“எனக்கு ஒரு குதிரை வேணும்…”

ரு முறை கணவர் சிவகுமாருடன் காஞ்சி ஸ்ரீமடம் சென்றார் லலிதா. தம்பதி சமேதராக இருவரும் நமஸ்காரம் செய்தார்கள்.

இவர்கள் இருவரின் குடும்பமும்தான் மகா பெரியவாளுக்கு ஏற்கெனவே பழக்கம் ஆயிற்றே! எனவே, இருவரையும் மகா பெரியவா பார்த்து விட்டு, குடும்ப நலன் பற்றிக் கேட்டறிந்து ஆசிர்வதித்தார்.

அதன் பிறகு இவர்களுக்கும், மகா பெரியவாளுக்கும் இடையே நடந்த உரையாடல்

வேதாரண்யமும் புதுக்கோட்டையும் இப்ப எங்கே ஜாகை? என்று கேட்டார்.

அதாவது வேதாரண்யத்து மாப்பிள்ளையான சிவகுமாரும், புதுக்கோட்டைப் பெண்ணான லலிதாவும் திருமணம் ஆன பின் எங்கே குடி இருக்கிறார்கள் என்பதை, இப்படிக் கேட்டிருக்கிறார்.

பெரியவாகும்மோணத்துல (கும்பகோணம்) இருக்கோம் என்றார் லலிதா.

பிறகு, “வேதாரண்யத்துல என்னென்ன இருக்கு தெரியுமா? என்று லலிதாவைப் பார்த்துக் கேட்டார் மகா பெரியவா.

வேதாரண்யத்தில் என்னென்ன விசேஷம் என்று பெரியவா கேட்கிறார் என நினைத்து, “சமுத்திரம், கோடியக்கரை என்றார் லலிதா.

அதெல்லாம் சரிகோடிக்காடுன்னு ஒரு இடம் இருக்கா?

இருக்கு பெரியவா என்றார் லலிதா.

வேதாரண்யத்தில் இருக்கிற கோடியக்கரையை ஒரு எல்லை என்று சொல்லலாம். வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவில் கோடிக்காடு வரும். இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு பயணித்தால் கோடியக்கரை வரும்.

கோடிக்காடு, கோடியக்காடு எல்லாமே ஒன்றுதான். இங்கு அற்புதமான சிவாலயம் அமைந்துள்ளது. குழகர் கோயில் என்று அழைப்பர்.

ராமாயணத்தோடு ஏராளமான தொடர்புகள் இங்குள்ள ஊர்களுக்கு உண்டு.

வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்கிற தார்ச் சாலைக்குசேது ரஸ்தா என்று பெயர். எத்தனை ஆண்டுகளாக இந்தப் பெயர் இருந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாது. ‘சேது என்பது ராமேஸ்வரம்.

வேதாரண்யத்தில்இலக்கு அறிவித்த விநாயகர் என்று ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. பேச்சுவாக்கில் இதைலக்கடி பிள்ளையார் ஆக்கி விட்டார்கள். ராமபிரான் செல்ல வேண்டிய இலக்கை விநாயகர் சொன்னதால், அவருக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது.

மகா பெரியவா சொன்னகோடிக்காடு ஊருக்கு வருவோம்.

கோடிக்காடு என்பது ஊரும் காடும் சேர்ந்தது.

லலிதாவைப் பார்த்து மகான் கேட்டார்: “கோடிக்காட்டுல இப்ப மிருகங்கள் எல்லாம் இருக்கா?

இருக்கு பெரியவா.

என்னென்ன மிருகங்கள் அங்கே இருக்கு, சொல்லு பார்க்கலாம்

லலிதா யோசித்தபடியே ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தார்: “மான், நரி, காட்டெருமை, முயல் என்று சொல்ல ஆரம்பித்து, அதற்கு மேல் ஒன்றும் நினைவுக்கு வராததால் அப்படியே நிறுத்தினார்.

குதிரை இருக்கோ, அங்கே? – மகா பெரியவாளின் கேள்வி இது.

அங்கே குதிரை இருப்பது சட்டென்று லலிதாவின் நினைவுக்கு வந்தது. “ஆமா பெரியவா. அங்கே குதிரையும் இருக்கு.

உன் மாமனாரோட அப்பா காலத்துல ஸ்ரீமடத்துக்கு குதிரை வாங்கிக் குடுத்திருக்கா, ஒங்களுக்குத் தெரியுமோ? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மகா பெரியவா.

தெரியும் பெரியவாஇவரோட அப்பா சொல்லி இருக்கார்.

எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு மகா பெரியவா, சிவகுமார் மற்றும் லலிதாவைப் பார்த்து, “எனக்கு ஒரு உபகாரம் பண்ணுவேளா? என்று கேட்டது, ஒரு குழந்தையின் கெஞ்சலைப் போல் மிகவும் குழைசலாக இருந்தது.

மகா பெரியவா இப்படிக் கேட்டதும், சிவகுமாரும் லலிதாவும் அழுதே விட்டார்கள்.

மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்த சிவகுமார், “பெரியவாநீங்க காருண்யக் கடல்நீங்கதான் எங்களுக்கு அனுக்ரஹம் பண்ணணும். நாங்க என்ன பெரியவா உங்களுக்கு உபகாரம் பண்ண முடியும்? அப்படி ஏதாவது பண்ண முடிஞ்சா அது எங்களுக்கு எத்தனை பெரிய பாக்கியம்சொல்லுங்கோ பெரியவா, காத்துண்டிருக்கோம் என்று இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டார்.

எனக்கு ஒரு குதிரை வேணும், கோடிக்காட்டுலேர்ந்து. புடிச்சுத் தருவியா? என்று கேட்டார்.

குதிரையா?

இருவரும் குழம்பிப் போனார்கள்.

ஏன் குதிரை கேட்டார் மகா பெரியவா?

ஒரு மூட்டை அரிசி வாங்கிக் குடுன்னு மகா பெரியவா கேட்டார்னா வாங்கிக் குடுத்துடலாம். காஞ்சிபுரத்துல நடக்கிற இன்ன அன்னதானத்துக்கு ஏதாவது முடிஞ்சதைப் பண்ணுன்னு உத்தரவு போட்டா சிரமேற்கொண்டு செஞ்சிடலாம். இதுபோல் சாத்தியம் ஆகக் கூடியதைக் கேட்காம குதிரை வாங்கிக் குடுப்பியானு கேக்கறாரேஎதுக்குக் குதிரை? என்று சிவகுமாரும், லலிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தபோது, மகா பெரியவாளே மீண்டும் ஆரம்பித்தார்:

என்னது, குதிரை புடிச்சுத் தர்றியானு கேட்டேன். பதிலே சொல்லலே? என்று அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.

மகா பெரியவா தன் பக்தர்களிடம் பெரும்பாலான காலங்களில் எதையும் கேட்டுப் பெற்றதில்லை. அப்படி ஒருவேளை பாக்கியம் பெற்ற சில பக்தர்களிடம் எதையாவது கேட்டுப் பெற்றால், அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும்.

எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்டார்?

குதிரை கேட்டதற்கான பொருள் என்ன?

பின்னாட்களில்தான் இருவருக்கும் இதற்கான காரணம் புரிந்தது. சரி, அந்தக் காரணத்தைப் பின்னர் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது குதிரை சம்பாஷணைக்கு வருவோம்.

நிச்சயமா புடிச்சுத் தர்றோம் பெரியவாநீங்க போட்ட உத்தரவு எங்களோட பாக்கியம் என்றார் சிவகுமார், மகா பெரியவாளைப் பார்த்து.

இருவரையும் பார்த்த மகா பெரியவா, “புடிச்சுத் தர்றதோட ஒங்க வேலை முடிஞ்சிடாது. அந்தக் குதிரைக்கு நாட்டியம் பழக்கித் தரணும். நன்னா இப்படியும் அப்படியும் ஆடணும் என்று தன் இரு கைகளையும் இடமும் வலமும் அசைத்துக் காண்பித்து விட்டு, “ஏற்பாடு பண்றேளா? என்றார்.

சிவகுமாரும் லலிதாவும் பரிபூரணமாக சம்மதித்து விட்டு, மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

பிரசாதம் வழங்கி, வலக்கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.

காஞ்சியில் இருந்து கும்பகோணம் திரும்பினர்.

வந்த பின் வீட்டில் இருக்கிற பெரியவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். “என்னதுபெரியவா ஒங்கிட்ட குதிரை கேட்டாளா? என்று அனைவரும் புருவம் உயர, ஆச்சரியத்துடன் கேட்டார்கள்.

ஆமாம்ஆமாம்பெரியவாட்ட சரின்னு சம்மதம் சொல்லிட்டோம். இனிமே, விசாரிக்கணும் என்றார் லலிதா.

கோடிக்காடு குதிரைக்கு ஃபேமஸ்னு தெரியும். சரி, நீ எப்படிக் குதிரையைப் புடிச்சுஅதுவும் அதுக்கு நாட்டியம் பழக்கி, அப்பறமா பெரியவாகிட்ட குடுக்கப் போறே? என்று லலிதாவின் பெற்றோர் கவலையுடன் கேட்டார்கள்.

என்னன்னு தெரியலைபெரியவா கேட்டுட்டார். அவர் சொல்லிட்டார்னா, அது வேத வாக்கு என்று இருவரும் அவர்களது கவலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.

கும்பகோணத்தில் பேர் பெற்ற கும்பேஸ்வரன் கோயிலையும், பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றையும், டிகிரி காபியையும்கூட இருவரும் மறந்து விட்டிருந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால், குதிரை மட்டும் இவர்கள் இருவரையும் ஏகத்துக்கும் ஆக்கிரமித்திருந்தது. இரவு கனவில் குதிரை வராததுதான் குறை!

சரி, முதல் கட்டமா நாம ரெண்டு பேரும் வேதாண்யம் போய் கோடிக்காடு காட்டிலாகா அதிகாரிகளைப் பார்த்து விவரத்தைச் சொல்வோம். அடுத்து தானா வழி பிறக்கும் என்ற சிவகுமாரின் கருத்தை, லலிதா ஆமோதிக்கஅடுத்த நாள் காலையில் இருவரும் வேதாரண்யம் புறப்பட்டார்கள்.

வேதாரண்யம் கோடிக்காடு காட்டிலாகா அதிகாரி, “சார்அதுல நிறைய புரஸீஜர் இருக்கு என்று பயமுறுத்தி, இவர்களை அனுப்பி விட்டார்.

சிவகுமாரின் தந்தையார் ராஜாராமய்யர் உள்ளூர்வாசி மட்டுமல்ல. வேதாரண்யத்தில் முக்கிய பிரமுகரும்கூட. எனவே, தன் தந்தையிடம் விஷயத்தைச் சொல்லி சாத்தியமான வழியில் உதவுமாறு சொல்லராஜாராமய்யர் உள்ளூரில் ஒரிருவரைப் பார்த்துப் பேசிப் பார்த்தார். இறுதியில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கூட்டி வந்து மகன் சிவகுமார் முன்னால் நிறுத்தினார்.

பிறகு சிவகுமாரிடம், “இவருக்குக் குதிரை விஷயமெல்லாம் அத்துப்படிஇவர் உங்களுக்கு உதவி செய்வார் என்று சொல்லி விட்டு, தந்தையார் நகர்ந்து விட்டார்.

வந்த குதிரைக்கார ஆசாமி, “சார்ஒங்கப்பா எல்லாம் சொன்னார். காட்டுலேர்ந்து நான் குதிரையைப் புடிச்சுத் தரேன். ஆனா, அதுக்கு சுழியெல்லாம் பார்க்க எனக்குத் தெரியாது (காளைகளையும் குதிரைகளையும் சுழி பார்த்து வாங்க வேண்டும்). அதுக்கு நீங்க, விஷயம் தெரிஞ்ச வேற ஆளைக் கூட்டிட்டு வந்து பார்த்து வாங்கிட்டுப் போங்க என்றார்.

சரிகுதிரைகளை நீ புடிச்சு வெச்சுட்டு எங்களுக்குத் தகவல் சொல்லுவந்து பார்த்து வாங்கிட்டுப் போறோம் என்று சொல்லி விட்டு, சிவகுமாரும் லலிதாவும் கும்பகோணம் திரும்பினர்.

குதிரையைப் பிடிக்க ஆள் சொல்லியாயிற்று. சுழி பார்க்க வேண்டும் என்று சொன்னாரேஅதற்கு ஆளைத் தேடணுமே என்று சிவகுமாரும் லலிதாவும் பேசிக் கொண்டிருந்தபோது, லலிதா முகத்தில் ஒரு பிரகாசம். “ஏங்கஇப்ப நம்ம வீட்டுக்குப் பக்கத்துல ஒரு சர்க்கஸ் நடந்திட்டிருக்கேஅதுல குதிரைங்களும் வெச்சிருக்காங்க. அவங்ககிட்ட போய்க் கேக்கலாமே? என்றார் லலிதா.

அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் அந்த சர்க்கஸ் கூடார முதலாளியின் முன் இருந்தார்கள். ‘சுழி பார்ப்பது பற்றி முதலாளியிடம் சொன்னார்கள்.

முதலாளி வேறு ஒரு ரூட் போட்டார். “சார், நீங்க ஏன் சுழி அது இதுன்னெல்லாம் சிரமப்படறீங்கஎன்கிட்டயே நல்ல குதிரைங்க இருக்கு. நீங்க விரும்புற குதிரையைத் தர்றேன். இப்பல்லாம் சர்க்கஸ் முந்தி மாதிரி நடக்கறதில்லேஎனக்கு நீங்க உதவின மாதிரியும் இருக்கும் என்று கெஞ்சலுடன் கேட்க, இருவரும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம்மகா பெரியவா கேட்டது, கோடிக்காடு வனத்தில் இருக்கிற குதிரை! சர்க்கஸ்காரர் சிரமப்படுகிறாரே என்று இவரிடம் இருக்கிற ஒரு குதிரையை வாங்கிக் கொடுத்தால், மகா பெரியவா சொன்ன வாக்கையே மீறி விட்டது போல் ஆகி விடும்! எனவே, கொஞ்சமும் யோசிக்காமல் இதை நிராகரித்து விட்டனர்.

அதற்காக, அந்த சர்க்கஸ் கம்பெனி முதலாளியும் கோபித்துக் கொள்ளவில்லை. “பரவாயில்லைநீங்க என் குதிரையை வாங்கலேன்னாலும் போகட்டும். பட்டுக்கோட்டைக்குப் பக்கத்துல ஆவணம்னு ஒரு கிராமம் (இன்றைய புதுக்கோட்டை மாவட்டமும் தஞ்சாவூர் மாவட்டமும் இணைகிற எல்லையில் இருக்கிறது). அங்கே ஒரு ஒரு பாய் (இஸ்லாமியர்) இருக்கார். குதிரைங்களுக்கு அவர் நல்லாவே சுழி பார்ப்பார். தவிர, குதிரைங்க ஆடுறதுக்குப் பயிற்சியும் குடுப்பாரு. இங்கே நம்ம ஊர்ப் பக்கத்துல எந்த சேட்டு வீட்டுல கல்யாணம்னாலும் அவர்தான் குதிரைங்களை சப்ளை பண்ணுவாரு. நல்லாவே டிரெயினிங் குடுப்பாரு. அவரைப் போய்ப் பாருங்க என்று தகவல்களை வாரி வழங்கினார் சர்க்கஸ் முதலாளி.

அடுத்த சவாரி, ஆவணம் கிராமத்துக்கு!

கிராமத்தில் குதிரைப் பயிற்சியாளரைப் பார்த்து விவரம் சொன்னார்கள் சிவகுமாரும் லலிதாவும்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவர், என்னென்ன நிபந்தனைகள் என்று பட்டியலிட்டார்.

அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்த சிவகுமாரும் லலிதாவும், “குதிரை கிடைத்ததும் தகவல் அனுப்பறோம். கோடிக்காடுக்கு நீங்க வந்துடுங்க என்று சொல்லி விட்டுக் கும்பகோணம் புறப்பட்டனர்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

குருவாகப் போற்றி மதிக்கப்படுகிற மகான், நமக்கு ஒரு உத்தரவிட்டால், அதை எப்படி எல்லாம் சிரத்தையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு சிவகுமார்லலிதா தம்பதியர் ஒரு உதாரணம். குதிரையை எங்கே தேடுவது, சுழி பார்க்கின்றவரை எங்கே கண்டுபிடிப்பது என்றெல்லாம் சுணங்கி நிற்காமல், மளமளவெனக் காரியமாற்றினார்கள் இருவரும்.

அடுத்த ஒரு சில தினங்களில் வேதாரண்யத்தில் இருந்து செய்தி வந்ததுநாலைந்து குதிரைகளைப் பிடித்து வைத்திருப்பதாக. விரைவில் வந்து தேவைப்படுகிற குதிரையை ஓட்டிச் செல்லவும் என்றும் சொல்லப்பட்டது.

இந்தத் தகவலுக்குத்தானே காத்திருந்தார்கள் இருவரும்! ஆர்வத்துடன் வேதாரண்யம் பயணப்பட்டனர். ஆவணம் குதிரை பயிற்சியாளருக்குத் தகவல் தரப்பட்டு அவரும் கோடிக்காடுக்கு வரவழைக்கப்பட்டார்.

வேதாரண்யம் கோடிக்காடு வனத்துக்குப் போனால், ராஜாராமய்யர் அறிமுகப்படுத்திய உள்ளூர் ஆசாமி, நான்கைந்து குதிரைகளைப் பிடித்து வைத்திருந்தார். “இதுல எது ஒங்களுக்கு சரியா வருமோ, அதை எடுத்துக்குங்க. மத்த குதிரைகளை காட்டுலயே விட்டுடுவேன் என்றார்.

சட்டத்துக்கு உட்பட்டு அந்தக் குதிரையை எப்படி வாங்க வேண்டுமோ, அனைத்தையும் தயார் செய்து வாங்கப்பட்டது. ஆவணத்தில் இருந்து வந்த குதிரை பயிற்சியாளர், சுழி பார்த்துத் தேர்ந்தெடுத்தார்.

ஆச்சு, குதிரை வாங்கியாயிற்று. இனி, இதற்கு ஆவணம் கிராமத்தில் நாட்டியம் பழக்க வேண்டும். நாட்டியம் நன்றாகப் பழகிப் போன பின், குதிரையைக் கூட்டிக் கொண்டு போய் மகா பெரியவாளிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

குதிரைக்கு நாட்டியம் பழக்கணும்னா அதுக்கு ஒரு மண்டல காலம் ஆகும். அதுவரை, எல்லாத்துக்கும் சேர்த்து இவ்வளவு ரூபாய் செலவாகும் என்று ஆவணம் பயிற்சியாளர் ஒரு தொகையைச் சொல்லஅந்த இடத்திலேயே தொகையைக் கொடுத்தார் சிவகுமார்.

அவ்வப்போது சிவகுமாரும் லலிதாவும் ஆவணம் கிராமத்துக்குச் சென்று குதிரையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார்கள். கோடிக்காடு காட்டில் பார்த்த சாதாரண குதிரைக்கும், ஆவணம் கிராமத்தில் தற்போது பயிற்சிகளை எல்லாம் முடித்திருக்கிற குதிரைக்கும் நல்ல மாற்றத்தை உணர முடிந்தது இருவராலும்! ‘மகா பெரியவா நம்மிடம் கேட்டதைக் கொடுக்கப் போகிற காலம் நெருங்கி விட்டது என்று இருவருக்கும் பூரிப்பு.

ஒரு மண்டல காலமும் மளமளவென ஓடியே போயிற்று.

குதிரைக்கு நாட்டியம் நன்றாக வந்து விட்டதாகவும், வந்து அழைத்துச் செல்லுமாறும் பயிற்சியாளரிடமிருந்து தகவல் வந்தது.

யப்பாடாஇந்தக் குதிரையைக் காஞ்சி சென்று மகா பெரியவாளிடம் சேர்த்து விட்டு ஆசி வாங்க வேண்டியதுதான் என்று காஞ்சிபுரம் செல்ல ஒரு நாள் குறித்தனர்.

அந்த நாளும் வந்தது.

குதிரை பயிற்சியாளரின் அழைப்புக்கு இணங்க, பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆவணம் கிராமத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள் சிவகுமார்லலிதா குடும்பத்தினர்.

ஆவணம் கிராமத்தில் குதிரையைப் பார்த்தார் சிவகுமார். கோடிக்காட்டில் பிடித்த குதிரை போல் தற்போது இல்லை. மிகுந்த உற்சாகத்துடன் இப்படியும் அப்படியும் அசைந்து கொண்டே இருந்தது.

தன் அருகில் இருந்த குதிரையை லேசாகத் தட்டி விட்டு சில சமிக்ஞைகளைப் பயிற்சியாளர் காட்டதன் கால்களை இப்படியும் அப்படியும் நகர்த்தி நடனமாடியது குதிரை.

காட்டில் பிடிக்கப்பட்டபோது இந்தக் குதிரைக்கு ஒன்றுமே தெரியவில்லைகுறைந்த கால அவகாசத்தில் இந்தக் குதிரைக்கு இப்படி ஒரு பயிற்சியை இவரால் எப்படிக் கொடுக்க முடிந்தது? மனிதர்களைப் போல இந்தக் குதிரையும் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு விட்டதே என்று சிவகுமாருக்கு ஆச்சரியம் தாளவில்லை.

மகா பெரியவா கேட்டுக் கொண்டபடிஒரு குதிரையைக் கோடிக்காட்டில் பிடித்து, அதற்கு நாட்டியமும் பழக்கியாகி விட்டது. இதோ, இன்றைய தினம் மாலை காஞ்சிபுரத்தில் மகா பெரியவாளிடம் இந்தக் குதிரையைச் சேர்க்கப் போகிறோம் என்று நினைக்கிறபோதே சிவகுமாருக்கும் லலிதாவுக்கும் மனம் நிறைய குதூகலம்!

ஒரு வேனில் குதிரையை ஏற்றினார்கள். அதற்கு என்னென்ன ஆகாரம் தேவையோ, அவற்றையும் ஏற்றி அவ்வப்போது அசை போடுவதற்கு வசதியாக வைத்தார்கள்.

வேனின் முன்பக்கம் டிரைவர் தவிர, குதிரைப் பயிற்சியாளரும் சிவகுமாரும் ஏறிக் கொண்டார்கள். லலிதா மற்றும் குடும்பத்தினர் சிலர் ஒரு காரில் ஏறிக் கொண்டார்கள்.

ஆவணத்தில் இருந்து வேனும் காரும் ஒரே சமயத்தில் காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட்டது.

மகா பெரியவாளிடம் சேரப் போகிறோம் என்கிற உற்சாகமோ என்னவோஎந்த விதமான சண்டித்தனமும் பண்ணாமல், தனக்குப் போடப்பட்டிருந்த ஆகாரத்தை அசை போட்டபடியே சாதுவாகக் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது குதிரை.

காஞ்சி ஸ்ரீமடத்தில் அன்றைய தினம் மாலை ஓரளவுக்குப் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

சிவகுமார், லலிதா மற்றும் உறவினர்கள் முன்னால் நடக்ககுதிரையைப் பிடித்தபடி ஆவணம் பயிற்சியாளர் வந்தார்.

ஸ்ரீமடத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிற இடம் அருகே நெருங்கினார்கள்.

அப்போது ஒரு மேனாவுக்குள் இருந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.

சிவகுமாரும் லலிதாவும் தாங்கள் எடுத்துச் சென்றிருந்த பழங்கள் மற்றும் புஷ்பத்தை மகா பெரியவா திருச்சந்நிதியில் சமர்ப்பித்து விட்டு, மேனாவுக்கு அருகில் கைகளைக் கூப்பியபடி நின்றார்கள்.

மகா பெரியவாளின் திருப்பார்வை படும் இடத்தில் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தினார் ஆவணம் பயிற்சியாளர்.

ஆஹா! மகானின் திருப்பார்வை மெள்ள நகர்ந்து கொண்டு வரும்போது குதிரையின் மேலும் விழுந்தது.

குதிரையைப் பார்த்தவுடன் மகா பெரியவா முகத்தில் தென்பட்ட பூரிப்பைப் பார்க்க வேண்டுமே! மேனாவில் இருந்து இறங்கியே விட்டார். குதிரைக்கு அருகே வந்தார்.

சிவகுமார்லலிதா குடும்பத்தினருக்கு சந்தோஷத்தின் காரணமாக கண்கள் கலங்க ஆரம்பித்தன. குதிரைக்கு அருகே வந்த மகா பெரியவா அதன் மேல் கை வைத்து மெள்ளத் தடவி விட்டார்.

பிறகு, தன் கழுத்தில் இருந்த பெரிய வில்வ மாலையைக் கழற்றிக் குதிரையின் கழுத்தில் போட்டார்.

மகா பெரியவா தன் திருக்கரங்களால் அணிவித்த மாலையை குதிரை வாங்கிக் கொண்ட லாகவம் இருக்கிறதேயப்பப்பா… ‘பரமேஸ்வர சொரூபமே இறங்கி வந்து தனக்கு ஒரு மாலை அணிவிக்கிறதே என்கிற சந்தோஷத்தில் குதிரையிடம் அப்படி ஒரு பெருமிதம்.

கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் இந்தக் காட்சிகளை இரு கரம் கூப்பி வணங்கியபடி ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவகுமாரையும் லலிதாவையும் ஒரு புன்னகையுடன் பார்த்தார் மகா பெரியவா. பிறகு, ‘இவர்தான் குதிரைக்கான பயிற்சியாளர் என்று புரிந்து கொண்டு அவரைப் பார்த்து, “இந்தக் குதிரைக்கு நாட்டியம் பழக்கியாச்சா? நன்னா ஆடுமோ? என்று கேட்டார்.

இந்த உத்தரவுக்காகவே பயிற்சியாளர் காத்திருந்தார் போலிருக்கிறது. மகா பெரியவா கேட்ட மறுவிநாடி, “நல்லாவே ஆடும் சாமீடிரெயினிங் எல்லாம் குடுத்தாச்சு. இதோ, இப்ப குதிரை ஆடும் பாருங்க என்றவர், குதிரையின் கழுத்தில் ஒரு சலங்கையையும், நான்கு கால்களில் சலங்கைகளையும் கட்டி விட்டார். பிறகு, தனக்கே உரிய பாஷையில் குதிரையை குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு தட்டு தட்டினார்.

அவ்வளவுதான்தனது மாஸ்டரின் உத்தரவு கிடைத்த அடுத்த விநாடி, ‘தய்யா தக்கா என்று தலையையும், கால்களையும் அசைத்து ஆட ஆரம்பித்து விட்டது குதிரை. அசைவுக்கு ஏற்றாற்போல் சலங்கைகள் எழுப்பிய ஒலியும் கேட்பதற்கு ஆனந்தமாக இருந்தது.

ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா கைகளைத் தட்டி இந்த ஆட்டத்தை ரசித்தார். இதைப் பார்த்த அங்குள்ள பக்தர்களும் மெய்மறந்து ரசித்தனர்.

ஆடிக் களைத்த குதிரைஇப்போதைக்கு இது போதும் என்பதுபோல் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. “சரி, குதிரையை இங்க விட்டுட்டு நீங்க கும்மோணம் பொறப்படலாம் என்று சிவகுமாருக்கும் லலிதாவுக்கும் பிரசாதம் தந்து, உத்தரவு கொடுத்தார் மகா பெரியவா.

மீண்டும் ஒரு முறை மகானுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, அங்கிருந்து நகர்ந்தனர். அருகில் இருந்த பால பெரியவா (சின்ன பெரியவர்), தம்பதியர்களைப் பார்த்து, “ஸ்ரீமடத்து மேனேஜரைப் பாத்து குதிரை குடுத்ததுக்கு ஒரு ரசீது வாங்கிக்குங்கோ என்றார்.

சிவகுமாரும் லலிதாவும் பால பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டு, “கட்டாயம்எங்களுக்கு ஒரே ஒரு சந்தேகம்இதுக்குத் தாங்கள்தான் பதில் சொல்லணும் என்று தங்கள் வாயைப் பொத்திய வண்ணம் பவ்யமாகக் கேட்டனர்.

என்ன? என்பது போல் பார்த்தார் பால பெரியவா.

மகா பெரியவா எதுக்கு எங்ககிட்ட குதிரை கேட்டார்? அவர் கேட்டா வாங்கித் தர்றதுக்கு எத்தனையோ பணக்காரா இருக்காளேஎதுக்கு எங்களை செலக்ட் பண்ணார்? என்று லலிதா கேட்டார்.

பால பெரியவா சொன்னார்: “உத்ஸவ காலத்துல காஞ்சி காமாட்சி அம்பாள் பொறப்படறதுக்கு முன்னால எப்பவும் யானை, குதிரைங்க போறதுண்டு. இது ரொம்ப காலமா இருந்துண்டு வர்ற வழக்கம். சமீபத்துல ஒரு குதிரை இறந்து போனதால அம்பாள் பொறப்பாட்டுக்கு முன்னாடி குதிரை போறது நின்னு போச்சு. இது மகா பெரியவா மனசுல ஒரு தாபமா இருந்திருக்கு. அதான் ஒங்ககிட்ட கேட்டிருக்கா.

பால பெரியவா சொன்னதைக் கேட்ட பின்ஆஹாநமக்கு எப்பேர்ப்பட்ட அனுக்ரஹத்தைப் பெரியவா குடுத்திருக்கார் என்று சிவகுமாரும் லலிதாவும் சந்தோஷப்பட்டு கும்பகோணம் திரும்பினர்.

ஆனால், மகா பெரியவா குதிரையைக் கேட்டு வாங்கியதன் உண்மையான காரணம் அடுத்து வந்த ஒரு சில தினங்களில் இவர்களுக்குத் தெரிய வந்ததும், மகானின் கருணையே!

கும்பகோணம் வந்து சேர்ந்த ஓரிரு தினத்தில் சிவகுமார் இல்லத்துக்கு ஒரு ஜோதிடர் வந்தார். இவர்களது குடும்பத்துக்குப் பழக்கமானவர். எப்போதாவது நினைத்துக் கொண்டால், திடீரென இவர்கள் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பார் அந்த ஜோதிடர். அதுபோல்தான் அன்றைய தினமும் வந்திருந்தார்.

வழக்கமான உபசாரம், பேச்சுகள் முடிந்த பின், சிவகுமாரின் ஜாதகத்தை ஜோதிடரே தற்செயலாகக் கேட்டு வாங்கிப் பார்த்தார். தன் வலது ஆட்காட்டி விரலை ஜாதகத்தில் இருக்கிற கட்டங்களில் இப்படியும் அப்படியும் வைத்தவர் முகத்தில் குழப்பம் தென்பட்டது.

ஜோதிடர் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த சிவகுமாரும் லலிதாவும் என்னவோ ஏதோவென்று நெளிந்தனர்.

இருவரையும் பார்த்து ஜோதிடரே ஆரம்பித்தார்: “இவருக்கு (சிவகுமாரை அடையாளம் காண்பித்து) மாரக தசை இருக்கு. சில நேரத்துல இது உயிருக்கே ஆபத்தா போய் முடிய வாய்ப்பு உண்டு. இந்த மாரக தசைக்கு இருக்கிற ஒரே பரிகாரம்ஒரு குதிரையை வாங்கி தானம் பண்றதுதான். ஒடனே, நீங்க என்ன பண்றீங்கஒரு குதிரையை எப்பாடு பட்டாவது வாங்கி, ஏதேனும் ஒரு இடத்துக்கு தானம் பண்ணிடுங்க. எல்லாம் சரியாயிடும். அதன் பின் கவலை வேண்டாம்.

ஜோதிடர் மளமளவெனச் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைய வேண்டிய சிவகுமாரும் லலிதாவும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

அப்படியென்றால், இதற்குத்தான் மகா பெரியவா ஒரு குதிரையைத் தங்களிடம் இருந்து முன்கூட்டியே கேட்டு வாங்கிக் கொண்டாரோ? என்று அறிந்து வியந்து, மகா பெரியவாளை மானசீகமாக நினைத்து இருந்த இடத்தில் இருந்தபடியே தம்பதி சமேதராக நமஸ்காரம் செய்தனர்.

ஜோதிடர் ஒன்றும் புரியாமல் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின் கோடிக்காட்டில் துவங்கி, எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்தனர்.

ஜோதிடர் முகத்தில் பிரமிப்பு. “அதாங்க, அந்த மகானோட ஞான திருஷ்டிஇவருக்கு இருக்கிற மாரக தசையை உணர்ந்து, அதற்கு உண்டான பரிகாரத்தையும் செய்ய வெச்சு, ஒங்களுக்குக் காமாட்சித் தாயோட ஆசியையும் சேர வெச்சுட்டார் என்றார் சிலிர்ப்புடன்.

தன்னை நம்பிய பக்தர்களை குருவாகப்பட்டவர் எப்படியும் காப்பாற்றி அருள்வார் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?!

கண் கண்ட தெய்வம், ‘கண் கண்ட தெய்வம் என்று பக்தர்கள் மகா பெரியவாளைக் கொண்டாடியதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை. எமனின் பிடிக்குள் சென்றவர்களையும் மகா பெரியவா மீட்டுக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

இந்தக் குடும்பம் சம்பந்தப்பட்ட இன்னொரு அனுபவமும் சுவாரஸ்யமானது.