தூக்கத்தை கெடுத்த கொசுவும் எறும்பும்

கொசு சம்பவம் 1

காஞ்சி மகானிடம் இன்றைக்கும் நாம் வியந்து பார்க்கிற விஷயம் அவர் கொண்டிருந்த எளிமைதான்!

இப்படி ஒருவர் வாழ முடியுமா?

கிடைத்த இடத்தில் படுக்க முடியுமா?

உணவே இல்லாமல் உபவாசம் இருக்க முடியுமா?

எந்நேரமும் பரப்பிரம்ம நிலையில் இருக்க முடியுமா?

மாட்டுத் தொழுவ வாசத்தை மனமுவந்து ஏற்க முடியுமா?

கொசுக்கடியையும், எறும்புக் கடியையும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?

ஓய்வே எடுக்காமல் தொடர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் தர முடியுமா?

எல்லாமே முடியும்மகா பெரியவா என்கிற மகானால் மட்டும்!

யோசித்துப் பாருங்கள்மேலே இருப்பதெல்லாம் சாதாரணமான மனிதர்களான நமக்குச் சாத்தியமா?

சத்தியமாக சாத்தியமில்லை. சொகுசுக்குப் பழகி விட்டோம். அது இல்லாமல் வாழ்வது கடினம்.

எளிமையில் பிறந்து, எளிமையில் நாம் வாழ்ந்திருந்தாலும் நாலு காசு, பணம் பார்த்த பிறகு நம் நிலையை உயர்த்திக் கொள்ளத் துடிக்கிறோம். எளிமைக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று வாழ்கிறோம்.

ஆனால், மகான்கள் அப்படி அல்ல. அவர்கள் கொண்டிருக்கிற எளிமைதான், அதிசயிக்க வைக்கிறது.

ஒரு முறை எந்த விதமான வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் மகா பெரியவா கேம்ப் அமைந்து விட்டது.

இரவு படுப்பதற்கு வெகு சாதாரணமான இடம். பழங்காலத்திய கட்டுமானம். எந்த ஒரு வசதியும் இல்லை.

மகானுக்கு இதெல்லாம் பழக்கம். ஆனால், அவருடன் பயணிக்கின்றவர்களுக்கும், சிப்பந்திகளுக்கும் சற்று சிரமம்தான்.

அன்றைய தினம் இரவு மகா பெரியவா அங்கே சயனம் கொள்ள ஆரம்பித்தார். எப்படி?

ஒரு காவி வஸ்திரத்தைக் கீழே விரித்து, அதன் மேல் உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுத்தார்.

பக்கத்திலேயே ஒரு அன்பர்!

இந்த அன்பருக்கு உறக்கம் வரவில்லை. இடமும் வலமுமாகப் புரண்டு புரண்டு பார்க்கிறார். மல்லாக்கப் படுத்துப் பார்க்கிறார்.

ஊஹும்தூக்கம் வருகிற வழியாகத் தெரியவில்லை.

காரணம்?

அங்கே தரையில் நிரந்தர வாசம் கொண்டிருந்த எறும்புகளும், காற்றில் கலந்திருக்கும் கொசுக்களும்தான்!

கொசுக்கடியும், எறும்புக் கடியும் சரமாரியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும்போது உறக்கம் வருமா?

இதுதான் அன்பரின் விழிப்பு நிலைக்குக் காரணம்.

ஆனால், சற்றே புரண்டு அருகில் சயனம் கொண்டிருந்த மகா பெரியவாளை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அவர் திருமேனியில் எந்த விதமான அசைவும் இல்லை.

இப்படிப்பட்ட வேளையில் இவர் மட்டும் எப்படி சவுகரியமாக உறங்குகிறார்? என்று யோசித்தார் அன்பர்.

இவர் மனதில் தோன்றியது மகானுக்குத் தெரியாமலா இருக்கும்?

டேய்ய் – அன்பரை அழைத்தார் மகா பெரியவா!

கொசுக்கடியிலும், எறும்புக் கடியிலும் சிக்கித் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த அந்த அன்பர், மகா பெரியவா அழைத்த குரல் கேட்டு எழுந்து அமர்ந்தார். முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் துடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாகக் கைகூப்பினார்.

பெரியவா என்றார், குரலில் பவ்யத்துடன்.

என்னகொசுக்கடி, எறும்புக்கடினு எல்லாம் சேர்ந்து உன் தூக்கத்தைக் கெடுத்துடுத்தோ? – கலியுக தெய்வம் கரிசனத்துடன் கேட்டது.

அன்பருக்குப் பேச்சு வரவில்லை. வார்த்தைகளை மென்று கூட்டினார். ஆனால், வெளிப்படவில்லை.

சொல்ல முடியுமா? ‘ஆமாம் பெரியவாகொசுக்கடியும், எறும்புக் கடியும் என்னைப் பாடாப் படுத்தறது என்று.

அப்படியே சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?

நடமாடும் தெய்வம் இருக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே வாசம் செய்கிற பேறு கிடைத்தாலும், மனம் மகானிடம் நாட்டம் கொள்ளவில்லை என்றல்லவா அர்த்தம் ஆகி விடும்? இத்தனை அருகில் இருக்கிற மகானின் ஸ்பரிச சுகானுபவத்தை எண்ணி ஆனந்தப்படாமல், எறும்பிடமும் கொசுவிடமும் பாழாய்ப் போன மனம் போகிறது என்றல்லவா ஆகி விடும்?

ஒரு சிறிய கனைப்புக்குப் பின் மகா பெரியவா பேசினார்: “ஒரே இரைச்சலா இருக்கிற சந்தையா இருந்தாலும் சரிகொதிக்கிற வெயிலில் பாறை மேலே படுக்கிற மாதிரி இருந்தாலும் சரிமனசை சத்தத்துலயும் சூட்டுலயும் கொடுத்துடக் கூடாது. ‘கடிக்கறதேவலிக்கிறதேதூக்கம் வர மாட்டேன் என்கிறதே என்று மனசுல ஓடற எண்ணங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைனு நீ இருக்கப் பழகிட்டேன்னா தூக்கம் ஒடனே வந்துடும். மத்ததெல்லாம் பறந்து போயிடும். அதுக்கு நீ தயாரா இருக்கணும்.

ஞான உபதேசத்தைக் கேட்ட அன்பரின் விழிகளில் நீர்த் துளிகள்.

எப்பேர்ப்பட்ட பாடம், இந்த நள்ளிரவில்!

அதுவும் ஜகத்குருவிடம் இருந்து.

கேள்வி கேட்டால், பதிலுக்குக் காத்திருக்க வேண்டும்.

கொடுப்பது உபதேசம் என்றால், பதில் அவசியமில்லை. ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் உபதேசிக்கப்பட்டவரின் மன நிலையைப் பொறுத்தது.

எனவே, ஞான உபதேசம் வழங்கின மறுகணம், மீண்டும் உடலைக் குறுக்கிக் கொண்டு நித்திரைக்குள் போனது அந்தப் பரப்பிரம்மம்.

இதைப் படிக்கிற அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட கொசுக்கடி அன்பருக்கும் மட்டும் மகான் இந்த ஞான உபதேசம் வழங்கவில்லை. நம் எல்லோருக்கும் இதன் மூலம் ஒரு பாடத்தைச் சொல்கிறார்.

உடல் வேறு; மனம் வேறு.

உடலை மதிக்காமல் மனதை மதிக்க ஆரம்பித்தால், எல்லாமும் வசப்படும்.

ஆலய மண்டபங்களிலும் தூண் ஓரங்களிலும் தியானத்தில் இருக்கின்ற சிலருக்கு அங்கே அடிக்கின்ற மணியோசையும் வாத்திய முழக்கங்களும் கேட்கவே கேட்காது. எப்படி?

மனதை ஒருமுகமாக அடக்கி, அதன் மூலம் தியானம் என்கிற ஓர் ஆன்மிக உலகுக்குள் பிரவேசம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்.

புற வெளியில் இருக்கின்ற எதன் மீதும் கவனம் கொள்ளாமல், அகத்துள்ளே ஆண்டவனைத் தேடுவதுதான் தியானம். இதைத்தான்கடவுள் உனக்குள் இருக்கின்றான் என்பர்.

யோசித்துப் பாருங்கள்நாமெல்லாம் உடலுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை மனசுக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறோம்.

உடல் வெளிப் பார்வைக்குத் தெரிகிறது. எதிர்ப்படுவோர் எல்லோரும் பார்க்கிறார்கள். சிலர் பாராட்டுகிறார்கள். சிலர் அருவருப்படைகிறார்கள்.

அதனால் என்ன செய்கிறோம்?

முகத்துக்கு பவுடர் பூசிக் கொள்கிறோம். இன்ன பிற ஒப்பனைகளையும் செய்து கொள்கிறோம்.

தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிகிறோம்.

அணிகலன்களால் அழகு செய்து கொள்கிறோம்.

காலணிகளும், கைக்கடிகாரங்களும் நிறையவே வைத்திருக்கிறோம். ஆடைகளின் நிறத்துக்கு ஏற்றவாறு அவற்றை அணிகிறோம்.

நம்மைப் பிறர் பாராட்டுவதை வெகுவாகவே ரசிக்கிறோம்.

இவை எல்லாம் புற அழகு தொடர்பானவை.

என்றைக்கேனும் அக அழகைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா?

நமக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது. அது தூய்மையானது. அதை மேலும் தூய்மைப்படுத்த வேண்டும். அலங்கரிக்க வேண்டும். அழகுபடுத்த வேண்டும். இப்படி மனசை அலங்கரிக்கிறோமா?

உடலுக்கு அழகுஉடைகளும் ஆபரணங்களும் வாசனாதி திரவியங்களும்.

உள்ளம் என்கிற மனசுக்கு அழகுஉண்மை. நேர்மை. கள்ளங்கபடம் இல்லாமை. உண்மையால் மனம் நிரம்பிக் காணப்பட வேண்டும்.

உண்மையால் மனம் நிரம்பிக் காணப்பட்டால், ஆகா! அந்த வாழ்க்கையை நம்மில் பெரும்பாலோர் வாழ்ந்ததில்லை; வாழ முற்படுவதும் இல்லை.

மனதுக்குள் பொய், எரிச்சல், பொறாமைஇப்படிப்பட்ட துர்க்குணங்கள் குப்பைமேடு போல் இருந்தால், எப்படி உண்மை இருக்கும்?!

இதைத்தான் மகா பெரியவா அற்புதமான ஒரு சிறு நிகழ்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

எதை நாடுகிறாயோ அதில் மட்டுமே கவனம் செலுத்து.

இதுதான் மகா பெரியவா சொல்ல வருவது.

சாப்பிடும்போது ருசியில் மட்டுமே கவனம் இருந்தால், வீணாகப் பேச மாட்டோம்.

படுத்த பின் உறக்கத்தை மட்டுமே நினைத்தால், கொசுக்கடியும் எறும்புக் கடியும் எப்படித் தெரியும்?