சிந்தனை ஏன் கொசுவிடமும் எறும்பிடமும் போனது..?

கொசு சம்பவம் 2

ஜீவன் என்றால் அது மனிதன் மட்டுமல்ல. இந்த பூலோகத்தில் பிரம்மனால் படைக்கப்பட்டிருக்கும் அத்தனையுமே ஜீவன்தான் என்று எல்லாவற்றையும் மதித்தார். எந்த ஒரு ஜீவராசிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும், அது தனக்கு ஏற்பட்டது போலவே வருந்தினார்.

மகா பெரியவா தங்கி இருக்கின்ற இடங்களில் கொசுக்கள், எறும்புகள், ஈக்கள் என்று எல்லாமே உலவிக் கொண்டிருக்கும். ஆனால், எதற்கும் இடையூறு இருக்காது. அதுபாட்டுக்கும் போகலாம்; வரலாம். கொசுவை அடிப்பது, எறும்புகள் மீது மருந்து தூவுவதுஇதெல்லாம் கிடையாது.

மகான் செல்லும் யாத்திரைகளில் ஏராளம் பேர் பங்கேற்றுக் கொள்வார்கள். யானை, குதிரை, ஒட்டகம் என்று திமிலோகப்படும். ஒவ்வொரு ஊர் எல்லையிலும் வரவேற்பதற்கு பூர்ணகும்பம், மேளதாளம் என்று விமரிசையாக இருக்கும். காணிக்கைகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். எதைக் கண்டும் பிரமிக்க மாட்டார்.

பெரியவா தங்குவதற்கு எத்தகைய ஒரு விசேஷமான வசதியை செய்து தருவதற்கும் தயாராக இருந்தார்கள்.

ஆனால், இந்த சந்நியாசி வசதியை விரும்பவில்லை. இவர் விரும்பித் தங்குவது எங்கு தெரியுமா? கிணற்றங்கரை, மாட்டுக் கொட்டகை போன்ற இடங்களில்தான்!

அங்குதான் சகல விதமான ஜீவராசிகளும் உலவிக் கொண்டிருக்கும். அதோடு சேர்ந்து வாழலாமே என்பது போல் இருப்பார்.

சில ஊர்களில் மட்டும் உள்ளூர்க்காரர்களின் விருப்பத்துக்கு இணங்க அவர்களது பிரமாண்டமான வீடுகளில் தங்குவார்.

அந்த வீட்டுக்கும் சில நியமங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு தங்குவதற்கு ஒப்புக் கொள்வார். நித்தமும் சந்திரமௌளீஸ்வரர் பூஜை, கோபூஜை, கிணறு என்று பல விஷயங்கள் இருக்க வேண்டும்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது விஷ்ணுபுரம். அந்தணர்களில் ஒரு பிரிவான வாத்திமர்கள் அதிகம் வசிக்கிற ஊர். இவர்கள் அனைவரும் மகானது அத்யந்த பக்தர்கள். இந்த ஊருக்கு ஒரு முறை யாத்திரை வந்தார் பெரியவா.

பெரியவா கேட்டுக் கொண்டபடி தங்குவதற்கு ஒரு கொட்டகை ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்குதான் பெரியவா வாசம். பூஜை முடிந்து இங்கு வந்து விடுவார். சில நேரங்களில் இந்தக் கொட்டகையிலும் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

அன்றைய தினம் இரவுபூஜை முடிந்து, தரிசனமும் கொடுத்து விட்டுக் கொட்டகைக்கு வந்தார். உள்ளூர்காரர்கள் ஒரு சிலரும் மகானுடன் இருந்தனர்.

மகானது அருளுக்குப் பாத்திரமான உள்ளூர்க்காரர் ஒருவருக்கு அன்றைக்கு யோகம் அடித்தது. “இன்னிக்கு ராத்திரி நீயும் எங்கூட இங்கேயே படுத்துக்கோயேன் என்றார்.

இங்கேயே என்றால், கொட்டகைக்குள். மகா பெரியவாளுக்குப் பக்கத்தில் ஒரு இரவு முழுக்க உடன் இருப்பதற்கான வாய்ப்பு.

அந்தப் பிரமுகருக்கு பரவசம் ஒருபுறம்; திகைப்பு மறுபுறம்.

பரவசத்துக்குக் காரணம் – ‘இத்தனை பேர் உடன் இருக்கிறபோது மகான் நம்மை மட்டும் அழைத்து உடன் படுத்துக்கோ என்று அழைக்கிறாரேஎத்தனை பெரிய வாய்ப்பு இது என்று.

திகைப்புக்குக் காரணம்இதுவரை அவர் கொட்டகையில் படுத்து உறங்கியது கிடையாது. தோட்டம், மாடு, வயல் என்று எல்லா வசதிகள் இருந்தும், மின்விசிறிக்கு அடியில் வசதியாகவே படுத்து வாழ்ந்து வந்தவர். கொட்டகையில் படுப்பதற்கான தேவையும் இதுவரை அவருக்கு ஏற்படவில்லை. எனவே, அவருக்கு ஒரு மிரட்சி.

உடன் இருந்த உள்ளூர்க்காரர்கள் சிலருக்கு மனசுக்குள் பொறாமை – ‘இவனுக்கு இப்படி ஒரு யோகமா? என்று.

எவருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக் கூடாதுஎன்ன கஷ்டம் ஏற்பட்டாலும் இன்றைக்குப் பெரியவாளுடன் படுத்துக் கொள்ள வேண்டும் என்று திடமாகத் தீர்மானித்தார். அதோடு மனம் நிறைய உற்சாகத்துடன் பெரியவாளை வணங்கி, “பாக்கியம் பெரியவாஉங்க உத்தரவுப்படி இன்னிக்கு ராத்திரி நான் இங்கயே படுத்துக்கறேன் என்று சந்தோஷமாகத் தலை ஆட்டினார்.

அவ்வளவுதான். அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் பெரியவாளிடம் உத்தரவு வாங்கினார்கள். அவரவர்களது இல்லங்களுக்குப் புறப்பட்டுப் போனார்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த இடமே காலியாக இருந்தது.

இப்போது அந்தக் கொட்டகையில் மகா பெரியவாளும், அந்த அன்பரும்தான்!

மகானுக்குக் கைங்கர்யம் செய்து வந்த சிப்பந்திகள் கொட்டகைக்கு வெளியே துணியை விரித்துப் படுக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு காஷாய வஸ்திரத்தைக் கீழே மண்தரையில் விரித்தார் மகா பெரியவா. ஆங்காங்கு மடங்கிப் போயிருந்த அந்த வஸ்திரத்தின் நான்கு மூலைகளையும் சரியாகப் பிரித்து விட்டார். பிறகு அதன் மேல் உடலைக் கூனிக் குறுகிப் படுத்துக் கொண்டார். உடலோடு ஒட்டி தண்டமும் வஸ்திரத்தில் காணப்பட்டது.

மலையில் வெட்டி எடுக்கின்ற பாறாங்கற்கள், ஆலயத்தில் அழகான விக்கிரகமாகவும் ஆகின்றன. பக்தர்கள் மிதித்துச் செல்லும் படிக்கட்டுகளாகவும் ஆகின்றன. எல்லாமே ஒரே மலையில்தான். ஆனால், சென்றடைகிற இடம் வேறு வேறு!

மகானின் திருமேனி ஸ்பரிசம் கிடைப்பதற்கு அந்த வஸ்திரமும், கொட்டகையும் பூர்வ ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தனவோ?! பகவான் அருகே வசிப்பதற்கும், பகவானைத் தீண்டுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

உள்ளூர் அன்பர் மகானையே பார்த்த வண்ணம் தரையில் அமர்ந்திருந்தார். ‘நீயும் படுத்துக்கோ என்பது மாதிரி ஜாடை காண்பித்தார் பெரியவா. அதன் பின் உடன் வைத்திருந்த ஒரு துண்டைக் கீழே விரித்தார். அதில் படுத்தார்.

மகானுக்கு அருகே படுத்திருக்கிறோம் என்கிற ஆனந்தம் உடலெங்கும் சிலிர்ப்பாக வெளிப்பட்டது. தன்னை விட மகானுக்குக் கைங்கர்யம் செய்த உள்ளூர் அன்பர்கள் பலரும் இருக்கிறபோது தனக்கு இத்தகைய ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று நினைத்து நினைத்துப் பூரித்துப் போனார்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா எந்தவிதமான சலனமும் இன்றிஅசைவும் இன்றி உறக்க நிலைக்குப் போய் விட்டார்.

ஆனால், இதே ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட உள்ளூர் அன்பர் அந்தக் கொட்டகையில் சிரமப்பட்டார். பகல் முழுக்க மகானுக்கு அருகே இருந்து பணி ஆற்றியதால், கண்கள் மெள்ள மெள்ள சொக்கின. ஆனாலும், உறக்கம் வரவில்லை. கண்களை இறுக மூடி அவர் தூங்க முற்படும்போதெல்லாம் தூக்கத்தைக் கெடுக்கும் விதமாக ஒரு ஹிம்சை.

மகா பெரியவா என்கிற பரப்பிரம்மம் அருகே உறங்கிக் கொண்டிருக்கும்போது யார் இவரை ஹிம்சை செய்து விட முடியும்?

வேறு யார்? கொசுக்கள்தான்!

உள்ளூர் அன்பரைத் தூங்க விடாதபடி கொசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக விர் விர்ரென்று பறந்து வந்து இவர் மேல் அமர்ந்தன. கொசுக்களை அப்புறப்படுத்தும் விதமாகக் கைகளை இடமும் வலமும் அசைத்துக் கொண்டே இருந்தார். கொசுக்கடியில் இருந்து மீள்வதற்கு அப்படியும் இப்படியுமாகப் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார். ஆனால், கொசு விட்டபாடில்லை.

கொசு மட்டும்தான் என்றாலாவது, அதை மட்டுமே இலக்கு வைத்து அப்புறப்படுத்த முயற்சிக்கலாம். ஆனால், மண்தரையில் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகளும், மாட்டுக் கொட்டகையே கதி என்று இருக்கும் சிறு சிறு பூச்சிகளும் இவரை விடாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தன.

ஆனால், பக்கத்தில் மகானோ எந்தவிதமான சலனமும் இன்றி எந்த பொஸிஷனில் படுத்தாரோ, அதே பொஸிஷனில் அசைவே இல்லாமல் நன்றாகவே உறங்கிக் கொண்டிருந்தார். அவரது விழிகள் மூடிய நிலையில் காணப்பட்டன.

கொசுக்கடி மற்றும் எறும்புக்கடியில் சிக்கிய உள்ளூர் பிரமுகரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. தூக்கமும் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்

திடீரென்று அவர் மனதில் ஒரு எண்ணம்… ‘இந்தக் கொசுவும் எறும்பும் நம்மை இந்தப் பாடு படுத்துகிறதேமகான் அருகே செல்லவில்லையா? மகானைக் கடிக்கவில்லையா? அல்லது மகான் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாரா? இந்த சிந்தனையுடன் உறங்கிக் கொண்டிருந்த மகானை ஒருவித ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அடுத்த கணம், “டேய்ய்.. என்ற குரல்.

திடுக்கிட்டுச் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தார். யாருமில்லை. மகான் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார். ‘வேறு யார் இப்படி உரிமையுடன் நம்மை அழைக்க முடியும்? என்று குழம்பினார்.

கொட்டகையில் அந்தப் பக்கம் பார்த்துப் படுத்துக் கொண்டிருந்த மகா பெரியவா புரண்டு படுத்து, உள்ளூர் அன்பரைப் பார்த்துப் புன்னகைத்தார். “டேய்ய்னு உன்னைக் கூப்பிட்டது நான்தான் என்றார் சன்னமாக.

விருட்டென்று எழுந்து உட்கார்ந்தார் உள்ளூர் அன்பர்.

எழுந்து நின்றார். பரப்பிரம்ம சொரூபத்துக்கு அந்த நள்ளிரவிலும் நமஸ்காரம் செய்தார். “பெரியவா என்று பவ்யமாக நின்றார்.

பெரியவாளும் எழுந்து உட்கார்ந்தார். “உட்கார் என்று உள்ளூர் அன்பரைப் பார்த்துச் சொன்னார். உட்கார்ந்தார்.

அவரை நேருக்கு நேர் பார்த்து, “என்னடாகொசுவும் எறும்பும் கடிக்கிறதா? என்று கேட்டார்.

வலக்கையால் முதுகுப் பக்கம் லேசாக சொறிந்தவாறே, “ஆமாம் பெரியவா.. என்றார் தயக்கத்துடன்.

ம்ம்ம்… ‘பெரியவா மட்டும் இந்தக் கடிலேர்ந்து எப்படித் தப்பிச்சுத் தூங்கறார்?னு நினைச்சியோ?

பெரியவா கேட்ட கேள்வியைக் கேட்டுத் தலை குனிந்தார். ‘என்னடாதுமனசுல நினைச்சதை அப்படியே கேட்கிறார் என்று தடுமாறினார்.

என்னடாநினைச்சியா, இல்லியா? – ஒரு குறும் சிரிப்புடன் மீண்டும் கேட்டார் மகான்.

ஆமா பெரியவா என்றார் குரல் கம்ம.

பரவால்லஉன்னோட நினைப்பிலே எந்தத் தப்பும் இல்லைசொறசொறப்பான பாறாங்கல்லையும், பட்டு மெத்தையையும் ஒன்றாக பாவிக்கிற மனம் வர வேண்டும். மெத்தையோட சுகத்துக்கு மட்டும் உடம்பு பழகிட்டா, என்னிக்கானும் பாறாங்கல் மேல படுக்கிறப்ப இந்த உடம்பு படாத பாடு பட்டுடும்.

தவிர, நமக்கு எது வேணுமோ அதுல மட்டுமே கவனம் செலுத்தணும். ஒரு சந்தைக்குப் போறேஅங்கே பல விதமான இரைச்சல் சத்தம் இருந்துண்டே இருக்கும். என்னடாதுஇந்த இரைச்சல் சத்தத்துல நாம எதுக்கு வந்தோம்னு மறந்துட்டோமேனு குழம்பக் கூடாது. உனக்குத் தேவையானதை வாங்கறதுல மட்டுமே குறியா இருக்கணும்.

ஒரு மதிய நேரத்துல பொட்டவெளில நடந்து போயிண்டிருக்கேஉச்சி வெயில் வேளைசூரியன் தலைக்கு மேலே சுட்டெரிச்சுண்டிருக்கான். உனக்கோ திடீர்னு அசதிகொஞ்ச நேரம் தூங்கலாம்னு தோண்றது. படுக்கறதுக்கு இடம் தேடிண்டு இருக்கே. பொட்டவெளில குடிசையா இருக்கும்? ஒரு பாறை தென்படறதுஒரு ஆசாமி படுத்துக்கறதுக்குத் தோதா அந்தப் பாறை நீளமாவும் அகலமாவும் இருக்கு. சட்டுன்னு ஏறிப் படுத்துடணும். பாறை சுடுமேனு நினைச்சா உனக்குத் தூக்கம் வராது. வஸ்திரத்தை விரிச்சுட்டு தூக்கத்தை மட்டுமே நீ நினைச்சுக்கணும். பாறை சூடு தெரியாமலே போயிடும்.

உன்னோட இந்திரியங்கள் என்ன சொல்றதோ, நீ அதைக் கேட்டுண்டு நடக்கறே. இந்திரியங்களை உன்னோட கட்டுக்குள்ள கொண்டு வா. அதுக்கு நீ என்னிக்கும் அடிமை ஆயிடாதே

நள்ளிரவில் விஷ்ணுபுரம் அன்பருக்கு மகா பெரியவா வழங்கிய உபதேசம் இது.

மகானின் நீளமான உபதேசத்தை நள்ளிரவில் செவி மடுத்தவரின் கண்கள் கலங்கின. ‘எப்பேர்ப்பட்ட உபதேசம் நம் ஒருவனுக்கு மட்டும் கிடைத்திருக்கிறதுஇந்த உபதேசம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன் அருகே என்னை இன்று தங்க வைத்துக் கொண்டாரா? என்று மெய் சிலிர்த்தவர், எழுந்து நமஸ்காரம் செய்தார்.

அவரை ஆசிர்வதித்தவர், “பரவாயில்லைநீ உன் அகத்துக்குப் போய்ப் படுத்துத் தூங்கு. நாளைக்கு உனக்கு வேலையும் நிறைய இருக்கும் என்று கனிவுடன் சொல்லி, உள்ளூர் அன்பரை அந்த நள்ளிரவில் அவரது இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

அதாவது, விஷ்ணுபுரம் அன்பர் அன்றைய தினம் இரவு இருந்தது, மகா பெரியவாளுக்கு அருகே! ஒரு கொட்டகையில்!

பரப்பிரம்மத்தின் உத்தரவின்பேரில் அவருக்கு அருகே தங்குகிற பேறு கிடைத்திருந்தும், அந்த நடமாடும் தெய்வத்தின் சிந்தனை இல்லாமல் இருந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சர்வலோக நாயகனே அருகில் பிரத்யட்சமாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்றபோது கொசுக்கடியும் எறும்புக்கடியும் என்ன செய்து விட முடியும்? மகான் மேல் ஏன் இவரது சிந்தனை செல்லவில்லை. மகான் மேல் பரிபூரணமாக பக்தி கொண்டு அவரது நினைவுடன் இருந்தால் கொசுவையும் எறும்பையும் அந்த இடத்தில் இல்லாமலே செய்திருப்பாரே! இது ஏன் விஷ்ணுபுரம் அன்பருக்குத் தோன்றவில்லை?

எத்தனையோ பிரபலங்கள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் எல்லாம் காத்து நின்று பெரியவாளைத் தரிசித்துச் சென்றிருக்கிறார்கள். இதில் அரசியல் மற்றும் ஆன்மிகப் பிரபலங்களும் அடக்கம். ஆனால், விஷ்ணுபுரம் அன்பருக்கு லட்டு போல் இந்த வாய்ப்பு கிடைத்தது. நினைத்துப் பார்த்தால்கூட எவருக்குமே கிட்டாத ஒன்று!

அதை நினைத்து மனம் துள்ள வேண்டாமா? மகானுக்கு அருகிலேயே ஓர் இரவு முழுக்க தங்கி இருப்பதற்குஅருகிலேயே படுத்துக் கொள்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்று ஒருவர் பரவசப்படும்போது வேறு எதன் மீதாவது சிந்தனைதான் செல்லுமா?

இதைத்தான் நம்மூரில் சொல்வார்கள். ‘அருகிலேயே இருந்தால் அதன் அருமை தெரியாது.

பரப்பிரம்ம சொரூபம் பக்கத்தில் இருந்தும், அதன் அருமை தெரியாமல் இருந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிடைக்காத ஒரு விஷயம் எப்போது கிடைத்தாலும், அதை முழுவதுமாக அனுபவிக்கிற மனமும் சிந்தையும் வேண்டும்.

திருமலை திருப்பதி வேங்கடாசலபதியின் முன்னால் நின்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது வேறு எந்த சிந்தனையாவது வந்தால், பூரணமான பக்தி இல்லை என்றுதான் பொருள்.