‘தர்மம்: என்பதை ஓரளவாவது புரிந்து கொள்ள, அதை பல கோணங்களிலிருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு முனிவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அவருடைய தவ வலிமையின் காரணமாக, அது பொசுங்கிச் சாம்பலாகி விட்டது. கெளசிகன் என்ற பெயருடைய அந்த முனிவர் அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்றார். பிக்ஷ கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வர நேரமாகி விட்டது.
முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, அவளைப் பார்த்து, ‘என்ன செய்வேன் தெரியுமா? என்றார்.
அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து, ‘என்னை என்ன – கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.
அவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி, இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டார்.
அந்தப் பெண்மணி, ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்து விடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது! என்று கூறினாள்.
அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது? அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது. தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.
“தர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசம் செய்” என்று அந்தப் பெண்மணியை முனிவர் கேட்டுக் கொண்டார்.
அவளோ, ‘நீர் என்னிடம் கேட்டு பயனில்லை. தர்மவியாதனிடம் சென்று கேளுங்கள்’ என்று சொல்லி விட்டாள்.
முனிவரும் தர்மவியாதன் யார் என்று விசாரித்து, அவனைத் தேடிச் சென்று அடைந்தார். பார்த்தால், அவன் ஒரு கசாப்புக் கடைக்காரன்! அவனிடம் முனிவர், தர்மத்தைப் பற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது? என்று கேட்டார்.
அவன் ‘என் தாய், தந்தையருக்கு நான் விடாமல் சிச்ருஷை செய்து வருகிறேன். அதனால் எனக்குக் கிடைத்த உயர்வு இது‘ என்று விளக்கினான். பெற்றோருக்குப் பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான் அவன், அது அவனுடைய தர்மமாகியது.
ராமர், ஸிதையை ராவணனிடமிருந்து மீட்ட பிறகு, அவளை அவர் நடத்திய விதம் தர்மமா, அதர்மமா? நெருப்பிலே விழச் செய்து, அதன் பிறகு யாரோ சொன்னதற்காக, ஊரை விட்டே விரட்டி, இறுதியில் வால்மீகி முனிவரே வந்து ‘இவள் புனித மானவள்’ என்று கூறிய பிறகும், ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத் தன்மையை நிரூபித்து விடு‘ என்று சொல் கிறார். அப்பொழுதுதான் ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்.
ராமருடைய இல்லற தர்மம் என்று பார்த்தால், அவர் செய்தது அதர்மம்தான்; அதில் சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடுரமாக நடத்தியதை தர்மம் என்று ஏற்க முடியாது – அதை இல்லற தர்மம் என்று பார்க்கும்போது.
ஆனால் இதையே ராஜ தர்மம் என்று அணுகினால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகத் தெரிகிறது. சீஸரின் மனைவி சந் தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். மன்னனைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்குப் பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின் அதிகாரம் எடுபடாது; நிர்வாகம் சீர்குலைந்து, நாடு உருப்படாமற் போகும். அதனால் அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம் கூட ஆட்சியைப் பற்றி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள். அங்கே ராஜ தர்மம் மேலோங்கி நின்றது.
இப்படி முரண்பாடாகத் தெரிகிற பல விளக்கங்கள் தர்மத்திற்கு உண்டு.
இப்போது யுத்தம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங். கள். அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக் கொல் இறோம். சாத்திரத்தில் ‘அஹிம்ஸா பரமோ தர்ம: என்று கூறப் பட்டிருக்கிறது. எல்லா தர்மங்களைக் காட்டிலும், உயர்ந்த தர்மம் அஹிம்ஸை. ஆனால் யுத்தம் என்றாலே ஹிம்ஸைதான். ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக் காப்பாற்ற ஓர் அரசன் மேற்கொள்கிற யுத்தம் ராஜ தர்மம்; அதில் யுத்த தர்மத்தை ஒட்டி, எதிரிகள் கொல்லப்படுகிறார்கள். ஆகையால் அது தர்மமே.
போலீஸ் நடவடிக்கை ஒன்று வருகிறது. ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடிப் பிரயோகம் நடக்கிறது. உடனே பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால் அப்படி அடித்தது போலீஸ்காரர் களுக்கு தர்மமா இல்லையா? போலீஸ்காரர் என்ன ஸ்கவுட்டாச கூட்டத்தினரைப் பார்த்து போலீஸ்காரர், ‘எல்லோரும் தயவு செய்து விலகி விடுங்கள்; மஹாத்மா காந்தி இப்படித்தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்; ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமண மஹரிஷி போன்ற பெரியவர்கள் எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். யாரும், எந்தச் சண்டையும் போடக் கூடாது; ஆகையால் எல்லோரும் அமைதியாக விலக வேண்டும்’ என்று கூறி விட்டு, மூலையில் போய் உட்கார்ந்து கொள்ள முடி யுமா? அதுதான் போலீஸாரின் கடமையா? அதுதான் அவர்களது தர்மமா? நாலு பேரையாவது அங்கே பிடித்து அடி அடி என்று அடித்தால்தான், கூட்டமே சிதறி ஓடும். அது அவர்களுடைய தர்மம்.
– இப்படி தர்மம் என்பதற்கான விளக்கம் மிகவும் சிக்கலானது. அதனால்தான் நமது நூல்கள் ‘தர்மத்தின் பாதை மிகவும் சூட்சம மானது‘ என்று மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கின்றன. பின் இந்த சூட்சமத்தை எப்படித்தான் அறிந்து கொள்வது? ‘எது தர்மம் என்று நிச்சயமாக நம்மால் உணர முடியாத நேரங்களில், பெரியோர்கள் காட்டிய வழி எதுவோ, அதைப் பின்பற்றுவதுதான் தர்மம் என்ற வழியும் இதற்கு விடையாகச் சொல்லப்பட்டிருக் இறது.
இதில் வேறு ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தர்மத்திற்கு பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது; ஆனால் அதன் காரணமாக தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்கிற நான்கு நிலைகளில், மற்ற மூன்று நிலைகளை அறவே ஒதுக்கிவிட வேண்டும் என்று எந்த நூலும் சொல்லவில்லை. உலக வாழ்க்கையில் மனிதன் அறத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்; பொருளையும் ஈட்ட வேண்டும்; இன்பத்தையும் நுகர வேண்டும்; நற்கதி அடையும் வழியை யும் நாட வேண்டும். ஆனால் பொருள் ஈட்டும்போதும் சரி, இன்பத்தை நுகரும் போதும் சரி, ஒரு மனிதன் அதர்மமான வழியில் செல்லக் கூடாது. தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்றும் இணைந்து செயல்பட்டு, ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றன. ஆனால், அர்த்தமோ, காமமோ, தர்மத்திற்கு விரோதமாக அமையுமானால் அதை விட்டு விட வேண்டும்’ என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.
மனு ஸ்மிருதி மேலும், ‘அஹிம்சை, சத்தியம், பிறர் பொருளைக் கவராமை, சுத்தம், இந்திரியங்களை அடக்குதல் – ஆகியவை எல்லோருக்குமே பொதுவான தர்மங்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்! என்று சொல்கிறது. இதையே இன்னும் கொஞ்சம் விரிவாக மஹாபாரதம் எடுத்துக் கூறுகிறது. ‘உண்மையே பேசுவது; கோபத்திற்கு அடிமையாகாமல் இருப்பது; தன்னுடைய செல்வத் இல் பிறருக்கும் உதவுவது; மன்னிக்கும் மனப்பான்மை உடைய வனாகத் இகழ்வது; தன் மனைவியிடத்தில் குழந்தைகளைப் பெறுவது; தூய்மை; பகைமை பாராட்டாமல் இருப்பது; நேர்மை; தன்னை நம்பி இருப்பவர்களைக் காப்பாற்றுவது… என்ற ஒன்பதும் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள்! என்று மஹா பாரதம் சொல்கிறது.
சரி. இந்த தர்ம விதிமுறைகளுக்கெல்லாம் எது ஆதாரமானது? வேதங்களே இவற்றுக்கெல்லாம் ஆதாரமானது என்று எல்லா நூல்களும் அடித்துச் சொல்கின்றன. ஆனால், ஸ்மிருதிகளிலோ, மற்ற தர்ம சாஸ்த்ரங்களிலோ காணப்படுவது போல, வேதங் களில் ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற விதிமுறைகள் வகுத்துத் தரப்படவில்லை. இருந்தாலும் கூட தர்ம சாஸ்த்ரங்களுக்கு எல்லாம் வேதமே ஆதாரமாகக் கூறப்படுகிறது.
ஏன்? காரணம் இருக்கிறது. அடிப்படை தர்மங்களை வேதம் வகுத்து விட்டது. ‘உண்மையைத்தான் பேச வேண்டும்; பொய்யை பேசவே கூடாது; யாரையும் துன்புறுத்தக் கூடாது; தாயையும் தந்தையையும் தெய்வமாகப் போற்ற வேண்டும்; புறக்கணிக்கத் தக்கவை என்று சாஸ்த்ரங்கள் சொல்கிற காரியங்களைச் செய்யக் கூடாது; தர்மத்தின் பாதையை விட்டு அகலக் கூடாது…” என்பது போன்ற விஜமுறைகளை, வேதங்கள் ஆங்காங்கே எடுத்துச் சொல்லி இருக்கின்றன. அவற்றின் அடிப்படையில்தான் தர்ம சாஸ்த்ரங்களும், ஸ்மிருதிகளும் இயற்றப்பட்டன.
வேதத்திற்கு முரண்பட்ட ஒரு தர்மசாஸ்த்ர வழிமுறையோ, ஒரு ஸ்மிருதி விதமுறையோ இருந்தால், அது புறக்கணிக்கத் தக்கதே. இப்போது நம் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு விரோத மாக ஒரு சட்டம் வந்தால், அது செல்லுபடியாகாது என்று இருப்பது போல, வேதத்திற்கு முரணானவை, செல்லுபடியாகாதவை என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படி வேதமே ஆதாரம் என்று எல்லா ஸ்மிருதிகளுமே கூறுகின்றன. அதே சமயத்தில், ‘வேதங்கள், ஸ்மிருதிகள், சமூகத்தினால் ஏற்கப்பட்ட நடைமுறைகள், நல் லெண்ணத்தின்பாற்பட்ட மனசாட்சிக்கு விரோதமில்லாத நடத்தை, பெரியோர்கள் காட்டியுள்ள வழிமுறைகள் – இவை எல்லாமே தர்ம விதிமுறைகளுக்கு ஆதாரமானவை’ என்றும் பல ஸ்மிருதிகளும் சொல்கின்றன.
மனு ஸ்மிருதி என்பதே பிரபலமாகப் பேசப்பட்டாலும், அது ஒன்று மட்டும் ஸ்மிருதி நூல் அல்ல. அதையும் சேர்த்து, ஏற்கனவே சொன்னது போல, பதினெட்டு ஸ்மிருதி நூல்கள் உள்ளன. இவற்றில் யாக்ஞ்வல்க்ய ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி போன்றவை மனு ஸ்மிருதிக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றவை. ஹிந்து சட்டங்களை வகுக்கிறபோது, இவற்றின் முக்கியத்துவம் உணரப் பட்டது. இவை தவிர, புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவையும் தர்ம விதிமுறைகளைக் கூறுகின்றன. அர்த்த சாஸ்த்ரம் – அரசியல் விதிமுறைகளைக் கூறுகிறது. சுக்ர நீதி – ராஜ நீதிகளை எடுத்துச் சொல்கிறது. இது போன்ற நூல்களும், ஸ்மிருதிகளும், தர்ம சாஸ்த்ரங்களும் சேர்ந்துதான் ஹிந்து சட்டத்திற்கு ஆதாரமாக அமைந்தன.
மேலை நாடுகளெல்லாம் சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றி எண்ணாமல் இருந்த காலத்திலேயே, இங்கு அமைந்த நீதி நிர்வாக முறையும், சட்ட விதிமுறைகளும் எவ்வளவு துல்லிய மாக ஆராயப்பட்டு வகுக்கப்பட்டன என்பது இந்த நூல்களில் இருந்தெல்லாம் தெளிவாகிறது. இதை மேலை நாட்டு சட்ட ஆராய்ச்சியாளர்களே கண்டு வியந்து எழுதி இருக்கிறார்கள்.
ஸ்மிருதிகளில் இப்போது அடிக்கடி பேசப்படுவது மனு ஸ்மிருதி என்பதால், அதைக் கொஞ்சம் விவரமாகப் பார்ப்போம்.