காஞ்சி மகா பெரியவாளின் துறவு வாழ்க்கையை நேரில் பார்த்தும், எதையும் எதிர்பாராத அவரது கருணை உள்ளத்தைக் கண்டும் பிரமித்தார்கள், இவர் காலத்தில் வாழ்ந்த பிரபலங்கள்.
‘இந்தக் கலிகாலத்தில் இப்படியும் ஒரு மகானா?‘ என்று அவரை நேரில் தரிசிக்க ஆசைப்பட்டார்கள். எளிமையின் வடிவாகத் திகழும் இந்த மகானைத் தரிசித்து அவரது ஆசிகளைப் பெற்றால், அது சாட்சாத் மகேஸ்வரனது ஆசிகளையே பெற்றது போல் என்று நெகிழ்ந்தார்கள்.
அரசியல் வாழ்க்கையில் ஒரு குழப்பமான வேளையில் தவித்தபோதுதான், தேனம்பாக்கம் வந்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றார் இந்திரா காந்தி அம்மையார்.
ராஜாஜி, முன்னாள் முதல்வர்கள் பக்தவத்சலம், கர்ம வீரர் காமராஜர், எம்.ஜி.ஆர்., மற்றும் முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், ராஜீவ் காந்தி – இப்படி மகா பெரியவாளை எந்த விதமான நிர்ப்பந்தமும் இல்லாமல், தாங்களாகவே விருப்பப்பட்டு வந்து தரிசித்த மாநில மற்றும் தேசிய அரசியல்வாதிகளைப் பட்டியலிட ஆரம்பித்தால் வரிசை நீளும்.
அதுபோல் நீதித்துறை, காவல்துறை, நிர்வாகத்துறை என்று அரசு சார்ந்த பணிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்களாக – அணுக்கத் தொண்டர்களாக விளங்கினார்கள்.
இத்தனை பிரபலங்களும் ‘தாங்கள் யார்?‘ என்கிற அடையாளத்தை ஸ்ரீமடத்துக்கு வெளியிலேயே விட்டு விட்டு சாதாரண பக்தரைப் போல் தரிசனத்துக்கு வந்தார்கள். மகானின் திருச்சந்நிதியில் வெகு சாதாரணமாக – அவருக்கு எதிரே தரையில் அமர்ந்து பேசினார்கள்.
தேசியத் தலைவர்களே நேருக்கு நேர் அமர்ந்து பேசுகிற வேளையிலும், எந்த ஒரு உதவியையும் அவர்களிடம் கேட்டதில்லை மகா பெரியவா.
ஸ்ரீமடத்தின் வளர்ச்சிக்கென்று தானாக முன்வந்து எவரிடமும் எந்த ஒரு ஆதாயத்தையும் அடைந்ததில்லை.
அதனால்தான் ‘மகா பெரியவா‘ என்ற அந்தஸ்துடன் இன்றைக்கும் வானளாவ லட்சக்கணக்கானோர் மனதில் இமயம் போல் உயர்ந்து நிற்கிறார்.
ஒருசில ஆன்மிகவாதிகளிடமும், துறவிகளிடமும் குற்றங்குறைகளைக் கண்டு பழக்கப்பட்டவர்கள், மகா பெரியவாளை வியந்து பார்த்தார்கள்.
கங்கை நீரின் தூய்மையைப் போல், கறந்த பசுவின் பாலைப் போல் தூய்மைக்கு இன்னொரு உதாரணம் மகா பெரியவா!
‘இனி, இப்படி ஒருவர் அவதரிப்பாரா?‘ – ஏராளமான ஆன்மிக அன்பர்களின் மனங்களில் இன்றைக்கும் ஏக்கத்துடன் இருக்கக் கூடிய கேள்வி இது!
நீதித்துறையில் இருந்த பலரும் மகா பெரியவாளை சந்திக்கவும், தரிசிக்கவும் வருவது வழக்கம். இதே தொடரில் கும்பகோணம் சப் ஜட்ஜ் கமாலுதீன் என்பவரைப் பற்றி எழுதி இருக்கிறேன். மகா பெரியவாளோடு கமாலுதீனுக்கு ஏற்பட்ட தொடர்பால் வேத பாடசாலைப் பணிகளுக்கு இந்த இஸ்லாமியர் எந்த அளவுக்கு உதவினார் என்பது பற்றி ‘மகா பெரியவா தொகுதி III‘–ல் பார்த்தோம்.
நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் மகா பெரியவாளை சந்திக்க வந்தபோது, இருவரும் பல விஷயங்களைப் பேசினார்கள். இஸ்மாயீல் விடைபெறும்போது அவருக்குப் பிரசாதமாக சந்தனம் தந்தது பலரும் அறிந்த ஒன்று.
அதேபோல் மகா பெரியவாளோடு தொடர்பு கொண்ட இன்னொரு நீதிபதியைப் பற்றித் தற்போது பார்க்க உள்ளோம்.
சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் டி.எஸ். அருணாசலம் (சில காலம் ஆக்டிங் சீஃப் ஜஸ்டிஸாகவும் இருந்தார்).
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் (விசிறி சாமியார்) ஆசிரமத்தில் டிரஸ்டியாகத் தற்போது இருந்து வருகிறார் ஜஸ்டிஸ் அருணாசலம். எண்பதுகளின் துவக்கத்தில் இருக்கிறார்.
பக்திமான். நேர்மையாளர். கறாரானவர்.
காஞ்சி மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்.
காஞ்சி மகான் ஸித்தி ஆனது 1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி. இதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன் தன் குடும்பத்தினருடன் மகா பெரியவாளைத் தரிசிக்கக் காஞ்சிபுரம் சென்றிருக்கிறார் ஜஸ்டிஸ் அருணாசலம்.
மகா பெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்திலேயேதான் இருந்தார். வயோதிகம் காரணமாகவும், உடல் தளர்வு காரணமாகவும் ஸ்ரீமடத்தை விட்டு மகான் எங்கும் செல்வதில்லை.
ஜஸ்டிஸ் சென்றிருந்த அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் கூட்டமான கூட்டம்.
மகா பெரியவாளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு அருகில் சென்று தரிசிக்க எவருக்கும் அனுமதி இல்லை. பிரபலங்கள் வந்தால் – ஸ்ரீமடத்தில் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைத் தரிசித்துப் பேசலாம்.
மகா பெரியவாளை சற்றுத் தொலைவில் இருந்தபடி தரிசனம் செய்து விட்டு நகர்ந்து விட வேண்டும்.
காடு, மலை, கழனிமேடு, பட்டிதொட்டி என எல்லா இடங்களிலும் நடந்து – குப்பத்துவாசிகள், குடிசைவாசிகள், கிராமவாசிகள் என்று எல்லோருக்கும் தரிசனம் தந்து ஆசிர்வதித்த அந்த கருணைக் கடல், ஒரு பிரமாண்ட நாற்காலியில் அசைவற்று அமர்ந்திருப்பதைப் பார்த்த பக்தர்கள், உணர்ச்சிப் பிரவாகமானார்கள்.
உடல் அசையாமல் அவ்வப்போது கைகளை மட்டும் அசைத்துக் கொண்டிருக்கிற மகானைப் பார்த்து, “பெரியவா… பெரியவா…“ என்று மெய்சிலிர்க்க கன்னத்தில் போட்டுக் கொண்டு நகர்ந்த வண்ணம் இருந்தனர்.
மகா பெரியவா மீது கொண்ட பக்தியின் காரணமாக அவரை இன்னும் அருகில் சென்று தரிசிக்க மாட்டோமா என்று ஏங்கினார்கள் சிலர்.
மகா பெரியவாளைப் பார்த்ததும் கண்களில் நீர் தளும்ப உணர்ச்சிவசப்படுகிற பக்தகோடிகளைப் பார்த்த சிப்பந்திகள் அவர்களைக் கட்டுப்படுத்தி, அமைதியாகச் செல்லுமாறு அறிவுறுத்தி வந்தார்கள்.
வசதியான ஒரு மர நாற்காலியில் தன் கால்களை நீட்டியபடி – இரு திருப்பாதங்களின் உள்ளங்கால் பகுதி வெளியே தெரியுமாறு அன்றைய தினம் அமர்ந்திருந்தார் மகா பெரியவா.
அவருக்கு இரு பக்கமும் சிப்பந்திகள் தரையில் அமர்ந்தபடியும், சிலர் கைகளைக் கட்டியவாறு நின்றபடியும் காணப்பட்டார்கள்.
பெரியவாளுக்கு ஒரு சில அடிகள் முன்னால் பெரிய மர பெஞ்ச் ஒன்று போடப்பட்டிருந்தது. தப்பித்தவறிக் கூட இதைத் தாண்டி எவரும் உள்ளே வந்து விடக் கூடாது என்பதில் சிப்பந்திகள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
நாற்காலியில் மகா பெரியவா அமர்ந்திருக்கின்ற இடத்தில் இருந்து சுமார் பத்தடி தொலைவில் நின்றபடி தரிசித்து விட்டு பக்தர்கள் வரிசையில் நகர்ந்து விட வேண்டும். இதுதான் அப்போது இருந்த நடைமுறை.
பிரபலங்கள் என்றாலும், சில வேளைகளில் மகா பெரியவாளுக்கு அருகே வந்து தரிசிக்க, சூழ்நிலைகள் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஜஸ்டிஸ் அருணாசலத்துக்கும் அன்றைய தினம் இதேதான்!
குடும்பத்தோடு சென்றிருந்த ஜஸ்டிஸ் அருணாசலம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீவிஜயேந்திரர், ஸ்ரீஜயேந்திரரைத் தரிசித்து விட்டு, மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.
ஸ்ரீமடத்தின் சிப்பந்திகள் ஜஸ்டிஸின் வருகை குறித்து மகா பெரியவாளுக்குத் தெரிவித்தார்கள். சைகையோடு அனுக்ரஹம் கிடைத்தது. பிரசாதம் தரப்பட்டது. உத்தரவும் ஆகியது.
பிரசாதமும் உத்தரவும் ஆகி விட்டால், அதன் பின் அங்கு இருக்கக் கூடாது என்பது சம்பிரதாயம். எனவே, ஜஸ்டிஸ் அருணாசலம் தன் குடும்பத்தினருடன் ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்.
மடத்தின் வாசலுக்கு வந்தால் கார் தயாராகக் காத்து நிற்கும். ஏறினால், சென்னை.
வாசலை நெருங்குகிற வேளையில் ஓர் அதிசயம் நடந்தது.
மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்தி ஒருவர் ஓடி வந்தார். ஜஸ்டிஸ் அருகே மூச்சிரைக்க நின்றார். “ஒங்களை பெரியவா கூப்பிடறா“ என்றார்.
மகா பெரியவா தரிசனத்துக்கு யார் போனாலும், கொஞ்ச நேரம் அந்த மகானது திருச்சந்நிதியில் அமர்ந்திருக்க மாட்டோமா… அந்தக் கருணைக் கடலைக் கண் கொண்டு தரிசிக்க மாட்டோமா என்று ஏங்குவார்கள். மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள் அனைவரும் இதற்குத்தான் ஆசைப்படுவார்கள். வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்
மகா பெரியவா சந்நிதியில் சற்று நேரம் அமர்ந்து, தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஜஸ்டிஸ் மனதிலும் இருக்கத்தான் செய்தது.
சிப்பந்தி சொன்னதும், பரவசத்தில் நெகிழ்ந்து போனார் ஜஸ்டிஸ். வாசலை நெருங்கப் போனவர் வந்த வழியே மகானின் திருச்சந்நிதி நோக்கி விரைந்தார்.
மகா பெரியவா அமர்ந்திருந்த திருச்சந்நிதியை நோக்கி ஜஸ்டிஸை அழைத்துப் போனார் சிப்பந்தி.
அங்கே மகா பெரியவாளுக்கு அருகே தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த ஸ்ரீவிஜயேந்திரர், ஜஸ்டிஸைப் பார்த்ததும் புன்னகை பூத்தார்.
ஒரே நேரத்தில் ஸ்ரீமடத்து இரு ஆச்சார்யர்களைப் பார்த்ததும், கைகளைக் கூப்பி வணங்கினார் ஜஸ்டிஸ்.
தன் அருகே வருமாறு ஜஸ்டிஸைப் பார்த்து சைகை செய்தார் ஸ்ரீவிஜயேந்திரர்.
பக்தர்கள் நெருங்குவதற்கு அனுமதி இல்லாத மர பெஞ்ச் வரை வந்து விட்ட ஜஸ்டிஸ், ஸ்ரீவிஜயேந்திரரைக் கூப்பிய கரங்களோடு பார்த்தார்.
அங்கேயே அமருமாறு சைகை செய்தார் ஸ்ரீவிஜயேந்திரர்.
சம்மணமிட்டு அமர்ந்தார்.
இவர் அமர்ந்த நிலையில் நேராகப் பார்த்தால், மகா பெரியவா. அதாவது, தன் இரு திருப்பாதங்களை நீட்டிய வண்ணம் ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் மகா பெரியவா.
ஜஸ்டிஸின் இரு கண்களும், மகா பெரியவாளின் இரு திருப்பாதங்களும் ஒரே நேர்க்கோட்டில்!
தன் பார்வையை வேறு எங்கும் திருப்பி விட முடியாதபடி மகா பெரியவாளின் திருப்பாத தரிசனம் அமைந்திருந்தது கண்டு ஜஸ்டிஸ் பரவசப்பட்டார்.
‘இந்தத் திருவடிகளில் அடைக்கலம் புக முடியுமா… இந்த திருவடி தரிசனம் கிடைக்குமா? இந்தத் திருவடிகள் நம்மை ஏற்றுக் கொள்ளுமா?‘
– இதுதானே மகா பெரியவா திருச்சந்நிதியைத் தேடி வருகிற பலருக்கும் இருக்கக் கூடிய ஆசை!
ஜஸ்டிஸுக்குத் தன்னையும் அறியாமல் விழிகள் கலங்க ஆரம்பித்தன.
ஸ்ரீவிஜயேந்திரர் ஜஸ்டிஸிடம் ஏதும் பேசவில்லை.
மகா பெரியவாளின் பார்வை மட்டும் இடமும் வலமுமாகத் திரும்பிக் கொண்டிருந்தது. வருகிற பக்தர்களைப் பார்த்து அவ்வப்போது தன் வலது திருக்கரத்தை மெள்ள உயர்த்தி, ஆசிர்வதித்து அவர்களை நகர்ந்து செல்லும் விதமாக அசைத்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
ஜஸ்டிஸ் இங்கே அமர்ந்து ஐந்து நிமிடம் ஆயிற்று. பத்து நிமிடம் ஆயிற்று. பதினைந்து நிமிடமும் ஆயிற்று.
மகா பெரியவா அப்போது இருந்த நிலையில் பெரும்பாலும் எந்த பிரபலத்தையும் இத்தனை அருகே நெருங்க விட்டதில்லை ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள்.
ஆச்சரியம் ஜஸ்டிஸ் அருணாசலத்துக்கு!
‘இன்றைக்கு இத்தனை யோகமா?‘ என்று வியந்தவருக்கு, அடுத்து வரக் கூடிய நாட்களில் நடக்கப் போகிற நிகழ்வு தெரிய வாய்ப்பில்லைதானே!
பதினைந்து நிமிடங்களைத் தாண்டியும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் – இத்தனை பக்தர்கள் கூட்டத்தில் ஆனந்தமாக அமர்ந்து மகா பெரியவாளை நேருக்கு நேராக தரிசித்துக் கொண்டிருக்கிறோமே என்கிற நெகிழ்ச்சி ஜஸ்டிஸ் அருணாசலத்தின் கண்களை அவ்வப்போது நனைக்கத்தான் செய்தது.
சற்று முன் வந்து அமர்ந்த ஜஸ்டிஸை மகா பெரியவாளுக்கு அறிமுகம் செய்யும் விதமாக மகானை நோக்கி பவ்யமாகத் திரும்பினார் ஸ்ரீவிஜயேந்திரர்.
விஜயேந்திரர் பக்கம் மகா பெரியவா பார்வை திரும்பியது. எதிரில் அமர்ந்திருக்கும் ஜஸ்டிஸை அறிமுகப்படுத்தும் விதமாக, இன்னும் சற்று அருகில் சென்று, “இவர் ஹைகோர்ட்ல ஜஸ்டிஸா இருக்கார். அருணாசலம். ஸ்ரீமடத்துக் கைங்கர்யங்களுக்கு ஒத்தாசையா இருக்கார். இன்னிக்குப் பெரியவா தரிசனத்துக்குக் குடும்பத்தோட வந்திருக்கார்“ என்று ஸ்ரீவிஜயேந்திரர் சொன்னபோது, ‘தெரியும் தெரியும்‘ என்பது போல் தன் தலையை அசைத்தார் பெரியவா. அதன் பின் ஜஸ்டிஸையும் பார்த்து ஆசிர்வதித்தது அந்தப் பரப்பிரம்மம்.
மகா பெரியவாளை ஜஸ்டிஸ் தரிசிக்க வருவது புதிதல்ல. தனக்குப் பத்து வயது இருக்கின்ற காலத்தில் இருந்தே மகா பெரியவாளின் தரிசனத்தை அவ்வப்போது பெற்று வருகிறவர் ஜஸ்டிஸ்.
கண்களை சற்றும் இமைக்காமல் மகா பெரியவாளின் திருவடி தரிசனத்தையும், திருமுக தரிசனத்தையும் பரவசத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தார் ஜஸ்டிஸ்.
பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் முறை வரும்போது மகா பெரியவாளை எட்ட இருந்து தரிசித்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
கால்களை நீட்டிய வண்ணம் மர நாற்காலியில் அமர்ந்திருந்த மகான், அவ்வப்போது பார்வையை இங்கும் அங்கும் திருப்பிக் கொண்டிருந்தார். தன் வலக் கையை இடமும் வலமுமாக அசைத்து பக்தர்களை விரைந்து நகர்ந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆசிகளை வழங்கும் விதமாக தன் வலக் கையை சிரமப்பட்டு உயர்த்தி அருள் புரிந்து கொண்டிருந்தார்.
வருகின்ற பக்தர்களில் எவரேனும் மகா பெரியவாளிடம் ஏதேனும் முக்கியமாகப் பேச வேண்டி சற்று நிதானித்து நின்றால், குறிப்பறிந்து அவர்களைத் தன் அருகே அழைத்தார் விஜயேந்திரர். அருகே வந்ததும், அவர்கள் வந்த விவரம் கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய பதில் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார் விஜயேந்திரர்.
மகா பெரியவாளுக்கு சேவை செய்வது மற்றும் விஜயேந்திரர் இடும் உத்தரவுகளை சிரமேற்கொண்டு செய்வது என்று பத்துக்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தனர்.
சாதாரணமாக மகா பெரியவாளுக்கு வெகு அருகே வி.ஐ.பி–க்கள் எவரேனும் அமர்கிற வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கும்?!
மகா பெரியவா திருமுகத்தில் இருந்து குறைந்தபட்சம் ஒரு புன்னகையோ அல்லது திருவாயில் இருந்து ஆசி வார்த்தைகளையோ எதிர்பார்க்கலாம். இவை இல்லையா? தன் குடும்பத்தின் நலன் குறித்த விசாரிப்புகளையோ, முன்னேற்றம் குறித்த சந்தோஷ வார்த்தைகளையோ எதிர்பார்க்கலாம். எதுவும் இல்லையா… மகா பெரியவா தன் திருக்கரங்களால் ஏதேனும் பிரசாதத்தை – எதுவாக இருந்தாலும் சரி… அவரது திருக்கரங்களால் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படலாம்.
இதுதானே இயல்பு! பெரும்பாலானவர்களுக்கும் இத்தகைய ஆசையும் எதிர்பார்ப்பும்தானே இருக்கும்?!
ஆனால், ஜஸ்டிஸ் அருணாசலம் இங்கே மகா பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்து அரை மணி நேரத்துக்கு மேலும் ஆகி விட்டது. ஆனால், மேலே சொன்ன எவற்றையும் ஜஸ்டிஸ் எதிர்பார்க்கவில்லை.
தவிர, ‘ஜஸ்டிஸின் தரிசனம் முடிந்திருக்கும்‘ என்று நினைத்து, அங்கிருந்து அவரை பத்திரமாக அனுப்புகிற நிலையிலும் எந்த ஒரு நிர்வாகஸ்தரும் இல்லை.
ஸ்ரீவிஜயேந்திரரும் அவ்வப்போது ஜஸ்டிஸ் பக்கம் திரும்பி, அவரை பார்த்துப் புன்னகைக்கிறாரே தவிர, வேறு எந்த ஒரு பேச்சும் இல்லை.
பாரத தேசம் முழுவதும் மூலை முடுக்கு விடாமல் பயணித்து, எண்ணற்ற திருத்தலங்களில், புனித இடங்களில் பட்ட அந்த புண்ணியத் திருப்பாதங்களை – நேருக்கு நேர் – அதுவும் இத்தனை அருகில் அமர்ந்து தரிசிக்கின்ற வாய்ப்பு கிடைக்கும்போது எவரால் அதிலிருந்து வெளிவர முடியும்?
அப்படி இப்படி என்று ஒரு மணி நேரமே ஆகி விட்டது. ஆனால், நேரம் எப்படிப் போனது என்று ஜஸ்டிஸுக்குத் தெரியவில்லை.
திடீரென்று நினைவுக்கு வந்தவர்கள் போல் மகா பெரியவாளுக்கு அருகே இருந்த சிப்பந்திகள், ‘ஜஸ்டிஸ் அருணாசலம் வெகு நேரமாக மகா பெரியவாளுக்கு முன் அமர்ந்திருக்கிறாரே… அவர் புறப்பட வேண்டுமே… அவருக்குப் பிரசாதம் தர வேண்டுமே…‘ என்று பரபரப்பானார்கள்.
அருகில் பழங்கள் நிரம்பிய ஒரு மூங்கில் தட்டை மகா பெரியவாளுக்கு அருகே கொண்டு வந்து வைத்தார் சிப்பந்தி ஒருவர். எதற்கு என்றால், ‘ஜஸ்டிஸ் அருணாசலம் புறப்படப் போகிறார்‘ என்பதைத் தெரிவித்து, உத்தரவு தந்ததும் அவருக்கு மகா பெரியவா திருக்கரங்களால் பிரசாதம் தர வேண்டும் என்பதற்காக! அந்தத் தட்டில் விதம் விதமான பழங்கள் இருந்தன.
தன் இறுதிக் காலத்தில் மகா பெரியவா எந்த அளவுக்கு உடல் தளர்வுற்றிருந்தார் என்பது பக்தகோடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அப்போது பெரியவாளுக்கு வயது நூறு.
நினைத்துப் பாருங்கள். இந்த வயதிலும் மகா பெரியவா சிறிது நேரம் ஒரே ஆசனத்தில் அமர்ந்து வருகின்ற பக்தர்களுக்கு ஆசிகளை வழங்குகின்றார்
என்றால், அது வந்திருக்கக் கூடிய பக்தர்களுக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
வரிசையும் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது.
அருகில் வைக்கப்பட்ட பழத் தட்டில் இருந்து ஏதேனும் ஒரு பழத்தை மகா பெரியவா எடுத்துத் தனக்கு பிரசாதம் வழங்கப் போகிறார் என்பதை ஜஸ்டிஸ் புரிந்து கொண்டு விட்டார்.
அப்போது அவர் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? ‘மூப்பின் காரணமாக மகா பெரியவாளே தட்டுத் தடுமாறி சிரமப்படுகின்ற வேளையில், இந்த மூங்கில் தட்டு இருக்கின்ற பக்கம் தன் கையைக் கொண்டு போய் சிரமப்பட்டு ஒரு பழத்தை எடுத்து, அதைத் தனக்குத் தர வேண்டுமா? மகா பெரியவாளை நாம் சிரமப்படுத்தலாமா? இத்தனை நேரம் தரிசனமே போதும்… இனி எதற்கு கஷ்டப்பட்டு மகா பெரியவா பிரசாதம் தர வேண்டும்?‘ என்று நினைத்துக் கொண்டு ஜஸ்டிஸ் மகா பெரியவாளைப் பார்த்தபோது ஆச்சரியம்.
மகானின் வலக் கரத்தில் ஒரே ஒரு மாதுளம்பழம் இருந்தது.
அந்த மாதுளம்பழத்தை மகா பெரியவா உடனடியாக ஜஸ்டிஸிடம் வழங்கி விடவில்லை.
அதைக் கையில் வைத்திருந்தவர், ஒரு சில விநாடிகளுக்குக் கண்களுக்கு அருகே எடுத்துச் சென்று ஒற்றிக் கொண்டு ஜபித்தார். பிறகு இடது தோள், வலது தோள், தன் வயிற்றுப் பக்கம் என்று மாதுளம்கனியை தேகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் வைத்து எடுத்தார்.
ஜஸ்டிஸை அருகே வருமாறு ஜாடை செய்தார். பரப்பிரம்ம சொரூபத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் ஜஸ்டிஸ்.
இந்த மாதுளங்கனியை அப்படியே அவரது வலக்கையில் போட்டார்.
பழத்தை வாங்கிய ஜஸ்டிஸ், கண்களில் ஒற்றிக் கொண்டார். எப்பேர்ப்பட்ட மகா பிரசாதம் இது. எத்தனை நேரம் அந்த மகான் இதைத் தன்னிடம் வைத்திருந்து ஜபித்துக் கொடுத்திருக்கிறார்!
இத்தனை அனுக்ரஹத்தோடு இந்த மாதுளங்கனி தனக்குத் தரப்பட்டதன் காரணம் அப்போது தெரியவில்லை. மகா பெரியவாளுடனான கடைசி சந்திப்பு இதுதான் என்று ஜஸ்டிஸ் நினைக்கவும் இல்லை.
உடலும் உள்ளமும் நெகிழ… மகா பெரியவாளைப் பார்த்து வணங்கி விட்டு, ஸ்ரீவிஜயேந்திரரிடமும் உத்தரவு பெற்றுக் கொண்டு, நடந்தார்.
ஸ்ரீமடத்தின் வாசலை நோக்கி நடந்து செல்கின்றபோது, மண்டபத்தில் சந்திரமெளீஸ்வரரையும் தரிசித்து விட்டுக் குடும்பத்துடன் புறப்பட்டார் சென்னைக்கு.
இரண்டு வாரங்கள் ஓடி இருக்கும்.
நீதிமன்றப் பணிகளுக்காக கன்யாகுமரிக்குப் பயணம் ஆனார் ஜஸ்டிஸ் அருணாசலம்.
அன்றைய தினம் (8.1.1994) சுசீந்திரத்தில் இருந்தார் ஜஸ்டிஸ்.
அப்போது காஞ்சியில் மகா பெரியவா ஸித்தி (மறைவு) ஆன செய்தி அவரை வந்தடைந்தது.
கலியுகத்தில் வாழ்கின்றவர்கள் எண்ணற்ற நற்பலன்களை அடைய கருணாசமுத்திரமாக வாழ்ந்த மகா பெரியவா, மறைந்த செய்தி ஜஸ்டிஸின் கண்களில் நீரை வரவழைத்தது. உடனே அங்கிருந்து புறப்பட்டு, மகான் மகா சமாதி கொள்வதற்கு முன்னால், காஞ்சிக்குச் சென்று இறுதி தரிசனம் செய்ய எண்ணினார்.
ஆனால், அப்போது இருந்த வசதிகளால் இதைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. திருவனந்தபுரம் போய் விமானம் பிடித்து, சென்னை செல்வது அப்போதைக்கு சாத்தியமில்லாமல் போனது. சாலை மார்க்கமாக நெல்லை, மதுரை வழி பயணித்து காஞ்சியை அடைவதும் அப்போது அத்தனை சுலபமாக இல்லை.
இருந்த இடத்தில் இருந்தபடியே மகானைத் துதித்தார்.
கண்களை மூடி மகா பெரியவாளைப் பிரார்த்தித்தபோதுதான் ஜஸ்டிஸுக்குத் தோன்றியது.
‘நான் ஸித்தி ஆகின்ற வேளையில் நீ சென்னையில் இருக்க மாட்டாய் என்பதற்காகத்தானே மூன்று வாரங்களுக்கு முன் என் சந்நிதியில் உன்னை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமர வைத்து தரிசனம் தந்தேன். திருவடி தரிசனம், திருமுக தரிசனம் எல்லாவற்றையும் அப்போதே பெற்று விட்டாய். இப்போது இந்த ஊரில் நீ வந்த வேலையைப் பார்‘ என்று மகா பெரியவாளே சொல்வது போல் உணர்ந்தார் ஜஸ்டிஸ்.
சுசீந்திரத்தில் இருந்தபடியே அந்த மகானுக்குத் தன் நன்றியையும் நமஸ்காரத்தையும் கண்ணீரால் தெரிவித்தார்.
பத்து வயது சிறுவனாக இருந்த காலம் தொட்டுக் கிடைத்த அந்த தரிசனம், மகா பெரியவா ஸித்தி ஆகின்ற வேளையிலும் தனக்குக் கிடைத்தது அந்த மகானின் பரிபூரண அருளே என்று இன்றைக்கும் நெகிழ்ந்து சொல்கிறார் ஜஸ்டிஸ் அருணாசலம்.