நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சாவூர்ப் பகுதியில் ஒரு முறை யாத்திரை மேற்கொண்டிருந்தார் மகா பெரியவா.
அடுத்து முகாம் இட வேண்டிய கிராமத்தை நோக்கி இந்த யாத்திரை நடை போட்டு நகர்ந்து கொண்டிருந்தது.
பல்லக்கில் அமர்ந்தபடி வந்து கொண்டிருந்தார் மகா பெரியவா.
பல்லக்கை சுமந்து நடந்து கொண்டிருந்த ‘போகிகள்‘ (பல்லக்குத் தூக்குபவர்களை இப்படித்தான் அழைப்பார்கள்) நடமாடும் தெய்வத்தையே சுமந்து செல்கிற பேறு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று பெருமிதத்தோடும் பூரிப்போடும் வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பக்தகோடிகள் ‘ஜய ஜய சங்கர‘ கோஷத்தை முழங்கிய வண்ணம் பல்லக்கைப் பார்த்து அவ்வப்போது கன்னத்தில் போட்டபடி உணர்ச்சிப் பெருக்கோடு நடந்து கொண்டிருந்தார்கள்.
நண்பகல் வேளையாக இருந்தாலும், சூரிய பகவானின் தாக்கம் அதிகமாக இல்லை. தன் கதிர்களால் மகா பெரியவாளை சிரமப்படுத்தக் கூடாது என்பதால், கொஞ்சம் அடக்கியே வாசித்தான் போலிருக்கிறது சூரிய பகவான்.
வயலும் வயல் சூழ்ந்த கிராமங்களின் வழியேவும் நடந்து கொண்டிருக்கும்போது இதமான காற்று அனைவரையும் வருடிச் சென்றது.
திடீரென்று பெரியவாளுக்கு பல்லக்கை விட்டிறங்கி, தொண்டர்களுடன் நடந்து செல்ல வேண்டும் என்று ஆசை வந்தது போலும்!
தகவல் பரிமாற்றத்துக்குச் சிறந்த பாஷை எது தெரியுமா?
சைகைதான்!
தனக்குக் கைங்கர்யம் செய்கிற அன்பர்களுடன் பேசுவதை விட சைகைகள் மூலம்தான் அதிக பரிமாற்றத்தை மகா பெரியவா வைத்துக் கொள்வார். அந்த சைகை பாஷைகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள்தான் மகா பெரியவா கைங்கர்யத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டார்கள்.
சாலையில் வேக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் பல்லக்கை நிறுத்தச் சொல்லி பக்கவாட்டில் ஓரிரு முறை தட்டி, சைகை செய்தார். அதைப் புரிந்து கொண்ட போகிகள் மகா பெரியவா உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அப்படியே நின்றார்கள்.
அடுத்து, பல்லக்கைக் கீழே இறக்கி வைக்குமாறு சைகை செய்தார் மகா பெரியவா. கீழே இறக்கி வைத்தார்கள்.
யாத்திரையில் சற்று முன்னால் நடந்து கொண்டிருந்த ஸ்ரீகார்யம் (இவர் ஓர் அதிகாரி) ஓடோடி வந்தார் – ‘ஏன் பல்லக்கு நிறுத்தப்பட்டது‘ என்ற குழப்பத்துடன்.
குழப்பமான முகத்துடன் வேக வேகமாக ஓடி வரும் ஸ்ரீகார்யத்தைப் பார்த்து, ”பயப்படாத… நான்தான் எறக்கச் சொன்னேன்… சித்த நடந்து வர்றேனே…” என்று சன்னமாகச் சொன்னார் மகா பெரியவா.
பல்லக்கு மட்டும் வெறுமனே பயணிக்க ஆரம்பித்தது.
மகா பெரியவா ‘நடந்து வருகிறேன்‘ என்று சொன்னது இந்த யாத்திரையில் வந்த பல அன்பர்களுக்கு சங்கடமாக இருந்தாலும், பூமாதேவிக்கு ஆனந்தம்!
பல்லக்கில் இருந்து இறங்கிய மகானின் பிஞ்சுப் பாதங்கள் தன் மேல் பதியப் போகிறதே என்கிற பரவசம் பூமாதேவிக்கு! பாவ ஆன்மாக்கள் நடந்து நடந்து பாரத்தை அதிகம் ஏற்றிக் கொண்ட பூமாதேவிக்கு மகா பெரியவாளின் திருவடி ஸ்பரிசம் பட்டால், புண்ணியம் பெற்று விடுவோமே; பாவம் கரைந்து விடுமே என்கிற பூரிப்பு!
தண்டம் சுமந்து தயாபரர் புயல் போல் நடக்க ஆரம்பித்தார்.
அவரைச் சுற்றி நாற்புறமும் இரண்டடிக்கு வெற்றிடம் விட்டு பக்தி சிரத்தையுடன் நடந்தார்கள் பக்தகோடிகள்.
இவர்கள் நடந்து செல்கிறபோது – இரு திசைகளிலும் வருகிற வாகனங்கள், பயணிக்கிற அன்பர்கள் அனைவரும் ஒரு கணம் நின்று நிதானித்து கலியுக தெய்வத்தைப் பார்த்து வணங்கி, கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்திருப்பார் மகா பெரியவா.
இந்த யாத்திரையோடு கலந்து வந்து கொண்டிருந்த திரளான அன்பர்களுள் உள்ளூர் விவசாயியும் ஒருவர்.
கன்னங்கரேல் என்ற நிறம்… கலர் மாறிப் போன வெள்ளை வேட்டி… மேலுக்கு ஒரு துண்டு… நெற்றியில் விபூதிக் கீற்றுக்கள்… உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன ஏழ்மை உருவம். ஆனால், கண்களில் தெரிந்த ஒரு ஒளியும், முகத்தில் தெரிந்த சந்தோஷமும் அந்த விவசாயியைப் பெரிய பணக்காரராகக் காட்டியது.
இன்றைய தினம் காலை மகா பெரியவா தன் நடை யாத்திரையைத் தொடங்குகிறபோதே இதில் கலந்து கொண்டு விட்டார் விவசாயி.
அந்த விவசாயி அநேகமாக இன்றைக்குத்தான் மகானைப் பார்த்திருக்க வேண்டும். ஏனோ மகானைப் பார்த்த மாத்திரத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு. தன் வேலைகளைக் கவனிக்கக்கூடச் செல்லாமல் உடன் வந்து கொண்டிருக்கிறார்.
திடீரென ஆகாசத்தில் ஒரு மாற்றம்… கரிய மேகங்களை அநாயாசமாகத் தள்ளி விட்டு சூரியன் ‘ஜிவ்‘வென வந்து கொண்டிருந்தான்… உக்கிரமான கதிர்கள்.
எங்கோ பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அந்த விவசாயி, வேக வேகமாக ஓடி மகா பெரியவா அருகே வந்தார்.
இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, ”சாமீ… பல்லக்கில் ஏறிக்கோணும்” என்றார் மரியாதையுடன்.
மகா பெரியவா அந்த விவசாயியைப் பார்த்தார். அவர் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டது தெரிந்தது. ஆனாலும், விவசாயியைப் பார்த்து ஒரு புன்னகையை வீசி விட்டுத் தன் வேகமான நடையை மீண்டும் தொடர்ந்தார்.
விவசாயியும் மகா பெரியவாளைப் பார்த்து வணங்கி விட்டு, கூட்டத்தோடு கலந்தார்.
‘தங்களுக்கு மீண்டும் ஒரு பாக்கியம் கிடைக்காதா?‘ என்று போகிகள் வெறும் பல்லக்கைச் சுமந்து கொண்டு நடந்தார்கள்.
பசுமையும் இயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் பிரதேசங்களைப் பார்த்த மகா பெரியவா, ஒரு குழந்தைக்கான குதூகலத்துடன் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தார்.
யாத்திரையில் கலந்து கொண்டிருந்த தொண்டர்களும், கிராமவாசிகளும் உற்சாகமானார்கள்.
வேக வேகமாக நடைபோடும் மகானின் திருவடிகளை தரிசனம் செய்து கொண்டே அவருடன் விரைந்து நடந்தார்கள்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்கு தொடர்ந்து இடைவிடாமல் மகா பெரியவா அந்த சாலைகளில் நடந்திருப்பார். அப்போது ஒரு சில தொண்டர்களுக்கு ‘மகா பெரியவா தொடர்ந்து நடந்து வர வேண்டாம். அவரது திருப்பாதங்களுக்கு வலி ஏற்படலாம்‘ என்று நினைத்துக் கவலைப்பட்டார்கள். ஆனால், இதை எப்படி அவரிடம் தெரிவிப்பது?
ஆனால், யாத்திரையில் கலந்து கொண்டு நடந்து வந்த வேத பண்டிதர் ஒருவரே, இதற்கான தீர்வு காண முன்வந்தார்.
ஆம்! மகா பெரியவாளை மீண்டும் பல்லக்கில் ஏறி பயணித்து வருமாறு வேண்டுகோள் வைக்கலாம் என்று அந்தப் பரப்பிரம்மத்தின் அருகே சென்றார்.
மிகுந்த பவ்யத்துடன் மகா பெரியவா அருகே சென்று அவரை பயபக்தியுடன் ஏறிட்டார்.
‘என்ன?‘ என்பது போல் நடந்து கொண்டே அந்த வேத பண்டிதரைப் பார்த்தார்.
”பெரியவா… ரொம்ப நேரத்துக்கு நடந்து வந்துட்டேள்… உங்களோட பாதம் நோகப் போறது… மீண்டும் பல்லக்கில் ஏறி பெரியவா பயணிச்சு வரணும்… தங்களை சுமந்துண்டு வரணும்னு போகிகள் எல்லாம் ஆர்வமா இருக்கா…” என்று வெறும் பல்லக்குடன் போகிகள் நடந்து செல்கிற காட்சியைக் காண்பித்தார்.
வேத பண்டிதரைப் பார்த்துப் புன்னகைத்தார். பிறகு, ”என்ன சொல்ல வரே… நடக்க வேணாம், பல்லக்கில் ஏறணும்னு சொல்றியா?” என்றார் பெரியவா.
மரியாதை நிமித்தம் தன் வாயை வலக் கையால் மூடி, ”ஆமா பெரியவா” என்றார்.
”நீ சொன்னா பல்லக்கில் நான் ஏற மாட்டேன்… இன்னொருத்தனும் என்கிட்ட வந்து சொல்லணும்” என்றார்.
வேத பண்டிதர் குழம்பினார். ‘என்னது… இன்னொருத்தனும் வந்து சொல்லணுமா? ஏன், நான் சொன்னால் போதாதா? இதைச் சொல்றதுக்கு எதுக்கு இன்னொருத்தன்? யார் அவன்?‘
பெரியவாளிடம் என்ன பேசுவது என்று புரியாமல் தவிப்புடன் வந்தார் வேத பண்டிதர்.
”அந்த இன்னொருத்தன் யார்னு யோசிக்கிறியா? ஒனக்கு இப்ப புரியாது… அதோ ஒரு விவசாயி நடந்துண்டு போறான், பாத்தியா? அவன் இந்த ஊர்ல இருக்கிற சாதாரண குடிமகன் போலிருக்கு. ஒனக்கு முன்னாடி அவன் வந்து என்கிட்ட கண்கள்ல ஒரு கெஞ்சலோட சொன்னான் – ‘சாமீ, நீங்க பல்லக்குல ஏறிப் பயணிக்கணும்‘னு. அப்ப நான் மறுத்துட்டேன்.
இப்ப நீ சொல்லி இந்தப் பல்லக்குல நான் ஏறினேன்னு வெச்சுக்கோ… அவன் மனசுக்குள்ள என்ன நினைப்பான் தெரியுமா…. ‘பாத்தியா, இந்த சாமீ நான் சொல்லி ஏறலை. குடுமி வெச்ச ஒரு பண்டிதர் சொன்னோன்ன ஏறிட்டார்னு நினைக்கலாம்… என்ன நான் சொல்றது வாஸ்தவம்தானே?” – மகா பெரியவா சொன்னதைக் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது வேத பண்டிதருக்கு.
ஒரு விவசாயிக்கு மகா பெரியவா தரும் இந்த முக்கியத்துவம் வேத பண்டிதரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது போன்ற ஒரு சிந்தனையை மகா பெரியவாளிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. தவிர, இந்த யாத்திரையில் வருகிற அனைவருமே மகா பெரியவாளின் அணுகுமுறையைக் கண்டு வியந்து அவரைப் பார்த்தார்கள்.
வேத பண்டிதரிடம் மகா பெரியவா, ”அதோ, அந்த விவசாயியை நான் கூப்பிட்டேன்னு சொல்லி அழைச்சிண்டு வா” என்று அவரை அடையாளம் காண்பித்தார்.
அடுத்த ஒரு சில விநாடிகளிலேயே விவசாயியைத் தன்னுடன் அழைத்து வந்தார் வேத பண்டிதர்.
மகா பெரியவா தன்னை எதற்காக அழைத்துள்ளார் என்று விவசாயிக்கு ஆர்வம்.
”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து நீ என்ன சொன்னே?” என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டார் விவசாயியிடம் பெரியவா.
இதற்காகவா தன்னை அழைத்தார் என்று ஆனந்தம் பொங்கியது விவசாயியிடம். ”சாமீ, ரொம்ப நேரமா உங்களோட திருப்பாதம் நோக நோக நடந்து வரீங்களே… பல்லக்குல ஏறிக்குங்களேன்னு சொன்னேன். நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்குங்க சாமீ.”
– சொல்லி முடித்த விவசாயி கைகளைக் கூப்பியபடி பெரியவாளைப் பார்த்தார்.
”ம்ம்ம்…. அப்ப சொன்னியே… இப்ப அதையே திரும்பச் சொல்லு… நீ சொன்னவுடன் பல்லக்குல நான் ஏறிக்கப் போறேன்.”
தனக்குள் ஏற்பட்ட நெகிழ்வையும் பரவசத்தையும் அடக்க முடியாமல், அதை அப்படியே நா தழுதழுக்க மீண்டும் சொன்னார் விவசாயி.
வேத பண்டிதரைப் பார்த்து மகா பெரியவா சொன்னார்: ”இவன் சொல்லிட்டான். அதனால நான் பல்லக்குல ஏறப் போறேன்.”
பல்லக்கை வெறுமனே சுமந்து சென்று கொண்டிருந்த போகிகள் மகா பெரியவா அருகே வரவழைக்கப்பட்டார்கள்.
ஸ்ரீமடத்தின் அதிகாரி ஒருவர் சொன்னதன் பேரில் பல்லக்கு கீழே இறக்கி வைக்கப்பட்டது.
பக்தர்கள் அனைவரும் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷத்தை முழங்கினார்கள்.
மகா பெரியவா தன் திருப்பாதங்களை உள்ளே வைத்து பல்லக்கில் ஏறி அமர்ந்தார்.
பசுமைச் சாலையில் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது.
ஒரு வேத பண்டிதருக்குக் கொடுக்கிற அதே முக்கியத்தை ஒரு விவசாயிக்கும் இங்கே பெரியவா கொடுக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது.