மகா பெரியவா ஒரு முறை மன்னார்குடி நகருக்கு எழுந்தருளினார். ‘குன்னியூர் எஸ்டேட்‘ என்று சொல்லப்படும் குன்னியூர் சாம்பசிவ ஐயர் மன்னார்குடியில் பிரபலமான ஒரு புள்ளி. பெரிய நிலச் சுவான்தார்.
மன்னைக்கு (மன்னார்குடியின் சுருக்கம்) வந்த மகா பெரியவாளை விமரிசையாக வரவேற்றுத் தனக்கு சொந்தமான குன்னியூர் ஹவுஸில் தங்குமாறு வேண்டுகோள் வைத்தார் சாம்பசிவ ஐயர். அவரது அன்பான வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தன் முகாமை அங்கேயே அமைத்துக் கொண்டார் மகா பெரியவா.
மகா பெரியவாளின் அனுஷ்டானங்களுக்கும், வந்திருந்த பக்தர்களின் அனைத்து விதமான தேவைகளுக்கும் விஸ்தாரமான ஏற்பாடுகளை செய்து தந்தார் சாம்பசிவ ஐயர்.
தன்னை தரிசிக்க வருகிற பக்தர்களுக்கு ஆசி வழங்கி, நித்தமும் சந்திரமௌளீஸ்வரர் பூஜையை வெகு கோலாகலமாக நடத்தினார் மகா பெரியவா.
அப்படித் தங்கி இருக்கும் வேளையில் ஒரு நாள் மாலை மன்னை நகரில் திரளான பக்தர்களுடன் வீதி வலம் வந்தார் மகா பெரியவா.
நாகஸ்வரம் – மேளம் முழங்க, வேத பாராயணம் ஒலிக்க… வீதி வலம் வருகின்ற காட்சியைப் பார்த்தால் பேரானந்தமாக இருக்கும். மன்னை நகரில் இருக்கிற அனைத்து முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டு மகா பெரியவாளின் அருளைப் பெறுவார்கள்.
மன்னை காந்தி ரோட்டின் வழியே மகா பெரியவா வலம் வந்து கொண்டிருந்தார். அந்த சாலையில்தான் நேஷனல் ஹைஸ்கூல் (தேசிய உயர்நிலைப்பள்ளி) இருக்கிறது (இன்றைக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது இந்தப் பள்ளி).
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் வி.ஸ்ரீநிவாசய்யர். கல்விப் பணியோடு ஆன்மிகத்திலும் தேர்ந்திருந்தார் இவர். காஞ்சி மகா பெரியவா மீது அதீத பக்தி உண்டு.
தங்கள் பள்ளியின் வழியே வீதி வலம் வரும் மகா பெரியவாளுக்குக் கல்வி நிறுவனம் சார்பாக சிறந்த வரவேற்பு கொடுத்து அழைக்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீநிவாசய்யர்.
அதன்படி ஸ்ரீமடத்தின் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அவர்களின் அனுமதியையும் பெற்றிருந்தார்.
குறித்த நாளன்று பள்ளிக்கு வருகை தரும் மகா பெரியவாளை வரவேற்கும் விதமாக பள்ளியின் முகப்பு வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைமரமும், தோரணங்களும் சாலை முழுக்கக் கட்டப்பட்டிருந்தன.
ஸ்ரீநிவாசய்யரும் அவரது குடும்பத்தினரும் வாசலில் பூர்ணகும்பத்துடன் காத்திருந்தனர்.
பள்ளியில் பணிபுரியும் ஏனைய ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பு வழங்குவதற்காகக் காத்திருந்தனர்.
நேஷனல் ஹைஸ்கூல் வாசலை மகா பெரியவா நெருங்க… வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதி பூர்ணகும்ப வரவேற்பு வழங்கினர். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் பள்ளி வளாகமெங்கும் எதிரொலித்தது.
பள்ளிக்கூடத்தை மகா பெரியவா சுற்றிப் பார்த்தார். ஆசிரியப் பெருமக்களையும், மாணவர்களையும் ஆசிர்வதித்தார். அதன்பின் பள்ளியின் பிரதானமான ஓரிடத்தில் வந்து அமர்ந்தார்.
ஸ்ரீநிவாசய்யர் குடும்பத்தினர் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர். அவரது குடும்ப நலன் பற்றியும், பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மகா பெரியவா அவரிடம் விசாரித்து அறிந்தார்.
மகா பெரியவாளுக்குப் பதில் சொல்லும் விதமாக ஸ்ரீநிவாசய்யர், “ரொம்ப நன்னாவே பள்ளிக்கூடம் நடந்துண்டிருக்கு. ஆனா, ஒரே ஒரு வருத்தம் பெரியவா… இவ்ளோ பெரிய பள்ளியின் நடுவே தற்போது நாம இருக்கற இடம் சில காலத்துக்கு முன்வரை சாதாரணமான ஓலைக்கீத்தினால் வேயப்பட்டிருந்தது. இந்த இடத்துக்கு ‘சங்கரா ஹால்‘னு பேரு வெச்சிருந்தோம். ஆனா, ஒரு முறை இந்த ஹால்ல ஏற்பட்ட திடீர் தீவிபத்துல ஓலைக்கீத்து முழுக்க எரிஞ்சு பஸ்மமா போயிடுச்சு“ என்று ஸ்ரீநிவாசய்யர் சொல்லும்போது, அவரையும் அறியாமல் அவரது கண்கள் கலங்கின
இவர் சொல்வதை ‘நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்‘ என்பது போல் மகா பெரியவா தலையசைத்து, அந்த இடத்தையே மேலும் கீழும் பார்த்தார்.
ஒரு சில விநாடிகளுக்குப் பின் ஸ்ரீநிவாசய்யர் மீண்டும் தொடர்ந்தார்: “அதன் பிறகு, ஓலைக்கீத்துக் கொட்டகை எந்த ஒரு காலத்திலும் ஆபத்துனு தீர்மானிச்சு, இந்த இடத்தை எப்படியாவது ஒரு கட்டடமாக ஆக்கணும்னு முயற்சி எடுத்தோம். பள்ளிக்கூடத்துக்குன்னு பெருசா ஃபண்ட் எதுவும் இல்லை பெரியவா. அதனால, சில டோனர்ஸை நம்பி கட்டடமா கட்டுறதுக்கு வேலைய ஆரம்பிச்சோம்.
ஆனா, ஆரம்பிச்ச சில நாட்களுக்குள்ளேயே அந்தப் பணி ஏனோ அப்படியே முடங்கிப் போயிடும். இந்தத் தடைகள் எல்லாம் நிவர்த்தி ஆகி, இந்த இடத்துல ஒரு பெரிய கட்டடம் வர்றதுக்குப் பெரியவா ஆசிர்வாதம் மட்டும் பண்ணா போதும். அதுவே எங்களுக்கெல்லாம் பெரிய டானிக்கா இருக்கும்.“
பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தலைமை ஆசிரியரான ஸ்ரீநிவாசய்யர் சொல்வதை ஆமோதிப்பது போல், மகா பெரியவாளிடம் இருந்து வரப் போகும் ஆசிர்வாதத்துக்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி மவுனமாக இருந்த மகா பெரியவா, சிறிய இடைவெளிக்குப் பின் கண்களைத் திறந்தார். தனக்கு முன்னால் காணப்பட்ட மூங்கில் தட்டில் இருந்து ஒரு சில பழங்களைத் தானே எம்பி எடுத்தார். அவற்றை காலியாக இருந்த ஒரு மூங்கில் தட்டில் வைத்தார்.
ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை ஸ்ரீமடத்துச் சிப்பந்தியிடம் கேட்டு வாங்கினார். அதையும் தட்டில் வைத்தார். கொஞ்சம் விபூதி, குங்குமப் பிரசாதத்தையும் வைத்தார். இவற்றை எடுத்து ஸ்ரீநிவாசய்யரைப் பார்த்துப் பெரியவா நீட்ட… ஆனந்தக் கண்ணீர் சொரிய இதைப் பெற்றுக் கொண்டார். அதன் பின் மகா பெரியவா, “எல்லாம் நல்லபடியா நடக்கும். இந்த இடம் (சங்கரா ஹால்) உன் ஆசைப்படி வெகு நன்றாகவே அமையும். அதற்கு ஏற்றாற்போல் ஒருவர் வருவார். உனது விருப்பங்களை நிறைவேற்றித் தருவார்“ என்று அருளினார்.
அதன் பின் மகா பெரியவா நேஷனல் பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்டு, பட்டணப் பிரவேசத்தை மீண்டும் தொடர்ந்தார்.
சிறிது காலம் ஓடியது. இதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக அப்போது பணியாற்றிய விசு என்பவர், மாணவர்கள் நலனிலும் பள்ளியின் முன்னேற்றத்திலும் பெரும் அக்கறை கொண்டவர். ஸ்ரீநிவாசய்யரின் நன்மதிப்பைப் பெற்றவர்.
ஒரு நாள் தனது நண்பர் ஒருவரைப் பள்ளிக்கு அழைத்து வந்து, சங்கரா ஹால் என்கிற பள்ளியின் பிரதான பகுதி ஒட்டுக் கட்டடமாகக் கட்டப்பட உள்ளதாகக் கூறி, தங்களால் ஏதேனும் உதவ முடிந்தால் நல்லது என்று சொல்லி இருக்கிறார்.
விசுவின் வார்த்தைகளைத் தற்செயலாகக் கேட்ட அந்த நண்பர் சற்றும் யோசிக்காமல், “இந்த இடத்தை ஒட்டுக் கட்டடமாகக் கட்ட முழுத் தொகையையும் நானே தருகிறேன். உடனடியாக வேலையைத் துவங்குங்கள்“ என்று சொல்ல… விசு வாத்தியாருக்கு ஆனந்த அதிர்ச்சி. உடனே ஓடிப்போய் தலைமை ஆசிரியரான ஸ்ரீநிவாசய்யரிடம் சொல்ல… அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மகா பெரியவா திருப்பாதம் பதித்து, ஆசிர்வதித்துச் சென்ற சில நாட்களுக்கு அவரது திருவாக்கு பலித்து விட்டதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.
‘இதை முடிக்க ஒருவர் வருவார்‘ என்று மகா பெரியவா எத்தனை துல்லியமாகச் சொல்லி இருக்கிறார் என்று நெகிழ்ந்து, வள்ளல் மனம் கொண்ட அந்த நண்பரை வரவேற்றுத் தன் அறைக்கு அழைத்து சென்றார்.
அந்த நண்பர்தான் – மன்னார்குடிக்கு அருகில் உள்ள தேவங்குடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர்.
தான் வாக்குக் கொடுத்தபடி சங்கரா ஹாலைக் கட்டிக் கொடுத்து விட்டு, பள்ளிக்கென ஒரு கலையரங்கையும் பின்னாட்களில் கட்டிக் கொடுத்தாராம் பார்த்தசாரதி.
மகான்களின் திருவாக்கு என்றுமே பலிக்காமல் போனதில்லை. நல்முத்தாக திருவாக்கு மலர்ந்து விட்டது என்றால், சம்பந்தப்பட்டவர் செய்த பேறு என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் மகா பெரியவாளின் பரிபூரண அருளைப் பெற்ற ஸ்ரீநிவாசய்யர் இதன் பின் அடைந்த சந்தோஷத்தைப் பற்றியும் சொல்ல வேண்டுமோ?!