ஆனாலும் த்ரிமூர்த்திகளில் ஒருவராக இருக்கிற அவருக்கு, நாலு வாயாலும் நாலு வேதங்களைச் சொல்லிக் கொண்டு அந்த மந்த்ர சக்தியாலேயே ஸ்ருஷ்டி செய்கிறவருக்கு, ஆலயத்தில் இடமில்லாமல் இருக்கக்கூடாது என்று ஆகம சாஸ்திரங்களில் ஒன்று செய்திருக்கிறார்கள். மூலஸ்தான விமானத்தின் மேல், கர்ப்ப க்ருஹ வாஸலுக்கு மூன்று பக்கத்திலும் த்ரிமூர்த்திகளில் ஒவ்வொருவரை வைப்பது என்று விதி செய்து, அதில் ப்ரஹ்மாவுக்கும் பிம்பம் வைக்கப் பண்ணியிருக்கிறார்கள். யாரும் அதிகம் கவனிக்காத இடத்தில், கவனித்தாலும் ‘ஸ்வாமி’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல், பொம்மை பார்க்கிற மாதிரி நினைக்கிற இடத்தில் வைத்திருக்கிறார்கள்!