கலியுக நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளை அவர் வாழ்ந்த காலத்தில் தரிசித்து ஆசி பெறுவதற்கு உலகம் முழுக்க இருக்கின்ற பிரபலங்களும், அன்பர்களும் தேடி வந்தனர்.
இப்படித் தேடி வருகிற பிரபலங்கள் பிற மதங்களைச் சார்ந்தும் இருந்தார்கள். ஆனால், தாங்கள் இன்ன மதத்தைச் சார்ந்திருக்கும்போது இந்து மதத் துறவியான மகா பெரியவாளை எப்படிச் சந்திப்பது… இதன் பிறகு ஏதேனும் சிக்கல் வருமா என்றெல்லாம் யோசிக்கவில்லை.
பக்தியும், ஞானமும், எளிமையும் எங்கு இருக்கிறதோ, அதைப் போற்ற வேண்டும்… வணங்க வேண்டும் என்பது மட்டுமே வருகின்ற பிரபலங்களின் எண்ணமாக இருந்தது.
இறை அவதாரமாக, ஞானத்தின் வடிவாக, எளிமையின் சொரூபமாகத் திருக்காட்சி தருகிற மகா பெரியவாளைப் பார்த்த மாத்திரத்தில் பரவசம் கொண்டனர். அவரது கண்களில் தெரிகிற ஒளியைப் பார்த்துப் பிரமித்தனர். முகத்தில் தென்படுகிற தேஜஸைப் பார்த்து வியந்தனர்.
மகா பெரியவாளின் சந்நிதிக்குள் நுழைந்த பின், தாங்கள் யார் என்கிற வி.ஐ.பி. அடையாளத்தை காஞ்சி ஸ்ரீமடத்தின் வெளியே துறந்து விட்டு சாதாரணமானவர்களாக உள்ளே நுழைந்தனர். மகா பெரியவாளின் அப்பாயின்ட்மெண்ட் எப்போது இவர்களுக்குக் கிடைக்கிறதோ, அதுவரை அமைதியுடன் காத்திருந்தார்கள். அவரது அழைப்பு வந்தவுடன், தரிசித்து ஆசி பெற்றனர்.
அவரைத் தரிசித்து வெளியேறிய பின்னர், ‘இத்தனை எளிமையாக ஒரு மகான் இந்தக் காலத்தில் வாழ முடியுமா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விஷயங்களை எல்லாம் துல்லியமாக நினைவு கூர்ந்து சொல்கிறாரே? இவற்றைக் கேட்ட பின் இவருடைய ஞான திருஷ்டி எப்பேர்ப்பட்டது என்பது பளிச்சிடுகிறதே… இப்பேர்ப்பட்ட ஒரு மகான், இந்த பாரத தேசத்தின் பொக்கிஷம் அல்ல… உலகத்துக்கே ஒரு பொக்கிஷம்‘ என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை – கருத்துக்களைப் பிரமிப்புடன் பதிவிட்டிருக்கிறார்கள்.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபலம் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்த அனுபவத்தை இப்போது பார்க்கலாம்.
1970-களின் துவக்கம் அது. நவராத்திரி காலம்…
நவராத்திரி என்றாலே, காஞ்சி ஸ்ரீமடத்திலும், காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெறும். நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காஞ்சியில் குவிவது வழக்கம்.
தற்போது சென்னை கே.கே. நகரில் வசித்து வருகிற பாலசுப்ரமண்யன் என்கிற அன்பர், காஞ்சி ஸ்ரீமடத்தின் பக்தர். மத்திய அரசுப் பணியில் இருந்தார். ஒவ்வொரு நவராத்திரியின்போதும் காஞ்சிபுரம் சென்று காமாட்சி அன்னையையும், மகா பெரியவாளையும் தரிசித்து விடுவார்.
சென்னையில் பிரபலமாக விளங்கிய சிம்சன் கம்பெனியினர் காஞ்சி காமாட்சி ஆலயத்தில் நவராத்திரியின்போது லட்சார்ச்சனை நடத்துவது வழக்கம். இந்த வழிபாடு அன்னைக்கு பிரமாண்டமாக நடக்கும். இதைத் தரிசிக்க இரண்டு கண்கள் போதாது. காமாட்சி அன்னை அன்றைய தினம் ஜொலிப்பாள்.
‘சிம்சன் கம்பெனி வழிபாட்டுக் குழுவினர்‘ நடத்துகிற இந்த லட்சார்ச்சனையில் காஞ்சி ஸ்ரீமடத்தின் பக்தர்கள் பலரும் இணைந்து சேவை செய்வது வழக்கம்.
அந்த வகையில் மேலே சொன்ன பாலசுப்ரமண்யனும் சிம்சன் குழுவினருடன் காஞ்சி காமாட்சி ஆலயத்துக்குச் சென்றிருக்கிறார்.
இந்தக் குழுவில் இருக்கிற அங்கத்தினர்களுக்கு ஒரு நடைமுறை உண்டு. அதாவது, காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் இவர்கள் அர்ச்சனை செய்கிறபோது முதல் அர்ச்சனையை மகா பெரியவா பெயரிலும், அடுத்து இன்னொரு அர்ச்சனையைத் தங்கள் பெயரிலும் செய்து கொள்வது வழக்கம். அன்றைக்கு காமாட்சியின் திருச்சந்நிதிக்கு வந்திருக்கிற அனைவரும் இதுபோல் செய்து கொண்டனர்.
சிம்சன் லட்சார்ச்சனை குழுவினருக்கு மகா பெரியவா என்றால், அந்த அளவுக்கு பக்தி!
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை, வழிபாடு எல்லாம் முடித்து விட்டு காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் தேனம்பாக்கம் வந்தார்கள்.
காரணம் – மகா பெரியவா அப்போது இங்குதான் முகாமிட்டிருந்தார்.
அமைதி தவழும் அற்புதமான இடம் தேனம்பாக்கம். பிரம்மபுரீஸ்வரர் என்கிற இறைவன் அருளுகின்ற திருத்தலம் இது. இந்த ஆலயத்தை ஒட்டித்தான் மகா பெரியவாளின் முகாம்.
கிணறு, திருக்குளம், கோசாலை என்று மகா பெரியவாளின் முகாமுக்கு ஏற்றவை எல்லாம் தேனம்பாக்கத்தில் தாராளமாகவே உண்டு.
அங்குள்ள கிணற்றுக்கு அருகே அமர்ந்துதான் பக்தர்களுக்கு தரிசனம் தருவார் மகா பெரியவா. கிணற்றுக்கு இந்தப் பக்கமாக பக்தர்கள் வரிசையில் வந்து கொண்டிருப்பார்கள். கிணற்றுக்கு அந்தப் பக்கம் மகா பெரியவா அமர்ந்து கொண்டிருப்பார். வருகிற ஒவ்வொரு பக்தர்களையும் பார்த்து, அவர்களின் குடும்ப நலன் விசாரித்து, ஆசிர்வதித்து பிரசாதம் தந்து அனுப்புவார்.
அன்றைய தினம் சிம்சன் லட்சார்ச்சனை குழு அன்பர்கள் மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக வரிசையில் வந்து கொண்டிருந்தனர். காமாட்சி அன்னை ஆலயத்தில் மகா பெரியவா திருப்பெயருக்கு செய்த அர்ச்சனை பிரசாதத்தை அனைவரும் மகா பெரியவாளிடம் சமர்ப்பிப்பது ஒரு வழக்கம். அதுபோல் வரிசையில் வருகிற லட்சார்ச்சனைக் குழு அன்பர்கள் பிரசாதத்தைக் கொடுத்து, நமஸ்கரித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
மத்திய அரசு ஊழியரான பாலசுப்ரமண்யனும் தான் அர்ச்சனை செய்த பிரசாதத்தை மகானிடம் சமர்ப்பித்தார். குடும்ப நலனை விசாரித்து, இவருக்கும் பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.
அப்போது டெல்லியில் லோக்சபா சபாநாயகராக இருந்த ஜி.எஸ். தில்லான் (முழுப் பெயர் குர்தயால் சிங் தில்லான்) மகா பெரியவாளைத் தரிசிப்பதற்கு வந்திருந்தார். அவருடன் அவரது மனைவி, மகன், மருமகள், மற்றும் பேரக் குழந்தைகளும் உடன் வந்திருந்தனர். இவர்களுக்குப் பாதுகாப்பாக டெல்லியில் இருந்து உயர் அரசு அதிகாரிகள் சிலரும், தமிழக காவல்துறையினரும் வந்திருந்தனர்.
விழிகளில் ஈரம் ததும்ப மகா பெரியவாளை சற்று நேரம் உற்றுப் பார்த்த ஜி.எஸ். தில்லான், சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். எழுந்து கைகளைக் கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். அவரையும் அறியாமல் ஒரு பரவசம் அவருடன் ஒட்டிக் கொண்டிருந்தது. உடன் வந்த அவரது குடும்பத்தினரும் நமஸ்கரித்தனர்.
ஜி.எஸ். தில்லானை மகா பெரியவா நிமிர்ந்து பார்த்தார்.
அவரது பணி, இருப்பிடம் போன்றவற்றைப் பற்றி விசாரித்தார்.
எல்லாவற்றுக்கும் பவ்யமாகப் பதில் சொன்னார் தில்லான்.
“யார் சொல்லி என்னை தரிசனம் பண்றதுக்குக் காஞ்சிபுரம் வந்தேள்?“ என்று தில்லானைப் பார்த்து ஒரு புன்னகையுடன் கேட்டார் பெரியவா.
இரு கைகளால் வணங்கியபடியே தில்லான் பேசினார்: “கடந்த வாரம் இத்தாலி நாட்டில் ரோம் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கே அந்த தேசத்தின் ராணியை மரியாதை நிமித்தமாகவும், இந்திய அரசின் பிரதிநிதி என்ற முறையிலும் சந்தித்தேன். ராணி எனக்கு சிறப்பு விருந்து கொடுத்தார்.
பிரமாண்டமான அவரது மாளிகையைச் சுற்றிப் பார்க்க வருமாறு என்னை அழைத்தார் ராணி.
ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே வந்தேன். அப்படிச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வரும்போது தங்கள் மாளிகையின் வழிபாட்டு அறை இதுதான் என்று ஒரு அறையைக் காண்பித்தார். இவர்கள் வழிபாட்டு அறையில் என்ன இருக்கும் என்று ஆர்வமாக உள்ளே நுழைந்து பார்த்தேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். தங்களுடைய மிகப் பெரிய படம் ஒன்று அந்த அறைக்குள் மாட்டப்பட்டிருந்தது.
அதுவரை தங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. ‘இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சந்நியாசி போல் இருக்கிறாரே‘ என்று நான் யோசித்தேன். எப்படி ஒரு கிறிஸ்தவரான ராணியின் வழிபாட்டு அறையில் இந்திய சந்நியாசியின் படம் இருக்கும் என்று குழம்பினேன்.
எனது குழப்பத்துக்கு விடை தரும் விதத்தில் ராணியே பேச்சை ஆரம்பித்தார்: ‘நானும் எனது குடும்பத்தினரும் இந்தியாவுக்குச் சென்றபோது இந்த சந்நியாசியைத் தரிசித்தோம். இவரைப் பார்த்தவுடன் எங்களையும் அறியாமல் ஒரு வித ஆன்மிக உணர்வு ஆட்கொண்டது. நாங்கள் அனைவரும் அவரை வணங்கினோம். மறக்க முடியாத தரிசனம் அது. அதில் இருந்து இவர் எங்கள் குரு ஆகி விட்டார். எனவேதான், வழிபாட்டு அறையில் இவருக்கு நிரந்தரமான இடம் தந்து விட்டோம்‘ என்று ராணி சொல்லி முடித்ததோடு, காஞ்சி ஸ்ரீமடத்தின் சிறப்பு பற்றியும், தங்களது எளிமை மற்றும் துறவு பற்றியும் வியக்க வைக்கும் பல தகவல்களைச் சொன்னார்.
ரோம் நகரிலேயே நான் முடிவு செய்து விட்டேன் – இந்தியாவுக்குச் சென்ற அடுத்த நிமிடமே குடும்பத்துடன் சென்று தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று. இந்தியாவில் – அதுவும் பக்தி உணர்வு அதிகம் கொண்ட ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்த நான், இது நாள் வரை தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாதது எனக்குப் பெரும் குற்ற உணர்வாக இருக்கிறது. பரவாயில்லை… இனியாவது காலம் தாழ்த்தாமல் தங்களைத் தரிசிக்க வந்து விட்டேன்“ என்று பெருமையுடன் சொன்ன தில்லான் தொடர்ந்து,
“உலகத்தில் இருக்கிற உல்லாச நகரங்களுள் ஒன்றான ரோமில் வசித்து வருகிற ஒரு ராணி, தங்களை இந்த அளவுக்கு ஆராதிக்கும்போது இங்கே (இந்தியா) இருப்பவர்கள் உங்களை எந்த அளவுக்குக் கொண்டாட வேண்டும்?! அதனால்தான் நானும் ஓடி வந்து விட்டேன், காஞ்சிபுரத்தை நோக்கி“ என்று நிறுத்தினார் ஜி.எஸ். தில்லான்.
மகா பெரியவா புன்னகைத்தார். “இப்ப இந்தியாவுக்கு மட்டும் நீ ஸ்பீக்கர் இல்லை. இத்தாலிக்கும்தான்“ என்றார் நகைச்சுவையாக.
இதைக் கேட்டு தில்லான் உட்பட அனைவருமே சிரித்தனர்.
அதன் பிறகு சீக்கிய மதத்தின் மகிமை பற்றி சில விஷயங்களை தில்லானுக்கு எடுத்துரைத்தார் மகா பெரியவா. அதோடு, சீக்கிய மதத்தின் ஐந்து குருமார்களைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னார்.
ஜி.எஸ். தில்லான் வாய் பிளந்து இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு மகா பெரியவாளை மீண்டும் ஒரு வணங்கி, “நான் சார்ந்திருக்கிற சீக்கிய மதம் பற்றி என் குருமார்கள் இதுவரை சொல்லிக் கேட்டிராத பல தகவல்களை தாங்கள் எனக்குச் சொல்லி இருக்கிறீர்கள்“ என்று கண்ணீர் மல்கப் பேசினார்.
அங்கே கூடி இருந்த பக்தர்களும், சீக்கிய மதத்தின் பெருமை பற்றி மகா பெரியவா இத்தனை விஷயங்களைப் பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டனர்.
ஜி.எஸ். தில்லான், மகா பெரியவாளைப் பார்த்து, “என் ஆன்மிகக் கண்களைத் தாங்கள் திறந்து விட்டிருக்கிறீர்கள்“ என்று மீண்டும் நமஸ்கரித்தார்.
இவருக்கும் உடன் வந்தவர்களுக்கும் பிரசாதம் தந்து விடை கொடுத்தார் மகா பெரியவா.