மஞ்சக்குடி சாஸ்திரிகளும் மரத் தட்டு பிரசாதமும்

கா பெரியவாளோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்.

கும்பகோணத்துக்கு அருகே அமைந்துள்ள கிராமம் மஞ்சக்குடி. இங்கு அவதாரம் செய்த ராஜகோபால சாஸ்திரிகள் பெரிய வேத வித்து. சாஸ்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் கரை கண்டவர்.

இவரது உபன்யாசத்தைக் கேட்பதற்கு அந்த அளவுக்குக் கூட்டம் கூடும்.

ஒரு முறை மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி வாங்குவதற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தார் ராஜகோபால சாஸ்திரிகள்.

சாஸ்திரிகள் எப்போது வந்தாலும், அவருடன் பல விஷயங்களைப் பேசி விட்டு, அதன் பின்தான் விடை கொடுத்து அனுப்புவார் பெரியவா.

அதுபோல் அன்றைக்கும் அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா.

ராஜகோபால சாஸ்திரிகள் கிளம்புகிறபோது ஒரு மரத் தட்டில் விபூதி, குங்குமம், கல்கண்டு உள்ளிட்ட பிரசாதங்களை வைத்துக் கொடுத்தார் மகா பெரியவா.

அந்தக் காலகட்டத்தில் முக்கியப்பட்டவர்கள் எவர் ஸ்ரீமடம் வந்தாலும் அவர்களுக்கு இது போன்ற ஒரு மரத் தட்டில் வைத்து பெரியவா தன் கைப்பட பிரசாதம் தருவது வழக்கம். பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் அதை மட்டும் எடுத்துத் தாங்கள் கொண்டு வந்திருக்கிற பையில் போட்டுக் கொண்டு, மரத் தட்டை மடத்திலேயே வைத்து விட்டுப் போவார்கள். இதுதான் நடைமுறை.

ஆனால், அன்றைக்கு மகா பெரியவாளோடு நீண்ட நேரம் உரையாடியதும், அன்புடன் அந்த மரத் தட்டில் தனக்குப் பிரசாதம் கொடுத்ததும் ராஜகோபால சாஸ்திரிகளின் மனதில் ஆனந்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்தத் தருணங்கள் மிகவும் நெகிழ்வானவை என்று உள்ளுக்குள் பூரித்துப் போனார்.

எனவே, பெரியவா தனக்கு வழங்கிய பிரசாதம் மட்டும் அல்லாமல், அவரது திருக்கரம் பட்ட அந்த மரத் தட்டையும் தன்னுடன் எடுத்துச் செல்ல விரும்பினார். ஆனால், நடைமுறையில் இது கிடையாதேதட்டை வைத்து விட்டுத்தானே போக வேண்டும்?!

அதற்காக சாஸ்திரிகள் ஒரு காரியம் செய்தார். இந்த மரத் தட்டை யாருக்கும் தெரியாமல் நம் அங்கவஸ்திரத்துக்குள் வைத்து மறைத்து எடுத்துச் சென்று விடலாம்யாருக்குத் தெரியப் போகிறது என்று தீர்மானித்தார்.

பிரசாதத்தை ஒரு பையிலும், பிரசாதம் வைத்துக் கொடுத்த மரத் தட்டை அங்கவஸ்திரத்துக்குள் வைத்து மறைத்தபடியும் ஸ்ரீ மடத்தினுள் இருந்து வெளியே வந்தார் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்.

காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து புறப்பட்டுத் தன் இல்லத்தை அடைந்தார் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்.

இல்லத்துக்குள் நுழைந்ததும், பிரசாதப் பையை மனைவியிடம் கொடுத்தார். மேல் அங்கவஸ்திரத்துக்குள் மறைத்துக் கொண்டு வைத்திருந்த மரத் தட்டை முகம் நிறைய உற்சாகத்தோடு வெளியே எடுத்தார். அந்தத் தட்டை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்தார். கண்களில் ஒற்றிக் கொண்டார். மகா பெரியவாளின் திருக்கரம் பட்ட மரத் தட்டு.

பிரசாதத்தை வாங்கிய மஞ்சக்குடி சாஸ்திரிகளின் மனைவி ஆச்சரியத்துடன் தன் கணவரை மேலும் கீழும் பார்த்தாள். பிறகு, அவர் கைகளில் இருந்த மரத் தட்டிலேயே மனைவியின் பார்வை நிலைகுத்தி நின்றது.

அதற்குள் இல்லத்தில் இருந்த அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அனைவருமே சாஸ்திரிகளின் கைகளில் இருந்த மரத் தட்டை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

அனைவரையும் ஒரு பெருமையுடன் பார்த்தார் சாஸ்திரிகள்.

மஞ்சக்குடி சாஸ்திரிகளின் மாப்பிள்ளை கேட்டார்: ”என்ன மாமா இது…?

ஸ்ரீமடத்துல மகா பெரியவா தன் திருக்கரங்களால கொடுத்த பிரசாதத் தட்டு என்றார் சாஸ்திரிகள்.

உடனே மாப்பிள்ளை, ”அது தெரியறது மாமாஆனா, பிரசாதம் கொடுத்த மரத் தட்டையும் கையோட ஆத்துக்குக் கொண்டு வந்திருக்கேளேஇதை வாங்கின கையோட அதுல இருக்கிற பிரசாதங்களை மட்டும் எடுத்துண்டு, இந்த மரத் தட்டை அங்கயே வெச்சுட்டு அல்லவா வரணும்?! என்று பிரமிப்புடன் கேட்டார்.

சாஸ்திரிகள் பதில் சொல்லவில்லை.

அவரது மாப்பிள்ளை விடவில்லை. ”மாமாநானும் ஸ்ரீமடத்துக்குப் போய் பெரியவாளை அடிக்கடி தரிசனம் பண்ணி இருக்கேன். அப்போதெல்லாம் இது போன்ற மரத் தட்டில் வெச்சு பெரியவா எனக்கு பிரசாதம் கொடுத்திருக்கார். பிரசாதம் தருகிறபோது, ‘பிரசாதத்தை எடுத்துண்டு தட்டை உள்ளே கொடுத்துட்டுப் போனு வேற பெரியவா சொல்லுவார். அதன்படி பிரசாதத்தை ஒரு பைக்குள்ள பத்திரமா போட்டுண்டு, மரத் தட்டை உள்ளே கொடுத்துட்டு வருவேன். உங்களுக்கு மட்டும் தட்டை எடுத்துண்டு வர்றதுக்கு எப்படி பர்மிஷன் கொடுத்தா மகா பெரியவா?

கேள்விகள் கேட்பது சுலபம். ஆனால், சில கேள்விகளுக்குப் பதிலளிப்பது இருக்கிறதேஅதுதான் ரொம்ப கஷ்டம்!

மாப்பிள்ளை சாதாரணமாகக் கேட்டாலும், மஞ்சக்குடி சாஸ்திரிகளுக்கு ஏனோ வியர்த்தது.

மகா பெரியவா திருக்கரம் பட்ட மரத் தட்டு என்பதால் நான்தான் ஆசைப்பட்டு அங்கே யாருக்கும் தெரியாமல் மறைத்து மறைத்து எடுத்து வந்தேன் என்கிற உண்மையைப் பட்டென்று சொல்ல முடியுமா? இதை யாரேனும் தவறாக எடுத்துக் கொண்டால் என்ன ஆவது? ‘ஊருக்கெல்லாம் நியாயமும் உபதேசமும் பண்ற மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் போயும் போயும் ஒரு மரத் தட்டுக்கு ஆசைப்பட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தூக்கிண்டு வந்துட்டார் என்றல்லவா பேசுவார்கள்?

குடும்பத்தாரிடம் நிஜத்தைச் சொல்லத் தயங்கிய சாஸ்திரிகள் ஒரு மாதிரி சிரித்து மழுப்பி, ”அதெல்லாம் எப்படீன்னு கேக்காதீங்கோஎப்படியோ எனக்குக் கிடைச்சுது. அவ்ளோதான் என்று சொல்லி அந்த விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். மரத் தட்டுடன் உள்ளே நகர்ந்தார்.

ஆனாலும், சாஸ்திரிகளின் மனம் அமைதியாக இல்லை. நிம்மதியை இழந்தவர் போல் தவித்தார். அன்றைய பொழுது முழுக்க சுரத்தின்றியே கழிந்தது. ‘காஞ்சி ஸ்ரீமடத்துக்குச் சொந்தமான ஒரு பொருளை உரியவர்களின் அனுமதி இல்லாமல் கொண்டு வந்து விட்டேனேஇதற்குப் பெயர் திருட்டா? அப்படியென்றால் நான் செய்தது பாவ காரியமா? என்று அவரது மனம் பலவாறும் யோசித்துத் தவித்தது. இந்தக் கேள்வி அவரது மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.

அன்றைய இரவுப் பொழுது உறக்கம் சாஸ்திரிகளுக்கு திருப்தியாக இல்லை. புரண்டு புரண்டு படுத்தார். ஆனால், தூக்கம் வரவில்லை. அப்போதே தீர்மானித்து விட்டார் – ‘நாளை காஞ்சி ஸ்ரீமடம் சென்று இந்த மரத் தட்டை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் வைத்து விட வேண்டும் என்று.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. இல்லத்தில் சொல்லிக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடம் புறப்பட்டார். மறக்காமல் அந்த மரத் தட்டை யாருக்கும் தெரியாமல் ஒரு வஸ்திரத்துக்குள் சுற்றி வைத்துக் கொண்டார்.

மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகளை அறிந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்ததும் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அனைவருக்கும் பதில் சொல்லிக் கொண்டு மகா பெரியவா தரிசனத்துக்காகச் சென்றார். எவரும் அறியாதவாறு மரத் தட்டைப் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

பெரியவா தரிசனம் முதலில் ஆயிற்று. ”இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜை இருக்கு. இருந்து பார்த்துட்டுப் போ என்றார் பெரியவா.

இருக்கேன் பெரியவாஎன் பாக்கியம் என்று மகானுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, மூடப்பட்ட நிலையில் இருக்கின்ற மரத் தட்டை எடுத்துக் கொண்டு நடந்தார்.

பிரசாதம் வழங்குவதற்கான மரத் தட்டுகள் எங்கு சேகரிக்கப்பட்டு வைத்திருக்கின்றனவோ அந்த இடத்துள் நுழைந்தார். எவருக்கும் தெரியாமல்வஸ்திரத்துக்குள் சுற்றி தான் கொண்டு வந்த தட்டை, அந்தத் தட்டுக்களோடு சேர்த்து விட்டார்.

இதற்குப் பிறகுதான் தன் மனதில் உள்ள பாரம் முற்றிலுமாக இறங்கியது போல் உணர்ந்தார் சாஸ்திரிகள். ‘யப்பாடா என்று நீண்ட பெருமூச்சு விட்டு, இயல்பாக வெளியே வந்தார். சுமை இறங்கிய மனம், குதூகலமானது.

சந்திரமௌளீஸ்வரர் பூஜை துவங்கப் போகிற நேரம் நெருங்கியது. அங்கே போய் பூஜையைத் தரிசிப்பதற்காக ஓரிடத்தில் அமர்ந்தார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் நடமாடும் தெய்வமான மகா பெரியவா பூஜை ஆரம்பிப்பதற்கு வந்து அமர்ந்தார்.

காண்பதற்கும் கிடைத்தற்கும் அரிய இந்த பூஜையை தரிசிப்பதற்குத் திரளான பக்தர்கள் கூட்டம் காத்திருந்தது.

சுமார் மூன்று மணி நேரம் விஸ்தாரமாக பூஜை நடந்து முடிந்தது. பெரியவாளிடம் எல்லோரும் தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்கள்.

வைதீகமானசாஸ்ரோத்தமான பக்தர்களுக்கு பிரசாதத்தை மரத் தட்டில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா.

அடுத்து மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகளுக்கு பிரசாதம் கொடுக்கும் விதமாக ஜாடை காண்பித்து அவரை அருகே அழைத்தார். அருகே வந்த சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.

தீர்த்தப் பிரசாதத்தை சாஸ்திரிகளுக்கு வழங்கிய பெரியவா, மரத் தட்டில் மற்ற பிரசாதங்களை வைத்திருந்ததையும் சாஸ்திரிகளால் பார்க்க முடிந்தது.

மரத் தட்டு பிரசாதத்தை அப்போதைக்குத் தராமல் அவரை உட்கார்த்தி வைத்து மற்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் பெரியவா.

இன்றைக்கு மரத் தட்டில் பிரசாதம் தந்த பிறகு, அவற்றை எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டு விட்டு, மரத் தட்டை உள்ளே கொடுத்து விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார் சாஸ்திரிகள்.

க்ஷேம லாபம், வேதம், பாடசாலை, உபன்யாசம் என்று பல விஷயங்கள் பேசி முடிந்த பின், ”இந்தாபிரசாதம் வாங்கிக்கோ என்று மரத் தட்டை எடுத்து நீட்டினார் மகா பெரியவா.

மகானுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுப் பிரசாதத்தை பவ்யமாக வாங்கிக் கொண்டார் சாஸ்திரிகள்.

பிரசாதத்தை மட்டும் தட்டில் இருந்து எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த ஒரு பைக்குள் போட ராஜகோபால சாஸ்திரிகள் முற்படஅவரைக் கூர்ந்து பார்த்த பெரியவா சொன்னார்:

பிரசாதங்களை எடுத்துப் பையில போடாதேஇந்த மரத் தட்டோட எடுத்துண்டு போ. இந்தத் தட்டும் உனக்கானது.

மகா பெரியவாளின் இந்த பதிலைக் கேட்டதும் ராஜகோபால சாஸ்திரிகளின் கண்கள் பனிக்க ஆரம்பித்தன. அத்யந்த பக்தன் ஆசைப்பட்டதை அவரே அருள்கிறாரே?!

பெரியவா தந்த மரத் தட்டை சாஸ்திரிகள் உற்றுப் பார்த்தார். அவரால் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்று எந்தத் தட்டை உள்ளே கொண்டு போய் எவருக்கும் தெரியாமல் வைத்தாரோ, அதே தட்டுதான்!

பல மணி நேரம் அந்த மரத் தட்டு சாஸ்திரிகள் இல்லத்தில் இருந்த காரணத்தால், அதை நன்றாக அடையாளம் தெரிந்தும் வைத்திருந்தார்.

விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள்.

பெரியவா ஒரு புன்னகையுடன், ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டேபரவால்லஎடுத்துண்டு போ என்பது மாதிரி அர்த்தபுஷ்டியுடன் பார்த்து ஆசி வழங்கினார்.

தன்னிடம் வரக் கூடிய ஆத்மார்த்த பக்தர்கள் எதை விரும்புகிறார்களோ, எதை எதிர்பார்க்கிறார்களோஅதைக் கொடுத்து அனுப்புவது மகான்களின் வழக்கம்.

அந்த வகையில் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள், மகா பெரியவாளின் பரிபூரண ஆசிகளைப் பெற்ற காரணத்தால் அவர் மனதில் இருந்த ஆசையை நிறைவேற்றினார் மகா பெரியவா.