நல்லதற்கும் மேலே செல்க!

இப்படி அஞ்சு பத்து நிமிஷம் இருந்துவிட்டு அப்புறம் ஒவ்வொரு பிடுங்கலாக நாம் மாட்டிக்கொள்கிறபோது அதற்காக வருத்தப்படவேண்டாம். மாயையினால் எக்கச்சக்கமாக ஏற்கெனவே போட்டுக்கொண்ட முடிச்செல்லாம் அவிழ்க்கப்படும் வரையில் பிடுங்கல் இருக்கத்தான் செய்யும் என்று ஸமாதானம் பண்ணிக்கொண்டு அத்தனை முடிச்சையும் ஒவ்வொன்றாக அவிழ்ப்பதற்காக எத்தனை தார்மிகமான கர்மா செய்யணுமோ, எவ்வளவு பூஜை புநஸ்காரம், ஜபம், க்ஷேத்ராடனம் செய்யணுமோ அவ்வளவும் செய்து கொண்டே போவோம். இதிலேயே எத்தனையோ இடைஞ்சல், கஷ்டம் வரத்தான் வரும். சொன்னேனே, வைகுண்ட ஏகாதசி, ஆர்த்ரா தர்சனம் என்று ஸ்ரீரங்கம், சிதம்பரத்துக்குப் போனால்கூட குளிரில் விரைத்து, கூட்டத்தில் மொத்துப்பட்டு அவஸ்தைப்படத்தான் வேண்டியிருக்கிறது என்று! மலை ஏறுவது, அங்க ப்ரதக்ஷிணம், இப்படி எத்தனையோ ச்ரமம் இருக்கத்தான் இருக்கும். பொதுப்பணி என்றாலும் ஒரு வெள்ளக் காட்டிலே, சேற்றிலே, சதுப்பிலே போய் ஆஹாரம் தண்ணி வேளைக்குக் கிடைக்காமல் எத்தனையோ அவஸ்தைப்படவேண்டித்தானிருக்கும். ஆனால் இவற்றைப் பண்ணாமல், ‘வெறுமே ஆத்மாவாய் உட்கார்ந்திருக்கிறேன்என்று அஞ்சு, பத்து நிமிஷத்துக்கு மேல்ட்ரைபண்ணினால், ஒன்றும் முடியாமல் ஒரே கன்னாபின்னாவில் மனஸ் பிய்த்துக்கொண்டு போகிறதே! ‘ச்ரமப்படாமல் உடம்பை வைத்துக்கொள்கிறேன்என்று சும்மா இருக்கப் பார்த்தால், சும்மா எங்கே இருக்க முடிகிறது? சரீரம் கெட்ட கெட்ட அநுபோகங்களைக் கேட்கிறது. ஆக கர்மா, பக்தி பண்ணாவிட்டால் முடிச்சுக்கள் முன்னிலும் பலமாகிக்கொண்டே போகின்றன. அதனாலே, கர்மாவிலும், பக்தியிலும் எத்தனை கஷ்டம், இடைஞ்சல்கள் இருந்தாலும் பட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து நிறையக் கர்மாநுஷ்டானம் செய்யவும், ஈச்ரவ பக்தி செய்யவும்தான் வேண்டும்.

இவற்றுக்காகக் கஷ்டப்பட்டாலும் இவை முடிவிலே கஷ்டத்தை தீர்க்கும் கஷ்டங்களாக இருக்கின்றன. இவை கர்மாக் கட்டை அவிழ்ப்பதற்காகப் படவேண்டியவை வ்யாதிக் கஷ்டத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே ஊசி போட்டுக் கொள்வது, ஆபரேஷன் செய்துகொள்வது முதலான கஷ்டங்களைப் படவேண்டியிருக்கிற மாதிரிதான் இது. ‘இதைப் படமாட்டேன்என்றால் அப்போது சும்மா அத்வைதமாகவும் இருக்கமுடியாமல், இதற்கும் வராமலிருப்பதால் வேறே காரியம், ஈச்வர பக்திக்குப் பதில் வேறே வஸ்துக்களிடம் பற்று வைப்பது என்றுதான் போய் அதில் இதைவிட ஜாஸ்திக் கஷ்டங்களை வரவழைத்துக்கொண்டு, கர்மா மூட்டையை மேலும் பெரிசாக்கிக் கொள்வதாகவே ஆகும்.

ஆகவே, அத்வைதமாயிருப்பதைத் தவிர நமக்கு வேறென்னகடமை வெச்சிருக்கு?’ என்ற எண்ணத்தை அடியிலே ஒரே ஸ்வரமாக ச்ருதி நல்லது, தர்மமானது என்கிற தேவ கணங்களைவிட்டு வைத்தால் இவையும் ஆத்மாவுக்கு அந்யமான மனஸின் பாற்பட்டவையேயாகையால், இவற்றாலும் தொந்தரவு வரக்கூடும் என்ற நினைவு எப்போதும் நமக்கு இருந்து நம்மை ஜாக்ரதைப்படுத்த வேண்டும்.

World War-ல் (உலக யுத்ததில்) Allies (நேசநாடுகள்) என்று ப்ரிட்டன், அமெரிக்கா, ப்ரான்ஸ், அப்புறம் ரஷ்யா முதலானவை ஒருபக்கமும், ஹிட்லர் (ஜெர்மனி), முஸோலினி (இத்தாலி), ஜப்பான் ஆகியவை (அச்சு நாடுகள்) என்று இன்னொரு பக்கமாகச் சண்டை போட்ட போது, இருப்பதற்குள் நேசநாடகள்தான் நல்லவை, ஓரளவு தேவசக்தியோடு கூடியவை என்று தோன்றிற்று. ஹிட்லர், முஸோலினியும், ஜப்பான்காரர்களும் பண்ணினவை அஸுரத்தனமாகத் தெரிந்தன. நல்லவேளையாக நேச நாடுகள் ஜயித்தன. ஆனால் அப்புறம் என்ன ஆச்சு? அவர்களிலேயே இரண்டுபிரிவாகப் பிளந்து போயிருக்கிறார்கள். ஒருத்தரையொருத்தர் எதிர்த்துக்கொள்கிறார்கள். அஸல் யுத்தத்தைவிட மோசமாக ஸதாவும் கிலியிலும் அவநம்பிக்கையிலும் உலகத்தைத் தவிக்கும்படியாகக்கோல்ட்வார்நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு தூரம் போகவேண்டாம். இங்கே நம்ம ஸமாசரத்தை எடுத்துக்கொண்டால், நம்முடைய உசந்த நாகரிகத்தைக் கெடுத்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர்களை எதிர்த்து ஸ்வதந்த்ரப் போராட்டம் ஆரம்பித்து நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை நடத்திய தலைவர்களின் தன்மை, அவர்களுடைய கொள்கை முதலியவ்றைப் பார்க்கும்போபது மொத்தத்தில் நல்லதானஅதாவது தேவர்களின் படையானஅம்சங்களே நம்முடைய தரப்பாக இருக்கிறதென்றும், வெள்ளைக்கார ஆட்சி எத்தனை நல்ல வேஷம் போட்டாலும் அஸுரக் கட்சியைப் போலத்தானென்றும் தோன்றியது. அப்புறம், அவர்களைப் போகப் பண்ணிவிட்டு, ஸ்வதந்த்ர நாடாக நாம் இருக்கும்போது என்ன பார்க்கிறோம்? ஸ்வதந்த்ரப் போராட்டத்தை ஜயித்துக்கொடுத்த, நல்லதாகத் தெரிந்த கோஷ்டியிலேயே இரண்டு, மூன்று, நாலு என்று பிரிவுகள் ஏற்பட்டு ஒருத்தரையொருத்தர் அஸுரர்களாக வர்ணித்துக்கொண்டு ஆயுதமில்லாவிட்டாலும் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டிருப்பதைதான் பார்க்கிறோம். இதிலே யாரைக் கூடிய மட்டும் தேவஸக்திகளோடு சேர்த்துச் சொல்லலாம் என்றே ஸரியாகத் தெரியாமல் ஜனங்களுக்குள் அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டுப் பிரிந்து பிரிந்து நிற்கிறார்கள்.

எதற்குச் சொல்ல வந்தேனென்றால், எந்த நல்லதும் அப்படியே சாச்வதமாயிருந்துவிடாமல் அதிலும் கெடுதல்கள் வரத்தான் செய்கின்றன. ஆகையினால் நல்லது என்று ஒன்றைப் பிடித்த பிடியாக வைத்திருக்க வேண்டுமென்ற ஆசையும் இல்லாமல், ஆனாலும் இப்போது நம்மைப் பிடித்த பிடியாகப் பிடித்தாட்டுகிற கெட்டதைப் போக்கிக்கொள்ள நல்லவற்றைத்தான் நாம் பின்பற்ற வேண்டுமென்று புரிந்துகொண்டு ஸின்ஸியராகக் கர்மாநுஷ்டானம், பக்தியுபாஸனை செய்துகொண்டே போகவேண்டும். கர்ம யோகம், அப்புறம் பக்தி யோகம் என்று சொல்லி முடிவிலே பகவான் நிலை நாட்டின அந்த ஸாங்க்ய (ஞான) யோகத்தையே, அவர் கர்மயோகத்தைச் சொல்வதற்கு முன்னாலும் அஸ்திவாரம் போலப் போட்டுக்கொடுத்ததை மறக்காமல் நாம் ஆரம்பத்திலிருந்தே சிறிதேனும் ஆத்ம த்யானம் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் தேவர்களுக் கிடையிலேயே அல்லது தேவர்களாலேயே சண்டை என்பதற்கும் இடமேற்படுவதற் கில்லாமல், சண்டைக்கு ஆஸ்பதமாக ஜீவபாவத்துடன் இருக்கிற ஆஸாமியே எடுபட்டுப்போய் ஆத்மா மட்டும் இருப்பதான, சண்டை யறியாத சாச்வதமான சாந்த நிலைக்கு என்றைக்காவது ஒரு நாள், இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும் எந்த ஜன்மாவிலாவது ஒரு நாள்போய்ச் சேர கொஞ்சங் கொஞ்சமாக வழி திறந்துவிடும்.