பசுக்களின் மீது பரிவு

காராஷ்டிர மாநிலம் புனே நகரில் தற்போது வசித்து வருபவர் குருமூர்த்தி. வயது 75.

தலைமுறை தலைமுறையாக காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆச்சார்யர்கள்தான் இவரது குடும்பத்துக்கு குருமார்கள்.

புனேவில் செட்டில் ஆவதற்கு முன் பம்பாயில் (இன்றைய மும்பை) பணி புரிந்து வந்தார் குருமூர்த்தி. அங்கே இவரது ஜாகை – ‘முலுண்ட் என்ற பகுதியில். சுமார் 43 வருடங்கள் பம்பாய்வாசியாகவே இருந்து விட்டார்.

மகா பெரியவாளை 1958-ஆம் ஆண்டு முதல் முறையாக தரிசித்ததாக நினைவு என்கிறார் குருமூர்த்தி. அதன் பின்மகா பெரியவா என்ற பெயரை எவர் ஒருவர் சொல்லக் கேட்டாலும், கண்கள் பனிக்க, பக்திமயமாகத் தன் இரு கைகளையும் கூப்பி வணங்க ஆரம்பித்து விடுவார் குருமூர்த்தி. அந்த மகான் மேல் அப்படி ஒரு குரு பக்தி.

காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது ஆச்சார்யரான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1979-ஆம் ஆண்டு பம்பாய்க்கு வருகை தந்தார்.

முலுண்ட்தான் பம்பாயின் தெற்கு நுழைவாயில். எனவே, தன் யாத்திரையின்போது பம்பாய்க்குள் நுழைந்த ஜயேந்திரர், முதலில் தன் திருப்பாதம் பதித்தது முலுண்டில்தான்.

பம்பாய் மாநகருக்கு வருகை தரும் ஜயேந்திரரை இந்த முலுண்ட் எல்லையில் பிரமாண்டமாக வரவேற்க விஸ்தாரமான ஏற்பாடுகளைச் செய்த விழாக் குழுவினருக்குப் பேருதவி புரிந்த பலருள் குருமூர்த்தியும் குறிப்பிடத் தக்க ஒருவர்.

பம்பாய் மாநகர மேயரும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் ஒன்று திரளஸ்ரீஜயேந்திரர் விமரிசையாக வரவேற்கப்பட்டார்.

பின்னாட்களில் ஒரு முறை மகா பெரியவாளை நேரில் தரிசிக்க குருமூர்த்தி சென்றபோது அவரைப் புன்னகையுடன் வரவேற்றாராம் மகா பெரியவா. நமஸ்காரம் செய்து எழுந்து நின்ற குருமூர்த்தியைப் பார்த்து, “என்னடாபுதுப் பெரியவா (ஸ்ரீஜயேந்திரர்) வரவேற்பை பாம்பேல நீ பிரமாதப்படுத்திட்டியாமே என்று வியந்து பாராட்டி ஆசிர்வதித்தாராம்.

மகானின் கிடைத்தற்கரிய இந்த ஆசிர்வாதத்தில் நெகிழ்ந்து போனார் குருமூர்த்தி. அவருக்கு வாழ்வில் இதைவிட என்ன பெரிய சொத்து வேண்டும்?! கண்கள் கலங்க, அந்த மகானை மீண்டும் வணங்கினார்.

காஞ்சி ஸ்ரீமடத்தின் ஆன்மிக கார்யங்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கொண்டு பெரும் தொண்டாற்றினார் குருமூர்த்தி. இப்படித் தொண்டாற்றுவதை பூர்வ ஜன்மத்தில் பெற்ற புண்ணியத்தின் விளைவாகக் கருதினார்.

நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவாளுடன் எண்ணற்ற அனுபவங்கள் குருமூர்த்திக்கு. அவற்றுள் ஒன்றைத் தற்போது பார்ப்போம்.

1982-ஆம் ஆண்டு மகா பெரியவா மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் இருந்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வருகிற வழியெங்கும் திரளான பக்தர்கள் கூடி பெரியவாளை வரவேற்றனர். மகானுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை விமரிசையாக செய்தார்கள்.

முழுக்க முழுக்க நடை யாத்திரை!

தாமரை இதழ் போன்ற மகா பெரியவா திருப்பாதங்கள் பூமியில் பட்டு நடக்கும்போது, உடன் வருகின்ற பக்தர்கள் துடித்துப் போவார்கள். மழையானாலும், வெயிலானாலும் பெரும்பாலான வேளைகளில் வெறும் கால்கள்தான்!

ஆனால், ஒரே ஒருத்தி மட்டும் சந்தோஷப்பட்டாள். மகா பெரியவாளின் திருப்பாதங்களின் ஸ்பரிசம் தன் மேல் படுகிறதே என்று பூரித்து, அந்தத் திருப்பாதங்களைத் தாங்கினாளாம். அவள்தான்பூமாதேவி!

ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்திருக்கிற ஒரு குக்கிராமத்தில் அன்றைய தினம் மகா பெரியவா முகாமிடுகிறார்.

மாலை வேளைமெள்ள இருள் பரவத் தொடங்கியது.

ஊருக்குள் நுழையும் மகா பெரியவாளை, கிராமவாசிகள் அனைவரும் பார்த்த மாத்திரத்தில் பக்தி உணர்வு மேலிடஅவரது திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.

எந்த ஒரு வசதியும் இல்லாத கிராமம்!

ஆனால், மகா பெரியவா முகாமிட்டு விட்டால், அதுவரை வசதி வாய்ப்புகளே இல்லாத ஊர்கள், அதன் பின் எல்லா வசதிகளையும் பெற்று விடுமே!

காரணம்அங்கே கால் பதித்துச் செல்வது, சாட்சாத் நடமாடும் தெய்வமாயிற்றே!

அப்போது மகா பெரியவா முகாமிட்டிருக்கிற குக்கிராமத்தின் பெயர்கூட சரியாகத் தெரியவில்லை குருமூர்த்திக்கு. காரணம், மகாராஷ்டிரஆந்திர மாநில எல்லையில் எந்த விதமான வளர்ச்சியும் இல்லாத ரொம்ப சாதாரணமான கிராமம்.

கர்னூலுக்கு அருகே ஒரு கிராமத்தில் மகா பெரியவா முகாமிட்டிருக்கிறார் என்று மட்டும் தகவல் கிடைத்தது குருமூர்த்திக்கு. என்ன கிராமம், அது கர்னூலில் இருந்து எவ்வளவு தொலைவு என்பதை எல்லாம் கர்னூலில் போய் விசாரித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மனைவியுடன் பம்பாயில் இருந்து கர்னூலுக்கு ஒரு ரயிலில் ஏறி விட்டார்.

முன்பதிவு செய்யாமல் ஏறியதால், ரயிலில் படுக்கை (பர்த்) வசதி கிடைக்கவில்லை. கூட்டத்தோடு கூட்டமாக பம்பாயில் ரயில் ஏறியவுடன்பர்த் கிடைக்க வேண்டும் என்று மகா பெரியவாளைப் பிரார்த்தித்துக் கொண்டார். ஆனால், இவருக்கு இரண்டு படுக்கைகள் வெகு சுலபமாகக் கிடைத்து விட்டன. தானும் மனைவியும் சவுகரியமாக படுத்து உறங்கினர்.

கர்னூலில் இறங்கி, மகா பெரியவா முகாமிட்டிருக்கிற குக்கிராமத்தின் பேரையும், அதற்குச் செல்லும் வழியையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார் குருமூர்த்தி.

பேருந்து மூலம் பயணித்து மகா பெரியவா முகாமிட்டிருக்கிற கிராமத்தை அடையும்போது இரவு மணி எட்டரை.

இவர்கள் வந்த பேருந்துதான் இந்த ஊருக்கு வருவதற்கான கடைசி பஸ். இதை விட்டு விட்டால், மறுநாள் காலைதான். ‘நல்லவேளையாக இந்த பஸ்ஸைப் பிடித்து விட்டோம் என்று மனைவியிடம் புளகாங்கிதப்பட்டார்.

அசதியுடன் இறங்கிய குருமூர்த்திக்கு பசி வயிற்றைப் பிசைந்தது. ஏதேனும் ஓட்டல் கண்களுக்குப் படுகிறதா என்று நாலாப் பக்கமும் பார்வையை ஓட்டினார்.

இவருடைய நேரம் பாருங்கள், ஒரு டீக்கடைகூடக் கண்களுக்குப் படவில்லை. ‘சரி, ஏதேனும் பழங்களை வாங்கிச் சாப்பிடலாம் என்று பழக் கடைகளைத் தேடினால், அதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.

இருந்த ஓரிரு கடைகள் பூட்டப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகளில் இவருக்குத் தேவையான உணவுப் பண்டங்கள் கிடைக்கவில்லை.

மகான் மகா பெரியவா எங்கு தங்கி இருக்கிறார்? என்று அங்கிருந்த கிராமவாசிகளிடம் விசாரித்தார் குருமூர்த்தி.

கிராமவாசிகள், ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று சிம்பிளாகச் சொல்லி விட்டார்கள். அவர்களிடம் மேலும் ஒரு சில கேள்விகளை குருமூர்த்தி சுழட்டிச் சுழட்டிக் கேட்டபோது, அதே கிராமவாசிகளிடம் இருந்து தேவையான ஒரு தகவல் கிடைத்தது. அதுவே, மகா பெரியவாளைத் தரிசித்த ஒரு திருப்தியைக் கொடுத்தது குருமூர்த்திக்கு.

அவர்கள் சொன்ன தகவல் இதுதான்: “இந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது. அங்கே போய் விசாரித்தால், நீங்கள் கேட்கிற சந்நியாசி எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் அடையாளம் காட்டிய கிராமத்துக் கோடியை நோக்கி மனைவியுடன் நடக்க ஆரம்பித்தார்.

சாலையெங்கும் காரிருள் சூழ்ந்து காணப்பட்டது. எதிரில் நடந்து வருகிறவரைபக்கத்தில் போனால்தான் பார்க்க முடிந்தது.

ஆங்காங்கு குடிசைகளின் வாசலில் தென்படும் விளக்கின் ஒளியில் பாதையைக் குத்துமதிப்பாகக் கண்டுபிடித்து, கோடியில் உள்ள பெருமாள் கோயிலை அடைந்தார்.

ரொம்ப சிறிய கோயில்.

குருமூர்த்தியும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள்.

கோயிலுக்குள் இருந்த பூஜகர், இவர்களைப் பார்த்ததும் எழுந்தார். “நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.

அன்பான அவரது உபசரிப்பைப் பார்த்து விட்டு, அசதியிலும் கொஞ்சம் சந்தோஷப்பட்டார் குருமூர்த்தி. காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பம்பாயில் இருந்து வந்திருக்கும் விவரம் சொன்னார்.

மகா பெரியவா பெயரைச் சொன்னதும் அந்த பூஜகரின் முகத்தில் ஒரு பரவசம். “ஆமாம்நானும் அவரை இன்றைக்குத் தரிசித்தேன். அந்த மகான் இருக்கிற இடம் இங்கிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. பகல் வேளை என்றால் நடந்து சென்று விடலாம். ஆனால், இந்த இரவு வேளையில் சிரமம். காரணம், செல்கிற வழி எங்கும் வெளிச்சமே இருக்காது. தவிர, சர்ப்பங்கள் போன்ற துஷ்ட ஜந்துக்களும் நடமாடும் என்றார்.

குருமூர்த்தியின் கண்கள் பனித்து விட்டன. ‘அத்தனை மோசமான இடத்தில் ஏன் தங்க வேண்டும்? மகான் தங்குவதற்கு நல்ல விளக்கு வெளிச்சம் உள்ளஅனைவரும் சென்று அடையும் விதத்தில் வசதி கொண்ட இடம் கிடைக்கவில்லையா? ஏன் இந்த மகான் தன்னை இப்படி வருத்திக் கொள்கிறார்? என்று அவருக்குள் கேள்விகள் எழும்பின. ஆனால், இவற்றை எல்லாம் அறியாதவரா, மகா பெரியவா?

அந்த பூஜகரைப் பார்த்துக் குருமூர்த்தி கேட்டார்: “அரை கி.மீ. தள்ளி மகா பெரியவா எங்கே தங்கி இருக்கிறார்? ஏதேனும் சத்திரம் அங்கு இருக்கிறதா?

இல்லையில்லை. அங்கே ஒரு ரைஸ் மில் இருக்கிறது. அங்குதான் தங்கி இருக்கிறார். நீங்கள் இன்று இரவு இங்கு தங்கி சாப்பிட்டு, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளை காலை மகானைத் தரிசிக்க அங்கே செல்லலாம்.

குருமூர்த்தியின் மனம் குருவை நினைத்து ஏங்க ஆரம்பித்தது. ‘நமக்கெல்லாம் அருளை வழங்கி ஆட்கொள்கிற தெய்வம் இங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் முகாமிட்டிருக்கிறதுஅவரைத் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் பயணித்து வந்து விட்டு, இந்த இரவை மட்டும் இங்கே கழிக்க வேண்டுமா? கூடாது. எப்படியும் மகான் முகாமிட்டிருக்கிற இடத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்று அவர் மனம் தீர்மானித்தது.

சரி, மனைவி என்ன சொல்கிறாள்? என்று தெரிந்து கொள்வதற்காக மனைவியின் முகத்தை ஏறிட்டார். “நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே என்றார் மனைவி.

இந்த இரவிலேயே மகா பெரியவா முகாமிட்டிருக்கும் ரைஸ் மில்லுக்குச் சென்று விடலாம் என்று முடிவெடுத்தார் குருமூர்த்தி. பூஜகரைப் பார்த்து, “உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் எங்களோட நன்றி. மகா பெரியவா முகாமிட்டிருக்கும் ரைஸ் மில்லுக்கு நாங்கள் இந்த இரவே சென்றடைய வேண்டும். அவரை நமஸ்கரிக்க வேண்டும். எங்களை இத்தனை தொலைவு அழைத்து வந்த மகான், இந்த அரை கி.மீ. தொலைவை எப்படிக் கடக்க வேண்டும் என்றும் வழிகாட்டுவார். – திடமாகச் சொன்னார் குருமூர்த்தி.

சரிதான். தாங்கள் சொல்வது புரிகிறது. உங்கள் குரு பக்தியை நான் பாராட்டுகிறேன். அதே சமயம் நாங்கள் தயாரித்துத் தருகிற சொற்பமான உணவை சாப்பிட்டு விட்டுப் புறப்படலாம் என்று சொன்ன பூஜகர், உள்பக்கம் திரும்பி தன் மனைவியை அழைத்தார். அவசர உணவாக குருமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் உப்புமா தயாரிக்குமாறு விண்ணப்பித்தார்.

பூஜகரின் மனைவி உப்புமா தயாரிப்பதற்குள், குருமூர்த்தியும் அவரது மனைவியும் நல்ல குளியல் போட்டார்கள். தான் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை இரவு வேளையில் மிக எளிமையாகச் செய்து முடித்தார் குருமூர்த்தி.

பதினைந்து நிமிடத்தில் உப்புமா தயாராகி இருந்தது. சாப்பிட்டு முடித்தார்கள்.

பூஜகருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி தெரிவித்து விட்டு, அவர் காண்பித்த வழியில் குருமூர்த்தியும் அவரது மனைவியும் நடை போட்டார்கள்.

மகா பெரியவாமகா பெரியவாமகா பெரியவா என்கிற தியானமே இருவரின் உதடுகளில் இருந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது.

எந்த விதமான சிரமமும்துஷ்ட ஜந்துக்களின் தொல்லையும் இல்லாத அரை மணி நேரப் பயணத்தில்மகா பெரியவா முகாமிட்டிருந்த ரைஸ் மில்லை அடைந்து விட்டார்கள் இருவரும்.

ரைஸ் மில்லின் ஓர் ஓரம் இருந்த மாட்டுத் தொழுவத்தில் மகா பெரியவா முகாமிட்டிருந்தார். சுமாரான விளக்கு வெளிச்சம் காணப்பட்டது.

வலக் கையில் ஒரு லென்ஸ் வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

சரஸ்வதி தேவியே புத்தகம் வாசித்தால் எப்படி இருக்கும்?

இந்தக் காட்சி அப்படித்தான் இருந்தது.

சகல கலைகளுக்கும் சொந்தக்காரரான மகா பெரியவா, இந்த இருட்டில் எந்தப் புத்தகத்தைப் படித்து என்ன தெரிந்து கொள்ளப் போகிறார்? எல்லாம் திருவிளையாடலே!

ரைஸ் மில்லின் காம்பவுண்ட் முழுக்க எண்ணற்ற மரங்கள் காணப்பட்டன. இருட்டில் என்ன மரம், எவ்வளவு உயரம் என்பதெல்லாம் தெரியவில்லை.

ஒவ்வொரு மரத்திலும் ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. கட்டப்படாத கன்றுக் குட்டிகள் அங்கே குறுக்கும் நெடுக்குமாக தாய்ப் பசுக்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தன.

ரைஸ் மில் காம்பவுண்ட் முழுக்க நடந்து கொண்டிருக்கும் காட்சிகளைத் தெள்ளத் தெளிவாகப் பார்ப்பதற்குப் போதிய வெளிச்சம் இல்லை.

இருட்டில் தென்படும் காட்சிகளை விநோதமாகப் பார்த்துக் கொண்டே மகா பெரியவாளின் அருகே நெருங்கினார்.

புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த மகா பெரியவா சற்றே தலையை உயர்த்தி நிமிர்ந்தார்.

பரப்பிரம்ம சொரூபத்தை இந்த இரவு வேளையில் பார்த்ததும், உணர்ச்சிப் பிழம்பாக மாறினார் குருமூர்த்தி.

தான் கொண்டு போயிருந்த பழங்கள், தேங்காய்கள் போன்றவற்றை அங்கிருந்த ஒரு மூங்கில்தட்டில் எடுத்து வைத்து தம்பதி சமேதராக நமஸ்காரம் செய்தார் குருமூர்த்தி.

இருவரையும் ஆசிர்வதித்த மகான், குருமூர்த்தியின் குடும்ப நலன் பற்றியும், உத்தியோகம் பற்றியும் கேட்டறிந்தார்.

இதற்கு மேல் மகா பெரியவாளிடம் இன்றைக்கு எதுவும் பேச வேண்டாம். நாளைக்குக் காலை பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து, உத்தரவு பெற்று நகர்ந்தார் குருமூர்த்தி.

வெளியே வந்த குருமூர்த்திக்கு ஒரே கேள்விதான் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

பசு மாடுகள் இருக்க வேண்டிய இடத்தில் மகா பெரியவா இருக்கிறார்மகா பெரியவா இருக்க வேண்டிய ரைஸ் மில் காம்பவுண்டில் பசு மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றனவே

உள்ளே மகா பெரியவாளைத் தரிசித்து விட்டு மனைவியோடு வெளியே வந்தார் குருமூர்த்தி. ரைஸ் மில் வளாகத்தின் வாசலுக்கே வந்து விட்டார்.

அப்போது அந்த இரவு வேளையிலும் மெல்லிய விளக்கொளியில் கவனித்தார்ரைஸ் மில் வளாகத்தில் இருந்த ஒவ்வொரு மரத்திலும் ஒரு பசு கட்டப்பட்டிருந்தது. அநேகமாக சுமார் நாற்பது பசுக்கள் நாற்பது மரங்களில் இப்படிக் கட்டப்பட்டிருக்கலாம்.

குருமூர்த்திக்கு இந்த சந்தேகம் ரொம்பவே உறுத்திக் கொண்டிருந்தது. பசுக்கள் கட்டப்பட்டிருக்க வேண்டிய இடத்தில் மகா பெரியவா காணப்படுகிறார். மகா பெரியவா முகாமிட்டிருக்க வேண்டிய மில் வளாகத்தில் பசுக்கள்.

ஆர்வத்தின் காரணமாகவும், தனக்கு இருக்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் காரணமாகவும் அங்கு இருக்கக் கூடிய ரைஸ் மில் ஊழியர்கள் மற்றும் வாட்ச்மேனிடம் தனித் தனியே குருமூர்த்தி பேசினார்.

அப்போது அவர்கள் தெரிவித்த விஷயம் இதுதான்:

சதாராவில் புறப்பட்ட மகா பெரியவா ஆந்திரா வழியே காஞ்சிபுரத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார். செல்கின்ற வழியில் இந்தக் கிராமம் குறுக்கிட்டிருக்கிறது. ரைஸ் மில் வழியே நடந்து செல்லும்போது ஆரவாரம் இல்லாத இந்த இடத்தையும், இங்கே கட்டப்பட்டிருக்கிற எண்ணற்ற பசுக்களையும் பார்த்திருக்கிறார். பிடித்துப் போயிருக்கிறது.

இரண்டு அல்லது மூன்று நாட்கள் இங்கே தங்கிக் கொள்வதற்கு அனுமதி கிடைக்குமா? என்று ரைஸ் மில் உரிமையாளரிடம் கேட்கச் சொன்னார் மகா பெரியவா.

ரைஸ் மில் உரிமையாளருக்கு சந்தோஷமான சந்தோஷம். எத்தனை பெரிய சந்நியாசிவெகு சாதாரணமான ஒரு குக்கிராமத்தில் இருக்கக் கூடிய ரைஸ் மில்லில் தங்க வேண்டும் என்று சொல்கிறார்..! ஆனந்தம் தாங்க முடியவில்லை ரைஸ் மில் ஓனருக்கு. நெகிழ்ச்சியில் கண்கள் பனிக்கச் சம்மதம் தெரிவித்தார். காஞ்சி ஸ்ரீமடத்தின் முகாமுக்குத் தேவையான ஏற்பாடுகளை அவரே உடன் இருந்து செய்து கொடுத்தார்.

ரைஸ் மில்லின் ஊழியர்களும் வாட்ச்மேனும் குருமூர்த்தியிடம் சொன்னதன் சாராம்சம்தான் மேலே!

அடுத்து அந்த ஊழியர்களிடம் குருமூர்த்தி கேட்டார்: “பசு மாடுகள் தங்கி இருந்த கொட்டடியைக் காலி செய்து வெளியே பலரும் நடமாடும் இடத்தில் கட்டி இருக்கிறீர்களேகாலையில் பொழுது விடிந்து விட்டால், இந்த மகானைத் தரிசிக்கப் பலரும் வர ஆரம்பிப்பார்கள். பகல் பொழுதில் இந்தப் பசுக்களையும், இங்கே சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற கன்றுக்குட்டிகளையும் என்ன செய்வீர்கள்?

ஆமா சாமீ. நிறைய ஜனங்க வருவாங்கனு சொன்னாங்க. அது வாஸ்தவம்தான்னு நேத்திக்கு தெரிஞ்சுக்கிட்டோம். அதுபோல இன்னிக்கும் நிறைய பேர் வந்திருந்தாங்க. இவங்கல்லாம் பம்பாய், ஹைதராபாத், தமிழ்நாடுலேர்ந்து வர்றாங்க. போதாததற்கு எங்க ஊர் ஆளுங்களும் வந்து தரிசனம் பண்ணிட்டுப் போறாங்க. பகல் வேளையில் இங்கே பக்தர்கள் கூட்டம் வந்துடும். அதனால, பொழுது விடிஞ்ச உடனே இந்தப் பசுமாடுங்களை நாங்க அவிழ்த்து விட்டுடுவோம். பகல் முழுக்க மேய்ச்சல் நிலத்துல மேஞ்சிட்டிருக்கும் என்றார்கள்.

இந்த சாமி (மகா பெரியவா) இங்கே வர்றதுக்கு முன்னாடி இந்தப் பசுக்களை எங்கே கட்டி வெச்சிருப்பீங்க?

இப்ப சாமீ தங்கி இருக்கார் இல்லிங்களாஅந்தக் கொட்டடிலதான் எல்லா பசுக்களையும் கட்டி வைப்போம். அங்கே கட்டி வெச்சாச்சுன்னா எல்லாத்துக்கும் தீனி, தண்ணி குடுத்துடுவோம். மேய்ச்சலுக்கு வெளியே அனுப்ப மாட்டோம். இப்ப சாமீ வந்துருக்கார் இல்லியா..! அவரை தரிசனம் பண்ண வர்றவங்க நிம்மதியா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டும்னுதான் எங்க முதலாளி காலை வேளைலயே எல்லா பசுக்களையும் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடச் சொல்லி இருக்காரு. ராத்திரி ஆச்சுன்னா, எல்லாம் இங்கே திரும்பி வந்துரும். இதோ, இங்கே கட்டிப் போட்டுடுவோம்.

குருமூர்த்திக்கு என்ன கவலை என்றால்கொட்டடியில் நிம்மதியாகக் கட்ட வேண்டிய பசுக்களை ரைஸ் மில் வளாகத்தில் தங்க வைத்திருக்கிறார்களேஇதற்குப் பதிலாக பசுக்கள் எப்போதும் இருக்கக் கூடிய இடமான கொட்டடியிலேயே அவற்றைக் கட்டி வைத்திருக்கலாமேமகா பெரியவா இந்த ரைஸ் மில் வளாகத்தில் தங்கி இருக்கலாமே!

பசுக்களைப் பாதுகாக்கணும்னு அடிக்கடி வர்றவா, போறவாகிட்ட வலியுறுத்திச் சொல்ற மகா பெரியவாளா இப்படிச் செய்யறது? இதுதான் குருமூர்த்தியின் கவலை.

கொட்டடியில் பசுக்கள் கட்டப்பட்டிருந்தால் கன்றுக்குட்டிகள் எப்போதும் தாயைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும்இப்போது என்னடாவென்றால், கன்றுக்குட்டிகள் அங்கும் இங்குமாக அலைந்து திரிய வேண்டி இருக்கேபோதிய சுதந்திரம் இல்லையே என்று ரொம்பவும் விசனப்பட்டார் குருமூர்த்தி.

ஒரு அரை மணி நேரம் பசுக் கொட்டடி பற்றிய இந்த விவரங்களை எல்லாம் துருவித் துருவி விசாரித்து அறிந்து கொண்டார் குருமூர்த்தி.

தூக்கம் மெள்ளக் கண்களைத் தழுவ ஆரம்பித்தது. பெருமாள் கோயில் பூஜகர் ஏற்கெனவே சொல்லி அனுப்பி இருந்தார் – ‘மகா பெரியவாளைத் தரிசித்து முடிந்ததும், சிரமத்தைப் பார்க்காமல் இங்கயே வந்துடுங்கோ. தாராளமா படுத்துக்கலாம் என்று.

எனவே, அங்கே பணி புரிந்து கொண்டிருந்தவர்களிடம் விடை பெற்று வெளியே வந்தார். வந்த இருட்டு வழியிலேயேமகா பெரியவா திருநாமங்களை ஜபித்தபடியே மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

பூஜகரும் அவரது மனைவியும் கோயில் வாசலில் காத்திருந்து இவர்களை வரவேற்றார்.

குருமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் பூஜகரின் மனைவி டம்ளரில் பசும்பால் கொண்டு வந்து கொடுத்தார்.

இருவரும் அதைக் குடித்து விட்டு, அங்கே படுத்து உறங்க ஆரம்பித்தார்கள்.

குருமூர்த்திக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. ஆனால், அவரது மனைவி படுத்தவுடன் உறங்க ஆரம்பித்து விட்டார்.

குருமூர்த்தி கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே, ரைஸ் மில்லில் இருக்கிற பசுக் கொட்டடிதான் நினைவுக்கு வருகிறது.

கொட்டடிக்குள் கட்டி வைத்து தீனி வைக்க வேண்டிய பசுமாடுகளை வெளியே கட்டி இருக்கிறார்களேதாய்ப் பசுவிடம் பால் குடித்து கொட்டடிக்குள் திரிய வேண்டிய கன்றுக் குட்டிகள் போக்கிடம் தெரியாமல் அலைகின்றனவே

மகா பெரியவா ஏன் மாட்டுக் கொட்டடியில் தங்க வேண்டும்? வெளியே விஸ்தாரமாகக் காணப்படும் ரைஸ் மில் இடத்தில் வசதியாகத் தங்கலாமே? இதனால், அவருக்கும் சிரமம் இல்லைவருகின்ற பக்தர்களுக்கும் தொந்தரவு இல்லை. பசுக்களும் அழகாகத் தங்கள் இடத்தில் (கொட்டடி) கட்டப்பட்டிருக்கும். வைக்கோல், புண்ணாக்கு போன்ற தீனிகளை அசை போட்டுக் கொண்டிருக்கும். நினைத்தபோது தண்ணீரைத் தொட்டியில் இருந்து குடித்துக் கொண்டிருக்கும். கன்றுகளும் நிம்மதியாக தாயின் அரவணைப்பில் இருக்கும்!

பசுக்கள் இருக்க வேண்டிய இடத்தில் மகா பெரியவா முகாமிட்டிருப்பதால், மகா பெரியவா இருக்க வேண்டிய இடத்தில் வாயில்லா ஜீவன்கள் சிரமப்படுகின்றனவே?

எல்லாவற்றுக்கும் இந்த ரைஸ் மில் உரிமையாளர் எப்படி சம்மதித்தார்? அவராவது சொல்லி இருக்கலாமே? ‘சாமீநீங்க ரைஸ் மில்லுல தங்கிக்குங்கஒங்களுக்கு எல்லா ஏற்பாடுங்களையும் செஞ்சு தரேன். பசுக்கள் அதே கொட்டடில இருக்கட்டும் என்று சொல்வதில் என்ன தயக்கம்?!

நம்மிடம் இத்தனை கருணை காண்பிக்கும் காருண்ய தெய்வம் மகா பெரியவா இதைப் பற்றி யோசிக்கவில்லையா?

இப்படி நீள நீளமான எண்ணங்கள் தொடர்ந்து வந்தும் போய்க் கொண்டும் இருந்தன.

இன்னொரு பக்கம் வேறு விதமான சிந்தனைஇதைப் பற்றி இப்படிச் சிந்திக்க நமக்கு என்ன அருகதை இருக்கிறது? மகா பெரியவா எங்கே முகாமிட்டிருந்தாலும் பசுக் கொட்டடியில் தங்குவது வாடிக்கைதானே? அப்படி இருக்க இன்று மட்டும் என் மனம் ஏன் இப்படிச் சிந்திக்கிறது? மகா பெரியவா இருக்கும் இடத்தில் பசுக்கள் எப்படிச் சிரமப்படும்? அவரே கோசம்ரட்சண மூர்த்தி ஆயிற்றே! பசுக்களைப் பாதுகாப்பவர் ஆயிற்றே! அத்தகைய இடத்தில் வசிக்கின்ற பசுக்கள் சுகானுபவத்துடன்தானே இருக்கும்?

புரண்டு புரண்டு படுக்கிறார் குருமூர்த்தி. நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறது.

மனம் தெளிவில்லாமல் குழம்பிக் காணப்படும்போது உறக்கம் வராது.

எப்போது தனக்கு உறக்கம் வந்தது என்பது குருமூர்த்திக்குத் தெரியாது. பொசுக்கென கண் விழித்துப் பார்த்தால், மணி காலை ஐந்தரை. அவரது மனைவி அதற்கு முன்னரே எழுந்து விட்டிருந்தார்.

இன்னும் தூக்கத்துக்காக ஏங்கும் அசதியான விழிகளை மெள்ளக் கைகளால் துடைத்தபடி எழுந்தார்.

காலைக் கடன்களை முடித்து, நீராடல்அனுஷ்டானம் இத்யாதிகளை முடித்தார்.

பாரம்பரிய உடையான பஞ்சக்கச்சத்துடன் குருமூர்த்தியும், அவரது மனைவி மடிசாரிலும் மகா பெரியவாளைத் தரிசிக்கப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டார்கள்.

இரவில் சென்றது போன்ற சிரமம் இப்போது இல்லை. மெள்ள பொழுது விடிந்து விட்டதால், வெளிச்சம் வரத் துவங்கி விட்டது. ‘மகா பெரியவா திருநாமத்தை மனசுக்குள் உச்சரித்தபடியே இருவரும் நடந்தார்கள்.

பதினைந்து நிமிடத்திலேயே மகா பெரியவா முகாமிட்டிருந்த ரைஸ் மில்லை இருவரும் சுலபமாக அடைந்து விட்டார்கள்.

இவர்களுக்கு எதிரேபசுக் கொட்டடியில் அந்த மகான் அமர்ந்திருந்தார்.

ஒருவேளை நாம் வருவோம் என்று மகா பெரியவா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரோ? என்று ஓர் அசட்டு எண்ணம் குருமூர்த்திக்குத் தோன்றியது.

குருமூர்த்தியும் அவரது மனைவியும் மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தனர். எழுந்து நின்றனர்.

ஆனால் –                                       

மகா பெரியவா கண்டுகொள்ளவே இல்லை.

குருமூர்த்திக்கு உதறல்நம் மனதில் தோன்றிய எண்ணங்கள் மகா பெரியவாளுக்குத் தெரிந்து விட்டனவோ?

மகா பெரியவா தங்களைக் கவனிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது போல் பட்டது குருமூர்த்திக்கு. ‘மகா பெரியவா இதுபோல் இருக்க மாட்டாரேஇந்த இடத்தில் வேறு எந்த பக்தர்களும் இல்லையேஒருவேளை பார்த்தும் பாராமல் இருக்கிறாரா? சேச்சேமகான்கள் அப்படி இருக்க மாட்டார்களேஅப்படி என்றால், இந்தப் புறக்கணிப்புக்கு வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? – குழம்பினார் குருமூர்த்தி.

இதே நேரத்தில் ரைஸ் மில்லில் பணி புரியும் வேலைக்காரன் ஒருவன் இந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.

தன் வலக்கை விரல்களால் ஒரு சொடக்குப் போட்டு, வேலைக்காரனைத் தன் அருகே வருமாறு சைகை செய்தார் மகா பெரியவா.

ஓடி வந்து மரியாதையுடன் நின்றான்.

நீ ஒடனே போய் ரைஸ் மில் முதலாளியை அழைச்சிண்டு வா என்று அவனுக்கு உத்தரவு போட்டார் மகா பெரியவா.

தலையசைத்து விட்டு ஓடினான் வேலைக்காரன்.

இன்னும் மகா பெரியவா பார்வை குருமூர்த்தியின் பக்கம் திரும்பவில்லை. அவரும் எதுவும் பேசாமல், கைகளைக் கூப்பியபடி மகானைப் பார்த்த வண்ணம் இருந்தார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களுக்குள் ரைஸ் மில் உரிமையாளர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

மகா பெரியவா திருச்சந்நிதிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றார். பெரியவா சொல்லப் போகும் விஷயத்துக்காக அவரது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

குருமூர்த்திக்கும் ஏனோ பதற்றம் கூடியது. ‘முந்தைய நாள் இரவு நான் கொண்டிருந்த கவலை நியாயமற்றதா? மகா பெரியவாளைப் பற்றித் தவறாக நினைத்து விட்டேனா?

புன்னகையோடு உரிமையாளரின் நலனை விசாரித்த மகா பெரியவா, “இங்கே எத்தனை பசுக்களை வெச்சு நீ பராமரிச்சிண்டு வர்றே? என்று கேட்டார்.

சுமார் முப்பத்தஞ்சுலேர்ந்து நாப்பது பசுக்கள் வரை இருக்கும் சாமீ.

இத்தனை பசுக்கள் வெச்சிண்டிருக்கியா? ஆனா, பகல் வேளைல ஒரு பசுவைக்கூட நான் பாக்க முடியலையேஎல்லாம் எங்கே போறதுகள்? – எல்லாம் தெரிந்தவர், எதுவும் தெரியாதது போல் கேட்டார்.

எல்லாப் பசுக்களையும் வெளில மரத்துல ஆங்காங்கே கட்டி வெச்சிருக்கோம் சாமீ. இங்கே பசுக் கொட்டடில நீங்க தங்கி இருக்கறதுனால வெளில கட்டி இருக்கற பசுக்கள் உங்க பார்வைல படலைனு நினைக்கறேன் என்று பசுக்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்தை அடையாளம் காட்டினார் உரிமையாளர்.

எப்பவும் பசுக்களை அங்கதான் கட்டி வைப்பியா?

இல்லை சாமீநீங்க மாட்டுக் கொட்டடில தங்கணும்னு சொன்ன காரணத்துனால பசுக்கள் இருந்த இந்த இடத்தைக் காலி செஞ்சோம். இங்கே இருந்த பசுக்களை அவிழ்த்து, வெளில கொண்டு போய்க் கட்டி இருக்கேன். நீங்க இப்ப தங்கி இருக்கிற இந்த இடத்துலதான் பசுக்கள் எப்பவும் இருக்கும்.

அது சரிபகல் வேளைலகூட பசுக்களை நீ சொல்ற வெளி எடத்துல பாக்க முடியறதில்லியே? – கேள்வியைக் கேட்டு விட்டு பதிலுக்காக உரிமையாளரின் முகம் பார்த்தார் மகா பெரியவா.

ஆமா சாமீபகல் வேளைல பசுக்கள் வெளீல கட்டப்பட்டிருந்தா ஒங்களைப் பாக்க வர்ற பக்தர்களுக்கு இடைஞ்சலா இருக்கும். அதனால பொழுது விடிஞ்ச உடனேயே பசுக்களை எல்லாம் அவிழ்த்து விட்டுடுவோம். மேயறதுக்கு வயக்காட்டுக்குப் போயிடும்.

இங்கே மகா பெரியவாளுக்கும், ரைஸ் மில் உரிமையாளருக்கும் நடந்து கொண்டிருக்கிற உரையாடல், தனது சந்தேகத்தைப் போக்குவதற்காக மகா பெரியவா நடத்திக் கொண்டிருக்கிற திருவிளையாடல் என்பது குருமூர்த்திக்குத் தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

குருமூர்த்தியின் பக்கம் மகா பெரியவா இன்னமும் தன் பார்வையைத் திருப்பவில்லை.

அர்த்தபுஷ்டியான பார்வையோடு உரிமையாளரைப் பார்த்தார் மகா பெரியவா. “நீ சொல்றதைப் பாத்தா, அந்தப் பசுக்களுக்கு அதுகள் வசிக்கக் கூடிய தொழுவத்துல பகலிலும் இடம் இல்லைராத்திரியிலும் வெளீல கட்டி இருக்கறதுனால நிம்மதி இல்லை. வீட்டுக்குள்ள இருந்தவனை வீதில கொண்டு வந்து விட்டது போல் இருக்கோ? அப்படின்னா, இது எல்லாத்துக்கும் காரணம் நான்தானே? நான்தான் பசுக்கள் இருக்கிற இடத்துல வந்து உக்காந்துண்டு அதுகளை எல்லாம் வெளீல விரட்டி விட்டுட்டேன்.

ஹும்ம்ம்ம்என்னால ஒனக்கு நிறைய சிரமம். பசுக்களை முறையா பராமரிக்காததனால பால் மடில தங்காது. உனக்கு வர்ற பால் வியாபாரமும் போச்சு. இப்ப நான் தங்கி இருக்கிற மாட்டுத் தொழுவத்தை, எனக்காகச் சிரமப்பட்டு மாத்திக் கொடுத்திருக்கே

தவிர, கன்னுக்குட்டிங்களுக்கும் கஷ்டத்தைக் குடுத்துண்டு இருக்கேன். வேளா வேளைக்கு அதுகளுக்கும் தீனி போட்டுண்டு இருப்பே. அதையும் நான் கெடுத்துட்டேன். பாவம், கன்னுக்குட்டிகளும் எங்கோ வெளீல போய் மேய வேண்டி இருக்கும்.

ஆக, உனக்கு வந்திருக்கிற ஒட்டுமொத்த சிரமத்துக்கும் காரணம் நான்தான்மாட்டுக் கொட்டடியில் தங்கறேன்னு நான் சொன்ன ஒரு காரணத்தால்தானே இத்தனை கஷ்டமும்? நான் செய்த காரியம் ஒருவேளை பாவச் செயலோ? – சர்வேஸ்வர சொரூபமான மகா பெரியவா இப்படிச் சொன்னபோது, ரைஸ் மில் உரிமையாளர் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

உயர் அழுத்த டிரான்ஸ்பார்மரில் கைவைத்தது போல் பலத்தஷாக்குக்கு உள்ளானார் குருமூர்த்தி.

காரணம்மனைவியுடன் இவர் உள்ளே நுழைந்து அரை மணிக்கும் மேலாகிறது. இதுவரை குருமூர்த்தியின் பக்கம் தன் பார்வையை மகா பெரியவா திருப்பவில்லை.

திக்பிரமை பிடித்தவர் போல் ஆனார் குருமூர்த்தி. இவரையும் அறியாமல் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன.

ரைஸ் மில் உரிமையாளருடன் மகா பெரியவா தற்போது நிகழ்த்துகிற சம்பாஷணை ஏன் இன்று அதிகாலை நடக்க வேண்டும்? அதுவும் தான் வந்து நமஸ்கரித்து விட்டு, ஆசிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற வேளையில்பார்வையை என் பக்கம் சற்றும் திருப்பாமல் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறாரேநேற்று இரவு என் மனதில் பசுக் கொட்டடி தொடர்பாக என்னென்ன எண்ணங்கள் ஓடினவோ, அவற்றை அப்படியே புட்டுப் புட்டு வைப்பது போல் தெள்ளத் தெளிவாகப் பேசிக் கொண்டிருக்கிறாரேஇது எங்கு போய் முடியுமோ? மகானைத் தவறாக நினைத்து விட்டேனே என்று தவிக்க ஆரம்பித்தார் குருமூர்த்தி.

இந்த மகானை குருவாகக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவரது செயல்பாட்டில் ஒரு சந்தேகத்தைக் கொண்டு விட்டோமேஇது எத்தனை பெரிய தவறு என்று குருமூர்த்தி யோசிக்க ஆரம்பித்து, மகானிடமே மானசீகமாக மன்னிப்பும் கேட்க ஆரம்பித்தார்.

தவிர, ரைஸ் மில் உரிமையாளருடனான இந்த உரையாடல் இன்னும் முற்றுப் பெற்றதாகத் தெரியவில்லை. இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று பயப்படவும் செய்தார் குருமூர்த்தி.

மகா பெரியவாளைப் பார்த்துப் பெரிய கும்பிடு போட்டார் ரைஸ் மில் உரிமையாளர். “ஒங்களுக்காக இத்தனை செய்யறதுக்கு நான் குடுத்து வெச்சிருக்கணும் சாமீ. நீங்க வருத்தப்பட்டுப் பேசக் கூடாது. ஒங்களுக்காக மாட்டுத் தொழுவத்தைத் தயார் செய்து குடுத்ததை பெரிய பாக்கியமா நினைக்கறேன். என் வாழ்நாள்லயே நீங்க இங்க வந்த பிறகுதான் ஒரு சந்தோஷத்தை உணர்றேன் சாமீ – கண்கள் கலங்கப் பேசினார்.

சரிப்பாபசுக்களோட கஷ்டத்தையும் பாக்கணும், இல்லியா? தாய்ப் பசுவும் கஷ்டப்படறது; கன்னுக்குட்டிங்களும் கஷ்டப்படறது. மரத்தடில ஓய்வெடுக்கத் தாய்ப் பசுக்களுக்குப் போதுமான இடம் இல்லியோன்னு தோண்றது. கன்னுக்குட்டிங்க நினைச்ச நேரத்துல பாலைக் குடிச்சா உனக்கு என்ன மிஞ்சும்? – விடாமல்பசுக்களைக் குறி வைத்தே தனது சம்பாஷணையைத் தொடர்ந்தார் மகா பெரியவா.

கைகளைக் கட்டிக் கொண்டு கெஞ்சுகிற தொனியில் மகா பெரியவாளைப் பார்த்து ரைஸ் மில் உரிமையாளர் பேசினார்: “சாமீநீங்க ரொம்பப் போட்டுக் குழப்பிக்கிறீங்க. ஒங்களோட கவலை தேவையே இல்லாதது. நடமாடும் தெய்வமான நீங்க எங்க எடத்துல வந்து தங்கி இருக்கீங்க. இதுவே எத்தனையோ ஜன்மத்துல நான் செஞ்ச புண்ணியத்துனால கிடைச்சிருக்கு சாமீ.

பரவால்லை. போனது போகட்டும். இப்ப நான் சொல்றபடி செய்நீ என்ன பண்றேநான் இங்கே வர்றதுக்கு முன்னாடி எல்லா பசுக்களும் எங்கே கட்டப்பட்டிருந்ததோ, அது போல் இந்த மாட்டுக் கொட்டடில கொண்டு வந்து கட்டிடு. அதுங்களுக்கு நான் தொந்தரவு தர வேண்டாம். ஆனாலும், என்னை மாதிரி சந்நியாசிகள் தங்கறதுக்கு மாட்டுக் கொட்டடிதான் ரொம்ப உசத்தி. அதனால, இங்கயே ஒரு ஓரமா என்னை சுருட்டிண்டு நான் இருந்துடறேன். – மகா பெரியவா சொல்லி முடித்த வேளையில், ரைஸ் மில் உரிமையாளருக்குக் கண்ணீர் வர ஆரம்பித்தது.

வேண்டாம் சாமீஎல்லா பசுக்களையும் இங்கே கொண்டு வந்து கட்டினா, இந்த எடம் ரொம்ப அசுத்தமாயிடும். தவிர, எப்ப பார்த்தாலும் ஒரே சத்தமா இருக்கும். உங்களோட அமைதிக்கும், ஜபத்துக்கும் இடைஞ்சலா இருக்கும். ஒங்களுக்கு எடமே இருக்காது. ரொம்ப சிரமப்படுவீங்க. அந்த பாவத்தை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன் சாமீஎல்லாம் அப்படியே இருக்கிறபடி இருக்கட்டும் சாமீ. உங்களால எந்த ஒரு சிரமமும் எங்களுக்கு இல்லை.

சரி, இந்தப் பசுக்கள் சிரமப்படும்னு ஒங்களுக்கு யார் சொன்னா?! என்று ரைஸ் மில் ஓனர் மகா பெரியவாளிடம் உரிமையுடன் கேட்க

மகா பெரியவா பார்வை மெள்ள குருமூர்த்தி நின்று கொண்டிருக்கிற பக்கம் திரும்பியது.

கண் கண்ட தெய்வமான மகா பெரியவாளின் திருப்பார்வை மெள்ள குருமூர்த்தியின் பக்கம் விழுந்தது. ஆனால், அந்தப் பார்வையில் அனுக்ரஹம் தெரியவில்லை. சாந்தமும் இல்லாமல், கோபமும் இல்லாமல் காணப்பட்ட அந்தப் பார்வை ஒரு சில விநாடிகளுக்கு மட்டுமே குருமூர்த்தி மீது விழுந்தது.

மகா பெரியவாளின் அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்து கொள்ளக் கூடிய நிலைமையில் குருமூர்த்தி இல்லை.

ஆனால், அவர் உடல் பதறியது; உள்ளம் தடுமாறியது.

மொத்தத்தில்மகா பெரியவாளுக்கும் ரைஸ் மில் உரிமையாளருக்கும் நடந்த நீண்ட உரையாடல் முழுவதையும் கேட்ட பிறகு தன்னிலையில் அவர் இல்லை.

நேற்று இரவு மகா பெரியவாளைத் தரிசித்து விட்டு, பூஜகர் வீட்டில் படுத்தோமேஆனால், இரவு முழுக்க இதே எண்ணம் மனசுக்குள் ஓடித் தூக்கமே வராமல் தவித்தோமே..? என் மனசுக்குள் அடுத்தடுத்து ஓடிய எண்ணங்களை அப்படியே புட்டுப் புட்டு ரைஸ் மில் உரிமையாளரிடம் வைப்பது போல் எனக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாரேமகானைப் பற்றித் தவறாக நினைத்து விட்டோமேஇது எங்கு போய் முடியப் போகிறது? என்று கைகளைப் பிசைந்து கொண்டு தவித்தார்.

அவருடன் இருந்த மனைவி, கணவரின் வித்தியாசமான கோலத்தைப் பார்த்து விழித்தார். காரணம்தன் மனதுக்குள் ஓடிய இந்த எண்ணங்கள் பற்றி மனைவியிடம் குருமூர்த்தி சொல்லவே இல்லை.

மகா பெரியவாளைப் பார்த்து ரைஸ் மில் உரிமையாளர் சொன்னார்: “உங்களால இந்தப் பசுக்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லை. நீங்க ரொம்ப வருத்தப்பட்டுப் பேசுறதை என்னால ஜீரணிக்க முடியலை. இந்த மாட்டுத் தொழுவத்தை ஒங்களுக்காக நான் தயார் செய்து குடுத்ததை கஷ்டமாவோ, ஒரு வேலையாவோ நினைக்கலை. இந்த ஜன்மத்துல எனக்குக் கிடைச்ச பாக்கியமா இதை நினைக்கறேன்.

வேண்டாம்ப்பாஇனிமேலும் பசுக்களுக்கும் கன்னுக்குட்டிங்களுக்கும் கஷ்டம் குடுக்கக் கூடாதுன்னு தீர்மானிச்சுட்டேன். போனதெல்லாம் போகட்டும். இப்ப, நான் சொல்றபடி செய்வெளீல கட்டி இருக்கிற எல்லா மாடுங்களையும் அவிழ்த்துக் கொண்டு வந்து மீண்டும் இந்த மாட்டுத் தொழுவத்திலேயே கட்டிடு. நான் இதே தொழுவத்துல ஏதேனும் ஒரு மூலைல தங்கிக்கறேன். நான் சுருண்டு படுத்துக்கறதுக்கு சின்ன எடமே போதும்.

என்னைப் போன்ற சந்நியாசிகள் தங்கறதுக்கு இதுமாதிரி மாட்டுத் தொழுவங்கள்தான் உசத்தின்னு சொல்லுவா. அதுக்காக, ஒரு சின்ன இடம் போதும். நீ பசுக்களை அவிழ்த்து இங்கே கூட்டிண்டு வா என்றார் மகா பெரியவா.

ரைஸ் மில் உரிமையாளரின் கண்கள் கலங்கின. குரல் கமறியது. இரு கைகளையும் சேர்த்து உயர்த்தி, மகா பெரியவாளை நோக்கிக் கும்பிட்டார். “சாமீஅதெல்லாம் வேணாம்எல்லா பசுக்களையும் அவிழ்த்து மீண்டும் இங்கே கொண்டு வந்து கட்டினா, நீங்க தங்கி இருக்கிற இந்த எடம் அசுத்தமாயிடும். அதோடு, நீங்க தங்கறதுக்கு உண்டான எடம் ஒங்களுக்குப் போதுமானதா இருக்காது. ரொம்ப சிரமத்தைக் குடுத்த மாதிரி ஆயிடும்.

தவிர, இத்தனை மாடுங்களையும் இங்க கொண்டு வந்து கட்டினா, அதுங்க சும்மா இருக்குமா? அப்பப்ப ஏதாவது கூப்பாடு (சத்தம்) போட்டுட்டே இருக்கும். உங்களுக்கும் ஒங்களைத் தரிசிக்க வர்ற பக்தர்களுக்கும் இது ரொம்ப இடைஞ்சலா போயிடும். எனவே, தெரிஞ்சே அந்தத் தப்பை நான் பண்ணவே மாட்டேன். எல்லாம் இருக்கிறபடியே இருக்கட்டும்.

எங்களோட இந்தக் கிராமத்துலேர்ந்து நீங்க எப்ப கௌம்பறீங்களோ, அதுவரைக்கும் இதுதான் சாமீ ஒங்க எடம். திரும்பவும் ஒரு முறை உறுதியா சொல்றேன்உங்களால எங்களுக்கும், பசுக்களுக்கும், கன்னுக்குட்டிங்களுக்கும் எந்த ஒரு சிரமமும் இல்லை. – சொல்லி முடித்து விட்டு மேல்துண்டால், கலங்குகிற தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

சரிப்பாசிரமம் இல்லைன்னு நீ சொல்றேஆனால், இங்கே என்னைப் பாக்க வர்றவங்க, ‘இந்த ஒரு சந்நியாசியால இங்கே இருக்கிற நாப்பது மாடுங்களும், கன்னுக்குட்டிங்களும் எத்தனை கஷ்டப்படறது?னு நினைக்க மாட்டாங்களா?

என்று ரைஸ் மில் உரிமையாளரைப் பார்த்துக் கேட்ட மகா பெரியவா தன் பார்வையை அப்படியே மெள்ளத் திருப்பி குருமூர்த்தியின் மீது ஆழப் பதித்தார்.

குருமூர்த்தியின் முகம் அஷ்ட கோணலானது. ‘தப்பு செய்து விட்டோமேஒரு மகானுக்கு எது நல்லதுஎது கெட்டதுனு தெரியாதா? நான் யார்இதைப் பத்தி எல்லாம் நினைச்சுக் குழப்பிக்கறதுக்கு?

ரைஸ் மில் உரிமையாளர் மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாகச் சொன்னார்: “சாமீஇவ்ளோ தூரம் இந்த விஷயத்தை விடாம பேசிட்டிருக்கீங்களேஇங்க இருக்கிற யாராச்சும் உங்ககிட்ட வந்து இது பத்திச் சொன்னாங்களா? என்று சற்றே குரல் உயர்த்திப் பேச, குருமூர்த்தி நடுங்கிப் போனார்.

அப்படில்லாம் இல்லப்பாயாரும் என்கிட்ட வந்து சொல்லலை. சொன்னால்தானா? மனசுக்குள்ளயே நினைக்க மாட்டாங்களா? பசுக்களை போஷிக்கிறேன்னு வெளியே சொல்லிட்டு, அவற்றை எல்லாம் வெளீல அனுச்சுட்டு, இங்க இவர் தங்கி இருக்காரேனு நினைக்க மாட்டாங்களா? இதுதான் இவர் வெளீல பிரசாரம் பண்றகோ சம்ரட்சணத்தோட லட்சணமா? இப்படில்லாம் சிலருக்குத் தோணலாமே

ரைஸ் மில் உரிமையாளர் சுற்றிலும் பார்த்தார். அவரைத் தவிர, ஓரிரு மில் பணியாட்கள் ஆங்காங்கே பசுக்களுக்குத் தீனி வைத்துக் கொண்டிருந்தனர்.

குருமூர்த்தி தன் மனைவியுடன் பக்தி சிரத்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

குருமூர்த்தியிடம் தென்படும் முக மாறுதல்களைப் பார்த்து அவரது மனைவி வியப்புடன் பார்த்தாள்.

கணவரின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறதை என்பதை அறியக் கூடியவளா அவள்?

ரைஸ் மில் உரிமையாளர், “சாமீஇந்த எடத்துல நீங்க தங்கி இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். புடிச்சிருக்கு. ஒங்ககிட்ட யாராச்சும் வந்து இது பத்தி பேசினாங்களானு கேட்டாலும், சொல்ல மாட்டேங்கிறீங்க என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டார்.

யப்பாயாரும் சொல்லலை. ஆனா, அது மாதிரி மனசுக்குள்ள நினைச்சாலும் அது ஒண்ணும் தப்பு இல்லையேபோகட்டும்இப்ப நான் சொல்றதையாவது நீ பண்ணு என்று சொல்லி விட்டு, ரைஸ் மில் உரிமையாளரின் முகம் பார்த்தார் மகா பெரியவா. “எல்லா பசுக்களையும் திரும்ப இங்கே கொண்டு வந்து கட்டாவிட்டாலும், ரெண்டே ரெண்டு பசுக்களை மட்டும் கன்னுக்குட்டியோட என் எதிர்ல கொண்டு வந்து கட்டு. அவை எப்பவும் என் எதிர்லயே இருக்கட்டும். அதுங்க சாப்பிடுறதை நான் பாக்கணும். அதுங்களுக்குத் தண்ணீ காட்றதைப் பாக்கணும்.

அதுக்காக வெளீல இருக்கற பசுக்களுக்கு ஒண்ணுத்தையும் குறைச்சுடாத. வெளீல இருக்கிற பசுக்களுக்கு எப்பப்ப என்னென்ன ஆகாரம் ஒன்னோட சிப்பந்திகள் குடுக்கிறானு எனக்கு அப்பப்ப தெரியப்படுத்தணும். கன்னுக்குட்டிங்களையும் நன்னா கவனிக்கணும். இதை இப்பவே செய் என்கிற மகா பெரியவாளின் உத்தரவைக் கேட்டதும், அதற்குத் தலையசைத்துச் சம்மதம் தெரிவித்தார்.

சரி, இதற்கு மேலும் இந்த மகானிடம் பேச்சை வளர்த்த வேண்டாம் என்று தீர்மானித்த ரைஸ் மில் ஓனர், “சரி சாமீரெண்டு பசுக்களைக் கொண்டு வந்து கட்டிரறேன். ஆனா, ஒங்களுக்கு ரொம்ப பக்கத்துல வேணாம். கொஞ்சம் தள்ளியே  நீங்க இருக்கிற இந்த தொழுவத்தை ஒட்டி வெளிலஒங்க பார்வைல படும்படியா கட்டிடறேன் என்றார்.

தலையை இடமும் வலமுமாக அசைத்து, “கூடாது. தொழுவத்துக்குள்தான் கட்ட வேண்டும். அதுதான் முறை. ரெண்டும் என் கண் எதிர்ல இருக்கணும் என்றார் மகா பெரியவா.

உடனே காரியத்தில் இறங்கினார் ரைஸ் மில் உரிமையாளர். நல்ல புஷ்டியான இரண்டு பசுக்களைத் தானே அவிழ்த்து வந்து மகா பெரியவா இருக்கிற தொழுவத்தில் கட்டினார். அதன் கன்றுக்குட்டிகளையும் கொண்டு வந்து தாய்ப் பசுவுக்கு அருகில் கட்டினார்.

அங்கே பணி புரிகின்ற ஊழியர்கள் உடனே மலர் மாலைகளைக் கொண்டு வந்து பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகள் கழுத்தில் போட்டார்கள்.

இன்னொரு சிப்பந்தி வந்து குங்குமத்தையும் மஞ்சளையும் அவற்றின் மீது பூசி விட்டார்.

சாம்பிராணிப் புகையைக் கமழ விட்டார்கள். ஒரு ஆரத்தையையும் காண்பித்து, மணியடித்தார்கள்.

ஆக, மொத்தம்அந்த இடத்தைப் பார்த்தாலே லட்சுமிகரமாக மாறி விட்டது.

இப்போதுதான் குருமூர்த்தியை அர்த்தபுஷ்டியுடன் பார்த்த மகா பெரியவா, “என்ன, நேத்திக்கு ராத்திரி இதே எண்ணத்துல இருந்ததுனால சரியா தூங்கலையோ? என்று வெகு இயல்பாகக் கேட்டதும், ஆடிப் போனார் அவர்.

அடுத்து ஒரு சில வார்த்தைகள்தான் பேசினார் குருமூர்த்தி. “பெரியவா, என்னை மன்னிச்சிடுங்கோஒங்களோட அனுக்ரஹம் எனக்கு எப்பவும் வேணும். எங்களை ஆசி பண்ணுங்கோ என்று மனைவியுடன் விழுந்து நமஸ்கரித்தார்.

எதுவும் பேசாமல் தன் இரு திருக்கரங்களையும் உயர்த்தி, தம்பதியரை ஆசி புரிந்தார்.

தன் அத்யந்த பக்தனது மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப நடந்து, அவனது மனம் திருப்திப்படும் வகையில் நிதானமாக நடந்து கொண்ட மகா பெரியவாளை என்னவென்று சொல்வது

மகா பெரியவா போன்ற மகான்கள் செய்யக் கூடிய செயல்பாடுகளில் எந்த ஒரு காலத்திலும் தவறே நிகழாது. ஆனாலும், பக்தனைத் திருப்திப்படுத்த பரந்தாமனே ஒரு நாடகத்தை நடத்தி விட்டார்.