ஸாதன சதுஷ்டயத்தில் தேறிய பிறகு மூன்றாவது ஸ்டேஜ், முடிவான ஸ்டேஜ், அதற்குப் போகிறவர்களாக இங்கே யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது வீடு வாசலை விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்ட அப்புறமே அநுஷ்டானம் பண்ணவேண்டிய ஸ்டேஜ். அதனால் அதை விஸ்தாரம் பண்ண வேண்டாந்தான். ஆனாலும் அத்வைத ஸாதனை என்று ஆரம்பித்து இத்தனை1 சொன்ன பிறகு அதையும் கொஞ்சம் சொல்லிப் பூர்த்தி பண்ணலாமென்று……..
அதில் வரும் அம்சங்களான உபதேசம் கேட்டுக் கொள்வது, கேட்டதை உருப்போட்டுப் போட்டு உறுதி பண்ணிக் கொள்வது, அப்புறம் அதிலேயே அந்தஃகரணத்தை நிறுத்தி தியானிப்பது ஆகிய விஷயங்கள் எல்லாருக்குமே, எந்த மார்க்கத்திலும் போகிறவருக்கும், அடிநிலையிலிருந்து ஆரம்பித்து எல்லா நிலையில் முயற்சி பண்ணுகிறவர்களுக்கும் அவரவர்களின் அவச்யத்திற்கும் சக்தி ஸாமர்த்யங்களுக்கும் ஏற்றபடி அநுஸரிக்கப்பட வேண்டியவையே. அதனால் [அவற்றைப் பற்றிச்] சொல்லாமல் விடக்கூடாது.