உடல் அவஸ்தைகளோடு வருகிற ஒருவருக்கு மகா பெரியவா ஒரு டாக்டராகத் தெரிந்தார்.
உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே என்கிற ஏக்கத்தோடு வருபவர்களுக்கு ஒரு தாயாக விளங்கினார்.
குடும்ப வில்லங்கம், சொத்துக் குழப்பம் என்று வருபவர்களுக்கு மகா பெரியவா சுமுகமான தீர்ப்பு சொல்லும்போது ஒரு நீதிபதியாகத் தெரிந்தார்.
தங்களுக்கு அட்வைஸ் சொல்லி வழிநடத்தும்போது ஒரு குருவாக இருந்தார்.
ஒரே மகான்… எத்தனை எத்தனை அவதாரங்கள்!
தன்னைத் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகள் அவர்களது வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கு மகா பெரியவா எத்தனையோ நற்கருத்துக்களையும், நல்வழிகளையும் வெகு சாதாரணமாகக் கூறி இருக்கிறார்.
போதனை எங்கிருந்து வருகிறது என்பதை வைத்துதான், பலனைக் கணக்கிட முடியும்.
மகா பெரியவாளின் திருப்பார்வை மட்டும் தங்கள் பக்கம் லேசாகத் திரும்பாதா என்கிற ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் எத்தனையோ பிரபலங்கள் இவரது திருச்சந்நிதியில் நாள்கணக்கில் காத்துக் கிடந்திருக்கிறார்கள்.
எந்த ஒரு டாக்டராலும் தீர்க்க முடியாத உடல் நலக் கோளாறுடன் தவித்துக் கொண்டிருப்பவர், கடைசி கடைசியாக யாரோ சொல்லி மகா பெரியவா சந்நிதிக்கு வருவார். ஒரு பாட்டம் புலம்புவார். மருந்தோ, மாத்திரையோ கிடையாது. வில்வமும், விபூதியும்தான். பல வருடங்களாகப் பரிதவித்துக் கொண்டிருந்தவருக்கு மகா பெரியவா பிரிஸ்கிரிப்ஷன் கிடைத்த பின், ‘விட்டேன் சவாரி‘ என்று வியாதிகள் பறந்தோடி விடும்.
அப்படித்தான் ஒரு முறை மகா பெரியவாளின் தரிசனத்துக்கு முதுகில் தீவிர வலி கொண்ட ஆசாமி ஒருவர் வந்தார். உள்ளே வரும்போதே இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டே வந்தார்.
மிகவும் கஷ்டப்பட்டு மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரத்தை செய்து விட்டுச் சொன்னார்: “பெரியவா… முதுகு வலி… அதைவிட முதுகோட நடுத் தண்டுல ரொம்ப நாளா பெரும் வலி. கொஞ்சம்கூட அசைய முடியலை பெரியவா. ஏன் இருக்கோம்னு பல நேரம் தோண்றது“ என்றவரின் கண்களில் நீர்த் துளிகள் கோடிட்டன.
மகா பெரியவா அவரைத் தீர்க்கமாகப் பார்த்தார். பதில் வரவில்லை.
முதுகு வலிக்காரரே மீண்டும் சொல்கிறார்: “எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்டுட்டேன் பெரியவா. பணமும் மருந்தும் கரையறதே தவிர, வலி கொஞ்சமும் குறையலை.“
தாமரை இதழ்கள் விரிந்தது போல் மகா பெரியவா திருவாய் மலர்கிறார்: “அந்த நாள்ல தலைக்கு எண்ணெய் தேச்சுக் குளிக்கிறதுனு ஒரு வழக்கம் இருந்தது… கேள்விப்பட்டிருக்கியா? இப்ப அதை நீ பண்றியோ?“
வலிக்காரர் விழித்தார். “இல்லே பெரியவா.“
என்ன பண்ணுவா தெரியுமா? செக்கு நல்லெண்ணெயைத் தலைக்கும் ஒடம்புக்கும் தேய்ச்சுண்டு இருவது முப்பது நிமிஷம் ஊறுவா. அப்பறம் இதமான சூட்டுல இருக்கிற வெந்நீர்ல குளிப்பா. இப்ப இருக்கிற அவசர யுகத்துல இதுக்கெல்லாம் எங்க எல்லாருக்கும் நேரம்?“ என்று கிண்டலாகச் சொன்னவர், மீண்டும் வலிக்காரரைப் பார்த்துத் தொடர்கிறார்.
“சனி நீராடுனு ஸ்கூல்ல படிச்சிருப்பே… ஆனா, அதை நடைமுறைப்படுத்த மறந்துட்டே… அப்பல்லாம் நல்லெண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளிக்கறப்ப ஆத்துலயே அரைச்ச சீயக்காய்ப்பொடியை யூஸ் பண்ணுவா. ஆனா, இப்ப சீயக்காய்ப்பொடியை ரீப்ளேஸ் பண்ணிட்டு, என்னென்னவோ கெமிக்கல்ஸ் கலந்ததெல்லாம் வந்திருக்கு. ‘பின்னாட்கள்ல கெடுதல் உண்டுபண்ணும்‘னு தெரிஞ்சிருந்தும் இந்தக் கண்டதுகளைத்தான் எல்லாரும் பயன்படுத்தறா.
போகட்டும்… பழச ரொம்ப கௌறக் கூடாது. பாவம், நீ ரொம்ப வலியோட இருக்கே… இனிமே ரெகுலரா எண்ணெய் தேச்சுக் குளி. வெந்நீர்ல குளிச்சு முடிச்சப்பறம் ஆகாரத்துக்கு மிளகு ரசத்தையும், பிரண்டை துவையலையும் சேர்த்துக்கோ. க்ஷேமமா இருப்பே“ – வலக் கையை உயர்த்தி வாழ்த்தி அனுப்பியது பரப்பிரம்மம்.
முதுகு வலிக்காரர் மூன்று மாதம் கழித்து மகா பெரியவா திருச்சந்நிதிக்கு மீண்டும் வந்தார்.
இந்த முறை அவரது முகத்தில் பரவசம். ஆனந்தம்.
பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். “வாரா வாரம் சனிக்கிழமை அன்னிக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்க ஆரம்பிச்சுட்டேன் பெரியவா. பாடா படுத்திண்டு இருந்த முதுகு வலி பறந்தே போச்சு பெரியவா“ என்று கண்கள் கலங்கச் சொன்னார்.
பெரியவா சொன்ன சூட்சுமம், இன்றைக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?!