“எல்.ஐ.சி.யில் எத்தனை மாடி?”

கா பெரியவா 1950-களின் இறுதியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.

மகானைத் தரிசித்து அவரது ஆசிகளைப் பெறுவதற்காக நுங்கம்பாக்கத்தில் குவியத் துவங்கினார்கள் பக்தர்கள்.

மகா பெரியவா வெளியூர்களில் முகாமிட்டிருக்கிற நாட்களில் முகாமில் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய நேரம் போக, அருகில் இருக்கிற பல இடங்களுக்கும் விசிட் செய்வார். கோயில்கள், கோசாலைகள், தன் பக்தர்களது இல்லங்கள், தொழில் நிறுவனங்கள் என்று கிடைக்கிற நேரத்துக்கு ஏற்றாற் போல் மகானது உள்ளூர் யாத்திரை அமையும்.

அதுபோல் நுங்கம்பாக்கத்தில் தங்கி இருக்கின்றபோது அன்றைய தினம் சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கிறதி ஹிண்டு நாளிதழ் அலுவலகத்துக்கு மகா பெரியவா செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நாளிதழ் அலுவலகத்தின் அச்சகம், நிர்வாகம் மற்றும் பல பிரிவுகளில் மகானின் திருப்பாதம் பட வேண்டி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து மகா பெரியவாளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மகானும் அதை ஏற்றுக் கொண்டு, அன்றைய தினம் இரவு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இரவு எட்டு மணிக்கு நுங்கம்பாக்கம் முகாமில் இருந்து ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும், ஒரு சில பக்தர்களுமாகநடை யாத்திரை புறப்பட்டார் மகா பெரியவா.

பிரபல ஆன்மிக எழுத்தாளரான பரணீதரனும் இந்த யாத்திரையில் உடன் வந்தார். மகா பெரியவாளின் அத்யந்த பக்தராக விளங்கி, அவர் அனுமதியோடு சில கட்டுரைகளைத் தான் சார்ந்திருக்கிறவிகடன் வார இதழில் எழுதி வந்தார் பரணீதரன்.

ஜய ஜய சங்கர கோஷத்துடன் பக்தர்கள் சென்னையின் பிரதான சாலைகளில் நடந்து மவுண்ட் ரோட்டை அடைந்தபோது மணி சுமார் இரவு 10.

அப்போது சென்னையின் லேண்ட் மார்க்கான எல்..சி. கட்டடத்தை மகா பெரியவா கடந்து கொண்டிருந்தார். கட்டி முடிக்கப்பட்டு ஒரு சில பூச்சு வேலைகளும் நடந்து கொண்டிருந்த நேரம் அது.

உயரமான இந்தக் கட்டடத்தைப் பார்த்தவுடன் மகா பெரியவா அப்படியே நின்று அண்ணாந்து பில்டிங்கைப் பார்த்தார்.

மகா பெரியவாளுக்கு அன்றைக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த கண்ணன் என்ற பக்தர், “பெரியவாஇதுதான் எல்..சி. பில்டிங்மெட்ராஸுக்குப் புதுசா வந்திருக்கு. ஊர்லயே ரொம்ப ஒசரமான கட்டடம் என்றார்.

பில்டிங்கில் இருந்து தன் பார்வையை எடுத்து விட்டு, அருகில் நின்றிருந்த பரணீதரனைப் பார்த்து, “இதுல மொத்தம் எத்தனை மாடிகள் இருக்கு? என்று கேட்டார் மகா பெரியவா.

மகான் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு சரியாகப் பதில் தெரிந்தால் சொல்ல வேண்டும். இல்லையென்றால், ‘தெரியாது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். மகா பெரியவாளின் அத்யந்த பக்தர்கள் எந்த ஒரு வேளையிலும் தெரியாத விஷயத்தைத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எனவே பரணீதரனும், தெரிந்தது போல் இத்தனை மாடிகள் என்று சொல்லி விடக் கூடாது என்று தீர்மானித்து மகா பெரியவாளைப் பார்த்து, “சரியாகத் தெரியாது என்றார்.

சரிஎத்தனை மாடிகள் இருக்குன்னு எண்ணிப் பாத்துட்டு வா என்று பரணீதரனைப் பார்த்துச் சொல்லி விட்டு, விறுவிறுவென்று நாளிதழ் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டார் பெரியவா.

மகா பெரியவாளைத் தொடர்ந்து சிப்பந்திகளும், பக்தர்களும் நடக்க ஆரம்பித்தனர். பரணீதரன் அங்கேயே நின்று, எல்..சி. கட்டடத்தில் எத்தனை மாடிகள் இருக்கின்றன என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆறு, ஏழு, எட்டு என்று மாடிகளை எண்ணிக் கொண்டிருக்கும்போது எந்தத் தளம் வரை கணக்கில் எடுத்துக் கொண்டோம் என்கிற சந்தேகம் பரணீதரனுக்குத் திடீரென்று வந்து விடும். உடனே என்ன பண்ணுவார், தெரியுமா? மீண்டும் கீழிருந்து எண்ண ஆரம்பிப்பார். இந்த முறை பத்து மாடிகளைத் தாண்டும்போது ஒரு சந்தேகம் வந்து விடும். மீண்டும் எண்ணுவது தொடரும்.

ஒரு மாதிரி எண்ணி முடித்து விட்டு, மகா பெரியவா சென்று கொண்டிருக்கிற திசையை நோக்கி ஓட ஆரம்பித்தார். அதற்குள் மகா பெரியவா வெலிங்டன் டாக்கீஸ் வரை சென்று விட்டிருந்தார். மகா பெரியவாளை அடைந்து அவருக்கு முன்னால் மூச்சிரைக்க நின்றார் பரணீதரன்.

எண்ணி முடிச்சிட்டியா? – பரணீதரனைப் பார்த்து மகா பெரியவா கேட்டார்.

முடிச்சுட்டேன் பெரியவா – மெள்ள ஆசுவாசப்படுத்திக் கொண்டு நிதானத்துக்கு வந்திருந்தார் பரணீதரன்.

எத்தனை மாடிகள்?

பதினாலு மாடிகள் பெரியவா.

மகா பெரியவா சிரித்தார்.

பதினாலு மாடிகளா? அப்படின்னா இந்த வாரம் வந்த விகடன் மேலட்டைல இதை ஓவியமா போட்டுருக்கா. அந்த ஓவியத்தைப் பார்த்தா எல்..சி. கட்டடத்துக்குப் பதினெட்டு கோடுகள் போட்டிருக்கு. நீ இன்னும் பாக்கலியோ? என்று கேட்கபரணீதரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

பதினெட்டு கோடுகள் வரையப்பட்டிருந்தால், அது பதினேழு மாடிகள் இருப்பதைக் குறிக்கும்.

அருகில் நின்று கொண்டிருந்த தொண்டர் கண்ணன், சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டார்.

மேலட்டைல வந்த ஓவியத்துல எத்தனை மாடிகள்னு இருக்குன்னு நான் எண்ணிப் பாக்கலை பெரியவா என்று பவ்யமாகத் தெரிவித்தார்.

பரவால்லை. அப்பறமா அட்டைப்படத்துல எண்ணிப் பாரு என்று சொல்லிச் சிரித்தபடி நகர ஆரம்பித்து விட்டார், நாளிதழ் அலுவலகத்தை நோக்கி.

அந்த வார இதழில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்த பரணீதரனுக்கு இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. எவராலும் சுட்டிக் காட்ட முடியாத ஒரு தவறை மகா பெரியவா எந்த அளவுக்கு நாசூக்காகதுல்லியமாகச் சொல்லி விட்டுப் போகிறார் என்பதை நினைத்த பரணீதரனுக்குக் கண்கள் கலங்கின.

ஒரு பத்திரிகையை வாங்கிப் புரட்டும்போது அதில் பிரசுரமாகி இருக்கிற செய்திகளைப் படிப்பதில் ஆகட்டும்படங்களைப் பார்த்தில் ஆகட்டும்ஒரு சாதாரண வாசகருக்கும் மகா பெரியவாளுக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கிறது என்று எண்ணி எண்ணி வியந்தார் பரணீதரன்.

அந்த வாரத்தில் விகடன் மேலட்டையில் எல்..சி. ஓவியம் வரையப்பட்டு, அது தொடர்பான ஒரு நகைச்சுவை பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நகைச்சுவையை எழுதியவர் பரணீதரன். இதற்கு ஓவியம் வரைந்தவர் கோபுலு.

எந்த ஒரு பத்திரிகை ஆகட்டும். மேலட்டையில் ஒரு நகைச்சுவை வெளியிடப்பட்டிருந்தால், சிலர் அதைப் படித்துச் சிரித்து விட்டு உள்பக்கங்களைப் புரட்டி இருப்பார்கள். அல்லது சிரிப்பு வராமலேயே உள்பக்கங்களை மேலும் சிலர் புரட்டி இருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட இரண்டு பிரிவினர்கள்தான் உண்டு.

ஆனால், மேலட்டை நகைச்சுவையைப் படித்து விட்டு, இந்தக் கட்டடத்தில் எத்தனை மாடிகள் வரையப்பட்டிருக்கின்றன என்று எத்தனை பேர் பொறுமையாக எண்ணிப் பார்ப்பார்கள்மகா பெரியவாளைத் தவிர!

மகா பெரியவா சொன்னதன்படி 14 மாடிகளே கொண்ட அந்த எல்..சி. கட்டடத்துக்கு 17 மாடிகள் இருப்பதாக அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.

இந்தத் தவறை ஜோக் எழுதிய பரணீதரனும் கவனிக்கவில்லை. படம் வரைந்த கோபுலுவும் கவனிக்கவில்லை.

எதையும் ஆராய்ந்து நோக்கும் அற்புதமான ஆற்றலும், சக்தியும் நிரம்பப் பெற்றவர் மகா பெரியவா.

அந்த மகானின் பரிபூரண பார்வை பட்டு விட்டாலே போதும்சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் ஆனந்தமே மேலோங்கும். இன்பம் என்றைக்குமே தென்படும்.

அந்த மகானைத் தங்கள் காலத்தில் தரிசித்தவர்கள் தெய்வத்தையே நேரில் தரிசித்த ஆனந்தத்தைப் பெற்றார்கள்.

காஞ்சி மகா பெரியவாளை மனதார வணங்கி, குருவருள் பெறுவோம்!