“லலிதாவை லல்லின்னு கூப்பிடாதே…”

வேதாரண்யம், புதுக்கோட்டைமகா பெரியவாளோடு தொடர்புடைய பக்தர்கள் அதிகம் வாழ்கின்ற ஊர், இன்றைக்கும்!

மகானின் திருப்பாதம் பட்ட பின் மண்ணும் புனிதமானது. மண்ணில் வசித்து வந்த மனிதர்களும் புண்ணியம் பெற்றவர்கள் ஆனார்கள்.

மேலே சொன்ன இரண்டு ஊர் தொடர்பான மகா பெரியவா பக்தர்களைப் பற்றிப் பார்க்க உள்ளோம்.

தம்பதியர்களான ஜெகதீச ஐயரும் ராஜலட்சுமியும் புதுக்கோட்டைவாசிகள். இவர்களது மகள் லலிதா.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜாராமய்யர்செல்லம்மாள் தம்பதியரின் மகன் சிவகுமார்.

சிவகுமாருக்கும் லலிதாவுக்கும் திருமணம் நடந்தது. பையனின் குடும்பம், பெண்ணின் குடும்பம் இரண்டுமே அளவு கடந்த மகா பெரியவா பக்தி என்பதால், மகானின் பரிபூரண ஆசியோடு திருமணம் நடந்து முடிந்தது.

இந்த இரண்டு குடும்பத்தினருமே சதா சர்வ காலமும் ஸ்ரீசங்கர மடம் செல்லுதல், மகா பெரியவாளுக்கு பிட்சாவந்தனம் செய்தல், வியாச பூஜையை தரிசித்தல் என்று எப்போதும் மகா பெரியவாளையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

மகான் முகாமிட்டிருக்கிற இடத்துக்குச் செல்வதற்குத் தோதான சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் போதும்எல்லோரும் ஒட்டுமொத்தமாக மகா பெரியவா தரிசனத்துக்குக் கிளம்பி விடுவார்கள்.

மகா பெரியவா பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பெருமைக்குரிய நகரம்கும்பகோணம். இங்குதான் சிவகுமாரும் லலிதாவும் வசித்து வருகிறார்கள். மகா பெரியவாளே சிந்தையும் மூச்சுமாய் இருந்து வருகிறார்கள்.

தங்களது வாழ்வில் அந்த மகானே கண் கண்ட தெய்வமாக இருந்து தங்களைக் காத்து அருள்வதாக இருவருக்கும் பலத்த நம்பிக்கை.

தனக்குப் பெயர் வைத்ததே மகா பெரியவாதான் என இன்றைக்கும் பரவசத்துடன் சொல்கிறார் லலிதா.

புதுக்கோட்டையில் லலிதா பிறந்த தினத்தன்று அந்த நேரத்தில் ஜகதீச ஐயரது இல்லத்தில் பகவத் கீதை பாராயணமும், லலிதா சஹஸ்ரநாம பாராயணமும் நடந்து கொண்டிருந்தது. பாராயண வேளையில் குழந்தை பிறந்த சத்தம் அங்கிருந்த எல்லோருக்கும் கேட்டிருக்கிறது. எல்லோரும் ஆர்வத்துடன் ஓடிப் போய் குழந்தையைப் பார்த்துக் கொஞ்சி இருக்கின்றனர்.

குழந்தை பிறந்தாலே, அடுத்து என்ன பெயர் வைப்பது என்கிற விவாதம் தொடங்கி விடும்தானே! அதன்படி குழந்தைக்குப் பெயர் வைப்பது பற்றி அங்கிருந்த அனைவரும் ஆளாளுக்கு ஒரு கருத்தை எடுத்து வைத்தனர்.

பகவத் கீதா பாராயண வேளைல இவ பொறந்ததால, இவளுக்கு கீதான்னு பேரு வைக்கணும். – இப்படி ஒரு சிலர்.

லலிதா சஹஸ்ரநாமமும் பாராயணம் நடந்துண்டு இருந்தது. எனவே, லலிதான்னு பேரு வைக்கணும். – இப்படிச் சிலர்.

ஜகதீச ஐயர்ராஜலட்சுமி தம்பதியருக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு தீர்வு என்றால், மகா பெரியவா என்கிற தெய்வம்தான்! அவரது திருச்சந்நிதியைத் தேடிச் செல்வது வழக்கம்.

கீதாவா? லலிதாவா என்று ஆளாளுக்குப் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தார்கள் இங்கே!

ஜகதீச ஐயர் தெளிவாக, “கொழந்தையைத் தூக்கிண்டு மகா பெரியவாகிட்ட போவோம். அவர் என்ன பேர் சொல்றாரோ அதுதான் இவளுக்கு என்று உறுதியாகச் சொன்னார். விவாதம் நின்றது.

அடுத்து வந்த ஒரு தினத்தில் குடும்பத்தோடு காஞ்சிக்குப் புறப்பட்டார் ஜகதீச ஐயர்.

மகா பெரியவா திருச்சந்நிதியை அடைந்தார்கள். சிவ சொரூபமாக அமர்ந்திருந்தார்.

வேத பாராயணம், சிஷ்யர்கள் கைங்கர்யம், வருகின்ற பக்தர்களுக்கு ஆசி என்று ஸ்ரீமடம் பிஸியாக இருந்தது.

பெயர் வைக்க வேண்டித் தன் பெண் குழந்தையை மகா பெரியவா அமர்ந்திருந்த இடத்துக்கு முன்னால் தரையில் கிடத்தினார் தாயான ராஜலட்சுமி.

ஒரு புன்னகையோடு குழந்தையைப் பார்த்த மகான், பெற்றோரைப் பார்த்து குசலம் விசாரித்து விட்டு, ‘என்ன? என்பது போல் சைகை செய்தார்.

பெயர் வைக்க வேண்டி எழுந்த குழப்பத்தை ராஜலட்சுமி விரிவாகச் சொல்லி முடித்தார்.

தரையில் கைகால்களை உதைத்துக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து விட்டுத் தாயான ராஜலட்சுமியின் பக்கம் திரும்பி, “இனிமே இவளை லலிதான்னே கூப்பிட ஆரம்பிங்கோ என்றவர், அடுத்து குறும்பாக ஒரு நிபந்தனை வைத்தார். “தப்பித் தவறி குழந்தை பேரை லல்லின்னு சுருக்கிடாதே என்றாரே, பார்க்கணும்!

பெற்றோரும் புன்னகைத்தபடியே அதற்கு உறுதிமொழி கொடுத்தனர்.

பின்னே, இன்றைக்கு அப்படித்தானே நடக்கிறது?!

வெங்கடேசன் என்கிற பெயரைவெங்கி என்றும், பார்வதி என்ற பெயரைபாரு என்றும், சுப்பிரமணியன் என்ற பெயரைசுப்புணி என்றும்தானே நாம் அழைத்து வருகிறோம்!

தெய்வங்களின் பெயர் குழந்தைக்கு வைக்கப்பட்டிருந்தால், அந்தப் பெயரை முழுக்கச் சொல்லி அழைக்கும் பழக்கம் நமக்கு வர வேண்டும் என்பதற்கு மகா பெரியவா அப்படி ஒரு உத்தரவைப் போட்டார்.

குழந்தை லலிதாவைத் தூக்கிக் கொண்டு அனைவரும் புதுக்கோட்டை திரும்பினார்கள்.

பின்னாளில் லலிதாவுக்கு ஐந்தாறு வயது இருக்கும்போது ஒரே சமயத்தில் டைபாய்டு, ஜான்டிஸ், அம்மை மூன்றும் வந்து விட்டதாம். ஒன்று வந்தாலே தாங்க முடியாது. இந்த மூன்றும் ஒரே சமயத்தில் வந்து விட்டால், குழந்தையால் தாங்க முடியுமா? பெற்றோர் துடிதுடித்துப் போனார்கள்.

நேராகக் காஞ்சிபுரம் ஓடி வந்தார்கள். குழந்தையின் நிலைமையைச் சொல்லி, “பெரியவா பேரு வெச்ச குழந்தைகாப்பாத்துங்கோ என்று கண்ணீர் மல்க தாயான ராஜலட்சுமி பிரார்த்தித்ததும், அந்த நடமாடும் தெய்வம்இந்திராக்ஷி சிவ கவசம் நூலைக் கொடுத்து, தன் கைப்பட விபூதியும் தந்தார். “இந்தக் கவச நூலை தெனோமும் பாராயணம் பண்ணு. முடிஞ்சதும் குழந்தையோட நெத்தில இட்டு விடு. கொஞ்சமா விபூதியை ஜலத்துல கலந்து குழந்தைக்குக் குடிக்கறதுக்கும் கொடு என்றார்.

இந்திராக்ஷி சிவ கவசம் பாராயணமும், மாமருந்தான விபூதியும் வேலை செய்யஅடுத்து வந்த ஒரு சில நாட்களில் மேஜர் வியாதிகள் மூன்றும் இருந்த இடம் தெரியாமல் ஓடியே போயிற்றாம்.

இன்றைக்கும் இந்த தகவலை நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் லலிதா. “எங்கம்மா அடிக்கடி சொல்லுவா – ‘பெரியவா தயவுல நீ உயிர் பிழைச்சவனு என்று பூரிக்கிறார் லலிதா.

சிவகுமாருடன் திருமணம் ஆன பின் கோயில் விசேஷம், ஊர் விசேஷம் என்று அடிக்கடி லலிதா வேதாரண்யம் சென்று வரஅந்த ஊரில் எல்லாமே அத்துப்படி ஆயிற்று.

சிவகுமார்லலிதா சம்பந்தப்பட்ட அனுபவம் அடுத்த அத்தியாயத்திலும் தொடர்கிறது.