பிரும்மனின் தோற்றமே, உலக படைப்பிற்குக் காரணம்
என்பதைக் கூறுவது, பிரும்ம வைவர்த்த புராணம். நான்முக பிரும்ம தேவனிடமிருந்து உலகங்கள் படைக்கப்பட்டதைக் கூறுகிறபோது, அந்த பிரும்ம தேவன் கிருஷ்ணனின் ஒரு அம்சமே என்பதைக் கூறுகிறது இப்புராணம்.
பிரும்மதேவன், கிருஷ்ணரிடமிருந்து தோன்றி, அவருடைய உத்திரவின் பேரில் உலகைப் படைத்தான். துர்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஸாவித்ரி போன்றவர்களும் கிருஷ்ணனிடமிருந்தே உரு வானார்கள். கிருஷ்ணரின் பெருமைகளை வர்ணிப்பதையே சிறப்பம்சமாகக் கொண்ட இப்புராணத்தில், சிவனும் கூட கிருஷ்ணரிடமிருந்தே தோன்றியதாகக் கூறுகிறது. விநாயகர் வரலாறும் விரிவாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர், தன்னில் ஒரு பாகத்தையே கொண்டு விநாயகர் ஆனார் என்று சொல்கிறது பிரும்ம வைவர்த்த புராணம். இது விநாயகரின் தோற்றம் பற்றி மற்ற புரா ணங்கள் சொல்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
சிவனை, தனது யாகத்தின் போது அவமதித்த தக்ஷனின் மகளாகிய ஸதி, அக்னிப் பிரவேசம் செய்து, பின்னர் ஹிமவான் மகளாகப் பிறந்து, பார்வதி என்ற பெயரைப் பெற்றாள். கிருஷ்ணரை துதித்து விரதம் இருந்த பார்வதிக்கு, கிருஷ்ணரே விநாயகராகப் பிறந்தார். குழந்தை பிறந்ததையொட்டி, கோலாகல மான கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு சனி தேவன் வந்திருந்தான். மற்றவர்களைப் போல் அல்லாமல் அவன் மட்டும், குழந்தையைப் பார்க்காமலேயே இருந்ததைக் கவனித்த பார்வதி, ‘என் மகனைப் பார்ப்பதை நீ ஏன் தவிர்க்கிறாய்?’ என்று கேட்டாள்.
‘எனக்கு கடுமையான சாபம் இருக்கிறது. எனது மனைவி யாகிய, கந்தர்வ மன்னர் சித்ரதனின் மகளை நான் கவனிக்காமல் அலட்சியம் செய்ததால், அவள் கோபம் கொண்டு என்னை சபித்தாள். அந்த சாபத்தின் விளைவாக, நான் எதைப் பார்த்தாலும், அது எரிந்து விடும்‘ என்று கூறினான் சனி தேவன்.
பார்வதி அலட்சியமாகச் சிரித்துவிட்டு, சாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், குழந்தையைப் பார்க்குமாறு சனியிடம் வற் புறுத்திக் கூறினாள். சனியும் பார்த்தான். குழந்தை தலையற்றதாகி, தாயின் மடியில் வீழ்ந்தது. கிருஷ்ணர் குழந்தை கணேசனுக்கு யானைத் தலையைப் பொருத்தினார். பார்வதிக்கு சனியின் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக, அவனுடைய கால் ஊனம் அடைந்தது. விஷ்ணுவின் ஆணைக்கேற்ப, கணேசனை முதலில் துதித்த பிறகே எந்தச் சடங்கும் நடைபெற வேண்டும் என்ற நியதி உருவாகியது. கணேசனைத் துதிக்காமல், ஆரம்பிக்கப்படுகிற சடங்கு, எந்தப் பலனையும் தராது என்பது விஷ்ணு விதித்த நியதி. இப்படி மற்ற புராணங்களில் காணப்படாத ஒரு வகையில், விநாயகர் தோற்றத்தை இப்புராணம் வர்ணிக்கிறது.
கிருஷ்ணவதார நிகழ்ச்சிகள் இப்புராணத்தில் கொஞ்சம் விரிவாகக் காணப்படுகின்றன. தேவகி மைந்தனாகக் கிருஷ்ணன் பிறந்தது; பூதகி என வழங்கப்படுகிற பூதனையின் வதம்; சகடாஸர வதம்; குபேரனின் மகன் ஒரு மரமாகத் தோன்றியிருக்க, அவனை குபேரனிடமே கிருஷ்ணர் திரும்ப அனுப்பி வைத்த விவரம்; பிருந்தாவன நிகழ்ச்சிகள்; கோவர்த்தன மலையை கிருஷ்ணர் குடையாகப் பிடித்து, யெருமழையிலிருந்து பிருந்தாவனத்தையும், அதில் இருந்தவர்களையும் காப்பாற்றியது; கம்ஸனைக் கொன்றது –என்று பல நிகழ்ச்சிகளும் இப்புராணத்தில் இடம் பெறுகின்றன. ராதை பற்றி இப்புராணம் மிக விசேஷமாகப் பேசுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
ஸாவித்ரி என்ற தெய்வமும் கிருஷ்ணரிடமிருந்தே தோன்றியது என்பதைத் தொடக்கத்தில் பார்த்தோம். ஸாவித்ரி –என்றால் பிறப்பிப்பவர் என்று ஒரு பொருள் உண்டு. வேதங்களைப் பிறப் பித்தவளே ஸாவித்ரி என்று கூறப்படுவதும் உண்டு. மந்த்ரங்களின் தேவதை ; சூரியனின் தேவி என்றெல்லாம் ஸாவித்ரி வர்ணிக்கப் படுவது வழக்கம்.
ஸாவித்ரியைப் பற்றிய பல விவரங்களையும், விளக்கங் களையும் அச்வபதி என்ற மன்னனுக்கு பராசர ரிஷி எடுத்துரைத்தார். ஸாவித்ரி தேவியை வணங்குகிற வழிமுறைகளைத் தெரிந்து கொண்ட அச்வபதி, அவளை முறைப்படித் துதித்தான். ஸாவித்ரி தேவி அவன் முன் தோன்றி, அவனுக்கு மகளாகப் பிறப்பெடுக்க சம்மதித்தாள்.
இப்படி பிறப்புற்ற ஸாவித்ரி, த்யுமத்ஸேனன் என்ற அரசனின் மகனாகிய ஸத்யவானை மணம் புரிந்தாள். ஒருமுறை ஸத்யவான் காட்டிற்குச் சென்றபோது, ஒரு பெரிய மரத்தில் ஏறினான். அதி லிருந்து விழ நேரிட்டபோது அவன் மரணமடைந்தான்.
ஸத்யவானின் உயிரைக் கவர்ந்து செல்ல யமதர்மன் வந்தான். ஆனால் ஸத்யவானைத் தொடர்ந்து காட்டுக்குச் சென்றிருந்த ஸாவித்ரி, தன் கணவனின் உயிரை எடுத்துச் சென்ற யம தர்மனைப் பின்தொடர்ந்தாள்.
‘நீ எங்கே வருகிறாய்? நான் ஸத்யவானை யமலோகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். மரணம் அடைந்தவர்களைத் தவிர, வேறு மனிதர்கள் அங்கே வர முடியாது. உடலை விட்ட பின்புதான் எந்த மனிதப் பிறவியும் அங்கே வர முடியும். ஆகையால் நீ திரும்பிச் செல்‘ என்று யமதர்மன், ஸாவித்ரியைப் பார்த்துச் சொன்னான்.
மேலும், ஒருவனுடைய கர்மாக்களே, அவன் மீண்டும் எப்படிப் பிறக்கிறான் என்பதை நிர்ணயம் செய்கிறது என்று விளக்கினான் யமதர்மன். ஒருவன் மரணமெய்தி, பின்னர் மீண்டும் பிறக்கிற போது, புழுவாகவோ, மரம், செடி, கொடியாகவோ, மனித னாகவோ பிறப்பது அவனுடைய கர்மாக்களின் – செய்கைகளின் விளைவே.அதே போல ஒருவன் அழகு மிக்கவனாகவோ,குரூபி யாகவோ பிறப்பதும் முற்பிறவிச் செய்கைகளின் பலனே. நீண்ட காலம் வாழ்வதும், அற்பாயுளில் மடிவதும் கூட, முற்பிறவியின் பயனே. ஸத்யவானின் ஆயுள் அவ்விதமே முடிந்திருக்கிறது. இது விதி. ஆகையால் நீ திரும்பிச் செல்‘ என்றான் யம தர்மன்.
ஆனால் ஸாவித்ரியோ, திரும்பிச் செல்ல மறுத்து, யமனைப் பின் தொடர்ந்தாள். அவள் பேச்சைக் கேட்ட யமதர்மன்,நீ நல்ல அறிவு பெற்றவளாக இருக்கிறாய். பண்டிதர்களையும், முனிவர் களையும் விட உன்னிடம் ஞானம் மிகுந்திருக்கிறது; இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உனக்கு என்ன வரம் வேண்டுமோ, கேள். நான் தருகிறேன்‘ என்று கூறினான்.
‘ஸத்யவானின் மகன்கள் நூறு பேர் எனக்குப் பிறக்க வேண்டும்‘ என்று கேட்டாள் ஸாவித்ரி.
ஸத்யவானை உயிர்ப்பிக்காமல், இந்த வரத்தைக் கொடுக்க முடியாது என்கிற நிலையில், விரும்பிய வரம் தருவதாகக் கூறி விட்ட தன் சொல்லைக் காப்பாற்றுவதற்காக, யமதர்மன் ஸத்ய வானை உயிர்ப்பித்தான். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடைய நல்வாழ்விற்கும், யமனை வேண்டி அவனின் அருளைப் பெற்றாள் ஸாவித்ரி.
ஸாவித்ரியின் பேச்சையும், கணவன் மீது அவள் கொண்ட பக்தி யையும் மெச்சிய யமதர்மன், அவளுக்குப் பல உபதேசங்களைச் செய்தான். கர்ம வினைகள், கர்மத்தின் தன்மை, போன்றவற்றை விளக்கி விட்டு, தானங்களின் மேன்மை பற்றியும் யமதர்மன் விளக்கினான். நிலம், வீடு, அரிசி, பொன், கறவை பசுக்கள், ஆடை கள், குடைகள், விளக்குகள்… போன்ற பல பொருட்களை தானம் செய்வதால் ஏற்படுகிற பலன்கள், யமதர்மனால் விளக்கப்பட்டன. சிவனை வில்வத்தால் அர்ச்சிப்பது; ராமர் பிறந்த தினத்தில் விரதம் அனுஷ்டிப்பது; ஏகாதசி விரதம் இருப்பது; சதுர்தசியில் ஸாவித்ரி தேவியை பூஜிப்பது; பஞ்சமி தினத்தில் ஸரஸ்வதியை துதிப்பது… போன்ற பல துதிகள், மற்றும் விரதங்கள் ஆகியவற்றின் மேன்மைகளையும், அவை தரும் பலன்களையும் ஸாவித்ரிக்கு விளக்கிக் கூறினான் யமதர்மன். யாகங்கள் பற்றியும் அவன் விரித் துரைத்தான்.
இதையெல்லாம் விவரமாகக் கூறுகிற பிரும்ம வைவர்த்த புராணம், நாரதரின் வரலாற்றையும் விளக்குகிறது. நாரதரின் பிறப்பு போன்றவற்றைப் பற்றி கூறிவிட்டு, சிவனிடமிருந்து, கிருஷ்ணரை பூஜிக்கும் முறையை நாரதர் தெரிந்து கொண்டார் என்று இப் புராணம் சொல்கிறது.
கிருஷ்ணரை, சாளக்ராமமாக (ஒரு வகைக் கல்) பூஜை செய்து வழிபடுவது, விசேஷமானது. வனங்களில் வாழ்வோர், தியானத் தில் ஈடுபட்டு வாழ்கிறவர்கள், பழங்களைத் தவிர வேறு எதை யும் உண்ணக் கூடாது. இல்லங்களில் வாழ்கிறவர்கள், கிருஷ்ண ருக்கு அர்ப்பணித்த பிறகே எதையும் சாப்பிட வேண்டும். சில வற்றைத் தவிர்க்க வேண்டும்: தாமிரப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால்; இடது கையினால் கொண்டு வரப்பட்ட தண்ணீர்; கிருத்திகை யில் கத்தரிக்காய்; பிரதமையில் பூசணிக்காய்; அஷ்டமியில் தேங்காய்; இரவு நேரத்தில் தயிர்… போன்ற பல, தவிர்க்கப்பட வேண்டியவை.
ஆயுர்வேதம் பற்றியும் பல குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. நோய்கள் பற்றியும், அவற்றை குணப்படுத்துகிற வழிகள் பற்றியும், கூறுகிற ஆயுர்வேதம், பிரும்ம தேவனால் அமைக்கப்பட்டது.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.தலை, பாதங்கள், காதுகள் ஆகியவற்றில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். (நவீன ஆங்கில மருத்துவர்கள், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஒரு பயனும் இல்லை என்று கூறுகின்றனர்; தவிர, காதுகளில் எண்ணெய் விடவே கூடாது என்றும் சொல்கின்றனர்.) உணவை அதிகமாக உட்கொள்ளாமல், கட்டுப்பாட்டுடன் சாப்பிட வேண்டும். உணவில் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் அது பகலில் மட்டுமே; இரவில் தயிர் கூடாது.
இவ்வாறெல்லாம் உடலை சரியாக வைத்துக் கொள்வதைப் பற்றி கூறுகிற ஆயுர்வேதம், மனத் தூய்மையையும் வலியுறுத்தி, உடல் ஆரோக்கியத்திற்குக் கூட மனத்தூய்மை அவசியம் என் பதை வலியுறுத்திச் சொல்கிறது.
கலியுகத்தில் தர்மங்கள் நலியும் என்று கூறி, கலியுகத்தில் ஐயாயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் நல்லவை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக பூமியை விட்டு விலகும் என்று சொல்கிறது பிரும்ம வைவர்த்த புராணம். கலியுகம் முற்றுகிற போது, தீமையே எங்கும் காணப்படும். மனிதர்கள் லஞ்சம், நேர்மையின்மை, வன்முறை ஆகியவற்றில் பெரிதும் ஈடுபடுவார்கள். பிராம்மணர்கள், சமையல் வேலை செய்பவர்கள் ஆவார்கள்; பின்னர் ஆடு, மாடு மேய்ப் பார்கள். பல குடும்பங்களிலும், சண்டை, சச்சரவுகள் ஏற்படும்; கணவன் – மனைவியிடையே வேற்றுமைகள் தோன்றி, பிரிவுகள் ஏற்படும். ஆறுகளும், குளங்களும், மற்ற நீர்நிலைகளும் வற்றிப் போகும். மரங்கள் சரியாக கனி தராத நிலையை அடையும். நிலங்கள் விளைச்சலைத் தராது; பசுக்கள் பால் கறக்காது. உணவு உட்கொள்வதில் எந்த விதிமுறையும் இருக்காது. கிழத்தன்மை விரைவிலேயே மனிதனை வந்தடையும்…
இப்படி கலி முற்றுகிறபோது, கல்கி அவதாரத்தில் பகவான் வந்து வேதங்களை துவேஷிப்பவர்களை அழிப்பார். அதன் பின்னர் கொஞ்ச காலத்திற்கு குழப்பமே நிலவும்; அத்துடன் கலியுகம் முடிவு பெற்று, எல்லோரும் தர்ம சிந்தனையோடு காணப்படுகிற க்ருதயுகம் என்கிற ஸத்ய யுகம் மீண்டும் தொடங்கும்.
ஒரு மனிதன் ஐந்து பேரை, தகப்பனாக மதிக்க வேண்டும் என்று சொல்கிறது பிரும்ம வைவர்த்த புராணம். ஒன்று : பிறப்பைக் கொடுத்த தகப்பன்; இரண்டு : உணவிட்டவர்-அல்லது வாழ வழி செய்தவர்-எஜமானர்; மூன்று : ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்; நான்கு : கல்வி கற்பித்தவர்; ஐந்து : மனைவியின் தகப்பனார். இதேபோல, பதினான்கு பெண்மணிகளைத் தாயாகவே கருத வேண்டும். பெற்றெடுத்த தாய்; தன்னுடைய தந்தைக்கு வேறொரு மனைவி இருந்தால், அவள்; தந்தையின் தாயார்; தாயாரின் தாயார்; தந்தையின் சகோதரி; தாயாரின் சகோதரி; தாய் மாமனின் மனைவி; சிற்றப்பன் அல்லது பெரியப்பாவின் மனைவி; கல்வி கற்பித்த வரின் மனைவி; எஜமான் அல்லது போஷகரின் மனைவி; தன்னுடைய சகோதரி; மகள்; மகனின் மனைவி; இது தவிர ‘அம்மா’ என்று அழைக்கத் தக்க பெண்மணி யாராக இருந்தாலும் அவள். இவர்களிடம் அவமரியாதையாக நடப்பது, பெரும் பாவம்.
பல பெண் தெய்வங்கள்; காலக் கணக்கு, மன்வந்த்ரங்களின் விளக்கம், உறவு முறைகளை பிரும்ம தேவன் வகுத்தது… போன்றவற்றைக் கூறிவிட்டு, ‘நாராயண ரிஷியினால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட புராணம் இது’ என்ற விவரத்தைச் சொல்லி, ஸௌதி என்ற பௌராணிகர், நைமிசாரண்யத்தில் கூடியிருந்த ரிஷிகளுக்கு பிரும்ம வைவர்த்த புராணத்தைக் கூறி முடித்தார்.