“இக்கட ரா…இக்கட ரா…”

கா பெரியவா அப்போது கலவையில் முகாமிட்டிருந்தார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு நகரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 43 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது கலவை.

மகா பெரியவாளுக்கு ரொம்பவும் இஷ்டமான இடம் இது. காரணம்மகா பெரியவாளது பரமகுரு மற்றும் பரமேஷ்டி குருமார்கள் (காஞ்சி காமகோடி பீடத்தின் 66-வது மற்றும் 67-வது பீடாதிபதிகள்) பிருந்தாவனம் (திருச்சமாதி) கொண்டிருப்பது கலவையில்தான்.

இரு குருமார்களும் நிரந்தர வாசம் கொண்டிருக்கிற கலவை பிருந்தாவனத்தைத் தரிசிக்கவும், இங்கு தவம் மேற்கொள்ளவும் மகா பெரியவா அடிக்கடி பயணப்பட்டு வந்து விடுவார்.

திருமணமாகி புகுந்த வீட்டில் வீட்டில் வசிக்கிற பெண், விசேஷ காலத்தில் தன் பிறந்த வீட்டுக்குப் புறப்படும்போது எந்த அளவுக்கு உற்சாகம் இருக்குமோ, அதுபோல்கலவை என்றால் மனம் நிறைய பூரிப்போடு புறப்பட்டுப் போய் விடுவார் மகா பெரியவா.

குறிப்பிட்ட சில விசேஷ தினங்களின்போது கலவையில் பிருந்தாவனம் கொண்டிருக்கிற பரமகுருவுக்கும், பரமேஷ்டி குருவுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன் பின் அந்த பிரசாதங்களை காஞ்சியில் இருக்கிற மகா பெரியவாளிடம் சேர்ப்பிக்க வேண்டி கலவையில் இருந்து வேத பண்டிதர்கள் புறப்பட்டு வருவார்கள்.

கலவை பிருந்தாவனங்களில் இருந்து பிரசாதங்கள் வந்திருக்கின்றன என்ற தகவல் மகா பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், அவரது திருமுகத்தில் கூடுதல் பிரகாசம் தென்படும். எந்த விதமான காத்திருப்பும் இல்லாமல் பிரசாதம் கொண்டு வந்தவர்களை உடனே தன் திருச்சந்நிதிக்கு வரச் சொல்லுவார்.

தன் குருமார்களுக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக அந்தப் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வார். அதில் ஹோம ரக்ஷை இருந்தால், எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வார். மற்றும் விபூதி, குங்குமம் எடுத்துக் கொள்வார். அதன் பின் பிரசாதம் கொண்டு வந்திருக்கும் வேத பண்டிதர்களை தன் சபையில் கவுரவப்படுத்தி அனுப்பி வைப்பார்.

இப்பேர்ப்பட்ட சிறப்பு கொண்ட கலவையில்தான் அன்றைய தினம் மகா பெரியவா முகாம் இருந்தார்.

மகா பெரியவா எங்கே முகாம் இருந்தாலும், அன்றைய தினம் அதிகாலையில்விஸ்வரூப தரிசனம் கண்டு தரிசிப்பதற்காக எண்ணற்ற பக்தர்கள் சிரத்தையுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அதாவது, பொழுது புலர ஆரம்பிக்கின்ற வேளையில் தன் பக்தர்களுக்கு முதல் தரிசனம் தருகின்றதைத்தான்விஸ்வரூப தரிசனம் என்பர். அதுபோல் அன்றைய தினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள், மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்தைக் காண்பதற்காகக் கூடி இருந்தனர்.

ஆந்திராவில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து இள வயதுள்ள ஒரு தம்பதியர், மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக அப்போதுதான் கலவை முகாமுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

இரவு முழுவதும் பயணித்து வந்த களைப்பு அவர்களின் முகத்தில் தென்பட்டது. அந்த இளம் மனைவியின் இடுப்பில் சுமார் மூன்று வயதுள்ள ஆண் குழந்தை காணப்பட்டது. குழந்தை தாயின் தோளில் முகம் புதைத்து, அயர்ந்த தூக்கத்தில் இருந்தது.

பயணித்து வந்த களைப்பு முற்றிலும் அகலும் விதத்தில் அவர்களுக்கு எதிர்பாராத விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.

ஆம்! கலவை முகாமுக்குள் இவர்கள் நுழைந்த மறு விநாடி, மகா பெரியவா தன் திருச்சந்நிதியில் இருந்து வெளியே வந்தார். காத்திருக்கும் தன் பக்தகோடிகளுக்கு விஸ்வரூப தரிசனம் தந்து அருளினார். ஏதோ, இந்த ஆந்திரத் தம்பதியர் வரும் நேரத்தில் அவர்களுக்காகவே விஸ்வரூப தரிசனம் அமைந்தது போல் பட்டது.

பரவசம் மேலோங்க…. மகானைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டனர். அதன் பின் மகான் உள்ளே சென்று விட்டார்.

நெடுந்தொலைவு பயணித்து வந்த களைப்பு, ஆந்திரத் தம்பதியரின் முகத்தில் தென்பட்டது.

முகாமில் தங்கி கைங்கர்யம் செய்து வரும் ஸ்ரீமடத்துச் சிப்பந்தி ஒருவர் அவர்கள் அருகே சென்றார். நீராடுவதற்கும் சிரமப் பரிகாரம் செய்து கொள்வதற்கும் உண்டான இடங்கள் எங்கே இருக்கின்றன என்று அவர்களுக்குச் சொன்னார். எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்தால், இங்கேயே உணவும் சாப்பிட்டு விட்டு, நிதானமாக மகா பெரியவாளைத் தரிசிக்கலாம் என்றும் எடுத்துச் சொன்னார்.

கலவை ஸ்ரீமடத்து சிப்பந்தியின் சத்தமான பேச்சு கேட்டு, ஆந்திர இளம் பெண்ணின் இடுப்பில் அதுவரை உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது ஆண் குழந்தை, கண் விழித்தது. தன் தாயிடமும் தந்தையிடமும் பேசிக் கொண்டிருக்கிற ஸ்ரீமடத்துச் சிப்பந்தியை சிநேகமாகப் பார்த்தது.

தூக்கம் கலைந்த காரணத்தால், அந்தக் குழந்தை அழவில்லை. அங்கே கூடி இருந்த பக்தர்களை வேடிக்கைப் பார்த்தது. கால்களில் சக்கரம் கட்டிக் கொள்ளாத குறையாக ஓடியாடி சேவை செய்கிற சிப்பந்திகளைக் கண் கொட்டாமல் அவர்கள் நகர்கிற திசையே பார்த்தது.

நீங்க ஆந்திராலேர்ந்து வந்திருக்கேள்னு நினைக்கறேன். உங்க குழந்தை முழிச்சுண்டுடுத்து போலிருக்கு. அதோ, அந்த இடத்துக்குப் போனேள்னா, பசும்பால் கிடைக்கும் என்றார் ஸ்ரீமடத்துச் சிப்பந்தி.

சிப்பந்தியின் பரிவான வார்த்தைகளுக்கு நன்றி சொன்ன அந்த இளம் தாய், “இந்த மகானைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிப்பதற்காகத் தொலைதூரத்தில் இருந்து வந்தோம். வந்த உடனே அவரது தரிசனம் எங்களுக்குக் கிடைத்ததே, அந்த மகானின் பெரிய ஆசிர்வாதம் என்று சந்தோஷப்படுகிறோம். அடுத்து நாங்கள் எதிர்பார்த்து வந்த பிரச்னையும் தீர்ந்து விட்டால், வேறு எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை என்று ஸ்ரீமடத்துச் சிப்பந்தியிடம் சொன்னபோது, தன்னையும் அறியாமல் இளம் தாயின் கண்களில் நீர்த் துளிகள் அரும்பின.

ஏன் அம்மாவின் கண்களில் நீர் வருகிறது? என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய வயதா, அவளது இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கு? குழந்தை தன் இஷ்டத்துக்கு வேடிக்கையும் சேஷ்டையுமாக இருந்தது.

அருகில் இருந்த அவளது கணவன், மனைவியை நேருக்கு நேராகப் பார்த்து ஜாடையால் ஆறுதல் படுத்தினான்.

ஸ்ரீமடத்துச் சிப்பந்தி சொன்னார்: “மகா பெரியவாளோட சந்நிதிக்குள்ள வந்தாச்சுன்னா, என்ன கவலை இருந்தாலும் பறந்துடும். பொறப்படுங்கோ, குளிச்சுட்டு ஆகாரம் முடிங்கோ. நீங்க என்ன நினைச்சுண்டு வந்தேளோ, எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா.

பெரியவா பாத்துப்பா

இந்த நம்பிக்கையில்தான் அவரது பக்தர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தார்கள்; இந்தக் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திரத்துத் தம்பதிகள் குளித்து, காலை டிபன் முடித்து விட்டு பெரியவா திருச்சந்நிதிக்கு வந்தார்கள்.

வழக்கம்போல் அவள் இடுப்பில் மூன்று வயது குழந்தை!

மகா பெரியவா தரிசனத்துக்குப் பக்தர்கள் கூட்டம் மளமளவெனச் சேர்ந்து விட்டது.

மகான் திருச்சமாதி கொண்டிருக்கும் இடத்துக்கு முன்னால்சுமார் பதினைந்தடி தொலைவு தள்ளி பக்தர்கள் நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.

அப்போது உள்ளே நுழைந்த ஆந்திரத்து இளம் தம்பதியர் எங்கே அமர்ந்து, இந்த மகானைத் தரிசிப்பது என்று அந்த இடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிகாலையில் கலவை முகாமுக்குள் நுழைந்தபோது இவர்களை வரவேற்று உபசரித்த ஸ்ரீமடத்துச் சிப்பந்தி தற்செயலாக அந்த இடத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். இடுப்பில் இருக்கிற குழந்தையைப் பார்த்ததும், நின்று நிதானித்து, இளம் பெண்ணைப் பார்த்து, “குளியல் எல்லாம் ஆச்சா? என்று சம்பிரதாயத்துக்கு விசாரித்து விட்டு, “வாங்கோ, என் பின்னாடி என்று தரையில் அமர்ந்திருக்கக் கூடிய பக்தர்களை சற்றே விலகச் சொல்லி முன்னால் நடந்தார்.

குழந்தையோடு ஆந்திரத் தம்பதியர் நடந்தார்கள்.

இந்தக் கலவை முகாமுக்குள் நுழைந்ததில் இருந்து, குழந்தையை இடுப்பிலேயே வைத்திருக்கும் இளம் பெண்ணை அங்கே கூடி இருக்கிற பக்தர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

இடுப்புல சுமந்துண்டு இருக்கிற ஆண் குழந்தைக்கு அநேகமா மூணு வயசு இருக்கலாம். நடத்தியே கூட்டி வரலாமேஇத்தனை வயது ஆகியும் ஏன் குழந்தையைத் தூக்க வேண்டும்? அப்படி என்ன ஒரு செல்லம் கொடுத்து வளர்ப்பது? என்று அந்த இளம் தாயை லேசான எரிச்சலுடன் பார்த்த பக்தகோடிகளும் இந்தக் கூட்டத்தில் உண்டு.

ஆனால், அந்த இளம் தாயாகட்டும்அவளது கணவன் ஆகட்டும்மகா பெரியவாளைத் தவிர, வேறு எந்தத் திசைப் பக்கமும் பார்வையைச் செலுத்தவில்லை.

பரப்பிரம்மம் இருக்கிற திசையையேஅவரது ஆசி வேண்டி ஏக்கத்துடன் பிரார்த்தித்த வண்ணம் விறுவிறுவென்று நடந்தனர். தரிசனத்துக்காகத் தரையில் அமர்ந்திருக்கிற பக்தர்கள் அனைவரையும் தாண்டிக் கூட்டி வந்து விட்டார் அந்தச் சிப்பந்தி.

கிட்டத்தட்ட மகா பெரியவா அருகே நின்று கொண்டிருக்கிறார்கள் ஆந்திரத் தம்பதியர். ‘இந்த இடத்தைத் தாண்டி கொஞ்சமும் நகரக் கூடாது என்று ஸ்ரீமடத்துச் சிப்பந்தி தரையில் ஓர் இடத்தை அடையாளம் காட்டினார். அங்கிருந்து மகா பெரியவா சுமார் பத்தடி தொலைவில் காணப்பட்டார். நேருக்கு நேராக தரிசனம் தந்து கொண்டிருந்தார். சிப்பந்தி அகன்று விட்டார்.

தரிசனம் தந்த பரவசத்தில் தங்களை மறந்தார்கள் ஆந்திரத் தம்பதியர். ஒரு சில பக்தர்கள்இவர்களுக்கு மட்டும் என்ன இத்தனை கவனிப்பு என்று முணுமுணுக்கவும் செய்தார்கள்.

இவ்வளவு கிட்ட வந்த பிறகாவது குழந்தையைக் கீழே இறக்கி விடலாமே…? என்று நினைத்தனர் சிலர்.

ஆனால், சட்டென்று குழந்தையைக் கீழே இறக்கி விடவில்லை அந்த இளம் தாய்.

இடது இடுப்பில் சுமந்து கொண்டிருந்த குழந்தையை வலது இடுப்புக்கு மாற்றினாள். அதன் பின் அந்தக் குழந்தையை வெகு ஜாக்கிரதையாகக் கீழே இறக்கினாள்.

இப்பதான் குழந்தையைக் கீழே இறக்கி விடுகிறாளோ? இனி அந்தக் குழந்தை பாட்டுக்கும் இந்த இடத்தில் இஷ்டத்துக்கும் நடந்து கொண்டிருப்பான் என்று அங்கிருந்த பெண்கள் சிலர் நினைத்தனர்.

குழந்தையைக் கீழே இறக்கிய இளம் பெண், மகா பெரியவா பார்வையில் அவன் இருக்குமாறு தரையில் அமர்த்தி வைத்தாள்.

குழந்தையும் உட்கார்ந்து விட்டதேமூணு வயசுள்ள குழந்தை எங்கே ஒரு இடத்துல உக்காந்திருக்கும்? ஓடியாடி விளையாடுமே என்று இவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டார்கள்.

தான் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு மகா பெரியவாளைப் பார்த்தது குழந்தை. சிரித்தது.

மகா பெரியவா பார்வையும் குழந்தை மேல் திரும்பியது.

இந்தப் பார்வை கிடைக்க வேண்டும் என்றுதானே, இத்தனை தொலைவு இவனை சுமந்து கொண்டு வந்திருக்கிறார்கள்?

இப்படி அப்படி குழந்தை அசைந்ததே தவிர, அந்தக் குழந்தை எழுந்து நிற்கவில்லை.

உட்கார்ந்த வாக்கிலேயே குழந்தை செய்யும் சேஷ்டைகளை அங்கு கூடி இருந்த பக்தகோடிகள் வாய் பிளந்து ரசித்தார்கள்.

தனக்கு எதிரே அமர்த்தி வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் மீது பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவாளின் திருப்பார்வை விழுந்தது.

தன் கையில் ஒரு வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அந்தக் குழந்தையை நோக்கி, “இக்கட ரா… (இங்கே வா) என்று ஒரு தாயின் பரிவுடன் தெலுங்கில் பேசி அழைத்தார் மகா பெரியவா.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே பழத்தைப் பெற முயற்சிப்பது போல் பெரியவா இருக்கிற பக்கம் கை நீட்டிக் குழந்தை சிரித்ததே தவிர, அதை வாங்குவதற்கு சற்றும் எழவில்லை.

அடுத்து, அந்த வாழைப்பழத்தின் தோலியை மகா பெரியவாளே தன் கைப்பட உரித்தார். பிறகு, அந்தக் குழந்தை பார்க்கும் விதமாகதோல் உரிக்கப்பட்ட பழத்தைக் குழந்தையைப் பார்த்து நீட்டி, “இக்கட ராஇக்கட ரா என்று மகா பெரியவா மீண்டும் அழைத்தார்.

இப்போதும் குழந்தை எழவில்லை. உட்கார்ந்த வாக்கிலேயே கைகொட்டிச் சிரித்தது.

இத்தனை சேஷ்டைகளையும் செய்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் நிலையைப் பார்த்து அதன் பெற்றோர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்கள். கணவன்மனைவி ஆகிய இருவரின் விழியோரங்களில் இருந்து முத்து முத்தாக நீர் கசிந்து கொண்டே இருந்தது.

கூடி இருந்த பக்தர்களுக்குத் திகைப்பு. ‘ஏன் பெற்ற தாயும் தகப்பனும் இதற்கு அழ வேண்டும்? மகா பெரியவாளின் பரிபூரண கிருபை குழந்தைக்குக் கிடைத்து விட்டது. குழந்தை எழுந்து நடந்து போய் வாழைப்பழத்தை வாங்கலேன்னா அதுக்கு ஏனோ இன்னிக்கு மூடு சரியில்லை போலிருக்கு. எத்தனை பாக்கியம் செஞ்சிருக்கு அந்தக் குழந்தை என்று பக்தகோடிகள் குழந்தையையும், பெற்றவர்களையும் அதிசயத்துடன் மாறி மாறிப் பார்த்தார்கள்.

அந்த வேளையில் தாய் ஆகப்பட்டவள் மகா பெரியவாளைப் பார்த்து அழுகையினூடே சொன்னாள்: “பெரியவாபழத்தை வாங்கிக்கவா வானு குழந்தையைப் பக்கத்துல கூப்பிட்டுண்டே இருக்கேள்ஆனா, ஆனா

மேலும் பேச முடியாதவாறு துக்கம் அவளது தொண்டையை அடைத்தது.

புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்தாள். பிறகு, “பெரியவாஅவனுக்கு நடக்க முடியாது. பிறந்ததில் இருந்தே இவன் இப்படித்தான் இருக்கான். யார் செஞ்ச பாவமோ, என்ன கர்மாவோஇந்தப் பிஞ்சு குழந்தை பாதிக்கப்பட்டிருக்கு பெரியவா. இது மாதிரி ஒரு குறை எந்த ஒரு குழந்தைக்குமே வரக் கூடாது பெரியவா என்று சொல்லி விட்டுக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

கணவனும் எவ்வளவோ தேற்ற முயன்றான். முடியவில்லை.

மகா பெரியவாளிடம் இவள் சொன்ன பதிலைக் கேட்டு, அங்கே கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் ஸ்தம்பித்துப் போனது.

அடடாஎன்ன தவறு செய்து விட்டோம்மகா பெரியவாஎங்களை மன்னித்து விடுங்கள். இத்தனை பெரியநடக்கின்ற வயதுள்ள குழந்தையை இவள் இடுப்பிலேயே சுமந்து கொண்டிருக்கிறாளேஅப்படி என்ன குழந்தை மீது விடாத பாசம் என்றெல்லாம் பரிகாசம் செய்து விட்டோமேஅழகான இந்த மூன்று வயது குழந்தைக்கு நடக்கும் சக்தி இல்லையா? நம்ப முடியவில்லையே இறைவாஎங்களை மன்னித்து விடு என்று அங்கிருந்த பெண்கள் சிலர் மானசீகமாக வருந்தினர்.

மகா பெரியவா ஏதும் பேசவில்லை. ஒரு சில விநாடிகளுக்குக் கண்களை மூடி தவத்தில் இருந்தார்.

குழந்தையின் தாயும் தகப்பனும் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தனர்.

பிறந்ததில் இருந்தே நடக்க முடியாத இந்தக் குழந்தை நடக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடுதானே ஆந்திராவில் இருந்து முதல் நாள் மதியம் புறப்பட்டு, கலவைக்கு வந்திருக்கிறார்கள்.

தம்பதியர்கள் ஒரு நம்பிக்கையோடு மகா பெரியவாளின் திருமுகம் பார்த்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் காணப்பட்டார்கள்.

தன் கையில் இருந்த வாழைப்பழத்தைக் குழந்தையை நோக்கிக் காண்பித்து மீண்டும் அழைத்தார் மகா பெரியவா.

அதுவரைஉட்கார்ந்த வாக்கிலேயே முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் ஆடியபடி சேஷ்டை செய்து கொண்டிருந்த குழந்தைஅடுத்த விநாடி அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டது.

ஆம்!

தன் இரு கால்களைத் தரையில் அழுத்தமாக ஊன்றி, மெள்ள்ள்ள எழுந்தது. நின்றது.

அவ்வளவுதான்

அங்கே நின்று கொண்டிருந்த அதன் தாயும் தகப்பனும் உற்சாகத்தின் உச்சத்துக்குப் போய் வாய் விட்டுக் கதறியே விட்டார்கள் – “பெரியவாபெரியவா என்று!

எழுந்து நின்ற குழந்தை கைகளைக் கொட்டியபடி மகா பெரியவாளை நோக்கி நடந்தது.

எவராலும் நம்ப முடியவில்லை.

முதல் முறையாக வாழ்வில் நடக்கின்ற காரணத்தால், தட்டுத் தடுமாறி மெள்ள நடந்து மகா பெரியவா அருகே சென்றது. மகா பெரியவா தன் திருக்கரத்தில் வைத்துக் கொண்டிருந்த வாழைப்பழத்தை இலக்காக வைத்து நடந்தது.

மகா பெரியவா அருகே சென்றவுடன் அவரது திருமுகம் பார்த்துப் புன்னகைத்தது. வலக் கையை நீட்டியது.

யோசித்துப் பாருங்கள்

ஒரு குழந்தை மூன்று வருடங்களாக நடக்க முடியாமல்ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருந்தால், அதன் தாயும் தந்தையும் படும் துயரம் சொல்லி மாளுமா?

எந்த சொத்தை விற்றாலாவது, இந்தக் குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்பதல்லவா அவர்களது பிரார்த்தனையாக இருக்கும்?!

அதற்கு ஏற்றாற்போல் இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் ஓரளவு வசதியானவர்கள். பணத்தால் என்னென்ன சிகிச்சைகளையும் பரிகாரங்களையும் செய்ய முடியுமோ, அனைத்தையும் ஒன்று விடாமல் செய்து பார்த்து விட்டார்கள்.

அதன் பின்தான் தெளிந்திருக்கிறார்கள் – ‘இது பணத்தால் முடியாத விஷயம்பக்தியால் மட்டுமே முடியும் என்று. இந்த ஞானம் வந்த பின் கலவைக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள்.

மகா பெரியவா தரிசனத்துக்கென்று கலவையில் கூடி இருந்த பக்தர்கள், தங்கள் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்த இந்த அதிசயத்தைப் பார்த்து விட்டு, பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் பிரமித்துக் காணப்பட்டனர்.

மகா பெரியவா அருகே சென்று சேர்ந்த குழந்தை, தன் பிஞ்சுக் கையை நீட்டி வாழைப்பழத்தைப் பெற்றது.

பார்ப்பதற்கு வேண்டுமானால், அது வாழைப்பழமாக இருக்கலாம். ஆனால், அது அந்தக் குழந்தைக்கு நல்வாழ்க்கையை அருளுகின்ற ஞானப் பழம்!

பழத்தைப் பெற்றுக் கொண்டு தானே அதை சாப்பிட்டபடி அம்மாவிடமும் அப்பாவிடமும் வந்தது.

இருவரும் வாரி அணைத்து அவனைத் தூக்கிக் கொஞ்சினார்கள். மீண்டும் கீழே இறக்கி விட்டார்கள்.

குழந்தை ஒரு இடத்தில் நிற்கவில்லை. வாழைப்பழத்தைச் சுவைத்துக் கொண்டே இங்கும் அங்கும் ஓடியது. மகானின் திருப்பார்வை இந்தக் குழந்தை மீது பட்டுவிட்டது அல்லவா?!

தாயும் தகப்பனும் மகா பெரியவாளுக்கு முன்னால் வந்து, விழுந்து விழுந்து நமஸ்கரித்தார்கள்.

கணவனைப் பார்த்து மனைவி ஏதோ ஜாடை காட்டதன் கைப்பைக்குள் வைத்திருந்த ஒரு புது வஸ்திரத்தை எடுத்துக் கீழே விரித்தான் கணவன்.

தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகள், கை வளையல்கள், அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கழற்றி அந்த வஸ்திரத்தில் வைத்தாள். கணவனைப் பார்த்து ஜாடை காட்டினாள். அவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் இவற்றைக் கழற்றி இதே வஸ்திரத்தில் மரியாதையுடன் வைத்தான்.

மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு மனைவி சொன்னாள்: “பெரியவாபகவான் எனக்கு வசதியைக் குடுத்திருக்கான். என் குடும்பத்துல தீராமல் இருந்த பெரும் துயரத்தை நீங்க தீர்த்து வெச்சிருக்கேள். அதற்குப் பதிலா இதுன்னு நினைக்கக் கூடாது. எம் மனசுல பட்டதை செஞ்சிருக்கேன். இந்தத் தங்கத்தை எல்லாம் மடத்தோட கார்யங்களுக்குப் பயன்படுத்திக்கணும். இதுதான் என் பிரார்த்தனை.

பக்தகோடிகள் அனைவரும் ஆச்சரியமாக இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆக ஆக மகா பெரியவா எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. எனவே, தாங்கள் காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தை மகா பெரியவா ஏற்றுக் கொள்வாரா என்கிற சந்தேகம் கணவன்மனைவிக்கு வந்தது.

சந்தேகப்பட்டது போலவே நடந்தது.

இவற்றை எல்லாம் எடுத்துக்குங்கோ என்பது போல் தம்பதியருக்கு வலக் கையால் ஜாடை காண்பித்த மகா பெரியவா, “இது எதுவும் இந்த சந்நியாசிக்கு வேண்டாம். எதானும் கோயிலுக்கு, அன்னதானத்துக்கு செலவு பண்ணுங்கோ. எல்லாத்தையும் எடுத்துக்குங்கோ என்று மூட்டை கட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார்.

மகானின் திடமான பேச்சுக்குப் பின் ஒன்றும் பேசாமல், அவற்றை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டார் கணவன்.

பிரசாதத்தைத் தன் சிப்பந்தியிடம் கொடுத்து, அவர்களிடம் கொடுக்கச் சொன்னார் மகா பெரியவா.

பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் குழந்தையை அருகே அழைத்தார்கள். குழந்தையுடன் மூவரும் நமஸ்காரம் செய்தார்கள்.

மூன்று வருடங்கள் எழுந்து நடக்காமல் இருந்த குழந்தையைப் பலரின் கண்ணெதிரே நடக்க வைத்த அந்தக் கலியுக தெய்வத்தின் சந்நிதியை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அங்கிருந்து அகன்றார்கள்.