பவிஷ்ய புராணம்

இனி வர இருப்பது, வருங்காலம் என்பதைக் குறிக்கிறபவிஷ்யம்என்ற சொல்லைக் கொண்டு, அமைந்திருக்கிற புராணம்பவிஷ்ய புராணம்‘. எதிர்காலத்தில் வர இருக்கிற அரச பரம்பரைகள், மன்னர்களின் வரிசைஆகியவற்றையும்; தர்மங்கள் நாசமடைந்து போகக் கூடிய நிலையையும் முன் கூட்டியே சொல்வது பவிஷ்ய புராணம்.

ஸ்ரீமத் பாகவதத்திலும், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும் கூட, கலியுகத்தில் ஏற்படக் கூடிய தர்மநாசம் பற்றி பல குறிப்பு கள் இருக்கின்றன; கல்கி அவதாரம் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பவிஷ்ய புராணத்தில் இது விசேஷமான அம்சமாகக் கருதப்படுகிறது.

பவிஷ்ய புராணத்தில் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், ராணி விக்தாவதியின் ஆட்சி பற்றி சொல்லப்படுகிறது. இது விக்டோரியா ராணியின் பிரிட்டிஷ் ஆட்சி என்று விரிவுரையாளர்கள் கூறு கிறார்கள். இதே போல, ராஜபுதன அரசர்கள், தைமூர், பாபர், ஹுமாயூன், அக்பர், ஒளரங்கசீப், சிவாஜி போன்றவர்களின் பெயர்கள் இப்புராணத்தில் இடம் பெறுவதும், பண்டிதர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ‘ஸண்டே; ஃபிப்ரவரி; ஸிக்ஸ்டிபோன்ற ஆங்கிலச் சொற்கள் கூட குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதையும் இப்புராணத்தின் விரிவுரையாளர்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.

எதிர்கால மன்னர் வரிசை அதிலும் குறிப்பாக கலியுக மன்னர்கள் பற்றிய குறிப்புகள்வேறு சில புராணங்களில் இடம் பெற்றாலும், பவிஷ்ய புராணமே இதற்கெல்லாம் ஆதாரமானது என்று மத்ஸ்ய புராணமும், வாயு புராணமும் சொல்வதால், இவை இப்புராணத்தின் சிறப்பம்சங்கள் என்று விளக்கப்பட்டிருக்கிறது.

கலியுகம், தீமையின் காலம். கிரேக்கர்கள் என்று விரிவுரை யாளர்களால் அடையாளம் காட்டப்படுகிற யவனர்கள்படை யெடுப்பு பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது. அவர்களுடைய நோக்கத்தை இப்புராணம் கடுமையாக விமர்சிக்கிறது. வேதங் களை ஏற்காத பல இனத்தவர்களின் படையெடுப்புகளும், ஆட்சிகளும் நடக்கும்; அவர்களுடைய இனத்தவர்கள், இந்த தேசத்தின் இனத் தார்களோடு கலப்பார்கள்; பெண்களும், குழந்தைகளும் கூட கொல்லப்படுவார்கள்; இந்த தீய ஆட்சிகள் தோன்றி மறைந்து, ஒன்றன்பின் ஒன்றாக வந்து சீரழிவுக்குக் காரணமாக அமையும்.

பாண்டவர்கள் வம்சத்தில், அர்ஜுனனின் மகனாகிய அபிமன்யு வின் மகன் பரீஷித்; அவனுடைய மகன் ஜனமேஜயன்; அவனுடைய மகன் சதானிகன்; அவனுடைய மகன் அச்வமேதத்தன்; அவன் மகன் அதிசிம்மக் கிருஷ்ணன்என்பதில் ஆரம்பித்து பல மன்னர்களின் வரிசை வருகிறது. 25 மன்னர்கள் இவ்வரிசையில் வருகிறார்கள். அடுத்து இக்ஷ்வாகு வம்சம் விவரிக்கப்படுகிறது. பின்னர் மகத தேசத்தின் பிரஹத்ரதர்கள்என்று தொடங்கிப் பட்டியலிடுகிற இப்புராணம் நந்தர்களின் ஆட்சி; கௌடில்யன் (சாணக்கியன்) அந்த ஆட்சியை வீழ்த்தியது; சந்திரகுப்தன் அரசனா கியது; அவனையடுத்து பிந்துசாரனும், அவனைத் தொடர்ந்து அசோகனும் அரசர்களாகியதுபோன்ற பல நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறது. இவற்றையெல்லாம் அடுத்து புஷ்யமித்திர சுங்க னால் தோற்றுவிக்கப்பட்ட சுங்க வம்ச ஆட்சி பற்றியும் கூறப் படுகிறது.

வை எல்லாமே, நிகழ்ச்சிகள் நடந்த பிறகு, இடைச்செருகல்களாக, பின்னர் சேர்க்கப்பட்டவையே தவிர, பவிஷ்ய புராணத்திலேயே, முன்கூட்டியே கூறப்பட்ட எதிர்கால வர்ணனை கள் அல்லஎன்று சிலர் அபிப்பிராயப்பட்டிருக்கின்றனர். ஆனால், இப்படி இன்று நம்மால் ஏற்க முடியாததைஇடைச்செருகல்என்று முத்திரையிட்டு ஒதுக்கி விடுவது வெகு எளிது. ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடந்த பிறகு, அவை இப்புராணத்தில் சேர்க்கப் பட்டிருக்கின்றன என்றால், அந்தந்த காலத்தில் இருந்தவர்கள், இந்த இடைச்செருகல்களை பார்த்துக் கொண்டு சும்மா இருந் தார்களா? அதுவும், மீண்டும் மீண்டும், ஒவ்வொரு புதிய நிகழ்ச்சி சேர்க்கப்பட்டு வந்தபோது, இதற்கு ஒரு ஆட்சேபமும் எழவில்லை என்பது ஏற்கக் கூடியதாக இல்லையே!

இது ஒருபுறமிருக்க, பவிஷ்ய புராணத்தின் சிறப்பம்சம், வருங்காலம் பற்றிய குறிப்புகள் என்றாலும், வேறு பல விஷ யங்களும் இதில் அடங்கியிருக்கின்றன. பிரும்ம தேவனை மிகவும் முக்கியமாகக் கூறி, பிரும்மனைப் போன்ற ஒரு தெய்வமும் இல்லை;ஆச்சார்யனும் இல்லை என்று வலியுறுத்துகிறது பவிஷ்ய புராணம். அறிவுக்கு தெய்வம் பிரும்ம தேவன்; சரஸ்வதி அவனுடைய தேவி. தானாகத் தோன்றி உலகங்களைப் படைத்தவன் பிரும்ம தேவன். தடைகளை நீக்கி, மனித முயற்சிகளை வெற்றி பெறச் செய்வதற்காக, விநாயகரை தோற்றுவித்தவன் பிரும்ம தேவனே. சூரிய தேவனுக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. ‘இருளை நீக்கி மூவுலகங்களுக்கும் ஒளி தருபவர் சூரியனே; அவன் என்றும் இருப்பவன்; அழிக்கப்பட முடி யாதவன்; எல்லா இடங்களிலும் இருப்பவன். சூரியன் தெய்வங் களுக்கு எல்லாம் தெய்வம்…’ என்று யாக்ஞவல்கியருக்கு விளக்கிக் கூறுகிறான் பிரும்ம தேவன்.

யமதர்மன் பற்றியும், பாவம் புரிபவர்களை அவன் கடுமை யாகத் தண்டிப்பது பற்றியும் கூறுகையில், மனிதர்களின் புண்ணிய பாவங்களை பதிவு செய்து, யமதர்மனுக்கு உதவியாக இருப்பவன் சித்ரகுப்தன் என்பதும் சொல்லப்படுகிறது. பாவம் செய்தவர் களுக்கு யமதர்மனால் அளிக்கப்படுகிற தண்டனைகள் விவரமாக வர்ணிக்கப்படுகின்றனஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவது பற்றி பவிஷ்ய புராணம் பல விதிமுறைகளைக் கூறுகிறது. நந்தவனம் போன்ற இடத்தில், நீர்நிலைகள், கிணறுகள், மலர்ச் செடிகள், மரங்கள் போன்றவை களால் சூழப்பட்டு கோவில்கள் அமைக்கப்படுவது விசேஷம். கோவிலை எழுப்ப, எல்லா நிலங்களும் உகந்தவை அல்ல. தலைமுடி, எலும்புகள், நிலக்கரி, சுண்ணாம்புபோன்றவை ஒரு நிலத்தில் சிதறிக் கிடந்தால், அங்கே ஆலயம் எழுப்பக் கூடாது. பலவிதமான தான்யங்களும் விளையக் கூடிய நிலம்; தோண்டும் போது இடியோசை போன்ற ஒலி எழும்பக் காரணமாகிற நிலம் ஆகியவை ஆலயம் எழுப்ப மிகவும் உகந்தவை.

இதைத் தவிர, ஒரு நிலத்தில் ஆலயம் எழுப்புவதற்கு முன்பு அதைப் பரிசோதிப்பதற்காக, அந்த நிலத்தில் ஒரு பள்ளம் தோண்ட வேண்டும். தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டே, தோண்டப்பட்ட பள்ளத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும்; அப்படிச் செய்யும்போது, பள்ளம் நிரம்பிய பிறகும் தோண்டி எடுக்கப்பட்ட மண் மீதமிருந்தால், அது ஆலயம் எழுப்ப சிறப்பான இடம் உத்தமம்; பள்ளத்தை மீண்டும் நிரப்புகிறபோது, தோண்டப்பட்ட மண்ணைக் கொண்டு பள்ளம் முழுமையாக நிரப்பப்பட்டு விட்டால், அது இடைப்பட்ட நிலம்மத்யமம்; அங்கும் கோவில் கட்டலாம். தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, தோண்டிய பள்ளத்தை நிரப்பவே முடியவில்லை என் றால், அது கடை நிலம்அதமம்; அங்கு ஆலயம் எழுப்பக் கூடாது.

கோவில் எந்த திசையை நோக்கி அமைக்கப்பட வேண்டும்; விக்ரஹம் எவ்வாறு அமைய வேண்டும்; தேவையான மரத்தைத் தேர்ந்தெடுக்கிற விதம்போன்ற பல விவரங்களும், விரிவாகவே கூறப்பட்டுள்ளன. விதிமுறைப்படி செய்யப்படாத விக்ரஹங்களி னால் தீமை விளையும். ஒரு அங்கம்; விதிமுறையில் கூறப் பட்டுள்ளதை விடப் பெரியதாக இருந்தால், ராஜாங்கத்திற்கு ஆபத்து; சிறியதாக இருந்தால், ராஜ்யத்தில் வியாதி பரவும்; விக்ர ஹத்தின் வயிறு பாகம், விதிமுறையில் கூறப்பட்டுள்ளதை விட சிறியதாக அமைந்தால், ராஜ்யத்தில் ஏழ்மை தோன்றும், பெரியதாக இருந்தால் பஞ்சம் உண்டாகும்; விரிசல் இருந்தால், போர் மூளும்…  என்றெல்லாம் கூறி, விக்ரஹ அமைப்பில் செலுத்தப்பட வேண்டிய கவனத்தை, பவிஷ்ய புராணம் வற்புறுத்துகிறது.

வெவ்வேறு விரதங்கள், தானங்கள் ஆகியவை பற்றியும், அவற்றினால் கிட்டக் கூடிய பலன்கள் பற்றியும், இப்புராணத்தில் பெரிய பட்டியலே இருக்கிறது. அம்மாதிரி விரதங்களைக் கடைப் பிடித்து, அதனால் பெரும் புண்யம் பெற்று, மேன்மையுற்றவர் களின் சிலருடைய வரலாறுகளும் கூறப்படுகின்றன. விரதங்கள் பற்றிய விவரங்களையும், அவற்றை கடைப்பிடிப்பதற்கான வழி முறைகளையும் படிப்பதும், அவற்றைப் பற்றி கேட்பதும் கூட, புண்யத்தைத் தரும் என்று இப்புராணம் கூறுகிறது.

தானங்களின் மேன்மை வற்புறுத்திக் கூறப்படுகிறது. செல்வத்தை முறையாகப் பயன்படுத்துகிற வழி, ஏழைகளுக்கு அதை தானம் செய்வதுதான். ஆரோக்கியமான உடல் பெற்றிருந்தால் மட்டும் எந்தப் பயனும் இல்லை; மற்றவர்களுக்காகவும் உழைக்க அந்த உடலைப் பயன்படுத்த வேண்டும். அது போலவே ஒருவரிடம் உள்ள செல்வம், மற்றவர்களுக்கும் பயன்படுகிறபோதுதான், அது சிறப்புப் பெறுகிறது. பெரும் செல்வம் படைத்தும், தானம் செய் யாமல் இருப்பவர்கள், அடுத்த பிறவியில் பிச்சையெடுத்து வாழ்வார்கள்.

வர்ணங்கள் பற்றி பவிஷ்ய புராணம் சொல்வது, குறிப்பிடத் தக்கது. உபநிஷத்துக்களிலும், மஹாபாரதம் போன்ற நூல்களிலும், சில தர்ம சாஸ்திரங்களிலும் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிற கருத்தை, இப்புராணம் வலியுறுத்துகிறது. பிறப்பினால் மட்டுமே ஒருவனுடைய வர்ணம் நிச்சயிக்கப்படுவதில்லை; பராசரர், ஸுக தேவர், வசிஷ்டர், மந்தபாலர் போன்ற மகரிஷிகள்பிராம்மணர்கள்என்ற பிரிவில் பிறக்கவில்லை என்பதை பவிஷ்ய புராணம் சுட்டிக்காட்டுகிறது.

வேதங்களைப் படிப்பதினால் மட்டும் ஒருவன் பிராம்மணன் ஆகிவிட முடியாது; ஒருவனுடைய குணம்நடத்தைதான், அவனை ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவனாக்குகிறது; ஒருவன் பிராம்மண வர்ணத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்குப் பிறந்தும், நான்கு வேதங்களையும் முறையே பயின்றும், தர்மங்களை கைவிட்ட வனாகி விட்டால், அவன் பிராம்மணன் ஆக மாட்டான்…

‘பிராம்மணன், சூத்ரன் என்பதெல்லாம் பெயரளவிலான வித்தியாசங்களே. தோற்றத்திலோ, ஆன்மீக உணர்விலோ இவர்கள் இருவரிடையே, வைதீக கர்மங்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை. தெய்வத்தை வழிபட சூத்ரர்களுக்குத் தடையில்லை; அவர்கள் பூணூலை அணியவும் தடை கிடையாது…

வெறும் சடங்குகளும், மந்த்ரங்களும், ஒரு தீயவனை தூய்மைப்படுத்தி விடாது; நற்குணம்தான் ஒருவனை பிராம்மணன் ஆக்குகிறது. ஒருவனின் வர்ணம் மாறக் கூடியது. சூத்ரன், பிராம் மணன் ஆகலாம்; பிராம்மணன், சூத்ரன் ஆகலாம்; வைச்யன் க்ஷத்ரியன் ஆகலாம்; க்ஷத்ரியன் வைச்யன் ஆகலாம். மந்திரம் ஓதி, சில சக்திகளை ஒரு பிராம்மணன் பெறுவது போலவே, ஒரு சூத்ரனும் பெறலாம்; அவன் முறையான தவங்களைச் செய்தால், சாபம் கொடுக்கும் வல்லமையும் அவனிடம் தோன்றும்; தன்னுடைய வர்ணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளிலிருந்து தவறுகிறவன், அந்த வர்ணத்தை விட்டு விலகியவன் ஆவான்…

ஒரே தந்தைக்குப் பிறந்தவர்களைப் போல, ஒரே மரத்துக் கனிகள் போல – பிராம்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ரர்கள் ஆகியோர், ஒரே மாதிரியானவர்களே; தங்களுடைய நடத்தையினாலும், குணத்தினாலும், வாழும் வகையினாலும் அவர்கள் வெவ்வேறு வர்ணத்தவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்…

பவிஷ்ய புராணம் மட்டுமல்ல-உபநிஷத்துக்கள், மஹாபாரதம், தர்ம சாஸ்த்ரங்கள் ஆகியவையும் இக்கருத்துக்களைக் கூறுகின்றன. ஆகையால் நான்கு வர்ணங்கள், பிறப்பினால் உண்டாகிற பேதங்கள் – என்று ஹிந்து நூல்கள் அனைத்தும் கூறுவதாக நினைப்பது தவறு. பவிஷ்ய புராணம், குருமார்களை ஐந்து வகைப்பட்டவர்களாகக் கூறுகிறது. ஆச்சார்யர் வேதங்களின் ரகசியத்தை விளக்கி கற்பிப்பவர்; உபாத்தியாயர் – ஜீவனத்திற்காக வேதத்தைக் கற் பிப்பவர்; குரு – தன்னிடம் சேர்ந்து வாழ்ந்து வருகிற (குருகுல வாசம்) சீடர்களுக்கு வேதங்களையும், மற்ற பல நூல்களையும் போதிப்பவர்; ரித்விஜர் – யாகங்களை செய்விப்பதை தனது பணி யாக மேற்கொண்டவர்; மஹாகுரு மேற்சொன்னவர்களைக் காட்டிலும் மேலானவர் – சூரியன், விஷ்ணு, சிவன் ஆகியோரைத் துதிப்பதிலும், இதிஹாஸங்களையும் புராணங்களையும் அறிந்து போதிப்பதிலும், வேதங்களை கற்பிப்பதிலும் இவர் சிறப்பு வாய்ந்தவர்.

இப்படி ஆச்சார்யர்களைப் பற்றி கூறிவிட்டு இப்புராணம், பல வகைப்பட்ட தொழில்களைப் புரியும் ஒவ்வொருவருக்கும் என்ன கூலிதரப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கூறுகிறது. செங்கல் அடுக்குவதிலிருந்து, முடியிறக்குவது உட்பட, பாலங்கள் அமைப் பது வரை, பல பணிகளுக்கான கூலி விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

தற்கால நாகரிக உலகின் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிற விவாகரத்து பற்றியும், பவிஷ்ய புராணம் குறிப்பிடுகிறது.கணவன், மனைவி இருவரில் ஒருவர், திருமண வாழ்வில் அதிருப்தி யுற்றால் அல்லது தொடர்ந்து இருவரிடையேயும் சண்டைகள் நடந்து வந்தால், திருமணத்தை முறித்துக் கொள்ளலாம். மனைவி, கர்ப்பமுறவில்லை என்ற காரணத்திற்காக, திருமண முறிவை ஒரு கணவன் நாடுவதாக இருந்தால், அதற்கு அவன் எட்டு வருட காலம் காத்திருக்க வேண்டும். எந்தக் காரணத்திற்காக திருமண முறிவு நிகழ்ந் தாலும் – சம்பந்தப்பட்ட பெண், அவள் பெற்றோர் வீட்டிலிருந்து பெற்று வந்த நகைகள் போன்றவற்றை, அவளிடம் ஒப்படைக்கப் பட வேண்டும்; அது தவிர அவளுடைய வாழ்க்கைக்கான பணமும் தரப்பட வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்கள் பற்றி கூறிவிட்டு, மன்வந்த்ரங் களைப் பற்றிய விவரங்களையும் அளித்து, முழுமை பெறுகிறது பவிஷ்ய புராணம்.