தேசிக ரூபத்தில் தேவி

நம்முடைய மடத்துக்கு அம்பாள் காமாக்ஷி ரொம்ப முக்கியம்; ஜீவநாடி அவள்தான். அவளைப் பற்றி ஐநூறு ச்லோகம், “மூக பஞ்சசதீஎன்று. அதைப் பண்ணிய மூகர் அவளையே முதல் சதகத்தில் ஒரு இடத்தில் “குருமூர்த்தே” என்று கூப்பிட்டுஉனக்கு நமஸ்காரம்மா!” என்று சொல்லியிருக்கிறார்குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி*1 அவளுடைய க்ருபையாலேயே அத்வைத ஞானம் ஸித்திப்பதை பஞ்சசதீயில் அநேக இடங்களில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முதல் சதகத்தில் துர்காம்பாள், சாமுண்டேச்வரி, அன்னபூர்ணேச்வரி, வாராஹி முதலிய பல ரூப பேதங்களாகவும் காமாக்ஷியையே சொல்லிவிட்டு, ஏறக்குறைய முடிக்கும் இடத்தில், “அம்மா! உன்னுடைய க்ருபையால் சிலபேர் குரு சரணத்தில் சரணாகதி பண்ணி, அதனால் ஸகுணாபாஸனையோ, நிர்குணோபாஸனையோ எதுவோ ஒன்றால் ஏணியில் ஏறிப்போவது போலப் போய் மோக்ஷம் என்னும் அரண்மனை உப்பரிகையில் வாஸம் செய்கிறார்கள்என்று சொல்லியிருக்கிறார்:

ஸத்க்ருததேசிகசரணா: ஸபீஜநிர்பீஜயோகநிச்ரேண்யா |
அபவர்கஸெளதவலபீம் ஆரோஹந்த்யம்ப கே()பி தவ க்ருபயா || *2

ஸெளதவலபிஎன்றால் அரண்மனை மேல் மாடம். ‘ஸெளதம்என்றால் அரண்மனை நேர் அர்த்தம், ‘சுதையால் ஆனது; சுதைக் கட்டிடம்என்பது. ஸுதை, ஸுதா ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு அம்ருதம் என்பதுதான் முக்யமான அர்த்தம். ஜில்லென்று ஹிதமாக உள்ள அம்ருதப் பேரையே வெந்து வேக்காடாக்கும் சுண்ணாம்புக் கலவைக்குப் பேராகக் கொடுத்திருக்கிறது! நல்லதில்லாத ஒன்றை மங்களமாகச் சொல்லவேண்டும் என்று அதற்கு நேரேதிராக உள்ள நல்ல வஸ்துவின் பேரில் சொல்லும் வழக்கமுண்டு. அடிமண்டுவைப்ருஹஸ்பதிஎன்கிற மாதிரி. ‘மங்கல வழக்கு’,’ Euphemism என்று இதைச் சொல்வார்கள். வேதாந்தமாகப் பார்த்தால், கெட்டதைக் கூட நல்லதாகப் பார்க்கவேண்டும் என்ற ஸம பாவனை வருவதற்காக இப்படிச் சொல்வது என்கலாம்ச்லோகத்தில் மோக்ஷத்தைச் சொல்லும்போது சுதை மாளிகை என்றுஸுதாபோட்டதில் உள்ளர்த்தமிருக்கிறது. [‘ஸுதாஎன்பதே பெயரெச்சத்தில்ஸெளதஎன்றாயிருக்கிறது.] அம்பாளை யோக மார்க்கத்தில் உபாஸனை செய்யும்போது முடிவாக சிரஸ் உச்சியில் ப்ராணசக்தி பரமாத்ம சக்தியோடு இரண்டறக் கலந்து மோக்ஷம் சித்திக்கும். அந்த ஸமயத்தில் அங்கே ஸுதா தாரை, அம்ருததாரை, பெருக்கெடுக்கும். அதையும் குறிப்பிடுவதாகவேஸெளதவலபி என்று கவி போட்டிருக்கிறார். யோகம் என்று நிர்குணமாகப் பண்ணும்போது ஸுதா தாரை பெருக்கெடுக்கும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு ஸாதனை செய்யப்படுகிறது. அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் ப்ரேம பக்தியிலேயே ஸகுணமாக உபாஸித்தாலும் அவள் அந்த உச்ச ஸ்தானத்துக்கு ப்ராண சக்தியை ஏற்றி அம்ருத தாரையில் முழுக்கடிக்கத்தான் செய்வாள். இந்த ஸகுணம்நிர்குணம் இரண்டையுமேஸபீஜம் நிர்பீஜம்என்று ச்லோகத்தில் சொல்லியிருப்பது. அடியிலிருந்து உச்சிக்கு ப்ராணசக்தி ஏறுவதால் ஏணியில் ஏறிப்போவதைச் சொல்வதும் பொருத்தமாயிருக்கிறது. ‘நிச்ரேணிஎன்ற வார்த்தைக்குஏணிஎன்று அர்த்தம். ‘நிச்ரேண்யா’ – ‘ஏணியினால்’, ‘ஏணி வழியாக’. ‘ச்ரேணிஎன்றால் வரிசை. அதிலிருந்துதான் ஏணி என்ற வார்த்தை வந்திருக்கிறது. ‘ச்ரமணர்என்பதுஅமணர்என்றும்ச்ராவணிஎன்பதுஆவணிஎன்றும் ஆகிறமாதிரிச்ரேணிஎன்பதுஏணிஆகிறது.

பராசக்தியின் க்ருபை இருந்தால்தான் ஸத்குரு கிடைப்பதும், அவரிடம் சரணாகதி பண்ணத் தோன்றுவதும். அதைத்தான்ஸத்க்ருத தேசிக சரணா:…. தவ க்ருபயா” என்று சொல்லியிருக்கிறார்.

இங்கே ஸத்குரு என்பதற்குதேசிகஎன்ற வாரத்தையையே போட்டிருக்கிறது என்று காட்ட வந்தேன். மோக்ஷ உச்சிக்கு ஏற்றிவிடக்கூடிய சக்தியுள்ளவராகதேசிகர்இருக்கிறார்.

அம்பாள் க்ருபையால் தேசிகர் கிடைத்து அவரிடம் சரணாகதி செய்வதையே மூகர் சொன்னாரென்றால், காளிதாஸர் அம்பாளையே தேசிக ரூபிணியாகச் சொல்லியிருக்கிறார். ‘ச்யாமளா தண்டகம்பண்ணிய அவர்ச்யாமளா நவரத்னமாலாஎன்ற ஸ்தோத்ரமும் செய்திருக்கிறார். அதில்,

தயமாந தீர்க்க நயநாம்
தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்

என்று குரு ஸ்வரூபிணியாக அவளைச் சொல்லியிருக்கிறார். ‘தயமானஎன்பதில் வருகிறதயவைதர்சிதாப்யுதயாம்என்று திருப்பி அழகாக சப்தாலங்காரம்சொல்லணிசெய்திருக்கிறார்.

அம்பாளுடைய அழகான நீண்ட நேத்ரங்களில் தயை பெருகுகிறது. அப்படி தயாகடாக்ஷம் செய்கிறவள் தேசிக ரூபத்தில்குரு ஸ்வரூபிணியாகவந்து அப்யுதயத்தைக் காட்டுகிறாள் என்கிறார். ‘அப்யுதயம்என்றால் நல்ல எழுச்சி. ‘ஸூர்ய உதயம்என்பதை ஸூர்யன் எழுந்தான் என்கிறோம். ‘உதயம்எழுச்சி. ‘அப்யுதயம்’ – உயர்வு பொருந்திய எழுச்சி. ‘தர்சித அப்யுதயாம்என்பதற்கு இரண்டு தினுஸாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அம்பாள் தன்னுடைய அனுக்ரஹத்தின் மேலான எழுச்சியை பக்தனுக்குக் காட்டுகிறாள் என்பது ஒன்று. இன்னொன்றுபக்தனுக்கு அவனுடைய மேலான அத்யாத்ம எழுச்சியைக் காட்டுகிறாள்; அதாவதுதேசிகசப்தத்திற்கேற்ப, அவன் ஆத்யாத்மிகமாக உயரே எழும்ப வழிகாட்டுகிறாள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

தயாகடாக்ஷத்தைச் சொல்லி உடனே தேசிக ஸ்வரூபத்தைச் சொல்வதில் நிரம்பப் பொருள் பொதிந்திருக்கிறது. கண் பார்வைதான் ஒருத்தரை வழிநடத்திச் செல்வது. கண்ணில்லாதவரை வேறெவராவது தானே பிடித்து நடத்திச் செல்லவேண்டியிருக்கிறது? ஆகையால் கண்ணே நம்மை அழைத்துப் போவதாக ஆகிறது. கண் காட்டிக் கொடுக்கும்படிதான் கால் நடப்பது. ‘நயனம்என்கிற வார்த்தைக்கும் வழிநடத்திப் போவது, முன்னே சென்று வழி காட்டுவது, ‘லீட்பண்ணுவது என்றுதான் அர்த்தம். நம் ஒவ்வொருவருடைய கண்ணும் அவரவருக்குத்தான் வழிகாட்டி அழைத்துப் போகிறது; அம்பாளுடைய கண்ணோ அதிலிருந்து பெருகும் தயா கடாக்ஷத்தால் லோகத்து ஜனங்களையெல்லாம் ச்ரேயோ மார்க்கத்தில் வழிகாட்டி அழைத்துப் போகிறது!

உத்தம குருவாயுள்ள எவருமே சிஷ்யர்களுக்குக் கடாக்ஷ மாத்திரத்தால் தீக்ஷை தந்து நல்வழி நடத்திச் செல்லமுடியும்.*3 அதற்குநயன தீக்ஷைஎன்றும்சக்ஷு தீக்ஷைஎன்றும் பெயர். சக்ஷு என்றாலும் கண்தான்.

மீநாக்ஷியம்மனை சக்ஷுதீக்ஷை தரும் குருவாகவே மஹான்கள் அநுபவத்தில் கண்டிருக்கிறார்கள். ஒரு தாயார்மீன் தான் இட்ட முட்டையைக் கண்ணால் பார்த்தே பொறிக்க வைத்துவிடும் என்று நம்பிக்கை. முட்டை பொரிந்ததும் உள்ளேயிருந்த கரு முழு ப்ராணியாகிறது. அப்படியே மீன்போன்ற நயனங்களைக் கொண்ட மீநாக்ஷி ஒருவரைக் கடாக்ஷித்து, சக்ஷு தீக்ஷை கொடுத்தால் அந்த ஜீவனுக்குள்ளே கரு மாதிரி உள்ள ஆத்ம தத்வம் பூர்ணமாக விகஸித்து [மலர்ச்சி கண்டு]விடும்.

மீநாக்ஷியையே மந்த்ர சாஸ்த்ரத்தில் ச்யாமளா என்று சொல்வது. மந்த்ரிணி, மாதங்கி, ச்யாமளா என்ற மூன்று பெயர்களும் மீநாக்ஷியுடையவையே. அவளைக் குறித்துத் தான் காளிதாஸர் இந்த நவரத்னமாலை பாடியது. ஆகையால் அவளுடைய தயா கடாக்ஷத்தை அவர் சொல்லும்போதே குருவாக அவள் சக்ஷு தீக்ஷை தருவதை வ்யங்க்யமாக [மறைமுகமாக]த் தெரிவித்து விடுகிறார். அப்புறம் வ்யக்தமாகவே [வெளிப்படையாகவே] “தேசிக ரூபேணே தர்சிதாப்யுதயாம் என்று சொல்லிவிடுகிறார்.

ஞானாம்பிகையாக உள்ள அவள் தேசிக ரூபத்தில் எல்லோருக்கும் அருள்புரிந்து நல்லவழியில் போகப் பண்ணும்படி ப்ரார்த்தனை செய்வோம்.