சந்நியாசிகள் பெரும்பாலும் யாத்திரை செய்து கொண்டே இருப்பார்கள். ஓரிடத்தில் வெகு காலத்துக்குத் தங்க மாட்டார்கள். இப்படிப் பல இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆலயங்களைத் தரிசிப்பார்கள். ஊர் மக்களுக்கு பக்தியின் அவசியம் பற்றி எடுத்துரைப்பார்கள். குருவருளோடு திருவருளும் ஊர் ஜனங்களுக்குக் கிடைக்க மகான்கள் ஆசிர்வதிப்பார்கள்.
காஞ்சி மகா பெரியவா துறவறம் ஏற்ற காலத்தில் இருந்து தன் இறுதிக் காலம் வரை (கடைசி பத்து வருடங்கள் மட்டும் காஞ்சி ஸ்ரீமடத்திலேயே தங்கி இருந்தார்) பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கு யாத்திரை சென்றார்.
சென்னை மாநகரத்துக்கு மகா பெரியவா பல முறை வந்திருக்கிறார். சென்னையின் பல ஊர்களில் சந்து பொந்து விடாமல் பெரியவா சுற்றிப் பார்த்த காலமும் உண்டு.
அப்படி சென்னையில் யாத்திரை செல்லும்போது சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள தொன்மையான ஆலயங்களின் சிறப்புகளைப் பற்றி உடன் வரும் உள்ளூர் அன்பர்களிடம் எடுத்துச் சொல்வார். ‘இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆலயத்துக்கு உள்ளூர் மக்களான நீங்கள் அனைவரும் சேர்ந்து திருப்பணிகளை நடத்தி குடமுழுக்கும் செய்ய வேண்டும்‘ என்று விளக்கிச் சொல்வார்.
யாத்திரையின்போது மகா பெரியவா ஊர் மக்களுக்கு இப்படி எடுத்துச் சொல்கின்ற கோயில்கள் பன்னெடுங் காலத்துக்கு முன் வழிபாட்டில் இருந்து, சமீப காலத்தில் வழிபாடுகள் அறவே நின்று போன கோயிலாகவும் இருக்கலாம். அல்லது இப்படி ஒரு தெய்வம் நம்மூரில் குடி கொண்டிருக்கிறது என்கிற தகவலே அந்த ஊர் மக்களுக்குத் தெரியாத கோயிலாகவும் இருக்கலாம்.
முன்னொரு காலத்தில் வழிபாட்டில் இருந்த ஆலயங்களை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வருவது என்பதெல்லாம் மகான்களின் ஞான திருஷ்டியால் விளைவது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை திருநாராயணர் ஆலயத்தை ஸ்ரீமத் ராமானுஜர்தான் கண்டுபிடித்து வழிபாட்டுக் கொண்டு வந்தார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் திருப்போரூர் முருகப் பெருமான் ஆலயத்தை ஸ்ரீசிதம்பர சுவாமிகள் கண்டுபிடித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் மகா பெரியவா ஒரு முறை பக்தகோடிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் தென்பட்ட மலை ஒன்றை அண்ணாந்து பார்த்திருக்கிறார்.
கண்களை மூடி ஒரு சில விநாடிகளுக்கு அப்படியே நின்றிருக்கிறார். உடன் வந்த உள்ளூர் பக்தகோடிகளும் என்ன ஏதென்று புரியாமல் அந்த மலையையே பார்த்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களை நோக்கி, “இந்த மலைக்கு மேலே முருகப் பெருமான் குடி கொண்டிருக்கிறான். நீங்கள் அனைவரும் அந்த முருகனை வணங்க வேண்டும். மிகப் பெரிய ஆலயமாக ஒரு காலத்தில் இது வரும்“ என்றாராம்.
மகா பெரியவா குரோம்பேட்டையில் அடையாளம் காட்டிய அந்த மலைதான் – இன்றைக்கு ‘குமரன்குன்றம்‘ என்று அழைக்கப்படும் அற்புதமான முருகப் பெருமான் கோயில்.
யாத்திரையின்போது மகா பெரியவா ஊர் மக்களுக்கு இப்படி எடுத்துச் சொல்கின்ற கோயில்கள் பன்னெடுங் காலத்துக்கு முன் வழிபாட்டில் இருந்து, சமீப காலத்தில் வழிபாடுகள் அறவே நின்று போன கோயிலாகவும் இருக்கலாம். அல்லது இப்படி ஒரு தெய்வம் நம்மூரில் குடி கொண்டிருக்கிறது என்கிற தகவலே அந்த ஊர் மக்களுக்குத் தெரியாத கோயிலாகவும் இருக்கலாம்.
முன்னொரு காலத்தில் வழிபாட்டில் இருந்த ஆலயங்களை மீண்டும் வழிபாட்டுக்குக் கொண்டு வருவது என்பதெல்லாம் மகான்களின் ஞான திருஷ்டியால் விளைவது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை திருநாராயணர் ஆலயத்தை ஸ்ரீமத் ராமானுஜர்தான் கண்டுபிடித்து வழிபாட்டுக் கொண்டு வந்தார்.
பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் திருப்போரூர் முருகப் பெருமான் ஆலயத்தை ஸ்ரீசிதம்பர சுவாமிகள் கண்டுபிடித்தார்.
சென்னை குரோம்பேட்டையில் மகா பெரியவா ஒரு முறை பக்தகோடிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் தென்பட்ட மலை ஒன்றை அண்ணாந்து பார்த்திருக்கிறார்.
கண்களை மூடி ஒரு சில விநாடிகளுக்கு அப்படியே நின்றிருக்கிறார். உடன் வந்த உள்ளூர் பக்தகோடிகளும் என்ன ஏதென்று புரியாமல் அந்த மலையையே பார்த்திருக்கிறார்கள்.
அப்போது அவர்களை நோக்கி, “இந்த மலைக்கு மேலே முருகப் பெருமான் குடி கொண்டிருக்கிறான். நீங்கள் அனைவரும் அந்த முருகனை வணங்க வேண்டும். மிகப் பெரிய ஆலயமாக ஒரு காலத்தில் இது வரும்“ என்றாராம்.
மகா பெரியவா குரோம்பேட்டையில் அடையாளம் காட்டிய அந்த மலைதான் – இன்றைக்கு ‘குமரன்குன்றம்‘ என்று அழைக்கப்படும் அற்புதமான முருகப் பெருமான் கோயில். பிரமாண்டமாக அமைந்திருக்கிற இந்த ஆலயம், குரோம்பேட்டைக்கே ஒரு பெரும் அடையாளம்.
சென்னை நங்கநல்லூரில் மகா பெரியவா ஒரு முறை யாத்திரை சென்று கொண்டிருந்தபோது ஊரில் மையத்தில் அமைந்துள்ள பாழடைந்த திருக்குளம் ஒன்றை உடன் வந்த உள்ளூர் பக்தர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.
ஆச்சரியத்துடன் அந்தத் திருக்குளத்தைப் பார்த்தார்கள். “இந்தக் குளம் ரொம்ப நாளாவே இங்கே இருக்கு பெரியவா. அவ்வளவா சுத்தம் இல்லை“ என்றனர்.
உள்ளூர் அன்பர்களைப் பார்த்து, “இந்தக் குளத்தில் ஒரு சிவலிங்கம் புதைந்திருக்கிறது. அதை எடுத்து இங்கே ஒரு கோயில் கட்டி நீங்கள் அனைவரும் வழிபாட்டைத் துவக்குங்கள்“ என்று உத்தரவிட்டிருக்கிறார் மகா பெரியவா.
அதன்படி, குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட லிங்கம் பிரதிஷ்டை ஆன திருக்கோயில்தான் – இன்றைக்கு நங்கநல்லூரில் அருளக் கூடிய ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயம்!
இதுபோல் சென்னையின் பல இடங்களில் புராதனமான ஆலயங்கள் இருப்பதை, தான் யாத்திரை சென்ற காலங்களில் ஞான திருஷ்டி மூலம் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார் மகா பெரியவா.
அப்படிப்பட்ட அற்புதமான – பழைமையான ஓர் ஆலயத்தை மகா பெரியவா எப்படிக் கண்டுபிடித்து நமக்கு வழங்கி இருக்கிறார் என்பதைத்தான் தற்போது பார்க்க உள்ளோம்.
சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்கின்ற பிரதான சாலையில் கேம்ப் ரோடு சந்திப்பை அடுத்து மாடம்பாக்கம் செல்கின்ற ஒரு சாலை வலப் பக்கம் பிரிந்து செல்லும். இந்தப் பிரிவில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு சென்றால், மாடம்பாக்கம் வந்து விடும். தாம்பரத்தில் இருந்து மாடம்பாக்கம் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த மாடம்பாக்கத்தில் அமைந்திருக்கிற அருள்மிகு தேனுபுரீஸ்வரர் ஆலயம் இன்றைக்கு வெகு பிரசித்தம். இங்கு அம்பாள் திருநாமம் – தேனுகாம்பாள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை உடைய ஆலயம் இது என்று தேனுபுரீஸ்வரர் ஆலயத்தைத் தொல்லியல் துறையினர் கணித்திருக்கிறார்கள்.
ராமாயண காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த முனிவரான கபிலர், தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, இங்கே இறைவனை வணங்கினார். அவரே தேனுபுரீஸ்வரர். எனவே இந்த மாடம்பாக்கம் ஆலயத்தில் அவர் ஏற்படுத்திய தீர்த்தம் ‘கபில தீர்த்தம்‘ என்று வழங்கப்படுகிறது.
கோயிலின் முன்மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் புடைப்புச் சிற்பமாக சரபேஸ்வரர் காணப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ராகுகால வேளையில் இந்த சரபேஸ்வரருக்கு சிறப்பான வழிபாடு நடைபெறுகிறது.
தற்போது பங்குனி உத்தரத்தின்போது தெப்பத் திருவிழா, சித்திரை மாதம் பிரம்மோத்ஸவம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் என்று எண்ணற்ற திருவிழாக்கள் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடக்கின்றன. திரளான பக்தர்கள் நித்தமும் வந்து வணங்குகிறார்கள்.
ஆனால், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்வரை தேனுபுரீஸ்வரர் என்கிற இறைவன் இந்த மாடம்பாக்கத்தில் குடி கொண்டிருக்கிறார் என்பது பெரும்பாலான உள்ளூர்க்காரர்களுக்கே தெரியாது. தங்கள் ஊரில் ஏதோ ஒரு பாழடைந்த கோயில் இருக்கிறது என்பதும், ஒரு திருக்குளம் இருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, அதன் சிறப்புகள் தெரியாது. அவ்வளவு ஏன், இந்த இறைவனின் திருநாமம் தேனுபுரீஸ்வரர் என்பதே தெரியாது.
புராணத்திலும் வரலாற்றிலும் இத்தனை சிறப்புகள் கொண்ட மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் நடமாடும் தெய்வம் மகா பெரியவா அனுக்ரஹத்தால் வெளிப்பட்டது.
நாகராஜன் என்பவர், மகா பெரியவா பக்தர். 1976-ஆம் வருடம் தாம்பரத்தை அடுத்த சேலையூரில் வீடு கட்டிக் கொண்டு குடி வந்தார்.
இன்றைக்கு சேலையூர் என்பது மிகப் பெரிய ஊர். அந்த நாளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் காணப்படும். இது போன்ற இடங்களில் வீடு கட்டிக் கொண்டு குடி போவதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்.
மகா பெரியவா பக்தர் என்பதால், ‘எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார்‘ என்ற திடமான நம்பிக்கையுடன் வீட்டைக் கட்டி முடித்தார்.
கிரஹப் பிரவேசத்துக்கான நாள் தீர்மானம் ஆனவுடன் இந்தத் தகவலை மகானிடம் சொல்லி விட்டு, அவரது ஆசிகளைப் பெற்று வரலாம் என்று காஞ்சிபுரம் பயணப்பட்டார் நாகராஜன்.
காஞ்சியை அடைந்து, மகானை நமஸ்காரம் செய்து வணங்கினார். தன் வீடு கிரஹப் பிரவேசம் குறித்தான தகவலைச் சொன்னார்.
ஆசிகள் வழங்கினார் மகா பெரியவா. பிறகு நாகராஜனைப் பார்த்து, “நீ வீடு கட்டிண்டு குடி போகப் போற ஊர்ப் பக்கம் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிகளோட அதிஷ்டானம் இருக்கே… அதை தரிசனம் பண்ணி இருக்கியோ?“ என்று கேட்டார்.
“இல்லை பெரியவா“ என்றார் நாகராஜன்.
“சரி. ஒரு தடவை அந்த அதிர்ஷ்டானத்தை தரிசனம் பண்ணு. தவிர, அங்கேயே பக்கத்துல மாடம்பாக்கத்துல ஒரு புராதனமான சிவன் கோயில் ஒண்ணு இருக்கு. அந்த எடம் எங்கே இருக்குன்னு தேடிப் பாரு. அந்தக் கோயில்ல இருக்கிற சிவனுக்கு ஒரு வேளை பூஜையாவது நடக்கிறதானு விசாரி. அதன் பின்னால எங்கிட்ட வந்து தகவல் சொல்லு“ என்றார் மகா பெரியவா.
“அப்படியே ஆகட்டும் பெரியவா“ என்று மகா பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார். பிரசாதம் வாங்கிக் கொண்டு, சேலையூர் திரும்பினார் நாகராஜன்.
ஒரு சில வாரங்கள் ஆன பின் தேனுபுரீஸ்வரர் கோயில் அமைந்திருக்கக் கூடிய இடம் வழியே சைக்கிளில் பயணித்தார் நாகராஜன். வழியில் தென்பட்ட திருக்குளத்தைப் பார்த்தவுடன், மகா பெரியவா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.
சைக்கிளை ஓட்டியபடியே குளத்தின் பக்கம் பார்வையை ஓட்டினார். அதன் அருகே பாழடைந்த ஒரு கோபுரமும் தென்பட்டது. நாகராஜன் முகத்தில் ஒரு பரவசம். ‘அப்படி என்றால், மகா பெரியவா சொன்ன மாடம்பாக்கம் சிவன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் போலிருக்கிறது‘ என்று யூகித்தவராக சைக்கிளில் இருந்து இறங்கினார். ஓரமாக நிறுத்தினார்.
கோயில் இருந்த இடத்திலும், அதைச் சுற்றிலும் செடி, கொடிகள் மண்டி புதர்க் காடாகக் காட்சி அளித்தது. உள்ளே நுழைவதற்கான வழி சரியாகத் தென்படவில்லை.
குழம்பிய நிலையில் இருந்த நாகராஜனின் கண்களுக்கு கோயிலின் அருகே ஒரு சாதாரணமான வீடு இருப்பது தெரிந்தது. ‘சரி, அந்த வீட்டில் விசாரித்துப் பார்க்கலாம்‘ என்று வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தார் நாகராஜன்.
நெற்றி நிறைய திருநீற்றுடன் சிவப் பழமாக ஒருவர் வந்தார். “வாங்கோ… தேனுபுரீஸ்வரரை தரிசனம் பண்ண வந்துருக்கேளா?“ என்று கேட்டார்.
நாகராஜனுக்கு இன்ப அதிர்ச்சி. “ஆமாம்… நீங்க?“
“நான்தான் இந்தக் கோயில் குருக்கள். முப்பது வருஷமா பூஜை பண்ணிண்டு வரேன்.“
“முப்பது வருஷமா பூஜை பண்றேளா? பாழடைஞ்சு போயிருக்கே இந்த இடம்… யார் கோயிலுக்கு வர்றா? புதர் மண்டிக் கிடக்கறதைப் பார்த்தா எத்தனை பாம்புங்க உள்ளே இருக்குமோனு பயமா இருக்கே?“
“கோயிலுக்கு யார் வர்றா, யார் வரலைங்கறது முக்கியமில்லை. நாம தெனமும் சாப்பிடறோம், இல்லியா? அதுபோல் ஸ்வாமியும் அம்பாளும் சாப்பிட வேண்டாமா? அவாளுக்கு ஏதாவது தயார் பண்ணி நிவேத்தியம் செஞ்சாகணும்“ என்று அந்தக் குருக்கள் உணர்வுபூர்வமாகச் சொன்னபோது, நாகராஜனின் கண்கள் கலங்கியே விட்டன.
குருக்களைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு, தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “யாருமே கோயிலுக்கு வரதில்லே. பின்னே எப்படி உங்களுக்கு வருமானம்? நிவேத்தியத்துக்கு என்ன பண்றேள்?“ என்று இழுத்தபடியே குருக்களின் முகம் பார்த்தார் நாகராஜன்.
“நாம ஒரு வேளை பட்டினியா இருந்தா எப்படித் துடிச்சுப் போறோம்… அதுபோலதான் இந்த ஸ்வாமியும். எப்படியும் நாங்க – அதாவது எங்க ஆத்துல (வீட்டுல) இருக்கிறவா தினமும் சாப்பிடணும் இல்லியா? அப்படி எங்களோட சாப்பாட்டுக்குன்னு நாங்க சமைக்கிற அன்னத்தை (வெள்ளை சாதம்) சாப்பிடறதுக்கு முன்னாடி, கோயிலுக்குள்ளே இருக்கிற தேனுபுரீஸ்வரருக்கும் தேனுகாம்பாளுக்கும் கொண்டு போய் நிவேத்தியம் பண்ணுவேன்.
அதன் பிறகு இந்த சாதத்தையே பிரசாதமா நினைச்சுண்டு நாங்க சாப்பிடுவோம்“ என்று நெகிழ்வுடன் சொன்னார் குருக்கள்.
நாகராஜனின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. அந்தக் குருக்களை இரு கரம் உயர்த்திக் கும்பிட்டார்.
குருக்கள் தொடர்ந்து சொன்னார்: “இந்த ஈஸ்வரன் இருக்காரே… ரொம்ப சாந்நித்தியமானவர். சுயம்பு லிங்கம். எப்ப – யாரால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளணும்னு நினைக்கிறாரோ, அந்த வேளையில் நிச்சயம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். அதுவும் நம்ம கையில இல்லை. பகவானுக்கு சேவை பண்றது மட்டும்தான் நம்மோட வேலை.“
“அதைத்தான் சொல்ல வந்தேன். பகவான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய வேளைன்னு சொன்னேளே… எல்லாமே இப்ப கனிஞ்சிருக்கு“ என்ற நாகராஜன், மகா பெரியவா தனக்கு இட்ட உத்தரவு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
‘மகா பெரியவா‘ என்கிற பெயரைக் கேட்டதும், அந்தக் குருக்கள் மெய் சிலிர்த்துப் போனார். மகானை மனசுக்குள் நினைத்து இரு கரம் உயர்த்தி காஞ்சி இருக்கும் திசை நோக்கி வணங்கினார். பிறகு, “பார்த்தேளா… இந்த சர்வேஸ்வரனுக்கு நித்தமும் பூஜை நடக்கணும்னு காஞ்சிபுரத்துல இருக்கிற அந்த சர்வேஸ்வரன் உங்ககிட்ட சொல்லி அனுப்பி இருக்கார். தேனுபுரீஸ்வரர் உலகத்துக்குத் தெரிய வேண்டிய வேளை வந்துடுத்து, பார்த்தேளா…“ என்று நெகிழ்வுடன் சொன்னவர், “வாங்கோ… கோயிலுக்குள்ளே கூட்டிண்டு போறேன். உள்ளே ஸ்வாமியை தரிசனம் பண்ணலாம்“ என்று நாகராஜனை அன்போடு அழைத்தார்.
முட்புதர் காட்டுக்குள் குடி கொண்டிருக்கிற தேனுபுரீஸ்வரரை நித்தமும் பூஜிக்கக் கூடிய அந்தக் குருக்கள், மிகவும் பழக்கப்பட்டவர் போல் செடி– கொடிகளை விலக்கிக் கொண்டு முன்னால் நடக்க… அவரைத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார் நாகராஜன்.
ஆனால், குருக்கள் வேகத்துக்கு நாகராஜனால் ஈடு கொடுக்க முடியவில்லை. காரணம் – ஆலய வளாகம் முழுக்க செடிகளும், கொடிகளும் அடர்ந்து படர்ந்திருந்தன. சர்ப்பங்களும் இதர துஷ்ட ஜந்துக்களும் தாராளமாக அங்கே வாசம் செய்து கொண்டிருந்தன.
ரொம்ப கஷ்டப்பட்டு குருக்கள் பின்னால் நடந்து கொண்டிருந்தார் நாகராஜன்.
சூரியன் மறையத் தொடங்கி, இருள் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளை அது… ஆலயத்துள் எதுவும் சரியாகக் கண்களுக்குப் புலப்படவில்லை.
ஆலயப் பகுதியில் மின்விளக்குகள் காணப்படவில்லை. எனவே, கையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு ‘நமசிவாய‘ நாமத்தைச் சொல்லியபடி அந்த ஒளியில் கருவறை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார் குருக்கள்.
முன்னால் சென்று கொண்டிருக்கும் குருக்களிடம் நாகராஜன் கேட்டார்: “கரண்ட் கனெக்ஷன் இந்தக் கோயிலுக்குக் கிடையாதா?“
“இருந்துது ஸ்வாமீ… ஈஸ்வரன் சாப்பாட்டுக்கே வழி இல்லாதப்ப கரண்ட் பில் கட்டறதுக்கு எங்கேர்ந்து பணம் வரும்? கரண்ட் பில் கட்டாததுனால ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி ஃபீஸ் புடுங்கிண்டு போயிட்டா“ என்ற குருக்கள் தேனுபுரீஸ்வரர் முன்னால் வந்து விட்டார்.
இறைவனுக்கும் அடுத்து இறைவியின் சந்நிதிக்கும் சென்று ஆரத்தி காண்பித்து, பிரசாதம் கொடுத்தார் குருக்கள்.
ஆலய சந்நிதிகளும் மண்டபங்களும் பலம் இழந்து காணப்பட்டன.
பிராகாரம் முழுக்க பெயர் தெரியாத என்னென்னவோ செடிகள் ஆளுயுரத்துக்கு மேல் வளர்ந்திருந்தன.
தரிசனம் முடிந்து குருக்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி சொல்லி விட்டு, சேலையூரில் தன் வீட்டுக்குத் திரும்பினார் நாகராஜன்.
அடுத்த நாளே காஞ்சிபுரத்துக்குப் பயணமானார் நாகராஜன். மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குத் தான் சென்று வந்த விவரத்தையும், தற்போது கோயில் இருக்கும் பரிதாபமான நிலை குறித்தும் மகா பெரியவாளிடம் விரிவாக எடுத்துரைத்தார் நாகராஜன்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மகா பெரியவா, “எப்பேர்ப்பட்ட கோயில் அது, தெரியுமா? எத்தனை பழசு… சாப்பாட்டுக்கே கஷ்டப்படறார்“ என்று சொல்லி விட்டு, தேனுபுரீஸ்வரர் மற்றும் தேனுகாம்பாள் மகிமை பற்றி எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தார் நாகராஜன். பிறகு, “நான் சொல்ற ஒரு காரியத்தைப் பண்ணுவியா?“ என்று நாகராஜனைப் பார்த்துக் கேட்டார்.
“சொல்லுங்கோ, பெரியவா. ஒங்க உத்தரவுக்காகக் காத்துண்டு இருக்கேன்“ என்றார்.
“இதுபோல இருக்கிற பழைய கோயில்களை எல்லாம் பக்தாளான நாமதான் மெள்ளத் தூக்கி விடணும். ஒரு ஊர் நன்னா இருக்கணும்னா அந்த ஊர்ல இருக்கிற பகவானுக்கு நாம சாப்பாடு (நிவேதனம்) போடணும். அப்பதான் அங்கே வசிக்கிறவா நன்னா இருக்க முடியும்.
நீ என்ன பண்றே… மொதல்ல பக்தாள்லாம் பயம் இல்லாம கோயிலுக்கு வர்றதுக்கு உண்டான வழியை மாடம்பாக்கம் கோயில்ல பண்ணு. உனக்குத் தெரிஞ்ச உன் சிநேகிதாள்லாம் கூப்ட்டுக்கோ. ஒரே செடியும் கொடியும் புதர் போல மண்டிக் கிடந்தா, விளக்கேத்தறதுக்குக்கூட யாரும் உள்ளே வர மாட்டா. பாம்பு இருக்குமோ, வேற என்னென்ன இருக்குமோனு பயப்படுவா. மொத வேலையா செடி, கொடிகளை அகற்றி, ஆலயத்தைச் சுத்தம் பண்ணுங்கோ“ என்றார்.
அதை அப்படியே தெய்வத்தின் கட்டளையாய் ஏற்றுக் கொண்ட நாகராஜன், முதல் கட்டமாகத் தன் நண்பர்கள் சிலரையும் இந்தப் பணியில் இணைத்துக் கொண்டார். கடப்பாரை, மண்வெட்டி சகிதம் சென்று செடி, கொடிகளை அகற்றி ஆலயத்தைச் செப்பனிடும் பணிகள் ஆரம்பமாயின. கோயில் குருக்களுக்கு ஏக சந்தோஷம்.
அருள் மனம் கொண்ட ஆன்மிக அன்பர்கள் சிலரிடம் பணம் வசூலித்து, ஆலயத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் புதுப்பித்தார் நாகராஜன்.
ஆலயத்துக்கு அடிக்கடி சென்று அங்கு ஆற்ற வேண்டிய பணிகளை அவ்வப்போது கவனித்து வந்தார் நாகராஜன். ஆலயம் பற்றின ‘அப்டேட்‘ தகவல்களை அவ்வப்போது காஞ்சிபுரம் சென்று மகா பெரியவாளிடம் சொல்லி வந்தார்.
இதற்கிடையில் இந்த ஆலயத்தைச் சுற்றி புதுப் புது காலனிகளும் முளைக்க ஆரம்பித்தன. அதுவரை வெறும் பொட்டல்காடாக இருந்த தேனுபுரீஸ்வரர் ஆலயம், ஒரு சில பக்தர்கள் வந்து வணங்கிச் செல்லக் கூடிய இடமாக மாறத் தொடங்கியது. மிகச் சரியாக இதே காலத்தில் அப்போது வந்த மகா சிவராத்திரி, நான்கு கால பூஜையாக விமரிசையாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு மகா பெரியவா உத்தரவின்பேரில் மாடம்பாக்கம் ஆலயப் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்தார் நாகராஜன். விசேஷ நாட்களில் கோயில் குருக்களோடு இணைந்து அபிஷேகம் மற்றும் இன்ன பிற பணிகளுக்கு அவருக்கு உதவியாக இருந்தார். பக்தர்களும் மெள்ள வர ஆரம்பித்தார்கள். பிரதோஷம் போன்ற வைபவங்கள் விஸ்வரூபம் எடுத்தன.
ஆன்மிகப் பிரபலங்கள் கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஸ்ரீரங்கராஜன் சுவாமிகள் போன்றோரை ஆலயத்துக்கு வரவழைத்து, கோயிலின் மகிமையைப் பற்றியும் புராதனம் பற்றியும் சொற்பொழிவாற்ற வைத்தார்கள்.
இதில் ரங்கராஜன் சுவாமிகள் என்பவர், ஸ்ரீஹயக்ரீவ உபாசகர். அவருக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது. ஆனால், அவர் ஆலயத்துக்கு வந்திருந்து மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு சிற்பத்தையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து அதன் பெயர் மற்றும் சிறப்புகளைப் பற்றி பலரும் அறியும்படி தெரியப்படுத்தினார்.
இன்றைக்கு மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகால வேளையில் தூணில் இருக்கும் சரபேஸ்வர மூர்த்திக்கு விசேஷமான வழிபாடுகள் நடக்கின்றன என்றால், அதற்கு இந்த ரங்கராஜன் சுவாமிகளே காரணம் என்று குறிப்பிடுகிறார்கள் ஆலய அன்பர்கள்.
ரங்கராஜன் சுவாமிகள்தான் ஆலய மண்டபத் தூணில் அமைந்திருக்கிற இந்த சரபேஸ்வர மூர்த்தியைத் தொட்டுப் பார்த்து, “இவர் விசேஷமானவர். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் அதர்வண வேதத்தில் உள்ள மூல மந்திரத்தை ஜபம் செய்தால், பரமேஸ்வரன் ஆகப்பட்டவன் எல்லாவற்றையும் சம்பந்தப்பட்டவருக்கு அள்ளிக் கொடுப்பான்“ என்று சொன்னார். இந்த சரபேஸ்வர மூர்த்தி வழிபாட்டையும் முதன் முதலாகத் துவக்கி வைத்தார் ரங்கராஜன் சுவாமிகள்!
தொல்லியல் துறையைச் சேர்ந்தவரும், மகா பெரியவாளின் அத்யந்த பக்தருமான சத்தியமூர்த்தி ஆலயத்துக்கு வந்து இங்குள்ள சிற்பங்களை ஆராய்ந்து, இதன் பழமை பற்றி வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.
இன்றைக்குத் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ தினம் என்றால், நிற்கக் கூட இடமில்லாமல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஞாயிற்றுக்கிழமை என்றால், சரபேஸ்வரருக்கு நடக்கின்ற வழிபாட்டில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.
மாடம்பாக்கம் என்றாலே தேனுபுரீஸ்வரர்தான் அனைவரின் நினைவுக்கும் வருகிறார். ஆலயத்தை மையமாக வைத்து எத்தனையோ குடியிருப்புகள்; வியாபாரங்கள்.
எல்லாவற்றுக்கும் காரணம் – நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவாதான்!
அவரது ஞானப் பார்வையால்தான் இன்றைக்கு இந்த ஆலயம் இத்தனை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்று சொன்னால், அது சத்தியமான உண்மை!