ஒரே சூரியன்தான் உலகில்…
ஒரே சந்திரன்தான் உலகில்…
அதுபோல் ஒரே ஒரு மகா பெரியவாதான்!
காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக விளங்கியவர். நடமாடும் தெய்வம், கலியுக தெய்வம் என்றெல்லாம் போற்றப்படக் கூடியவர்.
இவரைப் போல் ஒருவர் அவதாரம் செய்திருக்க முடியுமா? அல்லது இனிமேல்தான் அவதரிக்க முடியுமா?
எளிமை, தூய்மை, அன்பு, கருணை – இவை அனைத்தும் கொண்டு இவர் வாழ்ந்த தவ வாழ்க்கை பற்றி இன்றைக்குப் படிக்க நேர்ந்தாலும், படிக்கின்றவர்களின் விழிகளில் நீர் கோர்க்கும். உலகத்தோரின் நலனுக்காகத் தன்னையே வருத்திக் கொண்டு மாதவம் மேற்கொண்ட மகான்!
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தன் திருச்சந்நிதி தேடி வந்தவர்களை – இன்றைக்கும் தேடி வருகிறவர்களை தன் அருளாசியின் மூலம் திக்குமுக்காட வைப்பவர்.
இவரை ‘ஆத்ம குரு‘வாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தால், எப்போதும் நம் உடன் இருந்து, காத்து அருள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.
கண்ணதாசன் உட்பட எத்தனையோ நாத்திகர்கள் மகா பெரியவாளால் கவரப்பட்டு, ஆத்திகத்துக்குத் திரும்பி இருக்கிறார்கள்.
உலகம் முழுக்க இருக்கக் கூடிய பிரபலங்கள், மேதைகள், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் மகா பெரியவாளின் தரிசனம் வேண்டியும், அவரது ஆசி வேண்டியும் காஞ்சியை நோக்கிக் படையெடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
தர்மத்தை மட்டும் இந்த மகான் போதிக்கவில்லை. மனிதாபிமானத்தையும், மனித நேயத்தையும் விளக்கிச் சொல்லி, அவற்றுக்குத் தானே ஓர் உதாரணமாக இருந்தார்.
இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை சொல்லலாம்.
காஞ்சி மகா பெரியவாளின் பாக்கெட் சைஸ் திருவுருவப் படம் ஒன்று எப்போதும் நம்மிடம் இருந்தாலே போதும்… எல்லா நேரங்களிலும் அது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக இருந்து நம்மைக் காக்கும்.
பசுக்களைப் பாதுகாப்பது, வேதங்களை வளர்ப்பது, அன்னதானம் செய்வது, நலிந்தோருக்கு நம்மால் ஆன உதவிகள் புரிவது – இவற்றையே தாரக மந்திரமாகக் கொண்டு, மற்றவர்களுக்கும் உபதேசித்தார். இந்த உபதேசங்களைக் கேட்டு அதன்படி வாழ்ந்தவர்கள், பெறற்கரிய ஆனந்தம் அடைந்தார்கள்.
மகா பெரியவாளின் அன்புக்கும், ஆசிக்கும் பாத்திரமானவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். மகா பெரியவா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றி இன்றைக்கும் நூல்கள் கணக்கு வழக்கு இல்லாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன
அவற்றை எல்லாம் படித்தால், சமீப காலத்தில் இப்படி ஒரு மகான் வாழ்ந்திருக்கிறாரா என்று வியந்து பார்க்க நேரிடுகிறது.
சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க வல்ல லட்சுமியை ‘மகா லட்சுமி‘ என்கிறோம்.
சர்வேஸ்வரனான ஈஸ்வரனை ‘மகாதேவன்‘ என்கிறோம்.
விஷ்ணுவை ‘மகாவிஷ்ணு‘ என்கிறோம்.
அதுபோல் இந்த பிரபஞ்சத்தில் ‘பெரியவருக்கு‘ உண்டான லட்சணங்களுடன் வாழ்ந்து காட்டிய ஒருவரை ‘மகா பெரியவா‘ என்று போற்றுகிறோம்.
சர்வேஸ்வரனே மகா பெரியவாளாக இந்த பூலோகத்தில் அவதாரம் செய்திருக்கிறார். சாட்சாத் கயிலைவாசனே மகா பெரியவாளாக இந்த பூலோகத்தில் நடந்திருக்கிறார்.
மகா பெரியவாளின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமான பக்தர்களுள் ஒருவரைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.
சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவர், பழைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவங்குடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். என்றாலும், வாழ்நாளின் பெரும் பகுதி மாயவரத்திலேயே வாழ்ந்து வந்தார் (இன்றைய மயிலாடுதுறை).
சிறு வயதில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். அதன் பின் யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள் என்பவரிடம் தர்க்கம், வேதாந்தம் போன்றவற்றைப் பயின்றார்.
ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணங்கள் பற்றி சொற்பொழிவாற்றுவதில் 1920-ஆம் ஆண்டு முதலே (சிவராமகிருஷ்ண) சாஸ்திரிகள் பிரபலமாக விளங்கினார்.
சாஸ்திரிகள் ஓரிடத்தில் சொற்பொழிவாற்றுகிறார் என்றால், அங்கே அமர்ந்து கேட்கின்ற ரசிகர்கள் ஒரு நிமிடம்கூட வேறு எந்தப் பக்கமும் திரும்ப மாட்டார்கள். எதைப் பற்றியும் சிந்திக்க மாட்டார்கள்.
புராணத்தைப் பற்றி சொற்பொழிவாற்றும்போது அதில் சொல்லப்பட்ட விஷயத்தைத் தாண்டி வேறு எதையும் பிரதானப்படுத்திச் சொல்ல மாட்டார்.
‘ஸ்ரீமத் பாகவதம்‘ பற்றி சாஸ்திரிகள் சொற்பொழிவாற்றினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர் பாகவதம் சொல்ல ஆரம்பித்தால், சாட்சாத் அந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே இவருக்கு முன்னால் அமர்ந்து உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருப்பான் என்று இவரது ரசிகர்கள் பூரித்துச் சொல்வார்கள்.
ஸ்ரீமந் நாராயணனின் மகிமைகளைச் சொல்லக் கூடிய அற்புதமான தொகுப்புதான் ‘ஸ்ரீமத் பாகவதம்‘.
இந்த பாகவதத்தில் பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகளைப் பற்றிப் பலரும் சொற்பொழிவாற்றினாலும், அது சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் சொல்வது போல் வராது என்பது பலரது கருத்து. தான் வாழ்ந்த காலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பாகவத உபன்யாசம்‘ செய்திருக்கிறார். பாரத தேசத்தில் பல மேடைகள் ஏறி இருக்கிறார்.
பாகவத ஸ்லோகங்கள் முழுவதும் இவருக்கு மனப்பாடம். பாகவத சப்தாகம் (ஏழு நாள் சொற்பொழிவு), பாகவத நவாகம் (ஒன்பது நாள் சொற்பொழிவு) என்றெல்லாம் பல ஊர்களில் பேசி இருக்கிறார்.
பாகவதத்தின் ஸ்லோகங்களை அழகாகப் பதம் பிரித்துப் பொருள் சொல்வது இவரது தனிச் சிறப்பு. அவர் திருவாயில் இருந்து வரும் சொற்கள் அத்தனையும் ஆற்றில் இருந்து பிரவாகமாக வரும் வெள்ளம் போல் வந்து கொண்டே இருக்கும்.
காஞ்சி மகா பெரியவாளே இவரைத் தன் சபைக்கு வரவழைத்து ‘பாகவதம்‘ பற்றிப் பேசுமாறு சொல்வாராம். பாகவதத்தின் மூலம் எப்படி வாழ வேண்டும் என்று பிறருக்கு இவர் வழி காட்டுகிறார் என்பதால், ‘ப்ரவசன மார்க்கதர்சி‘ என்ற பட்டத்தை மகா பெரியவாளே சிவராமகிருஷ்ண சாஸ்திரிகளுக்கு வழங்கி இருக்கிறார்.
இத்தனை சிறப்புகள் கொண்ட சாஸ்திரிகள் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக ஒரு நாள் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். ஆனால், அவரது முகம் ஏனோ துவண்டு போயிருந்தது. விழிகளில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருந்தது.
காஞ்சி ஸ்ரீமடத்தின் மேனேஜர் விஸ்வநாத ஐயர்தான் முதலில் சாஸ்திரிகளை நேருக்கு நேராகப் பார்த்தார். இவரது முகத்தில் தென்பட்ட மாற்றங்களைப் பார்த்த விஸ்வநாத ஐயர், ஸ்ரீமடத்துப் பணியாளரும் அன்றைக்கு மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவருமான கண்ணன் என்பவரை அருகே அழைத்தார்.
கண்ணன் காதில் மெதுவாக, “சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் வந்திருக்கார். அவர் மனசுல இருக்கிற கவலை முகத்துல தெரியறது. இதுபோல் அவரை நான் பார்த்ததில்லை. பெரியவாகிட்ட ஏதோ சொல்ல வந்திருக்கார் போலிருக்கு. நீ உடனே பெரியவா தரிசனத்துக்கு அவருக்கு ஏற்பாடு பண்ணு“ என்றார்.
அடுத்த கணம் சிவராமகிருஷ்ண சாஸ்திரிகளைப் பார்த்து, “ஒரு நிமிஷம் இருங்கோ. பெரியவாகிட்ட சொல்லிட்டு வரேன்“ என்று ஓடினார் கண்ணன்.
நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவா ‘விஸ்ராந்தி‘யாக (எந்த விதமான இடையூறும் இல்லாமல் தனியே அமர்ந்திருப்பது) அமர்ந்திருந்தார். ஆங்காங்கே ஒரு சில பக்தர்கள் தரையில் அமர்ந்த வண்ணம், மகா பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தனர்.
பெரியவாளின் அருகே சென்று வணங்கி, அவரை நமஸ்கரித்த கண்ணன் விஷயத்தைச் சொன்னார்.
கண்ணனை அண்ணாந்து பார்த்த பெரியவா, “கார்லதானே சாஸ்திரிகள் வந்திருக்கார்?“ என்று கேட்டார்.
“ஆமாம் பெரியவா.“
“கால்களை அலம்பிண்டு பின்பக்க வாசல் வழியா வரச் சொல்லு“ என்று கண்ணனுக்கு உத்தரவிட்டார். எழுந்தார். நடக்க ஆரம்பித்தார்.
அங்கு காணப்பட்ட ஒரு சில அடியவர்கள் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷத்தை முழங்கினார்கள். நடந்து செல்கிற மகா பெரியவாளைப் பார்த்து நமஸ்கரித்தார்கள்.
விறுவிறுவென்று நடந்த மகா பெரியவா, பின்பக்க வாசல் அருகே காணப்படுகிற ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார்.
சரியாக சாஸ்திரிகளும் கை–கால்கள் அலம்பிக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தார். உடன், கண்ணனும்!
மரத்தடியில் ‘விஸ்ராந்தி‘யாக அமர்ந்திருக்கிற மகா பெரியவாளைப் பார்த்ததும், கண்களில் நீர் மல்க நமஸ்கரித்தார் சாஸ்திரிகள்.
‘என்ன விஷயம்?‘ என்பது போல் சாஸ்திரிகளைப் பரிவுடன் பார்த்தார் பெரியவா.
“பெரியவா… என்னோட மாப்பிள்ளை ஆஸ்பத்திரில இருக்கார். அவரோட ஒடம்பு ரொம்ப மோசமான கண்டிஷன்ல இருக்கு“ என்று தேம்ப ஆரம்பித்தார்.
உடன் இருந்த கண்ணன், சாஸ்திரிகளை மெள்ளத் தேற்றி பெரியவாளிடம் விவரத்தைத் தெளிவாகச் சொல்லுமாறு அறிவுறுத்தினார்.
“மாப்பிள்ளைக்கு நுரையீரல்ல ஏதோ மேஜர் பிரச்னையாம். ஒண்ணு மாத்தி ஒண்ணுனு இருபத்தேழு தடவை எக்ஸ்–ரே எடுத்துப் பாத்துட்டா. எல்லாமே பாதகமான ரிசல்ட்டைக் காண்பிக்கறது. இன்னும் இருபது நாள்தான் மாப்பிள்ளை உயிரோட இருக்க முடியும்னு டாக்டர்ஸ் உறுதியா சொல்லிட்டா. இந்த சோகத்தை என்னால தாங்க முடியல பெரியவா. அவரோட வாழ்க்கையை நீங்கதான் மீட்டுக் குடுக்கணும்“ – சொல்லி முடித்து, இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டார்.
சாஸ்திரிகளை தீர்க்கமாகப் பார்த்தார் பெரியவா. “இருபத்தேழு தடவை மாத்தி மாத்தி எக்ஸ்–ரே எடுத்திருக்கானு சொல்றியே… அந்த எக்ஸ்–ரே ரிசல்ட்தான் பாதகமான முடிவைச் சொல்றதா?“
“ஆமாம் பெரியவா.“
சரியாக ஒரு நிமிடம் மகா பெரியவா மவுனம். பிறகு, “சரி… இப்படியும் இருக்கலாம், இல்லியா? அதாவது, அந்த எக்ஸ்–ரே மெஷினே தப்பு செஞ்சிருக்கலாம், இல்லியா?“
– மகா பெரியவா இப்படிக் கேட்டதும், சாஸ்திரிகள் முகத்தில் ஒரு வியப்பு. ‘பெரியவா சொல்றது மாதிரி இருந்துட்டா நன்னாருக்குமே‘ என்று அவரது மனம் விரும்பியது.
சாஸ்திரிகள் முகத்தைப் பார்த்து பெரியவா மீண்டும் தொடர்ந்தார்: “நீ நிறைய வாசிச்சவன். வேதாந்தம் அதிகம் படிச்சிருக்கே… கஷ்டத்தை ஒரு ஜீவனுக்குக் குடுக்கிற அந்த இறைவன்தான் அதே கஷ்டத்தை அந்த ஜீவராசிகிட்டேர்ந்து எடுக்கறான். சாமான்யனுக்கு இதை எல்லாம் சொல்லிப் புரிய வைக்கணும்னா, எனக்கு ரொம்ப நேரம் ஆகும். ஆனா, உனக்குத்தான் எல்லாம் தெரியுமே…“ என்ற மகா பெரியவா சாஸ்திரிகளுக்குப் பிரசாதம் வழங்கினார்.
எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு இறுக்கமான மனதுடன் அங்கிருந்து புறப்பட்டார் சாஸ்திரிகள்.
பதினைந்து நாட்கள் ஓடின.
அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்துக்கு சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் அழுது கொண்டே ஓடி வந்தார்.
ஸ்ரீமடத்தில் இருக்கின்ற மேனேஜருக்கும், சிப்பந்திகளுக்கும் தூக்கி வாரிப் போட்டது. காரணம் – மாப்பிள்ளைக்கு உடல் நலம் சரியில்லை என்று சொல்லிப் போனார். இப்போது அழுகையுடன் ஓடி வருகிறார் என்றால், மாப்பிள்ளைக்கு ஏதோ ஆகி இருக்கிறது போலிருக்கிறது. அதைப் பெரியவாளிடம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறார் என்று அவரையே பரிதாபத்துடன் பார்த்தனர்.
கண்ணனை அருகே அழைத்தார் மேனேஜர் விஸ்வநாத ஐயர். “கண்ணா… சாஸ்திரிகளைப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. என்ன சோகம்னு தெரியலை. உடனே பெரியவாகிட்ட கூட்டிண்டு போ“ என்றார்.
சாஸ்திரிகளை ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி விட்டு, மகா பெரியவாளிடம் ஓடினார். விவரம் சொன்னார்.
அதே நெல்லி மரத்தடியில் மகா பெரியவா அமர்ந்திருந்தார். விவரம் சொன்னார் கண்ணன்.
மகா பெரியவா புன்னகைத்தார். “சாஸ்திரிகளைக் கூட்டிண்டு வா.“
‘ஏன் பெரியவா புன்னகைக்கிறார்‘ என்கிற காரணம் புரியாமல் சாஸ்திரிகளிடம் ஓடினார் கண்ணன். “வாங்கோ… உங்களுக்கு உத்தரவாயிடுத்து. சீக்கிரம் வாங்கோ.“
கண்ணனையும் தாண்டி சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் ஓடி, பெரியவாளை அடைந்தார்.
பெரும் அழுகையினூடே நமஸ்காரம் செய்தார்.
மீண்டும் ஒரு புன்னகையுடன் சாஸ்திரிகளைப் பார்த்து, ‘என்ன சமாசாரம்?‘ என்று பெரியவா சைகையால் கேட்டார்.
“பெரியவா… ஒங்க வார்த்தைகள் அத்தனையும் சத்தியம். அந்த மெஷின் பொய் ஆகிப் போச்சு. அது சொன்ன ரிசல்ட்டுகளையும் மீறி, மாப்பிள்ளை உயிர் பொழச்சுட்டார். இருவது நாள் டைம் குறிச்ச டாக்டர்ஸ் எல்லாம் ஆச்சரியத்தோட என்னையும் மாப்பிள்ளையையும் பாக்கறா…“ – தன் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்து கொண்டு நடமாடும் தெய்வம் மகா பெரியவாளை வணங்கினார் சாஸ்திரிகள்.
தன் இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வதித்த மகா பெரியவா, “போச்சுடா… மெஷினும் பொய் சொல்ல ஆரம்பிச்சுடுத்தா? இதுவரைக்கும் மனுஷா மட்டும்தான் பொய் சொல்றாள்னு நான் நினைச்சேன்“ என்று ஒரு சலிப்புடன் மகா பெரியவா சொன்னதைக் கேட்டு, அங்கிருந்த அனைவரும் பிரமிப்பு விலகாமல் பார்த்தனர்.
மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த தொண்டர் கண்ணனுக்கு, சாஸ்திரிகள் அன்று கண்ணீரோடு வந்த நிலையும் தெரியும்… இன்று ஆனந்தக் கண்ணீரோடு வந்த நிலையையும் பார்த்தார்.
கண்ணனுக்கு ஏற்பட்ட பரவசம் அடங்கவே இல்லை. ’27 எக்ஸ்–ரேக்கள் சொன்ன ஒட்டுமொத்த ரிசல்ட்டையும் பதினைந்தே நாட்களுக்குள் பொய் என ஆக்கி விட்டாரே இந்த மகான்?‘ என்று விழிகளில் ஈரம் கசிய… தானும் ஒரு நமஸ்காரம் செய்தார் கண்ணன்.
காஞ்சி மகா பெரியவா திருவாயில் இருந்து ஒருவருக்கு வாக்கு வந்து விட்டால், அது தேவ வாக்கு! இறைவனே அருளியது போல். அப்படித்தான் தன் உண்மையான பக்தனும், பெரிய பண்டிதருமான சிவராமகிருஷ்ண சாஸ்திரிகளின் மாப்பிள்ளையை மீட்டுக் கொடுத்தார்.
நூறாண்டுகள் வாழ்ந்து 1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி காஞ்சி ஸ்ரீமடத்திலேயே முக்தி ஆனார் மகா பெரியவா.
தான் முக்தி ஆன இடம் தேடி வருகிற பக்தர்களுக்கு இன்றைக்கும் அவர்களது குறைகளைத் தீர்த்தருளி, ஆசிர்வதித்து வருகிறார் காஞ்சி மகா பெரியவா.
குருவின் குறைவில்லா அருள், நம் வாழ்வை எதிர்பார்க்க முடியாத உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை!