காஞ்சி மகா பெரியவாளுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் பெற்றவர்கள் எண்ணற்றோர். இதை பாக்கியம் என்று சொல்வதை விட அனுக்ரஹம் என்றும் சொல்லலாம்.
சங்கர சொரூபமாக விளங்கக் கூடிய மகா பெரியவாளின் ஆசி இருந்தால்தான், காஞ்சி ஸ்ரீமடத்தில் அவரைத் தரிசிக்கக் காலடி எடுத்து வைக்க முடியும். மகானது அருள் இல்லை என்றால், அந்தப் பக்கமே செல்ல முடியாது. இதைத்தான் பூர்வ ஜன்ம பலன் என்று சொல்வார்கள்.
மகானின் பரிபூரண ஆசிகளையும் அன்பையும் பெற்றவர்களுள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறை பேராசிரியராக இருந்த டி.எம்.பி. மகாதேவனும், சென்னை சர்வ கலாசாலையில் சம்ஸ்கிருதத் துறைப் பேராசிரியராக விளங்கிய டாக்டர் வீழிநாதனும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள்.
ஒரு முறை மகாதேவனும் வீழிநாதனும் இணைந்து கங்கை பாயும் காசி மாநகருக்கு ஒரு யாத்திரை செல்வதாக இருந்தது.
பொதுவாக ஒரு யாத்திரை செல்வது, குலதெய்வம் ஆலயம் செல்வது என்றால், குருநாதரின் அருளைப் பெற்றுச் செல்வது வழக்கம். குருநாதரின் பரிபூரண அருளால்தான் தெய்வத்தின் தரிசனம் திவ்யமாகக் கிடைக்கும்.
அதன் அடிப்படையில் மகாதேவனும் வீழிநாதனும் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறுவதற்கு காஞ்சி ஸ்ரீமடம் சென்றனர்.
மகானை ஏகாந்தமாகத் தரிசித்து, தாங்கள் செல்லக் கூடிய யாத்திரை பற்றிய விவரங்களை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.
பெரிதும் மகிழ்ந்த பெரியவா, இருவருடைய காசி யாத்திரை நன்றாக அமைவதற்குத் தன் ஆசிகளை வழங்கினார். இரு திருக்கரங்களையும் உயர்த்தி அவர்களை வாழ்த்தினார்.
பிறகு இருவரையும் பார்த்து, “அவ்ளோ தூரம் போறேளே… எனக்காகக் காசில ஒரு தகவல் விசாரிச்சுண்டு வந்து சொல்ல முடியுமா?” என்றார்.
‘எனக்காக ஒரு தகவல் விசாரிச்சிண்டு வா என்று மகா பெரியவா சொன்னால், அதற்கு ஏதோ முக்கியத்துவம் இருக்கும்‘ என்று தீர்மானித்த இருவரும், “சொல்லுங்கோ பெரியவா… அது எங்களுக்குப் பெரிய அனுக்ரஹம்… நாங்க என்ன விசாரிச்சிண்டு வரணும்?” என்றார்கள் இருவரும் பவ்யமாக.
மகான் சொல்லத் தொடங்கினார்: “காசில ஸ்ரீ ராமயஸஸ் திரிபாதின்னு ஒருத்தர் இருக்கார். காசிக்குப் பக்கத்துல அவரது சொந்த கிராமத்துல ஒரு சம்ஸ்கிருதப் பள்ளிக்கூடம் நடத்திண்டு வர்றார். அந்தப் பள்ளிக்கூடம் நன்னா நடந்துண்டு வருகிறதா… அவரது தேக ஆரோக்கியம் எப்படி இருக்குன்னு விசாரிச்சுண்டு வாங்கோளேன்.”
மகாதேவனும் வீழிநாதனும் அந்தப் பரப்பிரம்ம சொரூபத்தை ஆச்சரியமாகப் பார்த்து மீண்டும் நமஸ்கரித்தார்கள்.
எங்கோ வட இந்தியாவில் இருக்கிற ஒருவர் – அதுவும் சம்ஸ்கிருதப் பள்ளிக்கூடம் நடத்துகிறவர் – அவரைப் பற்றி இந்த அளவுக்குக் கரிசனத்துடன் மகா பெரியவா விசாரித்து வரச் சொல்கிறார் என்றால், இந்த மகானுக்கு சம்ஸ்கிருத மொழி மீது எத்தனை பற்றும் பக்தியும் இருக்கும்… வேத மாதாவை எந்த அளவுக்கு ரக்ஷிக்கிறார் என்று இருவரும் வியந்தார்கள்.
“நிச்சயம் பெரியவா… எப்படியாவது அந்த திரிபாதியை நேர்ல பாத்து விசாரிச்சிண்டு வரோம்” என்றார் வீழிநாதன்.
ஒரு புன்னகை பூத்து விட்டு மகா பெரியவா சொன்னார்: “ஒரு விஷயம் தெரியுமோ… அந்த ஸ்ரீராமயஸஸ் திரிபாதி, தான் சம்பாதிக்கிற பணம், தன்னோட சேமிப்பு மொத்தத்தையும் இந்த சம்ஸ்கிருதப் பள்ளிக்கூடத்துக்கே செலவழிச்சிண்டிருக்கார். தன்னோட பள்ளிக்கூடத்துல சம்ஸ்கிருதம் படிக்கின்ற மாணவர்களோட எதிர்காலம் நன்னா இருக்கணும்… இவாள்லாம் பெரிய வேத வித்தா வரணும்ங்கிற ஒரு லட்சியத்துக்காக ‘காசியை விட்டு வேறெங்கும் ஓரடிகூட நான் நகர மாட்டேன்‘னு ஒரு சங்கல்பம் எடுத்திண்டிருக்கார் திரிபாதி. தன்கிட்ட படிக்கிற பசங்களை அந்த அளவுக்குக் கண்ணும் கருத்துமா தன்னோட சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்திண்டு வரார். வேதத்தின் மேல் அந்த அளவுக்கு ஒரு கரிசனம்…”
திரிபாதி மீது மகாதேவனுக்கும் வீழிநாதனுக்கும் மரியாதை மேலும் கூடியது.
“கட்டாயம் பெரியவா… அவரை தரிசனம் பண்ணிட்டு வந்து உங்ககிட்ட சொல்றோம்” என்றனர் இருவரும். “அவரைப் பத்தி இன்னொரு ஆச்சரியமான தகவலைச் சொல்றேன், கேளுங்கோ… காசிக்கு ஒரு யாத்திரை நான் போயிருந்தேன் இல்லியா… அப்ப என்னோட வருகை பத்திக் கேள்விப்பட்டுட்டு இந்த திரிபாதி தரிசனத்துக்கு வந்துட்டார். எனக்கு நமஸ்காரம் பண்ணார்.
வேதம் சம்பந்தமான பல விஷயங்களை நானும் அவரும் பேசிண்டு இருந்தோம். அப்ப திரிபாதி சொன்னார், ‘ஒங்களைப் பத்தி எனக்கு முன்பே தெரிஞ்சிருந்தா காசி எல்லையை விட்டுத் தாண்ட மாட்டேன்னு ஒரு சங்கல்பமே எடுத்துண்டிருக்க மாட்டேன்‘னு.
நான் காசிக்கு வர்றதுக்கும், இவர் காசி எல்லையைத் தாண்டறதுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சேன்.
பிறகு அவரே சொல்றார், ‘இந்த சங்கல்பம் எடுத்துக்கலேன்னா எல்லாவற்றையும் விட்டுட்டு நானும் உங்ககூடவே வந்திண்டிருப்பேன்‘னு.
அதுக்கு நான் அவர்கிட்ட என்ன சொன்னேன்னா, ‘அதனால என்ன… நீங்க எங்கு இருந்தாலும் உங்களுக்குப் பக்கத்துல நான் இருக்கறதா நினைச்சுக்குங்கோ… அதே மாதிரி நீங்கள் என் அருகில் இருக்கறதா நான் நினைச்சுக்கறேன்‘னு சொன்னேன்…”
– மகா பெரியவா நீளமாக இப்படிச் சொல்லி முடித்ததும், மகாதேவன் மற்றும் வீழிநாதன் விழிகளில் நீர் கோர்த்தது.
எந்த அளவுக்கு ஸ்ரீராமயஸஸ் திரிபாதி பக்தி சிரத்தையுடனும், வேதங்களின் மீது உண்மையான அக்கறையுடனும் இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகளை மகா பெரியவா சொல்லி இருப்பார்.
அதுவும் இந்த வார்த்தைகளை பெரியவா அருகில் இருந்த கேட்ட யாரோ சொல்லவில்லை. சாட்சாத் கலியுக தெய்வமாக விளங்குகிற மகானே தன் திருவாயால் சொல்லி அருளுகிறார்.
அப்படி என்றால், அந்த திரிபாதி எப்பேர்ப்பட்ட புண்ணியங்களை செய்திருக்க வேண்டும்…
மகாதேவனும் வீழிநாதனும் தீர்மானித்தார்கள் – இந்த திரிபாதியைத் தரிசிக்கவாவது காசிக்கு நாம் போயே ஆக வேண்டும் என்று.
மகா பெரியவா உத்தரவோடும், ஆசிகளோடும் காசியை அடைந்தார்கள் இருவரும்.
ரயிலில் இருந்து இறங்கிய தினத்தன்றே இருவரும் கங்கைக்குச் சென்றார்கள். புனித நீராடினார்கள். அதன் பின் விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி உள்ளிட்ட தெய்வங்களை அடுத்தடுத்து வணங்கி முடித்தார்கள்.
நீராடுதலும் இறை தரிசனமும் பூர்த்தி ஆன பிறகு இவர்கள் இருவருக்கும் மகா பெரியவா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.
‘ஸ்ரீராமயஸஸ் திரிபாதியை விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டும். மகா பெரியவா இவரைப் பற்றி ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்ல வேண்டும்‘ என்று தீர்மானித்தவர்கள், அவரைத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.
தேடுதல் வெகு சுலபமாயிற்று. ஆனால், தேடுதலின்போது இவர்களுக்குக் கிடைத்த தகவல் அதிர்ச்சியைத் தந்தது.
ஸ்ரீராமயஸஸ் திரிபாதி பெயர் சொல்லிக் காசி மாநகரத்தில் விசாரித்தாலே அவரைப் பற்றிப் பலரும் உற்சாகமாகத் தகவல் சொன்னார்கள். ‘அவர் போல் ஒரு உத்தமர் உண்டா?‘ என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்கள்.
சில காலங்களுக்கு முன்னால் திரிபாதி சந்நியாசம் வாங்கி கொண்டு விட்டாராம். ஒரு துறவியாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தத் தகவலைச் சொன்னவர்கள் அடுத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டதும்தான் மகாதேவனும், வீழிநாதனும் அதிர்ந்து போனார்கள்.
‘இரண்டு நாட்களுக்கு முன்தான் ஸ்ரீராமயஸஸ் திரிபாதி முக்தி அடைந்தார்.‘
“என்னது… இரண்டு நாட்களுக்கு முன்பா? நாங்கள் அப்போதுதானே மகா பெரியவா அருகில் இருந்தோம்… சரி, முந்தாநாள் எத்தனை மணிக்கு முக்தி அடைந்தார்?” என்று அதிர்ச்சி விலகாமல் வீழிநாதன் கேட்டார்.
நேரத்தைச் சொன்னார்கள்.
சரியாக அந்த நேரத்தில்தான் திரிபாதியைப் பற்றி விசாரிக்குமாறு மகா பெரியவா காஞ்சிபுரத்தில் இவர்கள் இருவரிடத்திலும் சொல்லி இருக்கிறார்.
தன் அனுக்ரஹத்தோடு காசியில் இருப்பவரைக் காசியில் இருந்தபடியே கண்காணித்துக் கொண்டிருக்கிறார் மகான்.
‘எப்போதும் நான் உன் பக்கத்திலேயே இருப்பேன்‘ என்று தனது காசி யாத்திரையின்போது திரிபாதியிடம் சொன்ன வார்த்தைகளை மகா பெரியவா அப்படியே காப்பாற்றி இருக்கிறார்.
பின்னே… திரிபாதி காசியில் முக்தி ஆகின்ற நேரத்தில் அவரைப் பற்றிய நினைப்புடன்தானே மகாதேவனிடமும் வீழிநாதனிடமும் பேசி இருக்கிறார்!
‘என்னே ஒரு அருள்‘ என்று மகாதேவனும் வீழிநாதனும் வியந்து மகானைப் போற்றினார்கள். காசி யாத்திரை முடிந்து ஊருக்கு வந்து மகானிடம் இந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.