காணாமல் போன வைரத்தோடு

ந்த வாழ்க்கையில் நாம் தீர்மானிக்கிற எல்லாமும் அப்படியே நடந்து கொண்டிருக்கின்றன என்று பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக யோசித்துப் பாருங்கள்நாம் தீர்மானிப்பது நடைபெறுகிறதா? கிடைக்கிறதா?

இல்லையே…!

அப்படி என்றால், ஏதோ ஒரு சக்தி நம் கண்களுக்குப் புலப்படாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்பித்தானே ஆக வேண்டும்.

அதைத்தான் தெய்வ சக்தி, மகான்கள் சக்தி என்றெல்லாம் அழைக்கிறோம்.

காஞ்சி மகா பெரியவாளைப் பரிபூரணமாக நம்பினால், எந்த விதமான சேதாரமும் சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை நகரும் என்பது உண்மை.

இதை அனுபவப்பூர்வமாகத் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் பலர்.

காலையில் கண் விழித்ததில் இருந்து துவங்கி, அன்றாட அலுவல்கள் நகர்வதில் இருந்து, இரவு நித்திரைக்குப் போகின்றவரை மகா பெரியவா சிந்தனையிலேயே வாழ்ந்து வருகிறார்கள் பலர்!

அப்படிப்பட்ட மகா பெரியவா பக்தர் ஒருவர் சேலத்தில் இருந்து வருகிறார். பெயர் ராமகிருஷ்ணன். ஆடிட்டர். மகா பெரியவா ஆசியோடு இன்னமும் வாழ்ந்து வருகிறார்.

ஒரு முறை தன் தாயார், மனைவி, மற்றும் இரு உறவினர்களோடு மகா பெரியவாளைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஆடிட்டர் ராமகிருஷ்ணன்.

அப்போதெல்லாம்மகா பெரியவா எங்கே இருக்கின்றார்? என்று தெரிந்து கொண்டு தரிசிக்கச் செல்லத் தீர்மானிக்க மாட்டார்கள். ‘அந்த மகானைத் தரிசிக்க வேண்டும் என்கிற எண்ணம் மனதில் தோன்றி விட்டால், பாரத தேசத்தின் எந்த மூலையில்எந்தக் குக்கிராமத்தில் பெரியவா முகாமிட்டிருந்தாலும் சரிதரிசித்து விட்டுத்தான் ஊர் திரும்புவார்கள்.

ஆடிட்டர் ராமகிருஷ்ணனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்த சமயத்தில், ஆந்திராவில் குண்டூருக்கு அருகே யாத்திரை சென்று கொண்டிருந்தார் மகான்.

குண்டூருக்கு அருகே பெரியவா முகாம் என்று தெரிந்து கொண்ட பிறகு, சேலத்தில் இருந்து ஒரு ரயிலில் புறப்பட்டார்கள் ஆடிட்டர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும்.

அடுத்த நாள் காலை ஏழு மணி சுமாருக்கு இவர்கள் குண்டூரை அடைந்தார்கள்.

மகா பெரியவா குண்டூரில் இருக்கிறாராஅல்லது அருகில் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்கி இருக்கிறாரா? என்று தெரிந்து கொள்ள, யாரிடம் விசாரிக்கலாம் என்று ரயில் நிலையத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தார் ஆடிட்டர்.

குண்டூர் ரயில் நிலையத்தில் தோதான ஓர் ஆசாமியும் கிடைத்தார். இங்கு மகா பெரியவா தங்கி இருந்தபோது அவரை தரிசித்திருக்கிறார் இவர்.

அவரிடம் ஆடிட்டர் ராமகிருஷ்ணன் விசாரித்தபோது, மகா பெரியவா தற்போது எந்தக் கிராமத்தில் இருக்கிறார் என்கிற விவரம் கிடைத்தது.

அதன்படி இவர்கள் ஐந்து பேரும் ஒரு வாகனம் எடுத்துக் கொண்டு, குறிப்பிட்ட அந்தக் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு சில மணி நேரப் பயணத்தில் மகா பெரியவா தங்கி இருந்ததாகச் சொல்லப்பட்ட கிராமத்தையும் அடைந்தார்கள்.

ஆடிட்டருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பரவசம். இன்னும் சில நிமிடங்களில் மகா பெரியவாளை இங்கு தரிசிக்கப் போகிறோமே என்கிற ஆனந்தம், அவர்களுக்கு இருந்த ஒட்டுமொத்த பயணக் களைப்பையும் போக்கியது.

தாங்கள் பயணித்து வந்த வாகன ஓட்டிக்கு என்ன தொகை தர வேண்டுமோ, அதைக் கொடுத்து அனுப்பினார்கள். அதன் பின் மகா பெரியவா இருக்கும் இடம் பற்றி எதிர்ப்பட்ட கிராமத்தவரிடம் விசாரித்தார் ஆடிட்டர்.

அடடாஇப்ப வந்து கேக்கறீங்களேஅவர் இங்கிருந்து புறப்பட்டுப் போய் நாலஞ்சு நாள் ஆச்சுங்களே என்றார்.

ஆடிட்டருக்கும் அவருடன் இருந்தவர்களுக்கும் சட்டென்று சுரத்து இழந்து போனது.

குண்டூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்த வாகனத்தையும் செட்டில் பண்ணி அனுப்பியாகி விட்டது. தற்போது எதில் பயணித்துச் சென்று மகா பெரியவாளை தரிசிப்பது?

மகா பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று புறப்பட்டு வந்தாகி விட்டது. ஆனால், அந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் எல்லோர் முகத்திலும் தென்பட்டது.

பரவாயில்லைமகா பெரியவா எங்கே இருந்தாலும் தேடிப் பிடித்துத் தரிசித்து விட வேண்டும். அந்த மகானின் திருமுகம் காணாமல் சேலம் திரும்பக் கூடாது என்பதில் அனைவருமே உறுதியாக இருந்தார்கள்.

இவர்களில் ஆடிட்டரின் தாயாரின் கவலை வேறு விதமாக இருந்தது. ”பாவம்நீங்கல்லாம் சின்னஞ் சிறுசுகள். பெரியவாளைப் பார்த்து தரிசிக்கலாம்கிற ஒரு ஆசையில அவ்வளவு தூரத்துலேர்ந்து பொறப்பட்டு வந்தீங்கவயசான காலத்துல நானும் ஆசைப்பட்டது தப்பு போலிருக்கு. ஒங்க எல்லாருக்கும் சிரமம் குடுத்துண்டு இருக்கேன். ஒங்க வேகத்துக்கு என்னால ஓட முடியலை என்றார் குரல் கம்ம.

மகனான ஆடிட்டர் ராமகிருஷ்ணனும் அவரது மனைவியும் தேற்றினார்கள். ”அப்படி எல்லாம் நீங்க சொல்லக் கூடாதம்மாநாம எல்லாரும் ஊர்ல இருந்து பொறப்பட்டதே அந்த மகானோட ஆசியாலதான். நீங்க கவலைப்படாதீங்கஎப்படியும் மகா பெரியவாளை இன்னும் கொஞ்ச நேரத்துல தரிசனம் பண்ணிடுவோம். எதுவும் கவலைப்படாதீங்க என்றனர்.

மகா பெரியவா தற்போது எந்தக் கிராமத்தில் இருக்கிறார்அவரைத் தரிசிக்க இங்கிருந்து எப்படிச் செல்வதுஎங்கே விசாரிக்கலாம் என்று யோசித்தார் ஆடிட்டர்.

அப்போது அங்குள்ள கோ ஆபரேட் சொசைட்டி அலுவலகம் ஆடிட்டரின் கண்களில் பட்டது.

சரிஅங்கே போய் விசாரித்தால் ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று தீர்மானித்து அந்த அலுவலகத்துள் நுழைந்தார் ஆடிட்டர் ராமகிருஷ்ணன்.

குண்டூரில் இறங்கி, நெடுந் தொலைவு சிரமப்பட்டுப் பயணித்து வந்தும், மகா பெரியவாளைத் தரிசிக்க முடியவில்லை. இது ஆடிட்டர் ராமகிருஷ்ணனுக்கும் அவருடன் பயணித்து வந்தவர்களுக்கும் சற்று வருத்தத்தைக் கொடுத்தது என்னவோ நிஜம்!

என்றாலும், ஆடிட்டருக்கு ஒரு நம்பிக்கை… ‘நாம் ஆசைப்பட்டு விட்டால் மட்டும் மகானின் தரிசனம் கிடைத்து விடாது. அவர் தீர்மானிக்க வேண்டும். மகா பெரியவா தரிசனம் எந்த வேளையில் கிடைக்க வேண்டுமோ, நிச்சயம் அந்த நேரத்தில் கிடைத்து விடும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனவே ஆடிட்டர் சற்றும் தளரவில்லை. அவ்வப்போது மகா பெரியவா திருநாமத்தை மனதுக்குள் சொன்னபடி அவரையே வணங்கிக் கொண்டிருந்தார்.

மகா பெரியவா தற்போது தங்கி இருக்கிற கிராமம் எது என்பது நமக்குத் தெரியாதுதெரிந்தாலும், அந்தக் கிராமம் செல்வதற்கு பாஷை உட்பட நமக்குப் பல சிரமங்கள் இருக்கும்இந்த நிலையில் என்ன செய்வது? என்பது புரியாமல் தவித்தபோதுதான் அருகில் உள்ள கோ ஆபரேடிவ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்ததும், அதிகாரி போல் தென்பட்ட ஒருவரின் அருகே சென்றார் ஆடிட்டர்.

ஒரு புன்னகையுடன் அந்த அதிகாரி, ஆடிட்டரை அண்ணாந்து பார்த்தார்.

ஊரில் இருந்து புறப்பட்டு குண்டூரை அடைந்தது, பிறகு அங்கிருந்து புறப்பட்டு இந்தக் கிராமம் வந்தது வரை எல்லாவற்றையும் சுருக்கமாக அந்த அதிகாரியிடம் ஒப்புவித்தார் ஆடிட்டர்.

ஆமாம்நீங்கள் சொல்லக் கூடிய மகான் இங்குதான் இருந்தார். நாங்களும்கூட அவரைத் தரிசித்தோம். இப்போது அவர் இங்கிருந்து நெடுந் தொலைவு சென்றிருப்பார். அநேகமாக இந்த கிராமத்தில் இருக்கக் கூடும் என்று சொல்லி, ஒரு கிராமத்தின் பெயரைச் சொன்னார் அதிகாரி. அவர் நிதானமாகவும் தன்மையாகவும் பேசிய விதம் ஆடிட்டருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நாங்க அனைவரும் அவரை தரிசனம் பண்றதுக்காக தமிழ்நாட்டுல சேலம்ங்கிற ஊர்லேர்ந்து வந்திருக்கோம். இந்தப் பகுதி எங்களுக்குப் புதிது. குண்டூருக்கு வந்து சேர்ந்தது முதல் அவரைத் தரிசிக்க முடியாமல் திண்டாடுகிறோம். அதனால், தற்போது தாங்கள் சொன்ன ஊருக்கு நாங்கள் செல்வதற்கு நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் ஆடிட்டர்.

ஆடிட்டர் என்ன சொல்ல வருகிறார் என்பது அந்த அதிகாரிக்குப் புரியவில்லை. பின், ”இப்ப நான் ஒங்களுக்கு என்ன செய்யணும்? என்று நேரடியாகக் கேட்டார்.

ஆடிட்டர் ஒரு தயக்கத்துடன் ஆரம்பித்தார். ”குண்டூர்லேர்ந்து நாங்க வந்த வண்டியை அனுப்பிட்டோம். இப்ப எங்களுக்கு ஒரு வண்டி வேண்டும். ஒங்க அலுவலக வாசல்ல ஒரு ஜீப் நிக்குது. அதை எங்களுக்குக் கொடுத்து ஒரு டிரைவரையும் அனுச்சீங்கன்னா, மகா பெரியவா இருக்கிற இடத்துல இறங்கிட்டுப் பத்திரமா அனுச்சிடுவோம்.

அதிகாரி யோசித்தார்.

உடனே ஆடிட்டர், ”இதுக்கு எவ்வளவு தொகை நாங்க கொடுக்கணுமோ, அதை முழுக்க நான் குடுத்துடறேன் என்றார் சட்டென்று.

பணம் முக்கியமில்லை என்று ஆடிட்டரைப் பார்த்துச் சொன்ன அந்த அதிகாரி தொடர்ந்து, ”நீங்க அத்தனை பேரும் இவ்வளவு சிரத்தையோடு பொறப்பட்டு தமிழ்நாட்டுலேர்ந்து வந்திருக்கீங்க. அந்த மகானைத் தரிசிக்க முடியலேன்னதும், சோர்ந்து போய் ஊருக்குத் திரும்பாம, அவரைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் கௌம்புவோம்னு உறுதியோட இருக்கீங்களேஒங்களோட பக்திதான் என்னை ஆச்சரியப்பட வெக்குது என்றவர், இருக்கையில் இருந்தவாறே யாரையோ அழைத்தார்.

அடுத்த கணம் அவருக்கு முன்னால் ஒருவர் வந்து நின்றார். அவர்தான் ஜீப் டிரைவர். ‘இந்த ஐந்து பேரையும் பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போகணும் என்று டிரைவருக்கு உத்தரவிட்டார் அதிகாரி.

பிறகு ஆடிட்டர் பக்கம் திரும்பி, ”இவர்தான் எங்க டிரைவர். அவர் ஒங்களைக் கூட்டிட்டுப் போவார். நீங்கள் தரிசிக்க வேண்டிய மகான் எங்கே இருக்கிறாரோ, அந்தக் கிராமத்தை விசாரிச்சு ஒங்க அனைவரையும் விட்டுட்டுத் திரும்பி விடுவார். வண்டிக்கு டீசல் போடுறதுக்கு மட்டும் அவர்கிட்ட பணம் குடுத்தா போதும்

என்ன ஒண்ணுநீங்க போற பாதை முழுக்க குண்டும் குழியுமா இருக்கும். வயசானவங்க வேற இருக்காங்க. அதன் எனக்குக் கவலையா இருக்கு என்று வெளியே அமர்ந்திருக்கும் ஆடிட்டரின் தாயாரைப் பார்த்துச் சொன்னார். பிறகு, ”பரவாயில்லைஜாக்கிரதை போயிட்டு வாங்கநீங்க வழிபடுகிற மகான் ஒங்க கூட துணை இருப்பார் என்று ஆறுதலாகச் சொல்லி விட்டு விடை கொடுத்தார் அதிகாரி.

ஆடிட்டர் ராமகிருஷ்ணன் உட்பட அனைவரும் அந்த அதிகாரிக்கு இரு கரங்களையும் கூப்பிநன்றி சொல்லி விட்டு, ஜீப்பில் ஏறி அமர்ந்தனர்.

செல்கிற பாதை முழுக்கக் குண்டும் குழியுமா இருக்கும் என்று அதிகாரி சொன்னதும் யாருக்கு வயிற்றில் புளியைக் கரைத்ததோ இல்லையோஆடிட்டர் ராமகிருஷ்ணனின் தாயாரின் வயிற்றில் புளியைக் கரைத்தது.

வயோதிக காலத்தில் இருந்த அந்த முதிய மாது தன் மகன் ராமகிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னார்: ”ஏண்டாநீங்கல்லாம் சின்னஞ் சிறுசுகள்ஒங்களால ஒரு இடத்துக்கு எப்படி வேணாலும் பயணப்பட முடியும். ஆனா, நான் ஒங்களோட சேர்ந்துண்டு தொந்தரவு குடுக்கிறேனோன்னு கவலையா இருக்கு. நான் ஒங்களோட பொறப்பட்டு வரலேன்னா நீங்க பாட்டுக்கும் எப்படி வேணா போயிடலாம். நான் ஒங்களுக்கு சுமையா வந்துட்டேன்டா. ஏன்தான் என்னைக் கூட்டிண்டு வந்தியோ?

தன் தாயார் இப்படிச் சொன்னதும், ஆடிட்டரின் கண்கள் கலங்கின. ”அம்மாஏன் இப்படியெல்லாம் பேசறேஎதுவும் நாம தீர்மானிச்சு நடக்கறதில்லே. நம்ம எல்லாரையும் மகா பெரியவாதான் இங்கே வரவழைச்சிருக்கா. அதான் ஒண்ணா பயணப்பட்டுண்டு இருக்கோம். வீணா கவலைப்படாத. நீயா கற்பனை பண்ணிண்டு பொலம்பாதே என்று தாயாரின் கைகளைப் பற்றிக் கொண்டு தேற்றினார்.

அந்தக் கிராமத்தில் இருந்து கிளம்பியது ஜீப். உபயம்கோ ஆபரேட்டிவ் சொசைட்டி.

ஆடிட்டர் ராமகிருஷ்ணன் தன் தாயாரிடம் சொன்னார்: ”அம்மாபெரியவாளை இன்னும் ஒரு சில மணி நேரத்துல தரிசனம் பண்ணப் போறோம். ஆனா, இப்ப நாம போற இந்தப் பாதை, குண்டும் குழியுமா இருக்குமாம். அதான் ஜீப் குடுத்திருக்கா. டிரைவர் நிதானமாத்தான் போவார். இருந்தாலும், பள்ளம் மேட்டுல வண்டி ஏறி இறங்கப்பமகா பெரியவாமகா பெரியவானு அவரோட திருநாமத்தைச் சொல்லிண்டே வா. ஒனக்கு சிரமம் தெரியாது. அந்த நாமத்தைக் கேக்கிற எங்களுக்கும் கஷ்டம் தெரியாது.

தாயார் சிரித்துக் கொண்டே சொன்னார்: ”குண்டு குழில இறங்கறப்ப மட்டும் இல்லேடா ராமகிருஷ்ணாநல்ல ரோட்டுல வண்டி போனாலும் அப்பவும் அவர் திருநாமத்தைத்தாண்டா நான் உச்சரிச்சுண்டு இருப்பேன். பெரியவா எப்பவும் நம்ம கூட இருப்பார். அந்த நம்பிக்கைதான் நம்மளைக் காப்பாத்தறது.

எந்த நிலையிலும் குருவை மறந்து விடக் கூடாது.

எல்லோரும் சொன்னது போல்எதிர்பார்த்தது போல் குண்டும் குழியுமான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது ஜீப். அனைவருமேமகா பெரியவா திருநாமத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

பாவம், ஆடிட்டர் ராமகிருஷ்ணனின் தாயார்தான் ரொம்பவும் சிரமப்பட்டார்.

வயதான தேகம், இந்த பயணத்தில் ரொம்பவும் தவித்துப் போனது. ஆனாலும், தளர்ந்து விடவில்லை.

குலுங்கலுடன் ஜீப் பயணிக்கிறபோது தாயாரின் உடல் மொத்தமும் மேலும் கீழும் தூக்கிப் போட ஆரம்பித்தது.

அதிக வேகம் இல்லாமல்நிதானமாகவே போய்க் கொண்டிருந்தது ஜீப். காரணம்அந்த சாலையில் இன்னும் வேகம் பிடித்தால், வண்டிக்குள் இருப்பவர்கள் ஏகத்துக்கும் சிரமப்பட நேரிடலாம்.

மகா பெரியவா தங்கி இருக்கின்ற கிராமம் உடனே வந்து விடாதா? என்று எல்லோரும் பிரார்த்தித்தபடியே ஜீப் சென்று கொண்டிருக்கும் சாலையை ஆர்வமாகப் பார்த்தபடி இருந்தனர்.

சுமார் மூன்று மணி நேரம் பயணித்த பின், மகா பெரியவா முகாமிட்டிருந்த கிராமத்தை அடைந்தது ஜீப்.

கிராமத்துச் சாலையில் நகரத்து முகங்கள். சாலையில் பக்தி மணம் கமழ்ந்தது.

மகா பெரியவாளைத் தரிசிக்க அருகில் உள்ள ஆந்திர நகரங்களில் இருந்து பக்தர்கள் சிலர் வந்திருந்தனர்.

எல்லா வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டிருந்தது.

கிராமத்தின் கடைசியில் மகா பெரியவா தங்கி இருந்தார்.

மகான் தங்கி இருக்கிற இடம் வரை சென்று, வண்டியில் இருந்து இறங்குவது முறையாகாது என்று தள்ளியே நிறுத்தச் சொன்னார் ஆடிட்டர்.

ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து அனைவரும் இறங்கினர். தன் தாயாருக்கு ஒரு கை கொடுத்து அவரைக் கீழே இறக்கினார் ராமகிருஷ்ணன்.

இறங்கிய தாயார் மகா பெரியவா தங்கி இருக்கிற திசையைப் பார்த்து பரவசத்துடன் கும்பிட்டு, கன்னத்திலும் போட்டுக் கொண்டார்.

கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்ட மறு விநாடி, தாயாரின் முகம் மாறியது. ஏனோ, ஒரு சோகம் அப்பிக் கொண்டது.

ராமகிருஷ்ணனும், அவரது மனைவியும் இதைக் கவனித்து விட்டனர்.

என்னம்மாஎன்னாச்சு? ஏன் உன்னோட முகம் கலவரமா இருக்கு?

ராமகிருஷ்ணாஎப்படிடா சொல்லுவேன்? என்னோட அலட்சியமாகர்மாவாஎப்படிடா சொல்லுவேன்? என்று அழாத குறையாகத் தேம்பினார்.

சொல்லும்மா என்று தாயாரின் கைகளைப் பற்றிக் கொண்டு ராமகிருஷ்ணன் கேட்டதும், ”என் காதுல இருந்த ஒரு வைரத் தோட்டைக் காணோம்டா ராமகிருஷ்ணாவண்டி குண்டும் குழியுமான பாதையில வந்தப்ப, எங்கியோ விழுந்துடுத்து போலிருக்கு என்று கண் கலங்கவே ஆரம்பித்தார்.

இன்றைக்கு இருப்பது போன்ற கண்ணுக்குத் தெரியாத வைரத் தோடு அல்ல. ராமகிருஷ்ணனின் தாயார் அணிந்திருந்தது அளவில் பெரியது. விலையோ அதிகம்.

ராமகிருஷ்ணனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கவலைப்படவும் இல்லை.

இருந்தாலும், பயணித்தவர்களும் டிரைவரும் சேர்ந்து வண்டிக்குள் எங்கேனும் விழுந்திருக்கிறதா என்று ஒரு நப்பாசையில் தேடினர்.

உடன் வந்த உறவினர் ஒருவர் சொன்னார்: ”ஓரமா உக்கார்ந்திருந்ததுனால திருகோட கழண்டு வெளில ரோட்டுல விழுந்திருக்கும்.

டிரைவரும் அதை ஆமோதித்தார்.

யதேச்சையாக ஜீப்பில் இருந்து இவர்கள் இறங்கிய பின்பக்கக் கதவு திறந்திருக்கஅதை மூடுவதற்கு முயன்றார் டிரைவர்.

அங்கே ஸ்டெப்னி மாட்டப்பட்டிருந்தது. ஸ்டெப்னி டயரைப் பார்த்த டிரைவருக்கு வியப்பு.

சார், இங்கே பாருங்க என்றுஸ்டெப்னியின் ஓரிடத்தைக் காட்டி ராமகிருஷ்ணனை உற்சாகமாக அழைத்தார் டிரைவர்.

சட்டென்று ராமகிருஷ்ணனும் அனைவரும் அங்கே பார்க்கஎவராலும் நம்ப முடியவில்லை.

அங்கேசாலையில் எங்கோ தவறி விழுந்திருக்கும் என்று கருதப்பட்ட வைரத் தோடு காணப்பட்டது. அது மட்டுமல்லஅருகே திருகும்.

ராமகிருஷ்ணனின் தாயாருக்குக் கண்களில் ஜலம் பீரிட்டது. ”டேய் ராமகிருஷ்ணா.. பெரியவா பெரியவானு மூச்சுக்கு மூச்சு அவரோட நாமத்தைச் சொல்லிண்டே வந்ததுனால அந்த மகான் நம்மளைக் காப்பாத்திட்டாருடா. கலங்க விடலை பார்த்தியா என்றார்.

டிரைவருக்கு நன்றியை கண்ணீரால் தெரிவித்து விட்டு, டிப்ஸும் கொடுத்து அனுப்பி வைத்தார் ஆடிட்டர் ராமகிருஷ்ணன்.

அத்தனை அலுங்கல் குலுங்கலில் இந்த வைரத் தோடு கீழே விழாமல் ஸ்டெப்னியிலேயே தங்கி இருக்கிறது என்றால், அது மகா பெரியவாளின் அருள் இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்?!

மகா பெரியவாளைத் தரிசிக்க சென்றபோது இந்த அனுபவத்தை ராமகிருஷ்ணன் உணர்வுபூர்வமாகச் சொல்லஒரு புன்னகையுடன்அப்படியா என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்டதாம் அந்தப் பரப்பிரம்மம்.