பெண்மையைப் போற்றும் மகாபெரியவா

கா பெரியவா அருளிச் சென்ற நல்ல கருத்துக்கள்அதுவும் பெண்மையின் முக்கியத்துவத்தைச் சொல்லும் நல்முத்துக்கள் அடுத்து வரும் சில பக்கங்களில் இடம் பெறுகின்றன. இவை அனைத்தும்மங்கையர் மலர் இதழில் அடியேன் மினி தொடராக எழுதியவை. ‘மங்கையர் மலர் ஆசிரியர் திருமதி லக்ஷ்மி நடராஜன் அவர்களுக்கும், பொறுப்பாசிரியர்

திருமதி ஜி. மீனாட்சிக்கும் நன்றி.

தாயே சக்தி!

பெற்ற குழந்தையை வளர்ப்பதில் தந்தையை விடத் தாய்க்குத்தான் முதலிடம். ஆனாலும், இந்தச் சமூகம், குழந்தையின் பெயரை எழுதும்போது இனிஷியலுக்கு அப்பா பெயரின் முதல் எழுத்தைத்தான் பயன்படுத்தி வருகிறது.

பள்ளியில் குழந்தை சேர்க்கப்படுகின்றபோதுதந்தையின் பெயர் என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன. பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் பெயரை முதலில் கேட்கக் காணோம்!

நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவா கூட இதைப் பற்றிக் கூறி இருக்கிறார். அண்ணா ரா. கணபதி அவர்கள் தொகுத்ததெய்வத்தின் குரல் தொகுப்பில் மகா பெரியவா சொல்கிற வரிகளைப் பார்ப்போம்.

அம்மாஅப்பா ஆகிய ரெண்டு பேருக்கும் ஒருத்தர் புத்திரராக இருந்தாலும், உலகம் முழுவதிலும் அப்பாவையே குடும்பத் தலைவராகக் கருதுகின்ற வழக்கம் இருந்து வருகிறது.

இன்னாருடைய புத்திரர் என்று அப்பாவின் பெயரையே குறிப்பிடும் வழக்கம் நிலவுகிறது.

பத்திரமோ, அப்ளிகேஷனோ, ஃபார்மோ எதுவாக இருந்தாலும் அதை நிரப்பும்போதுஃபாதர்ஸ் நேம் என்ன? என்றுதான் கேட்கிறார்கள்.

இந்த விஷயத்தில்அம்மா பெயரின் முதல் எழுத்தை ஏன் இனிஷியலாகப் போடுவதில்லை? என்று எவரும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

வேதம், உபநிஷதம் ஆகியவற்றில் வரும் ரிஷிகளின் பிதாக்கள் பிதாவாக மட்டும் அல்லாமல் அந்த ரிஷிகளுக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, பிதாவைஅதாவது குருவை முன்னிறுத்திஇன்னாருடைய பிள்ளை என்று சொல்வது ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது.

ஆனால், ரொம்ப வித்தியாசமாக ஒரு இடத்தில் பார்க்கிறோம். அங்கே தாய் வழியில் ரிஷிகளின் பெயர்களைஅதாவது இன்னாரைத் தாயாகக் கொண்ட ரிஷிஎன்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்க நேரிடுகிறது.

எங்கு இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, தெரியுமா?

நம்முடைய வேதாந்த மதத்துக்கே அஸ்திவாரம் என்று கருதப்படும் தசோபநிஷத்தில் (பத்து உபநிஷத்துக்கள்) முடிவாக வரும் அத்தியாயத்தில் ஒரு ரிஷியின் பூர்விகத்தைச் சொல்வதற்குஇன்னாருடைய மகன் என்று தெரிவிக்கும் இடத்தில் தாயாரின் பெயரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, ‘இவர், இந்த அம்மாவின் புத்திரர்இவர், அந்த அம்மாவின் புத்திரர் என்று காணப்படுகிறது.

இதென்ன இப்படிக் காணப்படுகிறதே என்கிற கேள்விக்குப் பதில் ஆசார்யாளின் பாஷ்யத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசார்யாளின் பாஷ்யத்தில் அப்படி என்ன விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், ‘ஒரு மகன் குணவானாக இருப்பதற்கு ஸ்த்ரீயேஅதாவது அவனுடைய தாயாரே பிரதான காரணம் என்பது வெகுவாகப் புகழ்ந்து சொல்லப்படும் விஷயம்.

தாயாரின் விசேஷத்தினால் புத்திரன் சிறப்பு பெறுவதால், ‘இன்னாருடைய மகன் என்று தாயார் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று ஆசார்யாள் சொல்கிறார்.

இப்படி முடிக்கிறார் மகா பெரியவா.

ஆக, தாயார் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாக இன்றைக்கு நாம்தான் போட்டுக் கொள்கிறோம் என்று பெருமைப்பட முடியாது.

ரிஷிகளின் காலத்திலேயே இது நடைமுறையில் இருந்திருக்கிறது என்பது உற்றுநோக்கத்தக்க விஷயம்.

மோட்சம்தானே முக்கியம்!

நாம் வசிக்கிற நாட்டைதாய் நாடு என்கிறோம்.

பேசுகிற மொழியைதாய் மொழி என்கிறோம்.

மிகப் பெரிய அடையாளமாக விளங்குகிற தேசத்துக்கும், கலாசாரத்தைப் பறை சாற்றுகிற மொழிக்கும் தாயின் அடையாளம்தான் தேவைப்படுகிறது.

இதையே மகா பெரியவா இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்கிறார்.

வேதத்தை ஒரு தேவதையாகச் சொல்லும்போது புருஷ தெய்வமாகவா சொல்கிறோம்? இல்லையே… ‘வேத மாதா என்று அம்மாவாகத்தானே சொல்கிறோம்?!

பெண்களாலேயே எல்லாமும் உயிர் பெறுகிறது.

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்று அவன் நல்லதோ, கெட்டதோஎது செய்தாலும் அவன் மனசுப்படியேதான் போக வேண்டும் என்று சரணாகதி செய்தவர்களாகவே நம் தேசத்தின் மகா பதிவிரதைகளில் பெரும்பாலோர் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு வித்தியாசமாக புருஷன் தவறாகப் போகும்போது அவனைத் திருத்தி மீட்டுக் கொண்டு வந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.

தர்மஅர்த்தகாமமோட்சங்களில் மோட்சம் நீங்கலாக மற்ற மூன்றுக்கும் ஒரு மனைவியே கணவனுக்குத் துணையாக இருப்பவள். இதுதான் சாஸ்திரம் சொல்கிறது. ஆனால், இதையும் தாண்டி மோட்ச சாம்ராஜ்யத்தையும் வழங்குகிற ஸ்த்ரீகள் இருந்திருக்கிறார்கள் என்கிறார் மகா பெரியவா. இது பெண்களின் உயர்வுக்கு மகா பெரியவா கொடுக்கிற அத்தாட்சிப் பத்திரம்.

அதென்ன தர்மஅர்த்தகாமமோட்சம்?

தர்மம் என்றால் அறம். நீதி தவறாமல் நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து நேர்மையாக வாழ்வது.

அர்த்தம் என்றால் செல்வம். நாம் ஈட்டுகிற பொருள்.

காமம் என்றால் இன்பம், நற்குடும்பம் என்று பொருள்.

இறுதியில் கிடைப்பது மோட்சம். அதை எதிர்பார்த்துதான் வாழ்க்கை அமைய வேண்டும்.

கடைசி வரை தர்மஅர்த்தகாமத்திலேயே வாழ்பவர்கள்தான் அதிகம்.

சம்சார வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிற எவரும் துறவைப் பற்றி யோசிப்பதில்லை. துறவைப் பற்றி யோசிப்பதை சம்சார வாழ்க்கை அனுமதிக்காது.

ஆனாலும், மோட்சம்தானே முக்கியம்!

மகா பெரியவா சொல்கிறார்: ‘தர்மஅர்த்தகாமம் என்று வாழ்ந்து வருகிற கணவனை ஞான மார்க்கத்தில் திருப்பி விடுகிற அளவுக்கு மகா ஞானிகளாக விளங்கிய பெண்களும் நம் தேசத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது புராணங்களில் இருந்தும் ஞான நூல்களில் இருந்தும் தெரிய வருகிறது. இத்தகைய பெண்களில் சிலர் தங்கள் குழந்தைகளையும் ஞான மார்க்கத்துக்குத் திருப்பி இருக்கிறார்கள் கணவனையே ஞான மார்க்கத்துக்குத் திருப்பிய பெண்கள் இருவரைப் பற்றி மகா பெரியவா சொல்கிறார்.

அந்த இருவரும் சாதாரணமான பெண்கள் அல்ல. இருவரும் ராணிகள்!

மகா பெரியவா சொன்ன இரு ராணிகளை அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

மோதிர உபதேசம்!

மகா பெரியவா சொன்ன இரு ராணிகளில் ஒருவர்சூடாலா.

மகா பெரியவா சொல்கிறார்:

சூடாலாவைப் பற்றி யோக வாஸிஷ்டம் என்ற உத்தமமான ஞான கிரந்தத்தில் வருகிறது. அவள் யோக ஸித்திகள் எல்லாம் கைவரப் பெற்ற மகா ஞானியாக இருந்திருக்கிறாள்.

அவளுடைய பதி ( கணவர் ) சிகித்வஜன் என்பவன். இவனிடம் பெரிதாகக் குறை எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், எல்லோரைப் போலவே உலகியல் ரீதியில் ராஜாவாக இருந்தான். வாழ்ந்தான்.

மனைவி சூடாலா ஞானி ஆயிற்றே! மனைவியின் பாதிப்பு கணவனைத் தாக்காமல் இருக்குமா?

கால ஓட்டத்தில் சூடாலாவின் தாக்கம், சிகித்வஜனை ஞான மார்க்கத்துக்குத் திருப்பி விடுகிறது. ஞான மார்க்கத்தில் பயணிக்க ஆரம்பித்தால்மோட்சம் நிச்சயம்தானே!

சூடாலாவின் உபதேசங்கள் சிகித்வஜனை ஞான மார்க்கத்தில் பயணிக்க வைக்கிறது.

ஆக, கணவனின் மோட்சத்துக்கு அவனுடைய மனைவியே துணை செய்திருப்பதைசூடாலாவின் வாழ்க்கை அழகாக விவரிக்கிறது.

இன்னொரு ராணி யார் தெரியுமா?

ஞானி மதாலஸா என்பவள்!

இவளுடைய கதைமார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவள் உள்ளுக்குள் ஞானியாக இருந்தாலும், வெளியில் ஒரு குடும்பப் பெண்மணியாகவே இருந்திருக்கிறாள். இவளுக்கு நான்கு ஆண் குழந்தைகள்.

முதல் மூன்று பிள்ளைகளுக்கும் அவர்களுடைய சிசுப் பிராயத்தில் தாலாட்டுப் பாடுகிற தினத்தில் இருந்தே ஞான உபதேசத்தையும் சேர்த்துக் கொடுத்து வந்தாள்.

முதல் மூன்று குழந்தைகள் பெற்ற ஞான உபதேசத்தினால், ஒரு காலகட்டத்தில் அவர்கள் நாட்டை விட்டுக் கிளம்பி, ‘நிவிருத்தி மார்க்கத்தைத் தேடிப் போகிறார்கள். அதாவது, நிலையான பரம்பொருளைத் தேடி அடையக் கூடிய வழியே நிவிருத்தி எனப்படும்.

தேசத்தில் தர்ம ராஜ்யம் நடக்க வேண்டும் என்பதற்காக நான்காம் பிள்ளை மட்டும் நல்ல ராஜாவாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறாள். எனவே, அவனுக்கு அதற்கு உண்டான உபதேசங்களைக் கொடுத்துபிரவிருத்தி மார்க்கத்திலேயே இருக்கப் பழக்குகிறாள். பிறப்புஇறப்பு எனும் சுழற்சிகளைக் கொண்ட உலகியல் பாதையில் உழல்வது பிரவிருத்தி எனப்படும்.

காலம் ஓடுகிறது. மதாலஸாவுக்கு வயோதிகம் நெருங்குகிறது. இனி தபஸை வலுப்படுத்த காட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்து, கணவனுடன் பயணப்படுகிறாள். அதற்கு முன்னால், பிரவிருத்தி மார்க்கத்தில் இருக்கும் எஞ்சிய நான்காம் பிள்ளைக்கும் ஞான உபதேசம் வழங்குகிறாள். எப்படித் தெரியுமா?

பிரவிருத்தி மார்க்கத்தில் இருக்கக் கூடிய அவன் உரிய காலத்தில் நிவிருத்தி மார்க்கத்துக்குத் திரும்புவதற்கு வசதியாக ஞான உபதேசத்தை எழுதி, அதை ஒரு மோதிரத்துக்குள் வைத்து, அவனுக்கு அணிவித்து விடுகிறாள்.

பிரவிருத்தி மார்க்கம் சலித்துப் போன காலத்தில், தாயார் அணிவித்த மோதிரத்துக்குள் இருக்கும் உபதேசத்தைப் படித்தவன், ஞான வழிக்குத் தன் பாதையைத் திருப்புகிறான்.

ஆக, கணவனை மட்டும் அல்லாமல், தான் பெற்ற பிள்ளைகளையும் ஞான மார்க்கத்துக்குத் திருப்பி இருக்கிறார்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்கள்.

பெண்மையின் மென்மை!

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டியது ஆண்கள். வீட்டில் அமர்ந்து இல்லறத்தைக் கவனிக்க வேண்டியது பெண்கள். பெண்கள் வேலைக்குச் செல்கிற வழக்கம் அந்த நாளில் இல்லை.

உத்தியோகத்தையும், பெண்களையும் தொடர்புபடுத்தி மகா பெரியவா நிறைய சொல்லி இருக்கிறார்.

வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்குப் போகிற பெண்களுக்கு, இரண்டிலுமேடெடிகேஷன் குறைந்து போகும். இந்த மாதிரி இரட்டைப் பொறுப்பு எடுத்துக் கொண்டால் தாக்குப்பிடிக்க முடியாத ஸ்ட்ரெயின் ஆகி, ரொம்பவும் திணறி சிரமப்படும்படி ஆகும்.

டெடிகேஷன் குறைவதால் அந்த இரண்டு வேலைகளுமே திருப்திகரமாக அமையாமல் கெட்டுப் போகும். ஆபீஸ் போவதற்காக வீட்டுக் காரியங்களை அரக்கப் பரக்க அரைகுறையாகச் செய்வதுஅதே மாதிரி வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக ஆபீஸில் அவசரக் கோலமாக பண்ணுவது என்றாகி, இரண்டுக்கும் பழுது ஏற்படும்.

வேலைகளில் பழுது ஏற்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தவறான ஆசையினால் இப்படிப்பட்ட பழுதை ஏற்படுத்துகிற பெண்களுக்கு அதனால் பாவமும் ஏற்படும். பாவத்துக்குக் கூலியாகப் பல விதங்களில் கஷ்டம் வந்து சேரவும் செய்யும். வீட்டுப் பணிக்கு பாதிப்பு என்கிறதால் மட்டும் பெண்களுக்கு உத்தியோகம் வேண்டாம் என்று சொல்லவில்லை. வீட்டையும் நன்றாகக் கவனித்துக் கொண்டு உத்தியோகம் முறைப்படி பார்ப்பதற்கு முடிந்தாலும்கூட அது வேண்டாம்தான். ஏனென்றால், உத்தியோகம் என்று ஏற்படுகிறபோது லோக விஷயங்கள் பலவற்றுக்கும் ஈடு கொடுத்தாக வேண்டி இருக்கும். பலரிடம் புழங்கிக் கொண்டு பலவித விஷயங்களை சமாளித்தாக வேண்டி இருக்கும்.

ஒருவேளை இவற்றை எல்லாம் நன்றாகவே செய்ய முடிந்தாலும்கூட, பெண்மை என்பதற்கே ஆணிவேரான மென்மை என்கிற குணம் அநேக சந்தர்ப்பங்களில் அடிபட்டுப் போகத்தான் செய்யும்.

அந்த மென்மையின் பெருமை இன்றைய பெண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். அப்படிப்பட்ட பெண்மையின் மென்மையைக் காப்பாற்றிக் கொண்டு வாழுகிறபோது அடைகிற மன நிறைவும் ஆனந்தமும் அலாதி ரகம். எந்த ஒரு பதவியினாலும், அதனால் கிடைக்கிற சம்பாத்தியமும் இதற்கு ஈடு இணையே இல்லை.

உத்தியோகம் செல்கின்ற பெண்கள், ‘தான் வேறு என்று புருஷன் மாதிரி இருக்கிற செயற்கை நிலையில் எப்படிக் கிடைக்க முடியும்? உத்தியோகத்துக்குப் போகாத பெண்களிலும் இந்த மன நிறைவும் ஆனந்தமும் தெரியாதவர்கள்தான் நிறைய இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களும் ஏதோ ஒரு தினுசில் அந்த மென்மை நிறைவைப் பறி கொடுத்தவர்களாகவே இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.

பெண்களின் உத்தியோகம் பற்றி அடுத்து மேலும் சொல்கிறார் மகா பெரியவா.

எது நிறைவான குடும்பம்?

எதற்கும் இரண்டு பக்கம் உண்டு. ‘அன்றைக்கு சாஸ்திரம் சொன்ன ஒரு விஷயத்தை இன்றைக்கு அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா? – இது பலரும் கேட்கின்ற கேள்விதான்.

காலம் மாறுகிறது. கல்லுரல் போய் கிரைண்டர் வந்து விட்டது. இயந்திரம் போய் மிக்ஸி வந்து விட்டது. ‘துவைக்கிற கல் போய் வாஷிங் மெஷின் வந்தாச்சு. இத்தகைய காலத்தில் பழைய விஷயங்களை அப்படியே பொருத்திப் பார்க்க முடியுமா? நடந்து கொள்ள முடியுமா என்கிற வாதத்தையும் விட்டு விட முடியாது.

கடல் தாண்டக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. இன்றைக்கு நம்மூரில் இருக்கின்ற புராதன ஆலயங்களுக்கு திருப்பணி, கும்பாபிஷேகம் என்றால், வெளிநாட்டுக் காசுதான் பிரதான இடம் வகிக்கிறது. கிராம வளர்ச்சிகள், வேத பாடசாலைகள்இவற்றுக்கெல்லாம் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள்தான் உதவுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும், மகா பெரியவா சொன்னவற்றில் நம்மால் பின்பற்றக் கூடியவற்றை சிரமேற்கொள்ள வேண்டும்.

சிறுகக் கட்டிப் பெருக வாழ்வது என்கிற லட்சியம் போய்விட்டது. எத்தனை சுக போக சாதனங்கள் இருந்தும் அதிருப்தியே படுகிற இப்போதைய மனப்பான்மை போய், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதிலேயே திருப்தி காணப் பழக்கிக் கொண்டு விட்டால் போதும்.

நிறைவான குடும்பம் நடத்துவதற்கு மகா பெரியவா சொல்கிற உபாயம் இது.

அதோடு ரொம்ப கட்டுப்பெட்டியாகவும் பெண்கள் இருக்க வேண்டாம். அவர்களே எல்லா தர்மங்களுக்கும் ஆணி வேர் என்கிறார் பெரியவா.

ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால் அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டும். எனவே, கேலிப் பாட்டுகள்கூடப் பாடலாம். வாழ்க்கையில் இதெல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உப்புச்சப்பே இருக்காது. ஒரே உம்மணாமூஞ்சி ஆகி விடும்.

ஸ்த்ரீ மூலம் ஸர்வ தர்மா: – எல்லா தர்மங்களுக்கும் பெண்களே ஆணி வேர் என்று சாஸ்திரம் சொல்கிறது. அவர்கள் நிலை தடுமாறிப் போனால் லோகமே போனது போனதுதான். ஆண்கள் நிலை தடுமாறிப் போனால்கூட, பெண்களின் தார்மீக பலம் அவனைக் காப்பாற்றி எழுப்பி விடும். பெண் விழுந்தால் சமுதாயத்துக்கே வீழ்ச்சி.

பெண் குருமார்கள்!

பொதுவாகஒரு குரு, மகரிஷி என்றால் ஆடவர்கள் மட்டுமே நினைவுக்கு வருவார்கள். அகத்தியர், வியாசர், துர்வாசர், வசிஷ்டர்என்று எல்லாமே ஆடவர்களின் பெயர்கள்தான். ‘இவரும் ஒரு குருமார்தான் என்று சட்டென எவரேனும் ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட இயலுமா?

இது பற்றி மகா பெரியவா சொல்கிறார்:

நமது புராணங்களில் சொல்லப்பட்ட ரிஷிகள், இந்தந்த அம்மாக்களின் பிள்ளைகள் என்று மட்டுமே இருக்கிறதே தவிர, அவர்களிடம் இருந்து இவர்கள் எந்தக் கல்வியையும், உபதேசத்தையும் பெற்றதாக இங்கேயும் இல்லை. உள்ளே எங்கேயும் இல்லை.

பாஷ்யத்திலும் (உரை நூல்கள்) புத்திரன் குணவான் ஆவதைப் பற்றித்தான் இருக்கிறதே தவிர, கல்விமானாகஞானவானாக இருப்பதைப் பற்றி இல்லை.

உபநிஷத் காலத்தில் சாஸ்திர விஷயங்களை ஆழமாகத் தெரிந்து கொண்ட பெண்களும் இருந்திருக்கிறார்கள். சாஸ்திரத்திலும், பிறவற்றிலும் தேர்ந்து காணப்பட்ட மகரிஷிகளிடம் வாதம், உரையாடல் போன்றவற்றை இந்தப் பெண்கள் நிகழ்த்தி இருக்கிறார்கள். இது அந்த உபநிஷத்துகளைப் படிக்கும்போது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிய வருகிறது. இதுவும் உண்மையே!

என்றாலும் வாதம், உரையாடல் போன்றவற்றில் இந்தப் பெண்கள் தேர்ந்திருப்பதற்கு யாரிடமேனும் உபதேசம் பெற்றிருக்கிறார்களாஅல்லது முறையான கல்வியைக் கற்றிருக்கிறார்களா என்று ஒரு இடத்திலேயும் சொல்லப்படவில்லை.

யாக்ஞவல்கியர் என்கிற மகரிஷி, தம் மனைவியைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு இறைபக்தி பற்றிச் சொல்வதாக ஒரு இடத்தில் வருகிறது.

குருமார்களிடம் பெண்கள் உபதேசம் பெற்றதாக எங்கும் விவரம் இல்லை.

சூழ்நிலையாலும், பழக்க வழக்கத்தாலும், பேச்சுவாக்கிலும் பலவற்றைப் படித்திருக்கிறார்கள். ஒரு தேவை என்று வந்து விட்டால், ஞானிகளையும் குருமார்களையும் போல் ஒருசில போதனைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

மேலே சொன்ன காரணத்தாலும் தவிர பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்பட்ட ஆசையினாலும்தான் பெண்கள் இப்படிப்பட்ட ஞானிகள் ஆனார்கள் என்று தோன்றுகிறது.

சிஷ்யர்களாகவோ, சிஷ்யைகளாகவோ, குருமார்களாகவோ இருந்து கொண்டு எதையேனும் அவர்கள் கற்றுக் கொண்டதாகவோ, பிறருக்குக் கற்றுக் கொடுத்ததாகவோ எங்கேயும் அழுத்தமான ஆதாரங்கள் இல்லை.

அப்படி என்றால், இத்தகைய உபதேசங்களையும், பாடங்களையும் பெண்கள் எங்கிருந்து கற்றார்கள்? எப்படி அவர்களுக்கு இவை எல்லாம் தெரிந்தது?

மகா பெரியவா தொடர்ந்து சொல்வதைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருங்கள்.

பண்டிதர்கள்பண்டிதைகள்

அந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்கள் சிஷ்யைகளாகவோ, குருமார்களாகவோ இருந்து கொண்டு எதையேனும் கற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால், அவர்கள் பிறருக்கு போதிக்கின்ற ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். இத்தகைய ஞானத்தை எங்கிருந்து அவர்கள் கற்றார்கள்?

மகா பெரியவா சொல்கிறார்.

இது போன்ற சில உபநிஷதங்கள், சில வித்யைகள் போன்றவற்றை அந்தந்த அகத்துப் (இல்லத்து) பெரியவர்களே தங்கள் பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

வேத உபநிஷதங்கள் முதன் முதலாக லோகத்தில் பிரசாரத்துக்கு வந்த பூர்வ யுகத்திலும், கலி யுகத்துக்கு முற்பட்ட யுகங்களிலும் சில மந்திரங்கள், சில உபாசனைகள், சில வித்யைகள் போன்றவற்றை அகத்துப் பெரியவர்களே பெண் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

சில வழிபாட்டு முறைகளையும், ஆர்ட்ஸ் என்கிற கலைகளையும், வாழ்வில் பணத்தைத் தேடும் சில கல்விகளையும் பெண் குழந்தைகளுக்கு இல்லத்தில் வசித்த பெரியவர்களே கற்றுக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஆண்களுக்குத்தான் இதுபோன்ற கல்விகள் என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட காலத்தில்எக்ஸெப்ஷனல் என்று சொல்லும்படியாக சின்ன வயதிலேயே நல்ல புத்தி பிரகாசத்துடன் இருந்த பெண்களுக்கும் இப்படி வேதாந்தத்தையும் இதர தத்துவப் பாடங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரு ரிஷியிடம், ஒரு ஆச்சார்யரிடம் குருகுல வாசம் என்று படித்த பசங்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். இது பற்றி வேதத்திலும், பிற்கால இலக்கியங்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவற்றைப் பார்க்கிறபோது அகத்துப் பெரியவர்களிடம் இருந்து மட்டும் என்று இல்லாமல் இதுபோல் குருகுலம் வைத்து நடத்திய ஆச்சார்யர்களிடமும் பெண்கள் படித்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

இது எப்படி சாத்தியம் என்று யோசிக்கக் கூடாது. நூறு மாணவர்கள் படிக்கின்ற இடத்தில் பெண் வித்யார்த்திகளும் ஓரிருவர் இருந்திருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறது.

இப்படிப்பட்ட ஞானமுள்ள பெண் குழந்தைகள் பிறக்க வேண்டுமானால், அந்தத் தகப்பனுக்கு பக்தி அதிகம் இருக்க வேண்டும். தன் கடமைகளைச் சரிவர செய்பவனாக இருக்க வேண்டும்.

இப்படி நல்ல பெண் குழந்தைகள் தங்களுக்கு வாய்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தகப்பன்மார்களும் அப்போது அதிகம் இருந்திருக்கிறார்கள்.

அதிகம் கற்ற ஆண்களைபண்டிதர்கள் என்று சொல்கிறோம். அதுபோல் பெண்களைபண்டிதைகள் என்று சொல்கிறோம். இங்குபண்டிதை என்பது பிரம்ம வித்யா சாஸ்திரத்தில் புலமை பெறுவதைக் குறிக்காது. ஏனென்றால், வேதம் கற்க பெண்களுக்கு உரிமை இல்லை.

அப்படி என்றால், இந்தபண்டிதைக்கு என்ன அர்த்தம்?

வீட்டை நல்ல முறையில் நடத்துவது, இல்லறத்தை நல்லறமாக நடத்துவதுஇப்படி சாமர்த்தியமாகதிறம்படச் செய்கிற கலையில் தேர்ந்திருப்பதால்தான் பெண்களுக்குப் பாண்டித்யம் கூடுகிறது. ‘பண்டிதைகள் என்கிறோம்.

வீட்டுக்கு ராணியாக இரு

அன்பையே மையமாகக் கொண்டு தானும் வாழ்ந்து, தான் சார்ந்திருக்கிற குடும்பத்தாரையும் வாழ வைப்பது பெண்களால்தான் முடியும்.

அன்பும், அன்பின் தோழர்களாக இருக்கிற தியானம், சேவை, அடக்கம், தயவு, தாட்சண்யம், எளிமைஇன்னும் இதுபோன்ற எண்ணற்ற உத்தம அம்சங்களாகப் போற்றப்படுகிற நற்குணங்கள் முழுக்க ஒன்று சேர்கிற இடம்தான்பெண்மை. இவை எல்லாவற்றையும் பெண்களிடம் காண முடியும்.

இது பெண்களுக்கென்றே காணப்படுகிற சுபாவம். ஒருவேளைஇதில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு நடப்போமே என்று பெண்ணின் மனசுக்குத் தோன்றினாலும், அவளால் அப்படி நடந்து கொள்ள முடியாது. இத்தகைய நற்குணங்களைப் பெண் ஆகப்பட்டவள் பெற்றிருக்கிற காரணத்தால்தான், அவள் சார்ந்திருக்கிற வீட்டையே ஒரு கோயிலாக மாற்ற முடிகிறது.

நடைமுறை வாழ்க்கையில் இருந்துஅதாவது இயற்கையில் இருந்து பிய்த்துக் கொண்டு போவது சுலபமாகத் தோன்றலாம். ஆனால், இயற்கையோடு ஒட்டிக் கொண்டு வாழ்வதுதான் சுலபம். அதுதான் தனக்கும் சந்தோஷம் தரும், தன்னைச் சார்ந்திருக்கிற மற்றவர்களுக்கும் சந்தோஷம் தரும் என்பது அவளுக்குத் தெரியும்.

வீட்டுக்கு நீ ராணியாக இரு என்று கல்யாணம் ஆகிற மணப்பெண்ணை வேதம் வாழ்த்துகிறது. இன்றுவரை திருமணங்களில் அதற்கு உண்டான மந்திரங்களைச் சொல்லி வருகிறோம். ‘ராணியாக இரு என்று அவளைக் குறிப்பிடுவது முழுக்க முழுக்க அன்பினால். அதிகாரத்தினால் அல்ல.

அவள் ராணியாகத்தான் இருப்பாள். அதனால்தான் அவளுக்குக்ருஹ லக்ஷ்மி என்று பெயர். தவிர, ‘க்ருஹ விஷ்ணு என்று கணவனுக்குப் பேர் இல்லை.

ஏன் அவள்க்ருஹ லக்ஷ்மி என்றால், தர்ம சாஸ்திரப்படி வீடு என்பது அவளுடைய இலாகா.

கணவனுடைய வன்மையால் சாதிக்க முடியாததை மனைவி ஆகப்பட்டவள், தன் மென்மையால் சாதித்து விடுகிறாள்.

இப்படி அவள் இருப்பதுதான் தர்மம். அதனால்தான் வீட்டுப் பணி அவளுக்கே, அவள் வீட்டுப் பணிக்கே என்று தர்ம சாஸ்திரம் அழகாக வரம்பு போட்டுக் கொடுத்திருக்கிறது.

உத்தியோகம் செல்கிற பெண்களைப் பற்றி மகா பெரியவா சொல்லி இருக்கிற ஒரு வாசகம், நகைச்சுவையாகவும் இருக்கிறது.

உத்தியோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் பிரமோஷன் ஆவதற்கு அனுக்ரஹம் கேட்க வருவதும், நானும் அவர்களைக் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக் கொள்வதாகவும் ஆகி இருக்கிறது.

சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்

இசை என்றால், அதில் ஆண்களுக்கு சரி சமமாகப் பெண்களும் இருந்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

சங்கீதத்தில் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும். அப்படி இருந்தால், அது அவர்களுக்கு மட்டுமல்லதெய்வத்தையும் சந்தோஷப்படுத்தும் என்று மகா பெரியவா சொல்கிறார்.

பெண்மை, பெண்கள் என்றாலே, சங்கீதம்தான் நினைவுக்கு வருகிறது. சங்கீதம் உத்தமமான கலை. பகவான் சந்நிதியிலே நம்மைச் சுலபமாகக் கொண்டு போய் நிறுத்துகிற கலை.

நன்றாக இசையமைத்துப் பாடும்படி நிறைய நிறைய கீர்த்தனங்களை நம் தேசத்தில் வாரி வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள் மகான்கள் (சத்குரு தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர், அன்னமய்யா, புரந்தரதாசர்இப்படிப் பலரைப் பட்டியலிடலாம்).

பெண்களுக்கு இயற்கையாகவே இனிமையான குரல் இருக்கும்படி அம்பாள் அனுக்ரஹம் செய்திருக்கிறாள். அதனால், தங்களுக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்கிறதோ, அந்த நேரங்களில் அவர்கள் சங்கீதம் கற்றுக் கொள்ளலாம்.

சபா, சன்மானம், புகழ் ஆகியவற்றுக்காக இதைக் கற்றுக் கொள்ளச் சொல்லவில்லை. அதெல்லாம் போட்டியிலும், அகம்பாவத்திலும், ஸ்த்ரீகளுக்கு வேண்டாத வெளி விவகாரங்களிலும் இழுத்து விடலாம். மன சந்தோஷத்துக்காகவும், பகவானைப் போற்றிப் பாடுவதற்கும் பெண்கள் சங்கீதம் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறேன்.

நம் வீடுகளிலே ஒரு சுப காரியம், நவராத்திரி, மற்ற பண்டிகைகள் என்றால் கூடி இருக்கின்றவர்கள் அனைவருக்கும் சந்தோஷம் தருவதற்காகவும், அந்தத் தருணத்தில் பகவானை நினைவுபடுத்துவதற்காகவும் பெண்கள் வீட்டிலே பாடலாம்.

ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால், அதிலே வேடிக்கையும் இருக்க வேண்டும் என்பதால், கேலிப் பாட்டுகளைக்கூடப் பெண்கள் பாடி ஆர்ப்பரிக்கலாம். வாழ்க்கையில் இதுபோன்ற ரசங்கள் இல்லாவிட்டால் உப்புச் சப்பே இருக்காது. அப்புறம் எல்லாம் உம்மணாமூஞ்சி ஆகி விடும். ஆனால் என்ன ஒன்றுவாழ்க்கையில் எல்லாமும் அதனதன் அளவுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

வீணை வாத்தியம், அம்பாளுக்கு மிகவும் இஷ்டமானது. அம்பாளுடைய சொரூபமாகவே மதிக்கப்படும் பெண்கள் வீணை கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் வீட்டு பூஜையறையில் அம்பாளை ஆனந்தப்படுத்தும் வகையில் வீணை வாசிக்கலாம்.

கோயிலுக்குப் போயும் அப்படிப் பண்ணலாம். ஆனால், அங்கே இதே மாதிரி இன்னும் பல பேர் வந்தால் போட்டி ஏற்படும். எனவே வீட்டு பூஜையறையில் அம்பாள் ஓவியமோ, படமோ, யந்திரமோ இருக்கும் அல்லவா? அதற்கு எதிரில் அமர்ந்து ஒரு கால் மணி நேரம்அரை மணி நேரம் வீணை வாசிக்கலாம். கீர்த்தனங்களை வாயால் பாடிக் கொண்டும் வாசிக்கலாம். அம்பாளும் குளிர்ந்து போவாள். வாசிக்கின்ற பெண்களின் மனமும் குதூகலமாகும்.

நான் சொன்ன மாதிரி எல்லாம் பெண்கள் இருக்க ஆரம்பித்தால், வீட்டோடு இருப்பதில் பொழுது போகவில்லை என்று இல்லாமல்பொழுது போதவில்லை என்றே ஆகி விடும்!