ஸ்கந்தன் என்பது லோகம் முழுக்கப் பரவி ப்ரக்யாதியான பெயர். “ஸ்கூல்” என்பதை ‘இஸ்கூல்’ என்கிற மாதிரி இந்த ஸ்கந்த நாமாவைத்தான் தேசாந்தரங்களில் ‘இஸ்கந்தர்’ என்று ஆக்கிக் கொண்டார்கள். ‘அல்’ என்பது ஸெமிடிக் பாஷைகளில் ஒரு குறிப்பிட்ட வஸ்துவைத் தெரிவிக்கும் definite article; இங்கிலீஷ் “the” மாதிரி. மரியாதையைக் காட்டும் வாசகமாகவும் ஒரு வார்த்தைக்கு முன்னே ‘அல்’ சேர்ப்பார்கள். இப்படி உருவான ‘அல் இஸ்கந்தர்’ தான் க்ரீஸ்வரை போய் ‘அலெக்ஸாண்டர்’ என்று ஆனது!
ஸிக்கந்தர் என்பதும் ஸ்கந்தர் என்பதன் இன்னொரு திரிபுதான். ஆகையால் ஸெகந்திராபாத் என்கிற ஸிக்கந்தராபாத்தில் ஸமீபத்தில் ஸ்கந்தகிரி ஆலயம் விசேஷமாகத் தோன்றியிருப்பதும் பொருத்தந்தான்.
ஸ்வீடன், நார்வே, டென்மார்க் எல்லாம் சேர்ந்து ஸ்கான்டிநேவியா என்றிருக்கிறதல்லவா? ஸ்கான்டியா என்ற பிரதேசத்தை வைத்துத்தான் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஹிந்து–இன்டியா மாதிரி ஸ்கந்த–ஸ்கான்டியா!