்ந்தார்கள்.
மகா பெரியவாளின் அருளால், கல்கத்தாவைச் சேர்ந்த பெங்காலி அன்பர் ஒருவர் கொடிய வியாதியில் இருந்து மீண்ட அதிசய அனுபவத்தைப் பார்ப்போம்.
கல்கத்தாவில் வசித்து வந்த தம்பதியர் அவர்கள். தமிழ்க்காரர்கள். மகா பெரியவாளின் தீவிர பக்தர்கள்.
மகா பெரியவாளை விட்டால், அவர்களுக்குத் தெய்வமே இல்லை. தும்மலா, ஜலதோஷமா, தலைவலியா..? எல்லாவற்றுக்கும் மகா பெரியவாதான்!
கல்கத்தாவில் அவர்கள் வீட்டுக்கு ஒரு பால்காரர் நித்தமும் பால் சப்ளை செய்வார். அதிகாலை வேளையில் கறந்த பசும்பாலைக் கொடுத்து விட்டுப் போவார்.
பால்காரர் என்ற அளவில் மட்டும் இல்லாமல், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அவரையும் எண்ணி மிகுந்த அன்புடனும் பாசத்துடன் பேசுவார்கள், பழகுவார்கள் இந்தத் தம்பதியர்.
ஒரு விசேஷம் என்றால், தங்கள் வீட்டில் தயாரான ஸ்பெஷல் உணவு அயிட்டங்களை பால்காரரை வரச் சொல்லி, அவருக்குக் கொடுப்பதில் அலாதி சந்தோஷம் இந்தத் தம்பதிக்கு.
பால்காரரும் அப்படித்தான் இருந்தார். இவர்களது நெருக்கம் அவருக்குப் பல வகையில் கை கொடுத்தது.
பால்காரர், இவர்கள் வீட்டுக்கு மட்டும்தான் என்றில்லை. அந்த வீதி, அடுத்த வீதி என்று மேலும் சில வீடுகளுக்கு நித்தமும் பால் சப்ளை பண்ணுவார்.
உறவினர்களின் திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், காஞ்சிக்குச் சென்று மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும் கல்கத்தாவில் இருந்து புறப்பட்டுத் தமிழகம் வந்தார்கள் தம்பதியர்.
தமிழகத்தில் பல வேலைகள் நிலுவையில் இருந்ததால், மூன்று மாதம் இங்கே தங்கினார்கள். கோயில் – குளம் சுற்றுவது, ஊறுகாய் – வடாம் வாங்குவது, கபாலீஸ்வரர் மாட வீதிகளில் சுற்றுவது, தமிழகத்தில் ஊர் ஊராகப் பயணித்து ஆலய தரிசனம் செய்தது, காஞ்சிபுரம் போய் பெரியவா சந்நிதியில் நாலைந்து நாட்கள் தங்கியது என்று மூன்று மாதமும் மூன்று நாட்கள் மாதிரி ஓடியே போய் விட்டது.
ஒரு சுப தினத்தில் சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு ‘குட் பை‘ சொல்லி விட்டு, கல்கத்தா ரயில் ஏறினார்கள்.
தனது நெடிய பயணத்துக்குப் பின் ஒரு அதிகாலைப் பொழுதில் இவர்களது ரயில் கல்கத்தாவை அடைந்தது. ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தார்கள்.
பல் துலக்கி, முகம் துடைத்து, பூஜையறையில் மகா பெரியவா படத்துக்கு முன்னால் விளக்கை ஏற்றி வைத்தார் பெண்மணி. ‘பால்காரர் இப்ப வந்துட்டா, சூடா ஒரு காபி போட்டுக் குடிக்கலாம்‘ என்று பெண்மணி யோசித்தபோது, வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
இது பால்காரர் தட்டும் ஓசைதான். ‘ஆகா… காபின்னு நினைச்சவுடனே பால்காரர் வந்துட்டாரே…‘ என்று சந்தோஷப்பட்டு, முகத்தில் இருந்த சோர்வு முற்றிலும் விலகாமல் ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு நடந்தார்.
வாசல் கதவைத் திறந்தால் – பால்காரர்தான்!
அவரது முகத்தை ஆழ்ந்து பார்த்த பெண்மணி அதிர்ந்து போனார். பெண்மணிக்குப் பேச்சு வரவில்லை.
காரணம் – பால் தூக்குடன் வந்து நின்ற பால்காரர் – அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போயிருந்தார். இந்த மூன்று மாத காலத்துக்குள் அவரது தேகம் வற்றிப் போய் கிட்டத்தட்ட எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தார்.
அதிர்ச்சி இன்னும் விலகாமல் பால்காரரையே பார்த்துக் கொண்டிருந்தார் பெண்மணி.
பால் வாங்குவதற்குப் பாத்திரத்தை நீட்டாமல் அவரது உச்சி முதல் உள்ளங்கால் வரை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு, “என்னப்பா… என்ன ஆச்சு? நீதானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு“ என்றார் தடுமாற்றத்துடன்.
பால்காரர் வேதனையுடன் சிரித்துக் கொண்டே, “நான்தாம்மா… எல்லாம் விதி. நான் வாங்கிட்டு வந்த வரம்“ என்றார்.
“என்னப்பா… மூணு மாசத்துக்குள்ள இப்படி ஒருத்தர் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய் இதுவரை நான் பார்த்ததே இல்லைப்பா“ என்றார் வேதனையுடன்.
பெண்மணியிடம் இருந்த காலி பாத்திரத்தைத் தானே வலிய வாங்கி, அதில் பாலை ஊற்றினார். பிறகு, பால் பாத்திரத்தைப் பெண்மணியின் கையில் கொடுத்தார்.
பால்காரரது உடல் நிலையைப் பார்த்த பின் காபி போட்டுக் குடிக்கும் எண்ணமே பெண்மணியிடம் இருந்து விலகி விட்டது. “ஏம்ப்பா, ஒன் ஒடம்பு இப்படி எலும்பும் தோலுமா இருக்கே… என்ன காரணம்?“
“புற்றுநோய்ம்மா… டாக்டருங்க சொல்லிட்டாங்க.“
“புற்றுநோயா? ஒனக்கா? எப்படி இருந்த ஒடம்பு… சரி, மாத்திரை, மருந்துல்லாம் குடுத்திருக்காங்களா? டாக்டருங்க என்ன சொல்றாங்க..?“ – பதட்டம் குறையவில்லை பெண்மணிக்கு.
“இல்லேம்மா… என்ன சிகிச்சை பண்ணினாலும், என்ன மாத்திரை மருந்து எடுத்துக்கிட்டாலும் இனிமே இந்த உடம்பு தேறாதுன்னு டாக்டருங்க உறுதியா சொல்லிட்டாங்க…“
பெண்மணிக்குக் கண்களில் நீர் முட்டியது.
“அப்படீன்னா…?“ – மனதில் வலியுடன் கேட்டார் பெண்மணி.
“சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிடச் சொன்னாங்க. இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருன்னு சொன்னாங்க. அதான், விதியை நினைச்சு உற்சாகமா இருக்க என்னை மாத்திக்கிட்டு வரேன்“ என்று பால்காரர், சாலையில் இறங்க முற்பட்டார்.
“ஒரு நிமிஷம்ப்பா…“ என்று அவரைத் தடுத்து நிறுத்தினார். அப்படியே நின்றார்.
பால்காரருக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்தை பெண்மணியால் ஜீரணிக்க முடியவில்லை.
“ஏம்ப்பா… சாகற வயசா ஒனக்கு. வாழணும்ப்பா. குடும்பம் குட்டி எல்லாம் இருக்கு. சரி, கவலையை விடு. டாக்டருங்கதானே ஒனக்குக் கெடு வெச்சாங்க. அதுக்கும் மேல சாமீன்னு ஒண்ணு இருக்கு. நான் அடிக்கடி சொல்லுவேனில்லையா… எங்களோட குலகுரு…. காஞ்சிபுரத்துல இருக்கார். இப்பகூட அவரைப் பார்த்துட்டுதான் வந்திருக்கேன். அவர் ஒன்னைக் காப்பாத்திடுவார். கவலைப்படாத…“ என்று சொல்லி விட்டு பால்காரரை ஆழமாகப் பார்த்தார்.
ஒரு சில நிமிடங்களில் தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தார் பெண்மணி. “ஒன்னோட வியாதி குணமாகணும்னா நான் சொல்றதைக் கேக்கறியா?“ என்று கேட்டார்.
“தாயி… வாழணும்கிற ஆசை யாருக்குத்தான் இருக்காது?! எம் பொண்டாட்டி, குழந்தைகளோட நிறைய வருஷம் வாழணும்கிற ஆசை இருக்கு. எனக்காக நீங்க இந்த அளவுக்குப் பரிதாபப்பட்டுப் பேசுறது எனக்கு ரொம்ப தெம்பைக் குடுக்குது. நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்க.“
“நாளைக்கு ராத்திரி ரயில்ல நான், என் கணவர், நீ – மூணு பேரும் சென்னைக்குப் போறோம். அங்கிருந்து காஞ்சிபுரம் போறோம். மகா பெரியவா சந்நிதிக்கு உன்னை அழைச்சிட்டுப் போகப் போறோம்“ என்றார் பெண்மணி.
இந்தப் பெண்மணி அவ்வப்போது சொல்லிச் சொல்லி மகா பெரியவா பற்றி ஓரளவு இந்தப் பால்காரரும் கேட்டிருக்கிறார். மகானது அற்புதங்கள் பற்றி ஒரு சில நிகழ்வுகளைப் பால்காரரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எனவே, ‘நாளைக்கு சென்னைக்குப் போகப் போறோம்‘ என்று சொன்னவுடன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தார்.
இந்த பெண்மணியின் கணவரும் சாந்தமானவர். எந்த ஒரு பேச்சுக்கும் எதிர்ப்பே தெரிவிக்க மாட்டார். எனவே, அவரும் சென்னைப் பயணத்துக்கு பரிபூரண சம்மதம் தெரிவித்து விட்டார்.
அடுத்த நாள் இரவு… கல்கத்தாவில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயிலில் இடம் பிடித்து ஏறியாகி விட்டது.
இரு நாள் பயணத்துக்குப் பின் ரயில் சென்னையை அடைந்தது. அங்கிருந்து பஸ் மூலம் பயணித்து, காஞ்சிபுரத்தை அடையும்போது மதிய வேளை.
மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூட்டமான கூட்டம்.
மடத்திலேயே மூவரும் நிதானமாகக் குளித்து முடித்து ஆகாரம் பண்ணி விட்டுச் சற்று ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.
மாலை வேளையில் பக்தர்களுக்கு மகா பெரியவா தரிசனம் தரும்போது அந்த மகானின் பார்வை படும் இடத்தில் பால்காரரை அமர வைத்துத் தானும் கணவரும் அருகிலேயே அமர்ந்து கொண்டார்.
ஆனாலும், மகானின் பார்வை திரும்பவில்லை.
காரணம், மகானைத் தரிசிக்க எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். அவர்களுடன் பேசி, பிரசாதம் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
பால்காரரின் முகத்தில் ஒரு தவிப்பு தெரிந்தது. ‘இவ்வளவு தொலைவு பயணித்து வந்திருக்கிறோமே… இந்தம்மா நம்பிக்கையுடன் நம்மை அழைத்து வந்திருக்கிறாரே… எல்லாம் சரியாகி விடுமா?‘ என்றெல்லாம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.
இரவுப் பொழுது நெருங்கியது. இனியும் மகா பெரியவாளிடம் இருந்து அழைப்பு வராது என்று தீர்மானித்த பெண்மணி, அங்கிருந்து எழுந்தார். இரவு ஆகாரத்தை முடித்தார்கள்.
பிறகு, பக்தர்கள் படுத்து உறங்கத் துவங்கி இருக்கும் இடத்துக்கு வந்தார்கள் மூவரும்.
தன் கையில் வைத்திருந்த ஒரு பெரிய பெட்ஷீட்டை விரித்தார் பெண்மணி. மூவரும் படுத்தனர்.
பால்காரருக்கு நம்பிக்கை தரும் விதத்தில், “தோ பாருப்பா… கவலைப்படாத… அவரோட பார்வை உன் மேல எப்ப விழணும்னு எழுதி இருக்கோ, அப்பதான் கிடைக்கும். ‘மகா பெரியவா… மகா பெரியவா‘னு அவரோட திருநாமத்தைச் சொன்னபடியே நிம்மதியா தூங்கு“ என்று ஆறுதல்படுத்தினார்.
மூவரும் உறங்க ஆரம்பித்தார்கள்.
தம்பதியர் இருவரும் உறங்க ஆரம்பித்தனர். அசதியின் காரணமாக குறட்டைச் சத்தமும் பலமாக வந்தது.
பால்காரர் மட்டும் தூக்கம் வராமல் இப்படியும் அப்படியும் புரண்டு படுக்கிறார். நள்ளிரவு மணி சுமார் 12 இருக்கும்.
மெள்ள அவருக்குத் தூக்கம் வந்து கண் அயர்கிற வேளையில், அந்த அற்புதம் நடந்தது.
மகா பெரியவாளின் ஆசி ஒருவருக்கு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அந்த மகானின் கருணைப் பார்வை எப்போது விழும் என்று நாம் தீர்மானிக்க முடியாது.
ஆம்! பால்காரருக்கு அந்த பாக்கியம் நடுநிசி வேளையில் கிடைத்தது.
எவருமே சற்றும் சிந்தித்துப் பார்த்திருக்க முடியாத அதிசயம் அப்போது அரங்கேறியது.
கல்கத்தா தம்பதியரும், பால்காரரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு கலியுக தெய்வமான மகா பெரியவா தட்டுத் தடுமாறி நடந்து வந்தார்.
எப்படி வந்தார் தெரியுமா?
இருட்டில் மின்விளக்கைப் போட்டால் இங்கே உறங்கிக் கொண்டிருப்பவர்களின் தூக்கம் கெட்டுப் போய் விடுமே என்று தன்னந் தனியாக வந்து கொண்டிருந்தார்.
ஒரு பாதுகாப்புக்குத் தன் வலக் கையில் ஒரு ஹரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இடது தோளோடு தண்டம் காணப்பட்டது.
இந்த நள்ளிரவில் சீடர்களும் துணைக்கு இல்லாமல் மகா பெரியவா ஏன் தனியாக வந்தார்?
எங்கோ ஒரு மூலையில் இருந்து (கல்கத்தா) தன்னை நம்பி ஒருவன் வந்து விட்டான். அவனுக்கு அருள் வழங்க வேண்டும் என்பதற்காகத் தன் நித்திரையை உதறித் தள்ளி விட்டுப் பரிபூரண பிரகாசத்தோடு அந்தப் பெருமகனார் காணப்பட்டார்.
கல்கத்தா தம்பதியரும், பால்காரரும் படுத்துக் கொண்டிருக்கும் இடத்தில் அவர்களது தலைமாட்டின் அருகே நின்றார் மகா பெரியவா. தொண்டையை இரண்டு மூன்று முறை செருமினார். ஊஹும்… இவர்கள் விழித்தெழுவதாகத் தெரியவில்லை. உடனே, தன் தண்டத்தின் கீழ் முனையைத் தரையில் வைத்து மூன்று முறை வேகமாகத் தட்டினார்.
முதலில் எழுந்தவர்கள் – கல்கத்தா தம்பதியர்!
அருகே விஸ்வரூபத் திருக்கோலத்தில் நின்று கொண்டிருக்கும் மகா பெரியவாளைப் பார்த்ததும் ‘சர்வேஸ்வரா… மகா பிரபோ…‘ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டு பிரமித்து எழுந்து நின்றார்கள். ‘ஒருவேளை பொழுது விடிந்து விட்டதோ‘ என்று தடுமாறியபடி சுவரில் மாட்டப்பட்டிருந்த வால் க்ளாக்கை இருட்டில் தேடினார்கள்.
குழம்பிய நிலையில் தவிப்பவர்களைப் பார்த்து, “பயப்படாத… பொழுது இன்னும் விடியலை. மணி ராத்திரி பன்னண்டுதான் ஆறது“ என்று மிக மென்மையான குரலில் சொன்னார் மகா பெரியவா.
பரப்பிரம்மமே தங்களைத் தேடி வந்திருக்கிறது என்பதை நொடிப் பொழுதில் புரிந்து கொண்ட தம்பதியர், பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கும் பால்காரரை அரக்கப் பரக்கத் தட்டி எழுப்பினார்கள்.
இந்த யாத்திரையே அவருக்காகத்தானே!
பால்காரரும் என்னவோ ஏதோவென்று கண்களைத் துடைத்துக் கொண்டு இரண்டு உள்ளங்கையையும் தேய்த்தபடி எழுந்து உட்கார்ந்தார். அண்ணாந்து பார்த்தார். அவரால் நம்பவே முடியவில்லை.
‘இதற்கு முந்தைய மாலைப் பொழுதிலே இவரது தரிசனத்துக்காகக் காத்துக் கிடந்தோமே… ஆனால், மகானிடம் இருந்து அழைப்பும் வரவில்லை; அருளும் கிடைக்கவில்லை. இப்போது நாம் இருக்கிற இடத்துக்கே வந்து எழுப்புகிறாரே?‘ – பால்காரர் ஆச்சரியத்துடன் எழுந்து, மகா பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து நின்றார்.
‘என்ன?‘ என்பது போல் ஜாடையால் பால்காரரைப் பார்த்துக் கேட்டார் பெரியவா. ‘எதற்காக நீ இங்கே வந்திருக்கிறாய்?‘ என்பது இந்த ஜாடையின் பொருள்.
திடீரென ஏற்பட்ட பரவசத்தின் காரணமாகப் பால்காரரின் வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தன. ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தார் பால்காரர். வார்த்தைகள் வரவில்லை. காற்றுதான் வந்தது.
‘பதில் சொல்ல முடியாமல் பால்காரர் தவித்துக் கொண்டிருக்கும்போது, நாமாவது பதில் சொல்லலாமே‘ என்று தீர்மானித்து, அந்தப் பெண்மணி பதில் சொல்ல முற்பட்டார். ஆனால், அவராலும் முடியவில்லை. அவருக்கும் பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை.
‘தனது அன்பால் அனைவரின் வாயையும் கட்டிப் போட்டு விடுகிறாரே மகா பெரியவா?‘ என்று பெண்மணியின் விழிகள் நீரைச் சுரந்தன.
எதற்காக இவர்கள் வந்தார்கள் என்பதற்கான பதில் இன்னும் வராத நிலையில், பால்காரரைப் பார்த்து அடுத்து மகா பெரியவா கேட்ட கேள்வி – மூவரையுமே நிலை குலையச் செய்தது.
அப்படி என்ன கேள்வி கேட்டார்?
“பால்ல தண்ணி கலப்பியா? தண்ணில பால் கலப்பியா?“
அவ்வளவுதான்…
கல்கத்தா பால்காரரைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டதும், ஆடிப் போனார் பால்காரர்.
உடைந்து போன மதகுகளில் இருந்து நீர்ப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடி வருமே… அதுபோல் பால்காரரது கண்கள் இரண்டும் உடைந்தது போல் அவரது விழிகளில் இருந்து நீர் ஆறாகப் பெருகி, தரையில் விழுந்து கொண்டிருந்தது.
ஆம்! இந்தப் பால்காரர் அதிக காசுக்கு ஆசைப்பட்டு ஒரு சில வீடுகளுக்கு தண்ணீரில் பாலைக் கலந்து விற்று வந்தார். இதெல்லாம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சியம்.
‘நாம் பால் சப்ளை செய்வது எங்கோ இருக்கிற கல்கத்தாவில். இந்த மகானோ இவ்வளவு தூரத்தில் காஞ்சிபுரத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார். எப்படி அங்கே நாம் செய்கிற தவறை இங்கிருந்தபடி இவர் சுட்டிக் காட்டுகிறார்‘ என்று யோசிக்க யோசிக்க, பால்காரரின் மனம் வெட்கப்பட்டது; அவமானப்பட்டது.
உடன் வந்த தம்பதியரும் ஏதும் பேசாமல் பால்காரரையும், மகா பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்ன.. எங் கேள்விக்குப் பதில் சொல்லலையே?“
– மகா பெரியவா மீண்டும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தன் தலையைக் குனிந்து கொண்டார்.
தாயின் கருணை அல்லவா இந்த தயாபரியிடம் பொங்கும்? தன் குழந்தையே தவறு செய்து விட்டாலும், அதை உணர்ந்து வெளியே சொல்ல அவமானம் பெருகித் தவிக்கும்போது தாயே துணைக்கு வந்தார்.
ஒரு புன்னகையோடு பால்காரரைப் பார்த்தார் பெரியவா.
பால்காரர் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார்.
“அழாத… ஒன்னோட தப்பு ஒனக்குப் புரிஞ்சுடுத்து“ என்று ஒரு கையில் தண்டத்தையும், மறு கையில் ஹரிக்கேன் விளக்கையும் சுமந்து இருளில் மறைந்து போனார் பெரியவா.
அதன் பின் பால்காரருக்கும், தம்பதிக்கும் தூக்கமா வரும்?
தம்பதியர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார் பால்காரர். “அதிக காசுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தண்ணில பால் கலந்து பல இடத்துக்கும் விநியோகம் பண்ண ஆரம்பிச்சேம்மா… இந்த விஷயத்தை இங்கே உக்காந்திருக்கிற இந்த மகான் கண்டுபிடிச்சுட்டாரேம்மா… எனக்குப் புத்தி வந்திடுச்சும்மா… இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன். எனக்காகப் பரிதாபப்பட்டு இங்கே கூட்டிட்டு வந்தீங்களே… உங்க ரெண்டு பேர் மேல சத்தியம்மா“ என்று கதறிய பால்காரர், இயல்பு நிலைக்கு வர அரை மணி நேரம் ஆனது.
மகா பெரியவா திருநாமத்தைச் சொல்லியபடி இரவுப் பொழுது இந்த மூவருக்கும் கழிந்தது.
அடுத்த நாள் காலை பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
எங்கோ தொலைவில் அமர்ந்திருந்த பால்காரரைத் தன் அருகே அழைத்தார் பெரியவா. தன் கழுத்தில் இருந்த எலுமிச்சம்பழ மாலையைக் கழற்றினார். அதில் இருந்து ஒரு பழத்தை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தார்.
“ஊருக்குப் போ… வியாபாரத்தை உண்மையோட பண்ணு.“ – அவ்வளவுதான் மகா பெரியவா சொன்னது.
மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து விடைபெற்று கல்கத்தா ரயில் ஏறினார்கள்.
‘இனி பாலில் தண்ணீரைக் கலப்பது இல்லை‘ என்கிற வைராக்கியத்தை மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே எடுத்துக் கொண்டு விட்டார் பால்காரர்.
கல்கத்தா வந்து சேர்ந்தார்கள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் பால்காரரின் முகத்தில், செயல்பாடுகளில் தென்பட்ட மாற்றம் இவரைக் கூட்டி வந்த பெண்மணியை வியக்க வைத்தது.
சோர்வைக் காணோம். சுணங்கி சுணங்கி நடப்பது குறைந்து போனது. புதுசாக சார்ஜ் ஆனது போல் உற்சாகமாகக் காணப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டிய தினத்தில் கல்கத்தாவில் தன்னைத் தொடர்ந்து சோதித்து வரும் மருத்துவமனைக்குச் சென்றார்.
பால்காரரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினார்கள். ‘இதுநாள் வரை இவரை வருத்திக் கொண்டிருந்த கான்சர் திடீரென எங்கே போயிற்று? அதற்கு உண்டான சிறு அடையாளங்கள்கூட இவரது உடலில் தென்படவில்லையே?‘ என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது, ‘மகா பெரியவா வைத்தியம்‘ பற்றி கூச்சப்படாமல் விரிவாகச் சொன்னார் பால்காரர்.
வியந்த டாக்டர்கள், “இனி உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை“ என்று வாழ்த்தி அனுப்பினார்கள்.
அடுத்து சுமார் இருபது வருடங்களுக்கு எந்த விதமான சின்ன உடல் உபாதையும் இல்லாமல் உற்சாகமாக வாழ்ந்தார் பால்காரர்.
இன்றைக்கோ, நாளைக்கோ என்று எழுதப்பட்ட தீர்ப்பை இருபது வருடத்துக்கு ஒத்திப் போட, மகா பெரியவாளால் மட்டுமே முடியும்!
நம்பிச் சரண் புகுந்தால், நம்மிடம் இருக்கக் கூடிய குறைபாடுகளையும் நமக்குச் சுட்டிக் காட்டி அபயம் அளித்து ஆட்கொள்ளும் மனித தெய்வம் அல்லவா மகா பெரியவா!
காஞ்சி தரிசனம் கவலைகளைத் துரத்தும்.