கன்யா குழந்தைக்கு நிகழ்ந்த கல்யாணம்

த்மநாபாச்சார்யரின் மகன்களுள் ஒருவரான ராமகிருஷ்ணாச்சார்யர் ஈரோட்டில் வேத ரட்சண நிதி டிரஸ்ட்டின் அத்யாபகராக (பொறுப்பாக) இருந்த சமயம் அது

ஒரு முறை மகா பெரியவா தரிசனம் வேண்டி குடும்பத்தினருடன் ராமகிருஷ்ணன் (இனி ராமகிருஷ்ணாச்சார்யரை இப்படியே அழைப்போம்) காஞ்சிக்குச் சென்றிருந்தார். குடும்பத்தினரை ஆசிர்வதித்த மகா பெரியவா, ‘உனது மகள் காயத்ரிக்கு கன்னிகாதானம் (திருமணம்) நடத்து என்று உத்தரவிட்டார்.

ராமகிருஷ்ணனின் செல்ல மகளான காயத்ரிக்கு வயது அப்போது ஒன்பது.

என்னதுகல்யாணம் பண்ண வேண்டிய வயதா அது? என்று திகைக்கத் தோன்றுகிறதா?

அந்தணர்களுள் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு பால்ய வயதிலேயே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

அதன்படி பெரும்பாலான குடும்பங்களில் மிகச் சிறு வயதிலேயே திருமணம் நடந்து விடும். திருமணம் ஆன பெண், பூப்பெய்தும் வரை அவள் தன் பெற்றோர் இல்லத்தில் வாழ வேண்டும். அதன் பின் தன் கணவன் இல்லத்துக்கு வந்து விடுவாள். இன்றைக்கும் சாஸ்திர நெறிப்படி வாழ்ந்து வருகிற பல குடும்பங்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால்ய விவாகத்தை நடத்தி விடுகிறார்கள்.

இதைத்தான் ராமகிருஷ்ணனுக்கும் சொன்னார் மகா பெரியவா. நடமாடும் தெய்வமான மகானே உத்தரவிட்ட பிறகு திருமணத்துக்கு என்ன தடை இருக்க முடியும் என்று திடமாக நம்பினார் ராமகிருஷ்ணன். ‘ஏற்பாடுகளை உடனே ஆரம்பிக்கிறேன் பெரியவா என்று சொல்லி நமஸ்கரித்தார்.

ராமகிருஷ்ணனுக்கு இருக்கிற வேத கைங்கர்யத்தில் அவர் எங்கே போய் மாப்பிள்ளையைத் தேடுவது என்று மகா பெரியவாளே நினைத்தாரோ, என்னவோ! மாப்பிள்ளை தேடும் வேலையைக்கூட அவருக்கு வைக்கவில்லை மகா பெரியவா.

தான் அமர்ந்திருக்கிற இடத்தில் பார்வையைச் சுழற்றி எதையோ தேடினார் மகா பெரியவா. ஒரு கடிதத்தை எடுத்தார். அதில் அனுப்புபவர் விலாசம் இருந்தது.

இந்தாஇந்த அட்ரஸ்ல ஒரு பையன் இருக்கான். இது பையனோட அப்பா வீட்டு அட்ரஸ். இவர் ஆத்துப் பையனுக்கு உன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடு என்றார் மகான்.

நறுக்குத் தெறித்தாற் போல் வந்து விழுந்தன வார்த்தைகள். இதைக் கேட்டதும் ராமகிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கி விட்டன.

இன்றைக்கு ஒரு திருமணம் என்றால், பையனோபெண்ணோஇரு வீட்டாராரும் எந்த அளவுக்குக் கண் கொத்திப் பாம்பாக இருந்து விசாரிக்க வேண்டி இருக்கிறது! நாமே கண்கூடாகப் பார்க்கிறோம். எத்தனையோ விசாரித்து, நாள்நட்சத்திரம் பார்த்து, ஆயிரம் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாலும், அவர்களது தாம்பத்தியம் இனிமையாக நடக்கிறதா? எத்தனை அவலங்களைக் காண நேரிடுகிறது!

ஆனால், ‘இந்தப் பையனுக்கு உன் மகள் காயத்ரியைக் கல்யாணம் பண்ணி வை! – மகா பெரியவா சொன்னது எப்பேர்ப்பட்ட ஆசி! தெய்வத் திருவாக்கு.

தன் நன்றியை வார்த்தைகளால் சொல்ல நினைத்தார் ராமகிருஷ்ணன். தழுதழுப்பில் வார்த்தைகள் வரவில்லை. மனைவியோடு சேர்ந்து தம்பதி சமேதராக மகானை நமஸ்கரித்துக் கைகளைக் கூப்பிய வண்ணம் நின்றார்.

நடமாடும் தெய்வம் சொல்லி விட்டால், அதற்கு எந்த விதமான மறுப்பையும் தெரிவிக்க மாட்டார்கள். எனவே, மகானது திருவாக்கை அப்படியே தேவ வாக்காக ஏற்றுக் கொண்டு விடை பெற்று ஊருக்கு வந்தார் ராமகிருஷ்ணன்.

ஈரோட்டுக்கு வந்ததும் மறக்காமல் மகா பெரியவா கொடுத்த விலாசத்துக்கு திருமணம் குறித்து ஒரு தபால் போட்டார்.

அதில், தன் மகள் காயத்ரிக்கு ஒன்பது வயது ஆகிறது என்றும், அவளுக்குத் தங்கள் குடும்பத்தில் இருக்கிற பையனோடு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பெரியவா உத்தரவிட்டிருப்பதாகவும் விரிவாகக் குறிப்பிட்டு எழுதினார் ராமகிருஷ்ணன்.

கடிதம் போட்ட கையோடு வீட்டில் திருமணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது. திருமணம் தொடர்பான குதூகலங்கள் மெள்ளத் தலை தூக்கின.

மணப்பெண்ணான காயத்ரிக்கு இவை எல்லாம் புரிகிற வயதா அது? வழக்கமான தன் குழந்தைத்தனத்தோடு தேர்வுக்குப் படிக்கிற வேலையில் மும்முரமானாள்.

அடுத்து வந்த ஒரு சில நாட்களில் பையனின் தந்தையிடம் இருந்து ராமகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘தங்கள் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன். ஆனால், பையனுக்கு இன்னும் கல்யாண வயசு வரலை. அது வரட்டும், பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம் என்று பட்டும் படாமல் பதில் எழுதப்பட்டிருந்தது.

ராமகிருஷ்ணனுக்குக் குழப்பம் – ‘என்னடாதுமகா பெரியவா ஒரு பையனைக் குறிப்பிட்டுஇவன்தான் உங்காத்து மாப்பிள்ளை என்று சொல்லாமல் சொல்லி இருக்கார். அந்தப் பையனோட அப்பா என்னடான்னா சுரத்தே இல்லாமல் ஒரு பதில் எழுதி இருக்கிறாரே என்று.

அது அனுமத் ஜயந்தி காலம்இப்படி ஒரு தபாலை எழுதி போஸ்ட் செய்தார் அல்லவா பையனின் தகப்பனார்..! அதன் பின் அவருக்கு என்ன ஆனது தெரியுமா?

தபால் எழுதி போஸ்ட் செய்த அடுத்த விநாடியே உடல்நலம் சரியில்லாமல் பொசுக்கென வீட்டில் படுத்து விட்டார்.

அசைய முடியவில்லை. அங்குமிங்கும் நகர முடியவில்லை. ‘நன்றாக இருந்த உடம்பு திடீரென்று ஏன் படுத்துகிறது? என்று பையனின் அப்பா மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் அனைவருக்குமே குழப்பம்.

அப்போதுதான் பையனின் அப்பாவுக்கு ஒரு மின்னல் போல் தோன்றியதுகலியுக தெய்வம் மகா பெரியவா உத்தரவை மதிக்காமல், ‘பையனுக்குக் கல்யாண வயசு வரட்டும்பார்க்கலாம் என்று ஒரு தபால் எழுதிப் போட்டோமேஅதற்கு அடுத்த விநாடியில் இருந்துதான் நாம் படுத்து விட்டோம். அப்படி என்றால், பெரியவா உத்தரவை மதிக்கவில்லை என்பதனால் இது போல் ஆகி இருக்குமோ என்று தோன்றியது.

அவ்வளவுதான்இப்படி ஒரு சிந்தனை பையனின் தந்தைக்குத் தோன்றிய அடுத்த கணமே விலுக்கென்று எழுந்து உட்கார்ந்தார். கலியுக தெய்வத்தை படுக்கையில் இருந்தவாறே கைகளைக் கூப்பி வழிபட்டார்.

ஒரு தபால் கார்டு எடுத்தார்.

அதில் மளமளவென்று எழுத ஆரம்பித்தார்.

அந்த போஸ்ட் கார்டில், ‘இப்போது கல்யாணம் வேண்டாம் என்று எழுதி தபால் போஸ்ட் பண்ண மறுகணமே நான் படுத்துண்டுட்டேன். சாதாரணமா இப்படிப் படுத்ததில்லை. பெரியவாளோட உத்தரவை மீறின குத்தத்துக்காக எனக்கு உடம்பு இப்படி ஆயிடுத்தோன்னு தோண்றது. எனவே, உங்க பொண்ணு காயத்ரியை எங்காத்து மருமகளா ஏத்துக்க நான் தயார். திருமணத்துக்கு எங்க குடும்பத்துல எல்லோருக்கும் பரிபூரண சம்மதம். அதற்கு உண்டான ஏற்பாடுகளை உடனே ஆரம்பியுங்கோ என்று உருகி உருகி எழுதினார்.

தபால் கார்டில் ராமகிருஷ்ணனது விலாசம் எழுதினார். போஸ்ட் செய்தார்.

வீடு தேடி வந்த கடிதத்தைப் படிக்கிறபோது ராமகிருஷ்ணனுக்கு உடல் சிலிர்த்தது. ‘மகா பெரியவா உத்தரவிட்டும், அந்த மகானது ஆக்ஞைப்படி திருமணம் ஆகாமல் தள்ளிப் போகிறதே என்று யோசனையில் இருந்த ராமகிருஷ்ணனுக்கு இந்தக் கடிதம் புதுத் தெம்பைக் கொடுத்தது.

மகா பெரியவா அனுக்ரஹமே அனுக்ரஹம் என்று நெகிழ்ந்தார். திருமணத்துக்கான ஏற்பாடுகளை மளமளவென்று பார்க்க வேண்டும் என்று வேலைகளை ஆரம்பித்தார்.

ஈரோட்டில் தனக்குத் தெரிந்த ஒரு கல்யாண மண்டபத்தை முதலில் தேர்வு செய்தார். அதன் உரிமையாளரிடம் போய் விவரம் தெரிவித்து, ‘கல்யாணத் தேதி நிச்சயம் ஆனவுடனே சொல்லிடறேன் என்றார்.

அதன் பின் குடும்பத்துடன் காஞ்சிக்கு வந்தார். மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்து நமஸ்கரித்து, விவரம் அனைத்தையும் சொன்னார்.

கலியுக தெய்வம் ஒரு புன்னகையுடன் தன் வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தது.

பெரியவா திருவாயால கல்யாணத்துக்கு ஒரு தேதி குறிச்சு சொன்னேள்னா சந்தோஷமா இருக்கும் என்று இரு கரங்களையும் கூப்பியபடி விண்ணப்பித்தார் ராமகிருஷ்ணன்.

ஒரு சில விநாடி அமைதிக்குப் பின் மகான் தன் திருவாயால் ஒரு தேதியைச் சொல்லிஇந்த நாள்ல கல்யாணத்தை நடத்து என்று ஆசிர்வதித்தார்.

மகான் திருவாயால் அனுக்ரஹம் கிடைத்தால், அது அப்படியே பலித்து விடும். எனவே, சந்தோஷத்துடன் அந்தத் தேதியைக் குறித்துக் கொண்டார் ராமகிருஷ்ணன். கண்கள் பனிக்க மகானை மீண்டும் நமஸ்கரித்தார். பிரசாதம் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

ஈரோட்டுக்கு வந்தார். தான் முன்கூட்டி தகவல் சொல்லி இருந்த சத்திரத்தில் கல்யாணத் தேதியைச் சொல்லி முன்பதிவு செய்யச் சொன்னார். பதிவும் செய்தாகி விட்டது.

கல்யாணத்துக்கான ஏற்பாடுகள் மளமளவென்று நடந்து கொண்டிருந்தன. ராமகிருஷ்ணனும் அவரது குடும்பத்தாரும் பம்பரமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

அடுத்து ஆரம்பமானது சோதனை, எதிர்பாராத விதத்தில்!

ஈரோட்டில் எந்த மண்டபத்தை திருமணத்துக்கு நிச்சயம் செய்திருந்தாரோ, அந்த மண்டபத்து உரிமையாளரும், இன்னும் சிலரும் ஒரு நாள் காலை வேளையில் ராமகிருஷ்ணனது வீட்டுக்கே வந்து விட்டார்கள்.

திருமணம் குறித்து ஏதேனும் நடைமுறைகள் பற்றிச் சொல்வதற்காக வந்திருப்பார்கள் போலிருக்கிறது என்று அவர்களை உற்சாகத்துடன் வரவேற்று அமர்த்தி வைத்து, காபி கொடுத்து உபசரித்தார் ராமகிருஷ்ணன்.

அதன்பின் மண்டபத்து உரிமையாளர் ஒரு வித தயக்கத்துடன் ஆரம்பித்தார்:

சார்இந்தக் கல்யாணம் எங்க மண்டபத்துல நடக்கறது கஷ்டம். நீங்க வேற ஏதாவது மண்டபம் ஏற்பாடு பண்ணிக்குங்க

ராமகிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

இதன் சீரியஸ் ஏதும் புரியாமல் மணப்பெண்ணான ஒன்பது வயது காயத்ரி, அடுத்தடுத்து வருகிற நாட்களில் துவங்கப் போகிற தனது தேர்வுக்குக் கர்ம சிரத்தையாகப் படித்துக் கொண்டிருந்தாள், ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு.

ராமகிருஷ்ணனின் கண்கள் கலங்க ஆரம்பித்தன. “எதனால உங்க மண்டபத்துல நடக்காதுனு சொல்றேள்? ஏதானும் பணம் அதிகமா கட்டணுமா?

இல்லேஅதெல்லாம் பிரச்னை கிடையாது சார். உங்க மேல எனக்கு ரொம்ப மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனா, வயசுக்கு வராத ஒரு சின்னப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப் போறதா கேள்விப்பட்டேன் என்று மெள்ள ஆரம்பித்தார் அந்த மண்டபத்து உரிமையாளர்.

ராமகிருஷ்ணன் அதிர்ச்சி அடையவில்லை. “ஆமாம்எங்க குரு காஞ்சி மகா பெரியவா சொல்லி இந்தக் கல்யாணத்தை நடத்தறோம். அவர் சொன்னா, அது எங்களுக்கெல்லாம் வேத வாக்கு. இந்தக் கல்யாணத்துனால உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. கவலைப்படாதீங்கோ என்று திடமாகச் சொன்னார்.

அதுக்கில்லே சார். இந்தத் தெருவில இருக்கிற பிரஸ் ரிப்போர்ட்டர் ஒருத்தருக்கும் இந்தத் தகவல் போயிருக்கு. கல்யாணத்தப்ப அவர் போலீஸைக் கூட்டிட்டு வந்து ஏதாவது சிக்கலை ஏற்படுத்திட்டார்னா என்று இழுத்தார் மண்டப உரிமையாளர்.

சற்று நேரம் அமைதியாக இருந்த ராமகிருஷ்ணன், “சரிஇன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கு நான் பதில் சொல்றேன் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

மறுகணமே வீட்டில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டார்.

காஞ்சி ஸ்ரீமடத்தில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

ஒரு மேனாவுக்குள் தன்னைக் குறுக்கிக் கொண்டு மகான் அமர்ந்திருந்தார்.

அவரைத் தரிசித்து விவரம் சொல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

மேனாவின் திரை விலகி, நடமாடும் தெய்வம் வெளியே எட்டிப் பார்த்தது.

அவரது கண்களில் ராமகிருஷ்ணன் பட்டார்.

புன்னகையுடன் ஜாடை காண்பித்து அருகே வரச் சொன்னார்.

கைகளைக் கூப்பியபடி கண்களில் ஜலத்துடன் மேனா அருகே சென்றார் ராமகிருஷ்ணன்.

மேனாவில் காணப்பட்ட மகா பெரியவாளின் முன்னால், திரளான பக்தர்களுடன் கலந்து நின்றிருந்தார் ராமகிருஷ்ணனும்!

மேனாவின் திரை மூடப்பட்டிருந்தது. நடமாடும் தெய்வத்தின் தரிசனம் வேண்டி, திரை விலகுவதற்குக் காத்திருந்தார்கள் பக்தர்கள்.

ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு மேனாவின் திரை விலகியது. பரப்பிரம்மம் ஒரு குறுநகையுடன் தன் வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். கூடி இருந்தவர்கள்சங்கரா…. சங்கரா என்று ஆனந்தக் கண்ணீர் மல்கச் சொல்லியவாறே தரிசனம் செய்தார்கள். சாஷ்டாங்கமாக நிலத்தில் விழுந்து நமஸ்கரித்தனர்.

மகா பெரியவாளின் பார்வை படும்படியான இடத்தில் நின்றிருந்த ராமகிருஷ்ணனும் வேரறுந்த மரம் போல் விழுந்து நமஸ்கரித்தார். கண்களில் நீர் மல்க, மகானையே பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு புன்னகையுடன்என்ன? என்பது போல் ராமகிருஷ்ணனைப் பார்த்தார் மகான்.

ஈரோட்டில் மண்டபம் பார்த்து மகளுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்ததையும், பெரியவா சொன்ன காலகட்டத்திலேயே திருமணம் செய்ய இருந்ததாகவும், திடீரென ஒரு ரிப்போர்ட்டரின் காதுகளுக்கு இந்த செய்தி போனதால் தற்போது மண்டபம் தருவதற்கு ஓனர் மறுப்பதாகவும் ஒரே மூச்சில் தழுதழுத்த குரலில் சொல்லி முடித்தார் ராமகிருஷ்ணன்.

என்ன பண்ணலாம்னு இருக்கே? – மகான் கேட்டார்.

ஜூன், ஜூலைக்கு வேணா கல்யாணத் தேதியை மாத்திடலாமா பெரியவா? அடுத்து யோசிக்கறதுக்குக் கொஞ்சம் அவகாசம் இருக்கும்னு பாக்கறேன் என்றார் ராமகிருஷ்ணன்.

இடமும் வலமும் தலையை அசைத்து மறுத்த மகா பெரியவா, “கூடாது. அதே தேதியில்தான் கல்யாணம் நடக்கணும் என்றார் கறாராக.

அப்படீன்னா எங்கேதான் கல்யாணம் நடத்தறது? என்கிற கேள்வியை மனதில் வைத்துக் கொண்டே மகா பெரியவாளின் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தார் ராமகிருஷ்ணன்.

பெரியவாளின் அமைதியைப் பார்த்து விட்டு, “பெரியவாஎன்னோட அண்ணா மாயவரத்துல ஒரு வீடு கட்டி கிரஹப்ரவேசம் பண்ணப் போறார். வீட்டு வேலை எல்லாம் கம்ப்ளீட்டா முடிஞ்சு போச்சு. அவர்கிட்ட வேணா கேட்டுப் பார்க்கட்டுமா, அங்கே கல்யாணம் நடத்திக்கலாமானு?

மிக நீளமாக ராமகிருஷ்ணன் பேசினாலும், அடுத்த கணமே பெரியவா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அடுத்து நாமக்கல்லில் ஒரு பிரமுகர் ஆதரவுடன் அந்த ஊரில் நடத்தலாம் என்று ஒரு யோசனையாகச் சொன்னார் ராமகிருஷ்ணன்.

அதற்கும் பெரியவா உடன்படவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேனாவுக்குள்ளேயே இருந்தார் மகான். ராமகிருஷ்ணனும் அவருக்கு எதிரிலேயே நின்றவாக்கில் காணப்பட்டார்.

நீண்ட நேர அமைதியைக் குலைக்கும் விதமாக ராமகிருஷ்ணனைப் பார்த்து மகா பெரியவா, “போலீஸ்காரா வந்து அரஸ்ட் பண்ணிடப் போறாளேனு பயப்படறியா…? – என்று கேட்டார்.

ராமகிருஷ்ணனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை.

வந்தா அரஸ்ட் பண்ணட்டும். சாஸ்திரப்படிதானே நீ நடந்துக்கப் போறேஇதுக்கு அவா உன்னைக் கைது பண்ணினா, அதுக்கு நீ ஏன் கவலைப்படணும்? திருட்டா பண்ணி இருக்கேஇல்லையேகல்யாணம் பண்ணிண்டு ஜெயிலுக்கே போகலாம் – மகா பெரியவா நீளமாக இப்படிப் பேசினார்.

ராமகிருஷ்ணன் உட்பட அங்கே இருந்தவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

நான் ஒரு இடத்துக்கு உன்னை இப்ப அனுப்பறேன். அங்கே போய் ஒன் பொண்ணு கல்யாணத்தைப் பண்ணி வை. அந்த ஊர்ல நீ சந்திக்கப்போறவர் இந்தக் கல்யாணத்தை ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார். எந்த பயமும் இருக்காது. அவர் அங்கே பெரிய மிராசுதார் என்றார்.

மகா பெரியவா பரிந்துரைத்த நபர்அயலூர் ராமதுரை ஐயர். திருச்சிக்குப் பக்கத்தில் வசித்து வருகிறார்.

அன்று இரவே பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருச்சிக்குப் பயணம் ஆனார் ராமகிருஷ்ணன்.

அயலூருக்கு ராமகிருஷ்ணன் போய் சேர்ந்தபோது அடுத்த நாள் பகல் பதினோரு மணி.

கிராமத்தில் ராமதுரையின் வீட்டைக் கண்டுபிடிக்கப் பெரிய சிரமம் ஏதும் இல்லை. வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ராமகிருஷ்ணன். “மகா பெரியவா உங்ககிட்ட அனுச்சு வெச்சார் என்று சொன்னவுடனே, எழுந்து கைகூப்பி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் ராமதுரை.

பிரமாண்டமான வீடு. தோட்டம், துரவு எல்லாம் விஸ்தாரமாக இருந்தன.

நான் உங்களுக்கு என்ன செய்யணும்? என்று கேட்டார்.

மொதல்ல பக்கத்துல காவிரிக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு வந்துடறேன் என்று நீராடச் சென்றார்.

அங்கேயே அனுஷ்டானங்களையும் முடித்த ராமகிருஷ்ணன், பகல் பன்னிரண்டு மணிக்கு ராமதுரையின் இல்லத்துக்கு வந்தார்.

விஸ்தாரமான பகுதியில் பிரமாண்டமான மகா பெரியவா திருவுருவப் படம் காணப்பட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தது போல் உட்கார்ந்திருந்தார்கள்.

காஞ்சி மகா பெரியவாளிடம் இருந்து வந்திருக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக ராமகிருஷ்ணனை இன்முகத்துடன் வரவேற்று அவரை இந்த அளவுக்கு உபசரித்துக் கொண்டிருக்கிறார்.

மகா பெரியவா என்று ராமதுரையிடம் சொன்னால் போதும்அவ்வளவுதான். கண்கள் பனிக்க உட்கார்ந்து விடுவார்.

மிராசுதார் என்றாலும், அந்த நாளில் சத் கார்யங்கள் பலவற்றை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வந்தார் ராமதுரை. காசு, பணம் செலவாவது பற்றிக் கவலைப்பட மாட்டார். சத் சங்கங்களில் கலந்து கொள்கின்றவர்கள் பகவான் சிந்தனையுடன் இருக்க வேண்டும்பகவான் நாம ஜபத்தை உச்சரிக்க வேண்டும்இதுதான் அவரது ஆசை. சத் சங்கம் பூர்த்தி ஆனதும், வந்திருக்கும் அனைவருக்கும் இலை போட்டு போஜனம் தந்து அனுப்புவார்.

ஸ்ரீராம நவமி உத்ஸவத்தை வருடா வருடம் வெகு சிறப்பாக நடத்துவார் தன் கிரஹத்தில். வெளியூர்களில் இருந்து பாகவதர்கள் முன்னதாகவே வந்திருந்து இவரது கிரஹத்தில் தங்குவார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் எந்த விதமான குறைவும் இல்லாமல் செய்து கொடுப்பார். எது கேட்டாலும் தருவதற்கு உரிய சிப்பந்திகளையும் நியமித்து விடுவார்.

ராம நவமி உத்ஸவத்தை வந்திருக்கக் கூடிய பாகவதர்கள் வெகு சிறப்பாக நடத்திக் கொடுப்பார்கள். வேளாவேளை அவர்களது அன்ன ஆகாரத்துக்கும் விரிவான ஏற்பாடுகளைச் செய்வார்.

பாகவதர்கள் நாமசங்கீர்த்தனக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும்போது எண்ணற்ற தட்டுக்களில் விதம் விதமான இனிப்புகளை மேடையிலேயே வைத்து விடுவார்.

ஒவ்வொரு பாடலைப் பாடி முடித்ததும், பாகவதர்கள் விரும்பிய இனிப்பை எடுத்துச் சுவைத்துச் சாப்பிடுவார்கள்.

பாகவதர்களுக்கு ஆசாரம், மடி என்பதெல்லாம் ரொம்பவும் முக்கியம். எனவே, இதற்கென்றே இருக்கிற தேர்ந்த அன்பர்களைக் கொண்டு ரொம்பவும் மடியாகசுத்தமாகத் தயார் செய்ய வைப்பார் ராமதுரை.

அந்த இனிப்புகளைப் பார்த்தாலே எடுத்து வாயில் போட்டுக் கொள்ளத் தோன்றும். நெய் மணக்கும். முந்திரி துருத்திக் கொண்டு நிற்கும்.

இத்தனை இனிப்புகளை மட்டும் தட்டுத் தட்டாக வைத்தால் போதுமா? நெய்யும் கடலைமாவும் தேங்காயும் முந்திரியும் உள்ளுக்குள் போனதும் ஜீரணம் ஆக வேண்டாமா? அதற்கென்று பாட்டில் பாட்டிலாக லேகியமும் தயாரித்து கூடவே வைத்திருப்பார். பாகவதர்கள் எத்தனை இனிப்புகள் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றாற்போல் லேகியமும் சாப்பிட்டு சமன்படுத்தி விடுவார்கள்.

பாகவதர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் அளவுக்கு நாம சங்கீர்த்தனத்தின் மேல் பற்றும் பக்தியும் கொண்டவர். இதை விட அதிகமாக மகா பெரியவா மேல் பக்தி. அதனால்தான் வேத பண்டிதர் ராமகிருஷ்ணனைத் தன் எதிரே அமர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

தொண்டையை செருமிக் கொண்டு ராமதுரையைப் பார்த்து மெள்ள விஷயத்தை ஆரம்பித்தார் ராமகிருஷ்ணன்.

என்னோட மகள் காயத்ரிக்கு வயசு ஒன்பது. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பெரியவா உத்தரவு. அதை உங்க மூலமா நடத்திக்கணும்னு சொல்லி அவர்தான் என்னை இங்கே அனுப்பி இருக்கா

அவ்வளவுதான்ராமகிருஷ்ணன் முழு விஷயத்தையும் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள்வென்று உடைந்து அழ ஆரம்பித்தார் ராமதுரை.

இதுவரை கம்பீரமாகப் பேசிக் கொண்டிருந்த ராமதுரை ஐயரா இப்படித் தேம்புகிறார்? ஒரு குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுகிறாரேஎதனால்? அப்படி நான் என்ன சொல்லி விட்டேன்? என்று ராமகிருஷ்ணன் விழித்தார். காரணம் புரியவில்லை.

அழுகை நிற்கவே இல்லை. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக எதுவும் பேசாமல் விசும்பிக் கொண்டே இருந்தார்.

ஆரம்பத்தில் ராமகிருஷ்ணனால் எதுவும் பேச முடியவில்லை. காரணம், ராமதுரை இவருக்குப் புதியவர். இப்போதுதான் அறிமுகமானவர். சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று ஆறுதலாக ஒரு சில வார்த்தைகள் சொன்னால், அவர் ஏற்றுக் கொள்ள வேண்டுமே… ‘நீர் யாரய்யா என்னை சமாதானப்படுத்த..? என்று கோபத்துடன் கேட்டு விட்டால் என்ன செய்வது?

எனவே, நெடுநேரம் அமைதி காத்தார் ராமகிருஷ்ணன். அதற்குப் பின், ‘இனியும் இப்படி இருந்தால் ஆகாது என்று தீர்மானித்தார். ராமதுரையின் கரம் பற்றி ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்.

மேல்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு, “இருவது வருஷத்துக்கு முன்னாடியே பெரியவா இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டார். அந்தப் பரப்பிரம்மம் அன்னிக்கு சொன்ன விஷயத்தை நினைவில் வெச்சுண்டு இன்னிக்கு செயல்படுத்திக் காண்பிக்கிறார்அவரைப் போல ஒரு மகான் இந்த லோகத்துல உண்டாபெரியவாபெரியவா என்று மருகி, அவரது திருவுருவப் படத்துக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் ராமதுரை.

பிறகு, மெள்ள எழுந்தவர், “நான் ஏன் இப்ப கண்ணீர் விட்டு தழுதழுத்துண்டிருக்கேன்னு உமக்குப் புரியாது. விவரமா சொல்றேன், கேளுங்கோ. என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்றது விஷயமா இருவது வருஷத்துக்கு முன்னாடி மகா பெரியவாகிட்ட போய் ஆசி வாங்கினேன்.

உன் பொண்ணுக்கு நிறைய செலவழிச்சு நீ கல்யாணம் பண்ணி வைப்பேஉனக்கு இல்லாத வசதியா? வேண்டிய எம்.எல்.., மினிஸ்டர் எல்லாரையும் கல்யாணத்துக்குப் பத்திரிகை வெச்சுக் கூப்பிடுவேஆனா, இது போல பிரமாண்டமாக கல்யாணம் பண்ற யோகம் எல்லாருக்கும் கிடைச்சுடுமா?னு பெரியவா என்கிட்ட கேட்டார்.

எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா, ஏதோ புரியறது மாதிரி இருந்தது. ‘இதுபத்தி பெரியவாளே எனக்குத் தெளிவா சொல்லிப் புரிய வைக்கணும்னு பிரார்த்தனை பண்ணி நமஸ்காரம் செஞ்சேன். அடுத்து அவர் பேச ஆரம்பிச்சார். அந்தப் பரப்பிரம்மத்தோட ஒவ்வொரு வார்த்தைகளும் எத்தனை சத்தியம்னு இப்ப புரியறது என்றவர் மகான் சொன்ன விஷயத்தை, ராமகிருஷ்ணனுக்குச் சொல்ல ஆரம்பித்தார்.

இருவது வருஷத்துக்கு முன்னாடி மகா பெரியவா என்கிட்ட சொன்னார் – ‘ஒரு கன்யா பொண்ணுக்கு நீ கல்யாணம் பண்ணி வைக்கணும். அந்தக் குடும்பத்தை நானே உன்கிட்ட அனுப்பி வைப்பேன்னு. அது இன்னிக்கு நிறைவேறி இருக்கு. சந்தோஷம் தாங்க முடியலை எனக்கு.

இன்னொரு கிரஹத்துப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு பகவானோட கொடுப்பினை இருக்கணும். அதுவும் நீங்க வேதம் கற்ற பண்டிதர். மாத்வ சம்பிரதாயத்தின்படி இன்னிக்கும் வாழ்ந்துண்டு வரேள். உங்களை என்கிட்ட அனுச்சு, பெரியவா எனக்கு அனுக்ரஹம் பண்ணி இருக்கார். இது இத்தனை வருடம் தாமதம் ஆனாலும், அதுக்கு பெரியவா ஏதோ ஒரு காரணம் வெச்சிருப்பார். அதைப் பத்தி பேசறதுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது.

சில வருஷங்களுக்கு முன் ஒரு தடவை காஞ்சிபுரம் போனப்ப, பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு வாய் விட்டுக் கேட்டுட்டேன். ‘எல்லாம் பெரிய பொண்ணா (வயசு அதிகமா) வர்றாடாசின்னப் பொண்ணா வரட்டும். அனுப்பி வைக்கறேன்னு சொல்லுவார். உங்களோட பொண்ணு காயத்ரிக்கு ஒன்பது வயசுன்னு சொல்றேள். பெரியவாளே அனுச்சு வெச்சிருக்கார். இதை விட எனக்கு என்ன பாக்கியம் வேணும்?! அந்த சர்வேஸ்வர சொரூபம் இப்பதான் எனக்கு அனுக்ரஹம் பண்ணி இருக்கு. கவலையை விடுங்கோ. என்னிக்குக் கல்யாணம் பண்ணணும்னு தேதிய மட்டும் சொல்லுங்கோ என்று பரவசத்துடனும் படபடவென்றும் பேசிக் கொண்டே போனார்.

ராமதுரை பேசி முடித்ததும் ராமகிருஷ்ணனுக்குக் கண்கள் பனிக்க ஆரம்பித்தன.

இரு கைகளையும் ராமதுரையை நோக்கிக் கூப்பினார். பிறகு, “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல என்றவர், பெரியவா குறித்துக் கொடுத்த தேதியைச் சொன்னார்.

பொண் ஆத்துக்காராளும், மாப்பிள்ளை ஆத்துக்காராளும் அயலூருக்கு வந்து சேர்ந்தா போதும். மிச்ச எல்லாத்தையும் நானே பாத்துக்கறேன். இப்படிச் சொல்றதுனால தப்பா நினைக்காதீங்கோ. ரொம்ப வருஷம் கழிச்சு பெரியவா எனக்குக் குடுக்கிற அனுக்ரஹம். இதை நான் நன்னா பண்ணணும் என்றார் ராமதுரை.

உங்க இடத்துல நடக்கப் போறது. அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம். செலவெல்லாம் நான் பாத்துக்கறேனே என்று ராமகிருஷ்ணன் இழுத்தபோது, வலது ஆட்காட்டி விரலை இடமும் வலமுமாக அசைத்து, “அதெல்லாம் கூடாது. எல்லாமே இங்க இருக்கு. வாழைமரத்துல ஆரம்பிச்சு, சாப்பாடு, தங்கறதுபோறது வர்றதுஎல்லாமும் பாத்துக்கற பாக்கியத்தை எனக்குக் குடுங்கோ என்று இரு கரங்களையும் குவித்தபடி கேட்டார் ராமதுரை.

அழுதே விட்டார் ராமகிருஷ்ணன்.

கருணாமூர்த்தியான மகா பெரியவாளின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால், அவர் நம்மேல் பொழிகிற கருணை மழைக்கு அளவே இல்லை.

மீண்டும் தன் நன்றியை ராமதுரை ஐயருக்குத் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் ராமகிருஷ்ணன்.

உரிய வேளையில் எந்த விதமான தடையும் இல்லாமல், ஒன்பது வயதுப் பெண் காயத்ரியின் திருமணம் அயலூரில் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

திருமணம் ஆன பின் தம்பதியரைக் காஞ்சிபுரம் கூட்டிச் சென்று, மகா பெரியவாளின் ஆசிகளையும் பெறத் தவறவில்லை ராமகிருஷ்ணன்.

மகா பெரியவாளின் ஆசி பெற்ற பக்தர்களுக்கே இப்படி ஒரு அனுக்ரஹம் என்றால், அந்த மகானுடன் வாழ்ந்து சேவை செய்த சிப்பந்திகள் மகா பாக்கியம் புரிந்தவர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!