எல்லாமே நடை யாத்திரைதான். கல்லிலும் முள்ளிலும் தனது பிஞ்சுப் பாதங்கள் நோக பூமியில் கால் பதித்து, தன் யாத்திரையை மேற்கொள்வார் மகா பெரியவா.
பல்லக்கில் செல்வதை முற்றிலும் நிறுத்தி விட்டு, ‘இனி பாத யாத்திரைதான்‘ என்று மகா பெரியவா அறிவித்தபோது அவரது பக்தர்கள் துடித்துப் போனார்கள். ‘பெரியவா சிரமப்படக் கூடாது‘ என்று கதறி அழுதார்கள். ஆனால், இதில் மகிழ்ந்த ஒரே உள்ளம் – பூமாதேவிதான்!
ஆம்! காரணம் இல்லாமல் இல்லை.
சாட்சாத் சர்வேஸ்வர அவதாரமான மகா பெரியவாளின் வெண்பட்டுப் போன்ற அந்தத் திருப்பாதங்கள் தன் மேல் பதியும்போது அந்த பூமாதேவியே பரவசப்பட்டு நெகிழ்ந்து போவாள். கிடைத்தற்கரிய திருவடி தீட்சையே சர்வேஸ்வரனிடம் இருந்து தனக்குக் கிடைத்தது போல் உளம் மகிழ்ந்து, தன் மேல் படும் அவரது பாதங்களை மெள்ளத் தாங்கிப் பிடித்து அடுத்தடுத்த அடிகளை அவர் எடுத்து வைப்பவதற்கு இதமாக உதவுவாள்.
எத்தனையோ பக்தர்கள் மகா பெரியவா பயணிக்க வேண்டும் என்பதற்காகப் புத்தம் புது கார் வாங்கி, அதில் அமர்ந்து பயணிக்குமாறு மகானை அழைத்திருக்கிறார்கள்.
காரோடு வந்தவர்கள் மனம் சங்கடப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக – நியாயமான ஒரு காரணத்தைச் சொல்லி அன்போடு மறுத்து அவர்களை ஆசிர்வதித்து அனுப்பி விடுவார்.
மகா பெரியவா பயணிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கென்று ஒரு புது கார் வாங்கினார் மதுரையில் பிரபலமாக இருந்த பி.டி.ராஜன். அப்போது அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தார். அரசியல்வாதியும்கூட!
மதுரையில் வடக்கு மாசி வீதியில் தங்கி இருந்த மகா பெரியவாளை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக – ஒரு புது காரையே வாங்கியவர் பி.டி. ராஜன். மகா பெரியவா மேல் அவ்வளவு பக்தி அவருக்கு.
எனவே, தான் வாங்கிய புது காரை மகா பெரியவா தங்கி இருந்த வடக்கு மாசி வீதி முகாம் வாசலில் கொண்டு வந்து நிறுத்தினார்.
அப்போது மதுரையில் மூன்று நாட்களாகக் கன மழை. சேறும் சகதியுமாக இருக்கிற சாலையில் காரில் சென்றால், அங்குள்ள புழு, பூச்சிகள் கார் டயரில் சிக்கி இறக்க நேரிடும்… இது சந்நியாச தர்மத்துக்கு எதிரானது என்று சொல்லி புன்னகையுடன் மறுத்தார் மகா பெரியவா. மழை நின்றவுடன் ஓரிரு நாட்கள் கழித்து பி.டி. ராஜனுடன் சாலையில் நடந்தே சென்று அன்னை மீனாட்சியையும், அப்பன் சொக்கநாதரையும் தரிசித்தார்.
மகா பெரியவா ஒரு முறை கிராமம் ஒன்றில் முகாமிட்டிருந்தார். தன்னைத் தேடி வந்து கொண்டிருந்த ஒரு சில பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.
தற்செயலாக அப்போது மகா பெரியவாளின் திருப்பாதங்களைக் கவனித்தார் உடன் இருந்து கைங்கர்யம் செய்த தொண்டர் ஒருவர்.
கானின் ஒரு பாதத்தின் மேற்பகுதியில் துளி ரத்தம் ஒரு பொட்டு போல் காணப்பட்டது. அதுவும் அப்போது காய்ந்து போயிருந்தது. எப்போது என்ன ஆனதோ, தெரியவில்லை. ‘என்னது… மகானுக்குத் தொண்டு செய்து வருகிற நாம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டு விட்டோம்? லோக நாயகனின் திருப்பாதத்தில் ரத்தமா?‘ என்று அதிர்ச்சியானார்.
தொண்டர் இப்படி யோசித்துக் கொண்டு, மகா பெரியவா முகாமிட்டிருந்த இடத்தை ஒரு நோட்டம் விட்டார்.
அப்போது அங்கே சென்று கொண்டிருந்த எறும்புக் கூட்டம் ஒன்று, ரத்தத்தின் வாசனை அறிந்து, மகா பெரியவா திருப்பாதத்தில் மெள்ள மெள்ள ஏறலாயிற்று. ரத்தத்தின் சுவை பெரும்பாலான ஜீவ ராசிகளுக்கும் பிடிக்கும். எனவே, கூட்டமாக வந்த எறும்புகள், மகா பெரியவாளின் காலில் ஏறி, சிவப்பாகத் தென்பட்ட அந்த ரத்தப் பொட்டைச் சுற்றிலும் மாநாடு போட்டுக் கூத்தாடின. ஆனால், மகா பெரியவா இதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. தன்னைத் தரிசிக்க வருகிற பக்தர்களை ஆசிர்வதிப்பதிலேயே கவனத்துடன் இருந்தார்.
இதைக் கண்ட தொண்டர் மேலும் அதிர்ச்சி ஆனார். மகா பெரியவாளை நெருங்கி, விஷயத்தை அதிர்ச்சியுடன் சொல்லி, ‘எறும்புகளை அப்புறப்படுத்தி விட்டுத் தங்களின் திருப்பாதத்தை சுத்தம் செய்கிறேன்‘ என்றார்.
காருண்யமூர்த்தியான மகா பெரியவா இதற்கு அனுமதி வழங்குவாரா? வழங்கவில்லை.
“பக்தர்களான நீங்கள் அனைவரும் என் திருப்பாதங்களை சரண் புகுந்து வேண்டுகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது ஆசிகளை வழங்கி, அரவணைத்துக் காக்கின்றேன். அதுபோல் என் பாதத்தை சரண் புகுந்த இந்த எறும்புகளை எப்படி அப்புறப்படுத்தலாம்? அது சந்நியாச தர்மத்துக்கு எதிரானது. எனவே, எறும்புகளுக்கும் எனது ஆசிர்வாதம் தேவை போலிருக்கிறது. அதனால்தான், இந்தப் பாதத்தை சரண் புகுந்துள்ளன போலும். காலில் தென்படுகிற ரத்தத் துளியை சுவைத்து முடித்து விட்டு அவை அனைத்தும் தங்கள் விருப்பம் போல் திரும்பட்டும். நீ அடுத்த வேலையைப் பார்“ என்று அனுப்பி விட்டார்.
கிராமங்களில் தங்குகிறபோது கொசுக் கடிகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர். தன் மேல் ஊர்ந்து செல்கிற பாம்பையும் அனுமதித்து ஆதரித்தவர்.
‘காஞ்சி மகா பெரியவாளைப் போன்ற ஒரு மகானை இந்தக் காலத்திலும் சரி… இனி வரும் காலத்திலும் பார்க்க முடியாது‘ என்று பலரும் கண்கள் கலங்க நெகிழ்ந்து சொல்வதற்குக் காரணம் என்ன?
ஒரே விஷயம் – மகா பெரியவா கொண்டிருந்த எளிமை!
இரண்டாவது விஷயம் – எதன் மேலும் பற்று இல்லாமல் வாழ்ந்த தன்மை.
மூன்றாவது விஷயம் – சகல ஜீவராசிகளையும் (மனிதர்கள் உட்பட) ஒரே நிலையில் வைத்துப் பார்த்த நிலை.
ஏழை, பணக்காரர் – ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தன் சந்நிதிக்கு வந்தால், முதல் அழைப்பு ஏழைக்குத்தான். இதற்கான காரணத்தையும் மகா பெரியவாளே தன் தொண்டர்களிடம் சொல்வாராம்: ‘அவாளுக்கு என்னை விட்டா யார் இருக்காடா?‘
ஒரு தாயின் வாஞ்சை என்று இதைச் சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
அவரது ஜீவன் (தேகம்) இன்றைக்கும் உறைந்து வருகிற புனித நகராம் காஞ்சிபுரம் ஒரு முறை சென்று அவரது திருப்பாதங்களை உங்கள் கண்ணீரால் கழுவிப் பாருங்கள்! அவர் உங்களை அரவணைத்து ஆட்கொள்வதை ஆத்மார்த்தமாக உணர முடியும். இன்றைக்கும் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கிறார் மகா பெரியவா!