“உன்னோட வாசிப்புக்கு இந்த தோடா, தோடாதான்…”

வேதங்களைப் பாதுகாக்கிறவேத சம்ரக்ஷணம் மற்றும் பசுக்களைப் பாதுகாக்கிறகோ சம்ரக்ஷணம் – இவை இரண்டையும் தன் இரு கண்கள் என்று அடிக்கடி சொல்வார் மகா பெரியவா.

வேதம் கற்றவருக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும்அவர்கள் மனம் கோணும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்று ஸ்ரீமடத்துப் பணியாளர்களிடம் அடிக்கடி வலியுறுத்துவார் பெரியவா.

மகா பெரியவா காலத்தில் வேதம் கற்பதற்கு மாணவர்களைத் தேடித் தேடிச் சேர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளை வேதம் கற்க அனுப்புவதற்குப் பெற்றோர்கள் தயங்குவார்கள். காரணம், வேதம் கற்றால் எதிர்காலத்தில் அவர்களால் ஜீவனம் நடத்த முடியாது என்று பலரும் தவறாக நினைத்தார்கள். வேதம் கற்றால் அருள் கிடைக்கும்பொருள் கிடைக்காது என்று நம்பினார்கள்.

எனவே, வேதம் கற்பவர்களை ஊக்குவிக்க மகா பெரியவா பல முயற்சிகள் எடுத்தார்.

முறையாக வேதம் கற்று, வேதம் சொன்ன நெறிமுறைப்படி வாழ்ந்து வரும் பண்டிதர்களை அடிக்கடி ஸ்ரீமடத்துக்கோ, அல்லது ஸ்ரீமடத்தின் முகாம்களுக்கோ அழைத்து அவர்களை கவுரவிப்பார் மகா பெரியவா. வேதம் கற்பவர்களிடையே இது உற்சாகத்தைக் கொடுத்தது.

ஒரு முறை இது போல் நடத்த விரும்பினார் மகா பெரியவா. அப்போது மகான் திருவாரூருக்கு அருகே ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

முறைப்படி வேதம் கற்றுத் தேர்ந்த பண்டிதர்களை முகாமுக்கு அழைத்துத் தன் கையால் அவர்களுக்கு தங்கத்தினால் ஆன ஏதேனும் ஆபரணம் தந்து கவுரவிப்பது என்று மகான் தீர்மானித்தார்.

அவரவர்களது வித்வத்துக்கு ஏற்றாற்போல் தங்க நாணயம், டாலர், தோடா (வளையல் போல் கையில் அணிந்து கொள்வது) என்று விதம் விதமாக வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கென தகுதியான பண்டிதர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு ஸ்ரீமடத்தின் காரியதரிசிக்கு உத்தரவிட்டார் பெரியவா. அதன்படி தயாரிக்கப்பட்ட அந்தப் பட்டியலில் இருந்த அனைவருக்கும் திருவாரூர் அருகே இருக்கும் முகாமுக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தப் பண்டிதர்கள் வரிசையில் சந்தான கோபாலாச்சார்யர் என்கிற வேத வித்வானும் உண்டு. ரொம்பவும் சத்தானவர். பல காலம் வேதம் பயின்று, அதை மற்றவர்களுக்கும் பயிற்றுவித்து, வேதம் வளர்ப்பதைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர் இவர்.

மகா பெரியவாளிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததும் ரொம்பவும் சந்தோஷப்பட்டு, திருவாரூர் பயணமானார் சந்தான கோபாலாச்சார்யர்.

அங்கிருந்து பெரியவா கேம்ப் இருக்கும் கிராமத்துக்குச் சென்றார்.

வேத பண்டிதர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மகா பெரியவாளின் திருக்கரங்களால் தனக்கும் ஒரு கவுரவம் கிடைக்கப் போகிறது என்கிற எண்ணமே அவருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

கூடி இருந்த பண்டிதர்கள் வரிசையில் தனக்கு உண்டான இடத்தில் அமர்ந்து கொண்டார் சந்தான கோபாலாச்சார்யர்.

திருவாரூரை ஒட்டி அமைந்த அந்தக் கிராமம் என்ன புண்ணியம் செய்ததோஎண்ணற்ற வேத வித்துக்களைத் தன் மடியில் அன்றைய தினம் சுமந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு பண்டிதராகஅவர்களது வித்வத்துக்கு ஏற்ப கவுரவம் செய்து கொண்டே வந்தார் பெரியவா. அந்த வரிசையில் சிறப்புச் சன்மானம் பெறும் வேத பண்டிதராக சந்தான கோபாலாச்சார்யர் அழைக்கப்பட்டார்.

தான் அமர்ந்திருந்த வரிசையில் இருந்து எழுந்து மகா பெரியவாளை நோக்கி நடந்தார். மகானுக்கு அருகே வந்ததும், பெருமையும் உற்சாகமும் பொங்க அந்தத் திருச்சந்நிதியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

இந்த மகானுக்கு முன்னால் ஒரு சில விநாடிகள் நிற்பதே நமக்குப் பெருமைஇந்த நிலையில் நம் வேலையை நாம் செய்ததற்காக நமக்குப் பாராட்டு விழா நடக்கறதே என்பதாக சந்தான கோபாலாச்சார்யர் நினைத்தபோது, அவரது கண்களில் இருந்து ஒரு சில நீர்த் துளிகள் அரும்பின.

மகா பெரியவாளைப் பார்த்தவாறு தன் சிரம் தாழ்த்தி, இரு கரம் உயர்த்தி பவ்யமாக வணங்கிய நிலையில் நின்றிருந்தார். தன் வலக் கரம் உயர்த்தி அவரை ஆசிர்வதித்த மகா பெரியவா, க்ஷேம லாபம் விசாரித்தார்.

பிறகு, இந்த வேத பண்டிதருக்குத் தங்கத்தினால் ஆன தோடா ஒன்றைத் தன் திருக்கரத்தால் பரிசளித்தார் பெரியவா.

தோடா என்பது கையில் அணியக்கூடிய கங்கணம் (காப்பு) போன்ற ஒரு ஆபரணம். வளையல் போல் காணப்படும்.

மகா பெரியவா திருக்கரத்தால்தோடா பெறுகிற பாக்கியம் வெகு சில பண்டிதர்களுக்கே அந்தக் காலத்தில் வாய்த்திருக்கிறது.

தோடாவை மகா பெரியவாளிடம் இருந்து பெற்றவுடன் சந்தான கோபாலாச்சார்யருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. தோடாவைப் பெற்றுக் கொண்ட பின் மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

மகான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார். பொதுவாக இது போன்ற விருது பெறுகிற நிகழ்ச்சிகளின்போது, விருது பெற்றவுடன் சம்பந்தப்பட்டவர்கள்

அங்கிருந்து நகர்ந்து விடுவது வழக்கம். காரணம், அடுத்தவர் வந்து விருது பெறுவதற்கு வழி விட வேண்டும்.

ஆனால், சந்தான கோபாலாச்சார்யர் விருது பெற்றவுடன் அங்கிருந்து நகரவில்லை. அப்படியே நின்று கொண்டு மகா பெரியவாளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பெரும் பண்டிதர் என்கிற காரணத்தால், சிப்பந்திகள் எவரும் அவர் அருகே வந்து நகருமாறு வற்புறுத்தவில்லை. இத்தனை பெரிய பண்டிதர் அருகே சென்று அவரை அங்கிருந்து நகர்ந்து செல்லுமாறு சொல்வது நாகரிகமில்லை என்று எவருமே அருகே செல்லவில்லை.

மகா பெரியவா இதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த மகானுக்குத் தெரியாதா, இந்த சபையை எப்படி இயல்புக்குக் கொண்டு வர வேண்டும் என்று?!

சந்தான கோபாலாச்சார்யரைக் கூர்ந்து கவனித்தார். பிறகு, “சிரத்தையான உன்னோட வாசிப்புக்கும், வேத மாதாவை அக்கறையா நீ கவனிச்சிக்கறதுக்கும், உன்கிட்ட இருக்கிற சம்ஸ்க்ருத ஞானத்துக்கும், அதை மத்தவாளுக்கும் கொண்டு போய் சேர்க்கணும்னு நிறைய வேத வித்துக்களை நீ உருவாக்கறதுக்கும் பார்த்தோம்னா இதெல்லாம் ஒண்ணுமே இல்லைஇந்த தோடா, தோடாதான் என்றார் மகான்.

நெகிழ்வின் பரவசத்தில் இருந்த சந்தான கோபாலாச்சார்யர் மகா பெரியவாளின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு, மீண்டும் அவருக்கு நமஸ்காரம் செய்தார்.

தப்பு தப்பு என்று சொல்லும் விதத்தில் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு வித்வான் நடந்து கொள்ளும் அளவுக்கு பெரியவா அப்படி என்ன சொன்னார்?

இந்தி மொழியில்தோடா என்றால், ‘கொஞ்சம் என்று ஒரு அர்த்தம் உண்டு. விருதைப் பெற்றுக் கொண்டு உணர்ச்சிப்பிரவாகமாக நிற்கிற சந்தான கோபாலாச்சார்யரைப் பார்த்து, சும்மா ஒரு கிண்டலுக்காக மகா பெரியவா இப்படிச் சொன்னார்.

அதாவது, விருதையும் பெற்றுக் கொண்டு இங்கேயே நிற்கிறாயேஉன்னோட வித்வத்துக்கு இந்த தோடா வெகு சாதாரணமான வெகுமதியாக உனக்குத் தோன்றலாம் என்கிற பொருளில் ஹாஸ்ய உணர்வோடு சொன்னார்.

பெரியவாளிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டுஅப்படி இல்லே பெரியவா என்று கைகளை அசைத்தவாறு நமஸ்கரித்தார். பிறகு எழுந்து நின்று, இரு கைகளையும் கூப்பியவாறு, “பெரியவா என்னை மன்னிக்கணும்இந்த மரியாதை எனக்கு ரொம்ப கம்மியா இருக்குங்கிற ஏக்கத்தோட இங்கே நிக்கலை பெரியவாஎன்னோட மனசு இன்னிக்கு ஆனந்தக் கூத்தாடறது. உங்க சந்நிதியில உங்களோட ஒரு அனுக்ரஹப் பார்வை கிடைச்சாக்கூட அடியேனுக்குப் போதும் பெரியவா…. காலா காலத்துக்கும் அந்த சந்தோஷத்தோடவே இருந்துடுவேன்.

இன்னிக்கு விருது வாங்கின பிறகும் ஏன் இங்கயே நின்னேன்னா பெரியவா உத்தரவிட்டா, வேதத்தோட ஒரு பகுதியை உங்க முன்னாடி சொல்லலாம்கிற ஆசைல நிக்கறேன். வேத மாதாவா நீங்க அமர்ந்திருக்கிற இந்த சந்நிதானத்துல அடியேனுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமோங்கிற நப்பாசைதான். வேற ஒண்ணுமில்லை பெரியவா என்றார், கண்களில் பெருமிதத்துடன்.

பெரிதாகப் புன்னகைத்தார் பெரியவா. “உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாசும்மாத்தான் சொன்னேன். பரவால்லை. இன்னிக்கு ராத்திரி சதஸ் நடக்கும்போது வந்து கலந்துக்கோ. உன்னோட வேத முழக்கம் அங்கே ஒலிக்கட்டும் என்றார் மகா ஸ்வாமிகள்.

மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சந்தான கோபாலாச்சார்யர். அதன் பின் அந்த விழா தொடர்ந்து நடைபெற்றது.

மகா பெரியவா உத்தரவிட்டது போல் அன்றைய இரவு நடைபெற்ற சதஸில் கலந்து கொண்டு வேதம் சொல்கிற பேறு கிடைத்தது.

சதஸின் மையத்தில், வேத மாதாவாகசர்வேஸ்வர சொரூபமாக வீற்றிருக்கிற மகா பெரியவா, சந்தான கோபாலாச்சார்யரின் வேத முழக்கத்தைக் கேட்டு அவரை ஆசிர்வதித்தார்.