பலனளிப்பவன் ஈச்வரனே!

இன்னம் கொஞ்சம் ஆலோசனை பண்ணிக்கொண்டு போனால், இதென்ன இரண்டு பக்திகள்? ஈச்வர பக்தி என்று ஒன்று, குரு பக்தி என்ற இன்னொன்று? அப்புறம் இரண்டும் ஸம எடையா என்று நிறுத்துப் பார்ப்பது? இப்படி வேண்டாம்! ஈச்வரன்தானே தன்னை நமக்குக் காட்டிக் கொடுப்பதற்காக குருவாக வந்திருக்கிறான்? அப்படித் தானே ஸகல சாஸ்த்ரங்களும் சொல்லியிருக்கின்றன? அத்தனை பெரியவர்களும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்? அவரவர்களும் தங்கள் இஷ்டமூர்த்தியே குரு ஸ்வரூபத்தில் வந்து தங்களை நல்ல வழியில் திருப்பிவிட்டு அநுக்ரஹித்ததாகத் தானே சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

(விநாயகர்) அகவலில் அவ்வையார் விக்னேச்வரரே குருவாக வந்தார் என்கிறாள்*. அவள் அப்படிச் சொல்கிறாளென்றால் அநுபூதி (கந்தரநுபூதி) யில் அருணகிரிநாதர்குருவாய் வருவாய்என்று முருகனை வேண்டிக் கொண்டு முடிக்கிறார். இங்கே அநுபூதி பெறாத நம் சார்பில் மனமுருகி வேண்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முருகன் ஏற்கனவே குருவாக வந்து அநுக்ரஹம் செய்து அவர் அநுபூதி பெற்று விட்டவர். இதை (நூலின்) உள்ளே சொல்லியிருக்கிறார். ‘எல்லாக் கார்யத்தையும் விட்டு விட்டு மௌனமாக ஆத்மாவுக்குள்ளே முழுகிப் போய்விடு; சும்மாயிரு சொல்லறஎன்று ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி தன்னிடம் சொன்னார்; உடனே அப்படியே ஸகல வஸ்துவும் மறைந்து போய் ஏக வஸ்துவில் தான் நின்று விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு உபதேசத்தைப் பண்ணி, அந்த உபதேசம் உள்ளநுபவமாகவும் ஆகுமாறு முருகன் பண்ணினானென்பது அவன் குரு ஸ்வரூபமாக வந்து விட்டான் என்பதையே காட்டும். மாணிக்க வாசகரும் திருப்பெருந்துறையில்ஆவுடையார் கோவில் என்கிறது அந்த ஸ்தலத்தைத்தான்; அங்கேகுருந்த மரத்தடியில் குரு ஸ்வரூபமாக வந்து பரமேச்வரன் தம்மை ஆட்கொண்டு விட்ட பரம கருணையைப் பல இடங்களில் உருகி, உருகிச் சொல்லியிருக்கிறார்.

அருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமை

என்கிற மாதிரி, எப்பேர்ப்பட்ட உத்க்ருஷ்டமான ஏக புருஷன் இப்படி இந்த பூலோகத்திலே நம் கண்ணுக்குத் தெரிந்து, நாம் கலந்து பழகும்படியாக குரு என்று வந்து அருள் பண்ணியிருக்கிறான் என்பதை நிறையச் சொல்லியிருக்கிறார்.

காளிதாஸன் அம்பாளைக் குறித்துச் செய்துள்ளநவரத்னமாலிகையில் அவள் குரு ரூபத்திலே வந்து உயர்ந்த ச்ரேயஸ்களைக் காட்டினாள் என்கிறான்:

பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடுமென்று சொன்னால் நாம் செலுத்தும் அந்த பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்கிற எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை; பலன்களைத் தருகிற பலதாதாவாக ஈச்வரனே இருக்கிறான். அவன்தான் பாபபுண்யம் பார்த்து எல்லாருக்கும் எல்லாப் பலனையும் கொடுக்கிறான். அவ்விதத்தில் நாம் பண்ணுகிற பக்திக்குப் பலனாக அவன் பரம க்ருபை செய்து, ஞானத்தைத் தந்து, அந்த ஞானத்துக்குப் பலனாக மோக்ஷாநுபூதியைக் கொடுக்கிறான். ஆக, பலன் தருவது நாம் பண்ணும் பக்தியே அல்ல; அதற்குப் பிரதியாக ஈச்வரன் செய்யும் கிருபைதான் பலனைத் தருவது.

பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தி பண்ணுகிறவன் அதற்கு ப்ரதியே எதிர்பார்க்க மாட்டான். ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பார்த்து விட்டால் அது வியாபாரம்தானேயொழிய பக்தி இல்லை என்றே பாகவதாதி நூல்களில் சொல்லியிருக்கிறது. இப்படி பக்தன் (பிரதி வேண்டாமல்) இருந்தாலும் இவனிடமிருந்து நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட பகவானுக்கு மனசு கேட்குமா? அதனால் அவன் க்ருபை பண்ணத்தான் பண்ணுவான். ஞானத்தை அநுக்ரஹிக்கத்தான் செய்வான். பக்தனை ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தில் சேர்க்கத்தான் செய்வான்.