சம்சாரி (குடும்பஸ்தன்) என்றாலும், சந்நியாசி (துறவி) என்றாலும் ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் எல்லோருக்குமே அவசியம். அவரவருக்கு உண்டான தர்மங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்று வழிவகைகளை விதித்திருக்கிறது சாஸ்திரம்.
இவற்றில், மிக முக்கியமானது எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு செய்யாமல், மற்ற உயிர்களையும் தன்னுயிர் போல் நினைத்து வாழ வேண்டும். இந்த எண்ணம் சுலபத்தில் அமைந்து விடாது. அதற்குத்தான் நமக்கு பக்தி தேவை.
நல்ல மனமும், நல்ல குணமும் அமைய வேண்டுமானால், பக்தி அவசியமாகிறது. இறை வழிபாட்டுக்கும் இறை சிந்தனைக்கும் அதிக முக்கியத்துவத்தை மனிதர்கள் கொடுக்க வேண்டும். அதன் மூலம்தான் இந்தப் பிறவியைப் பூர்த்தி செய்ய முடியும்.
ஆனால், நாம் வாழ்ந்து வருகிற இந்த உலகம் – அருளை விட பொருளையே அதிகம் விரும்புகின்ற உலகம். எனவே, கோயிலுக்குப் போய் அருளை சம்பாதிப்பதை விட, வெளியிடம் சென்று பொருள் சம்பாதிப்பதில்தான் மனிதனுக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கின்ற காரணத்தால், மிகவும் அவசியமான ஆச்சாரங்களையும் அனுஷ்டானங்களையும் மனிதன் கோட்டை விட்டு விடுகிறான். அதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் இப்போது உணர்வதில்லை.
இவற்றை மேற்கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் தனக்கு நேரம் இல்லை என்று சொல்லி, பெரும்பாலானவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள்.
ஆக, பொருள் தேடுகின்ற இந்தக் காலத்தில் பணம் மட்டுமே ஒரு சம்சாரிக்குப் பிரதானமாகத் தெரிகிறது. அதைத் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம். இதனால், இழக்கக் கூடாத பலவற்றைத் தன் வாழ்நாளில் இழக்கின்றான். தாயின் பாசத்தை இழக்கிறான். மனைவியோடு அமர்ந்து பேசுவதற்கு நேரமில்லை. குழந்தைகளிடம் அன்பு செலுத்த முடிவதில்லை. குலதெய்வம் கோயிலுக்கு உரிய காலத்தில் செல்ல முடிவதில்லை. பரஸ்பரம் நேசப் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் நல்ல நண்பர்களை இழக்கின்றான். பொருள் தேடுவதையே குறியாகக் கொண்டிருக்கிறபடியால் ஒரு மனிதன் இப்படி இழக்கின்ற விஷயங்கள் கணக்கு வழக்கல்ல.
பொருளாசை வேட்கை தணிந்து, வயோதிகம் எட்டிப் பார்க்கின்றபோதுதான் எல்லாவற்றையும் உணர்கிறான். தான் செய்த தவறுகளுக்கு வருந்துகிறபோது காலம் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது வீண்.
ஆனால், ஒரு சந்நியாசி அப்படி அல்ல. அனைத்து ஆச்சாரங்களும் அனுஷ்டானங்களும் அவசியம். சந்நியாசிக்குப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
‘பொருளாசையை விட்டு விட்டு, இறைவன் மீது பார்வையைத் திருப்புங்கள்‘ என்கிற நல்வழியைப் பலருக்கும் போதிக்கின்ற கடமை சந்நியாசிக்கு உண்டு. தன்னை நாடி வருகின்ற எவருக்கும் ஆசிகளை வழங்கி, அவர்களை அரவணைத்து அருள் புரிய வேண்டும். பாசத்தைப் பற்றியும், அன்பைப் பற்றியும், நற்குணங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
கலியுக தெய்வம் என்று போற்றப்படுகிற மகா பெரியவா எந்த ஒரு பொழுதிலும் சாஸ்திர விதிகளை மீறி எதையும் செய்ததில்லை. தன்னை நாடி வருகின்றவர்களுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை எல்லாம் அருளினார்.
உணவு, உடை, யாத்திரை, தங்குகின்ற இடம் – இப்படி எதிலும் விதி மீறல் இல்லை. ஆடம்பரம் ஆரம்ப நாளில் இருந்தே அந்த மகானிடம் இல்லை. தோற்றத்தில் – பேச்சில் – செயலில் – பழகுவதில் எல்லாவற்றிலும் எளிமைதான்!
விட்டலன் அருளுகின்ற பண்டரிபுரம் க்ஷேத்திரத்தில் அப்போது முகாமிட்டிருந்தார் மகா பெரியவா. அந்த ஊரில் மிகச் சாதாரணமான ஓர் இடத்தில் தங்கி இருந்தார். பெரும்பாலான அடிப்படை வசதிகள் அங்கு இல்லை. ஆனாலும், அந்த இடத்தில் சந்தோஷமாக இருந்தார். பண்டரிபுரத்தில் எத்தனையோ தனவந்தர்கள், இதைவிட சிறப்பான இடம் தர முன்வந்தும் மகான் அவற்றை ஏற்கவில்லை. இந்த இடமே தனக்கு தாராளம் என்று புளகாங்கிதப்பட்டார்.
பெரியவா தங்கி இருக்கிற கொட்டகைக்கு நித்தமும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசித்து அருள் பெற்றனர்.
பெரியவா முகாமிட்டிருந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சர்க்கரை ஆலை அமைந்திருந்தது. அந்த ஆலையை நிர்வகிக்கிறவர் நம்மூர்க்காரர். தமிழ்க்காரர். ரொம்ப காலமாகவே இங்கு வசித்து வருகிறார். மகா பெரியவா மீது அதீத பக்தி கொண்டவர். பண்டரிபுரத்தில் மகான் கேம்ப் இருப்பது தெரிந்து ஒரு நாள் காரில் வந்தார்.
சர்க்கரை ஆலை நிர்வாகி முகாமுக்குள் நுழைகிறபோது மகானும் ஒரு சில பக்தர்களும் மட்டுமே இருந்தனர். காணிக்கையாகத் தான் கொண்டு வந்த பழங்களையும், இன்ன பிறவற்றையும் சமர்ப்பித்தார்.
ஏகாந்தமாக இருந்த பெரியவாளின் அருகே சென்று நமஸ்கரித்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு, “பெரியவாளோட திருப்பாதங்கள் எங்க சர்க்கரை ஆலைல படணும். அதுக்கு நாங்கல்லாம் ரொம்ப பாக்கியம் செய்திருக்கிறோம்” என்று இரு கரம் கூப்பி வேண்டுகோள் வைத்தார்.
மகானின் திருவடிகள் எங்கு பதிகின்றனவோ, அங்கு சகல வளங்களும் பெருகும். அனைத்து நலன்களும் கூடும். சாட்சாத் நடமாடும் தெய்வம் அல்லவா? எனவே, மகானது திருப்பாதம் தங்கள் இருப்பிடம், அலுவலகம் போன்றவற்றில் பட வேண்டும் என்று விருப்பப்பட்டு வேண்டுகோள் வைப்பார்கள். இதை ஏற்பதும் நிராகரிப்பதும் மகானது விருப்பம்.
பதில் வராத காரணத்தால் மகானின் திருமுகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆலை நிர்வாகி.
ஒரு சில விநாடிகள் கடந்திருக்கும். மகான் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
சர்க்கரை ஆலைக்கு எப்படிப் பயணித்து வருவது என்பது புரியாமல் பெரியவா அமைதியாக இருக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணி, அந்த நிர்வாகி மிகுந்த பவ்யத்துடன் சொன்னார்: “பெரியவாளுக்கு சிரமம் குடுக்க மாட்டேன். என்னோட கார்லயே அழைச்சிண்டு போறேன். திரும்பவும் கார்லயே பத்திரமா கொண்டு வந்து விட்டுடறேன்.”
சர்க்கரை ஆலை நிர்வாகி கூறிய விஷயத்தைக் கேட்ட மகா பெரியவா பெரிதாகச் சிரித்தார். உடன் இருக்கிற சிப்பந்திகளும் நிர்வாகியை விநோதமாகப் பார்த்தனர்.
ஆனால், இதற்கான காரணம் புரியாமல் பெரியவாளையும் சிப்பந்திகளையும் மாறி மாறிப் பார்த்தார் நிர்வாகி.
பெரியவா பிறகு சொன்னார்: “நீ சொன்னதைக் கேட்டுட்டு ஏன் இவாள்லாம் உன்னை விநோதமா பாக்கறானு குழம்பறியா…? சக்கரம் வெச்ச வண்டியில ஏறிப் பயணிக்கறதில்லைன்னு ஒரு சங்கல்பம் பண்ணிண்டிருக்கேன். அதனாலதான் நீ சொன்னவுடன் இவாள்லாம் விநோதமா உன்னைப் பாக்கறா. என்னை மாதிரியான சந்நியாசிகள் இது மாதிரி வண்டி வாகனங்கள்ல ஏறக் கூடாது. நீ வந்திருக்கிற கார், மோட்டார் வண்டி. அது மாதிரி சொகுசான வாகனங்கள்ல நான் பயணிக்கக் கூடாது. சந்நியாச தர்மம் அதுக்கு இடம் குடுக்காது.”
மகான் சொன்ன பதிலைக் கேட்டு அந்த நிர்வாகி ஏகத்துக்கும் நெளிந்தார். ஸ்ரீமடத்தின் நடைமுறையும், சந்நியாச தர்மத்தையும் அறியாமல் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டு மீண்டும் நமஸ்கரித்தார்.
அந்த நிர்வாகி தமிழ்க்காரர்தான் என்றாலும், பண்டரிபுரம் வந்து செட்டிலாகி, பல காலம் ஆகி விட்டது. எனவே, காஞ்சி ஸ்ரீமடத்து ஆச்சார்யர்களின் நடைமுறை அவருக்குச் சரிவர தெரிந்திருக்கவில்லை.
என்றாலும், பெரியவா சொன்ன பதில் அவருக்கு ஓர் ஆச்சரியத்தை வரவழைத்தது. பல இடங்களுக்கும் நடந்தே யாத்திரை செல்ல முடியுமா என்று பிரமித்தார். தன் மனதில் ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு மகானிடம் இருந்தே பதிலைப் பெறும் விதமாக, “இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா பெரியவா? ஒரு இடத்துலேர்ந்து இன்னொரு இடத்துக்கு மோட்டார் வெச்ச வண்டியில போனா, நேரம் ரொம்ப மிச்சப்படுமே… பயணம் விரைவாக அமையுமே?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.
பெரியவா புன்னகைத்தார். “வாஸ்தவம்தான். நேரம் மிச்சப்படும். பயணம் விரைவாக அமையும். அதில் சந்தேகமில்லை. ஆனால், வண்டியில் வேகமாகப் போவதால் பல ஊர்களை, கிராமங்களைப் பார்க்க இயலாமலேயே போய் விடும். அங்கு வசிப்பவர்களுக்கு ஒரு சில நல்ல விஷயங்களை சொல்ல முடியாமல் போய் விடும். நீ சொல்றபடி வாகனத்தில் பயணித்தால் நிர்வாக ரீதியாகவும் நிறைய கஷ்டங்கள் இருக்கு. மோட்டார் வண்டியில் பயணித்துத் திடீரென்று ஓர் ஊரில் போய் இறங்கினால், அங்குள்ளவர்களுக்கு சந்தோஷம் இருக்கும். ஆனால், அதைவிடச் சிரமம்தான் அதிகம். தகுந்த முன்னறிவிப்பு இல்லாமல் ஓர் இடத்தில் போய் நிற்கக் கூடாது. வாகனங்களில் பயணிக்கிறபோது அடுத்து நான் செல்ல வேண்டிய ஊருக்கு முன்கூட்டித் தகவல் தருவதில் ஆரம்பித்து நிறைய சிரமங்கள் இருக்கு.
நடந்து போவதால் ஒரு கிராமத்தில் இருக்கிற விவசாயி, குடியானவர்கள் உட்பட எல்லோரையும் பார்க்க முடியறது. அவர்களுக்கு அருளாசி வழங்க முடியறது. அடுத்துப் போகும் இடத்தில் உள்ள மக்களுக்கு முன்கூட்டியே ஒருவர் போய் தகவல் சொல்ல முடிகிறது. எங்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகளை மேற்கொள்வதற்கும் அவர்களுக்குப் போதிய நேரம் கிடைக்கிறது. இப்படி நடந்து போவதால், நிறைய சவுகரியங்கள்… என்ன நான் சொல்றது சரிதானே..?” என்று தன்னைச் சுற்றி இருக்கிற ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளையும், ஒரு சில பக்தர்களையும் பார்த்துக் கேட்டார்.
பெரியவாளின் கருத்தை எல்லோருமே தலையசைத்து ஆமோதித்தார்கள்.
சர்க்கரை ஆலை நிர்வாகி, மகானுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்து தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார்.
அவரை ஆசிர்வதித்தவர், “நான் பதின்மூன்று வயதில் பட்டத்துக்கு வந்த உடனே சக்கரம் வைத்த வண்டியில் ஏறுவது இல்லை என்று சங்கல்பித்துக் கொண்டேன். பட்டத்துக்கு வந்த புதுசுல அப்போ ஒரு யாத்திரை சென்று கொண்டிருந்தேன்.
ஏதோ ஒரு கிராமம் வழியே நடந்துண்டிருந்தேன். அந்தக் கிராமத்தில் பல காலமாக மழையே பெய்யவில்லை. ஊர்ல இருக்கிறவா அத்தனை பேரும் ரொம்ப கஷ்டப்பட்டுண்டிருந்தா. விளைச்சலும் சரியில்லை. குடிக்கத் தண்ணீரும் இல்லாம எங்கெங்கியோ போய்க் கொண்டு வந்துண்டிருந்தா. நாங்க கிராமத்துல கால் வெச்ச நேரம் அந்த அதிசயம் நடந்தது… எல்லாம் காமாட்சியோட கடாட்சம்….” என்று அந்த அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தார் மகா பெரியவா.
“ஒரு முறை ஏதோ ஒரு ஊருக்கு யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு கிராமம் குறுக்கிட்டது. அந்தக் கிராமத்தைக் கடந்து நடந்து கொண்டிருந்தோம். என்ன சோதனையோ தெரியவில்லை. பல காலமாக அங்கு மழையே இல்லையாம். ஊரே வறட்சியின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. வயல்கள் எல்லாம் விளைச்சல் இல்லாமல் வெறுமையாகக் காணப்பட்டது.
அந்தக் கிராமத்தில் நாங்கள் காலடி எடுத்து வைத்த நேரமோ என்னவோ… காமாட்சி கண் திறந்து விட்டாள். ஆம்! ஒரு அதிசயம் நடந்தது. சோகமான முகத்துடன் கிராமத்து ஜனங்கள் கூடி அமர்ந்திருந்த தெரு வழியே நடந்து கொண்டிருந்தோம். திடீரென வானம் இருண்டது. கருமேகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டன. சிறிது சிறிதாகத் தூறல் ஆரம்பித்து, நல்ல மழை பிடித்துக் கொண்டது… ஓரமாகத் தென்பட்ட ஒரு பழைய மண்டபத்தை நோக்கி ஓடி அங்கே உட்கார்ந்து கொண்டோம்.”
மகா பெரியவாளின் திருவடி பட்டால், எத்தகைய வறட்சியான பூமியும் வளமாகி விடும்.
பார்வை பட்டால், எத்தகைய அசுத்த உள்ளமும் பரிசுத்தம் ஆகி விடும்.
தங்கள் கிராமத்தில் திடீரென மழை கொட்டிக் கொண்டிருக்கிற அதிசயத்தைக் கண்டு ஊர்க்காரர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஒரு மகானின் திருப்பாதம் பட்ட காரணத்தால் தங்கள் கிராமம் புனிதம் பெற்று விட்டது என்று ஓடி வந்து வணங்கினார்கள்.
பல காலமாகவே பொட்டுத் தண்ணீர் இல்லாமல் – மழையையே பார்க்காமல் இருந்த அந்தக் கிராமத்து மண் ஏகத்துக்கும் நனைந்தது. குளிர்ந்தது. விடாமல் கொட்டித் தீர்த்தது. எப்போதோ பூமாதேவியிடம் இருந்து வாங்கிய கடனை (நீரை) வட்டியும் முதலுமாகத் திருப்பித் தருவது போல் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது மழை.
சாலைகளில் தரம் எல்லாம் இன்றைய நவீன யுகத்தில்தான்! அந்தக் காலத்தில் கிராமத்துச் சாலைகள் எப்படி இருக்கும்?
அரிய சில புகைப்படங்களில் பார்த்திருப்போம். பெரும்பாலானவை மண் சாலைகள்தான். அதிலும் மாட்டு வண்டிகளே அதிக எண்ணிக்கையில் மண் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தால் சாலையின் தரம் எப்படி இருக்கும்?
மாட்டு வண்டியின் சக்கரங்கள் உருண்டு உருண்டு ஓடி, சாலையில் இரு புறமும் பள்ளம் ஆகி விடும். நடுவே மட்டும் மேடாகக் காணப்படும். மேடு போன்ற பகுதியில் கிராமத்தில் இருக்கிற மோட்டார் பைக்குகள் பயணிக்கும். சாலையில் ஒரு சம நிலையைப் பார்க்க முடியாது.
மழை சகட்டுமேனிக்கு பெய்யத் துவங்கியதால் யாத்திரை சென்று கொண்டிருந்த மகா பெரியவாளும் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளும் சாலையின் ஓரமாக – ஓரளவு பாதுகாப்பாக இருந்த ஒரு பழைய மண்டபத்தில் அமர்ந்தார்கள் அல்லவா? அங்கிருந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. மழையின் வேகமும் மெள்ள மெள்ளக் குறைந்தது.
சாலையின் இரு புறமும் பள்ளம் போல் இருந்த இடத்தில் மழை நீர் செங்காவி நிறத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
பள்ளம் விழுந்த பகுதியிலும் சாலையின் ஓரத்திலும் இருந்த சில ஜீவராசிகள், வெள்ள அபாயத்தில் இருந்து தப்பிக்க வேண்டி மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து கொண்டிருந்தன. அதாவது ‘இந்த இடம்தான் தங்களுக்குப் பாதுகாப்பு‘ என்று நம்பி, சாலையின் நடுவில் இருந்த மேடான பகுதி அது. இங்கு மழை நீர் அவ்வளவாகத் தேங்கவில்லை.
மழை ஓரளவு விட்ட காரணத்தால், ஒரு சில இரு சக்கர வாகனங்களும் சாலையின் நடுப் பகுதியில் – அதாவது மேடான இடத்தில் சர் புர்ரென்று சென்று கொண்டிருந்தன.
இந்தக் காட்சியை அப்படியே உங்கள் மனத் திரையின் முன் கொண்டு வாருங்கள்… அடுத்து மகா பெரியவா சொல்வதைப் படியுங்கள்.
“தங்களைக் காப்பாத்திக்கணும்ங்கிற உயிர் பயத்துல சாலை ஓரத்துல இருந்த சின்னச் சின்ன ஜீவராசிகள் (புழு, பூச்சிகள்) மேடான இடத்தைத் தேடி வந்தன. அப்போது அதுகளுக்குத் தென்பட்ட ஒரே இடம் – இந்த சாலையோட நடுப் பகுதிதான். எல்லாம் கஷ்டப்பட்டு மேட்டை நோக்கி விறுவிறுன்னு ஏறித்து. அந்த நேரத்துல சாலையில் போன சில மோட்டார் வாகனங்களால் அந்த ஜீவராசிகளுக்கு ஹிம்சை ஏற்பட்டது. சில பூச்சிகள், புழுக்கள் அவஸ்தைப்பட்டன. இந்தக் காட்சிகளைப் பார்த்த நான் அப்பவே மீண்டும் ஒரு சங்கல்பம் எடுத்துண்டேன். அதாவது ஏற்கெனவே எடுத்துண்ட சங்கல்பத்தை உறுதி செஞ்சுண்டேன். இந்த சின்னச் சின்ன ஜீவராசிகளோட ஹிம்சைக்குக் காரணமான இது போன்ற சக்கரம் வைத்த மோட்டார் வண்டிகளில் எந்த ஒரு நாளிலும் ஏறக் கூடாதுனு. இது போன்ற வண்டிகள்ல பயணிச்சா, எதாவது ஜீவராசிகள் அடிபட்டு உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம்னு புரிஞ்சுண்டேன். அதன் பின் சக்கரம் வெச்ச வண்டில ஏறினதில்லை.”
– மகா பெரியவா சொல்லி முடிக்க… சர்க்கரை ஆலை நிர்வாகி உட்பட அனைவரும் நெகிழ்ந்து போய் இதைக் கேட்டனர்.
சந்நியாச தர்மத்தில் இருந்து இம்மியும் பிசகாமல் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுபடியே வாழ்ந்து வரும் மகானின் துறவு நெறி அங்கிருந்த பக்தர்களை வியக்க வைத்தது. சிலரது விழியோரம் நீர்த் துளிகளும் எட்டிப் பார்த்தன.
மனிதனை மனிதன் அடித்து வாழ்கிற இதே காலத்தில்தான் மகா பெரியவாளும் வாழ்ந்தார்.
ஒரு மனிதனுக்கு இன்னொருவன் உதவி செய்கிறானோ, இல்லையோ… தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரவர்களுக்கு அவரவரது சுய நலம் மட்டுமே பெரிதாகப் படுகிறது.
தன் வீட்டில் மின்சாரம் போய் விட்டால், உடனே ஜன்னலைத் திறந்து அடுத்த வீட்டைப் பார்க்கிறான். ஒருவேளை அடுத்த வீட்டிலும் மின்சாரம் போயிருந்தால் ‘நல்லவேளை… அவன் வீட்டிலும் போய் விட்டது‘ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்.
தனக்கு ஒரு கஷ்டம் என்றால் அது மற்றவருக்கும் வர வேண்டும் என்று நினைக்கிறான்.
தனக்கு ஒரு இன்பம் என்றால், அது தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
ஆனால், மகா பெரியவாளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்… இப்படி ஒருவர் இந்த உலகில் வாழ முடியுமா?
தன்னைப் பற்றி எவருமே குறை கூற முடியாமல் வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஆனால், மகா பெரியவா அப்படி வாழ்ந்தார்.