இதய நோயை விரட்டினார், இனிய ஆசி வழங்கினார்

மாத்வ சம்பிரதாயத்தில் வந்தவர் பத்மநாபாச்சார்யர். மாத்வக் குழந்தைகள் அதுவரை வேதம் கற்கச் சென்றதில்லை. மாத்வ குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுத்து, அவர்கள் எதிர்காலத்தில் பெரிய வேத வித்துக்களாக விளங்க வேண்டும் என்பது பெரியவா ஆசை. இதைத்தான் பத்மநாபாச்சார்யரிடம் சொல்லி, செயல்படுத்த வைத்தார் பெரியவா.

அதற்கு ஏற்றாற் போல் பத்மநாபாச்சார்யரிடம் வேதம் படித்த மாத்வ சிறார்கள் இன்று பல இடங்களிலும் பூஜைகளில் தேர்ந்து விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மகா பெரியவாளின் அன்பையும் அருளையும் பெறுவது என்பது சாதாரணம் அல்ல. அதற்கு சில தியாகங்கள் செய்ய வேண்டும். என்றைக்கு நாம் எதற்கும் ஆசைப்படாமல், ‘கிடைப்பதே ஆனந்தம் என்று வருவதை ஏற்றுக் கொண்டு வாழ முற்படுகிறோமோ, அப்போதுதான் மகான்களின் கனிவான பார்வை நம் மீது திரும்பும்.

அத்தகைய ஒரு பாக்கியத்தை வரமாகப் பெற்றவர் பத்மநாபாச்சார்யர். இவருக்கு மூன்று மகன்கள். ராமகிருஷ்ணாச்சார்யர், பரசுராமாச்சார்யர் மற்றும் தாமோதராச்சார்யர்.

மூத்தவரான ராமகிருஷ்ணாச்சார்யர் இப்போது கரூருக்கு அருகே இருக்கிற புகலூரில் வேத பாடசாலை நடத்தி வருகிறார். வெகு அரிதான நித்ய அக்னிஹோத்ரிகளில் இந்த ராமகிருஷ்ணாச்சார்யரும் ஒருவர். அதாவது, நித்யமும் ஹோமம் வளர்த்து அக்னியை ஆராதிக்க வேண்டும். அத்தகையவர்கள் நித்ய அக்னிஹோத்ரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

பத்மநாபாச்சார்யர் காலத்துக்குப் பிறகு அவரது மூன்று மகன்களையும், அவர்களது குடும்பத்தையும் மகா பெரியவாளே ஆதரித்துக் காத்து வந்தார். ஏனென்றால், வேதத்தைக் காப்பாற்றுகின்ற ஒரு குடும்பத்தை மகா பெரியவாளே காத்து ரட்சிப்பார். ‘வேதத்துக்குன்னு அவன் தன்னையே குடுத்துட்டான். அவனுக்கு என்ன விட்டா யாரு இருக்கா? என்று பெரியவாளே கேட்பாராம்.

பத்மநாபாச்சார்யர் குடும்பத்துக்கு மகா பெரியவா செய்த உதவிகள் ஏராளம். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் இருக்கின்றன.

பத்மநாபாச்சார்யரின் மகனான பரசுராமன் (இனி இப்படியே பார்ப்போம்) கல்கத்தா வேத பாடசாலையில் இருந்த காலம் அது. வருடம் – 1968. அப்போது அவருக்குத் திடீரென்று இதயக் கோளாறு. கல்கத்தாவில் உரிய மருத்துவர்களைப் பார்த்தார்கள். ‘இதயத்தில் ஹோல் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆபத்தான கண்டிஷன் என்று சொல்லி இருக்கிறார்கள்.

பம்பாயில் ஒரு மருத்துவமனையில் கொண்டு போய் காண்பித்தார்கள். கிரிதாரி சர்மா என்பவர் அங்கே மிகப் பெரிய இதய அறுவைசிகிச்சை நிபுணர். ‘ரொம்ப க்ரிட்டிக்கல்ரொம்ப நாள் தாங்க மாட்டார். உடனே ஆபரேஷன் பண்ணணும் என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து சென்னைக்கு வந்தார்கள். இங்கே அரசு மருத்துவமனையில் சாலமன் விக்டர் என்கிற ஸ்பெஷலிஸ்ட். கல்கத்தாவிலும், பாம்பேயிலும் சொன்னதையே இவரும் அட்சரம் மாறாமல் சொன்னார்.

அப்படி என்றால் இதைப் படிக்கிற நமக்கு என்ன புரிகிறது? பரசுராமன் இருப்பது ரொம்பவும் ஆபத்தான கட்டத்தில் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது அல்லவா?

எல்லா இடத்திலும் பெரும் தொகை செலவழித்து ஆபரேஷன் செய்ய வேண்டும். அதற்கு உண்டான வசதிகளும், வழிவகைகளும் அப்போது இல்லை. எனவே, இந்தக் குடும்பத்தினர் சிகிச்சைக்கு என்ன செய்வது என்று குழம்பித் தவித்தார்கள்.

ஒரு நாள் காஞ்சிபுரம் மகா பெரியவா திருச்சந்நிதிக்கும் வந்தார்கள். பரசுராமன் நிலையை எடுத்துச் சொல்லி அவரது குடும்பத்தினர் கண் கலங்கினார்கள்.

எல்லா மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் பெரியவாளுக்கு முன் வைத்தார்கள். விவரங்கள் அனைத்தையும் சொன்னார்கள். பரசுராமனின் நலன் வேண்டி கலியுக தெய்வத்தைப் பார்த்துப் பிரார்த்தித்தது குடும்பம்.

அத்தனை ரிப்போர்ட்டுகளையும் தன் வலக் கையால் தள்ளினார் மகான் – ‘இதெல்லாம் எனக்கு எதுக்கு? என்பது போல்.

பிறகு சொன்னார்: “இவனுக்கு ஆபரேஷன் ஒண்ணும் இப்ப வேண்டாம்.

எதிரில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் அனைவரும் சற்றே குழம்பினார்கள். ‘ஆபரேஷன் வேண்டாமா?

மூன்று பெரிய நகரங்களில் இருக்கக் கூடிய பிரபல மருத்துவமனைகளின் நிபுணர்கள், எல்லாப் பரிசோதனைகளையும் செய்து பார்த்து விட்டு, ‘இதயத்தில் ஓட்டை இருக்கிறது. உடனே சரி பண்ண வேண்டும். இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று பக்கம் பக்கமாக ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.

இங்கே என்னடாவென்றால், பிரபல மருத்துவர்கள் தந்த ரிப்போர்ட்டுகளை எல்லாம் சர்வ சாதாரணமாக மகா பெரியவா ஓரங் கட்டி விட்டாரே..? ஆபரேஷனும் வேண்டாம் என்று சொல்கிறாரே..?

பத்மநாபாச்சார்யரின் குடும்பத்தினருடைய குழப்பத்துக்கு இதுதான் காரணம்.

ஓரிரு நிமிட இடைவெளிக்குப் பின் மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளினார்: “ஆபரேஷன்லாம் ஒண்ணும் வேணாம். தினமும் ஹரிவாயு ஸ்துதில இருக்கிற நாற்பத்தோரு ஸ்லோகங்களையும், பாராயணம் பண்ணச் சொல்லு. வழக்கமா பண்ற ஹோமமும் தொடர்ந்து நடக்கட்டும்.

பிரசாதம் தந்தார். அனைவரையும் ஆசிர்வதித்தார்.

மகாவிஷ்ணுவைப் போற்றித் துதிக்கக் கூடிய நாற்பத்தோரு ஸ்லோகங்களைக் கொண்ட ஹரிவாயு ஸ்துதி. அற்புதமான பலன்களைக் கொடுக்கக் கூடிய ஸ்லோகம் இது என்றாலும், மகா பெரியவா ஒருவருக்கு இதைப் பாராயணம் செய்யுமாறு அருளினார் என்றால், அதன் மகத்துவம் அளவிடற்கரியது.

இறையருள் கைகூடுவதற்காக எந்த ஒரு நாமத்தையும் (ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாயஇப்படி) நாம் ஜபிக்கலாம் என்றாலும், அந்த நாமத்தை ஒரு குருவின் மூலம் உபதேசமாகப் பெற்றால், அதன் பலன் அபரிமிதமானது.

அதுபோல்தான் இந்த ஹரிவாயு ஸ்துதி பாராயணம் பரசுராமனுக்குக் கிடைத்ததும். அவருக்கு இருந்த இதயக் கோளாறுக்கு மருந்து சிகிச்சைகள் ஏதும் தேவையில்லை. மாமருந்தாக விளங்கக் கூடிய இந்த மந்திரமே போதும் என்பது மகானின் கருத்து.

இந்த வேளையில்ஹரிவாயு ஸ்துதி ஸ்லோகங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?

இந்த ஸ்லோகங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர்ஸ்ரீவிக்கிரம பண்டிதாச்சார்யர். ஸ்ரீமத்வரின் பிரதான சீடர் இவர்.

ஒரு நாள் பூஜா அறைக் கதவை மூடி வைத்து விட்டு, உள்ளே தன் பிரியமான கிருஷ்ண பகவானுக்கு ஆராதனை நடத்திக் கொண்டிருந்தார் ஸ்ரீமத்வர். ஆராதனை முடிந்து உள்ளே நிவேதனம் ஆகிக் கொண்டிருந்தது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீமத்வர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவில்லை.

குருநாதர் வெளியே வருவதற்கு ஏன் இத்தனை தாமதம்? என்று யோசித்த பிரதான சீடர் ஸ்ரீவிக்கிரம பண்டிதாச்சார்யர் கதவு துவாரம் வழியே மெள்ள உள்ளே எட்டிப் பார்த்தார்.

உள்ளேஅவர் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது.

அப்படி என்ன காட்சி தெரியுமா?

உள்ளே ஒரு ஸ்ரீமத்வர் இல்லை. மூன்று பேர் காணப்பட்டார்கள்.

யாரந்த மூன்று பேர்?

ஹனுமன், பீமன் மற்றும் மத்வர்.

இவர்கள் மூவரும் தங்களுக்கு முன்னால் காணப்பட்ட ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீவேத வியாசர் ஆகிய மூன்று பேருக்கும் நிவேதனம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீவிக்கிரம பண்டிதாச்சார்யருக்குப் பரவசம் தாங்க முடியவில்லை. எந்த தெய்வத்தை தரிசனம் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறோமோ, அத்தனையும் ஸ்ரீமத்வரின் வழிபாட்டில் உள்ளே அமர்ந்துள்ளன. உடனே இந்த மூன்று அவதாரங்களையும் அற்புதமாக வர்ணித்து 41 ஸ்லோகங்களை எழுதினார்.

எழுதி முடித்ததும், பூஜா அறைக் கதவு திறந்தது. ஸ்ரீமத்வர் வெளியே வந்தார். அவரது திருப்பாதம் பணிந்து வணங்கிய சீடர், தான் இயற்றிய ஸ்லோகங்களை அவரிடம் ஒப்படைத்தார். இவற்றை குருநாதர் ஏற்றுக் கொண்டு அதற்குஸ்ரீஹரி வாயு ஸ்துதி என்று நாமகரணம் வைத்து, அங்கீகரித்து அருளினார்.

இப்பேர்ப்பட்ட சிறப்பு கொண்ட இந்த ஸ்லோகத்தை ஜகத்குருவான காஞ்சி மகா பெரியவா, பத்மநாபாச்சார்யர் குடும்பத்துக்கு வழங்கி, இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பரசுராமனை நித்தமும் பாராயணம் பண்ணச் சொன்னார்.

கலியுக தெய்வமே அருளிய பின், கவலை இருக்குமா என்ன?!

மகானின் அருள் பெற்று அந்தக் குடும்பம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

எப்போது தனது தரிசனத்துக்கு பரசுராமனோ, அவரது குடும்பத்தினரோ வந்தாலும், ‘ஸ்ரீஹரிவாயு ஸ்துதி பாராயணம் நடந்துண்டு வருதோ? என்று விசாரிப்பாராம் காஞ்சி மகான்.

சுமார் 20 வருடங்கள் இப்படியே ஓடியது. பரசுராமனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் பிறகுதான் ஆபரேஷன் செய்து கொள்ள மகா பெரியவா உத்தரவு வழங்கினார்.

அதாவது 1989-ல் சென்னையில் பிரபல மருத்துவமனையில் காஞ்சி ஸ்ரீமடத்தின் அத்யந்த பக்தர்கள் உதவியோடு பரசுராமனுக்கு இந்த ஆபரேஷன் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வை இன்றைக்கும் சொல்கிறபோது நெகிழ்ந்து போகிறார்கள் பத்மநாபாச்சார்யரின் குடும்பத்தினர்.

வேதத்தை வாழ்விக்கும் விதமாக வாஜபேய யாகமெல்லாம் செய்து லோக க்ஷேமம் செய்து வரும் ஒரு வித்யார்த்தி குடும்பத்துக்கு மகா பெரியவா செய்த அருள்தான் மேலே படித்தது.

பத்மநாபாச்சார்யர் குடும்பத்துக்கு மகா பெரியவாளின் அருள் இதோடு பூர்த்தி ஆகி விடவில்லை. இன்னும் இருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்.