அம்பா, மாதா; அம்மன், தாயார்

மாதா’, ‘அம்பாஎன்று இரண்டு வார்த்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் குழந்தை வாயில்அம்பாஎன்றுதான் சட்டென்று வரும். ‘அம்மா’, ‘அம்பாஇரண்டும் ஒன்றுதான். ‘மாதாஎன்பது இலக்கண ரீதியான வார்த்தை. தமிழில்தாயார்என்கிற மாதிரி. அம்பா, அம்மா என்கிறபோது ரொம்ப எளிமை. மாதா, தாயார் என்கிறபோது ஒரு ஸ்தானம் கொடுத்து உயர்த்தி வைத்தாற் போல இருக்கிறது. பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட தேவியைப் பற்றிச் சொல்லும்போதுஅம்மன்’, ‘அம்மன் ஸந்நிதிஎன்கிறோம். ‘அம்மன்என்னும்போதுஅம்மாஎன்பதை விடவும் குழந்தை பாஷையில் சொல்கிற மாதிரியிருக்கிறது. அப்பாஅப்பன் மாதிரி அம்மாஅம்மன். ஸாதாரணமாக ஆண்பால் பெயர்கள்தான்ன்னில் முடியும். குழந்தை பாஷைக்கு இலக்கணமில்லை. அதனால்அம்மாவும்அம்மனாகி விடுகிறது. பரமேச்வர பத்னியை அம்மன் என்கிறோம். பொது வழக்கிலேயே பரமேச்வர பத்னியை அம்பா, அம்பாள் என்று சொல்லுகிறோம். மஹாவிஷ்ணுவின் பத்னியைப் பற்றிச்சொல்லும்போதோதாயார்’, ‘தாயார் ஸந்நிதிஎன்கிறோம்.

(ஸம்ஸ்க்ருத அகராதியான) ‘அமர (கோச)’த்தில் பார்த்தாலும் இப்படியே இருக்கிறது. விஷ்ணு பத்னியைச் சொல்லும்போது, “இந்திரா, லோக மாதாஎன்று குறிப்பிட்டுவிட்டு, சிவபத்னியைச் சொல்கிறபோது, “அபர்ணா பார்வதீ துர்கா ம்ருடாநீ சண்டிகா அம்பிகாஎன்று, ‘அம்பாப் பேருக்கே அழகு பண்ணிஅம்பிகாஎன்று குறிப்பிட்டிருக்கிறது.

தனம் வேண்டுமென்றே லக்ஷ்மியிடம் போகிறோமாதலால், அவளை நிறைய தனம் படைத்த பெரிய சீமாட்டியாக பாவித்துத்தான்தாயார்என்றும்மாதாஎன்றும் மரியாதை செய்கிறோம் போலிருக்கிறது!

மாத: அநிசம் கலயந்து நாந்யேஎன்று மாதாவாக அவளைக் கூப்பிடுபவர், ‘ஸரோருஹாக்ஷிஎன்றும் ச்லோகத்தில் பெயர் கொடுத்திருக்கிறார். தாமரை போன்ற கண் படைத்தவள் என்று அர்த்தம். பகவானுக்கும் புண்டரீகாக்ஷன் என்று இதே அர்த்தத்தில் பெயரிருக்கிறது. ஸதிபதிகள் ஒற்றுமை.