வடசென்னைப் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூருக்கு அருகே இருக்கிறது காட்டுப்பள்ளி என்கிற கிராமம்.
மகா பெரியவா இந்தக் கிராமத்துக்கு ஒரு முறை யாத்திரை வந்தார்.
‘காட்டுப்பள்ளி‘யைக் கிராமம் என்று சொல்வதைவிட தீவு என்று சொல்லலாம். ஆம்! ஊரைச் சுற்றிலும் கடல்தான். இந்த ஊருக்கு சாலை வழியே வர முடியாது. படகுகள் மூலம்தான் வர வேண்டும்.
காட்டுப்பள்ளி கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மகா பெரியவா ஒரு முறை இங்கு வந்தார். அழகு ததும்பக் கூடிய இந்த ஊரில் தங்க வேண்டும்… இயற்கையின் கொடைகளை ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
மகா பெரியவா ஆசைப்பட்டபடி 1965-ல் இங்கு வந்தார். ஒரு நாள், ரெண்டு நாள் அல்ல. நான்கு மாதங்கள் தொடர்ந்து இங்கு தங்கினார். ‘சாதுர்மாஸ்ய காலம்‘ என்று சொல்லப்படக் கூடிய சந்நியாசிகள் கடைப்பிடிக்கும் விரத காலத்தைக் காட்டுப்பள்ளியில் மேற்கொண்டார்.
நித்தமும் இங்கே சந்திரமவுளீஸ்வரர் பூஜை, பக்தர்களுக்குத் தரிசனம் தருதல், அன்னதானம் என்று எல்லாமே பிரமாதமாக நடந்தது.
எந்த ஒரு பொருள் என்றாலும், படகு மூலம்தான் காட்டுப்பள்ளிக்குள் கொண்டு வர வேண்டும். விறகா, அரிசியா, பருப்பா, வஸ்திரமா… எல்லாமே அருகில் இருக்கிற ஊர்களில் வாங்கப்பட்டு, படகில் ஏற்றப்பட்டு வந்து சேர்ந்தன. இத்தகைய ஒரு கிராமத்தில் நான்கு மாத காலம் மகா பெரியவா இருந்தார் என்றால், யோசித்துப் பாருங்கள்!
நகர்ப்புற நாகரிகங்களின் பாதிப்பு இங்கு இல்லை. இயற்கை அன்னை வழங்கிய அற்புதமான வளங்கள்.
சென்னை நகரத்தில் மயிலாப்பூர், மாம்பலம் என்று மகா பெரியவா எங்கு சென்றாலும், பக்தர்கள் கூட்டம் மகானை சூழ்ந்து விடும். ஆனால், காட்டுப்பள்ளியில் அது போன்ற காட்சியைப் பார்க்க முடியாது.
எந்த வசதியும் இல்லாத இந்தக் கிராமத்தில் ‘மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்‘ என்கிற வேட்கை இல்லாதவர்கள் தவிர, வேறு எவரையும் பார்க்க முடியாது. படகுகள் மூலம் எவரெவர்கள் ஊருக்கு வந்திருக்கிறார்களோ அவர்களைத் தவிர, ஒருவரையும் பார்க்க முடியாது.
காட்டுப்பள்ளியில் மகா பெரியவா ஏகாந்தமாக இருந்தார். நினைத்தபோதெல்லாம் தன் முகாமை விட்டு வெளியே வந்து இந்தக் கிராமத்தில் உலாத்துவார்.
தற்போது இந்தக் கிராமம் மெள்ள வளர்ச்சி அடைந்து கப்பல்கள் கட்டும் மிகப் பெரிய துறைமுகம் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
போகட்டும், மகா பெரியவா வாழ்ந்த காலத்துக்குப் போவோம்.
காட்டுப்பள்ளியில் தங்கி இருந்த மகானைத் தரிசிக்க எண்ணற்ற பக்தகோடிகள் தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் இங்கே படையெடுத்து வந்தார்கள். காரணம் – சாதுர்மாஸ்ய விரத காலத்தில் ஒரு மகானைத் தரிசித்து, ஆசிகளைப் பெறுவது என்பது பெரும் பேறு!
அன்றைய தினம் இந்த முகாமில் சந்திரமவுலீஸ்வர பூஜையை நடத்தி முடித்தார் மகா பெரியவா.
இந்த முகாமில் தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை என்று பல்வேறு பூஜைகள் அன்றைய தினம் நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூட்டம் அலைபோல் திரண்டு காணப்பட்டது.
சாதுர்மாஸ்ய காலத்தில் மகானுக்கு பிட்சை (மகான்கள் எடுத்துக் கொள்ளும் உணவை பிட்சை என்று அழைப்பர்) அளிக்க வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் இருந்தும் பக்தகோடிகள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அன்றைய தினம் பத்மாவதி என்கிற பெண்மணியும் மகா பெரியவா தரிசனத்துக்காகவும், பிட்சை அளிப்பதற்காகவும் காட்டுப்பள்ளி முகாமுக்கு வந்திருந்தார்.
பாலக்காடு நாராயணஸ்வாமி ஐயர் என்கிற பிரபல சங்கீத வித்வானின் மனைவிதான் மேலே சொன்ன பத்மாவதி.
இசை நிகழ்ச்சிகளுக்காகத் தன் கணவர் அமெரிக்கா சென்றிருந்த காரணத்தால், பத்மாவதி மட்டும் தனியே வந்திருந்தார். பக்தர்கள் கூட்டம் இருந்தாலும், பெரிய பரபரப்பு எதுவும் இல்லாத சூழ்நிலையில் மகா பெரியவாளை இங்கே தரிசித்ததில் பத்மாவதிக்கு ஆனந்தமான ஆனந்தம்.
சந்திரமவுலீஸ்வரர் பூஜை முடிந்த பின் மகா பெரியவா திருக்கரங்களால் தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த வரிசையில் பத்மாவதியும் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஒவ்வொருவருக்கும் புன்னகையுடன் தீர்த்தப் பிரசாதம் வழங்கி அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா. அருகில் நின்று கொண்டிருக்கும் சிப்பந்திகளும் இந்த வரிசையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஏற்கெனவே அறிமுகமான பக்தர்கள் இந்த வரிசையில் வரும்போது, அவர்களது குடும்ப நலன் பற்றி ரத்தினச் சுருக்கமாகக் கேட்டு அனுப்பிக் கொண்டிருந்தார் மகா பெரியவா.
மகா பெரியவா போன்ற மகான்களைத் தரிசிக்கச் செல்லும்போதும், குலதெய்வ ஆலயங்களுக்குச் செல்லும்போதும், பல்வேறு திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும்போதும் கணவனோ, மனைவியோ தனியே செல்வதை விடக் குடும்பத்தோடு சென்றால் சிறப்பு. தவிர, குடும்பத்தில் ஓரளவு தேக ஆரோக்கியத்துடன் இருக்கிற பெற்றோர்களை அழைத்துச் சென்றால் அதைவிடச் சிறப்பு. ஆனால், நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும், என்ன நடக்க வேண்டுமோ… அதுதான் நடக்கும். எதுவும் நம் கையில் இல்லை.
அந்த வகையில் தீர்த்தப் பிரசாதம் வேண்டி வரிசையில் சென்று கொண்டிருக்கும் பத்மாவதியின் மனதுக்குள் ஒரு குறை. அதாவது, கணவர் நாராயணஸ்வாமி தன்னுடன் இன்றைக்கு வர முடியவில்லையே என்கிற ஏக்கம்.
என்ன செய்வது… தொழில் என்கிற ஒன்று இருக்கிறதல்லவா? அமெரிக்கா செல்வது என்கிற வாய்ப்பெல்லாம் பொசுக்கென்று அமைந்து விடாது.
‘பரவாயில்லை… கணவர் ஊரில் இல்லை என்றாலும், தான் இன்றைக்கு இந்தத் திருச்சந்நிதி வருவதற்கு மகா பெரியவா அருளி இருக்கிறாரே‘ என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.
தீர்த்தப் பிரசாதம் வாங்க வரிசையில் வந்து கொண்டிருந்தவர்கள் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பத்மாவதியின் முறை வரும்போது ‘மகானை இத்தனை அருகே தரிசிக்கின்ற பேறு கிடைத்திருக்கிறதே‘ என்று நெகிழ்ந்தார். இரு கரங்களையும் சேர்த்து மகானை வழிபட்டார்.
காருண்ய மூர்த்தியை இத்தனை அருகே கண்கள் கொண்டு பார்த்த மாத்திரத்தில் பரவசமானார்.
பிறருக்கு ஏற்படுகின்ற பரவசத்தை அவரது கண்களில் இருந்தே உணர முடியும். பத்மாவதியின் கண்களை இந்த வேளையில் பார்த்தால், ‘கண் கண்ட தெய்வத்தை இன்னும் ஓரிரு விநாடிகளில் தரிசிக்கப் போகிறோமே… அவரது திருக்கரங்களால் பிரசாதம் பெறப் போகிறோமே‘ என்கிற பரவசம் தெரிந்தது. ஓரிரு நீர்த் துளிகள்கூட விழிகளில் அரும்பின. உணர்ச்சி மேலீட்டால் அவரது தொண்டை அடைத்துக் கொண்டது. லேசாக செருமிக் கொண்டார்.
மகானின் எதிரே – அவருக்கு வெகு அருகே நெருங்குகின்ற வேளையில் – இடது உள்ளங்கைக்கு மேல் வலது உள்ளங்கையை நீட்டிய வண்ணம் வைத்து, தீர்த்தப் பிரசாதம் பெறுவதற்கு பவ்யமாக நின்றார்.
கைகளை நீட்டி தீர்த்தப் பிரசாதம் வேண்டி பத்மாவதி நின்றிருக்க… மகா பெரியவா தீர்த்தம் வழங்கவில்லை.
‘என்னது… எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருந்த தீர்த்தம், எனக்குக் கிடைக்கவில்லையா?‘
உத்தரணியில் தீர்த்தப் பிரசாதத்தை எடுத்து, பத்மாவதிக்கு வழங்குவதற்காக அதை முன்னால் கொண்டு சென்ற மகா பெரியவா என்ன நினைத்தாரோ, தெரியவில்லை… தன் கையை அப்படியே பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.
பத்மாவதிக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை… இந்தக் காட்சியைக் கவனித்த சிப்பந்திகளும், பத்மாவதியின் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தைகளும் அதிர்ந்து போனார்கள்.
பொதுவாக, தெய்வத்தின் திருச்சந்நிதிக்குச் சென்று விட்டு, நாம் போன வேளையில் தரிசனமோ, பிரசாதமோ கிடைக்கவில்லை என்றால் அந்த வேளையில் சம்பந்தப்பட்டவருக்கு என்ன தோன்றும்? தங்களது ஆச்சாரத்திலோ பக்தியிலோ ஏதோ குறை இருக்கிறது போலிருக்கிறது என்றுதானே சிந்திப்பார்கள்.
அதுபோல் பத்மாவதி பதறிப் போனார். ‘நான் சுத்தமாகத்தானே இந்த சந்நிதிக்கு வந்திருக்கிறேன்? மகா பெரியவா, மகா பெரியவா என்று அந்த சர்வேஸ்வரனின் நாமத்தைத்தானே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்? எனக்கு ஏன் இந்த பிரசாத மறுப்பு?‘ ஏக்கத்திலும் பக்திப் பெருக்கிலும் அவரது விழிகள் கலங்க ஆரம்பித்தன.
உத்தரணியை மகா பெரியவா ஏன் பின்னுக்கு இழுத்தார் என்பதன் காரணம் பத்மாவதிக்குப் புரியவில்லை.
அப்போது பத்மாவதியைப் பார்த்த மகா பெரியவா, புடவைத் தலைப்பை நீட்டுமாறு ஒரு ஜாடை காண்பித்தார்.
இதைப் புரிந்து கொண்ட பத்மாவதி, சட்டென்று புடவைத் தலைப்பை விரித்து மகா பெரியவாளுக்கு முன் நீட்டினார்.
பத்மாவதிக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பக்தைகளுக்கும், அருகே நின்று கைங்கர்யம் செய்து கொண்டிருந்த சிப்பந்திகளுக்கும் மகா பெரியவாளின் இந்த செயலுக்கான காரணம் புரியவில்லை.
பத்மாவதி தன் புடவைத் தலைப்பை நீட்டியபடி மகா பெரியவாளையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நீட்டிய அவரது புடவைத் தலைப்பில் ஒரு முறை அல்ல… இரண்டு முறை அல்ல… மூன்று முறை குங்குமத்தைத் தன் கைப்பட அள்ளி அள்ளிப் போட்டார் மகா பெரியவா. அப்படிக் குங்குமத்தைப் போட்டபோது மகா பெரியவாளின் முகம் ஏதோ தியான நிலையில் காணப்பட்டதை அனைவராலும் உணர முடிந்தது.
மகா பெரியவா அள்ளி அள்ளிக் கொட்டிய குங்குமப் பிரசாதத்தைத் தன் இரு கண்களும் பனிக்க வாங்கிக் கொண்டார் பத்மாவதி. அப்படியே பத்திரப்படுத்திக் கொண்டார்.
அதன் பின், உத்தரணி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு அவரது வலக்கையைக் காட்டச் சொன்னார் மகா பெரியவா.
பிரசாதமாக வழங்கிய குங்குமமும் கீழே சிதறாதவாறு ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு, வலது உள்ளங்கையை நீட்டி தீர்த்தப் பிரசாதம் வாங்கினார். ‘சர்வேஸ்வரா… சர்வேஸ்வரா…‘ என்று மகானை வணங்கியபடி தீர்த்தத்தை உட்கொண்டார். தலையிலும் தெளித்துக் கொண்டார்.
‘வரிசையில் வந்து கொண்டிருக்கிற எவருக்கும் தராமல், இந்தப் பெண்மணிக்கு மட்டும் ஏன் மகா பெரியவா குங்குமப் பிரசாதம் – அதுவும் மூன்று முறை ஏன் அள்ளி அள்ளிப் போட்டார்?‘ என்று அங்கே வரிசையில் வந்து கொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதற்கான காரணம் பத்மாவதிக்கே புரியவில்லை. மற்றவர்களுக்கா புரியப் போகிறது?
வரிசையில் இருந்து மெள்ள வெளியே வந்தார் பத்மாவதி.
ஆனாலும், அள்ளி அள்ளி புடவை முந்தானையில் மகா பெரியவா கொட்டிய குங்குமம் அவருக்குள் பெரிய கேள்வியாக எழும்பிக் கொண்டே இருந்தது.
மகா பெரியவா ஏன் இப்படிச் செய்தார்?
பத்மாவதிக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும் விலகவில்லை. ‘எல்லோருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கியவர் தனக்குக் கொடுக்க வந்த தீர்த்த உத்தரணியை ஏன் பின்னுக்கு இழுத்தார்? புடவைத் தலைப்பை நீட்டச் சொல்லி விட்டு ஏன் ஒரு தியான நிலையில் இருந்து கொண்டு குங்குமத்தை அள்ளிப் போட்டார்? இப்படிக் கொடுத்ததைப் பார்த்தால், ஏதோ ஒரு செய்தியை மகா பெரியவா சொல்வதாகத் தெரிகிறதே… என்ன சொல்ல வருகிறார்? இதற்கான விளக்கத்தை யாரிடம் கேட்பது?‘ என்று யோசித்த பத்மாவதிக்கு பதில் ஒன்றும் புரியவில்லை.
‘சரி, வீட்டுக்குப் புறப்படலாம்‘ என்று தீர்மானித்தார். மகா பெரியவா தந்த குங்குமத்தை மீண்டும் ஒரு முறை நெகிழ்வோடு நெற்றியில் இட்டுக் கொண்டு, காட்டுப்பள்ளி முகாமிலிருந்து கிளம்பினார். மனம் முழுக்க மகா பெரியவா நிரம்பிக் காணப்பட்டார்.
அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தன் வீட்டை அடைந்தார். வாசல் கேட்டின் பூட்டைத் திறக்கும் விதமாக சாவியைப் பொருத்தினார். பூட்டு திறந்து கொண்டது.
கேட்டைத் திறந்து பத்மாவதி தன் இல்லத்துக்குள் செல்லும் முன் அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் இவரை நோக்கி வேகவேகமாக ஓடி வந்தனர். அனைவரது முகங்களிலும் ஒரு படபடப்பு தென்பட்டது.
ஒரே நேரத்தில் இவர்கள் ஓடி வந்து தன் முன் நிற்பதைப் பார்த்த பத்மாவதிக்குக் குழப்பம்.
“என்ன பத்மா… எங்கே போயிட்டு வரே? நீ எப்ப வருவேன்னு நாங்கல்லாம் உனக்காகக் காத்திட்டிருக்கோம்“ என்றார் அவர்களில் ஒரு பெண்மணி.
சுற்றி நின்றவர்கள் அனைவரையும் ஒருவரை மாற்றி ஒருவரை – ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டே இருந்தார் பத்மாவதி.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒன் வீட்டுக்கு போன் வந்திருக்கு. பெல் அடிச்சிட்டே இருந்திருக்கு. நீ வீட்டுல இல்லேங்கிறது போன் பண்றவங்களுக்குத் தெரியாது. அதனால அடுத்து எங்க வீட்டுக்கு அதே போன்கால் வந்தது“ என்று முதலில் பேசிய பெண்மணி சொன்னார். இவர், பத்மாவதிக்குப் பக்கத்து வீட்டுக்காரர்.
இந்த நிகழ்வு நடந்த காலத்தில் மொபைல் போன் வசதியெல்லாம் வரவில்லை. அப்போது லேண்ட் லைன்தான். அதுவும் எல்லோரது வீட்டிலும் டெலிபோன் இருக்காது.
“நீ என்ன சொல்றே? என் வீட்டுக்காரர் அமெரிக்கா போயிருக்கார். இந்த நேரத்துல அப்படி என்ன முக்கியமான போன், என்னைக் கேட்டு உன் வீட்டுக்கு வந்தது?“ என்று பக்கத்து வீட்டுப் பெண்மணியை ஊடுருவிப் பார்த்தார் பத்மாவதி.
“ஒண்ணும் கவலைப்படாத பத்மா. நடமாடும் தெய்வம் மகா பெரியவாளை நீ தரிசனம் பண்ணிட்டு வந்த வேளை, அந்த மகான்தான் ஒன்னைக் காப்பாத்தி இருக்கார்னு சொல்லணும்“ என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி சொல்ல… என்னவோ, ஏதோவென்று பதற ஆரம்பித்து விட்டார் பத்மாவதி.
கணவர் நாராயணஸ்வாமி ஐயர் வேறு கச்சேரிக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்த வேளையில் யாருக்கு என்ன ஆச்சு என்று தவித்த பத்மாவதி, பக்கத்து வீட்டுப் பெண்மணியின் கைகளைப் பற்றிக் கொண்டு “என்ன ஆச்சு?“ என்று படபடப்பாகக் கேட்டார்.
“ஒண்ணும் பயப்படாத… இப்ப எல்லாம் சரி ஆயிடுச்சு. ஒன்னோட கணவர் கச்சேரிக்காக அமெரிக்கா போயிருக்கார் இல்லியா… போன இடத்துல அவருக்குத் திடீர்னு ஒடம்பு முடியாம போய் சீரியஸ் ஆயிடுச்சாம். அது ஹார்ட் அட்டாக்ல கொண்டு போய் விட்டிருக்கு“ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பத்மாவதிக்கு உடல் வெடவெடத்தது.
சுற்றி நின்றிருந்தவர்கள் அவரை மெள்ளத் தேற்றி, “ஒண்ணும் கவலையே வேண்டாம் பத்மா… உன்னோட கணவரை ஒடனே பக்கத்துல ஒரு ஆஸ்பத்திரில சேர்த்து, சிகிச்சை கொடுத்திட்டிருக்காங்க. தெய்வாதீனமா அவர் உயிர் பிழைச்சுட்டாரு. இப்ப அபாய கட்டத்தைத் தாண்டிட்டாராம். அங்கிருந்து டாக்டர்ஸே என்கிட்ட நெகிழ்ச்சியோட பேசினாங்க. எல்லாம் நீ தரிசிச்ச மகா பெரியவாளோட கிருபைதான்“ என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி சொன்ன பிறகுதான், இயல்பான நிலைக்கு வந்தார் பத்மாவதி.
அப்போதுதான் புரிந்தது – தன் கணவர் அமெரிக்காவில் சீரியஸாகி ஆஸ்பத்திரியில் சேர்த்த நேரமும், தன் புடவை முந்தானையில் மூன்று முறை குங்குமத்தை மகா பெரியவா அள்ளி அள்ளிப் போட்ட நேரமும் ஒன்றே என்று!
தன்னை நம்பி, தன் திருச்சந்நிதிக்கு வந்திருக்கிறவருக்கு – எந்த விதமான சோகமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக – தானே ஒரு ஜபத்தை மேற்கொண்டு, குங்குமப் பிரசாதத்தையும் கொடுத்து, அமெரிக்காவில் இருக்கிற தன் கணவரின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் மகா பெரியவா என்பது அப்போதுதான் பத்மாவதிக்குப் புரிந்தது.
காட்டுப்பள்ளி என்கிற குக்கிராமத்தில் இருந்து கொண்டு அமெரிக்காவில் நடக்கின்ற ஒரு நிகழ்வை மகா பெரியவா தன் ஞான திருஷ்டியால் எப்படியெல்லாம் கண்டுபிடித்துத் தன் பக்தகோடிகளைக் காத்து வருகிறார் என்பதை உணர்ந்த பத்மாவதியின் கண்கள் குளமாயின.
அடுத்த ஒரு சில வாரங்களில் அமெரிக்கப் பயணம் முடிந்து நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தார் பாலக்காடு நாராயணஸ்வாமி ஐயர்.
அதன் பின் கணவரும் மனைவியுமாக இருவரும் மகா பெரியவாளைத் தரிசித்து, அவரின் ஆசிகளைப் பெற்றார்கள்.