“உன்னால ஒரு உபகாரம்…எனக்காக செய்வியா?”

ப்போது பார்க்கப் போகிற நிகழ்வின் கதாநாயகன்சீனிவாசன். வயது பத்தொன்பது.

ஆம்பூர் சொந்த ஊர். வைதீகக் குடும்பம்.

வைதீகத்தைப் பிழைப்பாகக் கொண்டிருந்தால், எல்லா நாட்களும் மூன்று வேளை சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே! இது சிலருக்கு இன்றும் தொடர்வது சோகமே!

அந்த நாளில் வைதீகம் மூன்று வேளையும் சாப்பாடு போடாது. என்றாலும், இந்தத் தொழிலைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்தவர்கள், தர்மம் கருதி விடாமல் தொடர்ந்தார்கள்.

வைதீகர்கள் எப்போது மகா பெரியவா சந்நிதிக்கு வந்தாலும் அவர்களை ஊக்குவிப்பார். தனது உபன்யாசத்தின்போது வைதீகர்களையும், வேதம் படித்தவர்களையும் தனவந்தர்கள் போஷிக்க வேண்டும் என்பதைப் பிரதானமாகச் சொல்வார் மகா பெரியவா.

சீனிவாசன் குடும்பத்தில் திடீரென்று ஒரு சோகம். அவரது தகப்பனார் பொசுக்கென்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

குடும்பத்தில் அவர் ஒருவரது சம்பாத்தியம்தான் அனைவருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று குடும்பத் தலைவர் இறந்து போனதால், சற்று நிலை குலைந்து போனார்கள்.

அதன் அடுத்த தீர்மானம்மகனான சீனிவாசனை மேலும் படிக்க வைக்காமல், கோயில் வேலைகளுக்கு அனுப்பலாம். ஏதாவது சாப்பாட்டுக்காவது கிடைக்கும் என்று முடிவெடுத்தார்கள். குடும்பத்தைக் காக்க வேண்டிய பொறுப்பும் இருப்பதால், சீனிவாசனே இதை முன்னின்று சொன்னார்.

அப்போது ஒரு நாள் யதேச்சையாக சீனிவாசன் காஞ்சி ஸ்ரீமடம் போனார், மகா பெரியவா தரிசனத்துக்காக.

இவரைப் பார்த்ததும் மகா பெரியவா, “நீ ஷடங்கம் வாசிக்கலாமே? என்று கேட்டார்.

இந்து மதத்தில் வேதத்துக்கு அடுத்தபடியாக வருவது வேதத்தின் ஆறு அங்கங்கள்.

மனிதனுக்கு எப்படி அங்கங்கள் காணப்படுகின்றனவோ அதுபோல் வேத புருஷனுக்கும் பல அங்கங்கள் இருக்கின்றன. வாய், மூக்கு, கண், காது, கை, பாதம் என்ற ஆறு அங்கங்களே அவை. இவற்றை ஷட் (ஆறு) அங்கம் என்பர். இதுவே ஷடங்கம் ஆனது. சடங்கு என்ற வார்த்தையில் இருந்து இது வந்ததாகவும் கொள்ளலாம்.

வேதத்தில் இது ஒரு முக்கியமான படிப்பு. இதைத்தான் மகா பெரியவா கேட்டார்.

மகா பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்த சீனிவாசன், “பெரியவாஎங்க குடும்பத்துல நான்தான் வேலை ஏதாவது பண்ணி குடும்பத்தைக் காப்பாத்தணும். சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு. ஷடங்கம் வாசிக்கப் போனா என்னோட குடும்பத்தை யாரு காப்பாத்துவாங்கற கவலை என்னை வாட்டறது பெரியவா என்றார் கண்களில் சோகத்துடன்.

வேத மூர்த்தியான மகா பெரியவாளுக்குத் தெரியாதா?

எதிர்க் கேள்விகள் கேட்பவருக்கு வேண்டுமானால் அஞ்ஞானம் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்பவர் ஞானி அல்லவாபரப்பிரம்மம் அல்லவா? தான் கேட்டதற்கு உண்டான பதில் அவரிடம் இல்லாமலா போகும்?!

சீனிவாசனை ஏறிட்டார் மகா பெரியவா. ‘என்ன சொல்றே? என்பது போல் அந்தப் பார்வை இருந்தது.

பெரியவாஇப்படிக் கேக்கறதுக்கு என்னை மன்னிக்கணும். ‘ஷடங்கம் வாசினு நீங்க சொன்னது என்னோட பூர்வ ஜன்ம புண்ணியம்னே நினைக்கறேன். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்கணும். எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, என்னோட குடும்பத் தேவையை பூர்த்தி பண்றதுக்கு உண்டான தொகை எனக்கு மாசா மாசம் விடாம கிடைச்சுட்டா தாராளமா நான் ஷடங்கம் படிப்பேன் என்றார் உற்சாகமாக.

உன் குடும்பத்தைக் காப்பாத்த மாசா மாசம் என்ன தொகை வேணும்? – மகானே கேட்டார்.

ஒரு ஐந்நூறு ரூபா இருந்தா போதும் பெரியவா.

இதைக் கேட்டதும், தன் தலையைச் சற்றே உயர்த்தி சீனிவாசனுக்குப் பின்னால் இருக்கின்றவர்களைப் பார்த்தார்.

அன்றைக்கு மகா பெரியவாளுக்கு ஸ்ரீகண்டன் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவரை ஜாடை காட்டி அருகே அழைத்தார் மகான்.

அதோ, பின்னாடி ஒரு ஸ்மார்த்தர் (பிராமணர்) நின்று கொண்டிருக்கிறார். அவரைக் கூட்டிண்டு வா என்றார் ஸ்ரீகண்டனிடம்.

பரப்பிரம்மம் சொன்ன அடையாளத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு பிராமணரை அழைத்துக் கொண்டு வந்தார்.

வந்தவர் பெயர் சந்திரசேகரன். பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

ஈரோட்டில் ஒரு வங்கியில் பணி புரிந்து வருபவர்.

தன்னை எதற்காக மகான் அழைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாக அவரது முகத்தையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகரன்.

எதுக்காக உன்னைக் கூப்பிட்டேன்னு பாக்கறியாநீ பேங்க்லதானே உத்தியோகம் பண்றே?

ஆமாம் பெரியவா

உன்னால ஒரு உபகாரம் ஆகணும். செய்வியா?

பெரியவா என்ன கேட்கப் போகிறார்அவர் கேட்பதை நம்மால் செய்ய முடியுமா என்கிற கேள்வி வங்கி ஊழியரான சந்திரசேகரனின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

வங்கி ஊழியரைப் பார்த்து மகான் கேட்டார்: “இந்தப் பையன் ஷடங்கம் வாசிக்கப் போறான். இவனுக்கு மாசா மாசம் ஐந்நூறு ரூபா குடுக்கணும். அது அவன் குடும்பத்தைக் காப்பாத்தறதுக்கு. நீ குடுத்துடறியா?

கேட்பவர் பரப்பிரம்ம சொரூபமான மகா பெரியவா. ‘முடியாது என்று எவராவது சொல்வாரோ? அந்தத் திருச்சந்நிதியில் சொல்லத்தான் முடியுமா?

நான் குடுக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்துச் சம்மதம் சொன்னார் வங்கி ஊழியர்.

என்ன உத்தியோகம் பாக்கறே?

பேங்க்ல பெரியவா.

எந்த ஊர்ல உத்தியோகம்?

ஈரோடு பெரியவா

பாத்தியாஇந்தப் பையனும் ஈரோடு பாடசாலைலதான் ஷடங்கம் வாசிக்கப் போறான். உனக்கும் கொஞ்சம் வசதியா ஆயிடுத்து. மணியார்டர் அனுப்பற கஷ்டமெல்லாம் கிடையாது. மாசத்துக்கு ஒரு தடவை நேர்ல போய்ப் பாத்துக் குடுத்துடலாம் என்றார் நடமாடும் தெய்வம்.

என்ன ஒரு கரிசனம்வேதத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு வித்து கிடைத்தவுடன், அது விருட்சமாக வளர்வதற்குத் தானே நீர் ஊற்ற வேண்டும் என்று ஆரம்பித்து வைக்கிறார்.

நீ கேட்டது கெடைச்சுடுத்து. இப்ப ஒனக்கு சந்தோஷமா? என்று சீனிவாசனைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.

நமஸ்கரித்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சீனிவாசன்.

ஒனக்கும் சந்தோஷம்னு நினைக்கறேன் என்று வங்கி ஊழியரான சந்திரசேகரனைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.

புன்னகையோடு சம்மதித்தார் வங்கி ஊழியர்.

என்றாலும், அந்தக் காலத்தில் ஐந்நூறு ரூபாய் என்பதெல்லாம் மிகப் பெரிய தொகை.

மாதா மாதம் ஐந்நூறு ரூபாயை சுளையாக எடுத்துக் கொடுப்பதற்கு ஏற்ற சம்பளம் அப்போது சந்திரசேகரனுக்கு இல்லை. சாதாரண ஊழியர்தான். ‘ஒரு மாதம், இரண்டு மாதம் என்றாலும் கஷ்டப்பட்டுக் கொடுத்து விடலாம். ஆனால், ஒரு சில வருடங்களுக்குத் தொடர்ந்து மாதா மாதம் கொடுக்க வேண்டுமேஇது எப்படி சாத்தியமாகும்? என்கிற தயக்கமும் இருந்தது.

இருந்தாலும், வேதத்தின் அங்கத்தை வாசிக்கப் போகிறவருக்கு உதவச் சொன்ன மகான் அதற்குண்டான வழியையும் காண்பித்துக் கரையேற்றி விடுவார் என்பது சந்திரசேகரனின் நம்பிக்கை.

விலாசம் போன்ற தகவல்களை பரஸ்பரம் பெற்றுக் கொள்ளுமாறு சீனிவாசனையும் சந்திரசேகரனையும் பார்த்துச் சொன்னார் பெரியவா. அதன் பின் இருவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

வங்கி ஊழியர் சந்திரசேகரன் ஈரோட்டுக்குத் திரும்பினார். ஊருக்குத் திரும்புகிற வழியெங்கும் ஒரே சிந்தனை – ‘மாதா மாதம் எப்படி ஐந்நூறு ரூபாய் கொடுப்பது? மகானிடம் ஒப்புக் கொண்டு விட்டோமே என்று.

ஆனால், என்ன ஒரு ஆச்சரியம் தெரியுமா?

சந்திரசேகரன் பணி புரிந்த வங்கியில் அவருக்கு உத்தியோக உயர்வு காத்திருந்தது.

மேனேஜராகப் பதவி உயர்வு!

ஊழியராக இருந்தபோது வாங்கிய சம்பளத்தைவிட ஐந்நூறு ரூபாய் உயர்வு.

கவனிக்கவும்சரியாக ஐந்நூறு ரூபாய் மட்டுமே உயர்வு.

ஷடங்கம் வாசிக்கப் போகும் சீனிவாசனுக்கு மாதா மாதம் மகா பெரியவா கொடுக்கச் சொன்னதும் அதே ஐந்நூறு ரூபாய்தான்.

தன் பக்தனை என்றென்றும் கஷ்டப்பட வைக்க மாட்டார் காஞ்சி முனிவர்.

வைதீகத்தின் வழியில் வந்த ஒரு குடும்பத்துக்கு உதவவும் வைத்து, அதற்கு உண்டான வழியையும் மகானே ஏற்படுத்தித் தருகிறார்!

சீனிவாசன் ஷடங்கம் வாசித்து முடிக்கின்ற வரையில் இந்த ஐந்நூறு ரூபாய் சேவையைக் கைவிடவில்லை சந்திரசேகரன்! ஆத்மார்த்தமாகசந்தோஷத்துடன் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வந்தார்.

மகா பெரியவா அருளால் ஷடங்கம் கற்றுக் கொண்ட சீனிவாசன், இப்போது கோவையில் வேத பண்டிதராகக் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.