புராண – என்ற ஸமஸ்க்ருதச் சொல்லிற்கு பதம் பிரித்து விளக்கம் சொல்லுகையில், இரண்டு விதமாக பொருள் கூறுகிறார்கள். பழமையானது என்று ஒன்று; பழமையிலும் புதுமை என்பது மற்றொன்று. புராணங்கள் மிகவும் பழமையானவை. வேதங்களைக் கண்டு, அவற்றை உலகினுக்கு ஈந்த மஹா ரிஷிகளின் காலத்திலேயே புராணங்கள் இருந்தன என்பதற்கு – வேதங்கள் உபநிஷத்துகளில், வருகிற புராணங்கள் பற்றிய ஒரு சில குறிப்பு களே ஆதாரமாகக் கூறப்படுகின்றன.
ஆனால் ‘வேத காலத்தில், எந்த புராணங்கள் இருந்தன?; இப்போது மஹா புராணங்கள் என்று கூறப்படுகிற பதினெட்டு புராணங்களும் அப்போது இருந்தனவா, அல்லது இவற்றில் ஒரு சில மட்டுமே இருந்தனவா? எந்தெந்த காலகட்டத்தில் எந்தெந்த புராணங்கள் இயற்றப்பட்டன? அவற்றில் இடைச்செருகல்கள் நிகழவே இல்லையா? நிகழ்ந்திருந்தால், அவை, எவை…?’ என்பன போன்ற கேள்விகள் இருக்கின்றன. விடைகள் இல்லை.
வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸ்மிருதிகள், தர்மசாஸ்திரங்கள், யோக ஸூத்ரங்கள்… என்ற பலவற்றையும் முழுமையாக ஏற் பவர்கள் கூட, புராணங்களில் ஒரு சில இடைச்செருகல்கள் நிகழ்ந் திருக்கலாம் என்பதை ஏற்கிறார்கள். ஆனால் எது இடைச்செருகல், அது எப்போது நிகழ்ந்தது, என்பதெல்லாம் தெரியாத இன்றைய நிலையில், புராணங்களில் எந்தப் பகுதியையும் நிராகரிப்பது கண்மூடித்தனமானச் செயலாகத்தான் இருக்கும் என்பது அவர்கள கருத்து.
அதுவுமன்றி, இதிஹாஸ நிகழ்ச்சிகளாகட்டும், புராண சம்பவங் களாகட்டும், எல்லாமே மீண்டும் மீண்டும் நிகழ்பவையே என்பது ஹிந்து மத நம்பிக்கை. அதாவது, ‘சரித்திரம் திரும்புகிறது‘ என் பதைப் போல. ஒரு கல்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள், மீண்டும் அடுத்த கல்பத்தில் நிகழும். கல்பம் என்பது லட்சக்கணக்கான மனித வருடங்களை உள்ளடக்கியது. (இந்த கணக்கு இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் விவரமாகக் கூறப்பட்டிருக்கிறது.) நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மஹா யுகம்; 71 மஹா யுகங்கள் சேர்ந்தால், அது ஒரு மனுவின் காலம்; மொத்தம் 14 மனுக்கள்; 14 மனுக்களின் காலமும் சேர்ந்தால் 14 × 71 = 994 மஹா யுகங்கள்; ஒரு மனுவின் காலத்திலிருந்து, அடுத்த மனுவின் காலம் வருவதற்குள் நிகழ்கிற இடைப்பட்ட காலங்களைச் சேர்த்தால் – அது 6 மஹா யுகங்கள்; ஆக 14 மனுக்களின் மொத்த கால கணக்கு 1,000 மஹா யுகங்கள். ஒரு மஹா யுகம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது. இப்படி ஆயிரம் மஹா யுகங்கள் சேர்ந்தால், 43,20,000 x 1,000 = 4,32,00,00,000; இந்த நானூற்று முப்பத்திரண்டு கோடி மனித வருடங்கள் சேர்ந் தால், அது ஒரு கல்பம். இப்படிப்பட்ட ஒவ்வொரு கல்பத்திலும், பழைய நிகழ்ச்சிகள் மீண்டும் நடந்தேறும் என்று நமது நூல்கள் கூறுகின்றன.
ஆகையால், பல புராணங்களில் வருகிற நிகழ்ச்சிகள் கூட, மீண்டும் மீண்டும் ஒவ்வொரு கல்பத்திலும் நடப்பவை என்பதால் –அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஏற்படக் கூடிய சிறு மாற்றங்கள் கூட, இடைச்செருகல்களாக இடம் பெற்றிருக்கலாம்.
இப்படி பல சமாதானங்களை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறவைதான் புராணங்கள். அதே சமயத்தில் அவை வேதங்கள் கூறுகிற போதனைகளை பரப்புகிறவை. வேதங் களையும், உபநிஷத்துக்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நம்மைப் போன்றவர்களுக்கு, அந்த வேதபோதனைகளை, தத்துவங்களை சில வரலாறுகள் மூலம் எளிதாக வடித்துக் கொடுப்பவை புராணங்கள். ‘உண்மையைப் பேசு‘ என்று வேதம் வற்புறுத்துகிறது என்பதை அறியாதவர்களும் கூட, புராணத்தில் வருகிற ஹரிச்சந்திரன் வரலாறு மூலமாக, உண்மையே பேச வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை உணர்ந்து கொள்கிறார்கள்.
பல தெய்வங்களைப் போற்றுகிற புராணங்களில் வருகிற சில நிகழ்ச்சிகள் மூலம், இறுதி உண்மை என்கிற பிரம்மம் ஒன்றே. என்ற உபநிஷத்துக்களின் விளக்கம் எளிதில் உணரப்படுகிறது. அதனால்தான் புராணக் கதைகளை மட்டுமே அறிந்த –உப நிஷத்துக்களைப் பற்றி எதுவும் அறியாத – பெரும்பாலான மக்கள் கூட, ‘எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்… எல்லாம் அவன் இஷ்டம் – நம்ம கையிலே என்ன இருக்குது; அவன் மனசு வைக்கணும்…’ என்று சர்வ சாதாரணமாக பேசுகிறார்கள்.
சிவன் கோவிலுக்குப் போவது, பெருமாள் கோவிலுக்குப் போவது, முருகன் கோவிலுக்குப் போவது, அம்மன் கோவிலுக்குப் போவது… என்ற வழக்கமுடையவர்கள் கூட எல்லாம் முருகன் விட்ட வழி – பிள்ளையார் விட்ட வழி சிவன் விட்ட வழி– பெருமாள் விட்ட வழி… என்று சொல்வதை விட, எல்லாம் அவன் விட்ட வழி‘ என்று கூறுவதே அதிகமாக இருக்கிறது. யார் அந்த ‘அவன்‘? அவன்தான் இறுதி உண்மை. அவன்தான் பிரம்மம். இதை உபநிஷத்துக்கள் கூறுகின்றன; அது பலருக்கும் தெரியாது. ஆனால் இதையே புராணங்கள், சில வரலாறுகள் மூலமாகக் கூறுகிறபோது அது மனதில் பதிந்து விடுகிறது.
புராணங்களுக்கும், இதிஹாஸங்களுக்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிஹாஸங்களையும் இயற்றியவர்கள் அந்த குறிப் பிட்ட காலத்திலேயே வாழ்ந்தவர்கள். ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, ராமர் இருந்தபோதே அதை இயற்றினார்.மஹாபாரதத்தை இயற்றிய வியாஸரோ, அந்த இதிஹாஸத்தின் சில நிகழ்ச்சிகளிலும் கூட பங்கேற்றார். இதனால்தான் ‘இது இப்படி நடந்தது‘ – என்று கூறுகிற வகையில் அந்த நூல்கள், இதிஹாஸங்கள் என்ற பெயரைப் பெற்றன. ஆனால், புராணங்களையும் வியாஸர்தான் இயற்றினார் என் றாலும், அவை பழைய நிகழ்ச்சிகளைக் கூறுபவை. இப்படி இயற்றப்பட்டபோதே, பழைய நிகழ்ச்சிகளைச் சொல்வதாக அமைந்ததால்தான், ‘இது அப்படித்தான் நடந்ததா? என்ற கேள்விக்கு இவை உள்ளாகின்றன. ஆனால் வெறும் நம்பிக்கை பூர்வமான விஷயங்கள் மட்டுமல்லாமல், மன்னர்களின் வரிசை களையும், பூகோளம் தொடர்பான விஷயங்களையும் புராணங்கள் கூறுகின்றன எனும்போது, அவற்றின் சரித்திர பூர்வமான தன்மை தெளிவாகிறது என்பதே ஹிந்து மதக் கருத்து.
இன்னொரு வித்தியாசம் : ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிஹாஸங்களும், ஒரு மைய வரலாற்றைக் கொண் டவை. ராமாயணம் ராமரின் வரலாறு; மஹாபாரதம் பாண்டவர் களின் வரலாறு. இந்த மைய வரலாற்றைச் சுற்றி, பல உபகதைகள் கூறப்பட்டாலும், இரு இதிஹாசங்களும், சீராக ஒரு இலக்கை நோக்கிச் செல்லும். இப்படி அமைந்துள்ள இதிஹாஸங்கள் இரண் டிலும், ராஜதர்மத்திலிருந்து, நான்கு ஆசிரமங்களின் தர்மம் வரை, பல தர்மங்கள் கூறப்படுகின்றன. இதிஹாசங்களைப் போல ஒரு குறிப்பிட்ட வரலாற்றை மையமாகக் கொள்ளாமல், புராணங்கள், பல வரலாறுகளைக் கூறுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியில் ஒவ் வொரு தர்மம் விளக்கப்படுகிறது.
இது தவிர, ஒவ்வொரு புராணமும் ஒரு தெய்வத்தை மேம் படுத்திக் கூறுகிறது. ஒன்றில் சிவனை, விஷ்ணு பூஜித்தார் என்று வர்ணிக்கப்படுகிறது. மற்றொன்றில், விஷ்ணுவை, சிவன் துதித்தார். என்று கூறப்படுகிறது. இப்படியே வேறு தெய்வங்களும் உயர்த்திப் பேசப்படுகின்றன.
அப்படியானால் எதை ஏற்பது? எது சொல்வது மெய்?’ என்ற கேள்விகளுக்கு இடமில்லை. ஏனெனில் ஒரு தெய்வத்தை உயர்த்திப் பேசுகிற புராணத்தின் நோக்கம், மற்ற தெய்வங்களைத் தாழ்த்துவது அல்ல. மனதை ஒருமுகப்படுத்தி, ஒரு தெய்வத்தின் பால் சிந்தனையை செலுத்துகிற போது, பக்தி உணர்வுப்பூர்வமான முழுமையைப் பெறுகிறது; அப்படி மனதை சிந்தனைச் சிதறல் எதுவும் இல்லாமல், ஒரு தெய்வத்தின் மீது நிலைக்கச் செய்வதற் காக, ஒவ்வொரு புராணமும், ஒவ்வொரு தெய்வத்தின் மேன்மையை வற்புறுத்துகிறது; அதனால் மற்ற தெய்வங்களும் கூட இந்த தெய்வத்தை துதித்தன என்று கூறுகிறது.
அப்படி கூறப்படுவது கற்பனைதானா என்றால் அதுவுமில்லை. ஏனெனில், சிவனை உயர்த்துவதில் விஷ்ணுவுக்கும் ப்ரீதியே; விஷ்ணுவை மேம்படுத்துவதில் சிவனுக்கும் உடன்பாடே. மற்ற தெய்வங்களும் இப்படியே.
சரி, எதற்கு இந்த பேதம்? மக்கள் பலதரப்பட்ட மனோபாவம் கொண்டவர்கள்; அவர்களுடைய இயல்புகள் மாறுபட்டவை. அவர்களுடைய மனதைக் கவர்ந்து இழுக்கிற வடிவங்களும் வெவ்வேறானவை; இப்படி பல்வேறு நிலைகளில் உள்ள மனப் பக்குவம் உடையவர்களை, தெய்வத்தின் பல்வேறு அம்சங்கள் ஈர்க்கின்றன; இறுதி உண்மையாகிய பிரம்மம் – இறைவன் – தனது பல்வேறு அம்சங்களைக் கொண்ட வடிவங்களை ஏற்கிறபோது, அவை ஒவ்வொன்றில், ஒவ்வொருவர் மனம் லயிக்கிறது. அப்படி லயிக்கின்ற மனம் சிதறாமல் நிற்க, ஒவ்வொரு தெய்வத்தின் மேன்மையை ஒவ்வொரு புராணம் உயர்த்துகிறது. இதையெல்லாம், காஞ்சி மஹா ஸ்வாமிகள் தனது உரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
புராணங்களுக்கு ஐந்து தகுதிகள் கூறப்பட்டிருக்கின்றன. படைப்பு பற்றிய விளக்கம்; படைப்பு யுகம் தோறும் வியாபித்த விவரம்; தேவர்களின் வம்ச வரிசை பற்றிய தகவல்கள்; பதினான்கு மனுக்களின் காலம் பற்றிய தகவல்கள்; தேசத்தை ஆண்ட மன்னர் களின் வம்ச வரிசைகளும், அந்த வம்சங்களின் விவரங்களும், இந்த ஐந்தைத் தவிர, பூகோள ரீதியான விளக்கங்களும் இருக்க வேண் டும். இவற்றை தன்னுள் அடக்கியதுதான் புராணம்.
புராணங்கள் பற்றிய மேலும் சில விவரங்களைப் பார்ப்போம்.