பேரனைக் காப்பாற்றிய பெரியவா

காஞ்சி மகான் அப்போது காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.

மகா பெரியவாளைத் தரிசிக்கத் திரளான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

காஞ்சிபுரத்தில் வசிக்கக் கூடிய வயதான ஒரு மூதாட்டி தன் பேரனுடன் வந்திருந்தாள். பேரனுக்கு இரண்டரை வயது இருக்கலாம். எல்லோரையும் கவர்கிற வண்ணம் அழகாகவும் சமர்த்தாகவும் இருந்தான்.

பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு அவன் நடக்கிற நடை அங்கிருந்த பக்தகோடிகள் அனைவரும் விழிகள் விரியப் பார்த்தார்கள். அந்தக் குழந்தையின் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்து பார்த்தார்கள். முதலில், கவனிப்பதுபிறகு தன் பார்வையைப் பாட்டியின் பக்கம் திருப்பிக் கொள்வது என்று புதியவர்கள் எவரையும் கண்டுகொள்ளாதது மாதிரி இருந்தான் பேரன்.

மகா பெரியவாளைத் தரிசிக்க பாட்டியின் முறை வந்தது.

பாட்டி நமஸ்கரித்து விட்டு, பேரனை நமஸ்கரிக்கச் சொன்னாள். அழகாக நமஸ்கரித்தது குழந்தை.

பாட்டிக்கு விபூதியையும், பேரனுக்குக் கல்கண்டையும் பிரசாதமாகக் கொடுத்தார் மகா பெரியவா. கல்கண்டை வாங்கிய மறுகணம், தன் வாயில் ஒன்றை அடக்கிக் கொண்டு, மற்றவற்றைப் பாட்டியிடம் கொடுத்தான் பேரன்.

உத்தரவு பெற்ற பின் தன் திருச்சந்நிதியில் இருந்து நடந்து சென்ற பாட்டியை ஒரு சொடக்குப் போட்டு அழைத்தார் மகா பெரியவா.

இதைக் கவனியாமல் சென்ற பாட்டியிடம் விவரம் சொல்லி, மீண்டும் அழைத்து வந்தார் ஒரு சிப்பந்தி.

என்னவோ ஏதோவென்று வேகமாக வந்த பாட்டி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார்.

பாட்டியையும் பேரனையும் பார்த்துப் புன்னகைத்த மகா பெரியவா, “பேரனை ஜாக்கிரதையா கூட்டிண்டு போ என்று பாட்டியிடம் நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.

மீண்டும் குழந்தையின் திருக்கரங்களில் ஓரிரு கல்கண்டைத் திணித்தார் மகான்.

என்னது, சந்நிதிலேர்ந்து கௌம்பிப் போன பின் மெனக்கெட்டுக் கூப்பிட்டுச் சொல்கிறாரே என்று யோசித்த பாட்டி பேரனுடன் சாலைக்கு வந்தாள், அவனது கையைப் பிடித்துக் கொண்டே.

சாலைக்கு வந்த மறுவிநாடிவெளிச்சத்தையும் வாகனங்களையும் திடீரென்று பார்த்த பேரன் உற்சாகமாகி, வெடுக்கென்று பாட்டியிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு ரோட்டை கிராஸ் செய்வது போல், இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் தறிகெட்டு ஓட ஆரம்பித்தான். சுற்றிலும் என்ன நடக்கிறது, வாகனங்கள் சாலையில் வருகின்றனவா என்பதைக் கவனிக்கும் வயது இல்லையே அவனுக்கு!

பாட்டி சுதாரித்து பேரனைப் பிடிப்பதற்குள், அந்த நேரம் பார்த்து எங்கோ லோடு இறக்கி விட்டு வந்த ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சாலையை வேகமாகக் கடக்கபாட்டி இந்தப் பக்கம் நின்று கொண்டு தேடுகிறாள்பேரன் எங்கே? அந்தப் பக்கம் கடந்து விட்டானா?

யோசித்த பாட்டி பேரனைக் காண்பதற்கு முன்னாக அதே இடத்தில் மயங்கிச் சரிந்தாள்.

ரோட்டின் அந்தப் பக்கம் போய் நின்ற பேரன், இரண்டாவது முறையாக மகா பெரியவா கொடுத்த கல்கண்டை அப்படியே வாய்க்குள் தள்ளினான்.

எந்த துர்சம்பவமும் நடக்காமல் இருந்ததற்குக் காரணம்பேரன் கையில் வைத்திருந்த கல்கண்டுதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

கூடிய கூட்டம் பாட்டியின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்க… “எம் பேரன் எங்கே? எம் பேரன் எங்கே? என்று கதறஅந்தப் பக்கத்தில் இருந்து பேரனை யாரோ ஒருவர் ஜாக்கிரதையாக அழைத்து வந்தார்.

மகா பெரியவா இருக்கிற திசையைப் பார்த்து அப்படியே ரோட்டில் விழுந்து வணங்கினாள் பாட்டி. ‘பேரனை ஜாக்கிரதையா கூட்டிண்டு போ – என்னே ஒரு ஞான திருஷ்டி!

கடந்து வந்த கல்கண்டு பேரனை அப்படியே வாரியணைத்துக் கட்டிக் கொண்டு அவனுக்கு முத்த மழை பொழிந்தாள் பாட்டி.

கவனமாக அவனது கையைப் பிடித்துக் கொண்டு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.