மடத்து சமையலுக்கு முருங்கையா?

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்கிற நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர் ராமச்சந்திரன்.

இவருக்கு மகா பெரியவா என்றால், அதீதமான பக்தி. அந்த மகானின் அருளால்தான், தான் ஒரு நல்ல நிலையில் இருந்து வருவதாக எல்லோரிடமும் பெருமையுடன் சொல்வார். எப்போதெல்லாம் தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் காஞ்சிபுரமோ, அல்லது மகான் முகாமிட்டிருக்கிற இடத்துக்கோ கிளம்பி விடுவார்.

ஒரு முறை மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் புறப்பட்டார்.

காஞ்சி மகா பெரியவா போன்ற மகான்களைத் தரிசிக்கச் செல்கிற பக்தர்கள், தங்களால் இயன்ற காணிக்கைப் பொருட்களை வாங்கிச் சென்று அர்ப்பணிப்பது வழக்கம். பழங்கள், புஷ்பங்கள், முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு மற்றும் சமையலுக்கு உண்டான பொருட்களைக் கொண்டு சென்று வழங்குவார்கள்.

பொதுவாககுழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், சந்நியாசிகள்இவர்களைப் பார்க்கச் செல்லும்போது வெறும் கையை வீசிக் கொண்டு செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். எனவே, இத்தகையவர்களை நாம் பார்க்கச் செல்கிறபோது, நம் தகுதிக்கு ஏற்றவாறு ஏதேனும் வாங்கிச் செல்ல வேண்டும். இதில் பணம் முக்கியமல்ல. நமது அன்பை வெளிப்படுத்துவதுதான் முக்கியம்.

பகட்டைக் காண்பிப்பதற்காக இஷ்டத்துக்கு வாங்கிச் செல்லக் கூடாது. அரை டஜன் வாழைப்பழம் வாங்கிச் சென்றாலும், உளப்பூர்வமாக அர்ப்பணிக்க வேண்டும்.

நிறைய வாங்கித் தர வேண்டும் என்கிற எண்ணமும், வசதியும் கொண்டவர்கள் தாராளமாகத் தரலாம். அது, அடுத்தடுத்து வரக் கூடிய சந்ததியினருக்கும் புண்ணியத்தைத் தரக் கூடியது.

நாம் வாங்கிச் செல்கிற அனைத்தையும் சந்நியாசிகள் சாப்பிடுவார்களா என்றெல்லாம் யோசிக்கக் கூடாது. மகா பெரியவா போன்ற மகான்கள் இருக்கிற இடத்தில் பணியாளர்கள் நிறைய பேர் இருப்பார்கள். கைங்கர்யம் செய்கிற தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் உணவிட வேண்டும் அல்லவா? தவிர, வருகிற பக்தர்களுக்கு அன்னதானம் இட வேண்டுமே!

காஞ்சி மகானுக்கு எதை வாங்கிக் கொண்டு போய் அர்ப்பணிக்கலாம் என்று யோசித்தார் ராமச்சந்திரன்.

அவருக்கு என்ன தோன்றியது தெரியுமா?

முருங்கைகாய்!

அப்போது அவர் இருந்த இடத்துக்கு அருகே ஒரு வியாபாரி மூட்டை மூட்டையாக முருங்கைக்காய்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

என்னது, சந்நியாசியைப் பார்க்க முருங்கைகாயா என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா?

பச்சைப்பசேலென்று காணப்பட்ட முருங்கைக்காய்களை மூட்டை மூட்டையாக வாங்கிக் கொண்டார். காஞ்சிபுரம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.

காஞ்சி மகா பெரியவா, மிகப் பெரும் தவசீலர். சாஸ்திரம் வகுத்த நெறிமுறைப்படி ஆச்சாரமாக வாழ்ந்து வருபவர். அவரைத் தரிசிக்க செல்கிற நாமும் ஓரளவு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

அவரைத் தரிசிக்கச் செல்லும்போது பக்தர்கள் தங்கள் மனதுக்குப் பட்ட பொருட்களைஅதே வேளையில் சந்நியாசியின் ஆச்சாரத்துக்குப் பங்கம் இல்லாத வகையில் வாங்கிச் செல்ல வேண்டும். பெரும்பாலான பக்தர்கள் பழங்கள், முந்திரி, பாதாம் என்று வாங்கிச் செல்வர்.

ஒருவேளை நல்ல காய்கறிகள் கிடைக்கின்றன என்று வாங்க நேர்ந்தால் பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைக்காய், புடலங்காய் என்று சாத்வீகமானவற்றை வாங்கிச் சென்று அர்ப்பணிக்க வேண்டும். இதுதான் பலரும் செய்வார்கள். பாவம், ராமச்சந்திரனுக்கு இது தெரியவில்லை.

பேருந்தில் இருந்து காஞ்சியில் இறங்கிக் கொண்டதும், ஒரு ஜட்கா வண்டி வைத்துக் கொண்டு அதில் முருங்கைக்காய் மூட்டைகளை ஏற்றி, ஸ்ரீசங்கர மடத்தின் வாசலில் இறங்கினார் ராமச்சந்திரன்.

ஒவ்வொரு மூட்டையாகத் தானே சுமந்து சென்று மகா பெரியவா அமர்ந்திருக்கக் கூடிய திருச்சந்நிதியின் ஓரமாக வைத்தார். அதன் பின் ஸ்ரீமடத்தின் ஒரு மூலைக்குச் சென்று கால், கைகளைக் கழுவிக் கொண்டார். மகா பெரியவா தரிசனத்துக்காக வந்தார்.

மகா பெரியவா தன் வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவ்வளவாக பக்தர்கள் கூட்டம் இல்லை. ஆங்காங்கே ஓரிருவர் அமர்ந்து கொண்டு கண்களையும் இமைக்க மறந்து மகானைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.

கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகள், அருகே அமர்ந்திருந்தார்கள். பெரியவா ஏதோ ஒரு புத்தகத்தை மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தார்.

மகா பெரியவாளுக்கு அருகே சென்றார் ராமச்சந்திரன். அங்கிருந்த ஒரு சிப்பந்தி, இவரை விசாரித்து விட்டு, மகா பெரியவாளுக்குத் தகவல் சொன்னார்.

தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு ராமச்சந்திரனை அண்ணாந்து பார்த்தார்.

மகானை வணங்கி விட்டு, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்கரித்தார் ராமச்சந்திரன். எழுந்து நின்றார். அந்த இடத்தின் ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த முருங்கைக்காய் மூட்டைகளை மகா பெரியவாளிடம் சைகை மூலம் காண்பித்தார்.

பெரியவா பார்வை அங்கே திரும்பியது. “என்ன இருக்கு அதுல? – பெரியவா ஒரு குழந்தை போல் கேட்டார்.

முருங்கைகாய் பெரியவா?

ராமச்சந்திரன் சொல்லி முடித்ததும், அருகே கைங்கர்யத்துக்கு அமர்ந்திருந்த ஊழியர் எழுந்தார். “முருங்கைக்காயா? இதெல்லாம் இங்கே உள்ளே கொண்டு வரக் கூடாதுன்னு ஒங்களுக்குத் தெரியாதா? ஒடனே அதை வெளில எடுத்துண்டு போங்கோ என்றார் கறாராக.

ராமச்சந்திரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது, முருங்கைக்காய் இங்கே சமர்ப்பிக்கக் கூடாதா?

உடனே ராமச்சந்திரன் அந்த கைங்கர்ய அன்பரைப் பார்த்து, “தெரியாம வாங்கிண்டு வந்துட்டேன். மன்னிச்சிடுங்கோ என்றார்.

பெரியவாளுக்கு ஏதாவது சமர்ப்பிக்கணும்னா என்ன குடுக்கணும்னு ஆத்துல இருக்கிற பெரியவாளைக் கேட்டுண்டு வாங்கி வரணும். புரியறதா? சரி, இந்த மூட்டைகளை எல்லாம் முதல்ல எடுத்துண்டு போங்கோ என்றார் அவர்.

கைங்கர்யம் செய்யக் கூடிய சிப்பந்திக்கும், ராமச்சந்திரனுக்கும் நடந்து கொண்டிருந்த சம்பாஷணையைப் பார்த்தபடி இருந்தார் மகா பெரியவா. ஆனால், எதுவும் பேசவில்லை.

சரி, பெரியவாளைப் பார்த்தாகி விட்டது. அவருக்கு நமஸ்காரமும் பண்ணியாகி விட்டது. இதுவே நமக்குப் பெரிய ஆசிர்வாதம். முருங்கைக்காய் மூட்டைகளை வெளில எடுத்துண்டு போய் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று தீர்மானித்து, மூட்டைகள் இருக்கிற இடம் நோக்கி நகர்ந்தார் ராமச்சந்திரன்.

அப்போது கைவிரல்களால் ஒரு சொடக்குப் போடுகிற சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தார் ராமச்சந்திரன்.

மகா பெரியவா ஒரு புன்னகையோடு ராமச்சந்திரனைத் தன் அருகே வருமாறு சைகையால் அழைத்தார்.

கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்தி, ‘எதற்காக இருக்கும்? என்று யோசித்தபடி, ராமச்சந்திரனை நெருங்கி, பெரியவா அழைப்பதாகத் தெரிவித்தார்.

பெரியவா அருகே வந்தார் ராமச்சந்திரன். கனிவுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பரப்பிரம்ம சொரூபத்துக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரத்தை மீண்டும் செய்தார். எழுந்து நின்றார்.

தன் அருகே இருந்த சிப்பந்தியைப் பார்த்து, “அவனுக்கு (ராமச்சந்திரனுக்கு) மடத்துல முருங்கைக்காய் சேத்துப்பாளா, மாட்டாளானு தெரியலடா. பாவம், ஆசைப்பட்டு வாங்கிண்டு வந்துட்டான். அவனைக் கோவிக்கக்கூடாது என்று சொல்லி விட்டு ராமச்சந்திரனிடம் திரும்பினார்.

ராமச்சந்திரன் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார். சிப்பந்தி பேசிய வார்த்தைகளுக்கு மகா பெரியவாளின் வார்த்தைகள் ஒத்தடம் கொடுப்பது போல் இருப்பதை உணர்ந்தார்.

நீ தெரியாம வாங்கிண்டு வந்துட்டே. பரவால்லஒனக்கு இப்ப டைம் இருக்காஅர்ஜென்டா மெட்ராஸ் போகணுமா?

ஒங்களோட சந்நிதிக்கு வந்துட்டா டைம் பத்தி எனக்குக் கவலை இல்லை பெரியவா

ஒன்னோட காணிக்கையை நான் ஏத்துக்கணும். அதுக்கு ஒரு வழி இருக்கு. சரி, நீ எங்க உத்தியோகம் பண்றே?

சொன்னார்.

ஒனக்கு பார்ட்டர் சிஸ்டம் பத்தித் தெரியுமா?

தெரியும் பெரியவா. கேள்விப்பட்டிருக்கேன்.

அப்படீன்னா என்ன? – பெரியவா கேட்டார்.

நாம ஒரு பொருளைக் கொடுத்துட்டு, அந்தப் பொருளோட மதிப்புக்கு ஈடாக வேறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்கிக் கொள்வது. பண்டைய காலத்துல இதைத்தான் நம் முன்னோர்கள் பெரும்பாலும் பண்ணிண்டு இருந்தாஎங்க அம்மாவே கிராமத்துல இருந்தப்ப பக்காத்து மாமிகிட்ட கொஞ்சம் காபி பொடி வாங்கிண்டு, அதுக்கு சமமா சர்க்கரை குடுப்பா என்றுபார்ட்டர் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் ராமச்சந்திரன்.

பலேஅதேதான்காஞ்சிபுரத்துல காய்கறி மார்க்கெட் இருக்கு. இந்த முருங்கைக்காய் அத்தனையையும் எடுத்துண்டு போ. அங்கே பழநியாண்டி கடை எங்க இருக்குனு விசாரிச்சுக்கோ. அவன்கிட்ட இந்த முருங்கைக்காய் மூட்டை அத்தனையையும் கொடுத்துட்டு, இதுக்குப் பதிலா வாழைக்காய்களை வாங்கிண்டு வா. வாழைக்காய்கள் எத்தனை இருந்தாலும் மடத்துக்கு யூஸ் ஆகும்.

மகா பெரியவா இப்படி ஒரு வழி சொன்னதும், ராமச்சந்திரனுக்கு ஆனந்தமான ஆனந்தம்.

என்னடாதுமகா பெரியவா இதை எடுத்துக்காம போன என்ன பண்றது? கஷ்டப்பட்டு வாங்கிண்டு வந்திருக்கோமே என்ற கவலையில் இருந்தவருக்கு, மகானே ஒரு தீர்வைச் சொல்லி விட்டார்.

பிறகென்னஒரு ஜட்கா வண்டியைப் பிடித்து, காய்கறி மார்க்கெட் போனார். பழநியாண்டியைப் பார்த்தார். விவரம் சொன்னார். “மடத்து சாமீகிட்டேர்ந்து வரீங்களா? என்ற பழநியாண்டி, முருங்கைக்காய்களுக்கு சமமான வாழைக்காய்களைக் கொடுத்தார்.

அவற்றை அதே ஜட்கா வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்து மகா பெரியவா திருச்சந்நிதியில் சேர்த்த பிறகுதான், ராமச்சந்திரன் பெருமூச்சு விட்டார்.