மகிழ்ச்சிக்குரிய மற்றொன்று, தேசத்தின் இலட்சிய வாசகமாகவே உபநிஷத வாக்கான ‘ஸத்யமேவ ஜயதே’ என்பதைத் தேர்ந்தெடுத்திருப்பதாகும். இதனால் உண்மையே வெல்லும் என்பது சநாதன தர்மத்தின் ஆதார சாத்திரமாம் வேதத்தின் பெரும் பிரமாணத்திலேயே மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இங்குங்கூட அந்த நவீன மனப்பான்மையாளருக்கு உரிய விதத்திலேயே, மத சாத்திரம் – தத்துவ சாத்திரம் என்று மேநாட்டார் வேறு படுத்திக் கூறும் இரண்டில் இவ்வாசகம் ஹிந்து மதமாகக் கொள்வதற்கின்றி எல்லோருக்குமுரிய தத்துவ சாத்திரமாயும், அதோடு உலகெங்குமே ஒரு நன்னெறியில் கருத்து என்ற அளவில் வழங்கப்படுவதாயுமிருப்பதாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. எவ்விதமாயினும் மறைமொழியே தேசிய இலட்சிய வாசகமாயிருப்பதைப் பாராட்டுகிறோம்.