மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அப்போதே ஒரு வழக்கத்தைக் கொண்டு வந்தார் மகா பெரியவா.
1960-களின் துவக்கத்தில் ஆரம்பமான இந்த நடைமுறை ஆன்மிக அன்பர்கள் மத்தியில் மட்டுமல்ல… நாத்திக அன்பர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சென்னை நகரில் அமைந்திருக்கிற அரசு மருத்துவமனைகளுக்கு காஞ்சி காமகோடி மடத்தின் தன்னார்வத் தொண்டர்கள் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மகா பெரியவாளின் பிரசாதங்களை வழங்குவார்கள். விபூதி, குங்குமம், கல்கண்டு, பழங்கள் என்று இந்தப் பிரசாதங்கள் நீளும்.
காஞ்சி ஸ்ரீமடத்தின் தொண்டர்கள் வருகிற நாளன்று அவர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பார்களாம் நோயாளிகள். சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி உட்பட ஓரிரு மருத்துவமனைகளில் பிரசாதம் வழங்கும் இந்த வழக்கம் அறிமுகமானபோது அதற்குப் பலத்த வரவேற்பு இருந்தது.
பிரசாதம் பெற்றுக் கொள்கிற நோயாளிகள், இதை வாங்கியவுடனேயே தங்கள் வியாதியின் வீர்யம் குறைந்தது போல் உணர்ந்ததாகவும், இறைவன் மீது ஒரு நம்பிக்கையே பிறந்து விட்டதாகவும் மகிழ்வோடு தெரிவித்தார்கள். அதோடு, இந்தத் தன்னார்வத் தொண்டர்களிடம், “அந்த சாமிகிட்ட (மகா பெரியவா) எங்களுக்கு மோட்சம் கிடைக்கணும்னு பிரார்த்திக்கச் சொல்லுங்க“ என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் வைப்பார்களாம்.
மகா பெரியவாளின் திருக்கரத்தால் பிரசாதம் பெற்று விட்டால், அது மோட்ச கதிக்குத்தான் என்பது அப்போது அந்த நோயாளிகளுக்குத் தெரியாததில் வியப்பில்லை.
மகா பெரியவா அன்று துவங்கிய இந்தப் பிரசாத விநியோகம் இன்றைக்கும் இருந்து வருவது, பாராட்ட வேண்டிய விஷயம். மகா பெரியவாளுக்கு அடுத்து பீடாதிபதியாக வீற்றிருக்கும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் இதைப் பிரதான பணியாக நடத்தி வருகிறார்கள்.
இன்றைக்கு ஜெனரல் ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, தாம்பரம் சானட்டோரியம் உட்பட பல மருத்துவமனைகளுக்குக் காஞ்சி தொண்டர்கள் இந்த கைங்கர்யத்தை செய்து வருகிறார்கள்.
தீபாவளி என்றாலே – எண்ணெய்க் குளியலும், கங்கா ஸ்நானமும்தான் பிரதானம்.
வீடுகளில் இருப்பவர்களுக்கு இந்தக் குளியல் பெரிய விஷயமில்லை. ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளைப் பற்றி தீபாவளிக் காலத்தின்போது நாமெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
ஆனால், அவர்களுக்கும் தீபாவளி நீராடலின் பலன் போய்ச் சேர வேண்டும் என்று மகா பெரியவா விரும்பினார்.
சென்னை நகரத்தின் அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்த பலனை அடைவார்களாம்.
எப்படித் தெரியுமா?
கங்கை நீர் சொம்புகள், நல்லெண்ணெய் கிண்ணங்கள், பெரிய பெரிய பாத்திரங்களில் இனிப்பு பூந்தி – இப்படி அனைத்தையும் எடுத்துக் கொண்டு, மகா பெரியவாளின் தொண்டர்கள் அரசு மருத்துவமனைகளை தீபாவளியன்று அதிகாலையில் முற்றுகையிடுவார்களாம்.
ஒரு மாவிலையை எண்ணெய்க் கிண்ணத்துள் விட்டு நோயாளின் தலையில் மந்திரம் சொல்லி லேசாகத் தெளிப்பார்கள். அடுத்து கங்கைச் சொம்புக்குள் இன்னொரு மாவிலையை விட்டு கங்கா நீரையும் அதே நோயாளியின் தலையில் தெளிப்பார்கள். இனிப்பு எடுத்துக் கொள்ளக் கூடிய நோயாளியாக இருந்தால் அவர்களுக்கு பூந்தியும் வழங்கப்படும்.
இருந்த (படுத்த) இடத்தில் இருந்தபடியே தீபாவளியையும் கொண்டாடிய நிறைவை அந்தந்த மருத்துவமனை நோயாளிகளுக்கும் வழங்கி இருக்கிறார் மகா பெரியவா.