மகா பெரியவாளின் அத்யந்த பக்தராக விளங்கியவர் கே.வி. சுப்பராவ் என்பவர்.
ஹைதராபாத்தில் அரசு உத்தியோகத்தில் இருந்தார். 1986-ல் சுப்பராவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இவரின் கால்மூட்டு ஏகத்துக்கும் பாதிப்புக்குள்ளாகி, எலும்பு முறிவு ஏற்பட்டது. குடும்பத்தினர் கவலையானார்கள்.
இதை சரிசெய்வதற்காக ஹைதராபாத்திலேயே ஆபரேஷன் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆபரேஷன் சக்ஸஸ் ஆகவில்லை. மருத்துவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள்.
‘சரியாகி விடுவார்… மீண்டும் பழையபடி நன்றாக நடப்பார்‘ என்று சொல்லப்பட்டது. ஆனால், ஆபரேஷன் ஆகி பல நாட்கள் ஆகியும், கால் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. நடப்பதில் எண்ணற்ற சிரமம். ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.
‘தமிழகம் போய் சென்னையில் ஏதேனும் மருத்துவமனையில் காண்பித்து நலம் பெறலாம்‘ என்று ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தார்.
1987-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி சென்னையில் பிரபலமான மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரைப் பார்த்தார். பழைய ரிப்போர்ட்டுகளையும் வாங்கிப் பார்த்த அந்த மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எல்லாம் நடந்தது.
ஒரு சில நாட்கள் கழித்து சுப்பராவை வரவழைத்தார் அந்த டாக்டர். “நீங்கள் செய்து கொண்ட அறுவை சிகிச்சை உங்களுக்குப் பலன் தரவில்லை. இனி, பலன் தரவும் தராது. எலும்பு மீண்டும் வளர்ந்து பழையபடி வருவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் சுத்தமாக இல்லை” என்று தெள்ளத் தெளிவாக விளக்கினார்.
சுப்பராவ் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.
அப்போது குடும்பத்தில் ஒருவர் சொன்னார்: “கவலையை விடுங்க… வேலூர் சி.எம்.சி–ல பார்க்கலாம். அங்கே உங்களுக்கு சரியாயிடும்.”
அனைவரும் நம்பிக்கையுடன் மார்ச் 17-ஆம் தேதியே வேலூருக்குப் பயணமானார்கள்.
அங்கு சி.எம்.சி–யில் பிரபலமான மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் சென்றனர். அவரும் சுப்பராவை நன்றாகப் பரிசோதித்தார். கடைசியில், சென்னையில் என்ன சொன்னார்களோ, அதையே அட்சரம் பிசகாமல் வேலூர் டாக்டரும் சொன்னார்.
சுப்பராவ் பதறிப் போய் விட்டார். அப்படியானால், வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை எப்படிக் கடத்துவது? கொஞ்சம்கூட நடக்க இயலாவிட்டால், எதிர்காலம் இருண்டு விடுமே?
தன் மனதில் உள்ள ஐயப்பாட்டை இரண்டு மருத்துவர்களிடமும் கேட்டார்.
இருவருமே இந்தத் துறையில் எக்ஸ்பர்ட் என்பதால், ஒரே பதில்தான் சென்னையிலும், வேலூரிலும் கிடைத்தது.
‘இப்போது இருக்கிற நிலையில் உங்களால் நடக்க இயலாது. ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எலும்பு ஒட்டுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இது ஒருவேளை பலன் தரலாம். ஆனால், ‘பலன் கொடுக்கும். உங்களால் நன்றாக நடக்க முடியும்‘ என்கிற உறுதிமொழியை எங்களால் தர இயலாது.‘
இதைக் கேட்டவுடன் சுப்பராவ் தன்னிடம் இருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்தார். ‘தன்னாலும் நடக்க முடியும்‘ என்கிற எண்ணம் முற்றிலும் அகன்று விட்டது.
‘சரி… இப்போதைக்கு எலும்பு ஒட்டுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது. அதற்கு உண்டான விடுப்பு நாட்களும் கைவசம் இல்லை. பேசாமல் ஹைதராபாத் போய் பணியில் சேர்ந்து விடலாம். ஒரு மாதம், இரண்டு மாதம் போகட்டும். அதன்பிறகு யோசிக்கலாம்‘ என்று தீர்மானித்தார்.
அப்போதுதான் அவர் மனதுள் ஓர் எண்ணம் உதித்தது. ஹைதராபாத் செல்வதற்கு முன் ஒரு முறை காஞ்சிக்குச் சென்று மகா பெரியவாளைத் தரிசித்து விட்டு வரலாமே!
காஞ்சி மகா பெரியவா தரிசனமும், காஞ்சி காமாட்சி அன்னை தரிசனமும் சுப்பராவுக்கு எப்போதுமே ஒரு பரவசத்தைக் கொடுக்கும். இந்த இரண்டு இடத்துக்கு எப்போது சென்றாலும், ஒரு விதமான புத்துணர்வு தன்னை ஆட்கொள்வதாக அடிக்கடி உணர்ந்திருக்கிறார்.
எனவே, வேலூர் மருத்துவரைப் பார்த்து விட்டு வந்த மறுநாள் – அதாவது 1987-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றார்.
எப்படியும் ஒரு நாள் இந்த எலும்பு ஒட்டுமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுதான் ஆக வேண்டும். அந்த சிகிச்சையை செய்து கொள்ளும் முன் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறுவதற்குத் தனக்கு சந்தர்ப்பம் இருக்குமோ, இருக்காதோ என்ற எண்ணத்தில் இப்போதே தரிசித்து விடுவது உசிதம் என்று முடிவெடுத்திருந்தார்.
அப்போது சுப்பராவும் சென்னையில்தான் தங்கி இருந்தார். அங்கிருந்து ஒரு காரில் காஞ்சி சென்று திரும்பலாம் என்பது திட்டம்.
ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் அப்போது சுப்பராவைத் தடுத்தார்கள். “இப்போது நீங்கள் இருக்கிற நிலையில் காஞ்சிக்குச் செல்ல வேண்டாம். இப்படி நீங்கள் கஷ்டப்பட்டு நடந்து செல்வதைப் பார்க்க எங்களுக்கு மனம் இடம் தரவில்லை” என்று கெஞ்சினார்கள்.
ஆனால், சுப்பராவுக்கு ‘இந்த சந்தர்ப்பத்தை விட்டு விட்டால், அடுத்து மகா பெரியவாளை என்னால் எப்போது பார்க்க முடியுமோ‘ என்கிற எண்ணம் விஸ்வரூபம் எடுத்துக் காணப்பட்டது. தன் மனதில் இருக்கக் கூடிய இந்த தரிசனம் ஆசையைக் குடும்பத்தாரிடம் மெள்ள விவரித்து விட்டு காஞ்சிக்குப் புறப்பட்டு விட்டார். உடன் துணைக்கு, ஒரு சிலரும் உடன் வந்தார்கள்.
இரு கைகளிலும் தாங்குக் கட்டைகளைப் பிடித்துக் கொண்டு மெள்ள அடியெடுத்து வைத்து நடந்தார்.
காரில் ஜாக்கிரதையாக ஏறினார். காஞ்சிக்குப் புறப்பட்டது வாகனம்.
மதியம் 12 மணிக்குக் காஞ்சி ஸ்ரீமடத்தை அடைந்தது கார். ஆனால், ஸ்ரீமடத்தின் வாசலில் எந்த விதமான பரபரப்பும் இல்லை. ‘மகான் இங்கே இருந்தால், பக்தர்கள் கூட்டம் காணப்படுமே… எவரும் தென்படவில்லை… வாகனங்களும் காணப்படவில்லை… என்னவாக இருக்கும்?‘ என்று யோசித்தார் சுப்பராவ்.
ஸ்ரீமடத்தின் உள்ளிருந்து வந்த ஒரு அன்பரிடம் விசாரித்தார். அவர், “பெரியவா இப்ப ஓரிக்கைக்குப் போயிருக்கார். அங்கே போங்கோ… ஏகாந்தமா இருப்பார். சர்வேஸ்வரனை தரிசனம் பண்ணுங்கோ. க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லி விட்டு அவர் போய் விட்டார்.
அடுத்த விநாடியே கார் ஓரிக்கையை நோக்கிப் புறப்பட்டது. அப்போது நண்பகல் மணி ஒன்று.
பாலாற்றங்கரை அருகே மகா பெரியவா ஒரு கொட்டகைக்குள் ஓய்வில் இருந்தார்.
சிலுசிலுப்பான ஒரு தென்றல் காற்றையும் தவழ விட்டு, பாலாறு அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தது.
சூரியன் உச்சியில் நிலை கொண்டிருக்கிற மதியப் பொழுது… இதமான தென்றல் காற்று, அந்தப் பாலாற்றங்கரைப் பிரதேசத்தையே குளுமையாக மாற்றி இருந்தது.
இதமான தென்றல் காற்றோடு சர்வேஸ்வர சொரூபமாக வீற்றிருக்கும் மகா பெரியவாளின் ஆனந்தமான தரிசனம் வேறு பக்தர்களுக்கு மேலும் சுகத்தைக் கொடுத்தது.
நதியே குளுமை… நதிக்கரையில் வீற்றிருக்கும் மகானது திருப்பார்வை அதைவிட குளுமை. கூடி இருக்கின்ற பக்தர்களின் பரவசத்துக்கும் ஆனந்தத்துக்கும் கேட்க வேண்டுமா?
இத்தனைக்கும் அங்கே குறைந்த அளவு பக்தர்களே காணப்பட்டார்கள். அதிகபட்சம் இருபது பேர் இருக்கலாம்.
காத்துக் கொண்டிருக்கிற பக்தர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார் சுப்பராவ்.
தன்னைத் தரிசிக்க வந்திருக்கும் ஒவ்வொரு பக்தரிடமும் அனுசரணையாகப் பேசி அவர்கள் என்ன காரணத்துக்காக வந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்து ஆசி வழங்கி அனுப்பிக் கொண்டிருந்தார் பெரியவா.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மதியம் சுமார் ஒண்ணரை மணி வாக்கில் காஞ்சி மகானை அருகில் தரிசிக்கக் கூடிய பாக்கியம் சுப்பராவுக்குக் கிடைத்தது.
தன்னால் நமஸ்காரம் செய்ய இயலாத காரணத்தால், நின்றவாக்கிலேயே இரு கரங்களையும் கூப்பி மகானை வணங்கினார்.
பெரியவாளுக்குப் பக்கத்தில் இருக்கின்றபோது தன் உடலில் எந்த விதமான குறைவும் இல்லை என்கிற உணர்வு ஒரு கணம் ஏற்பட்டது சுப்பராவுக்கு. அதுதான் குருவருள்.
குருவின் அருகில் – அவரது நிழலில் இருக்கிற சந்தர்ப்பம் ஏற்படுகிறபோது கிடைக்கிற சுகமே தனி.
ஒரு புன்னகையுடன் சுப்பராவைப் பார்த்து, ‘என்ன?‘ என்பது போல் தன் வலக்கரத்தை அசைத்துக் கேட்டார் மகா பெரியவா.
கால்மூட்டு பாதிக்கப்பட்ட சோகத்தையையும், ஹைதராபாத்தில் இதை சரிசெய்ய இயலாது என்று மருத்துவர்கள் சொன்னதையும், சென்னை மற்றும் வேலூரில் பிரபலமான மருத்துவமனைகளில் விசாரித்த கதையையும் சுருக்கமாகச் சொன்னார் சுப்பராவ்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மகா பெரியவா சற்று நேரம் அதே சந்நிதியிலேயே இருக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி ஓர் ஓரமாக இருந்த மர நாற்காலியில் அமர்ந்தார் சுப்பராவ்.
அவரை அடுத்து நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு அனுக்ரஹம் வழங்கத் துவங்கினார் பெரியவா. வரிசையில் வந்த ஒரு சில பக்தர்களும் தரிசனம் முடிந்து ஓரிக்கை முகாமில் இருந்து புறப்படத் தயாராயினர்.
இப்போது இரண்டு அல்லது மூன்று பக்தர்கள் மட்டுமே இருந்தனர். மகா பெரியவா சொல்லி, அவர்கள் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த சுப்பராவ், மகா பெரியவா மீண்டும் தன்னை எப்போது அழைப்பார் என்று அவரது திருச்சந்நிதியையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
அடுத்த ஒரு சில விநாடிகளில் மகானிடம் இருந்து அழைப்பும் வந்து விட்டது சுப்பராவுக்கு.
உற்சாகமாகச் சென்று மகா பெரியவா முன்னால் நின்றார்.
முகத்தில் ஒரு புன்னகையுடன் ‘என்ன விஷயமா வந்திருக்கே?‘ என்பது போல் ஜாடையில் விசாரித்தார் பெரியவா.
“சேதமான கால்மூட்டு சரியாகணும்னா ஒரு அறுவை சிகிச்சை பண்ணிக்கணும்னு வேலூர் சி.எம்.சி.ல சொல்லி இருக்கா. அந்த ஆபரேஷன் நடந்தாலும், பழையபடி நன்னா நடக்க முடியும்ங்கிறதுக்கு உத்தரவாதம் தர முடியாதுன்னு சொல்லிட்டா. சரி ஆகறதோ, இல்லியோ… அந்த ஆபரேஷனைப் பண்ணித்தான் பாத்துடுவோம்னு குடும்பத்துல எல்லாரும் தீர்மானிச்சிருக்கா. இந்த ஆபரேஷன் நன்னா பூர்த்தியாகி, முன்னாடி இருந்த மாதிரி நான் நடக்க ஆரம்பிக்கணும் பெரியவா. இதுக்கு உங்க ஆசி வேண்டிதான் வந்திருக்கேன்” என்றார் சுப்பராவ் நீளமாக.
ஒரு சில விநாடிகள் கழித்து எந்தக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதோ, அந்தக் காலைக் காண்பிக்கச் சொன்னார் மகா பெரியவா.
அதன்படி பாதிப்புக்கு உள்ளான காலை மகானிடம் காண்பித்தார். அந்தக் காலைத் தீர்க்கமாகப் பார்த்தார் மகான். பிறகு, “நீ கவலைப்படாத.. ஜம்முன்னு இருப்பே… காமாட்சி கடாட்சம் ஒனக்கு உண்டு. ஊருக்குப் போறச்சே காமாட்சி அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போ” என்றார்.
சுப்பராவின் கண்களில் இருந்து நீர்த் துளிகள் உருண்டு கீழே விழுந்தன.
‘எப்பேர்ப்பட்ட ஆசி – நீ ஜம்முன்னு இருப்பே!
அப்படி என்றால், நீ நன்றாக நடப்பாய். அம்பாள் உன் பக்கம் இருக்கா. கவலையே படாத.
இத்தனை நாட்களாக இதையே நினைத்து நினைத்து ‘என் வாழ்க்கை இவ்வளவுதானா… என்றெல்லாம் விரக்தி அடைந்திருக்கிறேனே… எத்தனை நாட்கள் என்னையே நான் நொந்து கொண்டிருக்கிறேன். ஆனால், அத்தனைக்கும் மகா பெரியவா இன்று ஒரு பெரிய தீர்வும், நிவாரணமும் கொடுத்திருக்கிறாரே…‘
– தன் இரு கரங்களையும் உயர்த்தி அந்தக் கலியுக தெய்வத்தை ‘சர்வேஸ்வரா… சங்கரா… தெய்வமே…‘ என்றெல்லாம் அரற்றினார். போற்றினார். தொழுதார்.
பொதுவாக சுப்பராவ் எப்போது காஞ்சிக்கு வந்தாலும் மகா பெரியவாளைத் தரிசித்த பின் காமாட்சி கோயிலுக்கும் சென்று தரிசித்துத் திரும்புவார்.
ஆனால், இந்த முறை நேரமின்மை காரணமாகவும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் மகா பெரியவாளைத் தரிசிக்க மட்டும் வந்திருக்கிறார். எனவே, ஓரிக்கையில் பெரியவா தரிசனம் முடிந்த பின் நேராக சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், மகா பெரியவா இப்போது ‘காமாட்சியையும் தரிசித்து விட்டுப் போ… அம்பாள் உன் பக்கம் இருக்கா‘ என்று ஆசிர்வதித்திருக்கிறார்!
மகா பெரியவாளிடம் இருந்து புறப்பட்டார். பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினார் மகான்.
கார் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கிச் சென்றது.
மாலை கோயில் திறந்தவுடன் ஆலயத்தினுள் நுழைந்தார். மனம் குளிர காமாட்சியை தரிசித்தார்.
சென்னை திரும்பினார் சுப்பராவ்.
ஓரிக்கை மகா பெரியவா தரிசனமும், காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனமும் அவருக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது.
அடுத்த நாளே ஹைதராபாத் சென்று விட்டார். பணியில் இணைந்து கொண்டார்.
சுமார் மூன்று மாதம் ஓடியது. சிறிது நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
விடுமுறைக் கடிதத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தார். சேங்ஷனும் ஆகி விட்டது.
கால்மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சொல்லி இருந்தார்கள் அல்லவா? அதை இந்த விடுமுறை நாட்களில் முடித்து விடலாம் என்று சுப்பராவ் தீர்மானித்தார்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் டிக்கெட் புக் செய்தார்.
‘இந்த விடுமுறையில் வேலூர் போய் சி.எம்.சி.யில் மருத்துவர்கள் சொன்ன அறுவை சிகிச்சையை செய்து கொண்டு விட வேண்டும். மகா பெரியவா அருளால் ஆபரேஷனுக்குப் பிறகு எந்த உபாதையும் இருக்கக் கூடாது‘ என்று மனதளவில் அந்த மகானிடமே பிரார்த்தித்துக் கொண்டார்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையை தொடர்பு கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார்.
ஜூன் மாதம் 2-ஆம் தேதி (1987) அறுவை சிகிச்சை செய்வதற்கு தேதி குறிக்கப்பட்டது.
அதன்படி சென்னைக்கு வந்தார் சுப்பராவ். குறித்த தினத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆவதற்கு வேலூருக்குத் தான் மட்டும் பயணித்தார். குடும்பத்தினர் யாரையும் உடன் வர வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
பழைய கேஸ் ஹிஸ்டரி, தற்போதைய நிலவரம் குறித்த பதிவுகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பயணித்தார்.
வேலூரை அடைந்தார். தலைமை மருத்துவரின் அறைக்குச் சென்றார். ஏற்கெனவே இவர்தான் சுப்பராவை சோதித்தவர்.
தன் அறைக்குள் நுழைகிற சுப்பராவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் தலைமை மருத்துவர். காரணம் – சுப்பராவின் உடலில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றத்தைப் பார்த்து பிரமித்தார்! தன்னுடைய சந்தோஷ உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை அந்தத் தலைமை மருத்துவருக்கு.
“வாங்க சுப்பராவ்… உங்களோட நடை, முகத்துல தென்படற உற்சாகம் ரெண்டையும் பார்த்தா எனக்கு சந்தோஷமா இருக்கு. உங்களோட கால் மூட்டு எலும்புகளுக்கு ஏதோ ஒரு வலு கிடைச்சிருக்குனு நினைக்கறேன்” என்றார் முக மலர்ச்சியோடு.
“அப்படியா டாக்டர்… நீங்க சொல்றது எனக்கும் திருப்தியா இருக்கு. அறுவை சிகிச்சை எப்ப பண்ணலாம்?” என்றார் சுப்பராவ்.
“இருங்க சுப்பராவ்… அறுவை சிகிச்சைக்கு முன்னாடி ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பாத்துடுவோம். இப்ப என்ன கண்டிஷன்னு பார்த்தா, அதற்கேற்ப ஆபரேஷனை ப்ளான் பண்ணணும்” என்ற தலைமை மருத்துவர், அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்தார்.
எக்ஸ்ரே எடுக்கக் கூடிய அறைக்கு சுப்பராவை அழைத்துப் போனார்கள். காலில் எந்தப் பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க வேண்டுமோ, அந்தக் குறிப்பிட்ட இடத்தை எக்ஸ்ரே எடுத்தார்கள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஃபிலிமை தலைமை மருத்துவரிடம் கொண்டு வந்தார்கள்.
எதிரே – சுப்பராவ் அமர்ந்திருந்தார்
எக்ஸ்ரே ஃபிலிமை ஒரு கண்ணாடிக்குள் நுழைத்து, க்ளிப் மாட்டி விட்டு அதை ஆராய்ந்தார் தலைமை மருத்துவர்.
சுப்பராவ் தவிப்புடன் காணப்பட்டார்.
தலைமை மருத்துவர் முகத்தில் திடீரென ஒரு பிரகாசம் தென்பட்டது. சுப்பராவ் பக்கம் திரும்பினார்.
“மிஸ்டர் சுப்பராவ்… நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள்… தற்போது எடுக்கப்பட்ட இந்த எக்ஸ்ரே, உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்று சொல்கிறது. பாதிக்கப்பட்ட கால் மூட்டு எலும்புகள் மெள்ள மெள்ள சேர்ந்து கொண்டு வருகிறது. இது எப்படி என்று புரியவில்லை. எந்த விதமான அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளாமல் இதுபோல் மாறுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று உற்சாகமாகச் சொன்னார் தலைமை மருத்துவர்.
சுப்பராவின் விழிகளில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வர ஆரம்பித்தது.
“டாக்டர்… ஆபரேஷன் அவசியம்னு சொன்னீங்க… எனக்கு இனிமே தேவை இல்லையா… நெஜமாத்தான் சொல்றீங்களா?” என்று நம்ப முடியாமல் கேட்டார் சுப்பராவ்.
தலைமை மருத்துவர் தன் கணிப்பை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக அவரை அந்த அறைக்குள் இப்படியும் அப்படியும் நடந்து காட்டுமாறு சொன்னார்.
அதன்படி சுப்பராவும் நடந்து காண்பித்தார்.
தலைமை மருத்துவர் முகத்தில் அதே மலர்ச்சி. “யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல் ரைட் மிஸ்டர் சுப்பராவ். ஒரே ஒரு வாக்கிங் ஸ்டிக் மட்டும் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பியுங்கள்… சில காலம் கழித்து அதுவும் உங்களுக்குத் தேவையற்றதாக ஆகி விடும்” என்று சொன்னார்.
‘சரி, இந்த நல்ல தகவலை சென்னை வீட்டுக்குத் தெரிவித்து விடலாம். அவர்கள் ஆபரேஷன் பற்றித் தகவல் ஏதும் வரவில்லையே என்று பதட்டத்துடன் இருப்பார்கள்‘ என்று தலைமை மருத்துவரின் அனுமதியுடன் அங்கிருந்தவாறே வீட்டுக்கு போன் போட்டுத் தகவல் சொன்னார்.
விஷயத்தைக் கேட்ட வீட்டார் அனைவருக்கும் தலைகால் புரியாத சந்தோஷம். ‘எல்லாம் மகா பெரியவா அருள்… எல்லாம் அந்த மகானோட பார்வை பட்ட நேரம்‘ என்று தங்களது மனதில் பட்டதை சொன்னார்கள்.
எல்லாவற்றையும் கேட்ட சுப்பராவ், “ஆமாம்… அந்த மகானோட பார்வை என் கால்ல பட்டதுதான் காரணம். கத்தி மற்றும் இன்ன பிற ஆயுதங்களைக் கொண்டு மருத்துவர்கள் நடத்தப் போற ஒரு ஆபரேஷனை அந்த மகான் தன் பார்வையால் குணப்படுத்தி இருக்கார். மகா பெரியவாளோட ஓரிக்கை தரிசனம்தான் என்னை இந்த அளவுக்கு ஆக்கி இருக்கு” என்றார் குடும்பத்தாரிடம் கண்கள் கலங்க.
போனை வைத்ததும், தன் உடலில் எப்படி இந்த மாற்றம் வந்தது என்பதையும், மகா பெரியவா கருணை பற்றியும் எடுத்துச் சொன்னார் சுப்பராவ்.
அந்தத் தலைமை மருத்துவர் விழிகள் விரிய, ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பின் புது மிடுக்குடன் வேலூரில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.
மருத்துவர் அறிவுரைப்படி சில காலத்துக்குக் கையில் ஒரு ஸ்டிக் வைத்து நடக்க ஆரம்பித்தார். காலப் போக்கில், அந்த ஸ்டிக்கும் தேவை இல்லாமல் போனது.
தன்னை இந்த அளவுக்குக் கொண்டு வந்த மகா பெரியவாளையும், அன்னை காமாட்சியையும் மீண்டும் ஒரு முறை தரிசித்து, நன்றியையும் தெரிவித்தார் சுப்பாராவ்.