கேட்டு வாங்கிக் கொண்ட காணிக்கை கடுக்கன்

றைவனையும் மகான்களையும் தரிசிப்பது புறக் கண்கள் மட்டும் போதாது. அகக் கண்கள் கொண்டு தரிசிக்க வேண்டும். இதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும்.

காஞ்சி மகா பெரியவாளைத் தரிசித்ததரிசித்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடுவதில்லை. சிலரது பக்தியில் இருக்கிற ஆத்மார்த்தத்தைப் பார்த்து விட்டு மகானே அவர்களுக்கு அருளுகிறார்.

உடலில் பகட்டும், உள்ளத்தில் போலியும் இருந்தால் உடன் பழகுகிற சக மனிதர்களை ஏமாற்ற முடியும்; மகான்களை ஏமாற்ற முடியாது.

மகானது பரிபூரண ஆசி வேண்டுவோர், அவர் திருச்சந்நிதியில் உண்மையாக இருக்க வேண்டும். பேராசைகள் அற்றவராக இருக்க வேண்டும்.

ஒருவர் கொண்டிருக்கிற எளிமையும், இனிமையும், கருணையும், அன்பும்தான் மகான்களின் அருகில் கொண்டு செல்கின்றன.

அமெரிக்காவில் இருக்கிற ஆத்மார்த்தமான ஒரு அடியவருக்கும் மகா பெரியவா இன்று திருக்காட்சி தருகிறார். அதே வேளையில் அபிராமபுரத்தில் இருக்கிறவருக்கும் திருக்காட்சி தருகிறார்.

அபிராமபுரம், அமெரிக்கா என்கிற அளவுகோல் எல்லாம் புவியியலையும், தொலைதூரத்தையும் பார்க்கின்ற நமக்குத்தான்!

மகான்களுக்கு எல்லா ஊரும், நாடும் ஒன்றுதான். எல்லாமே அவர்களது பார்வையில் படும் இடம்தான். தன்னை வணங்குகிறவர்கள் இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும், அவர்களை அரவணைத்துக் காக்கிறார்கள்.

செங்கல்பட்டுக்கு அருகே இருக்கிறது பழையனூர். இந்த ஊரில் மகா பெரியவாளின் அத்யந்த பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவருக்கு உள்ளூரிலேயே ஒரு கம்பெனியில் உத்தியோகம். சொந்த ஊரிலேயே வேலையும் அமைவது என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஆனால், இந்த அன்பருக்கு வாய்த்தது.

ரொம்பவும் நிம்மதியான வாழ்க்கை. அலுவலக மதிய உணவு இடைவேளையின்போதுகூட சிற்சில நேரங்களில் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பார்.

மாதத்துக்கு ஒரு முறை மகானைத் தரிசித்து ஆசி பெற காஞ்சிக்குப் போவார். பரவசமான பொழுதுகள் அவை.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு புயல் வீசியது அவர் வாழ்வில்.

பழையனூரில் அவர் பணி புரிந்த அலுவலகத்தின் ஒரு பிரிவு சென்னை நகரிலும் இயங்கி வந்தது. சென்னை அலுவலகத்தில் ஒரு சில பணியாளர்களின் குழப்படிகள் காரணமாக அங்கே வேலைகள் ஸ்தம்பித்தன. எப்படி இவற்றைச் சரி செய்வது என்று யோசித்தார் நிறுவன முதலாளி. அப்போது அவருக்கு பழையனூரில் பணி புரிந்த மகா பெரியவா பக்தர்தான் நினைவுக்கு வந்தார். உடனே அவரை அழைத்து, “இனிமேல் நீ சென்னையில் பணி புரிய வேண்டும். உனக்கு டிரான்ஸ்ஃபர் என்று சொன்னார்.

எனக்குப் பழையனூரே வசதியாக இருக்கிறது. நான் இங்கேயே இருக்கிறேனே சார் என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு ஏதேனும் இடைஞ்சல் வந்து விடுமோ என்று சொல்லிப் பார்த்தார்.

முதலாளி ஒப்புக் கொள்ளவில்லை. “சிறிது காலத்துக்கு சென்னை அலுவலகம் சரியாகிற வரை அங்கே பணி புரியுங்கள். பட்டணம் என்பதால், உங்களுக்கு சம்பளத்தையும் சற்றுக் கூட்டித் தருகிறேன் என்றார் முதலாளி.

முதலாளி சொல்கிற காரணம் நியாயமானது என்பதாலும், இந்தப் பிரச்னை தீர்வதற்கு வேறு வழியில்லை என்பதாலும்அப்படியே ஆகட்டும் சார் என்று ஒப்புக் கொண்டார்.

சென்னைப் பணியில் சேர்ந்த பிறகு, பழையனூரில் இருந்தது போல மாதம் ஒரு முறை காஞ்சிபுரம் போக முடியவில்லை. மகானைத் தரிசிக்க முடியவில்லை.

ஆறேழு மாதத்துக்கு ஒரு முறை காஞ்சிக்குச் சென்று வந்தார். பின்னாட்களில் அதுவும் இயலவில்லை.

சென்னை வாழ்க்கை அவரை சிறைப்படுத்தியது. பொருளாதார நிலைமையும் கட்டுக்குள் இல்லை. முதலாளி சம்பளத்தை அதிகப்படுத்தியும், நகரத்தில் காலம் தள்ளுவது நரகமாக இருந்தது.

பழையனூரில் இருந்தபோது இதைவிட குறைந்த சம்பளம். ஆனால், நிம்மதியாக இருந்தோம். மாதம் ஒரு முறை காஞ்சிக்குப் போய் வந்தோம். ஆனால், சென்னைக்கு வந்த பிறகு எல்லாமே சிக்கலாகி விட்டதே என்று மனம் வருந்தினார்.

ஒரு கட்டத்தில் பண முடை அவரை வாட்டி எடுத்தது. அலுவலகத்தில் பணி புரிகிற ஒரு சிலரிடம் அவசரத் தேவைக்குக் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் பெயரவில்லை.

என்ன பண்ணலாம் என்று யோசித்தவருக்குக் காதுகளில் அணிந்திருக்கிற தங்கக் கடுக்கன் நினைவுக்கு வந்தது. ‘வேறு வழியில்லை. இதைக் கழற்றி விற்று தற்போதைய நிலைமையை சமாளிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

அதே சமயம், புனிதம் நிரம்பிய கடுக்கன்களை விற்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை.

மகா பெரியவாளை மனதார நினைத்தார். பூஜையறையில் இருக்கிற அவரது படத்துக்கு முன்னால் போய் நின்றார். ‘பெரியவாகொஞ்ச நாளா உங்களை தரிசனம் பண்ண வர முடியலை. என்னோட தப்புதான். இப்பகூட உங்க நினைப்புலதான் இருக்கேன். ஆனா, நீங்க என்னை சோதனை பண்றேள். இந்தக் கடுக்கனை வித்தால்தான் என்னோட பொருளாதார நிலையே சரியாகும் போலிருக்கு. இதை விக்கறதுக்கு எனக்கு மனசில்லை. இந்தக் கடுக்கன் என்னை விட்டுப் போகக் கூடாது. அதே நேரம் என் நிதி நிலைமை சரியாகணும். அப்படி ஆச்சுன்னா, இந்தத் தங்கக் கடுக்கன்களை நானே உங்க சந்நிதிக்கு எடுத்துண்டு வந்து காணிக்கையா சமர்ப்பிச்சுடறேன் என்று மனமுருகி, கண்கள் பனிக்கப் பிரார்த்தித்தார்.

உண்மையானஉருக்கமானநியாயமான பிரார்த்தனைகளுக்கு மகானிடம் இருந்து எப்போதுமே பதில் கிடைத்து விடும்.

எப்போதும் நாம் உண்மையாக இருந்து விட்டால், நமக்கு எல்லாமே நல்ல விதமாகத்தான் அமையும்.

இது தெரியாமல்தான் பொய், பித்தலாட்டம், கொடுத்த வாக்கை மீறுவது என்று உண்மைக்குப் புறம்பாக வாழ்ந்து அல்லல் படுகிறோம்.

மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படுகிற குளறுபடிகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் அவனேதான்!

வெளியில் இருந்து வேறு யாரும் இல்லை.

ஆனால், மனிதன் என்ன செய்கிறான்? தன் வசதிக்காக யார் யார் மேல் பழியைப் போட வேண்டுமோ, போட்டு விட்டுத் தப்பித்துக் கொள்கிறான்.

தப்பிப்பதாக அவன் நினைக்கிறான். ஆனால், வலையில் நிரந்தரமாகச் சிக்கிக் கொண்டு விடுகிறான்.

செங்கல்பட்டுக்கு அருகே பழையனூரில் வசித்து வந்த அன்பர். உள்ளூரிலேயே அவருக்கு உத்தியோகம். ரொம்பவும் நன்றாகத்தான் இருந்தது.

திடீரென சென்னைக்கு மாறுதல். முதலாளியிடம் ஆன மட்டும் புலம்பிப் பார்த்தார்.

கொஞ்ச நாள் நீ சென்னை அலுவலகத்தில் வேலை பார். அங்கே சில விஷயங்கள் சரியா இல்லை என்று சொல்லி கொஞ்சம் சம்பளத்தையும் அதிகப்படுத்தினார் முதலாளி.

பணம் என்கிற பிஸ்கட்டை விட்டு எறிந்தால், அடங்கிப் போகிறவர்கள்தானே பெரும்பாலோர்! சம்பளம் அதிகம் என்றவுடன் அரைகுறை மனசுடன் சென்னைக்கு வந்தார் பழையனூர்க்காரர்.

என்ன கொடுத்தாலும் சென்னை விழுங்கி விடும்.

உள்ளூரில் ஐயாயிரம் சம்பளம் வாங்கினால் அவன் ராஜா.

சென்னையில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினாலும் போதாது.

எத்தனை சம்பளம் வந்தாலும் அசுரனின் பசிக்குப் போட்ட சாப்பாடு போல் ஆகி விடும். ‘இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.

மனிதர்களும் அடுத்தடுத்து சம்பளம் அதிகம் தருகிற நிறுவனங்களுக்கு மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், எங்குமே நிம்மதி இருக்காது. உள்ளூரில் வாங்குகிற ஐயாயிரத்துக்கு ஈடாகாது. இது நாம் பார்க்கிற ஒன்றுதானே!

இந்த நிலைதான் பழையனூர் அன்பருக்கும்!

ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்குத் திடீர் பண நெருக்கடி. சட்டென்று ஒருவரிடம் தலையைச் சொறிந்து கொண்டு போய் நிற்பதற்கு சென்னையில் யாரும் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. கடன் கொடுப்பதற்கு ஆள் இல்லை.

ஏதேனும் பொருளை அடகு வைத்துக் கடன் வாங்கலாம் என்றாலும், அதற்கும் கைவசம், கழுத்துவசம் ஒன்றும் இல்லை.

அப்போது, காதுகளில் மாட்டி இருக்கிற கடுக்கன்கள் நினைவுக்கு வந்தன. சற்றே நிமிர்ந்தார். ‘இவற்றை விற்று விடலாமே என்று தோன்றியது.

ஆனால், விற்பதற்கும் மனம் இல்லை. ‘இவற்றை விற்காமல் எனது நிதி நிலைமையை நீங்கள் சரி செய்து விட்டால், இந்தக் கடுக்கன்களைத் தங்கள் சந்நிதிக்கே வந்து அர்ப்பணிக்கிறேன் என்று மகா பெரியவாளின் திருவுருவப் படத்தின் முன் நின்று பிரார்த்தித்தார்.

அடுத்த கணம், வாசலில் இருந்துசார்ர் என்று ஒரு குரல். வெளியே வந்தார் பழையனூர்க்காரர்.

ஆபீஸில் உடன் பணி புரிபவர் நின்று கொண்டிருந்தார்.

இவன் என்ன, ஏதேனும் கடன் கேட்டு நம்மிடம் வந்திருப்பானோ என்று பழையனூர்க்காரரின் மனம் யோசித்தது.

சார்உங்களை மொதலாளி உடனே கூட்டிட்டு வரச் சொன்னார் என்றான்.

விரக்தியுடன், “என்னப்பா விஷயம்? என்றார். இருக்கிற கஷ்டம் போதாது என்று இவர் வேறு என்ன பளுவை ஏற்றப் போகிறாரோ என்கிற கவலை.

தெரியல சார்உங்களை ஒடனே கூட்டிட்டு வரச் சொன்னார்.

மகா பெரியவாளை மனதார வணங்கிய மறுகணம் அவரே நமக்கு ஒரு நல்வழி காட்டுகிறார் என்கிற எண்ணம் மட்டும் உடனே வர மாட்டேன் என்கிறது.

ஆபீஸ்காரருடன் பைக்கில் சென்றார் பழையனூர்க்காரர்.

எப்பவும் இல்லாத அதிசயமாக முதலாளியே தன் வீட்டு வாசலில் நின்று, “வாப்பா என்று பழையனூர் அன்பரை வரவேற்றார்.

இவருக்கு நிலை கொள்ளவில்லை. அப்போதுதான் ஒரு எண்ணம் – ‘ஆகாமகா பெரியவாளிடம் பிரார்த்தித்தோமே… ‘இதில் இருந்து என்னைக் காப்பாற்று என்று. ஒருவேளை அவர் கண் திறந்து விட்டாரோஅதான் முதலாளியே வாசல்வரை வந்து நம்மை அழைத்துச் செல்கிறாரோ என்று.

தான் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, பழையனூர்க்காரரையும் எதிரே ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார் முதலாளி.

பிறகு, “உன்னை பழையனூர்லேர்ந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ணினேன். அப்ப இங்கே கணக்கு வழக்குல்லாம் கொஞ்சம் தாறுமாறா போயிட்டிருந்தது. எல்லாத்தையும் ஓரளவு கட்டுக்குக் கொண்டு வந்துட்டே. இனிமே நீ சென்னைல இருக்க வேண்டாம்னு தோன்றது. அதனால, உடனே பழையபடி ஊருக்கே போயிடு. பழையனூர் கம்பெனில அதே போஸ்ட்ல இரு. உனக்கு சிட்டில கொடுத்த எந்த ஒரு சலுகையையும் வாபஸ் வாங்காம அனுப்பறேன். சென்னைல உனக்கு என்னென்ன அலவன்ஸ் கொடுக்கப்பட்டதோ, அவை அத்தனையும் ஒரு ஸ்பெஷல் கேஸா உனக்கு உண்டு என்று எழுந்து பழையனூர் அன்பரின் முதுகில் செல்லமாகத் தட்டி, வாழ்த்துச் சொன்னார்.

பழையனூர்க்காரருக்கு நம்ப முடியவில்லை. ‘நடப்பதெல்லாம் கனவா, நனவா என்று குழம்பினார்.

மகா பெரியவாளிடம் மனு போட்ட மறுகணம், நமக்கு இருந்த குறையைச் சரிசெய்து விட்டாரே என்று பூரித்தார்.

இதயத்தில் இருந்து புறப்பட்ட மகிழ்ச்சியைநன்றி என்று வார்த்தையாகச் சொன்னார். கைகளைக் கூப்பி வணங்கினார்.

முதலாளியின் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

இல்லம் வந்தவர், மகா பெரியவா திருவுருவப் படத்தின் முன் சாஷ்டாங்கமாக விழுந்தார். தன் கவலையைப் போக்கிய காஞ்சி மகானுக்குக் கண்ணீராலேயே நன்றி சொன்னார்.

காதில் இருக்கின்ற கடுக்கன்களை விற்க விடாமல் அருளி இருக்கிறாரே என்று நெகிழ்ந்து போனார்.

சென்னை ஆபீஸுக்குப் போனார். அலுவலகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பழையனூருக்குப் பறந்தார். மனசு குளிர்ந்து போயிருந்தது.

இங்குதான் ஒரு விஷயத்தைப் பலரும் மறந்து விடுகிறோம்.

அதுதான்நன்றியறிவித்தல்.

சென்னையில் ஒரு கஷ்டத்தில் இருந்தபோது பழையனூர் அன்பர், பரமேஸ்வர சொரூபத்திடம் வேண்டிக் கொண்டார். என்ன வேண்டினார்?

எனது பணக் கஷ்டம் இந்தக் கடுக்கன்களை விற்காமல் நிவர்த்தி ஆனால் இவற்றை உன் திருச்சந்நிதிக்கே வந்து அர்ப்பணிக்கிறேன் என்று.

ஆனால், சொன்னதை நிறைவேற்றினாரா? பழையனூருக்கு மீண்டும் வந்தவுடன் நேர்த்திக் கடனை சரி செய்தாரா?

இல்லையே!

வேலையில் பிஸிகுடும்பத்தில் வேலைகள் என்று ஏழெட்டு மாதங்கள் பழையனூரில் ஓடிற்று. ஆனால், ஒரு முறைகூட காஞ்சிபுரம் செல்லவில்லை. மகானைத் தரிசிக்கவில்லை.

முன்பு ஊரில் இருந்தபோது மாதம் ஒரு தடவை போய் வந்தவர், அப்படியே மறந்து போனார் மகானை.

ஆனால், மகான் இவரை மறப்பாரா?

ரொம்ப மாதங்களாக காஞ்சிபுரம் இருக்கிற திசைப் பக்கம் வராமல் இருக்கிற அவனை இங்கே வரவழைக்க வேண்டும் என்று மகா பெரியவா மனம் கனிகிறார்.

அதன் முதல் கட்டமாக, பழையனூர் அன்பருக்கு மகான் தருகிற பரிசு என்ன தெரியுமா?

காது வலி! அப்போதுதானே மறந்து போன கடுக்கன் பிரார்த்தனையும் நினைவுக்கு வரும்?!

பழையனூர் அன்பருக்குத் திடீர் காது வலி. என்னென்னவோ முதலுதவிகள் செய்து பார்த்தார். கைவைத்தியமும் மேற்கொண்டார்.

இயற்கையாக வந்த வலி என்றால், இந்நேரம் சரியாகி இருக்கும். ஆனால், இது மகான் தந்த வலியாயிற்றே! என்ன காரணத்துக்காகக் கொடுத்தாரோ, அது நிறைவேறுகிற வரை விடுவாரா? ‘கடுக்கன்களைத் தருகிறேன் என்று நமக்கு முன்னால் நின்று கொண்டு வேண்டியவன், நமக்கே கடுக்காய் குடுக்கிறானே என்று காஞ்சி முனிவர் வைக்கிற சோதனை அல்லவா இது!

வலியின் வேதனை நாளுக்கு நாள் அதிகமானது. சதா காதுகளைப் பிடித்தபடி அவஸ்தையுடன் ஒவ்வொரு நாளும் நடமாடிக் கொண்டிருந்தார்.

ஆனாலும், கடுக்கன்களை சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டோமே என்கிற வேண்டுதல் அவரது நினைவுக்கு வரவில்லை.

இதற்காகத்தானே பெரியவா இந்த அன்பரைச் சோதனை செய்கிறார்கடுக்கன் பிரார்த்தனை அவரது நினைவுக்கு வரவில்லை என்பதால், மகான் தன் சோதனையை மேலும் அதிகப்படுத்தினார்.

உள்ளூர் டாக்டரிடம் ஓடினார். ஒன்றும் பலனில்லை.

அடுத்து, செங்கல்பட்டில் இருக்கிற பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடினார். வலி வந்த நாளில் இருந்து எப்படி எல்லாம் தான் அவஸ்தைப்பட்டு வருகிறேன் என்பதைக் கண்ணீருடன் விளக்கினார். டாக்டரே கண் கலங்கினார்.

சோதனை செய்து பார்த்த அந்த டாக்டர், “இது ரொம்ப சீரியஸா இருக்கு. உடனே நீங்க ஆபரேஷன் பண்ணி ஆகணும். இங்கே சாத்தியமில்லை. சென்னைக்குப் போங்க. ஒரு கணம்கூட தாமதிக்காதீங்க என்று அறிவுறுத்தி அனுப்பி விட்டார்.

அடுத்த விநாடியே அத்தனை ரிப்போர்ட்டுகளையும் எடுத்துக் கொண்டு செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு ஓடினார்.

பிரபல டாக்டர் ஒருவரைப் பார்த்தார்.

ரிப்போர்ட்டுகளைப் பார்த்து அவரை சோதனை செய்தார். அரை மணி நேரத்துக்குப் பிறகு, “ஆமா சார்செங்கல்பட்டு டாக்டர் சொன்னது சரிதான். உங்களுக்கு உடனே ஒரு ஆபரேஷன் பண்ணணும். இதை நீங்க தாமதம் செய்யவே கூடாது. அப்படிச் செய்தால், பெரிய ஆபத்துல கொண்டு போய் விட்டுடும். எனவே, நாளைக்குக் காலைலயே இங்கு வந்து அட்மிட் ஆயிடுங்க என்றார் தெளிவாக.

பழையனூர் அன்பர் தவித்துப் போனார். “டாக்டர்ஆபரேஷன் பண்ணாம வேற வழி இல்லையா? என்றார்.

அதற்கான காலகட்டம் தாண்டிப் போயாச்சு. நாளைக்குக் காலைல வந்துடுங்க. வர்றப்ப உங்க காதுல இருக்கிற ரெண்டு கடுக்கன்களையும் கழட்டி வெச்சுட்டு வாங்க என்றார்.

பழையனூர் அன்பர் நெருப்பை மிதித்தது போல் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

என்ன சொன்னீங்க டாக்டர்?

கடுக்கன்களைக் கழட்டி வெச்சுட்டு வாங்க – மீண்டும் சொன்னார் டாக்டர்.

கண்களுக்கு முன்னால் மகா பெரியவாளே ஒரு கணம் தோன்றி, புன்னகைப்பது போல் பட்டது.

வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது எதையாவது மறந்து செல்வது பலருக்கும் வாடிக்கை.

மறதி ஆசாமி வாசலுக்கு வந்து சாலையில் நாலு தப்படி எடுத்து வைத்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் வீதி வரை மூச்சிரைக்க ஓடி வந்து, ‘ஏங்கஇதை மறந்துட்டீங்களே.. என்று நினைவுபடுத்துவது இல்லையா?

அதுபோல்தான் மகான்களும் தெய்வங்களும்!

அவர்களும் நம் வீட்டில் உள்ளவர்களே! நம் கண்களுக்குத் தெரியாமல் நம்முடன் வாழ்ந்து வருபவர்கள்! கஷ்ட காலங்களில் நம் கண்களைத் திறந்து விடுபவர்கள்.

பழையனூர்க்காரர் விஷயத்திலும் இப்படித்தான்.

கடுக்கன்களைக் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறேன் என்று கஷ்ட காலத்தில் மகா பெரியவாளிடம் பிரார்த்தித்துக் கொண்டார். கஷ்டத்தில் இருந்தும் மீண்டார். ஆனால், கால ஓட்டத்தில் தன் பிரார்த்தனையை மறந்தே போனார்.

பார்த்தார் மகா பெரியவா!

பழையனூர் பக்தருக்குத் தன் பிரார்த்தனை நினைவுக்கு வர வேண்டும் என்பதற்காக முதலில் காது வலியைக் கொடுத்துப் பார்த்தார். வலி அவஸ்தையின்போது காதுகளைத் தடவுகிற சமயத்திலாவது கடுக்கன் ஞாபகம் வராதா என்று பார்த்தார். ஊஹும்அப்போதும் நினைவு வரவில்லை.

மருத்துவமனை போனார். காதில் ஆபரேஷன் தேவை என்றார் டாக்டர். ‘அட்மிட் ஆக வரும்போது கடுக்கன்களை மறக்காம கழற்றி வெச்சுட்டு வாங்க என்றார் அழுத்தம் திருத்தமாக.

அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆபரேஷன் நேரத்தில் வார்டுக்குள் செல்கிறபோதுகூடக் கழற்றிக் கொள்ளலாம். டாக்டர் அப்போது சொல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. ஆனால், ஏனோ மகா பெரியவா முன்கூட்டியே டாக்டர் மூலம் சொல்ல வைக்கிறார். நினைவுபடுத்துகிறார்.

அப்போதுதான் தன் பிரார்த்தனையை உணர்ந்தார் பழையனூர்க்காரர்.

அடடாஎன்னை மன்னித்து விடு நடமாடும் தெய்வமேகடுக்கன்களைக் கொண்டு வந்து சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டேனேஇன்னமும் கொண்டு வந்து கொடுக்கவில்லையேநல்லவேளையாக நினைவுபடுத்தினீர்கள். இதோ, உடனே இன்றைக்கே காஞ்சிக்கு வருகிறேன். கடுக்கன்களைக் கழற்றி ஏன் வீட்டில் வைக்க வேண்டும்? அது இனி எனக்கானவை அல்லஎங்கே சேர வேண்டுமோ, அங்கேயே சேர்த்து விட்டு நாளைக்கு ஆஸ்பத்திரி போகிறேன். ஆபரேஷன் நன்றாக நடக்க அருள் புரிய வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டார். மானசீகமாக கன்னங்களில் போட்டுக் கொண்டு மன்னிப்பும் வேண்டினார்.

சென்னை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தவர், அடுத்த சில நிமிடங்களில் காஞ்சிக்கு பஸ் ஏறினார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டு ஸ்ரீமடத்துள் நுழைந்தார்.

குழாயடியில் கை, கால்கள், முகத்தை சுத்தம் செய்து கொண்டார். அதன் பின் கடுக்கன்களை ஜாக்கிரதையாகக் கழற்றினார். ஒரு காகிதத்தில் அவற்றை வைத்து பொட்டலம் போல் மடித்துக் கொண்டார்.

மரத்தடி அருகே மகான் வழக்கம்போல் வீற்றிருந்தார். ஓரளவு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். வரிசை விரைந்து செல்வதற்குத் தொண்டர்கள் உதவி புரிந்து வந்தனர்.

அன்றைய தினம் வேத பாராயணம் செய்த இளைஞர்களுக்குத் தன் திருக்கரங்களால் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.

எல்லோருக்கும் பழம், குங்குமம், கல்கண்டு போன்றவற்றை வழங்கினார் பெரியவா. வேத வித்யார்த்திகள் ஒவ்வொருவரையும் அவர்கள் சொந்த ஊர் எது, வேத வகுப்பில் எதுவரை கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள் என்று தனிப்பட்ட முறையில் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஒரு இளைஞன் மகா பெரியவா முன்னால் நின்று கொண்டிருந்தான். வேதம் கற்றதன் பொலிவு, அவனது முகத்தில் தெரிந்தது. ஆனால், தோற்றத்தில் ஓர் ஏழ்மையும் இயல்பாகத் தென்பட்டது.

இந்த இளைஞனிடம் சொந்த ஊர் போன்ற விவரங்களை விசாரித்த பெரியவா அவனுக்கு மட்டும் பிரசாதம் கொடுக்காமல், “சித்த நேரம் இங்கயே உக்காந்துக்கோ என்றார்.

அவனும் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல், மகான் கை காண்பித்த இடத்தில் சாதுவாக அமர்ந்தான்.

அவனுடன் வந்த வேத வித்யார்த்திகள் சற்றே தள்ளி ஓரிடத்தில் குழுவாக அமர்ந்திருந்தனர். இவன் மட்டும் இங்கே தனியாக! இவனும் வந்தால்தான் அவர்கள் அங்கிருந்து புறப்பட முடியும். தங்களுடன் வந்த சக தோழன் என்ன காரணத்தால் மகா பெரியவாளால் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறான் என்று அவர்களுக்கும் காரணம் புரியவில்லை.

ஏழ்மை இளைஞனுக்குப் பின்னால் வந்த வேத வித்யார்த்திகள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கி முடித்தார் பெரியவா.

இதை அடுத்து, வரிசையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக மகானை நோக்கி மெள்ள நகர ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் மகானிடம் வந்து நமஸ்கரித்து, பிரசாதம் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர்.

பழையனூர் அன்பரின் முறையும் வந்தது.

தான் கொண்டு வந்த பழங்களை மகான் திருச்சந்நிதி முன்னால் சமர்ப்பித்தார்.

சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

பழையனூர்க்காரரை மேலும் கீழும் ஏறிட்ட மகா பெரியவா, ‘என்ன விஷயம்யார் நீ? என்று ஜாடையில் கேட்டார்.

இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, உத்தியோகம் பற்றி எல்லாவற்றையும் சொன்னார்.

பிறகு, காது வலி திடீரென ஏற்பட்டு தற்போது ஆபரேஷன் வரை போயிருப்பதாகவும், அந்த ஆபரேஷன் நன்றாக நடப்பதற்கு ஆசி வழங்க வேண்டும் எனவும், நேர்த்திக் கடன் காரணமாக கடுக்கன்களை சமர்ப்பிக்க வந்ததாகவும் ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்தார்.

தன் கையில் வைத்திருந்த காகிதத்தைப் பிரித்து, கடுக்கன்களை முன்னால் இருக்கும் மூங்கில் தட்டில் வைத்தார்.

கடுக்கன்களைத் தான் ஏற்றுக் கொள்வது போல் அந்தத் தட்டின் மீது தன் கையை வைத்தார். பிறகு, அருகே அமர்த்தி வைத்திருந்த வேத வித்யார்த்தி இளைஞன் பக்கம் திரும்பி ஜாடையால் அவனை அழைத்தார் பெரியவா.

பெரியவா என்று எழுந்தவன், ஒரு நமஸ்காரம் செய்து விட்டு மகானின் திருமுகம் பார்த்தான்.

நீங்க எல்லாரும் ஒண்ணாதானே வேதம் சொல்றதுக்கு இங்கே வந்திருக்கேள்? என்று குழுவாக அமர்ந்திருக்கிறவர்களையும் காண்பித்துக் கேட்டார் மகான்.

பெரியவா ஜாடையால் தங்களைக் காண்பிக்கிறார் என்பதை அறிந்த அந்த வேத வித்யார்த்திகளின் பார்வையும் திருச்சந்நிதியின் பக்கம் திரும்பியது.

ஆமா பெரியவா என்றான்.

நேத்திக்குச் சாயங்காலம் நீங்கல்லாம் ஒண்ணா சேர்ந்து வேத பாராயணம் பண்ணினேள் இல்லையா?

ஆமா பெரியவா

அப்ப உன் மனசுல என்ன தோணித்துனு சொல்லட்டா? ‘என்னடாநம்மகூட வேதம் சொல்றவாள்லாம் காதுல பொட்டுத் தங்கத்துலயாவது கடுக்கன் போட்டுண்டிருக்காநமக்கு அந்தக் கொடுப்பினை இல்லையேகடுக்கன் வாங்கறதுக்கு வசதி இல்லாததால்தானே காதுல துளை தூர்ந்து போயிடக் கூடாதுன்னு வேப்பங்குச்சியை செருகி வெச்சிருக்கோம்னு நினைச்சே இல்லியா?

வேதம் கற்ற இந்த இளைஞனின் மனதில் நேற்று மாலை என்ன தோன்றியதோ அதை அப்படியே உள்ளது உள்ளபடி மகா பெரியவா சொன்னவுடன் அந்த இளைஞனுக்கே கொஞ்சம் சங்கடமாகப் போய் விட்டது.

எப்போது ஏழ்மை பிறரால் விமரிசிக்கப்படுகிறதோ, அங்கே விமரிசிக்கப்படுபவரின் ஏக்கமும் இயலாமையும் வார்த்தைகள் இன்றி வெளிப்படும்.

எவர் ஒருவர் ஏழ்மையை விமரிசித்தாலும், பதில் விமரிசனம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

ஏழ்மை என்பது தவறல்ல.

சமூகத்தில் அது ஒரு நிலை.

ஏழ்மை, அவலம் அல்ல. விதி.

அதை அப்படியே ஏற்றுக் கொண்டு சாதித்துக் காட்ட வேண்டும் என்று வாழ்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள்.

ஏழ்மையை அவமானமாக நினைத்து, வசதியானவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவர்கள் தவறு செய்யத் தூண்டப்படுகிறார்கள்.

எல்லாம் விதி என்கிற பக்குவ நிலை ஏற்பட்டு விட்டால், ஏழ்மையிலும் ஒரு சுகத்தைக் காண முடியும்!

இங்கே இளைஞன் நெளிந்தான். ஏழ்மையை இங்கே வெளிக்காட்டுபவர்நடமாடும் தெய்வம் மகா பெரியவா. கருணைக் கடல்.

விழிகளில் துளிர்க்கின்ற நீரைத் துடைத்தபடி, “ஆமா பெரியவா என்று தயக்கத்துடன் தலை குனிந்தான்.

பழையனூர்க்காரர் உட்பட அங்கே கூடி இருந்த பக்தர்கள் கூட்டம் மொத்தமும் இந்தக் காட்சிகளை நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

வேதம் கற்றவர்களுக்குத் தாயாக விளங்கக் கூடிய அந்த வேதமாதாகலியுக தெய்வம் மகா பெரியவா, “இந்தா, இந்தக் கடுக்கன் உனக்குத்தான். இதை எடுத்துக்கோஇன்னொருத்தர் இதை இதுநாள் வரை காதுல

போட்டுண்டு இருந்தததால முறைப்படி சுத்தம் பண்ணிக்கோ. அப்புறமா உன் காதுல போட்டுக்கோ. இனிமே வேப்பங்குச்சி ஒனக்குத் தேவைப்படாது என்று மகா பெரியவா ஒரு புன்னகையுடன் சொல்லகூடி இருந்தோர் அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

ஆக, கடுக்கன்களைத் தாமதமாகத் தன் சந்நிதிக்கு மகா பெரியவா வரவழைத்ததற்கும் ஒரு காரணம் இருந்துள்ளது. வேத இளைஞன் வந்து, அவனுடைய ஏக்கத்தைப் போக்க வேண்டும் அல்லவா?

கடுக்கன்களைச் சமர்ப்பித்த பழையனூர்க்காரர் தன் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் இந்தக் காட்சிகளைப் பார்த்தார். கண்களில் இருந்து ஜலம் கசிந்தது. கைகள் இரண்டையும் இணைத்துக் கூப்பினார். “பெரியவாபெரியவா என்று மருகி, வேரறுந்த மரம் போல் விழுந்து நமஸ்கரித்தார்.

பழையனூர்க்காரரைத் தன் அருகே வரச் சொல்லி, ஆரஞ்சுப் பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்து, ஆசி வழங்கி அனுப்பினார்.

என்னுடைய எத்தனையோ நாள் பிரார்த்தனை இன்றைக்கு நிறைவேறி விட்டதுமகா பெரியவா அருளாசியுடன் நாளை நடக்கப் போகிற காது ஆபரேஷனும் நல்ல விதத்தில் முடிய வேண்டும் என்று அங்கே பிரார்த்தித்து விட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தார்.

பழையனூர் திரும்புவதற்காக பஸ்ஸைத் தேடிக் கண்டுபிடித்தார். ஏறி அமர்ந்தார்.

இல்லத்தை அடைந்தபோது அவர் மனதுள் அளவிட முடியாத ஒரு நிம்மதி குடி கொண்டிருந்தது. அடுத்த நாள் காலை சென்னைக்குப் புறப்பட்டுப் போய் காது வலிக்கு உண்டான ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். அது நல்ல விதமாகப் பூர்த்தி ஆக வேண்டும். இதுதான் அவருக்குத் தற்போது இருக்கிற பிரார்த்தனை.

மறுநாள் அதிகாலை கண்விழித்து எழுந்தபோது அவருக்கு ஒரு ஆச்சரியம். அது நாள் வரை பெரும் குடைச்சலாக இருந்த காது வலி இப்போது குறைந்தது போல் பட்டது.

காஞ்சிபுரம் சென்று மகா பெரியவரைத் தரிசித்து, கடுக்கன்களைச் சமர்ப்பித்து விட்டுத் திரும்பியதில் இருந்தே இந்த உணர்வு பழையனூர்க்காரருக்கு!

எல்லாம் பெரியவாளோட ஆசிதான்அவரை தரிசனம் பண்ணிட்டு வந்த வேளை, இன்னிக்கு நடக்கப் போற ஆபரேஷனும் நல்ல விதமாக ஆகணும் என்று மகா பெரியவரை மனதார வணங்கி விட்டுப் பழையனூரில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.

ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டிய மருத்துவமனையை அடைந்தார். வருகையைப் பதிவு செய்து கொண்டார். அதன் பிறகு ஆபரேஷன் செய்யப் போகும் டாக்டரிடம் அனுப்பப்பட்டார்.

ஆபரேஷனுக்கு முன்னால் ஒரு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று பழையனூர்க்காரரை ஒரு உதவியாளருடன் அனுப்பினார் டாக்டர்.

சுமார் ஒரு மணி நேரத்தில் சோதனைகள் முடிந்தன. முடிவுகளைப் பார்த்த டாக்டர் ஆச்சரியப்பட்டார். புருவங்களை சுருக்கி மீண்டும் அந்த ரிப்போர்ட்டுகளை ஆராய்ந்தார். பழையனூர்க்காரரை வரவழைத்தார்.

ஆபரேஷனுக்குப் போகலாமா டாக்டர்..? முடிஞ்சதும் ஒரு சில மணி நேரத்துல என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா? என்று இயல்பாகக் கேட்டார்.

அவரைப் பார்த்துப் புன்னகைத்த டாக்டர், “எதுக்கு இன்னும் ஒரு சில மணி நேரத்துல உங்களை டிஸ்சார்ஜ் பண்ணணும்? இப்பவே உங்களை உடனே டிஸ்சார்ஜ் செய்யறேன். நீங்க வீட்டுக்குப் புறப்படலாம் என்றார்.

பழையனூர்க்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன டாக்டர் சொல்றீங்கஅப்ப ஆபரேஷன்..? – கேள்விக்குறியுடன் டாக்டரைப் பார்த்தார்.

என்ன அதிசயமோ தெரியலைஇதுவரை உங்களுக்கு இருந்த குறைபாடுகள் தானாகவே அகன்று விட்டன. இப்ப உங்களுக்கு எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை. உங்க காது பர்ஃபெக்ட்டா இருக்கு.

பழையனூர்க்காரருக்கு இன்ப அதிர்ச்சி. “ஆமா டாக்டர்நானே சொல்லணும்னு நினைச்சேன். ‘ஆபரேஷன் ஆபரேஷன்னு அதே நினைப்புல இருந்ததுனால மறந்துட்டேன். நேத்திலேர்ந்து எனக்கு இந்த வலியே குறைஞ்சிருக்கு.

பாத்தீங்களாவலி குறைஞ்சிடுச்சு. வேதனையும் குறைஞ்சிடுச்சு. அதைத்தான் இப்ப எடுத்த எல்லா ரிப்போர்ட்டும் சொல்லுது. உங்களுக்கு இனிமே எந்த தொந்தரவும் இருக்காது. எல்லாம் கடவுளோட அருள்.

அப்போதுதான் உணர்ந்தார் பழையனூர்க்காரர், மகா பெரியவர் என்கிற நடமாடும் தெய்வத்திடம் பழைய காணிக்கையை மறக்காமல் சேர்த்த பிறகு இத்தனை அற்புதங்களும் என்று!