மகா பெரியவா காலத்தில் எப்போதும் அவருடன் இருந்து கைங்கர்யம் செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிப்பந்திகள் உண்டு.
மகா பெரியவாளை ‘சர்வேஸ்வரன்‘ என்று வணங்கும் பக்த கோடிகள் இப்படிப்பட்ட சிப்பந்திகளை ‘சிவகணங்கள்‘ என்று வர்ணிப்பார்கள்.
மகானின் கண்ணசைவைக் கொண்டே காரியமாற்றுவார்கள் இந்த சிப்பந்திகள். ‘எள் என்றால் எண்ணெயாக இருக்க வேண்டும்‘ என்று சொல்வோமே… அந்த அளவுக்கு விவேகிகள்; சுறுசுறுப்பானவர்கள்; சாமர்த்தியசாலிகள். எப்போதும் மகானின் அருகே இருந்து காரியமாற்றக் கூடியவர்கள். அவர் தரக் கூடிய முக்கியமான உத்தரவுகளை எவரெவருக்குச் சேர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் சென்று பத்திரமாகச் சேர்க்கக் கூடியவர்கள்.
தவிர, காஞ்சி ஸ்ரீமடத்திலும், இன்ன பிற வெளியூர் முகாம்களிலும் தன்னார்வத் தொண்டராகப் பணி புரிவதற்கு விருப்பப்பட்டுப் பலரும் வருவார்கள். இதில் இளைஞர்களும் மாணவர்களும் அடக்கம்.
மகான் காஞ்சிபுரத்தில் கேம்ப் இருக்கின்ற காலத்திலும், அவர் வெளியூர்களில் முகாம் இருக்கின்ற காலத்திலும் தங்களது மகன்களை சர்வீஸ் புரிவதற்காக மடத்துக்கு அனுப்புவது அப்போதைய பெற்றோர்கள் வைத்திருந்த ஒரு வழக்கம் (இன்றைக்கும் இது ஓரளவுக்குத் தொடர்ந்து வருவது பாராட்டத் தக்கது).
காஞ்சி ஸ்ரீமடத்தில் மகா பெரியவா இருக்கின்ற சனி, ஞாயிறுகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது கூடுகின்ற கட்டுக்கடங்காத அன்பர்கள் கூட்டத்தை முறைப்படுத்தி, அவர்களுக்கு உதவுவதற்காக இந்த மாணவர்கள் ஸ்ரீமடத்து அதிகாரிகளால் பயன்படுத்தப்படுவார்கள்.
இத்தகைய மாணவர்கள் சனி, ஞாயிறு இரு நாட்களிலும் ஸ்ரீமடத்திலேயே ஸ்நானம் செய்து, உணவும் எடுத்து, அங்கேயே தங்கிக் கொள்வார்கள். ஞாயிறு மதியமோ, மாலையோ – அவரவரது படிப்பு வேலைக்கு ஏற்ப ஊருக்குப் புறப்படுவார்கள். கிளம்புகிற வேளையில் மகானைத் தரிசித்து ஆசி பெற்றுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்படுவார்கள்.
சென்னை திருவல்லிக்கேணியில் தன் குடும்பத்தோடு வசித்து வந்த சிறுவன் கே.ஆர். சுப்ரமணியன். இவனது குடும்பமே மகா பெரியவா பக்தியில் இருந்தது. அப்போது அவன் ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தான்.
இது 1970-களில் நடந்தது. அப்போது வந்த ஒரு சனி, ஞாயிற்றுக்கிழமையில் சுப்ரமண்யனைக் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்கு சேவை புரிய அனுப்பத் தீர்மானித்தார்கள் பெற்றோர். சுப்ரமண்யனுக்கும் இது பிடித்திருந்தது.
எனவே, சனிக்கிழமை காலை வேளையில் மவுண்ட் ரோடு எல்.ஐ.சி. அருகே காஞ்சி செல்லும் ஒரு பேருந்தில் அவனை மட்டும் ஏற்றி அனுப்பினார்கள். நாலுமுழ வேட்டி அணிந்து, மேலுக்கு ஒரு சட்டையும் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு துண்டும் கைவசம் வைத்திருந்தான்.
அப்போதெல்லாம் சென்னை பிராட்வேயில் இருந்துதான் வெளியூர்களுக்குப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும். காஞ்சிபுரம் செல்கிற பேருந்து பிராட்வேயில் புறப்பட்டு மவுண்ட் ரோடு எல்.ஐ.சி., டி.வி.எஸ்., தேனாம்பேட்டை, கிண்டி வழியாக பூந்தமல்லி போய் காஞ்சி செல்லும்.
குடும்பமே மகா பெரியவா மீது பல ஆண்டுகளாக பக்தி கொண்டிந்த காரணத்தால், இவனுக்கும் அந்த மகான் மீது அதீதமான பற்றுதல் இருந்தது. குடும்பத்தினரோடு சில முறை மகானை தரிசித்திருக்கிறான்.
காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வருகிற பக்தர்களுக்கு சேவை புரிகிற சாக்கில் மகானையும் அவ்வப்போது அருகே நின்று தரிசிக்கலாம் என்கிற ஆசையும் சேர… இதோ, காஞ்சிக்குப் பேருந்தில் பயணப்பட்டு விட்டான்.
காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தை சுப்ரமண்யன் அடைந்தவுடன் கைகால்களைக் கழுவிக் கொண்டு, நெற்றியில் விபூதி பூசிக் கொண்டான். பிறகு அங்கிருந்த மேனேஜரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவனது குடும்பத்தினர்கள் ஸ்ரீமடத்தோடு ஏற்கெனவே தொடர்பில் இருக்கின்ற காரணத்தால் அவனுக்கு ஒரு பணியைக் கொடுத்து ஒரு சில அறிவுரைகளையும் வழங்கினார் மேனேஜர்.
சனிக்கிழமை பொழுது மிக நன்றாகவே போயிற்று சுப்ரமண்யனுக்கு. அன்றிரவு அங்கேயே கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் ஞாயிறு அதிகாலை எழுந்து ஸ்நானம் செய்து, வேட்டியும் துண்டும் அணிந்து தன் பணியில் இறங்கி விட்டான்.
அன்றைக்கு மதியம் சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிந்ததும் பெரியவா தரிசனத்துக்குப் பின் ஊருக்கு (திருவல்லிக்கேணி) திரும்பி விடலாம் என்று தீர்மானித்தான். காரணம், அது தேர்வுக் காலம் என்பதால்.
ஞாயிறன்று பக்தர்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது. என்றாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகக் கச்சிதமாக முடித்திருந்தான் சுப்ரமண்யன்.
மகா பெரியவா சந்திரமௌளீஸ்வரர் பூஜையை பூர்த்தி செய்தார். பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். தனது பிட்சையையும் முடித்தார்.
தனது தரிசனம் வேண்டிக் காத்திருக்கிற பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்பதற்காக எப்போதும் தான் அமரும் மரத்தடி அருகே வந்தார். அமர்ந்தார்.
மகான் தரிசனம் தர வரப் போகிறார் என்பது தெரிந்த பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.
மகா பெரியவா அமர்ந்திருந்த இடத்துக்கு அருகேதான் சுப்ரமண்யனும் நின்று கொண்டிருந்தான். புறப்படுவதற்குத் தயாராக இருந்தான். அதற்கு முன்னால் அவரிடம் ஆசி பெற வேண்டும். அதற்காகக் காத்திருந்தான்.
மகானின் பார்வை அத்யந்த பக்த குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரமண்யன் மீது விழுந்தது.
ஜாடை காண்பித்து அவனை அருகே வரவழைத்தார். உற்சாகமாக ஓடி வந்தான். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.
வலக்கை உயர்த்தி, சுப்ரமண்யனை ஆசிர்வதித்தவர், “ஆகாரம் ஆச்சா?” என்று ஜாடையும் கலந்து கேட்டார்.
“ஆச்சு பெரியவா” என்றான்.
“பொறப்படறியா ஆத்துக்கு?”
“ஆமாம் பெரியவா…”
ஒரு வாழைப்பழம் எடுத்தார். அவனிடம் கொடுத்தார். “இது உனக்கு” என்றார் பெரியவா. உற்சாகமாக வாங்கிக் கொண்டான். மகானுடைய பிரசாதம்!
அடுத்து மகா பெரியவா எதையோ தேடினார்.
ஒரு சில விநாடிகள் அவர் தேடுவது சுப்ரமண்யனுக்கு மட்டுமல்ல… அங்கே கூடி இருந்த அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸை ஏற்படுத்தியது.
மகானைத் தரிசிக்க வருகிற குழந்தைகளுக்கும் சிறுவ – சிறுமிகளுக்கும் கல்கண்டு, திராட்சை, முந்திரி, வாழைப்பழம் போன்றவற்றை பிரசாதமாகக் கொடுப்பது வழக்கம்.
அப்போதெல்லாம் சாக்லெட் இத்யாதிகள் அவ்வளவாகப் புழக்கத்தில் கிடையாது. எனவே, சிறார்களுக்கு மகா பெரியவா தரக் கூடிய இந்தப் பிரசாதத்தை வெகுவாகவே ரசித்துச் சாப்பிடுவார்கள். இதைச் சொல்லியே வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளை ஸ்ரீமடத்துக்கு அழைத்து வருவார்கள்.
கிராமங்களில் வாழைப்பழம், வாழைக்காய், வாழையிலை, வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை விலைக்கு விற்க மாட்டார்கள். யாராவது கேட்டால் இலவசமாகவே தருவார்கள். அல்லது கொல்லைக்குப் போய் அறுத்துக் கொண்டு போகச் சொல்வார்கள். அதெல்லாம் ஒரு காலம்.
இப்போது என்னடாவென்றால் மாவிலை, எருக்க இலை, அருகம்புல், ஈச்சம்பூ எல்லாமே விற்பனைக்கு!
வாழைப்பழம் பிரசாதமாகப் பெற்றுக் கொண்ட பின், பெரியவாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்தான் சுப்ரமணியன். பிரசாதம் தந்த பின்னும் சிறுவனை ஸ்ரீமடத்தில் இருந்து அனுப்பவில்லை மகா பெரியவா. அவனை சற்று நேரம் காத்திருக்குமாறு சைகை காண்பித்து விட்டு, தான் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தார் மகான்.
தனக்கு இன்னொரு பிரசாதமும் தரப் போகிறார் போலிருக்கிறது என்று சுப்ரமணியனும் ஆர்வத்துடன் இருந்தான். விழிகளைக் கூட இமைக்க மறந்து அந்தப் பரப்பிரம்மத்தையே உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
கூடி இருக்கிற ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் இந்தக் காட்சிகளை பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. சிறுவன் சுப்ரமணியனுக்கு அடுத்துக் கொடுப்பதற்கு அப்படி மகா பெரியவா எதைத்தான் தேடுகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்குமே இருந்தது.
ஒரு சில விநாடிகள் கழித்து ஏதோ ஒரு பொருளை அடையாளம் கண்டுகொண்ட மகா பெரியவா முகம் மலர்ந்தார். தன் உடலைக் கொஞ்சமும் நகர்த்தாமல் கையை மட்டும் சற்று நீட்டி – தள்ளி இருக்கிற ஒரு மாம்பழத்தை எடுத்தார்.
அந்த மாம்பழத்தைப் பார்த்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள்.
காரணம் – அதன் அளவு.
சாதாரணமான ஒரு மாம்பழம் என்றால், அதை உள்ளங்கைக்குள் அடக்கி விடலாம். ஆனால், இந்த மாம்பழம் அளவில் மிகப் பெரியதாகக் காணப்பட்டது. ஒரு பெரிய பப்பாளிப் பழம் எப்படி இருக்குமோ, அதுபோல் இருந்தது.
அந்தப் பெரிய மாம்பழத்தை ஒரு சில விநாடிகள் தன் கையில் வைத்திருந்து கண் மூடி ஜபித்து விட்டு, சிறுவன் சுப்ரமணியனிடம் கொடுத்தார் மகா பெரியவா.
சிறுவனுக்குப் பேரானந்தம் தாங்க முடியவில்லை. தனக்கென்று இத்தனை பெரிய ஒரு மாம்பழத்தை பெரியவா தேடித் தந்திருக்கிறாரே என்று.
இவன் நினைத்ததைப் போலவே அங்கு கூடி இருந்த பக்தர்கள் கூட்டமும் அதிசயித்தது – ‘இத்தனை அதிர்ஷ்டக்காரனா இவன்?‘ என்று.
ஆனால், இந்த மகிழ்ச்சி ஒரு சில விநாடிகள்கூட நீடிக்கவில்லை சுப்ரமணியனுக்கு. தன் வலக்கை விரலால் ஒரு சொடக்குப் போட்டு சுப்ரமணியனைத் தன் பக்கம் திருப்பினார். பிறகு, “இப்ப உன்கிட்ட ஒரு மாம்பழம் குடுத்தேனே… அது உனக்கில்லை. அதைப் பத்திரமா வெச்சுக்கோ” என்றார் காஞ்சி மகான்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட மறுகணம், காற்றிழந்த பலூன் போல் ஆனான். இருந்தாலும், ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அப்படியே ஆகட்டும் பெரியவா‘ என்பதாகத் தலையை அசைத்தான்.
ஏமாற்றத்தை மட்டும் எத்தனை வயதானாலும் தாங்கிக் கொள்ள இயலாது. குழந்தையில் இருந்து பெரியவர் வரைக்கும் வயது என்பது இதற்கு விதிவிலக்கே கிடையாது.
தன்னிடம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கக் கூடிய ஒரு பொருளைத் தான் அனுபவிக்கக் கூடாது என்கிற கட்டளையை எவரிடம் இருந்து எப்போது கேட்டாலும் மனம் சுரத்திழந்து விடுகிறது… அதன் பின் குறிப்பிட்ட அந்தப் பொருள் மீது கவனம் திரும்பவே திரும்பாது.
எனவே, எத்தனை பெரிய மாம்பழமாக இருந்தாலும், அது தனக்கில்லை என்பதில் தெளிவானான் சுப்ரமணியன்.
ஆனாலும், அவனுக்கு ஒரு சந்தேகம்… அதாவது, தனக்கில்லை என்றால் இது யாருக்கு என்று சொல்ல வேண்டும் அல்லவா? பெரியவா இதுவரை சொல்லவில்லையே!
சென்னையில் யாரிடமேனும் கொடுக்க வேண்டுமா? அப்படியானால் அவர் எங்கே இருக்கிறார், முகவரி என்ன என்று மகா பெரியவா நம்மிடம் எதுவும் சொல்லவில்லையே? – இந்த யோசனையுடன் அவரது திருமுகத்தையே பார்த்தான்.
சிறுவனது உள்ளக் குறிப்பை அறியாதவரா? மகான் திருவாய் மலர்ந்தார்: “நீ ஊருக்குப் பொறப்படு. ஞாபகம் வெச்சுக்கோ… இது உனக்கான பழம் இல்லே. பத்திரம். ஒரு மேல்துண்டு கொண்டு வந்திருக்கே இல்லியா… அதுல இந்தப் பழத்தை வெச்சு சுருட்டி மடிச்சு வெச்சுக்கோ.”
– தன் வலக்கையை உயர்த்தி ஆசிர்வதித்து அனுப்பினார் சுப்ரமணியனை.
சுப்ரமணியன் புரிந்து கொண்டான். யாருக்கு இந்த மாம்பழம் என்று மகா பெரியவா சொல்லவில்லை. ஒருவேளை அது போகப் போகத்தான் புரியும் போலிருக்கிறது என்று ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தான்.
மாம்பழத்தை மேல்துண்டில் முடிந்து கொண்டு அந்தத் துண்டை இடுப்பில் நன்றாக இறுகக் கட்டியபடி காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தை நோக்கி நடந்தான்.
வீட்டில் கொடுத்த சில்லறைக் காசுகள் கைவசம் இருக்கின்றன. டிக்கெட் வாங்குவதற்குப் போதுமானவை. காலியாக இருந்த பஸ்ஸில் ஏறினான். ஜன்னல் ஓர இருக்கையாகப் பார்த்து அமர்ந்தான்.
பேருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது. இன்னமும் சில இருக்கைகள் காலியாகவே இருந்தன.
காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கிண்டி தாண்டிப் பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து.
‘ஆயிற்று… இன்னும் சிறிது நேரத்தில் மவுண்ட் ரோட்டில் எல்.ஐ.சி. நிறுத்தம் அருகே இறங்கிக் கொள்ளப் போகிறோம்… வீட்டுக்குச் செல்லப் போகிறோம்… ஆனால், மடியில் இந்த ‘கனம்‘ அப்படியே இருக்கிறதே… மாம்பழம் யாருக்கு? எதற்கு பெரியவா என்னிடம் கொடுத்தார்?‘ – யோசித்துக் கொண்டே கடந்து செல்லும் பாதையை வேடிக்கை பார்த்தான் சுப்ரமணியன்.
நந்தனம் பகுதிக்குள் நுழைந்தது பேருந்து. தற்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைந்திருக்கிறது அல்லவா… அந்த நான்கு சாலை சந்திப்பை பேருந்து நெருங்கிக் கொண்டிருந்தது.
வேகமாகப் போய்க் கொண்டிருந்த பேருந்து திடீரென வேகம் குறைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது.
பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த பயணிகள், ‘திடீர் வேகக் குறைவுக்கு என்ன காரணம்?‘ என்று நாலாப் பக்கமும் தலையைத் திருப்பிப் பார்த்தார்கள்.
தற்போது நந்தனம் சிக்னல் இருக்கும் இடம் அருகே நெருங்கியபோது பேருந்து அதற்கு மேல் நகராமல் அப்படியே நின்று விட்டது. அசைவே இல்லை.
அந்தப் பகுதியில் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். எப்போதும் இல்லாத அளவுக்கு நிறைய போலீஸார் தென்பட்டனர்.
நந்தனம் சிக்னல் பகுதியில் இருந்து பேருந்து மற்றும் இதர வாகனங்கள் நேராக மவுண்ட் ரோட்டில் செல்வதற்கு அனுமதி இல்லை. என்ன காரணம், தெரியவில்லை.
டி.வி.எஸ்., எல்.ஐ.சி. வழியே செல்லும் அனைத்து வாகனங்களையும் வலப்பக்கம் மந்தவெளி செல்லும் சாலையில் திசை மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தனர் போலீஸார்.
சுப்ரமணியன் வந்து கொண்டிருந்த பஸ்ஸும், இதைத் தொடர்ந்து வந்த இன்ன பிற வாகனங்களும் வலப்பக்கம் மந்தவெளி செல்லும் சாலையில் பயணிக்க ஆரம்பித்தன.
பேருந்துக்குள் இருந்தவர்களுக்குக் குழப்பம். அவர்களில் பெரும்பாலானோர் டி.வி.எஸ். மற்றும் எல்.ஐ.சி. போன்ற நிறுத்தங்களில் இறங்க வேண்டியவர்கள். மந்தவெளி வழியே செல்லும் பேருந்து மீண்டும் மவுண்ட் ரோட்டைத் தொட்டு விடுமா… நாம் போக வேண்டிய இடத்துக்கு சுலபமாகச் சென்று விட முடியுமா என்று அவர்களுக்குள் யோசனை.
எந்த விதமான தடையும் இல்லாமல் பயணித்த பேருந்து அடுத்து மந்தவெளியை நெருங்குகிறபோது சிறிய பாலத்தின் முன்னால் மீண்டும் வேகம் குறைந்தது.
பயணிகளுக்கு மீண்டும் அச்சம். அடுத்து என்ன ஆகப் போகிறதோ? இருக்கையில் அமர்ந்தபடியே எல்லோரும் பஸ்ஸுக்கு முன்னால் பார்வையை செலுத்தினார்கள். இதற்கு முன்னால் மேலும் சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
சாலையின் இரு பக்கமும் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம். வேத பாராயணம். நாகஸ்வர – மேள முழக்கம். ஒரே பக்திமயம்.
‘என்னது… சங்கர கோஷம் கேட்கிறது… மகா பெரியவா வந்து விட்டாரா? அவர் காஞ்சிபுரத்தில் அல்லவா இருக்கிறார்… அங்கிருந்து இத்தனை சீக்கிரத்தில் எப்படி வர முடியும்… சரி, மகா பெரியவா இல்லாவிட்டால், இந்த சங்கர கோஷம் யாருக்கு? இங்கே என்ன விசேஷம்?‘ – குழம்பினான் சுப்ரமணியன்.
‘ஏதோ ஸ்வாமி ஊர்வலம் வரப் போகிறது போலிருக்கு‘ என்று பஸ்ஸுக்குள் இருந்த ஒரு சிலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். இன்னும் சிலர் ‘இதென்னடா சோதனை‘ என்று கவலை ஆனார்கள்.
சுப்ரமணியன் எட்டிப் பார்த்தான். சாலையின் இரு மருங்கும் பக்தர்கள் வெள்ளம்.
பலரும் வேஷ்டி, புடவை என்று பாரம்பரிய உடையில் காணப்பட்டனர். மிகவும் கட்டுப்பாடாகக் காணப்பட்டது கூட்டம்.
பிரமாண்டமாகத் திரண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்ததும், ‘பஸ் இனிமே நகராது போலிருக்கு… மெள்ள இறங்கி இங்கே வேடிக்கைப் பாத்துட்டு வீட்டுக்கு நடந்து போயிடலாம்‘ என்று பலரும் இறங்க ஆரம்பித்தார்கள்.
சுப்ரமணியனுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. அவனும் பேருந்தில் இருந்து இறங்கினான்.
யாருக்கோ மகா பெரியவா கொடுத்து அனுப்பிய மாம்பழம் மடியில் அப்படியே இருந்தது.
ரொம்ப நேரம் கழித்துக் கீழிறங்கியதால், அதன் கனத்தை உணர முடிந்தது. ‘யாருக்கான மாம்பழமோ… இன்னும் சற்று நேரத்தில் வீட்டுக்குப் போகப் போகிறோமே‘ என்று நினைத்தான்.
சாலையின் ஓரத்தில் நின்றிருந்த ஒருவரை நெருங்கி, சுப்ரமணியன் கேட்டான்: “இங்கே என்ன விசேஷம்?”
சிறுவனை மேலும் கீழும் பார்த்த அவர் கேட்டார்: “என்னப்பா… ஒனக்கு விஷயம் தெரியாதா?”
“தெரியாது சார்… நான் இப்பதான் இந்த இடத்துக்கு வரேன்… எதோ நல்ல விஷயம் நடக்கப் போறதுன்னு புரிஞ்சுண்டுட்டேன்” என்றான் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.
“சிருங்கேரி பெரியவா இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வரப் போறார். இங்கே மடத்துல தங்கி பூஜை பண்ணப் போறார். பெரியவாளை தரிசிக்கணும்னு சிருங்கேரி பக்தாள்லாம் இங்கே ரொம்ப நேரமா காத்திண்டிருக்கா” என்றார் பரவசத்துடன்.
காஞ்சி பீடம் போல் சிருங்கேரியும் ஒரு பீடம் என்பதை அறியாத வயது சுப்ரமணியனுக்கு. காரணம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் அவனுக்கு அமையவில்லை.
இன்னும் சொல்லப்போனால், ‘சிருங்கேரி‘ என்கிற வார்த்தையையே அப்போதுதான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறான்.
மெள்ள சமாளித்துக் கொண்டு, “அப்படியா… சுவாமிகள் வந்திண்டு இருக்காரா?” என்று இரு கரங்களையும் மென்மையாகக் குவித்துக் கேட்ட சுப்ரமணியன், சாலையின் ஒரு பக்கம் சற்றே தலையைத் திருப்பி எட்டிப் பார்த்தான்.
கூடி இருந்த பக்தர்களின் பார்வை முழுக்க அந்தத் திசையையே கவனித்துக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டான்.
ஆக, இந்த வழியேதான் சிருங்கேரி ஆச்சார்யர் வரப் போகிறார் போலிருக்கிறது என்று மடியில் கனத்தோடு காத்திருக்க ஆரம்பித்தான். மேல் துண்டால் மூடப்பட்ட மாம்பழம் வேறு அவனது அசைவுகளுக்கு இடைஞ்சலாக இருந்தது. என்றாலும், அதைப் பக்தியுடன் பாதுகாத்து வந்தான். மகா பெரியவா அருளிய பிரசாதமாயிற்றே!
இடுப்பில் இருந்து அது சற்றும் நழுவி விடாமல், வேறு எவர் கண்களிலும் பட்டு விடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான். அவ்வப்போது இடுப்பில் கைவைத்து பழம் இருப்பதை உறுதி செய்து கொண்டான். மகா பெரியவா உத்தரவாயிற்றே! யாருக்குப் போய்ச் சேரப் போகிறதோ… இந்த விநாடி வரை ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
‘இத்தனை கூட்டத்தில் இன்னும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டுமோ… சிருங்கேரி ஆச்சார்யர் வந்து விடுவாரா? அவரைத் தரிசித்து விட்டு வீட்டுக்குப் போகலாமா? அல்லது இப்பவே வீட்டுக்குக் கிளம்பிப் போய் விடலாமா?‘ என்கிற ஒரு கேள்வி அவன் மனதுள் திடீரென எழும்பியது.
ஒரு சில விநாடிகள்தான் இந்த சிந்தனை. ஆனால், அடுத்த கணம் தெளிவானான் சுப்ரமணியன். ‘இங்கே இத்தனை பேர் ஆச்சார்யர் தரிசனத்துக்காக எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ… எனக்கு என்ன அவசரம்… இப்போதுதானே வந்து சேர்ந்தேன்… சற்று நேரம் காத்திருந்து பார்த்து விட்டுத்தான் போவோமே… இதைவிட என்ன பெரிய ஜோலி…‘ என்று சமாதானமானான்.
அனைவரது விழிகளும் சாலையின் ஒரு முனையையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. சுப்ரமணியனும் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றிருந்தான்.
ஒரு சில நிமிடங்கள் கடந்திருக்கும்.
கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீர் பரபரப்பு.
படகு போன்ற இரு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஜன சமுத்திரத்துக்குள் மெள்ள நீந்தி வந்தன.
இந்த கார்களை நோக்கி பக்தர்கள் பாய்ந்து வருவதைக் கண்ட தன்னார்வத் தொண்டர்கள், இரு புறமும் இருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
பக்தர்களின் ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷம் விண்ணை எட்டியது என்றே சொல்லலாம்.
ஆச்சார்யர்கள் வந்ததும், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவைப் பார்த்து மிரண்டான் சுப்ரமணியன். பின்னர், ‘தள்ளி நின்றாவது இந்த சிருங்கேரி ஆச்சார்யரைத் தரிசித்து விட வேண்டும்‘ என்று தீர்மானித்தான்.
தான் நின்றிருந்த இடத்தில் இருந்து கொண்டு எட்டி எட்டிப் பார்த்தாலும் ஆச்சார்யர் கண்களுக்குத் தெரிய மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, தனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு சில பக்தர்களை நைச்சியமாகத் தள்ளியபடி மெள்ள முன்னுக்கு வந்தான்.
‘இத்தனை பேர் கூடி இருக்கிற இடத்தில் அவரது ஆசிகள் நமக்குக் கிடைக்குமா என்பது தெரியாது. இருந்தாலும், எட்ட நின்றே தரிசித்து விட்டுப் போய் விடுவோம்‘ என்று ஆச்சார்யர் திருமுகம் தனக்குத் தெரியும்படியான ஓர் இடத்தில் நெளிந்தபடி நின்றான். அங்கும் கூட்டம் அவனை நெருக்கித் தள்ளியபடிதான் இருந்தது.
முதலில் வந்து நின்ற காரில் இருந்து சிருங்கேரி பீடத்தின் 34-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகர பாரதி மகா ஸ்வாமிகள் இறங்கினார். அடுத்து வந்த காரில் இருந்து இதே பீடத்தின் அடுத்த ஆச்சார்யர் இறங்கினார்.
சிருங்கேரி ஆச்சார்யரான சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளும் காஞ்சி பீடத்தின் ஆச்சார்யரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவாளும் ஒரே காலத்தில் தங்கள் பீடங்களை அலங்கரித்தவர்கள். இருவரும் தங்கள் காலத்தில் எண்ணற்ற இறைத் தொண்டு புரிந்தவர்கள். யாத்திரைகளை மேற்கொண்டவர்கள்.
சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் கீழே இறங்கியதும், வேத விற்பன்னர்கள் சூழ அவருக்குப் பூர்ணகும்ப வரவேற்பு கொடுக்கப்பட்டது. வேத கோஷங்கள் ஒலித்தன. மேள தாளங்கள் முழங்கின. வேட்டுக்கள் அதிர்ந்தன.
மடிசார் உடுத்தி இருந்த பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்வாமிகளுக்கு ஆரத்தி எடுத்தனர். நமஸ்காரம் செய்தனர். வலது திருக்கரம் உயர்த்தி இவர்களை ஆசிர்வதித்தார்.
அனைவரது வரவேற்பையும் ஏற்றுக் கொண்டு தன் திருப்பாதங்களை மெள்ள பூமியில் பதித்து, சாலையின் இரு மருங்கும் கூடி இருந்த பக்தர்களைப் பார்த்துப் புன்னகையுடன் ஆசிர்வதித்தவாறே நடந்தார் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். அவரைத் தொடர்ந்து அடுத்த ஆச்சார்யரும் வந்து கொண்டிருந்தார்.
பக்தர்கள் தங்கள் இரு கரம் கூப்பி பரவசம் மேலோங்க மகானை வணங்கினர். இத்தனை அருகில் இந்த ஆச்சார்யரைத் தரிசிக்கிற பேறு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று புளகாங்கிதப்பட்டனர்.
மெள்ள நடை போட்டு வந்த சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், சுப்ரமணியன் நின்றிருந்த இடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிக் கொண்டிருந்தார்.
சுப்ரமணியனுக்குள்ளும் ஒரு பரபரப்பு. ‘ஆச்சார்யர் நம்மைக் கடந்து செல்கிறபோது அவரை எப்படியேனும் தரிசித்து விட வேண்டும்‘ என்று நெக்கித் தள்ளுகிற கூட்டத்தில் உறுதியாக இருக்க முற்பட்டான்.
இதோ, சிருங்கேரி ஆச்சார்யர் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள், சுப்ரமணியன் இருக்கும் இடத்தை நெருங்கியே விட்டார். சிறுவனைச் சுற்றி நின்றிருந்த அனைவரும் மிக லாகவமாக அவனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, ஆச்சார்யரை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென தான் பின்னுக்குத் தள்ளப்பட்டதில் நிலை குலைந்த சுப்ரமணியன் முட்டி மோதி முன்னுக்கு வர முற்பட்டான். இத்தனை கூட்டத்திலும், தள்ளுமுள்ளுவிலும் இடுப்பில் அந்த மாம்பழம் மட்டும் பத்திரமாக இருந்தது.
பக்தர்கள் வெள்ளத்தின் இடையே நடந்து வந்து கொண்டிருந்த சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் திடீரென ஓரிடத்தில் அப்படியே நின்றார்.
ஸ்வாமிகள் சட்டென்று அப்படியே நின்றதைப் பார்த்த அவரது சிஷ்யர்களும் பாதுகாவலர்களும் உடனடியாக அவரைச் சுற்றி ஒரு வளையம் அமைத்தனர். ஸ்வாமிகளை பிறர் நெருங்கி விடாதவாறு காவல் புரிந்தனர்.
பக்தர்கள் சற்றுத் தள்ளி நின்று கைகூப்பி வணங்கிய நிலையில் காணப்பட்டனர்.
கூட்டத்தில் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்ட சுப்ரமணியனை சந்திரசேகர பாரதி ஸ்வாமிகளின் திருக்கண்கள் தேடின. ஒரு கட்டத்தில் தலையை மட்டும் சற்றே உயர்த்தி ஸ்வாமிகளைப் பார்த்துக் கைகூப்பினான் அவன். ஸ்வாமிகள் அவனை ஏறெடுத்துப் பார்த்தார்.
ஆனால், மகான் தன்னைத்தான் பார்க்கிறார் என்பது சுப்ரமணியனுக்கு அப்போது தெரியவில்லை.
ஆச்சார்யர் தன் வலக்கையை உயர்த்தி ஜாடை காண்பித்து சுப்ரமணியனை அருகே வரச் சொன்னார். உடன் இருந்த சிருங்கேரி மடத்துச் சிப்பந்திகளும் ஆச்சார்யர் அடையாளம் காண்பித்த சுப்ரமணியனை நெருங்கி, மெள்ள அவனை அருகே வரச் சொன்னார்கள்.
சுப்ரமணியனின் கண்கள் கலங்கி விட்டன. இத்தனை சிருங்கேரி பக்தர்கள் கெஞ்சும் விழிகளுடன் கூடி இருக்கிற இடத்தில், காஞ்சி பீடத்தின் குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு இப்படி ஒரு விசேஷ அழைப்பா?
இனம் புரியாத சந்தோஷம். சிருங்கேரி பீடத்தின் சிப்பந்திகள் உதவியுடன் ஸ்வாமிகளை மெள்ள நெருங்கினான்.
சிறுவனைக் கனிவுடன் உற்றுப் பார்த்தார் சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள். பிறகு அவனிடம், “நீ காஞ்சிபுரம் சங்கர மடத்துலேர்ந்துதானே வர்றே?” என்று கேட்டார்.
சுப்ரமணியனுக்குப் பேரதிர்ச்சி – ‘இவர் எப்படிக் கண்டுபிடித்தார் நான் காஞ்சிபுரத்தில் இருந்து நேராக இங்கே வருகிறேன்‘ என்று!
அவனுக்குள் ஏற்பட்ட வியப்பும் பிரமிப்பும் அடங்கவில்லை. ஸ்வாமிகளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். உதடுகளில் அசைவில்லை.
பதில் வரமால் இருக்கவே, மீண்டும் ஸ்வாமிகள் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.
‘ஆமாம்… ஆமாம்‘ என்று சொல்வதற்கு அவன் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. என்றாலும் தட்டுத் தடுமாறி தலையசைத்தான்.
அதன் பின், “உன் மடியில மகா பெரியவா எனக்குக் கொடுத்த பிரசாதம் வெச்சிண்டிருக்கியே… ஆம்ப்ர பலம் (சம்ஸ்கிருதத்தில் மாம்பழம்)… அதை என்கிட்ட குடு” என்றாரே, பார்க்கணும்!
சிருங்கேரி ஸ்வாமிகளின் வலது திருக்கரம் சுப்ரமணியனை நோக்கி நீண்ட வண்ணம் காணப்பட்டது.
‘மாம்பழம்‘ என்று சிருங்கேரி ஸ்வாமிகள் பேச ஆரம்பித்ததில் இருந்து சுப்ரமணியனுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.
இடுப்பில் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் மேல்துண்டு எவருக்குமே அவ்வளவு சுலபத்தில் தெரியாது.
துண்டுக்குள் சுற்றப்பட்டிருப்பது மாம்பழம் என்பதும் எவருக்கும் தெரியாது.
நான் காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறேன் என்பதும் எவருக்கும் தெரியாது.
இந்த நிலையில் எப்படி நம்மிடம் கேட்கிறார் இந்த மகான்? சிறுவன் சுப்ரமணியனுக்கு ஏற்பட்ட வியப்பு அடங்கவில்லை.
இவனுக்கு மட்டுமல்ல… அங்கே கூடி இருந்த அனைவரும் இந்தக் காட்சிகளைப் பார்த்துப் பிரமித்துப் போனார்கள்.
‘என்னது… விசித்திரமாக இருக்கிறது… சென்னைக்கு வந்திருக்கிற சிருங்கேரி ஸ்வாமிகளுக்குக் காஞ்சியில் இருந்து மகா பெரியவா பிரசாதம் அனுப்பி இருக்கிறாரா? அதுவும் இந்த சிறுவன் மூலமாகவா? அப்படியானால், சிருங்கேரி ஸ்வாமிகள் சற்று முன் கேட்டபடி இந்த சிறுவன் காஞ்சியில் இருந்து மாம்பழ பிரசாதம் கொண்டு வந்திருக்கிறானா?‘ என்று பலரும் அவனை ஆச்சரியத்துடன் மேலும் கீழும் பார்த்தனர்.
பிரமிப்புடன் எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது சுப்ரமணியனுக்கு ஒரு வெட்கத்தைக் கொடுத்தது. அவனையும் அறியாமல் வலக்கை இடுப்புக்கு அருகே போனது.
இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்த மேல்துண்டை அவிழ்த்தான். அதன் முடிச்சை விடுவித்து, பிரமாண்டமான மாம்பழத்தை எடுத்தான். அதைத் தன் வலக்கையில் வைத்துக் கொண்டு, சிருங்கேரி ஸ்வாமிகளை நோக்கி நீட்டினான்.
புன்னகையுடன் எதிரில் நின்று கொண்டிருந்த ஆச்சார்யர் தன் வலக்கரத்தால் அந்த மாம்பழத்தை எடுத்துக் கொண்டார். ஒரு சில விநாடிகள் அதைத் தீர்க்கமாக உற்றுப் பார்த்தார்.
பிறகு பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்து சற்றே உரக்கமாகவும் உற்சாகத்துடனும் சொன்னார்: “காஞ்சி மகா பெரியவா எனக்காக இந்த மாம்பழ பிரசாதத்தை இவன்கிட்ட குடுத்து அனுச்சிருக்கார். இந்தப் பையன் காஞ்சி மடத்துலேர்ந்து வந்திருக்கான்.”
பக்தர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர‘ கோஷத்தை முழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் ஆச்சரியங்களைப் பாருங்கள்…
யாருக்கு என்று சொல்லாமலேயே மாம்பழத்தைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார் காஞ்சி மகான்.
இத்தனை பேர் கூடி இருக்கிற கூட்டத்தில் இந்த சிறுவனைக் கண்டுபிடித்து, ‘இவன்தான் நமக்கான பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறான்‘ என்று அவனிடம் கேட்டுப் பெற்றிருக்கிறார் சிருங்கேரி மகான்.
இரண்டு மகான்களுக்கும் என்னே ஒரு ஞான திருஷ்டி.
ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, ‘இது உனக்கில்லை‘ என்று சொல்லி அனுப்பிய மகா பெரியவா, அது யாருக்கானது என்று சொல்லவில்லை. அது தெரியாமலேயே பயணித்து வந்தான் சுப்ரமணியன். ஆனால், சிருங்கேரி சந்நிதானத்துக்குத்தான் அனுப்பி இருக்கிறார் என்பது இப்போதுதான் புரிந்தது.
இந்தப் பிரசாதத்தை சிருங்கேரி ஸ்வாமிகளிடம் சேர்ப்பதற்குத்தான் எத்தனை திருவிளையாடல்கள்..!
எல்லாமே மனித மனங்களுக்குப் புரியாத லீலைகள்.
மாம்பழத்தைப் பெற்றுக் கொண்ட மகான், இந்தப் பிரசாதத்தைத் தனக்காக எடுத்து வந்த சுப்ரமணியனை அப்படியே விட்டு விடவில்லை. அவனை கவுரவிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
தன் கைப்பட முந்திரிகளையும் திராட்சைகளையும் அவனுக்கு அள்ளிக் கொடுத்தார். பிறகு, தன் அருகில் இருந்த ஒரு சிப்பந்தியை அழைத்து, “இவனைக் கூட்டிண்டு போய் ஆகாரம் பண்ணி வை. அதன் பிறகு, இவாத்துல கொண்டு போய் பத்திரமா விட்டுடு” என்றார்.
பிறகென்ன… சுப்ரமணியனுக்கு மகா பெரியவா அருளால் அங்கே ராஜ மரியாதை.
சாப்பாடு முடிந்து பத்திரமாக வீட்டில் விடப்பட்டான்.
காஞ்சி மடம் துவங்கி சிருங்கேரி முகாம் வரை நடந்த விஷயங்களை வீட்டில் உள்ளோரிடம் விவரமாகச் சொன்னான். எல்லோரும் ஆச்சரியப்பட்டு அவனைப் பார்த்தனர்.
அடுத்த வாரமும் தொண்டு புரிவதற்கு காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குச் சென்றான் சுப்ரமணியன்.
மகா பெரியவாளின் அருகே சென்று அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நமஸ்கரித்தான். அவருக்குத் தெரியாத இவன் யாரென்று?!
மகான் அர்த்தபுஷ்டியுடன் கேட்டார்: “சாரதா பீடம் பெரியவாளை போன வாரம் தரிசனம் செஞ்சியோ?”
தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தவரே, கேள்வியும் கேட்டால் என்ன செய்வான் சுப்ரமணியன்!
தலையை ஆட்டியபடி கண் கண்ட தெய்வத்தை மீண்டும் நமஸ்கரித்தான்.
ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது, பரப்பிரம்ம சொரூபத்திடம் இருந்து!
எவர் எவருக்கு மகா பெரியவாளின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிராப்தம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் கிடைத்து விடும்.
மனதை மகானிடம் பறி கொடுத்தவர்கள், தங்கள் வாழ்வில் நிரம்பவே ஆனந்தம் அனுபவித்தார்கள்.
பலரும் இவரிடம் செல்கிறார்களே… அப்படி என்னதான் இவரிடம் இருக்கிறது என்று பரீட்சார்த்தமாகச் சென்றவர்களுக்கு வயிற்றுப் பசிக்கு அங்கே ஆகாரம் கிடைத்ததே தவிர, ஆன்மப் பசிக்கு ஆகாரம் கிடைக்கவில்லை.
வற்புறுத்தலுக்கும் கட்டாயத்துக்கும் அடி பணிந்து ஏனோதானோவென்று சென்றவர்களால், மகானின் திருமுகத்தில் தென்படக் கூடிய சாட்சாத் சர்வேஸ்வர தரிசனக் காட்சியைக் காண முடியவில்லை.
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். அனைவருக்கும் தரிசனம் தரக் கூடியவன். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கக் கூடியவன். நாம்தான் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.