“எனக்காக ஸ்வாமிகிட்ட வேண்டினியோ…?”

ன்னார்குடியில் பிரமாண்டமான ஆலயத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி மற்றும் அருள்மிகு செங்கமலத் தாயார், உலகப் பிரசித்தி பெற்றவர்கள். இருவருடைய திருமேனி அழகையும், இந்த ஆலயத்தில் நடக்கும் திருவிழாக்களையும் கண்டு தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.

இந்த மன்னார்குடி ஆலயம், ஆழ்வார்களால் பாடல் பெறாத தலம் என்பது பலருக்கும் தெரியாது. இந்தத் திருத்தலத்தைஅபிமானத் தலம் என்பர்.

பிரமாண்டமான ஆலயத்துள் நுழைந்து, ஒவ்வொரு தெய்வத் திருச்சந்நிதியையும் தரிசித்து, வலம் வந்து, ஊருக்குத் திரும்பலாம் என்று வெளிவாசலை நோக்கி நடக்கும்போது வீடு திரும்புவதற்குப் பலருக்கும் மனம் வராது. ஆலயத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மன்னார்குடிவாசிகளின் செல்லப் பிள்ளைகளாக விளங்குபவர்கள் இந்த ராஜகோபாலர் மற்றும் செங்கமலம்!

புனிதமான பாரத தேசம் முழுக்க மேற்கொண்ட யாத்திரையின்போது மன்னார்குடிக்கும் வந்திருக்கிறார் மகா பெரியவா.

அப்படி ஒரு முறை இங்கு வந்தபோது ராஜகோபால ஸ்வாமி ஆலயத்துக்கு விஜயம் செய்திருக்கிறார்.

செங்கமலத் தாயார் சந்நிதியில் தேவியை வணங்கி, குங்குமம் பெற்றுக் கொண்டார். அதைத் தன் நெற்றியில் இட்டுக் கொண்ட பின், “செங்கமலத் தாயாரின் குங்குமம் இருந்தால் போதும்தீராத வினைகளை எல்லாம் தீர்த்து விடும் என்று அந்தத் தாயாரின் மகிமையையும், தாயார் சந்நிதியில் விநியோகிக்கப்படும் குங்குமத்தின் சிறப்பையும் உடன் இருந்த பக்தர்களிடம் சொல்லி இருக்கிறார் மகா பெரியவா.

அதன் பின் ஆலயத்தை வலம் வரும்போது வலத்தின் நிறைவில் அருள் பாலிக்கும் துர்கையைத் தரிசித்தார்.

என்னதுவைணவ ஆலயத்தில் துர்கை சந்நிதியா? என்று நம்மில் பலருக்கும் வியப்பு ஏற்படுகிறது அல்லவா?

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு முன்னால் பிறந்த மாயா என்பவள், துர்கையின் அம்சமே. அதனால் இந்த ஆலயத்தில் துர்கைக்கும் ஒரு சந்நிதி உண்டு என்று காரணம் சொல்கிறார்கள் ஆலயத் தரப்பினர்.

இந்த துர்கையைப் பார்த்ததும், அரை மணி நேரம் அன்னைக்கு முன் அமர்ந்து தவம் புரிந்திருக்கிறார். தவத்துக்குப் பின், “மிகுந்த வரப்ரசாதி இவள். அனைத்து நலன்களையும் அருள்வாள் என்று சொன்னாராம். ராஜகோபால ஸ்வாமி ஆலயம் செல்கிற பக்தர்கள், இந்த துர்கையையும் வணங்கி, அவளது அருள் பெற வேண்டும்.

மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் இந்த ஆலயத்தின் டிரஸ்டிகளில் ஒருவராக இருந்தவர் சீனிவாசன் என்பவர்.

இவர் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்.

மாதா மாதம் ஒரு முறை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு ஸ்ரீராஜகோபால ஸ்வாமி ஆலயப் பிரசாதத்துடன் வந்து மகா பெரியவாளின் தரிசனம் பெற்றுச் செல்வார்.

அந்த மாதத்தில் காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் செல்ல வேண்டிய நாள் நெருங்கி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் காஞ்சி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தார் சீனிவாசன்.

அப்போது காஞ்சியில் இருந்து வந்திருந்த பக்தர் ஒருவர், தற்செயலாக சீனிவாசனை மன்னார்குடி ஆலயத்தில் சந்தித்தார். அந்த பக்தர், “மகா பெரியவாளைத் தரிசனம் பண்ணேன். பாவம், அவர் உடம்பு முடியாம இருக்கார் என்று சோகத்துடன் சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்ட சீனிவாசனின் முகம் சுரத்திழந்தது. கலியுக தெய்வத்துக்கு என்ன உடம்புக்கு என்று கவலைப்பட ஆரம்பித்தவர், ஆலய மூலவரான ஸ்ரீராஜகோபால ஸ்வாமி சந்நிதிக்கு விரைந்து ஓடினார்.

மூலவர் ராஜகோபால ஸ்வாமிக்கு முன் நின்றார். இரு கரங்களையும் குவித்து ராஜகோபால ஸ்வாமியை உளமார வணங்கியவர், ‘மகா பெரியவா குணமாக வேண்டும். அவருக்கு இருக்கக் கூடிய உடல் உபாதை நீங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டார். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு அந்த சந்நிதியிலேயே நின்று கொண்டு மெய்யுருக வேண்டினார்.

பிரார்த்தனைக்குப் பின்னர்தான் சீனிவாசனின் மனம் லேசானது.

இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மகா பெரியவா தரிசனத்துக்காக மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமியின் பிரசாதத்துடன் காஞ்சிபுரம் சென்றார்.

மூங்கில் தட்டில் வைத்திருந்த பிரசாதத்தை மகா பெரியவா திருச்சந்நிதிக்கு முன் சமர்ப்பித்து விட்டு, அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் சீனிவாசன்.

ஒரு புன்முறுவலுடன் பிரசாதத்தை ஏற்றுக் கொண்ட மகா பெரியவா, “ரெண்டு நாள் முன்னே என்னோட ஒடம்பு சரியாகணும்னு ராஜகோபால ஸ்வாமிகிட்ட போய் வேண்டினியோ? என்று கேட்டாரே பார்க்கணும்!

சீனிவாசன் ஆடிப் போய் விட்டார். காரணம்மகா பெரியவாளுக்கு உடல்நிலை சரியில்லை என்று காஞ்சிக்குச் சென்று வந்த பக்தர் ஒருவர் தகவல் சொன்னதும், அதை வேறு யாரிடமும் அங்கு தெரிவிக்கவில்லை. இவர் மட்டும் அருள்மிகு ராஜகோபால ஸ்வாமியின் முன் நின்று மானசீகமாக வேண்டினார்.

மனசுக்குள் மன்னார்குடியில் சொன்ன பிரார்த்தனையை இந்த மகான் அறிந்து வைத்திருக்கிறார் என்றால், இவரை தெய்வத்தின் அவதாரம் என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?

கண்கள் கலங்க, மீண்டும் மகானை நமஸ்கரித்தார் சீனிவாசன். “ராஜகோபால ஸ்வாமி அருளால என் ஒடம்பு அன்னிக்கே சரியாயிடுத்து. எல்லாம் ஒன்னோட பிரார்த்தனைதான் காரணம் என்று புன்னகைத்தவர், பிரசாதம் தந்தார்.

சீனிவாசனின் இரண்டு குழந்தைகளுக்கும் மகா பெரியவாதான் பெயர் சூட்டினார். முதலில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுவாமிநாதன் என்றும், அடுத்துப் பிறந்த பெண் குழந்தைக்கு சந்திரமௌளீஸ்வரி என்றும் பெயர் வைத்தார்.