*உச்சரிப்பு பற்றி விளக்குவோம்! என்று தொடங்கி, சில குறிப்புகளை தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது. ஒலி; ஏற்றம், இறக்கம்; நீட்டல், சுருக்கல்; உச்சரிப்பில் உள்ள முயற்சி, நிறுத்த வேண்டிய இடங்கள் பற்றிய விவரம்; உச்சரிப்பில் தெளிவு – போன்றவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. வேத மந்த் ரங்களைச் சொல்லும்போது, எழுத்து பிசகாமல், வகுக்கப்பட்ட முறை யின்படி உச்சரித்து, சரியான ஏற்ற இறக்கங்களுடன் சொல்ல வேண் டும் – என்பது பற்றி இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே நாம் பார்த்தோம். சப்த அலைகளுக்கு இருக்கும் சக்தி, விஞ்ஞானி களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். வேத மந்த்ரங் களை முறையாக ஓதும்போது, ஒரு அசாதாரண சக்தி பிறக்கிறது என்பதால், உச்சரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விளக்கத்துடன் இந்த உபநிஷதம் தொடங்குகிறது.
பின்னர் – இந்த உலகம்; ஒலி; கல்வி; உயிர்களின் சிருஷ்டி; உடல் – ஆகியவை பற்றிய சிந்தனை வற்புறுத்தப்படுகிறது. ஓங் காரத்தின் மேன்மை கூறப்படுகிறது. இதையடுத்து எல்லா இசைகளிலிருந்தும் நல்ல மாணவர்கள் தன்னிடம் வர வேண்டும் என்று குரு வேண்டிக் கொள்கிறார். ஆன்மாவின் உயர்வு கூறப் படுகிறது.
ஓம்” என்று ஓதி பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று குரு கூறுகிறார். அந்த மந்த்ரத்தில் ஓங்காரத்தின் சிறப்பு விரிவாகக் கூறப்படுகிறது. ‘ஓங்காரமே இறைவன். அனைத்தும் ஓங் காரமே. சரி என்பதற்கு ‘ஓம்! என்று கூறப்படுகிறது. கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதற்கும் ‘ஓம்’ என்றே சொல்லப்படு கிறது. ஸாம வேதத்தை இசைப்பவர்கள் ‘ஓம்’ என்று கூறியே தொடங்குதிறார்கள். ரிக் வேத மந்த்ரங்களும் அவ்வாறே ‘ஓம்’ ் என்று தொடங்கப்படுகின்றன. யாகத்தின் தலைவன், வேள்வியின் தொடக்கத்தில் உத்தரவு கேட்கும்பொழுது, யாகத்தை நடத்தி வைப்பவர், ‘ஓம்” என்றே கூறுகிறார். தலைமைப் புரோகிதர் ‘ஓம்’ என்று கூறியே தனது சம்மதத்தைத் தெரிவிக்கிறார். அக்னி ஹோத்ரம் செய்வதற்கு ‘ஓம்” என்றே அனுமதி அளிக்கப்படுகிறது. வேத பாடத்தைக் கற்பதற்காக வருகிற மாணவர்களுக்கு குரு மார்கள் ‘ஓம்! என்று கூறி கல்வியை ஆரம்பிக்கிறார்கள். ‘ஓம்’ என்று தியானம் செய்பவன் இறைவனை அடைகிறான்.
இதன் பின்னர் சில கடமைகள் வரையறுக்கப்படுகின்றன. ‘கற்பதும், கற்பிப்பதும் முக்கிய கடமைகள். ஒழுங்குமுறை கட்டுப் பாடாகிய ரிதம், சத்யம், தவம், இந்திரியங்களை அடக்குதல், அமைதி – ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். மனிதகுல நன்மையைப் பேண வேண்டும். நல்ல பிள்ளைகளைப் பெற வேண்டும்.
இதன் பிறகு ஒரு மாணவனுக்கு வர வேண்டிய தன்னம் பிக்கை புகட்டப்படுகிறது. தன்னுடைய முயற்சியை நம்பி, மாணவன் கல்வியைக் கற்க வேண்டும் என்பதால், இது தொடர்பான மந்த்ரம் இப்படி கூறுகிறது; ‘வாழ்க்கை எனும் பெரும் மரத்தை வளரச் செய்பவன் நான். என்னுடைய புகழ், மலையின் சிகரம் போல் உயர்ந்திருக்கும். அது புனிதம் வாய்ந்தது. சூரி/னைப்போல நான் அழிவற்றவனாகத் இிகழ்வேன். ஒளி மிக்கவனாக இருப் பேன். உணர்வு பெற்றவனாக இருப்பேன்’. இப்படிப்பட்ட தன்னம் பிக்கை ஒரு மாணவனுக்கு வர வேண்டும்.
மாணவர்களுக்குச் சில கட்டளைகள் இடப்படுகின்றன. இவை வேதம் ஓதி முடிந்த பிறகு வருகிறவை. அதாவது குருகுலவாசம் முடிந்து மாணவன் குருவிடமிருந்து விடைபெறுகிறபோது, அவனுக்கு குருவினால் உபதேசிக்கப்படுகிற கட்டளைகள் இவை.
ஸத்யம் வத
தர்மம் சர
ஸ்வாத்யாயான் மா ப்ரமத:
ஆசார்யாய ப்ரியம் தனமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸி: ஸத்யான் ந ப்ரமதிதவ்யம்
தர்மான் ந ப்ரமதிதவ்யம்
குசலான் ந ப்ரமதிதவ்யம்
பூத்யை ந ப்ரமஇதவ்யம்
ஸ்வாத்யாய ப்ரவசனாப்யாம் ந ப்ரமதிதவ்யம்
தேவபித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்
மாத்ரு தேவோ பவ
பித்ரு தேவோ பவ
ஆசார்ய தேவோ பவ
அதிதி தேவோ பவ
உண்மைமைப் பேசுங்கள்.
தர்ம வழியிலேயே செல்லுங்கள்.
கல்விப் பயிற்சியை விட்டு விடாதீர்கள்.
குரு தட்சணையை கொடுத்து ஆச்சார்யருக்கு மரியாதை செய்யுங்கள்
சந்ததிச் சங்கிலியை விட்டு விடாதீர்கள்
உண்மையிலிருந்து விலக விடாதீர்கள்.
தர்மத்திலிருந்து விலக விடாதீர்கள். நல்லவற்றிலிருந்து விலக விடாதீர்கள்
சமுகத்திற்கு நன்மை செய்யும் காரியங்களிலிருந்து வில& விடாதீர்கள்
கற்பதிலிருந்தும், கற்பிப்பதிலிருந்தும் விலக விடாதீர்கள்.
தேவர்களுக்கும், முன்னோர்களுக்கும், செய்ய வேண்டிய காரியங்களிலிருந்து விலக விடாதீர்கள்.
தாயை தெய்வமெனப் போற்றுபவனாக இருங்கள்.
தந்தையை தெய்வமெனப் போற்றுபவனாக இருங்கள்.
ஆச்சார்யரை தெய்வமென போற்றுபவனாக இருங்கள்.
விருந்தினரை தெய்வமென போற்றுபவனாக இருங்கள்.
இதில் இந்த மாதிரி கட்டளைகள் இன்னமும் இருக்கின்றன. இவற்றில் என்ன புதிதாகச் சொல்லப்பட்டு விட்டது – என்று நினைத்துவிடக் கூடாது. ‘உண்மை பேசு, மாதா, பிதா, குரு – ஆகியோரை தெய்வமெனப் போற்று. விருந்தினரை மதித்து நடந்து கொள்…” என்தற உபதேசமெல்லாம் மிகவும் பழகிப் போனது தானே என்று நினைத்துவிடக் கூடாது. இந்த மாதிரி உபதேசங்கள், இப்போது பழகிப் போனவைதான்; ஆத்திச்சூடி சமாச்சாரங்கள் தான். ஆனால் இந்த உபநிஷத உபதேசங்கள், எப்போது சொல்லப்பட்டவை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இவை என்று கூறப்பட்டவை என்று இன்று வரை எவராலும் நிர்ணயித் துச் சொல்ல முடியாத காலத்தைச் சார்ந்தவை இந்த உபதேசங்கள். உலகின் பல பாகங்களில் மனித நாகரிகம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே, பாரத நாட்டுச் சிந்தனை இந்த உயர்வை எட்டி இருக்கிறது. அன்று சொல்லப்பட்ட இந்த உபதேசங்கள், இன்று வரை வலியுறுத்தப்படுகிற சாஸ்வதமான தர்மங்களாக விளங்கு இன்றன. அதுதான் இவற்றின் உயர்வு.
இந்த உபதேசங்களில் ‘கற்பது, கற்பிப்பது இரண்டையும் விட்டு விடக் கூடாது! என்று வற்புறுத்தப்படுவதைப் பார்த்தோம். கற்றவன், தான் கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போதுதான், அறிவு பரவுகிறது. அதே சமயத்தில் மற்றவர்களுக்குக் கற்பிக்கும் ஆச்சார்யன் கூட, தான் கற்பதை நிறுத்தி விடக் கூடாது. கற்பது என்பது, ஒரு நிலையில் முடிந்து விடுகிற விஷயம் அல்ல. அது முடிவில்லாமல் தொடர்க விஷயம். இன்றும் கூட, உண்மை யான ஆசிரியர்கள், தாங்கள் கற்பதை நிறுத்தி விடுவதில்லை; மேலும் மேலும் படித்துத் தெரிந்து கொள்கிறார்கள். இதன் அவசியம், அன்றே வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உபதேசம் தொடர்கிறது : ‘தமையை ஏற்படுத்தாத காரியங்களைச் செய்ய வேண்டும்; மற்றவற்றைச் செய்யக் கூடாது. நல்ல பண்புகளை வளர்க்கிற காரியங்களையே செய்ய வேண்டும்; மற்றவற்றைச் செய்யக் கூடாது. ஈடுபாட்டுடன் தானம் செய்ய வேண்டும்; அலட்சியமாகச் செய்யக் கூடாது; வருமானத் இற்கேற்ப தானம் செய்ய வேண்டும்; பணிவுடனும், மரியாதை யுடனும், விவரமறிந்தும் தானம் செய்ய வேண்டும்’.
தானம் செய்கிறபோது கர்வமோ, அலட்சியமோ தோன்றி விட்டால், அந்த தானம் பயனற்றது என்பது, மேலே உள்ள மந்த்ரத்தில் வலியுறுத்தப்படுகிறது. தானம் பெறுகிறவனுக்குப் பணிவு வேண்டும் என்று சொல்லப்படவில்லை. தானம் செய் பவனுக்குத்தான் அந்தப் பணிவு முக்கியம். அகந்தையுடன் செய்கிற தானம், ஒரு நற்காரியமல்ல.
சரி. ‘எது தர்மம்?! என்ற மனக்குழப்பம் ஏற்பட்டால், அப் ் பொழுது என்ன செய்வது? அது குறித்த உபதேசமும் தைத்திரீய உபநிஷதத்தில் கூறப்படுகிறது. ‘கடமை பற்றியோ, நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியோ சந்தேகம் ஏற்படுமானால் – அப் போது, நல்ல முறையில் சிந்திப்பவர்களும், மனதை ஒரு நிலை யில் வைத்திருப்பவர்களும், விபரீத புத்தி இல்லாதவர்களும், நல்ல வழியில் நடப்பவர்களுமாக இருக்கிற தூயவர்கள் – எப்படி நடந்து கொண்டார்களோ, அப்படி நடந்து கொள்ள வேண்டும்.
அதாவது நமக்குச் சந்தேகம் ஏற்படுகிற சூழ்நிலையில், நல்ல வர்களான அறிஞர்கள் சென்ற பாதையில் நாம் சென்றுவிட வேண்டும். குழப்பத்தில் இருந்து விடுதலை பெற அதுதான் வழி. இப்படிச் சொல்லி விட்டு, கீழ்க்கண்ட மந்த்ரத்துடன் தைத்திரீய உபநிஷதம் இந்தப் பயிற்சியை முடிக்கிறது.
ஏஷ ஆதேச:
ஏஷ உபதேச:
ஏஷா வேதோபநிஷத்
ஏதத் அனுசாஸனம்
ஏவம் உபாஸிதவ்யம்
ஏவமுசைதத் உபாஸ்யம்
இதுவே உத்திரவு இதுவே உபதேசம்
இதுவே வேதம் கூறும் ரகசியம்
இதுவே பயிற்சி
இதுவே வழிகாட்டுதல்
இதையே நடைமுறைப்படுத்த வேண்டும்
இதை இவ்வாறே நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேத ரகசியம் என்று இங்கே எது சொல்லப்படுகிறது என்று பார்த்தோமானால், அது மாணவனுக்குக் கூறப்படுகிற அடிப் படை அறிவுரைகளே. உண்மை பேசு என்பதிலிருந்து, விருந் இனரை முறையாக உபசரிக்க வேண்டும் என்பது உட்பட, தானம் செய்வதில் அடக்கம் தேவை என்பது வரை – கூறப்பட்ட எளிமையான தர்மங்களே என்றென்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சாஸ்வதமான நெறிமுறைகள்.
கல்விப் பயிற்சி பற்றிய பகுதி இத்துடன் முடிவடைந்து, அடுத்து ஆனந்தவல்லீ என்ற பகுதி தொடங்குகிறது. ஆன்மாவைப் பற்றிப் பேசுகிற இந்தப் பகுதியின் தொடக்கத்தில், எல்லையற்ற வரான இறைவன், இதய குகையில் வீற்றிருக்கிறார் என்ற உண் மையை உணர்பவன், அந்த இறைவனையே அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த உபநிஷதம் மேலும் கூறுகிற விவரங்கள் இந்து உரைகளை உடைய மனிதனை (ஆன்மாவை/ப் பற்றியது. கோசம் என்றால் உரை. அன்னமய கோசம், ப்ராண மய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம் – என்பவை இந்த ஐந்து உரைகள்,
அன்னமய கோசம் என்பது, உணவினால் வளர்திற சரீரம்; பிராணமய கோசம், அந்த சரீரத்தில் மூச்சு விடுகிற சக்தி; மனோமய கோசம், எண்ணங்களைத் தோற்றுவிக்க தன்மை; அந்த எண்ணங் களில் எவை நல்லவை, எவை தள்ளத் தக்கவை என்று அறிய உதவுவது, விஞ்ஞான மய கோசம்; இந்த நான்கு உரைகளுக்கு – அதாவது நான்கு கோசங்களுக்கு – ஆதாரமாக இருப்பது, ஐந்தா வதாகிய ஆனந்தமய கோசம்; அங்கேதான் ஆன்மா பேரின்ப நிலையில் நிலை பெற்றிருக்கிறது. இப்படி நம்மால் இங்கே சுருக்க மாகச் சொல்லப்பட்டிருப்பது, சில உருவகங்களின் மூலமாக தைத்திரீய உபநிஷதத்தில் விவரமாக விளக்கப்பட்டிருக்கிறது–
இதற்குப் பின் இன்பத்தைப் பற்றிய ஒரு விளக்கம் இடம் பெறுகிறது.